Kalangalil aval vasantham 14(1)

14

கடலையே வெறித்துப் பார்த்தபடி திட்டில் அமர்ந்திருந்தான் சஷாங்கன். அவனது பார்வை எதை நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ப்ரீத்தியால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவனது உணர்வுகளின் கனத்தை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

இவ்வளவு நாள் நடந்தவைகள் எல்லாம் யதார்த்தமாக நடந்தவை என்று தான் பெரும்பாலும் அவன் நினைத்திருந்திருக்கிறான். பெரிய சந்தேகங்கள் வந்ததில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் ரவி இருந்திருக்கிறான் எனும் போது, தான் என்ன அவ்வளவு ஏமாளியா என்றுதான் நினைக்கத் தோன்றியது.

அவனது தாய் இறந்ததும் கூட, மாதேஸ்வரன் ஏதோவொரு பெண்ணோடு நெருக்கமாக இருந்ததை பார்த்ததால் தான்! அப்படியென்றால் அதுவும் பொய்யா? மனம் அதீதமாக வலித்தது. ஏமாற்றப்பட்டதின் வலி! அந்த பொய் தானே ஸ்ரீமதியை காவு வாங்கியது, அவனை குடும்பத்திலிருந்து பிரித்தது.

இப்படிப்பட்ட ஏமாளியாகவா இருந்திருக்கிறோம்? ரவி அவன் முன் நின்றிருந்தால், கொலை செய்திருப்பான். அத்தனை கோபம். எவ்வளவு தைரியம் இருந்திருந்தால், இந்தளவு தன்னை ஏமாற்ற முடிந்திருக்கும்?

எதுவாக இருந்தாலும், அவன் தன்னுடைய வாழ்வில் வலுகட்டாயமாக பிடுங்கியவற்றை அவனால் மீட்டுத் தந்துவிட முடியாதே!

தன்னை மட்டுமல்ல. தன் குடும்பத்தையே ஏமாற்றி ஒருவன், தமக்கையை திருமணம் செய்திருக்கிறான், தாயின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறான், இத்தனை நாட்களாக தன்னை குடும்பத்திலிருந்து பிரித்து வைத்திருக்கிறான், இப்போதும் ஒரு பெண்ணை வைத்து தன்னை ஆட்டி வைத்திருக்கிறான். அத்தனைக்கும் உச்சகட்டமாக அவனை நடு வீதியில் வைத்து நிர்வாணப்படுத்தியதை போன்ற அவமானத்தை தந்திருக்கிறான்.

அத்தனையும் எதற்காக?

பணத்துக்காகவா? புகழுக்காகவா? அல்லது பதவிக்காகவா? கிரிக்கெட் வாரியத்துக்காகவா?

கையில் வைத்திருந்த ஐபோனை விசிறியடித்தான். கண்களில் ரவுத்திரம்!

“ஷான்…” அவனது கோபத்தைப் பார்த்து சற்று பயந்த ப்ரீத்தி, அவனது கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்.

“கைய விடு ப்ரீத்தி…” அவளது கையை உதறியே ஆக வேண்டும் என்பது போல தோன்றியது. அவனது வெறி அனைத்தையும் எங்காவது கொட்டித் தீர்க்க வேண்டும். அதற்கு ப்ரீத்தி அருகில் இருக்கக் கூடாது என்றும் தோன்ற, அவளது பிடியை வலுகட்டாயமாக உதறித் தள்ள முயன்றான்.

“கண்ட்ரோல் யுவர்செல்ஃப்…” அவனது உணர்வுகளை புரிந்து கொண்டவளோ, அவ்வளவு எளிதாக அவனை விடவில்லை.

“என்னை விடு ப்ரீத்தி…”

“விட்டா?”

“அந்த ரவிய கொல்லனும்…” கோபத்தில் கொதித்து கர்ஜித்தான்!

“கொன்னுட்டா சரியாகிடுவியா?” அவனை அழுத்தமாக பார்த்தபடி கேட்டாள் ப்ரீத்தி. மரியாதையை கைவிட்டிருந்தாள். அப்போது அவன் அவளுக்கு முழுமையாக தோழனாகத்தான் தோன்றினான்.

