எந்நாளும் தீரா காதலாக – 31

2e84f5329721f9faecb7a66eb438c52d-38eeb338

💞💞 31 

சிவாத்மிகாவின் முகம் அழுது வீங்கி இருக்கவும், நிர்மலாவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.. அவள் அழுகையுடன் பேசியதில் அவர் மூளையைத் தட்டி புரிந்துக் கொண்டது, அவள் அந்த வீடியோக்களுக்காக மட்டும் அவள் அழவில்லை என்பது மட்டுமே. அவளது கண்களைத் துடைத்து விட்டவர், அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவளுக்கு புகட்டினார்.

அதை மறுக்காமல் மெல்லக் குடித்து, அவள் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ள, “இப்போ சொல்லுடா.. என்ன ஆச்சு? அர்ஜுன் உன்னைத் திட்டினானா என்ன? அவனா உன்னைத் திட்டினான்?” என்று நிர்மலா நம்ப முடியாமல் கேட்கவும், மீண்டும் கண்களில் கண்ணீர் வழிய,

“அர்ஜுன் என்னை அப்படியே போ என்கிட்ட பேசாதேன்னு திட்டிட்டார்ம்மா..” என்றவள், அர்ஜுனுக்கு அழைத்து அவனை வம்பு செய்ய நினைத்ததும், அர்ஜுன் கோபமாகப் பேசியதையும் சொல்ல, நிர்மலா அதிர்ந்து போனார்.

“என்னடா சொல்ற? அர்ஜுன் உன்னை சத்தம் போட்டானா?” என்று கேட்டவர், உடனே வினய்க்கு அழைக்க, அப்பொழுது ஷூட்டிங்கிற்கு சென்றுக் கொண்டிருந்த வினய், அர்ஜுனை முறைத்துக் கொண்டே போனை எடுத்தான்.

வினய் போனை எடுத்ததும், “அம்மா.. சிவாவைப் போய் பார்த்தீங்களா? அவ எப்படி இருக்கா? அந்த ஹீரோயின் காலங்கார்த்தால ரூம்ல வந்து உட்கார்ந்து இருந்தாங்க.. அந்த கோபத்தை எல்லாம் இவன் தேவையே இல்லாம சிவா மேல காட்டிட்டான்மா.. வாய்க்கு வந்தது எல்லாம் பேசிட்டான்.. அவ எப்படி அதைத் தாங்கப் போறான்னு தெரியலம்மா.. பாவம் அவ.. நீங்க அவ கூட இருங்களேன்..” வினய் படபடவென்று பொறிய, நிர்மலா திகைத்துப் போனார்.

“என்ன சொல்ற வினய்? அவ மேல இருந்த கோபத்துல இவளைக் கத்தினானா? அது என்ன புது பழக்கம்? வேலை டென்ஷன்ல வீட்டுல இருக்கறவங்களைக் கத்தறது? அர்ஜுனா அப்படி செஞ்சான்? எனக்கு நம்பவே முடியல..” என்று கோபமாகக் கேட்க, வினய் அர்ஜுனை முறைக்க, அர்ஜுன் அப்பொழுது நிர்மலாவிடம் பேசுவது சரியாகாது என்று அமைதி காத்தான்.

“நீ என்ன செய்யற?” என்று நிர்மலா கேட்க,

“நாங்க ஷூட்டிங் போயிட்டு இருக்கோம்மா.. நான் காரை டிரைவ் பண்றேன்..” வினயின் பதிலில்,

“வண்டி ஓட்டும் போது டென்ஷனான விஷயத்தைப் பேச வேண்டாம்.. நீ ஷூட்டிங் போயிட்டு பேசு.. இனிமே சிவா கூட அவனைப் பேச வேண்டாம்ன்னு சொல்லிடு.. என்கிட்டயும் சேர்த்து தான் சொல்றேன்..” என்றவர், போனை வைத்துவிட, அதைக் கேட்ட வினய் திகைத்துப் போக, அவனது முகத்தைப் பார்த்த அர்ஜுனுக்கு படபடப்பு ஏறியது.

“என்னடா? அம்மா என்ன சொன்னாங்க?” அர்ஜுன் பதட்டமாகக் கேட்க,

“ஹான்.. இனிமே சிவாவை மறந்துடச் சொன்னாங்க.. கூடவே அவங்ககிட்டயும் பேச வேண்டாம்ன்னு சொன்னாங்க..” என்றவன், அர்ஜுன் அதிர்ந்துப் பார்க்கையிலேயே வண்டி ஓட்டுவதில் கவனம் பதித்தான்.

“என்னடா? அம்மா எப்படிடா அப்படி சொன்னாங்க?” அர்ஜுன் அதிர்ந்துக் கேட்க,

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. டென்ஷனான விஷயத்தை வண்டி ஓட்டற நேரத்துல பேச வேண்டாம்ன்னு வச்சிட்டாங்க.. அங்க போய் தான் திரும்ப பேசணும்..” என்றவன், தனது வேலையை அமைதியாகச் செய்தான்.

தனது மொபைலை எடுத்த அர்ஜுன், சிவாவிற்கு மீண்டும் மீண்டும் அழைக்க, அவளது செல்போன் ஆஃப் என்றே குரல் கொடுக்க, தலையை பிய்த்துக் கொண்டவன், “சிவாவோட செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு..” என்றபடியே, நிர்மலாவிற்கு அழைத்தான். அவனது நம்பர் ஒளிரவும், சிவா நிர்மலாவைப் பார்க்க,

“இனிமே அவன் இது போல வேலை டென்ஷன் எல்லாம் உன்கிட்ட காட்டக் கூடாது.. கொஞ்ச நேரம் பேசாம இரு..” அவளை அடக்கியவர், அவளது முகத்தை நிமிர்த்தினார்.

