UYS 21

1662455813139-27c75784

அத்தியாயம் 21

 

குளிர்காற்று வீசிக் கொண்டிருந்த அந்த அதிகாலை பொழுதின் இனிமையை ரசித்தவாறு மாடியில் நின்றிருந்தாள் மகா.

இன்றுதான் கல்லூரிக்கு முதல்நாள். நினைக்கவே மனம் குதூகளித்தது.

முதல்நாள் கல்லூரிக்குச் செல்வதில் அனைவரையும் போல அவளுக்கும் ஒரு ஆர்வம்.

இரவும் இதே நினைப்பில் உறக்கம் எளிதில் வரவில்லை. ஆனாலும் காலையில் சீக்கிரம் விழித்துவிட்டாள்.

மேலும் சிறிது நேரம் அங்கு நின்றவள் கீழே சமையலறைக்குச் சென்றாள்.

பிரிட்ஜிலிருந்த பால் பாக்கெட்டை எடுத்தவள், பிரமாதமாக இல்லை எனினும்… கமக்கமக்கும் தேநீரை தயாரித்து நேராக தந்தை அறைக்குச் சென்றாள்.

“ப்பா…” என கதைவைத் தட்ட, அறையினுலிருந்து சரியாக வெளியே வந்தார் தயானந்தன்.

மகளை பார்த்து புன்னகைத்தவர், “குட் மார்னிங் மகாமா.” என பதிலுக்கு சிரித்தவள்,

“குட் மார்னிங் ப்பா.” என்றுவிட்டு தேநீரைத் தர,

வாங்கிக் கொண்டவர் ஹாலில் உள்ள சோபாவில் அமர, அவளும் டீயோடு அமர்ந்து கொண்டாள்.

குளிராக இருந்த அந்த அதிகாலை வேளைக்கு, சூடான தேநீர் இதமாக இருந்தது.

அதன்பின் அவர் வாக்கிங் சென்றுவிட, அவளும் அறையினுள் நுழைந்து கல்லூரிக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை சிரத்தையாக எடுத்து வைத்தாள்.

சுடிதாரை ஐயர்ன் செய்தவள், குளிக்கச் சென்றாள்.

சற்று நேரம் முன்தான் சமையல் செய்யும் பெண்மணி வந்தார்.

அந்த வீட்டில் பாட்டி இருக்கும் வரை அவர்தான் சமைப்பார். சமைப்பது அவருக்கு மிகவுமே பிடிக்கும்.

ஆதலாலே வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம் என மருமகன் கேட்டபோது மறுத்து விட்டார்.

அவர் தவறிய பிறகு, முதலில் மகாதான் வீட்டில் சமைத்தாள். பேத்திக்கு கற்று கொடுத்திருந்தார்.

ஆனால் மகா அத்தனை சிறப்பாக ஒன்றும் சமையல் செய்துவிடமாட்டாள். அடிப்படை அறிவாள் அவ்வளவே!

படிக்கும் பெண் என தந்தை, தமயன் இருவருமே அவளை பாட்டி ரொம்ப வேலை வாங்கும்போது பேசி தடுத்துவிடுவர்.

அவராலும் அவர்களை ஓரளவிற்கு மேல் எதிர்த்து, அவளை எதுவும் செய்ய வைக்க முடியாது.

சமைத்து பள்ளிக்கு கிளம்பி என எதற்கு கஷ்டமென்று, சமையல் செய்யும் பெண்மணி ஒருவரை வேலைக்கு வைத்திருக்க, காலை மற்றும் மாலை அவர்தான் சமைப்பார்.

தயானந்தன் மனைவியை கவனித்துக் கொள்ளும் பொருட்டு அப்போது சமையல் கொஞ்சம் கற்றுக் கொண்டது.

மகள் இரவு உணவு செய்யும்போது, அவள் மறுத்தாலும் உதவி செய்வார்.