“சரியாகறேனோ இல்லையோ… அவன கொல்லனும்…” இலக்கில்லாமல் பார்த்தபடி கோபத்தை கொட்டினான்.

அவனது ரவுத்திரம் உள்ளுக்குள் நடுக்கத்தை கிளப்பினாலும், அவள் சற்றும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. அதை பற்றிக் கவலைக் கொள்ளவுமில்லை. எப்பாடு பட்டாவது அவனது வேகத்தைக் குறைத்தேயாக வேண்டும் அவளுக்கு!

“அப்படீன்னா நான் அந்த வேலைய செஞ்சுடறேன்…” என்றவளை சட்டென நிமிர்ந்து பார்த்தான்.

“டோன்ட் பி ஸ்டுப்பிட்…”

“அப்படீன்னா நீ யாரு?”

“உனக்கு என்னோட ஃபீலிங்க்ஸ் புரியல…”

“புரியுது. ஆனா இது சரியான வெண்டிலேஷன் இல்ல…” வெகு அழுத்தமாக கூறியவளின் கைகளை இறுக்கமாக பிடித்தான். இறுக்கமாக என்றால் கொஞ்சம் இறுக்கமாக இல்லை, அவனது மொத்த கோபம், ஆக்ரோஷம், பழியுணர்ச்சி, ஆற்றாமை என்று அத்தனையையும் அந்த அழுத்தத்தில் இறக்கினான்.

அவளது கைகள் ரத்தம் கட்டி வலிக்கத் துவங்கியது. ஆனாலும் சிறு முனகல் கூட ப்ரீத்தியிடமில்லை. அத்தனை வலியையும் தாங்கிக் கொண்டு அவனை அழுத்தமாகப் பார்த்தபடி இருந்தாள். நேரம் கூட கூட அந்த அழுத்தமும் கூடியது, இன்னும் சில நொடிகளில் எலும்பே முறிந்து விடலாம் என்பது போன்ற அழுத்தம்!

ஆனாலும் அவன் அதை உணரவில்லை. மனம் முழுக்க வெறி வெறி வெறி மட்டுமே! சாதாரண நிலையில் இருந்திருந்தால், அவளை அந்த வலிக்கு அவனால் ஆட்படுத்தியிருக்க முடியாது. ஆனால் அவன் தன்னிலையில்லை என்பதை புரிந்து கொண்டவள், அவனை சுயநிலைக்குத் திருப்ப,

“ஷான்…” என்று கத்தியழைத்தாள்.

உணர்வுகளுக்கு வந்தவன், சட்டென கையை விட்டான்.

“சாரி ப்ரீத்தி…” என்று அவனது வாய் கூறினாலும், அவனது பார்வை வஞ்சத்தில் தான் குளித்திருந்தது.

அவன் முன்பு மண்டியிட்டு அமர்ந்த ப்ரீத்தி, அவனது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, “உன்னோட கஷ்டம் புரியுது. ஆனா நீ இப்ப தடுமாறினா அத்தனையும் கொலாப்ஸ் ஆகிடும்…”

“இதுக்கு மேல கொலாப்ஸாக என்ன இருக்கு? என்னோட மொத்த வாழ்க்கையையும் முடிச்சுட்டான். இனிமே வெளியக் கூட தலைகாட்ட முடியாது. இனிமே என்ன மிச்சமிருக்கு? சொல்லு…” அவளது கையை உதறியவன், கோபத்தில் கத்தினான்.

“என்ன இல்ல?” அவனை கூர்மையாக பார்த்தபடி கேட்டாள் ப்ரீத்தி.

“எதுவுமே இல்ல… இன்னைக்கு எனக்கு நடந்த அசிங்கம் அப்படி…”

“அப்படி என்ன நடந்து போச்சு?” சாதரணமாக அவள் கேட்க, அவளை கொலைவெறியோடு பார்த்தான் ஷான்.

“உனக்கும் சாதாரணமா போச்சுல்ல…” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டவனை உணர்வுகளற்ற பார்வை பார்த்தாள் ப்ரீத்தி.

“எதை சொல்ற ஷான்?”