சிவாத்மிகா கேள்வியாகப் பார்க்கவும், “உனக்கு அர்ஜுன் மேல எந்த சந்தேகமும் இல்லையே. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேட்கறியா?” என்று கேட்கவும், தனது கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

“என்னம்மா இப்படிக் கேட்கறீங்க? என் அஜ்ஜுவை எப்படி நான் தப்பா எடுத்துப்பேன்? நான் நேத்திக்கு தான் அந்த ரீல்ஸ், போட்டோவை எல்லாம் பார்த்தேன்.. எப்படி அது என் கண்ணுல இத்தனை நாளா படாம இருந்ததுன்னு எனக்கே புரியலைம்மா.. அதைப் பார்த்த அப்போ.. அவர் தூக்கமில்லாம தவிக்கிறது இதுக்குத் தானோன்னு ஒரு இது தோணிச்சு.. போயும் போயும் இதுக்காகவா என்கிட்டே சரியா பேசாம இருந்தாருன்னு தோணிச்சும்மா.. சரி.. நேரா கேட்காம.. கொஞ்சம் கலாட்டா பண்ணிட்டு.. நான் அதை எல்லாம் பெருசா எடுத்துக்கலைன்னு புரிய வைக்கலாம்ன்னு பார்த்தேன்.. எங்க? அதுக்குள்ள ஓவரா சத்தம் போட்டு என்னை அப்படியே போயிடுன்னு சொல்லிட்டார்ம்மா.. அர்ஜுனும் என்னை வெறுத்தா நான் எங்க போவேன்?” சிவாத்மிகா கண்ணீருடன் கேட்க,

அவளது கண்களை அன்பாகத் துடைத்தவர், அவளது நெற்றியில் அன்பாக முத்தமிட்டு, “அர்ஜுன், அந்தப் பொண்ணு மேல இருந்த கோபத்துல காலையில உன்கிட்ட கத்திட்டான் போல இருக்கு.. காலையிலேயே அவ ரூம்ல வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தா போல.. அதுல கொஞ்சம் அவன் கோபமா இருந்திருக்கான் போல.. நான் அவன் செஞ்சதை நியாயம்ன்னு சொல்லல.. அது ரொம்ப தப்பு தான்.. ஆனா.. அவனோட பக்கமும் சொல்றேன்..” என்று காலையில் அவன் பேசியதற்கு விளக்கம் சொன்னவர்,

“நான் உண்மையைச் சொல்லவா?” நிர்மலா கேட்கவும்,

“இப்போவாவது சொல்லுங்கம்மா.. அஜ்ஜுவுக்கு என்ன பிரச்சனை? நீங்களும் என்கிட்டே எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க தானே. நான் இவர் சரியா பேச மாட்டேங்கிறாரேன்னு உங்க கிட்ட சொல்ல வந்தேன்.. அப்போ நீங்க அவர்கிட்ட பேசிட்டு இருந்தது கேட்டது..” என்று சிவாத்மிகா சொல்லவும், அவளது கன்னத்தைக் கிள்ளிய நிர்மலா,

“அஜ்ஜு உன்கிட்ட பேசாம இருந்ததுக்கும் இது தான் ரீசன்.. அந்த போட்டோ, வீடியோ எல்லாம் பார்த்து உன்னோட மனநிலை எப்படி இருக்குன்னு அவனுக்கு ரொம்ப கவலை.. அதை விட நீ தப்பா எடுத்துடக் கூடாதுன்னு ஒரு பக்கம் பயம்.. நீ அப்படி எடுத்துக்க மாட்டேன்னு நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், அது உன்னை ஏதாவது வகையில காயப்படுத்திடப் போகுதுன்னு அவனுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு.. ஏன்னா நீ பட்ட காயங்கள் அப்படி இல்லையா? அந்த சிறு வலியைக் கூடத் தரக் கூடாதுன்னு தான் அவனும் பாடுபட்டான்.. அந்த இதோட ஸ்ட்ரெஸ் எல்லாம் தான் அவன் சரியா தூங்கவே இல்ல.. நேத்து வினய் டாக்டர்கிட்ட கேட்டு தூக்க மாதிரி வாங்கி கொடுத்து தூங்க வச்சான்..” என்றவர், சிவாத்மிகா அதிர்ந்துப் பார்க்கவும்,

“அந்தப் பொண்ணு அர்ஜுன் கூட ரொம்ப வீடியோ எடுக்கறது, போட்டோ போஸ்ட் பண்றதுன்னு செய்யறது அர்ஜுனுக்கு அவ்வளவா இஷ்டமில்ல.. கூட வேலை செய்யற பொண்ணுன்னு சாதாரணமா அவன் பேசறதை அந்தப் பொண்ணு எப்படி எடுத்துக்கிட்டாளோ தெரியல.. கேரவனுக்கு போய் பேசறது.. ரூமுக்கு வாசல்ல நின்னு அவன் கூட பேசறதுன்னு எல்லாம் செஞ்சிருக்கா.. அது அங்க நிறைய பேர் அரசல் புரசலா பேச ஆராம்பிச்சு இருப்பாங்க போல இருக்கு.. உனக்கே அர்ஜுனைப் பத்தி தெரியுமே..” அவர் சொல்லி முடிப்பதற்குள்,

“ஹையோ.. அர்ஜுன் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாரேம்மா.. வாயைத் திறந்தோ.. இல்ல செயல்ல கூட அவரு யாரையும் ஹர்ட் பண்ணவோ மாட்டாரேம்மா..” அவசரமாக சிவாத்மிகா சொல்லவும்,

ஆமோதிப்பாக தலையசைத்த நிர்மலா, “அதோட அவ ப்ரொட்யூசரோட பொண்ணு வேற.. அவரே வந்து உங்ககிட்ட பேசிட்டு இருந்தா அவ ஒரு இடத்துல இருக்கா.. கொஞ்சம் பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு போகவும், அர்ஜுனும் ரொம்ப அவாய்ட் செய்ய முடியாம மாட்டிக்கிட்டான். அதுலயே ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி இருக்கான் சிவாம்மா..