இப்போதெல்லாம் அவர் துக்கத்தை மறக்க ஓடவில்லை. பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க மனம் வெகுவாக ஆசைக் கொண்டது.

ஆனால் காலம் கடந்தே மகன், மகள் இருவருவருக்கும் அவருக்கும் இருந்த… இருக்கின்ற இடைவெளியை உணர்ந்தார்.

அதுவும் மகனின் அழுத்தம்… போலீஸ் வேலைக்கு சென்றே தீருவேன் என்ற அவன் பிடிவாதமாக நின்றபோதே, அவனின் மாற்றம் நன்கு புரிந்தது அவருக்கு.

கஷ்டமாக இருந்தாலும் அதில் தவறும் இல்லையென்பதால் அதற்குமேல் வற்புறுத்தாமல், மகனை அவன் போக்கில் விட்டுவிட்டார்.

ஆனால் மகளின் ஒதுக்கம் அவரை நிரம்பவே வருத்தியது. அவரும் எத்தனையோ முயற்சிக்கிறார் மகளை இயல்பாக அவரிடம் பேச வைக்க, ஆனால் அனைத்தும் தோல்வியாகவே முடிகிறது.

உண்மையிலே மகாவிற்கு ஒருக்கட்டத்திற்கு மேல் வீட்டில் பேச வரவில்லை.

இத்தனை வருடங்கள் இருந்த பழக்கத்தை சட்டென அவள் எங்கனம் மாற்றிக் கொள்வாள்?

ஆனாலும் தந்தையும், தமயனும் தன்னை வெறுக்கவில்லை என வளர வளர புரிந்து கொண்டாள்.

பாட்டியின் சில வசைகள் ஆறாத வடுவாக மனதில் இருக்கிறது என்பது நிச்சயம் உண்மை.

இவர்கள் மேலுள்ள எண்ணம் கொஞ்சம் மாறியது. ஆனாலும் என்னவோ ஒரு நிரப்ப முடியாத இடைவெளி அவர்களிடம் இயல்பாக பேசவிடவில்லை.

தந்தை மாற முயற்சிக்கிறார். அண்ணன்… அவன் இன்னுமே அப்படித்தானே உள்ளான்.

காலம் இதை சரி செய்யுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

»»»»

காலை உணவு இட்லியும், சாம்பாரும், சட்னியுமாய் இருக்க, மதிய உணவிற்கு தக்காளி சாதமும் செய்துவிட்டு கிளம்பியிருந்தார் சமையல் செய்பவர்.

மகாவும் குளித்தப்பின் ஒரு அழகான மஞ்சள் நிற காட்டன் சுடிதாரை உடுத்திக் கொண்டாள்.

வேகமாக தலையை சீவி… பின்னல் பின்னியவள், காதில் ஒரு குட்டி ஜமிக்கி, கழுத்தில் தங்கச் செயின், ஒரு கையில் வாட்ச்சும், மறு கையில் பிரேஸ்லெட்டையும் அணிந்து கொண்டவள், ஸ்டிக்கர் பொட்டை வைத்துவிட்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.

நல்ல உயரம். அதற்கு ஏற்ற எடை. கொழுகொழு கன்னங்களோடு, சிரிக்கும் விழிகளையும், செப்பு இதழ்களையும் கொண்டவள். நிச்சயம் அழகிதான்.

தோற்றத்தில் திருப்தி வர, தனக்கு தானே ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பியவள், “அழகி மகா நீ… ” என புன்னகைத்தவாறு கம்ப்ளீமெண்ட் கொடுத்துவிட்டு பையோடு ஹாலிற்க்குச் சென்றாள்.

முதலில் லன்ச்சிற்கு கப்பில் சாதத்தை போட்டவள், அப்பாவிற்கு உணவை போட்டு, தனக்கானதையும் போட்டுக்கொண்டு உணவு மேசையை சுற்றியிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

தயானந்தனுக்கு போன் வர, “எப்படியிருக்கப்பா?” என அவர் பேசவும், அதை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே வேகமாக உணவினை விழுங்கினாள்.