“நான் ஆம்பிளையே இல்லன்னு சொல்றது. நான் ஒரு கே’ன்னு சொல்றது. இதெல்லாம் உனக்கும் சாதாரணமா இருக்கா?” உச்சஸ்தாயில் ஆரம்பித்த குரல் அவன் முடிக்கும் போது கீழிறங்கி விட்டது.

“இப்ப அது தான் உனக்கு பிரச்சனையா ஷான்?” என்று அவள் கேட்ட தொனியில், அவனது கோபம் இன்னும் பன்மடங்காக, அவளது கழுத்தைப் பிடித்தான்.

“ஒரு ஆம்பிளையா இருந்து பாரு. அப்பப் புரியும்.” என்று ஆக்ரோஷமாக கூறியவனின் கையை அவனே அறியாமல் எடுத்து விட்டவள்,

“ஷான்…” என்று கூர்மையாக அழைத்தவள், அவனது கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி, “ஒரு அஞ்சு இன்ச் தான் உன்னோட வாழ்க்கையை டிஸைட் பண்ணுமா?” என்று கேட்க, அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை முதலில் உணராமல், சட்டென உணர்வுகளுக்கு திரும்பியவன், அவள் கூறியதின் முழு அர்த்தமும் அவனைத் தாக்க,

“ஏய்…” என்று தலையிலடித்துக் கொண்டவன், “லூசே… அறிவிருக்காடி உனக்கு?” என்று அவளது தலையிலும் நங்கென்று கொட்டினான்.

“அஞ்சில்லையா?” பரிதாபமாகக் கேட்டவளை என்ன செய்வது என்றே புரியவில்லை அவனுக்கு.

“பக்கி… உன்னை…” என்றவனது கோபம், ஆக்ரோஷம் என அனைத்தும் சட்டென வடிந்து அவனையுமறியாமல், சிறு புன்னகை மலர்ந்தது அவனது உதட்டோரம்.

“மானத்தை வாங்காத…”

“முன்ன பின்ன செத்திருந்தா சுடுகாடு தெரியும் பாஸ். ஏதோ கேள்வி ஞானத்துல சொல்லிட்டேன். தப்பிருந்தா இந்த சின்ன புள்ளைய மன்னிச்சிருங்க…” பழைய ப்ரீத்தி மீண்டிருந்தாள்.

“இதுக்காக போய் செத்து பார்த்துட்டு வான்னு சொல்ல முடியாது பிசாசே…” ஷானும் ஓரளவு மீண்டிருந்தான். அதாவது ப்ரீத்தி மீட்டுக் கொண்டிருந்தாள்.

“விட்டா கண்ணம்மாபேட்டைல என்னை அடக்கம் பண்ணிருவீங்க போல இருக்கே…” என்று கண்ணடித்தவளுக்கு மண்டையில் மீண்டுமொரு கொட்டு விழுந்தது.

“போக்கிரி.” என்று புன்னகைத்தாலும், அது அவனது கண்களை எட்டவில்லை.

தலை முடியைக் கோதி விட்டுக் கொண்டவன், மெளனமாக எழுந்து நடக்கவாரம்பித்தான். அந்த இருளில், தனிமையில் கடற்கரையில் இருவர் மட்டுமாக நடப்பது, ஏதோ சொல்ல முடியாத வகையில் அவனுக்கு அமைதியைக் கொடுத்தது.

“வாழ்க்கைல ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்ல…” எங்கோ பார்த்துக் கொண்டு ப்ரீத்தியை இவன் கேட்க,

“நல்லா இருக்கும். ஆனா இன்ட்ரஸ்டிங்கா இருக்காது…”

திரும்பி அவளைப் பார்த்தான். இருளில் அவளது முகம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், வரிவடிவமாக தெரிந்தவளை ஆழ்ந்து நோக்கினான்.

“உன்னோட பாஸ்ட் உனக்கு அவ்வளவு வலி தந்திருக்கல…”

“அப்படியே வலிச்சாலும், அதுதான் எனக்குன்னு அக்செப்ட் பண்ற மனநிலை என்கிட்ட இருக்குன்னு நினைக்கறேன்…” என்றவளை பார்க்காமல், எங்கோ பார்த்தான். அந்த கண்களில் எதையோ தேடும் பாவனை! சற்று நேரம் மௌனித்தவன், தலை குனிந்து கொண்டு,

“அம்மா…” என்று இடைவெளி விட்டு, “எனக்கு வேணும் ப்ரீத்தி…” என்றவனது குரல் கம்மி, நடை தளர்ந்திருந்தது.