முதல் படத்தை போல திரும்பவும் ஆகிடக் கூடாதுன்னு அது வேற ரொம்ப பயந்து போயிருக்கான்.. அதுவும் கல்யாணம் வச்சிருக்கற இந்த சமயத்துல இப்படி ஒரு பேர்.. படம் டிராப் அது இதுன்னு திரும்பவும் வந்தா தாங்காது.. உன்னை நல்லபடியா பார்த்துக்கணும்.. சந்தோஷமா வச்சுக்கணுன்னு எல்லாமே சேர்ந்து தூக்கமே இல்லாம இருந்திருக்கான்மா.. நேத்து என்கிட்டே என்ன செய்யறதுன்னு கேட்டான்.. கல்யாணத்துக்கு நீ சந்தோஷமா ரெடி ஆகிட்டு இருக்கும்போது இதை எல்லாம் சொல்லி உன்னையும் டென்ஷன் பண்ண வேண்டாம்ன்னு தான் நான் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்..” நிர்மலா அவளிடம் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு, சிவாத்மிகாவைப் பார்க்க, அவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

“என்கிட்டே அர்ஜுன் இதை எல்லாம் ஷேர் பண்ணி இருக்கலாமேம்மா.. நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணி இருப்பேனே..” என்று அவள் சொல்லவும்,     

அவளது கன்னத்தை வருடியவர், “இப்போ மட்டும் என்ன? செய்.. என்ன செய்யணுமோ செய்..” நிர்மலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வினய் அழைத்திருந்தான்.

“அம்மா.. சொல்லுங்கம்மா.. நாங்க ஷூட்டிங்க்கு வந்துட்டோம்.. சிவாவோட போனுக்கு என்ன ஆச்சு?” வினய் கேட்கவும்,

“ஏன் என் போனுக்கு என்ன? அதுல யாரு கூப்பிடப் போறா?” சிவாவின் காட்டமான கேள்வியில் வினய் இப்பொழுது திகைக்க, நிர்மலா அவளை கவலையுடன் பார்த்தார்..

“அர்ஜுன் ரொம்ப நேரமா உன்கிட்ட பேச ட்ரை பண்ணிட்டு இருக்கான் சிவா. அது சுவிட்ச் ஆஃப்ன்னே வருது..” வினய் சொல்லவும்,

“அது அப்படித் தான் இருக்கும்.. இன்னொரு தடவ அர்ஜுன் எனக்கு கால் பண்ணினார்ன்னா நான் அவர் நம்பரை ப்ளாக் பண்ணுவேன்னே சொல்லிடுங்க..” என்று மிரட்ட,

“சிவாம்மா? ப்ளீஸ் கொஞ்சம் கோபப்படாம நான் சொல்றதைக் கேளு..” வினய் அவளை சமாதானப்படுத்த முயல,

“நீங்க இங்க வந்த பொழுது என்ன பிரச்சனைன்னு எவ்வளவு தடவ உங்ககிட்ட கேட்டு இருப்பேன்? ஒருதடவையாவது சொன்னீங்களா? இல்லவே இல்ல.. அர்ஜுன் குழந்தை என்னை மிஸ் பண்றான்னு சொல்லிட்டு  போனீங்க இல்ல.. அப்படியே அந்த குழந்தையை கூட்டிட்டு எங்கயாவது போயிடுங்க.. என் கண்ணு முன்னால வந்தீங்க.. உங்க ரெண்டு பேரையும் நான் என்ன செய்வேன்னே தெரியாது.. எல்லாம் தலைக்கு மீறின அப்பறம் சொல்லலாம்ன்னு பார்த்தீங்களா? உங்களை எல்லாம் என்ன செய்யறது? வரேன்.. உங்களுக்கு எல்லாம் நேர்ல வந்து வச்சிக்கறேன் கச்சேரியை..” என்று அவள் ஒரு மூச்சு கத்தித் தீர்க்க, அவளது குரல் அருகில் இருந்த அர்ஜுனுக்கு தெளிவாகக் கேட்க, தன்னையே நொந்துக் கொண்டு,

“சிவாம்மா.. சாரி..” என்று வாய்த் திறக்கும் நேரம், சிவாத்மிகா இணைப்பைத் துண்டிக்க, அர்ஜுன் துடித்துப் போனான்.

“என்னடா இவ இவ்வளவு கோபமா பேசறா?” அர்ஜுன் பரிதாபமாகக் கேட்கவும்,

“நீ செஞ்சு வச்சு இருக்கற காரியத்துக்கு நான் என்ன சொல்லறது? நானாவது அவக்கிட்ட இங்க கிளம்பி வரத்துக்கு முன்னால சொல்லி இருக்கணும்.. நான் செஞ்சதும் தப்புத் தான்.. இப்போ ரெண்டு பேரும் வாங்கிக்கட்டறோம்?” என்றவன், மீண்டும் நிர்மலாவின் செல்லுக்கு அழைக்க, அவர் எடுப்பதற்குள், தனது கையில் போனை எடுத்தவள்,

“அம்மா.. நான் சொல்றதைக் கேளுங்க.. கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் தவிக்கட்டும்.. இவ்வளவு நாளா நான் தவிச்சேன் இல்ல..” என்று கேட்கவும், அவர் பதில் பேச முடியாமல் தவிக்க,

“நான் அர்ஜுன் கூட அங்க இருக்க, அடுத்த ஃப்ளைட்ல ஹைதராபாத்க்கு கிளம்பறேன்.. நான் போய் சேர்ற வரை ரெண்டு பேருக்குமே நான் அங்க போறது தெரியக் கூடாது.. சப்ரைசாவே இருக்கட்டும்மா.. இங்க நான் அவ்வளவு தடவ கேட்டும், என்கிட்டே சொல்லாம வினய் அண்ணா போனதும் தப்பு.. அர்ஜுன் என்கிட்டே சொல்லாம மறைச்சதும் தப்பு.. அதுக்கு தான் இந்த பனிஷ்மெண்ட்.. இதே வேற மாதிரி ஆகி.. ஏதாவது பிரச்சனை ஆகி இருந்தா.. யார் என்ன பதில் சொல்லுவா? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல..” என்ற சிவாத்மிகா,  அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ராதாவைப் பார்த்து,

“நான் போறே வழியில பொட்டிக்குக்கு போய் ப்ரியா கிட்ட சொல்லிட்டு போறேன் அக்கா.. அங்க இருந்தே நான் மேனேஜ் பண்றேன்.. எப்போ வரேன்னு எனக்குத் தெரியாது.. அம்மாவையும் பார்த்துக்கோங்க..” என்றவள், தனது பையை எடுத்து, தனது துணிகளை எடுத்து வைக்கத் துவங்க,

