எந்நாளும் தீரா காதலாக – 30

cute-lovely-couple-facebook-dps-3b425081

💝💝30            

எவ்வளவு நேரம் அழுதிருப்பாள் என்று அவளுக்கேத் தெரியாது.. அழுது ஓய்ந்தவள், உறக்கம் வராமல், பிரிவின் வலி குறித்த ஒரு தத்துவத்தை பதிவு செய்துவிட்டு, தனது மொபைலைக் குடையத் துவங்கினாள்.

மனது ஒரு இடத்தில் பதியாமல், ஏதோ பொழுதைக் கழிக்க பார்க்க வேண்டும் என்று நினைத்தபடி அவள் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வந்துக் கொண்டிருக்க, அப்பொழுது அவளது கவனம் அந்த வீடியோவில் பதிந்தது.      

மொபைலைக் கையில் எடுத்தவள், அதில் வந்த ரீலைப் பார்த்து திகைத்துப் போனாள். அதை பதிவிட்டு இருந்த ஹீரோயினின் பெயரைப் பார்த்தவள், “இவங்க தானே அஜ்ஜு இப்போ நடிக்கிற படத்துக்கான ஹீரோயின்?” என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு,   

அவளது பக்கத்துக்குச் சென்று அவள் பதிவிட்டு இருந்த வீடியோக்கள் ஒவ்வொன்றாக அவள் பார்த்துக் கொண்டே வர, முதலில் “இவ்வளவு வீடியோக்களா? என் கண்ணுல இதெல்லாம் ஏன் படாம போச்சு? எல்லாத்துலையும் அர்ஜுனை டேக் பண்ணி இருக்காங்களே.. ஏன் அர்ஜுன் ஒண்ணு கூட ஷேர் பண்ணவே இல்ல? என்ன தான் நடக்குது? ஏன் இப்படி? இது தான் அர்ஜுன் என்கிட்டே பேசாம இருக்கக் காரணமா? அவங்க ரீல் போட்டா இவர் ஏன் பேசாம இருக்கணும்?” என்ற பலகேள்விகள் அவளது மனதினில் அணிவகுக்க, அவள் பதிவிட்டு இருந்த புகைப்படங்களையும், வீடியோக்களை பார்த்துக் கொண்டே வந்தாள்.    

ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க, அழுகையும், திகைப்பும் மாறி சுவாரஸ்யம் பிறந்தது. அதில் அர்ஜுனை ரசித்துக் கொண்டே வந்தவள், மெல்ல கண்களைத் துடைத்துக் கொண்டு, சுவாரஸ்யமாக அந்த ரீல்ஸ்களைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

சில ரீல்ஸ்களை அவனுக்கே அனுப்பியவள், “மூஞ்சிய ஏன் இப்படி வச்சிருக்கீங்க? உங்க ஹீரோயின் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க பாருங்க.. அடுத்த ரீல்ஸ்ல நீங்களும் சிரிச்சா தானே நல்லா இருக்கும்? அடுத்த ரீல்ஸ்க்கு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று கேட்டு மெசேஜ் அனுப்பியவள், அடுத்து அவள் பதிவிட்டு இருந்த புகைப்படங்களைப் பார்க்கத் துவங்கினாள்.

“அஜ்ஜு.. மை அஜ்ஜு கண்ணா.. இதுக்குத் தான் என் கூட பேசாம இருக்கீங்களா? இதை நினைச்சுத் தான் தூங்காம இருக்கீங்களா?  உங்க கூட வர்க் பண்ற பொண்ணு ரீல்ஸ் பண்ணி இருக்கா.. அவளைப் பார்க்க சின்னப் பொண்ணு மாதிரி இருக்கே..” அர்ஜுன் எதிரில் இருப்பது போல அவனிடம் பேசிக் கொண்டே,

“ஒருவேளை நான் இதை எல்லாம் பார்த்து ஏதாவது சண்டைப் போடுவேன்னு தான் பயந்தீங்களோ அஜ்ஜு? அதுனால தான் தூங்காம இருந்தீங்களா? இதுக்குப் போய் நான் சண்டைப் போடுவேன்னு நினைச்சிட்டீங்களா? அவ்வளவு தான் நீங்க என்னைப் புரிஞ்சிக்கிட்டதா?” என்று புலம்பியவள்,  

“அம்மா.. அம்மா கூட ஏதோ ‘எனக்கு கல்யாணம் எந்தத் தடையும் இல்லாம நடக்கணும்’ன்னு சொன்னது போல இருந்தது.. ஏன் அம்மாவும் நான் இந்த விஷயத்தை சொன்னா சண்டைப் போட்டு கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு நினைச்சிட்டு இருக்காங்களா? இல்ல.. இதை விட விஷயம் ஏதாவது பெருசா? அதை சொல்ல முடியாம கஷ்டப்படறீங்களா அஜ்ஜு? என் கிட்ட பேசினா ஏதாவது என்னையும் கஷ்டப்படுத்திடுவீங்களோன்னு பயப்படறீங்களா அஜ்ஜு?” என்று குழம்பிக் கொண்டே அமர்ந்தவள், விடிவதற்காக காத்திருந்தாள்.