அடுத்த அடியை எடுத்தது வைக்கப் போனவள், கால்களை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். பக்கவாட்டில் திரும்பி அவனைப் பார்க்க, மெல்லிய நீர்படலம் அவனது கண்களில், அந்த இருளில் நிலவொளி பட்டு பளபளத்தது.

அவனது இடக்கையை அவளது வலக்கையால் பிணைத்துக் கொண்டு, நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டாள்.

“அது விதி ஷான். போனவங்களை நினைச்சுட்டு இருக்கவங்களை விட்டுட கூடாது.” மெல்லிய குரலில் கூற, அவன் மெளனமாகினான். வார்த்தைகள் வெளிவராமல், தொண்டை இறுக்கிப் பிடித்தது அவனுக்கு!

அவனது நிலை புரிந்தது அவளுக்கு. தொலைக்கக் கூடாதவற்றையெல்லாம் தொலைத்து விட்டு, அதைத் தேடி அழும் குழந்தையாகத் தோன்றினான். நெஞ்சோடு அணைத்துப் பிடித்த கையேடு திரும்பியவள், அவனை வாஞ்சையோடு மென்மையாக அணைத்துக் கொண்டாள்.

அவளது அணைப்பை அவன் தடுக்கவில்லை. அந்த ஆறுதல் அவனுக்கு அப்போது மிகவும் தேவைப்பட்டது. ஒரு கையால் அணைத்தபடி, மறுகையால் அவனது முதுகை மென்மையாகத் தடவிக் கொடுக்க, அந்த வாத்சல்யத்தில் அவன் கரைந்தான். தாயைக் கட்டிக் கொள்வது போல, அவளது கழுத்தை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

ஸ்ரீமதியின் வாசம் அவனது நாசியில்!

அப்போது ஷானுக்கு ஒன்பது வயதிருக்கலாம். மாதேஸ்வரனின் சொந்த ஊரான மாயவரத்தில் கோவில் திருவிழாவுக்கு போயிருந்தனர் குடும்பமாக! குலதெய்வ வழிபாட்டை அவர்களது குடும்பம் மிகவும் முக்கியமாக கருதுவார்கள். வழிவழியாக அவர்கள் பராமரித்து வரும் கோவில் அது!

அவர்களது சமுதாயத்தினர் அனைவரும் கூடும் அந்த நாளன்று கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். எள் போட்டால் எடுக்க முடியாது என்றளவு கூட்டம். வேடிக்கை பார்த்தபடியே, அந்த கூட்டத்தில் எப்படியோ வழி தவறிப் போயிருந்தான் ஷான். அதுவரை அதையும் இதையுமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன், தொலைந்து போன பின் தாயை மட்டுமே தேடியழும் பிள்ளையானான்.

வேறெதுவும் வேண்டாம் ஸ்ரீமதி மட்டுமே போதும் என்ற வேண்டுதலில் அவன் அழுகையில் கரைந்திருக்க, அந்த நேரத்தில் எங்கிருந்தோ, “ஷான்” என்று கதறியழைத்தபடி ஸ்ரீமதி அவனை கட்டியணைத்துக் கொண்டதும், “ஒன்னும் இல்லைடா கண்ணா. அதான் அம்மா வந்துட்டேன்ல…” என்று அவர் முதுகை நீவிக் கொடுத்ததும் மட்டுமே நினைவில் தேங்கியிருந்தது.

அவரது அதே பரிவு, ப்ரீத்தியின் கைகளில்!

இப்போதும் அவன் தொலைந்து போன குழந்தை தான். மரணம் கொண்டு போய்விட்ட தாயை தேடித் தேடித் தினம் தினம் கரையும் பிள்ளை.

ஒரு வேளை ஸ்ரீமதி இருந்திருந்தால், இவ்வளவு நடந்திருக்க விட்டிருக்க மாட்டார் என்பது அவனுக்கு உறுதி!