“பாப்பா.. அங்க போய் அவங்க கூட எல்லாம் சண்டைப் போடாதே.. அம்மா சொல்றதைப் பார்த்தா தம்பி ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க போல இருக்கு.. ஏதோ டென்ஷன்ல பேசிட்டாங்க.. அதை எல்லாம் மனசுல வச்சுக்காம தம்பியை கொஞ்சம் சமாதனம் படுத்து.. இந்த அளவு டென்ஷன் ஆனா உடம்புக்கு ஆகாது..” ராதா சிவாத்மிகாவுக்கு உதவிக் கொண்டே சொல்ல,

“சண்டை எல்லாம் போட மாட்டேன்க்கா.. போன உடனே அஜ்ஜு கன்னம் பழுக்கற அளவுக்கு ஒரு அரை விடப் போறேன்.. அவ்வளவு தான்.. அது போதும் தானே..” அவள் குறும்பாகக் கேட்கவும்,

“ஏய்.. என் பையனை அடிப்பியா?” என்று நிர்மலா குரல் கொடுக்க, அவரைப் பார்த்து புன்னகையுடன் கண்ணடித்தவள், தனக்குத் தேவையானதை எடுத்து வைக்கத் துவங்கினாள்.

வினய் மீண்டும் நிர்மலாவிற்கு அழைத்து, “என்னம்மா.. அவ இப்படி பேசறா?” என்று கேட்க,

“அவ ரொம்ப கோபமா இருக்காடா.. நான் என்ன சொல்றது? சரி.. கொஞ்ச நேரம் விட்டுப் பிடிப்போம்.. நீ டென்ஷன் ஆகாம வேலையைப் பாரு..” என்றவரிடம்,

“என்னம்மா இப்படிச் சொல்றீங்க? அர்ஜுன் ரொம்ப டென்ஷனா இருக்கான்ம்மா.. அவ பேசலைன்னா அவனால தாங்கவே முடியாது.. உங்களுக்குத் தெரியாதா? அவளை எப்படியாவது அவன் கிட்ட பேசச் சொல்லுங்கம்மா..” வினய் அவரை சமாதானப்படுத்த,

அதற்கு பதில் சொல்லாமல், “நீ அவனைப் பார்த்துக்கோ.. இப்போதைக்கு அவ்வளவு தான் நான் சொல்வேன்..” எனவும்,

“அவன் நேத்திக்கே தூக்க மாத்திரை போட்டு தான் தூங்கினான்.. அவ கோபமா இருக்கான்னா அவன் தாங்க மாட்டான்ம்மா.. ப்ளீஸ் அவகிட்ட சொல்லுங்க.. இல்ல போனைக் கொடுங்க.. நான் பேசறேன்..” வினய் பதை பதைக்க,

மனம் சிவா அங்கு வருவதை சொல்லத் துடித்தாலும், சிவாவின் வேண்டுகோளை ஏற்று, எதுவும் சொல்லாமல், “சரி.. போய் ஷூட்டிங்கைப் பாருங்க.. நான் அவளைப் பார்க்கறேன்..” என்றவர், போனை வைத்து விட, வினய் கவலையுடன் அர்ஜுனைப் பார்த்தான்.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல், உதவி இயக்குனர் அவனுக்காக அன்றைய காட்சிகளைப் பற்றி விளக்குவதற்காக ஒரு பக்கம் காத்திருக்க, ஒரு பக்கம் அவனுக்கு ஒப்பனை செய்பவர் காத்திருக்கவும், அதற்கு மேல் அவர்கள் முன்பு அந்த பேச்சை வளர்த்த முடியாமல் போனது..

அதற்குப் பிறகு, ஷூட்டிங்கும் துவங்க, அர்ஜுனின் இறுகிய முகத்தை பார்த்த அந்த ஹீரோயின் அன்று எந்த சேட்டையும் செய்யாமல் படப்பிடிப்பில் இருந்தாள்.

“சிவாம்மா.. அர்ஜுன் மேல கோபப்படாதே.. அவனும் ரொம்ப பாவம்..”

“சிவாம்மா.. ஏதாவது பதில் அனுப்பு..”

“சிவாம்மா.. அவன்கிட்ட பேசு.. அவன் ரொம்ப தவிச்சிக்கிட்டு இருக்கான்.. அவனால வேலையில கவனம் செலுத்த முடியல.. ப்ளீஸ் பேசு.” என்ற வினயின் மெசேஜ்கள் ஒன்றைக் கூட அவள் பார்க்காமல், அவளது பொட்டிக்கில் ப்ரியாவிற்கான அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தாள்.

படப்பிடிப்பில், என்றும் இல்லாமல் அர்ஜுன், காட்சிகளை சரியாக செய்ய முடியாமல் டேக் எடுத்துக் கொண்டே இருந்தான்.. அவனது மனது ஒரு நிலையில் இல்லாமல் சிவாத்மிகாவைக் காண தவித்துக் கொண்டிருந்தது.

“என்னாச்சு அர்ஜுன்.. இன்னைக்கு நீங்க ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க? வேணா ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிடலாமா?” டைரெக்டர் அவனிடம் கேட்க,

“இல்ல இல்ல அதெல்லாம் வேண்டாம்.. ஒண்ணும் இல்ல.. கொஞ்சம் காலையில இருந்தே தலைவலிக்குது.. அது தான்.. டேப்லட் போட்டுட்டேன்.. சரி ஆகிடும்..” என்றவன், ஒரு காபியுடன் அடுத்த காட்சிக்குத் தயாராக, அவனது முகத்தைப் பார்த்த கதாநாயகி, அவனது காதலின் ஆழத்தில் மலைத்தே போனாள்.

ஷாட்டின் பொழுது அவன் சாதாரணம் போல இருந்தாலும், இடைவேளையின் பொழுது அவன் யாருக்கோ அழைத்து ஏமாற்றத்துடன் ஓய்ந்து போவது அவளுக்குப் புரிந்தது.. அது யாருக்கு என்றும் அவளுக்கு புரிந்தும் இருந்தது..