நொடிகள் யுகங்களாகக் கரைந்து மெல்ல நகர்ந்துக் கொண்டிருக்க, “ஒருவேளை முதல் படத்துல வந்த பிரச்சனை போல ஏதாவது வந்துடுச்சா? அந்த ஹீரோயின் கூட சேர்ந்து தப்பா வந்தது போல ஏதாவதா? ஷூட்டிங்ல ஏதாவது பிரச்சனையா?” என்று யோசித்துக் கொண்டே வந்தவள், அவசரமாக அர்ஜுனின் பெயரைப் போட்டு வலைத்தளங்களில் தேடத் துவங்கினாள்.

அவளுக்கு அதைப் பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சி.. சில மணி நேரங்களுக்கு முன்பு தான் பதிவிட்டு இருந்த பிரிவு குறித்த தத்துவத்தையும், அர்ஜுன் இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்த எல்லை மீறுதல் குறித்த தத்துவத்தையும் பகிர்ந்து, “அர்ஜுன் ஆத்மிகா பிரேக்கப்பா?” என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்க, சிலர் அந்த ஹீரோயின் பதிவிட்டு இருந்த புகைப்படங்களையும், ரீல்களையும் மேற்கோள் காட்டி, ‘அந்த ஹீரோயின் தான் அவர்களது பிரிவிற்கு காரணமா?’ என்ற கேள்விகளும், சுடச் சுட வளம் வரத் துவங்க, அதைப் பார்த்தவள் திகைத்தே போனாள்.

‘ஹையோ? நாம அர்ஜுன மிஸ் பண்றதுக்குப் போட்டா.. இவங்க வேற ஏதோ கதையை கட்டிக்கிட்டு இருக்காங்களே..” என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு, முதல்முறையாக கேசவனிடம் இருந்து அழைப்பு வந்தது..

அவரது எண்ணை தனது மொபைலில் பார்த்தவளுக்கு முதலில் அதிர்ச்சி மட்டுமே மிஞ்ச, அவளது கைகள் நடுங்கத் துவங்கியது. போனையே அவள் வெறித்துக் கொண்டிருக்க, ஒருமுறை அடித்து ஓய்ந்து அது மீண்டும் அடிக்கத் துவங்க, ஒரு நெடிய மூச்சை வெளியிட்டு, போனை இயக்கினாள்.

“ஹலோ..” அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“அம்மாடி.. நான் அப்பா பேசறேன்..” என்றவரின் தொண்டை கரகரக்க, அதைக் கேட்ட சிவாத்மிகாவின் கண்கள் கண்ணீரை வடிய விட, அவள் பதில் பேசாமல் அமைதியாக நின்றாள்.

“ஏன்ம்மா பிரிவு வலின்னு எல்லாம் போட்டு இருக்க? என்னம்மா ஆச்சு? உனக்கும் அர்ஜுனுக்கும் ஏதாவது பிரச்சனையா? அர்ஜுன் கூட வேற பொண்ணு போட்டோ எல்லாம் வருது? நீங்க ரெண்டு பேரும் பிரேக்கப் அது இதுன்னு பேசிக்கறாங்க? என்ன தான்மா நடக்குது?” அவரது குரலில் அவ்வளவு படப்படப்பு..

தனது கண்களைத் துடைத்துக் கொண்டவள், “அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. அவங்க ஏதோ கதைக் கட்டிட்டு இருக்காங்க.. அர்ஜுனை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.. அது தான் அந்த கோட்ஸ் போட்டேன்.. அர்ஜுன் ஷூட்டிங்ல இருக்கார்.. அவருக்கு ஷூட்டிங் ரொம்ப டைட்டா இருக்கு.. பேசவே டைம் கிடைக்கல.. அது தான்.. ப்ரேக்கப் எல்லாம் எதுவும் இல்ல.. சும்மா ஒரு போட்டோ போட்டா அர்ஜுன் என்னை விட்டுடுவாரா? அந்த போட்டோல, வீடியோல எல்லாம் அர்ஜுனோட முகத்தைப் பாருங்க.. என் கூட இருக்கற போட்டோல அவர் முகத்தைப் பாருங்க.. வித்தியாசம் புரியும்..” ‘அப்பா’ என்ற வார்த்தையைத் தவிர்த்து அவள் அவருக்கு விளக்கம் சொல்ல,

“அப்பா.. இந்த யூ ட்யூப் வீடியோல பார்க்கறது பத்தி எல்லாம் அக்காகிட்ட ஏன் கேட்கறீங்க? நான் தான் சொல்றேன் இல்ல.. அர்ஜுன் மாமாவால கனவுல கூட அக்காவை விட்டுட்டு இருக்க முடியாது.. அவரோட  ஒவ்வொரு செல்லுலையும் அக்காவோட நியாபகம் தான் இருக்கும்.. ரெண்டு பேரையும் நேர்ல பார்த்தவன் நான் சொல்றேன்.. நிம்மதியா போய் வேலையைப் பாருங்க..” என்று ஹரியின் குரல் கேட்கவும், சிவாத்மிகாவின் இதழ்களில் புன்னகை விரிந்தது..