‘முதல்நாள் கல்லூரி செல்கிறேன். அண்ணன் தன்னிடம் ஒருவார்த்தை பேச மாட்டாரா?’ என எதிர்பார்த்த மனதை, எப்போதும் போல அடக்கியவள், உணவில் கவனத்தை செலுத்த,

“தோ… தரேன் தம்பி.” என்ற தந்தையின் குரலில் விழுக்கென நிமிர்ந்தாள்.

கைபேசி அவளை நோக்கி நீட்டப்பட, அவள் விழிகள் வியப்பால் விரிந்தன.

பொதுவாக வேலை டென்ஷனிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் அகத்தியன், வீட்டிற்கு அதிகம் அழைத்து பேச மாட்டான்தான்.

ஆனால் இன்று தங்கை கல்லூரிக்கு முதல்நாள் செல்கிறாள் என்பதால், அதிசயமாக அழைத்து விட்டிருந்தான்.

கைபேசியை உடனே வாங்கிக் கொண்டவளுக்கு என்ன பேச என்றுதான் தெரியவில்லை.

‘அண்ணா’ என்று அவள் அழைப்பதற்குள், “பாப்பா…” என்றான் ஆழ்ந்த குரலில். கொஞ்சமே கனிவு இருந்ததோ!

எப்போதும் அப்படித்தான் அழைப்பான் தங்கையை. அவளுக்கு… ஏன் அவனுக்கே இத்தனை வயதாகியும்.

ஏனோ… தமயன் இப்படி கூப்பிடுவது அவளுக்கு சிரிப்பை வரவழைக்கும்.

‘காலேஜே போய்ட்டேன். இப்போதும் பாப்பாவா?’ என…

ஆனால் அவள் எப்போதுமே அவன் குட்டி பாப்பாதான் அல்லவா!

சொல்லாமல் வெளிக்காட்டாமல் போனால் பாசம் இல்லையென்றாகுமா?

அவளை அகத்தியன் அதிகம் கொஞ்சியதில்லை. ஏன் அதிகம் சிரித்து பேசியது கூட இல்லைதான். ஆனாலும் அவளை சிறுவயதிலிருந்து அழைக்கும் அந்த அழைப்பை அவனுக்கு மாற்றிக் கொள்ளத் தோன்றியதில்லை.

அழைப்புக்கு பதில் வராமல் போக, மீண்டும் அவளை அழுத்திக் கூப்பிடவும், “ஆஹ்… ண்ணா சொல்லுங்க.” என்றாள் பரபரப்போடு.

அவன் பேசும்போது கவனம் அங்கில்லை என்றால்… நன்றாக திட்டு கிடைக்கும். எத்தனை முறை வாங்கியிருப்பாள். அதானாலே அவளிடம் அந்த திடீர் பரபரப்பு.

இன்று கல்லூரி முதல்நாள் என்பதால் திட்ட வேண்டாம் என்று நினைத்தான் போலும்.

ஒரு பெருமூச்சோடு கல்லூரி செல்வதை பற்றி இருவார்த்தை பேசியவன், “ஆல் த பெஸ்ட்.” எனச் சொல்ல, அப்போது அவனை யாரோ அழைக்கவும்,

“சரி… கவனம். பத்திரமா போய்ட்டு வா.” என்று பதிலை எதிர்பார்க்காமல் துண்டித்து விட, அவளுக்கு சப்பென்றானது.

தமயனின் ஆழ்ந்த மூச்சே அவன் கோபத்தை கட்டுப்படுத்தியதை கூறிவிட்டதே.

இதில் அதற்கு மேல் அவன் எப்போதுமான கண்டிப்பான குரலில் பேசி வைத்துவிட,

‘என்ன எதிர்பார்க்கிறாய்?’ என மனதிடம் கேள்வி கேட்டவளுக்கு, தோழி… அவள் அண்ணனுடன் செய்யும் சேட்டைகளே எப்போதும் போல நினைவுக்கு வந்து தொலைத்தது.

‘இதுவே பெருசு…’ என்று தன்னையே எப்போதும் போல தேற்றியவள், சாப்பிட்டுவிட்டு தந்தையிடம் ஆசி வாங்கி விடைபெற்று, முதலில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டப் பின், கல்லூரி பேருந்துக்காக பஸ் ஸ்டாப் நோக்கிச் சென்றாள்.

»»»»

பறந்து விரிந்திருந்த அந்த கல்லூரி வளாகத்தினை சுற்றியும் முற்றியும் உற்சாகமாக வேடிக்கை பார்த்தவாறு மெதுவாக கிளாசை நோக்கி நடந்து போட்டாள் மகா.

வீட்டில்தான் அமைதி. வெளியே வந்துவிட்டாளானால், ‘அமைதியா… கிலோ எத்தனை விலை?’ என கேட்டு வைப்பாள்.

கொஞ்ச நேரம் முன்புதான் பேருந்தில் ஒரு பெண்ணிடம் பிரண்ட் ஆகியிருந்தாள். அவளிடம் டிபார்ட்மென்ட் எங்கு என்று கேட்டறிந்துகொண்டு அங்கு சென்று கொண்டிருக்கிறாள்.

தேர்டு ப்ளோரில் தான் அவள் வகுப்பு இருந்தது. யாரும் முதல் வருடத்தில் படிப்பவர்கள் அவளைப்போல வருகிறார்களா என படிக்கட்டில் ஏறும்போது திரும்பி திரும்பி ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே மேலே நடந்தாள்.

சிலர்தான் அப்போது மேலே சென்றனர். அவர்களைப் பார்த்தாலே இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட ஸ்டுடென்ட்ஸ் என அறிந்து கொள்ள முடிந்தது.

முன்னால் கவனமில்லாமல் பின்னால் பார்த்துக் கொண்டு வந்தவள், ‘இனி யாரு வரப் போறா? கிளாஸே வந்துடுச்சு…’ என சலித்தவாறு திரும்ப, வளைவிலிருந்து வந்த ஒருவன் கவனிக்காமல் அவளருகில் வந்திருந்தான்.

‘அச்சோ… இடிக்கப் போறோம்.’ என பதட்டத்தில் கண்களை இறுகி மூடிக் கொண்டவள், கைகளை குறுக்காக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, நொடிகள் கடந்தும் அவள் யார்மீதும் மோதவில்லை.

ஒற்றைக் கண்ணை லேசாகத் திறந்தவள் கண்டதோ, லேசாக இதழ் தாங்கிய புன்னகையோடு அவளை பார்த்திருந்தவனைத்தான்.

அவள் இப்போது இருக் கண்களையும் திறக்கவும், “சாரி… கவனிக்கல.” என அவன் சொல்ல,

“இல்ல… நானும்தான் கவனிக்கல. சாரி…” என்றாள் வேகமாக.

அதில் இன்னும் கொஞ்சம் புன்னகை சிந்தியவன், “பரவாலாம்… பாத்து போங்க.” என்று அவளை கடந்து சென்றுவிட்டிருந்தான்.

இவளும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வகுப்புக்கு சென்றுவிட்டாள்.

இதுதான் சூர்யா – மகாவின் முதல் சந்திப்பு. இருவருக்குமே பார்த்ததும் காதல் வருவது போல எதுவும் பெரிதாக நடக்கவில்லைதான்.

ஆனாலும் அவளின் பதட்டமும்… ஒற்றைக் கண் திறப்பும் அவனுக்குள்ளும், அவனின் ஈகோ இல்லாத சாரி கேட்ட விதமும்… பேசியும் வழியாமல் சென்றதும் அவளுக்குள்ளும் அவர்களே அறியாமல் பதிந்துதான் போனது.

அதன்பின் சிலர் கிளாஸிற்கு வர, அவளும் அவர்களுடன் நட்பாக பேச ஆரம்பித்தாள். மணியோசை கேட்டதும் இன்னும் சிலர் வந்துவிட, ஆசிரியரும் வந்து சேர்ந்தார்.

பெயர் என்ன, பன்னிரண்டாம் வகுப்பில் என்ன மார்க், எதிர்கால கனவு என்ன என்ற… வழக்கம் போலான கேள்விகள் கேட்கப்பட,

சிலர், ‘அந்த மார்க்க ஏன் சார் இப்போ ஞாபகப்படுத்தறீங்க?’ என்று முனகிக் கொண்டாலும், ஒவ்வொருவராக சொல்லிய படியே வர,

மகாவும் எழுந்து, அவள் மதிப்பெண்ணைக் கூற பலரும் ‘பாரேன்.. படிக்கற பொண்ணு போல.’ என்று நினைத்துக் கொண்டனர்.

ஆம்… என்னதான் மகா வாயாடியாக விளையாட்டு பொண்ணாக இருந்தாலும், நன்றாக படிப்பாள்.

“எனக்கு ஸ்கூல் டீச்சர் ஆகணும். அதுதான் என் ட்ரீம்.” என்றவள் அமர்ந்துவிட, அப்படியே கிளாஸில் உள்ள அனைவரும் சொல்லினர்.

அதற்குப்பின் ஆசிரியர்களும் இன்று முதல்நாள் என்பதால், பாடம் என ஆரம்பித்து அவர்களை வருத்தாமல் பிரீயாகவே விட்டனர்.

கல்லூரி முதல்நாள் இனிமையாக ஆரம்பித்து, சென்று… என இனிமையாகவே முடிந்தது.

நான்கு மணிக்கு பெல் அடிக்க, ஜாலியாக வீட்டிற்கு கிளம்பினர்.

»»»»

இரவு ஒன்பதரை மணி…

வீட்டிற்கு வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்க, வேகவேகமாக ஓடிவந்து கதவைத் திறந்தாள் ப்ரீத்தி.

சூர்யா அவளை புன்னகையாக நோக்க, பதிலுக்கு சிரித்தவள் முகம், அவன் கைகளில் எதிர்பார்த்தது இல்லாமல் சுருங்கியது.

“ண்ணா…” என்று கோபமாக அழைத்தவள், அவனை கொஞ்சமாக முறைத்துப் பார்த்தாள்.

சூர்யாவோ, “என்ன குட்டிமா?” என்றான் ஒன்றுமே அறியாதவன் போல.

தங்கை கோபம் ஏனென்று அவனுக்கா புரியாது. சும்மா வெறுப்பேற்றவே இப்படி.

“நான் கேட்ட பஃப்ஸ்…” என அவள் உதட்டை பிலுக்க,

“ஐயோ… சாரிடா… மறந்தே போய்ட்டேன்.” எனவும், மூக்கை உறிஞ்சியவாரு சண்டைக்கு தயாரானாள்.

“அதான… நான் சொன்னா உங்களுக்கு ஞாபகம் இருக்குமா?”

“காலையில இருந்து நைட் எப்போ வரும்… பஃப்ஸ் சாப்பிடலாம்னு ஆசையா இருந்தேன் தெரியுமா?”

“போ ண்ணா. என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல.”

என பஃப்ஸ்ஸுக்காக அவள் வக்கீலாக மாறி பாயிண்ட் பாயிண்ட்டாக வாதம் செய்ய, பொங்கி வந்த சிரிப்பை அடக்க சூர்யாதான் அரும்பாடுபட்டான்.

என்னதான் அவள் குழந்தைத்தனமான பேச்சு சிரிப்பை வரவழைத்தாலும், அதற்குமேல் தங்கையின் வாடிய முகத்தை காண பிடிக்காமல்,

வீட்டின் வெளியே அவன் நின்றிருந்த இடத்தின் அருகே உள்ள திண்ணையில் வைத்திருந்த கவரை நீட்டியவன்,

“வாங்கிட்டு வந்துட்டேன். சும்மா சொன்னேன்டா..” என புன்னகைத்தவாறு கொடுக்க, புலம்பலை நிறுத்திவிட்டு இடுப்பில் கைவைத்து தமயனை செல்லமாக முறைத்தாள்.

அவனோ, “கோபம் இன்னும் போகலையா? அதுனால வேணாமா. சரி விடு.” என கவரை பின்னே எடுக்கப் பார்க்க,

வேகமாக அதனை கைகளில் வாங்கியவள், “எதுக்கு கோபம்? அதுலாம் போயே போச்சு.” என தன் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டிவிட்டு,

“அண்ணானா அண்ணா தான்.” என சொன்னவள் உள்ளே ஓட, அவனும் மென்னகையோடு வீட்டினுள் நுழைந்தான்.

வேகவேகமா கிட்சன் சென்று சிறிய தட்டில் பஃப்ஸை போட்டு கொண்டிருப்பவளிடம்,

“நைட் எதுக்குடி இதுலாம் சாப்பிட கேக்குற?” என கடிந்துவிட்டு,

“அவதான் சின்ன பொண்ணு கேக்குறானா… நமக்கு வாங்கித் தரக் கூடாதுனு கொஞ்சம் அறிவு இருக்கனும்.” என அவரைத் தாண்டி செல்லும் சூர்யாவிற்கு கேட்கும் படி முனக, அதற்கு மேல் ஓரடி கூட செல்லாமல் அப்படியே நின்றான். சித்தி பேச்சில் அவன் முகம் அப்படியே சுருங்கிப் போனது.

சாயங்காலம் நான்கு மணிக்கு கல்லூரி முடிய, ஐந்து மணியிலிருந்து ஒன்பது மணி வரை… அந்த ஊரில் உள்ள கொஞ்சம் பெரிய சில்க் ஹவுஸ் ஒன்றில், பார்ட் டைம் வேலையில் இருந்தான்.

பில் போடுவது, ஸ்டாக் வந்தால் அடுக்க உதவி செய்வது, அதனை கணக்கு எடுப்பது என சமயத்திற்கு ஏற்றார் போல வேலை இருக்கும்.

வீட்டின் அருகே கல்லூரி உள்ளதால் நடந்துதான் செல்வான். அந்த சில்க் ஹவுஸும் பத்து நிமிட பஸ் பயணம்தான்.

கல்லூரி முடிந்த இருபது நிமிடம் பிரேக் போல அவனுக்கு. அதன்பின் அங்கு சென்று விடுவான். வேலை முடிந்த பின் வீட்டிற்கு வர ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும்.

இதுதான் இரண்டு வருடங்களாக அவன் அன்றாட நாள் செல்லும் விதம். எதுவும் நோம்பி சமயமாக இருந்தால் வர இன்னும் தாமதமாகலாம்.

நிச்சயம் படிப்பு, வேலை என அவனுக்கு கஷ்டமாகதான் இருக்கும். படிப்பாளி வேறு அவன்.

ஆனாலும் வரும் அந்த கொஞ்ச சம்பாதியத்தை விட மனமில்லை.

வீட்டிற்கு சமையலுக்கு எதுவும் வாங்கி வருவான்.

சிறு பெண்ணாக இருந்தாலும், ப்ரீத்திக்கு அவன் கஷ்டம் கொஞ்சமே புரிந்திருக்கும் போலும்.

அடிக்கடி அவனிடம் இதுபோல கேட்கமாட்டாள். என்றாவதுதான் கேட்பாள். கேட்காமலே அவனுமே வாங்கி வருவான். ஜன்ங்க் புட் நல்லதல்ல என கற்பகம், கீர்த்தியே வீட்டில் எதுவும் செய்துவிடுவர். அவனுமே அதை சொன்னால் அவள் கேட்டுக்கொள்வாள்.

இதுவெல்லாம் எப்போதாவதுதான். ஆனாலும் சூர்யாவை அவருக்கு எதுவும் குறை சொல்ல வேண்டுமல்லவா!

அம்மா சொல்லில் அண்ணன் முகம் வாடியதை பொறுக்காதவள்,

“ம்மா… எப்போவாதுதான கேக்குறேன். அண்ணன் அடிக்கடி கேட்டா, வேணாம்னு சொல்லுவாரு. சும்மா எதும் சொல்லாத. உனக்கு பப்ஃஸ் வேணாம்னா நானே சாப்டுக்கறேன். விடு.” என பொறிந்தவள் அவர் கையில் கொடுத்த தட்டை பிடுங்க வர,

“இப்போ என்ன சொல்லிட்டன்னு குதிக்கற? இதுலாம் நைட் ஒண்ணுதான் சாப்டனும்.” என்றவர் தட்டோடு ஹாலிற்க்கு நகர்ந்துவிட்டார்.

சூர்யாவைதான் பிடிக்காது. அவன் வாங்கி வந்த பஃப்ஸ் கணக்கில்லை அவருக்கு.

அதில் சிரித்தவாறு அண்ணனை பார்த்து அவள் கண்ணை சிமிட்ட, அவனும் தங்கை தனக்காக பேசியதில் கொஞ்சம் இயல்புக்கு வந்துவிட்டிருந்ததால், பதிலுக்கு புன்னகையை கொடுத்துவிட்டு, ரூமிற்குச் சென்றான்.

அவளும் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை, அக்காவிற்க்கான பஃப்ஸை கொடுத்துவிட்டு தொலைக்காட்சியில் கவனமானாள்.

முகம் கழுவி, உடை மாற்றி வந்தவன் சாப்பிட வர, கீர்த்தி கவனித்துவிட்டு அங்கு வந்தாள்.

இரவு ஒருமுறை அவன் தனியே அமர்ந்து சாப்பிடுவது கண்டு அவளுக்கு ஒருமாதிரி இருந்தது.

அவனிடம் இப்போதும் அதிகம் பேச்சு இல்லைதான். ஆனாலும் பாசம் உள்ளதே.

அவன் பலமுறை, ‘பரவாலாம் மா. நானே போட்டுக்கறேன்.’ எனக் கூறியும் அவள் கேட்கவில்லை.

அவனுக்கு பரிமாறுவதற்கு சலித்தே கற்பகம் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

வாசுதேவன் வீட்டில் இருப்பதால் அவரால் சட்டென எதுவும் சொல்ல இயலவில்லை. 

அவன் உண்ணும் வரை புக்கை பார்த்தவாறு அமர்ந்திருப்பாள். அதன்பின் சிறு தலையசைப்போடு சென்றுவிடுவாள்.

சித்தியாலே அவள் தன்னிடம் அதிகம் பேசாமல் ஒதுங்கி அதுவே பழகிவிட்டது போலும். தன்னை அவர் போல தங்கை வெறுக்கவில்லை என அவன் இத்தனை வருடத்தில் அறிந்து வைத்திருந்தான்.

அவனாலுமே அவளிடம் எளிதாக பேச முடியாது. ப்ரீத்தியிடம் மட்டுமே சகஜமாக பேசுவான்.

வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் பாசம் உள்ளதே!

சாப்பிட்டப் பிறகு அறைக்குச் சென்றவன், சிறிது நேரம் படித்துவிட்டு வழக்கம்போல அசதியில் படுத்ததும் உறங்கிப் போனான்.

 

தொடரும்…