மெல்ல தனது மொபைலை எடுத்து, அவனது பக்கத்தை ஆராய்ந்துக் கொண்டே வந்தவள், பேஷன் ஷோவில் எடுத்த அர்ஜுனின் புகைப்படம் கண்ணில் பட, அதன் உள்ளே பார்த்தவள், அர்ஜுனும் சிவாவும் இணைந்திருந்த புகைப்படத்தைப் பார்த்து கண்களை விரித்தாள். அதை விட ‘மை லைஃப்’ என்று போட்டு இருந்த ஒரு போல்டரில் இருந்த புகைப்படங்களைப் பார்த்தவளுக்கு தொண்டை அடைத்தது.  

“இது ஏன் என் கண்ணுல படவே இல்ல.. ரெண்டு பேரும் இவ்வளவு க்யூட்டா இருக்காங்க.. அதுவும் அவங்களுக்கு போட்டு இருக்கற ஒவ்வொரு கோட்டும்.. அவரோட அன்பை சொல்லுது.. நான் வேற குறுக்கா போகப் பார்த்தேனே..” தனக்குள்ளேயே பேசிக் கொண்டவள், அதில் டேக் செய்யப்பட்டிருந்த சிவாத்மிகாவின் ஐடிக்குச் சென்று, அவளது புகைப்படங்களை பார்த்துக் கொண்டே வந்தாள்.      

அதே போலவே வினய், மற்றும் சிவாத்மிகா துவங்கி இருந்த புது ப்ராண்ட்டின் பக்கத்திற்குள் சென்றவள், பேஷன் ஷோவில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், வீடியோக்களையும் பார்த்தவள், தன்னையே நொந்துக் கொண்டாள்.

‘நல்லவேளை காலையில அவர்கிட்ட போய் எதுவும் உளறி வைக்கல..’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள், அவனிடம் இடைவேளையில் மன்னிப்பு வேண்ட நினைத்துக் காத்திருக்க, அர்ஜுனின் முகம் அவளுக்கு அந்த தைரியத்தை கொடுக்காமல் போனது. மாலையும் வந்து விட, அதுவரை சிவாத்மிகா போனிற்கு உயிர்ப்பு கொடுக்காமல் போகவும், அர்ஜுன் நிலைக்கொள்ளாமல் தவிக்கத் துவங்கினான்.

“வினய், நான் இன்னைக்கு நைட் கிளம்பிப் போய் அவளைப் பார்த்துட்டு, நாளைக்கு விடிய காலையில ஃப்ளைட்ல திரும்ப வந்துடவா? அவகிட்ட பேசாம எனக்கு பைத்தியமே பிடிச்சது போல இருக்கு.” வினயிடம் பரிதாபமாக அர்ஜுன் கேட்க,

“நீ சரியா பேசாம இருந்த பொழுது அவளுக்கும் அப்படி தானே இருந்திருக்கும்? அவ உனக்கு பேச எவ்வளவு ட்ரை பண்ணி இருக்கா? கோபத்துல பேசி எல்லாம் கெடுத்துட்ட..” வினய் திட்டி விட்டு,

“இன்னைக்கு அவளைப் பேசாம விடு.. நைட் ஷூட்டிங் முடிச்சிட்டு போய் வீடியோ கால் பண்ணி பேசலாம்..” என்ற வினயின் செல்போன் இசைக்க, அதை எடுத்துப் பார்த்தவன், அர்ஜுனை சந்தோஷத்துடன் பார்த்தான்.

“யாருடா?” என்று அர்ஜுன் பதட்டத்துடன் கேட்க,  

“சிவா தான் கால் பண்றா..” என்றவன், அவசரமாக போனை இயக்க, அர்ஜுன் அவனை பயத்துடன் பார்த்தான்.

அவன் போனை எடுத்ததும், “எங்க இருக்கீங்க நீங்க?” என்று அவள் கேட்கவும்,

“ஷூட்டிங்ல தான் சிவாம்மா.. ஏன்? என்னாச்சு?” வினயின் பதிலில்,

“அது தெரியும்.. வேற எங்க இருக்கப் போறீங்க? ஷூட்டிங் ஸ்பாட் கிட்ட இருக்கற கார் பார்க்கிங்ல தான் நான் இருக்கேன்.. இங்க ரெண்டு ஷூட்டிங் நடக்குது.. அதுல எதுல இருக்கீங்கன்னு கேட்டேன்..” விரைப்பாக சிவாத்மிகா கேட்கவும்,

“ஹே.. என்ன சொல்ற? விளையாடறியா? எங்க இருக்கன்னு உண்மையைச் சொல்லு? தனியாவா கிளம்பி வந்த? அம்மா உன்னை எப்படி விட்டாங்க?” கேள்வி மேல் கேள்விக் கேட்க,

“ஏன் நான் தனியா வர மாட்டேனா? இப்படியே நின்னு கேள்விக் கேட்டுட்டு தான் இருக்கப் போறீங்களா?” இடக்காக அவள் கேட்கவும்,

அவனது உதடுகள் சிரிப்பினில் விரிய, “இதோ நான் உடனே வரேன்..” வினய் சொல்லி முடிப்பதற்குள்,

“எங்க? எங்க இருக்கா? கோவிச்சுக்கிட்டு எங்கயாவது போயிட்டாளா?” அர்ஜுன் படபடப்புடன் கேட்க,

அந்தப் பக்கம் அதைக் கேட்டவள், “இன்னும் இந்த ஆசை வேற இருக்கோ உங்க மாப்பிள்ளைக்கு? வந்தேன்னு வைங்களேன்.. கடிச்சு வச்சிடுவேன்..” சிவாத்மிகாவின் கேள்வியில் சத்தமாக சிரித்தவன்,

“நேர்ல வந்து என்ன வேணா செய்ம்மா.. இப்போ போன்ல என் காது அதெல்லாம் தாங்காது.. அங்கேயே இரு நான் வரேன்.. கராக்ட்டா எங்க இருக்க?” அத்தனை நேரம் இருந்த பதட்டமும், கலக்கமும் போய், அவளே அவனைத் தேடி இங்கு வந்திருப்பதில் வினயின் முகத்தில் சந்தோசம் கூத்தாடக் கேட்டான்.