“ஹரி..” என்று அவள் அழைக்கவும்,

“உனக்கு உன் தம்பி பெருசா போயிட்டான் இல்ல.. நான் இங்க பேசிட்டு இருக்கேன்.. அவனை கூப்பிடற” என்று வருத்தமாகக் கேட்ட கேசவன், அவனிடம் போனை நீட்டவும்,

“அக்கா… என்ன மாமாவை ரொம்ப மிஸ் பண்றீங்களோ? இப்படி கோட் எல்லாம் போட்டுட்டு இருக்கீங்க?” என்று கேலி செய்ய,

“ஆமாடா.. ரொம்ப மிஸ் பண்றேன்… நேத்து பேசல.. அவரு ரொம்ப பிசியாகிட்டார். அது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு..” என்றவள், அவன் சிரிக்கவும்,  

“அவர் கிட்ட பயப்பட வேண்டாம்ன்னு சொல்லு ஹரி.. உங்க மாமாவுக்கு நான் தான்.. எனக்கு அவர் தான்.. இதை யாராலையும் மாத்த முடியாது.. அது அவரோட தலைவிதி..” என்று அவள் சொல்லவும், ஹரி சிரிக்க,

“சரி… இப்போ நான் போனை வச்சிட்டு உங்க மாமாவைக் கூப்பிடறேன்.. நேத்திக்கே அவர்கிட்ட பேசவே முடியல..” என்றவள், இணைப்பைத் துண்டித்து அர்ஜுனுக்கு அழைத்தாள்.

அப்பொழுது தான் தூக்க மாத்திரையின் உதவியுடன் உறங்கி விழித்திருந்த அர்ஜுன், தனது மொபைலைப் பார்க்க, அதில் சிவாத்மிகாவின் மெசேஜ் இருக்கவும்,

“சிட்டு என்ன காலையில என்னை மிஸ் பண்றாளா?” என்று ஆசையாகத் திறந்துப் பார்த்தவன், அதில் இருந்த மெசேஜ்களைப் பார்த்து, கோபத்துடன் போனை பெட்டிலேயே விட்டு எறிந்தான்.

“இவ எதுக்கு இதை எல்லாம் எனக்கு அனுப்பி இருக்கா?” என்று முழுதாக அவள் அனுப்பிய மெசேஜ்களைப் பார்க்காமல் அர்ஜுன் கேட்கவும், வினய் புரியாமல் முழித்தான்.

திடீரென்று அவன் அப்படிக் கேட்கவும், முழித்துக் கொண்டே, “என்னாச்சு?” என்று வினய் கேட்க,

“அவ அந்த ரீல்ஸ் பார்த்துட்டு எனக்கு அனுப்பி இருக்கா.. எந்த மனநிலையில அதை எனக்கு ஃபார்வர்ட் பண்ணி இருக்கான்னு எனக்கு சுத்தமா புரியல.. அதை விட அவ எதுக்கு எனக்கு அனுப்பி இருக்கா? இதை எல்லாம் நான் பார்க்கனுமா? இல்ல இது எல்லாம் என்னடான்னு கேட்டா?” காலையிலேயே அந்த ரீல்ஸ்களின் அணிவகுப்பை பார்த்த அர்ஜுனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

அவன் கோபமாக இருப்பதைப் பார்த்த வினய், “கூல் ஆகுடா அர்ஜுன்.. அவ அப்படி எல்லாம் கோபமா அனுப்பி இருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.. ஜஸ்ட் கிண்டலுக்கு கூட இருக்கலாம்..” என்று சொல்லவும்,

‘ம்ப்ச்’ என்று சலித்துக் கொண்டவன்,

“சிவா தெரிஞ்சு செய்யறாளா? இல்ல கிண்டலுக்கு தான் அனுப்பி இருக்காளா? எனக்கு தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு.. இந்த ஹீரோயின் ஒரு பக்கம் நாளுக்கு நாள் ரொம்ப நெருக்கம் காட்டறது மாதிரி இருக்கு.. அவ ரொம்ப தன்னைப் பத்தி எல்லாம் சொல்றா.. எனக்கு பிடிச்சது.. பிடிக்காததுன்னு ரொம்ப துருவிட்டு இருக்கா.. எனக்கு என் சிவாவைத் தான் ரொம்பப் பிடிக்கும்.. என்னை நெருங்க நினைக்காதேன்னு சொல்லணும் போல இருக்கு.. அதையும் சிலமுறை சொல்லிட்டேன்.. ஐம் என்கேஜ்ட்ன்னு.. ஆனா.. அவ அதை எல்லாம் காதுல வாங்கிக்கிற மாதிரியே இல்ல. எனக்கு நெருப்பு மேல நிக்கறது போல இருக்கு..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவனது அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

வினய் கதவின் அருகில் சென்று யாரென்று கேட்க, “நான் தான்..” என்ற குரல் கேட்கவும், வினய் கதவைத் திறந்து,

அங்கு நின்றிருந்தவளைப் பார்த்து, கண்களை மூடித் திறந்தவன், “என்னாச்சு இவ்வளவு காலையிலேயே..” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்கவும்,

“அர்ஜுன் முழிச்சிட்டாரா?” அந்தக் கதாநாயகி அமிதா கேட்கவும், அந்தக் கேள்வி அர்ஜுனின் காதில் விழவும், தலையில் அடித்துக் கொண்டவன், அவசரமாக குளியறைக்குள் புகுந்துக் கொண்டான்.