“அம்மா எனக்கு வேணும் ப்ரீத்தி. ஐ நீட் ஹெர் பேட்லி.” என்றவனது கண்ணீர் அவளது தோளில் பட, அதன் வெப்பம், அவளை நெகிழ்த்தியது.

“உன் கூடவேத்தான் இருப்பாங்க ஷான்…” சிறிய குரலில் கூறியவாறு, இன்னும் கொஞ்சம் இறுக்கமாகக் கட்டிக் கொண்டவள், அவனது முதுகை நீவிக் கொடுத்தாள்.

அவளது கண்களிலும் கண்ணீர்!

“அவங்க மடியில படுத்துகிட்டா போதும், எத்தனை பிரச்சனை வந்தாலும் சமாளிச்சுருவேன்… ஷீ வாஸ் மை பவர்ஹவுஸ். ஷீ வாஸ் மை ஃப்ரென்ட், ஃபிலாசபர் அன்ட் கைட். ஷீ வாஸ் மை எவ்ரி திங். அவங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவும் இப்ப இன்னும் கஷ்டமா இருக்கு. அவங்களை நான் எங்க போய் தேடுவேன் ப்ரீத்தி?

அம்மா, மனசுக்கு கஷ்டமா இருக்குன்னு நான் சொன்னா, நான் இருக்கேன்டா கண்ணான்னு சொல்லுவாங்க. எனக்கு இப்ப யார் சொல்வா? எங்க போனா அவங்களை பார்க்கலாம்? ஐ நீட் ஹெர். ஐ நீட் ஹெர் பேட்லி… வெரி பேட்லி…” என்றவனது உடல் குலுங்கியது அழுகையில்!

ஆண்கள் அழக்கூடாது என்று யார் சொன்னது? அவர்களுக்கு உணர்வுகளில்லையா? அதை அவர்கள் வெளிப்படுத்தக் கூடாதா? பெண்களுக்கு மட்டும் தான் கண்ணீர் சொந்தமா என்றெண்ணியபடி அவனை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டவள், பரிதவிப்போடு, “ஷான்…” என்றழைத்தவாறு முதுகை நீவி விட்டாள்.

இத்தனை வருடங்கள் கழித்தும் தாயின் மரணம் பச்சை ரணமாக அவனைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால், அது அவனை எவ்வளவு பாதித்திருக்க வேண்டும்? அப்போது கொஞ்சமும் அழவில்லை என்பது அவன் வாய்மொழியாக அவள் அறிந்து கொண்டது. அந்த கனமெல்லாம் இப்போதுதான் கரைகிறது போல!

சற்று நேரம் அமைதியாக அவனது முதுகை நீவி விட்டுக் கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவன் அமைதியடையத் துவங்கினான். சிறிது நேரத்தில் அவனது பிடியைத் தளர்த்தியவன், கண்களை துடைத்தபடி, அவளை விட்டுவிட்டு, “தேங்க்ஸ் ப்ரீத்தி…” என்று கூற, “எதுக்கு?” அவன் முதுகை ஒற்றைக் கையால் பற்றிக் கொண்டு கேட்டாள்.

“எனக்கு உன்னோட தோளைக் கடனா கொடுத்ததுக்கு…”

“உங்களுக்கு கடன் கொடுக்கற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல பாஸ்…” என்று அவள் புன்னகைக்க,

“வாலு…” என்றபடி அவளது தோளில் கைப் போட்டுக் கொண்டான்.

வலக்கையால் அவனது வலக்கையை பற்றிக்கொண்டு, இடக்கையை கொண்டு அவனது முதுகோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் ப்ரீத்தி.

இருவருக்குமிடையே இருந்த அந்த பேரன்பில் சிறு கல்மிஷமுமில்லை. அதை அன்பென்பதா? பற்றென்பதா? பரிவென்பதா? பாசமென்பதா? அக்கறை என்பதா? வாஞ்சை என்பதா? வாத்சல்யமென்பதா?

ஆனால் அதன் ஒற்றைச்சொல் தோழமை! விட்டுக் கொடுக்கவே முடியாத தோழமை!

“அம்மா திரும்ப திரும்ப சொன்னாங்க ப்ரீத்தி. அவனோட பார்வை சரியில்லைன்னு. அவங்க கரெக்டா கெஸ் பண்ணிருவாங்க. அவங்க ஜட்ஜ்மெண்ட் எப்பவும் சரியா இருக்கும்.” என்று கூற ஆரம்பித்தவன், சற்று இடைவெளி விட்டு, “அப்படியே உன்னை மாதிரி!” என்று இருளை வெறித்தபடி கூற, ப்ரீத்திக்கு சட்டென உடல் நடுங்குவது போலிருந்தது.

இது எத்தனை பெரிய வார்த்தை! அதுவும் ஷானிடமிருந்து அவள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னை அந்தளவு மரியாதை கொடுத்துப் பார்க்கிறான் என்பதை அவளால் ஜீரணிக்கக் கூட முடியவில்லை.

“அம்மா உன் கூடவே தான் இருப்பாங்க ஷான். நீ முதல்ல இந்த விஷயத்துலருந்து வெளிய வா…”

“முடியல… ஆத்திரமா இருக்கு. அம்மா பேச்சை கேக்காம போயிட்டேனேன்னு என் மேலேயே கோபமா இருக்கு. இப்படியெல்லாம் ஏமாந்து இருக்கோமேன்னு அவன் மேல வெறி வெறியா வருது… ஆனா ஒரு கிரிக்கெட் வாரியத்துக்காக இவ்வளவு பண்ண முடியுமா?” என்ற கேள்வியோடு பழைய நினைவுகளில் மூழ்கத் துவங்கினான்.

சஷாங்கன் அப்போது உணரவில்லை, சாம்ராஜ்யத்தை தக்க வைத்துக் கொள்ளவும், சாம்ராஜ்யங்களை உருவாக்கவும் உடன் பிறந்தவர்களையே கூட கொன்று குவித்த நாடு இது என்பது! அந்த அதிகார வெறிக்கு உடன் பிறந்தோர் என்பதும் தெரியாது, தந்தை தாய் என்றோ, மகன் மகள் என்றோக் கூட தெரியாது.

கிரிக்கெட்டும் கிரிக்கெட் வாரியமும் அப்படியானதொரு சாம்ராஜ்யம் தான் என்பதை முழுமையாக அறிந்தவன் ரவி மட்டுமே!

***

அப்போது மாதேஸ்வரன் வெகு பிசியான ஆள். காலையில் கிளம்பினார் என்றால், அனைத்து வேலைகளும் முடிந்து வர நள்ளிரவாகிவிடும்.

அவர்களுக்கு பல தொழில் நிறுவனங்கள் இருந்தன. ஓசூரில் இரும்பு ரோலிங் மில்லும், புதுச்சேரியில் பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையும், திண்டிவனத்துக்கு அருகில் சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் இருந்தன. கட்டுமான நிறுவனம் என்பதும் காலம் காலமாக உண்டு. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அவர்கள் என்பதால், எப்போதுமே மாதேஸ்வரனிடம் ஒருவித இறுக்கமான தன்மை இருக்கும்.

எங்கும் சரிந்துவிடக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருப்பார்.

அத்தனை தொழிற்சாலைகளின் தலைமையிடம் சென்னை ஆழ்வார்பேட்டையிலிருந்தது.

ஒவ்வொரு பிரிவுக்கும் கீழிருந்து மேல் வரை நிர்வாகிகள் இருந்தனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், உற்பத்தியை பார்த்துக் கொள்ள நிர்வாகக் குழு அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

அதைத் தாண்டி அவர்கள் அனைவரையும் நிர்வகிக்க என்று மிகப்பெரிய குழுவிருக்கும். தொழிலாளர் நலன், மூலப் பொருட்கள் கொள்முதல், உற்பத்தி மேலாண்மை, மார்கெட்டிங், நிதி மேலாண்மை, தணிக்கையாளர்கள் என்று ஒவ்வொன்றுக்கும் ஜெனரல் மேனேஜர்கள் உண்டு. அவர்களை எல்லாம் எல்லாம் நிர்வகிக்க, சிஜிஎம், சிஓஓ, சிஈஓ என்று பல அடுக்கு நிர்வாகம் அவர்களுடையது.