“என்னடா சிரிக்கற? எங்க இருக்கா? நீ எங்க போகப் போற? கூட யாரு இருக்கா? ஏதாவது சொல்லிட்டு சிரிடா..” அர்ஜுன் கேட்கவும்,

“இங்க தாண்டா இருக்கா. டேய் மச்சான்.. சிவா இங்க வந்திருக்காடா.. உன்னைத் தேடி வந்திருக்கா.. இங்க கார் பார்க்கிங்ல இருக்காளாம்..” என்று வினய் சொல்லி முடிப்பதற்குள், அர்ஜுனின் கால்கள் வேகமாக கார்கள் நிற்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது.      

அவர்களது சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஹீரோயினின் பார்வை அர்ஜுனைத் தொடர்ந்தது.. அவளும் அவர்களை மெல்லத் தொடர்ந்து சென்றாள்.  

இரவு மங்களாக கவிழ்ந்துக் கொண்டிருந்த நேரத்தில், கார்கள் நின்றுக் கொண்டிருந்த இடத்தில், சிவாத்மிகா நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் வேகமாக சென்ற அர்ஜுனைப் பார்த்தவள், அங்கிருந்து நகர முற்பட, அதே வேகத்துடன் அவளது கையைப் பற்றி இழுத்தவன், அவளை அணைத்துக் கொண்டான்..

“ஆஹ்..” என்று அலற வாயெடுத்தவள், அவனது இறுகிய அணைப்பிலும், அவனது இதயத் துடிப்பிலும் அமைதியாக நிற்க, அவளைத் தன்னுலேயே புதைத்துக் கொள்பவனைப் போல அர்ஜுன் அவளைத் தன்னுடன் இறுக்கத் துவங்கினான்.

“இங்க யாரும் என்னைக் கட்டிப் பிடிக்க வேண்டாம்.. எனக்கு தான் இன்செக்யூரிட்டி இருக்கே.. அது தான் உங்களை சந்தேகப்பட்டு கண்காணிக்க வந்திருக்கேன்..” கோபமாக அவள் சொல்ல,

“அப்படி நான் பேசினது தப்புத் தான்.. இனிமே இப்படி பேசமாட்டேன்.. என்னை மன்னிச்சிடு சிட்டு.. இப்படி கோபமா இருக்காதே..” தொண்டையடைக்க அவளிடம் பேசிக்கொண்டே, அவளது கையை எடுத்து தனது கன்னத்தில் அடித்துக் கொள்ள, சிவாத்மிகா தனது கையை இழுத்துக் கொண்டாள்.    

“அஜ்ஜு.. என்ன பண்றீங்க?” தனது கையை இழுத்துக் கொண்டே அவள் பதற, அதற்கு பதில் சொல்லாமல், அவளை இறுக அணைத்துக் கொண்டவன், அவளது தலையைத் தனது நெஞ்சினில் புதைத்துக் கொண்டான்.    

சில நொடிகள் அவனது அணைப்பினில் அமைதியாக நின்றவளின் முகத்தை இரு கைகளாலும் தாங்கியவன், “சாரி சிட்டு.. சாரிடி என் செல்லம்..” என்றபடியே அவளது முகமெங்கும் இதழ்களைப் பதித்துக் கொண்டே வளம் வர,

“இனிமே இது போல பேசவே கூடாது.. இது போல எனக்கு இன்செக்யூரிட்டி இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? நான் உங்க கிட்ட சொன்னேனா? நீங்களா ஒண்ணை கற்பனை பண்ணிக்கிட்டு ஸ்ட்ரெஸ் ஏத்திக்கிட்டு, தூங்காம, உடம்பைக் கெடுத்துக்கிட்டு இருக்கீங்க.. இதுல தூக்க மாத்திரை வேற.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா.. நான் என்ன செய்வேன்? இல்ல அம்மா என்ன செய்வாங்க? கொஞ்சம் அதை எல்லாம் யோசிக்கிறது இல்லயா?” கோபமாக அவள் கேட்க, அவளது கன்னங்களை வருடிய படியே அவள் திட்டுவதை வாங்கிக் கொண்டவன்,

“நல்லா திட்டுடி.. இன்னும் ரெண்டு அடி கூட அடிச்சிக்கோ. பேசாம மட்டும் எனக்கு தண்டனை கொடுக்காதே..” என்றவன், மீண்டும் அவனை அணைத்துக் கொள்ள,

“இதுக்கும் மேல இப்படி ஏதாவது செய்ங்க.. உங்களுக்கு இருக்கு..” என்றபடி    அவனது இடுப்பை கட்டிக் கொண்டு, அவனது மார்பில் சாய்ந்தபடி சிவாத்மிகா அமைதியாக நின்றாள்.

அதைப் பார்த்த வினயின் முகத்தில் புன்னகை அரும்ப, மெல்ல வேறுபுறம் திரும்பிக் கொள்ள, அந்த ஹீரோயின் வினயைப் பார்த்து விட்டு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.  

அவர்களுக்கு தனிமையளித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, “அர்ஜுன்.. இது கார் பார்க்கிங்..” வினய் நினைவுப்படுத்தவும், நாணத்துடன் சிவாத்மிகா நகர்ந்துக் கொள்ள விழைய, அவளைத் தனது கையணைப்பிலையே வைத்துக் கொண்டவன்,

“சரிடா கரடி..” சந்தோஷத்தில் வினயை வம்பு வளர்த்துக் கொண்டே, அவளது பெட்டியை எடுத்துக் கொண்டு,

“வா.. கேரவனுக்கு போகலாம்..” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு கேரவனை நோக்கிச் சென்றான்.         