வினய் திரும்பி உள்ளே பார்க்க, அர்ஜுன் குளியலறைக்குள் புகுவது தெரியவும், ஒரு பெருமூச்சுடன் கதாநாயகியைப் பார்த்தான். படப்பிடிப்பிற்கு செல்ல தயாராகி வந்திருந்தவள், வழியில் இருந்த அர்ஜுனின் அறைக்கதவைத் தட்டி இருந்தாள்.  

“ஹாய் குட் மார்னிங்.. என்னாச்சு? ஏன் காலையிலேயே அர்ஜுனைத் தேடறீங்க?” என்று கேட்கவும்,

“அர்ஜுன்.. அர்ஜுன் இல்லையா?” என்று மீண்டும் அவள் கேட்க,

“அவன் குளிக்கப் போயிருக்கான்.. ஏதாவது முக்கியமான விஷயமா? என்கிட்டே சொல்லுங்க.. நான் சொல்லிடறேன்..” வினய் பதில் சொல்லவும்,

“ஓ.. நான் கொஞ்சம் முக்கியமான விஷயம் பேச வந்தேன்.. வெயிட் பண்ணிப் பார்த்துட்டே போகவா? நான் அவர்கிட்ட பேசறதுக்காக தான் சீக்கிரம் ரெடி ஆகி வந்தேன்..” அவள் கேட்டுக் கொண்டிருக்க, அர்ஜுனின் செல்போன் இசைக்கத் துவங்கியது.

வினயின் இதழ்கள் அந்தப் பாடலைக் கேட்டு புன்னகையில் விரிய, அந்த ஹீரோயின் அந்தப் பாடலைக் கேட்டு புருவத்தை சுருக்கினாள்.  

எந்நாளும் தீரா காதலாக…
எப்போதும் நீ நான் பக்கமாக…
என்றென்றும் நீங்கா காட்சியாக…
எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக…                                  ஆசை நூறாகி போக…
ஆடை நூலாகி போக…
கண்ணே கண்ணாடி ஆக…  

அவசரமாக போனை எடுத்தவன், “ஹலோ குட் மார்னிங் சிவாம்மா.. என்னம்மா இவ்வளவு காலையில போன் பண்ணி இருக்க? அங்க எதுவும் பிரச்சனை இல்லையே..”

“அர்ஜுன் எங்க?” என்று கேட்கவும்,

“அர்ஜுன் குளிச்சிட்டு இருக்கான். வந்த உடனே கூப்பிடச் சொல்லவா?” என்று கேட்கவும்,

“இல்ல வேண்டாம்.. முக்கியமா அவரோட போனை தூக்கி குப்பையில போடச் சொல்லுங்க.. என்கிட்டே யாரும் பேசவே வேண்டாம்..” என்று கோபமாக கூறி போனை வைத்தவள், வெடித்த அழுகையுடன் தானும் குளியறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவள் அப்படி பட்டென்று போனை வைக்கவும், “என்னாச்சு இவளுக்கு? என்ன காலையிலேயே கோபம்? இதுங்க என்ன ரெண்டும் இப்படி காலையிலேயே கோபமா இருக்குங்க?” வினய் புலம்பிக் கொண்டே, பதட்டத்துடன் ராதாவிற்கு அழைத்தான்.

ராதாவின் போனும் எடுக்கப்படாமல் போகவும், “இவ நல்லா தூங்கறா போல இருக்கே.. ஹையோ எல்லாருமே இன்னைக்கு சதி பண்றாங்களே..” என்று புலம்பிக் கொண்டே, அடுத்து நிர்மலாவிற்கு அழைத்தான்.

அவர் போனை எடுக்கவும், “அம்மா.. சிவாவைப் போய் பாருங்களேன்.. அவ அர்ஜுனுக்கு போன் பண்ணி இருந்தா.. நான் எடுக்கவும், கோபமா பேசிட்டு வச்சிட்டா.. அவ நாம சொல்ல வேண்டாம்ன்னு நினைச்சதை எல்லாம் பார்த்துட்டா போல.. காலையிலையே அர்ஜுனுக்கு வரிசையா மெசேஜ் பண்ணி இருந்தா.. அதைப் பார்த்ததும் இவன் வேற கோபத்துல கத்திட்டு இருந்தான்.. இப்போ அவ போன் பண்ணி கத்திட்டு போனை வைச்சிட்டா.. ரெண்டு பேருமே செம கோபமா இருக்காங்கம்மா.. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. அவளைப் போய் பாருங்களேன்..” பதட்டமாகக் கூறியவன்,

“என்னடா.. என்ன சொல்ற? காலையிலேயே என்ன சண்டை ரெண்டு பேருக்கும்?” நிர்மலா பதட்டத்துடன் கேட்கவும்,  

“ப்ளீஸ்ம்மா.. அவளைப் போய் பாருங்களேன்.. அங்க ராதா கூட போனை எடுக்க மாட்டேங்கிறா..” என்றவனின் பதட்டம் புரிய,

“சரிடா.. டென்ஷன் ஆகாதே.. நான் பார்த்துக்கறேன்.. நீ அங்க அவனைப் பாரு..” என்ற நிர்மலா, ஒரு பெருமூச்சுடன் சிவாத்மிகாவைக் காணச் சென்றார்..

நிர்மலாவிற்கும் உள்ளுக்குள் பயப்பந்து சுழன்றுக் கொண்டு தான் இருந்தது.. அர்ஜுனின் முதல் பட அனுபவம் வேறு வந்து அவருக்கு பயமுறுத்த, அதை விட, சிவாத்மிகாவின் மனநிலை ஒருபுறம் அவருக்கு பூதாகரமாக எழுந்து மிரட்ட, அவருக்கு படபடப்பாக இருந்தது. மெல்ல தன்னை நிதானப்படுத்திக் கொண்டவர், அர்ஜுனும் சிவாத்மிகாவும் எந்த பிணக்கும் இன்றி வாழ இறைவனை வேண்டிக் கொண்டே, அவளின் வீட்டின் கதவைத் தட்டிவிட்டு நின்றார்.

அர்ஜுனுக்கு அழைத்த சிவாத்மிகா, அப்பொழுதும் போனை அர்ஜுன் எடுக்காமல் வினய் எடுக்கவும், கோபத்தில் அவனைத் திட்டிவிட்டு போனை விட்டு எரிந்தவளுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது.

“என்கிட்ட பேசினா நான் என்ன செஞ்சிடப் போறேன்? இப்போ என்கிட்ட பேசறதுக்கு என்ன? என் மேல அவ்வளவு தான் நம்பிக்கையா?” என்று பொருமிக் கொண்டே பாத்ரூமில் புகுந்துக் கொள்ள, ராதாவும் இரவு நெடுநேரம் வினயுடன் பேசிவிட்டு நன்றாக உறங்கி இருக்க, சிவாத்மிகாவை காண வந்த நிர்மலாவிற்கு பூட்டிய கதவே வரவேற்றது..

சிவாத்மிகா குளியறைக்குள் புகுந்து இருக்க, கதவைத் தட்டி விட்டு அவர்கள் கதவைத் திறப்பதற்காக காத்திருந்த நிர்மலா, அவர்கள் கதவைத் திறக்காமல் போகவும்,

“என்ன பண்றாங்க இவங்க ரெண்டு பேரும்” என்று புலம்பிய படி, வீட்டிற்குச் சென்று அவர் தனது செல்லை எடுத்து அவளுக்கு முயற்சி செய்ய, அவரது அழைப்புகள் எடுக்கப்படாமல் போய்க்கொண்டிருந்தது. நிர்மலாவிற்கு நேரமாக ஆக பதட்டமும் தொற்றிக் கொண்டது.

அர்ஜுன் குளித்துவிட்டு தயாராகி வரும் வரை அந்த கதாநாயகி அங்கேயே அமர்ந்திருக்க, அவளை வெளியே செல்லுமாறு சொல்லவும் முடியாமல் வினய், அர்ஜுனை இயலாமையுடன் பார்த்தான்..

அர்ஜுன் வினயைப் பார்த்து பல்லைக் கடிக்க, அர்ஜுன் ஒரு முடிவுடன் அவளிடம் வரவும், “நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..” அவள் தொடங்கவும், அந்த நேரம் சரியாக சிவாத்மிகா மீண்டும் கால் செய்யவும், அந்த கதாநாயகியின் மேல் இருந்த கோபத்தில், வேகமாகச் சென்று போனை எடுத்தவன்,

“இப்போ எதுக்கு நீ திரும்பத் திரும்ப கால் பண்ணிக்கிட்டே இருக்க?” என்று கோபமாகக் கேட்க,

“என்னத்துக்கு நீங்க இப்போ கோபப்படறீங்க? இப்போ என்கிட்டே ஏன் பேசாம இருக்கீங்க? எத்தன தடவ உங்களுக்கு போன் செய்யறது? போன் எடுத்து பேசறதுக்கு என்ன? எப்போப் பாரு வினய் அண்ணா தான் எனக்கு பதில் சொல்றாங்க..” கோபமாக சிவாத்மிகா கேட்கவும்,

“உன்கிட்ட எல்லாமே சொல்லிட்டு இருக்க முடியாது.. கொஞ்சம் பிசியா இருந்தேன்.. அவ்வளவு தான்.. சொன்னா புரிஞ்சிக்கணும்.. சொல்லாமையும் புரிஞ்சிக்கணும்..” அர்ஜுனின் பதிலில்,

இப்பொழுது கடுப்பான சிவாத்மிகா, “ஓ.. அந்த ரீல்ஸ் செய்றதுல ரொம்ப பிசியோ? செம ஹாப்பியா ஷூட்டிங் போகுது போல.. அது தான் என்கிட்டே பேசத் தோணலையா? என்னை மிஸ் பண்ணலையா?” என்று கேட்க, அவள் கேட்ட கேள்வியில்,

“சிவா.. கொஞ்சம் நிறுத்தறியா?” என்று கேட்கவும்,

அதில் மேலும் கடுப்பானவள், “ஆமா.. நான் பேசறதையும் நிறுத்திடனும்.. அப்படித் தானே? அதெல்லாம் சரி.. அந்த ஹீரோயின் பத்தி என்கிட்டே ஏன் சொல்லல? என்ன தான் நீங்க என்னைப் பத்தி நினைச்சிட்டு இருக்கீங்க? பேசினா அதைப் பத்தி சொல்ல வேண்டி இருக்கும்ன்னு தான் என்கிட்டே பேசவே இல்லையா?” அவள் நக்கலாகக் கேட்கவும், தன்னை அவள் நம்பவில்லையே என்ற கண்மண் தெரியாத கோபத்தில்,

“ஏய்..” என்று அர்ஜுன் உறுமினான்.

“அர்ஜுன்..” அவனது குரலில் சிவாத்மிகா திகைத்து அழைக்கையிலேயே..

“சிவா.. இங்கப் பாரு.. இது தான் நான் உனக்கு கடைசியா சொல்றது.. உன்னோட பயத்துக்கும்.. உன்னோட இன்செக்கியூரிட்டிக்கு எல்லாம் என்னால ஒண்ணும் பண்ண முடியாது.. உன்னோட தாளத்துக்கு எல்லாம் என்னால ஆடவும் முடியாது.. புரிஞ்சதா? நானும் உன்னை கஷ்டப்பட வைக்கக் கூடாதுன்னு பார்த்து பார்த்து ஒண்ணு ஒண்ணும் பண்ணிட்டு இருக்கேன்.. பேசாம அவாய்ட் பண்றேன்.. நீ என்னடான்னா என் தலை மேல ஏறி ஆடிட்டு இருக்க.. வாயால சொல்லலைன்னா செயல்ல புரியாது?

நானும் சரி போகுது.. போகுதுன்னு பார்க்கறேன்.. இதுக்கும் மேல உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னா போ.. அப்படியே போயிடு.. என்கிட்டே போன் செய்து பேசாதே. அர்ஜுன் கிர்ஜுன்னு பக்கத்துல வந்த.. என்ன செய்வேன்னு தெரியாது.. நானும் கோபத்துல பேசிடக் கூடாதுன்னு பார்த்து பார்த்து தள்ளிப் போறேன்.. புரியாது உனக்கு? ச்சே.. சும்மா நை நைன்னுகிட்டு.. வை போனை.. காலையிலேயே தலைவலிக்குது.. மனுஷன் உயிரை வாங்கிக்கிட்டு..” என்று கத்திவிட்டு, அவள் பதில் பேசுவதற்குள் போனை வைத்துவிட, சிவாத்மிகா அதிர்ந்துப் போனாள்.

அதிர்ச்சியில் சில நொடிகள் இருந்தவள், தன்னை சமாளித்துக் கொண்டு, “நான்.. நான் என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு கோபப்படறாங்க? என்னை என்ன நினைச்சிட்டு இருக்காங்க? அப்படியே போயிடுன்னா என்ன அர்த்தம்? கோபத்துல என்ன வேணா பேசலாமா? அவங்க ஒழுங்கா எனக்கு பதில் சொல்ற வரை விட மாட்டேன்..” அர்ஜுனின் வார்த்தைகள் தந்த கோபமும், ஏமாற்றமும், திகைப்பும் சேர்ந்து, தனக்குள் கேட்டுக் கொண்டே, மீண்டும் அவனுக்குத் தொடர்ந்து அழைத்தாள்.  

அர்ஜுனின் செல் விடாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்க, தான் நிலையிழந்ததை உணர்ந்து தன்னையே திட்டிக் கொண்டவன், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.. சிவாத்மிகாவை காயப்படுத்தியதை நினைத்து, தலையில் அடித்துக் கொண்டவனை முறைத்துக் கொண்டிருந்த வினய்,

அவனது முகத்தை நிமிர்த்தி, “அர்ஜுன்.. நீ இப்போ என்ன பண்ணி இருக்கன்னு உனக்குத் தெரியுதா? அவளை எதுக்கு நீ சத்தம் போடற?” என்று கேட்க, அர்ஜுன் அவனை குற்ற உணர்வுடன் பார்த்தான்.

“உனக்கு தலைவலி.. உனக்கு சொல்ல முடியாத டென்ஷன்னா நீ அதை அவக்கிட்ட காட்டக் கூடாது.. அது ரொம்பத் தப்பு.. நீயும் சராசரி ஆம்பளை தான்னு ப்ரூவ் பண்ற இல்ல.. இப்போ எதுக்கு அவளை பிடிச்சுக் கத்தற? அந்த அளவுக்கு அவ என்ன கேட்டா?” வினய் கேட்க, அர்ஜுன் அவள் பேசியதைச் சொல்ல, வினய் அவனை முறைத்தான்.   

“உன்கிட்ட ஆசையா தானே பேச கூப்பிட்டா? அதுல ஒண்ணும் தப்பில்லையே.. நீ அவ கிட்ட பேசி எத்தனை நாளாச்சுன்னு உனக்குத் தெரியுதா? எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையா உன்னோட டென்ஷன நீ அவகிட்ட காட்டறது தப்புன்னு உனக்கு புரியல? அவ கேட்டதுல என்ன தப்பு? நீ எப்பவும் போல பேசி இருந்தா இந்தக் கேள்விக்கு அங்க என்ன வேலை இருக்கு?” வினய் கேள்வி மேல் கேள்வி கேட்க, அர்ஜுன் அமைதியாக நின்றான்.    

அவனது அமைதி வினயை மேலும் கடுப்பேற்ற, “அப்போ படபடன்னு பேசினயே.. இப்போ பேசேன்.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவளுக்கு உன்கிட்ட பேசற ஆசை கூட இருக்கக் கூடாதா என்ன? அவகிட்ட எதுவுமே சொல்லாம அவ உன்னைப் புரிஞ்சிக்கணும்ன்னு நினைக்கிறது எனக்கு ரொம்ப காமடியா இருக்கு.. இது அந்தக் காலம் இல்ல..

உன் வர்க் டென்ஷன் எல்லாம் அவகிட்டக் காட்டற வேலை எல்லாம் இனிமே வேண்டாம்.. என் தங்கை அதுக்கான ஆளு இல்ல.. நீ இப்படி அவளை ட்ரீட் பண்றதை நான் அனுமதிக்க மாட்டேன்.. அவளோட சந்தோசம் எனக்கு முக்கியம்.. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்தை வச்சிக்கிட்டு என்ன பேச்சுடா பேசற? அப்படியே போன்னு சொல்ற? அவ போனா நீ தாங்குவியா? சொல்லுடா.. நீ தாங்குவியா? இல்ல அவ உன்கிட்ட கோவிச்சுக்கிட்டு ரெண்டு நாள் பேசாம இருந்தா உன்னால இங்க நிம்மதியா ஷூட்டிங் அட்டென்ட் பண்ண முடியுமா? கோபத்துல என்ன வேணா பேசிடலாமா? வார்த்தையை விடாதே.. இது தான் முதலும் கடைசியுமா இருக்கணும் சொல்லிட்டேன்..” என்று கேட்ட வினய் அவனைப் பிடித்து உலுக்க,

“இல்லடா என்னால முடியாது.. அவ பேசாம என்னால ஒரு பொழுது ஓட்ட முடியாதேடா.. அவ என் உயிருடா.. அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்? அவளை காயப்படுத்திடக் கூடாதுன்னு தானே நான் அவகிட்ட பேசாம கூட இருந்தேன்.. அவகிட்ட பேசாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உனக்கு தெரியும் தானே.. அவ இல்லாம எனக்கு சந்தோசம் ஏதுடா? இப்போ கூட என்னால முடிஞ்சா அவகிட்ட பறந்து போயிடுவேன்.. அங்க அவ நான் சத்தம் போட்டதுல தவிச்சுக்கிட்டு இருப்பா.. இப்போ நான் என்ன பண்ணுவேன்?” என்று கேட்டவனை முறைத்த வினய்,   

“பேசறதை பேசிட்டு நீ கஷ்டப்படு.. அவ அங்க எப்படி இருக்காளோ? நான் அம்மாகிட்ட போன் பண்ணி அவளைப் பார்க்கச் சொல்றேன்.. ச்சே.. உன்கிட்ட நான் இதை எதிர்ப்பர்க்கல அர்ஜுன்.. அவ ரொம்ப காயப்பட்டு போயிருப்பா.. அவளை காயப்படுத்தறது நீயா இருந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்.. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்.. எப்படிடா உயிரா லவ் பண்றவளை காயப்படுத்த முடியுது? ச்சே..” என்ற வினய், கோபமாக குளியறைக்குள் புகுந்துக் கொள்ள, அர்ஜுன் தனது செல்லை அவசரமாக எடுத்து சிவாத்மிகாவிற்கு அழைக்கத் துவங்கினான்.

அவளது செல் எடுக்கப்படாமல் போகவும், “சிட்டு.. ஐம் சாரிடி.. இனிமே இப்படி பேச மாட்டேன்.. ப்ளீஸ் போனை எடு.. என்கிட்டே பேசு.. வேணா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ. ஆனா.. பேசாம மட்டும் இருக்காதே.. ஐ மிஸ் யூ பேட்லி.. ஐம் சாரி சிட்டு..” என்று பலமுறை அதையே பலவாறாக சொல்லி வாய்ஸ் மெசேஜ் அனுப்பத் துவங்க, அவனது தவிப்பையும், அவனது காதலையும் கண்ட அந்த கதாநாயகி அமிதா திகைத்துப் போனாள்.    

அதோடு, அர்ஜுனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்ற அந்த விஷயத்தையும், அர்ஜுனின் கண் மண் தெரியாத கோபத்தையும், அவனது காதலையும் பார்த்தவள், பேச வந்த விஷயத்தை பேசாமல், அமைதியாக நகர்ந்து செல்ல, சிவாத்மிகாவிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும், அர்ஜுன் தலையைப் பிய்த்துக் கொண்டான்.   

அர்ஜுன் மீண்டும் போனை எடுக்காமல் போகவும், போனை விட்டு எறிந்தவள், அவனது வார்த்தைகள் தந்த வலியில் சுருண்டு அழத் துவங்கினாள்.

அதற்குள் நிர்மலா சிவாத்மிகாவிற்கு பலமுறை அழைத்தும், அவளது போன் எடுக்கப்படாமல் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்க, நிர்மலாவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது. தனது மொபைலில் இருந்து ராதாவிற்கு அவர் அழைக்க, அப்பொழுது தான் கண் விழித்த ராதா, போனை எடுத்ததும், “ஹலோ.. ராதா.. ராதா..” என்று அவர் பதற,

அவரது பதட்டத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு அவசரமாக எழுந்தவள், “ஹலோ அம்மா.. என்னாச்சு?” என்று அவள் கேட்டது தான் தாமதம்,

“முதல்ல கதவ வந்து திற.. அதுக்கு முன்னால சிவா என்ன செய்யறான்னு பாரு..” அவர் படபடவென்று சொல்லவும், அவசரமாக எழுந்த ராதா, வேகமாகச் சென்று சிவாத்மிகாவைப் பார்க்க, அவள் அழுதுக் கொண்டிருக்கவும், அவசரமாக அவள் அருகில் ஓடிச் சென்றாள்.

“சிவா.. என்னாச்சு சிவா? ஏன் இப்படி காலையிலேயே அழுதுட்டு இருக்க?” என்று பதட்டத்துடன் கேட்க,

“என்னை யாருக்குமே பிடிக்கலக்கா.. நான் ஏன் பிறந்தேன்னு இருக்கு.. இப்போ என்னை உயிரா நினைச்சிட்டு இருந்த அர்ஜுனே என்னை வெறுத்துட்டார்.. நான் ஏன் உயிரோட இருக்கணும்? செத்துப் போகலாமான்னு இருக்கு..” என்று கதறலுடன் சொல்ல, அதைக் கேட்ட ராதா அதிர்ந்து போனாள்.

அவளது மனதினில் நிர்மலாவின் பதட்டமான குரலும் வந்து அபாய ஒலியை எழுப்ப, வேகமாகச் சென்று, வாசல் கதவைத் திறந்தாள்.

பதட்டமாக நிர்மலா நின்றுக் கொண்டிருக்கவும், அவரைப் பார்த்த ராதா, “அம்மா.. அவ என்னவோ அப்படி படுத்து அழுதுக்கிட்டு இருக்கா.. அர்ஜுன் என்னை வெறுத்துட்டார்ன்னு என்ன என்னவோ சொல்லிட்டு இருக்கா? என்னம்மா நடக்குது?” பதட்டமாக அவள் கேட்க,

“ரொம்ப அழறாளா?” என்று கேட்டவர், அவசரமாக அவளது அறைக்குச் சென்றார்.

அவள் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தவர், வேகமாக அவளது அருகில் சென்று அவளை அள்ளி அணைத்துக் கொள்ள, அவரது மடியில் சாய்ந்தவள், “அம்மா..” என்று கதற,

“என்னடா ராஜாத்தி இப்படி அழுதுட்டு இருக்க? என்னடா ஆச்சு?” என்று அவளது தோளை ஆதரவாக வருடியபடி கேட்க,

“அம்மா.. அம்மா.. அர்ஜுன் என்னைத் திட்டிட்டார்ம்மா.. என்னை அவருக்கு பிடிக்காம போயிடுச்சு.. நான் என்ன தப்பு செஞ்சேன்? என்னை அப்படியே போயிடுன்னு கத்திட்டார்ம்மா..” என்றபடி அவள் அழவும்,

அவள் என்ன சொல்கிறாள் என்று குழம்பியவர், “என்னம்மா சொல்ற? அவனுக்கு உன்னைப் பிடிக்காம போச்சுன்னு யாரு சொன்னா? அந்த பொண்ணு ரீல்ஸ், போட்டோ எல்லாம் போட்டா உன்னை அர்ஜுனுக்கு பிடிக்கலைன்னு அர்த்தமா? கூட வேலை செய்யறவங்க கூட போட்டோ எல்லாம் போடறது சகஜம் தானேம்மா?” என்று நிர்மலா பொறுமையாகக் கேட்கவும்,

“நான் அதை தப்பா ஒண்ணுமே கேட்கவே இல்லையே.. நான் பேசும்போதே அவர் ஏன் அப்படி சத்தம் போட்டார்? என்னை அப்படியேன்னு  சொல்லிட்டார்ம்மா.. நான் சந்தேகப்படறேன்னு அவரே ஏன் நினைச்சுக்கிட்டார்? நான் அவரை சந்தேகப்பட்டு எந்த கேள்வியுமே கேட்கவே இல்லையே.. என்னோட அஜ்ஜுவையே நான் எப்படிம்மா சந்தேகப்படுவேன்.. என் அஜ்ஜு என்னைத் தவிர வேற பொண்ணைப் பார்ப்பாருன்னு நான் எப்படிம்மா நினைப்பேன்? அப்படி நினைச்சா நான் என்னையே சந்தேகப்பட்டது போல தானேம்மா ஆகும்? அவர் எப்படி நான் அவரை சந்தேகப்படறியான்னு கேட்கலாம்?” அவள் புலம்ப, அவள் சொல்வது புதிதாக இருக்க, அவளது முகத்தை நிர்மலா நிமிர்த்த, அவளது முகம் அழுது வீங்கி இருந்தது.. அதைப் பார்த்தவர் அதிர்ந்தே போனார்..