வினய் அங்கேயே தங்கி விட, கேரவனுக்குள் அவளை இழுத்துக் கொண்டு ஏறியவன், ஏறிய வேகத்தில் அவளை மீண்டும் இழுத்து, அவளது இதழ்களை சிறை செய்ய, அவனது இதழுக்கு தனது இதழ்களைக் கொடுத்து அவனை அணைத்து நின்றவளின், விரல்கள், அவனது அனைத்து மன அழுத்தத்தையும் குறைப்பது போல அவனது மார்பை வருடிக் கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் அவளது இதழ்களில் கரைந்தவன், மீண்டும் அவளது முகத்தைத் தாங்கி, “எனக்காக.. என்னைத் தேடி வந்துட்டயா சிட்டு? நான் சத்தம் போட்டதுக்கு சாரிடா.. இது தான் கடைசி.. இதுக்கும் மேல இப்படி நான் பேசினா எனக்கு என்ன வேணா பனிஷ்மெண்ட் கொடு” வருத்தமும், ஏக்கமுமாகக் கேட்க, 

“இதுக்கும் மேல வேற இது போல பேசுவீங்களோ?” சிவாத்மிகா புருவத்தை உயர்த்திக் கேட்க,

“இல்லம்மா.. மாட்டேன்.. மாட்டவே மாட்டேன்.. இந்த ஒரு நாள் நீ பேசாம இருந்தத்துக்கே செத்துட்டேன்டி..” என்றவனின் அணைப்பு இறுகியது..  

“நான் எங்க அண்ணாவை தானே பார்க்க வந்திருக்கேன்.. கண்டப்படி பேசறவங்களைப் பார்க்க வரல..” அவனது வாயில் ஒரு அடி வைத்தவள், அவனது மார்பில் வாகாக சாய்ந்துக் கொண்டு சொல்ல, கண்களில் கண்ணீர் வழிய அவளது முகத்தை நிமிர்த்தியவன்,

“நீ எனக்காக தான் வந்திருக்க? அது தான் நிஜம்.. இங்கப் பாரு.. நான் தான் உனக்கு முக்கியமா இருக்கணும்.. உங்க அண்ணா எல்லாம் எனக்கு அப்பறம் தான்.. புரியுதா?” என்றவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவள், அவனது கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, அவனது கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு,

“அப்படித் தானே எனக்கும் இருக்கும்.. நீங்க என்கிட்டே எல்லாமே சொல்லணும்ன்னு நான் எதிர்ப்பார்க்கறதுல ஏதாவது தப்பு இருக்கா? நான் கஷ்டப்படுவேன்னு நீங்க சொல்லாம இருக்கறது எந்த விதத்துல சரி? நீங்க என்னைப் புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா? என்னிக்காவது உங்க கூட வேலை செய்யறவங்களை பத்தி நான் உங்ககிட்ட கேள்வி கேட்டு இருக்கேனா? இப்படின்னு என்கிட்டே சொல்றதுக்கு என்ன?” அவள் கேட்க,

“இல்ல சிட்டு.. உன்கிட்ட சொல்லி உன்னையும்..” என்று அவன் சொல்ல வர, அவனது உதடை அவளது விரல் கொண்டு மூடியவள்,

“நீங்க ஏதாவது தப்பு செஞ்சீங்களா?” என்று கேட்க, அர்ஜுன் மறுப்பாக தலையசைக்கவும்,

“அப்பறம் என்கிட்ட சொல்றதுக்கு என்ன? நான் தான் அவ்வளவு சொல்றேன் இல்ல.. எதா இருந்தாலும் சொல்லுங்க.. நான் புரிஞ்சிக்கறேன்னு எவ்வளவு தடவ கேட்டு இருப்பேன்.. அப்போ என்கிட்டே சொல்லி இருக்கனுமா இல்லையா?” அவள் பொறுமையாகக் கேட்க, அவன் ‘ஆம்’ என்று தலையசைக்கவும்,

“காலையில கூட நான் அதை பெரிய விஷயமா எடுத்துக்கலை.. இதை சொல்லாம இருக்கத் தானா என் கூட பேசாம இருந்தீங்கன்னு கேட்டுத் தானே உங்களுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேன்? அதுக்கு எதுக்கு அவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க? எனக்கு இன்னும் இன்செக்யூரிட்டி இருக்குன்னு சொன்னேனா? இல்ல உங்க மேல சந்தேகம்ன்னு சொன்னேனா?” நிறுத்தி நிதானமாக அவள் கேட்கவும், அர்ஜுன் மீண்டும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“தப்பு தான் சிட்டு.. உன் கிட்ட நான் அப்போவே சொல்லி இருக்கணும்.. உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சே நான் ஸ்ட்ரெஸ் எடுத்துக்கிட்டு தூங்க முடியாம தவிச்சேன்.. சாரிடி என் லட்டு.. இனிமே இப்படி பண்ண மாட்டேன்.. உன்னை இப்படி பேசவும் மாட்டேன்.. இன்னைக்கு ஒரு நாள் நீ பேசாம இருந்ததே எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? நான் நைட்டோட நைட்டா அங்க வந்துட்டு, உன்னைப் பார்த்துட்டு காலையில ஷூட்டிங்க்கு திரும்பி வரலாம்ன்னு இருந்தேன்.. அவ்வளவு இதா இருந்தது.. என்னால இங்க ஒரு நிமிஷம் இருக்க முடியல.. நீ போனை எடுக்கலைன்ன உடனே தவிச்சு போயிட்டேன்.. என் உயிரே என்கிட்ட இல்ல..” அர்ஜுன் சொல்லச் சொல்ல, அவனது மனதில் இருந்த பாரம் மொத்தமும் அவனது கண்ணீரில் வடிய, சிவாத்மிகா அவனை மெல்ல அமர வைத்து, அவனது தலையை வருடியபடியே மெல்ல தனது வயிற்றோடு அணைத்துக் கொண்டாள்.

“ஒண்ணுமே இல்ல அஜ்ஜு.. என்கிட்ட சொல்லி இருக்கலாமேன்னு எனக்கு வருத்தம் தான்.. நான் தப்பா எடுத்துப்பேன்னு நீங்களா முடிவு பண்ணிக்கிட்டு இழுத்து விட்டது தான் இதெல்லாம்..” என்றவள், அவனது முகத்தை நிமிர்த்தி, அவனது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,

“என்னோட அஜ்ஜுவைப் பத்தி எனக்குத் தெரியும்.. ஹோட்டல் ரூம்ல நின்னு அந்த பொண்ணு செல்ஃபி எடுத்து போட்டு இருந்தாலும், அது வெறும் போட்டோவா தான் நான் பார்த்து இருப்பேன்..” என்றவளை, வார்த்தைகள் இன்றி, இழுத்து அர்ஜுன் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.   

அவனது அணைப்பினில் சில பல நொடிகள் இருந்தவள், “இனிமே என்கிட்டே எதுவுமே சொல்லத் தயங்காதீங்க.. இது போல மறைக்கிற சின்னச் சின்ன விஷயங்கள் தான் பூதாகரமா என்னிக்காவது உருவெடுக்கும்.. நானும் சரி.. நீங்களும் சரி.. எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.. அதை தூக்கி மூட்டை சுமந்துக்கிட்டு அது சேர்ந்து கஷ்டப்பட வேண்டாம்..” என்றவள், அவனது கண்களைப் பார்த்துக் கொண்டே,

“என்கிட்டே யாராவது உங்களைப் பத்தி ஒரு விஷயம் சொன்னா.. எனக்கு அது புது விஷயமா இருக்கக் கூடாது.. தெரிஞ்ச விஷயமா தான் இருக்கணும் கண்ணா.. அது தான் எனக்கு வேணும்.. அது தான்.. நம்ம உறவோட அஸ்திவாரம்.. அப்படி நாம இருந்துட்டா எத்தனை பேர் வந்தாலும் நம்மளை பிரிக்க முடியாது.. எனக்கும் உங்களுக்கும் நடுவுல யாரும் வரதை நான் விரும்பல.. அது கண்ணுக்குத் தெரியாத சோஷியல் மீடியாவா இருந்தாக் கூட..” பொறுமையாக அவள் சொல்ல, அவளது தெளிவான பேச்சைக் கண்ட அர்ஜுன், தான் இத்தனை நாள், அவளை நினைத்து கவலைக் கொண்டு, மறைத்ததை நினைத்து தன்னையே வருந்திக் கொண்டான்.

“இனிமே இப்படி பண்ண மாட்டேன்..” என்றவன், அவளது இதழ்களை மீண்டும் சிறை செய்ய, அவனது மடி மீது அமர்ந்தவள், அவனது இதழ்களில் கரைந்தாள். கேரவனின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, அர்ஜுன் விருப்பமின்றி அவளது இதழ்களைப் பிரிய, அவள் நாணத்துடன் அவனது மார்பினில் சாய்ந்தாள்.      

அவளது கன்னத்தை ஆசையுடன் வருடியவன், “நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்டி.. என்னால நீ இல்லாம முடியல.. என் கூடவே இருந்துடு..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவனது கன்னத்தை மெல்ல வருடிவள்,

“அதுக்குத் தான் வந்திருக்கேன்.. உங்களை விட்டு போக மாட்டேன்..” என்றவள், அப்பொழுது மீண்டும் கதவு தட்டப்படவும், வினயின் நினைவு வந்தவளாக,

“அண்ணா எங்க? நான் அவங்களுக்குத் தானே போன் பண்ணினேன்? நீங்க எப்படி முன்னால வந்தீங்க?” என்று கேட்கவும்,

“அவன் தான் கதவைத் தட்டிக்கிட்டு இருப்பானா இருக்கும்.. நீ போய் ரெப்ரெஷ் ஆகு.. நான் பார்க்கறேன்..” என்றவன், அவசரமாக முகத்தை சரி செய்துக் கொண்டு, மீண்டும் அவளது இதழ்களில் இதழ் உரசியவன், கேரவனின் கதவைத் திறக்க, சிவாத்மிகா அங்கிருந்த பாத்ரூமினுள் நுழைந்தாள்.  

அர்ஜுன் கதவைத் திறக்கவும், மேலே வந்த வினய், அர்ஜுனை இறுக அணைத்துக் கொண்டு, “இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்குடா மச்சான். இப்படியே ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க..” எனவும், அர்ஜுன் சிரிக்க,  

அவனது தோளைத் தட்டிக் கொடுத்தவன், “இனிமே என் தங்கையை ஏதாவது சொல்லிப் பாரு.. உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது..” என்றவனின் செல்போன் இசைக்க, அதை எடுத்துப் பார்த்தவன்,

“அம்மா தான்..” என்றபடி போனை இயக்கி நிர்மலாவிடம் பேசத் துவங்கினான்.    

“வந்துட்டாம்மா.. அர்ஜுன் சரி ஆகிட்டான்.. ஹ்ம்ம்.. பார்த்துக்கறேன்..” என்றபடி அவன் போனை வைக்கவும், அர்ஜுன் கேள்வியாகப் பார்க்க,

“சிவா வந்துட்டாளான்னு அம்மா கேட்டாங்க.. அவளை நல்லா ரெஸ்ட் எடுக்க விடணுமாம்.. பத்திரமா பார்த்துக்கணுமாம்..” என்று கேலி செய்தவனின் அருகில், உதவி இயக்குனர் தயங்கி நின்றான்.

அவனைப் பார்த்த அர்ஜுன், “இதோ ஒரு ரெண்டு நிமிஷம்.. டச்சப் பண்ணிட்டு வந்துடறேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்க, சிவாத்மிகா முகத்தைத் துடைத்தபடி வரவும்,  

“அழுதழுது கண்ணு எல்லாம் வீங்கி இருக்கு.. நீ கேரவன்ல ரெஸ்ட் எடு.. நான் ஷூட்டிங் முடிச்சிட்டு வந்துடறேன்..” என்றபடி, அவன் டச்சப் செய்துக் கொள்ளத் துவங்க,

“அதெல்லாம் இல்ல.. நானும் ஷூட்டிங் பார்க்கறேன்.. சும்மா இங்க உள்ளேயே எதுக்கு உட்கார்ந்து இருக்கணும்?” என்று கேட்டவளைப் பார்த்து கண் சிமிட்டியவன், தயாராகி கேரவனை விட்டு இறங்க,

“நீ போ.. நான் ராதா கிட்ட பேசிட்டு பின்னாலயே வரேன்..” என்றபடி வினய், பின்தங்கிக் கொள்ள, அர்ஜுன் சிவாத்மிகாவை அழைத்துக் கொண்டு ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குச் செல்ல, அத்தனை நேரம் இருந்த அவனது இறுகிய முகம், இயல்பாக மிருதுவாக இருப்பதைப் பார்த்த வினயின் மனதினில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகியது.