என் விழியில் நீ இருந்தாய் 3

IMG_20211105_201017-f1b8db84

என் விழியில் நீ இருந்தாய் 3

3

 

 

“ஆதித்யன் வெட்ஸ் ரதிபூர்ணிமா” தங்க நிற எழுத்துக்களில் ஜொலித்த அந்த பதாகை, இருளிலும் விளக்குகளின் கைங்கர்யத்தால் டாலடித்தது. இரவு விசேஷங்கள் முடிந்து விட்டதாகையால் காவலுக்காக நின்றிருந்தவர்களைத் தவிர மண்டப வாயிலில் கூட்டமில்லாமல் இருந்தது.

சற்று நிதானமான நடையோடு மண்டபத்தை வந்து சேர்ந்தனர் மது திவ்யா அப்பாஸ் மூவரும்.

“அப்புக்குட்டி அவங்க என்ன கேட்டாலும் நானே பதில் சொல்றேன். ஆளுக்கு ஒன்ன சொல்லி வாசல்லயே மாட்டிக்கப் போறோம். ரெண்டு பேரும் அமைதியா இருங்க புரியுதா?”

“ஓகே மது.” திவ்யாவும் அப்பாஸூம் வேகமாய் தலையாட்டினர்.

மண்டப வாசலிலேயே ரதிபூர்ணிமாவின் தந்தையும் நின்றிருந்தார். இவர்களைப் பார்த்ததுமே சற்று சந்தேகத்தோடு நோக்கினார்.

“வாங்க! நீங்க…?”

“நாங்க பூர்ணியோட ஃபிரெண்ட்ஸ் அங்கிள்.”

“ஃபிரெண்ட்ஸ்ஸா? உங்களை நான் பார்த்த நினைவே இல்லயே?” அவர் பார்வை சந்தேகமாய் அவர்களை ஊடுருவியது.

“நீங்க பார்த்திருக்க மாட்டீங்க அங்கிள். நாங்க அவளோட ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ். கொடைக்கானல்ல நாங்க ஒன்னா படிச்சோம்.” சரளமாக பொய்யை அள்ளிவிட்டாள் மது.

ரதிபூர்ணிமா பள்ளி இறுதி வரை கொடைக்கானலில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் படித்திருந்ததால் மது கூறியதை சற்று நம்பினார் ரதிபூர்ணிமாவின் தந்தை.

ஏற்கனவே ரதிபூர்ணிமா படித்த பள்ளியின் தகவல்கள் அனைத்தையுமே மாறனின் நண்பர்கள் கூறியிருந்ததால் மதுவும் தயக்கம் இன்றி பேசினாள்.

“ஓ… அப்படியா? சரி சரிம்மா. நீங்கலாம் எந்த ஊர்? இவ்வளவு லேட்டா வர்றீங்க?”

“நாங்க மூனு பேருமே திருநெல்வேலியில இருந்து வரோம் அங்கிள். டிரெயின் லேட். அதான் இவ்வளவு லேட் ஆகிடுச்சி.”

“அப்படியாம்மா? சாப்பிட்டீங்களா மூனு பேரும்?”

“சாப்பிட்டோம் அங்கிள்.”

“வாங்கம்மா… உள்ள வாங்க.”

ஓரளவு அவர்கள் கூறியதை உண்மை என்று நம்பியவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.  அவர்களுக்கு மண்டபத்தில் இருந்த அறைகளில் ஒன்றைக் காட்டினார்.

மதுவையும் திவ்யாவையும் பார்த்தவர், “நீங்க ரெண்டு பேரும் இந்த ரூம்ல தங்கிக்கோங்கம்மா. இந்த தம்பி என்னோட தங்கிக்கட்டும்.”

அவரது வார்த்தையில் ஜெர்க் ஆனான் அப்பாஸ், “உங்களோடவா?” அதிர்ந்து அவன் கேட்ட தொனியில் குழம்பியவர், “என்னாச்சு தம்பி?” என்க, அப்பாஸை முந்திக்கொண்டு மது பதிலளித்தாள்.

“அது அப்படிதான் அங்கிள். எதைக் கேட்டாலும் ஜெர்க் ஆவான். அவனுக்கு அப்படியொரு வியாதி. நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க அங்கிள்.”

அவள் கூறிய விதத்தில் சற்று பாவமாக அப்பாஸை பார்த்தவர், “அச்சச்சோ…” என்று உச்சுக் கொட்ட, அப்பாஸோ கொலைவெறியோடு மதுவை முறைத்துக் கொண்டிருந்தான்.

“அதை விடுங்க அங்கிள். ரதிபூர்ணிமா எங்க அங்கிள் இருக்கிறா? நாங்க அவகூடவே தங்கிக்கிறோமே?”

“ஏற்கனவே ரொம்ப நேரமாகிடுச்சிம்மா. ரதிபூர்ணிமா இந்நேரம் தூங்கியிருப்பா. நீங்களும் தூங்குங்க. நாளைக்கு விடியவும் முகூர்த்தம். அப்ப பார்த்துக்கலாம் ரதிபூர்ணிமாவ.” என்றபடி அப்பாஸின் தோள்களில் கை போட்டு அழைத்துச் சென்றார்.

மதுவையும் திவ்யாவையும் பாவமாகத் திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்ற அப்பாஸைப் பார்த்து மது தனது ஃபோனை ஆட்டிக் காட்டியபடி அவனது கைகளில் இருந்த ஃபோனை கண்களால் சுட்டிக் காட்டினாள்.

அவள் கூற வருவது சட்டென்று புரிந்தவனாக தனது ஃபோனை பார்க்க, மதுவின் மெஸேஜ் வந்திருந்தது.

‘ரதி அக்கா இருக்கும் இடத்தைத் தேடிவிட்டு தகவல் தருகிறோம். அதுவரை அவரது தந்தையை அறையை விட்டு வெளியே வராதபடி பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கவும்’ மெஸேஜைப் படித்தவன், “ஆரம்பிச்சிட்டீங்களாடி ஆட்டத்தை. எப்பவும் என்னையே கோர்த்து விடுங்க.” தனக்குள் கடுப்பாக முணுமுணுத்தபடி, ரதிபூர்ணிமாவின் தந்தையோடு சென்றான்.

அறைக்குள் வந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பையை வைத்தாள் மது. வெளியூரில் இருந்து திருமணத்திற்கு வருகிறார்கள் என்று அனைவரையும் நம்ப வைக்கும்படி செட்டப்போடுதான் வந்திருந்தனர்.

“இப்ப அடுத்த பிளான் என்ன மது?” கட்டிலில் அமர்ந்தபடி திவ்யா கேட்க,

“முதல்ல யாருக்கும் தெரியாம மண்டபத்தை சுத்தி பார்க்கனும். அப்பதான் நாம எப்படி தப்பிக்கறதுனு ஐடியா பண்ண முடியும். அடுத்து ரதியக்கா இருக்கற இடத்தை கண்டுபிடிக்கனும் திவி. அப்புறமா அவங்களை கூப்பிட்டுக்கிட்டு சத்தமில்லாம கம்பி நீட்டனும்.”

“அப்ப அப்பாஸ்…?”

“அவன விட்டுட்டா போக முடியும். ரதியக்கா எங்க இருக்காங்கனு நாம கண்டுபிடிக்கிறவரை அவங்க அப்பாவை சமாளிக்கட்டும் அவன். அதுக்கப்புறம் மெசேஜ் போட்டு அவனை வரச் சொல்லிக்கலாம்.”

“ஒருவேளை ரதியக்கா இங்க இல்லனா? வேற எங்கயாவது தங்க வச்சு விடியறப்ப முகூர்த்த நேரத்துல கூட்டிட்டு வர்ற பிளான் எதுவும் இருந்தா என்ன பண்றது?”

“இல்ல, அப்படி இருக்க வாய்ப்பே இல்ல. இவ்வளவு பாதுகாப்பு இந்த மண்டபத்துக்கு கொடுத்து அவங்கப்பா இங்கயே தூங்காம சுத்திக்கிட்டு இருக்கறப்பவே தெரியலயா? கட்டாயம் ரதியக்கா இங்கதான் இருக்காங்க. வா நாம முதல்ல மண்டபத்தோட அமைப்பை பார்த்துக்கலாம். அப்படியே ரதியக்கா எங்க இருக்காங்கனும் தேடலாம்.”

இருவரும் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தனர். நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. மண்டபத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விளக்கெரிந்து கொண்டிருந்தது. வெளிச்சமும் இல்லாமல் இருளும் இல்லாமல் சோபையாக இருந்த மண்டபத்தில் அங்கங்கே ஆட்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

அது மூன்றடுக்கு மண்டபம். தரைத்தளம் முழுக்க பார்க்கிங்க்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. முதல் தளத்தில் மணமக்களுக்கான பிரம்மாண்டமான மேடையும் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவு ஹாலும் அதோடு இணைந்த டைனிங் ஹாலும் இருந்தது.

இரண்டாம் தளம் பால்கனி போன்ற அமைப்பில் இருந்தது. அங்கிருந்தும் சுமார் ஐநூறு நபர்கள் அமர்ந்து திருமணத்தை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பக்கவாட்டில் முழுக்க தங்கும் அறைகள். மேல் தளத்திலும் தங்கும் அறைகளே இருந்தது.

“என்னடி இவ்வளவு ரூம்ஸ் இருக்கு? இதுல ரதியக்கா எங்க இருக்காங்கனு எப்படி கண்டுபிடிக்கறது?” திவி கிசுகிசுக்க, மதுவுக்குமே மலைப்பாகதான் இருந்தது.

“அதான் திவி. எனக்குமே ஒன்னும் புரியல.” குழப்பமாக நகத்தைக் கடித்த மது பார்வையை சுழல விட்டாள்.

இரண்டாவது தளத்தின் பின்பக்கம் இருந்து டைனிங் ஹாலுக்கு செல்ல தனி வழியும், அங்கிருந்து தரைத்தளத்துக்கு செல்ல மாடிப்படிகளும் இருந்தது. பின் பகுதியில் ஒரு கேட் மட்டும் போடப்பட்டிருக்க, கேட்டின் பின்புறம் ஏரியை ஒட்டிய பகுதிகளில் பராமரிப்பு இன்றி புதராக காணப்பட்டது.

மண்டபம் சமீபத்தில் கட்டப்பட்டிருக்கக்கூடும். கட்டுமான கழிவுகள் நிறைந்து காணப்பட்டது மண்டபத்தின் பின்புறம்.

மண்டபத்தின் பின்பகுதியை ஒட்டியிருந்த ஏரி மெல்லிய நிலவொளியில் மின்னியது. பால்கனி வழியாக பின்புறத்தை பார்வையிட்டனர் இருவரும்.

“ரதியக்காவ கண்டுபிடிக்கறது மட்டும்தான் டாஸ்க். தப்பிக்கறது இந்தப் பக்கமா ஈசியா போயிடலாம்.” மது கூற,

“ஏய், பார்க்கதான் ஈசியா இருக்கு. கல்லும் மண்ணும் புதருமாக் கிடக்கு. இதையெல்லாம் தாண்டி போகனும். அங்க பாரு காம்பௌண்டு சுவர் நம்ம விட உயரமா இருக்கு. அதை எப்படி தாண்டறது?” திவ்யா திகைத்தாள்.

“அதெல்லாம் பார்த்துக்கலாம். முதல்ல ரதியக்காவ கண்டுபிடிப்போம். அப்புறமா இந்த கேட்டுக்கான சாவி வேணும். இல்லனா சத்தமில்லாம பூட்டை உடைக்க ஏதாவது டூல்ஸ் வேணும். நான் இங்க கீழ இருக்கற ரூம்ஸ் எல்லாத்திலயும் பார்க்கறேன். நீ மாடியில இருக்கற ரூம்ஸை பாரு.

ஒரு ஒரு ரூமா கதவைத் தட்டி திறந்துதான் பார்க்கனும் வேறவழியில்ல. யாராவது எதாவது சந்தேகமா கேட்டா ரதிய பார்க்க வந்தோம். நாங்க அவங்க ஃபிரெண்ட்ஸ்னு சொல்லுவோம். ரதியக்காவ பார்த்ததும் மெஸேஜ் போடறேன். நீ பார்த்தாலும் எனக்கு போடு. ஓகேவா?” என்றபடி மது அறைகளை நோக்கிப் போக, திவ்யாவோ மாடிப்படி ஏறினாள்.

***

 

ஆதித்யனின் கூரான பார்வை எதிராளியைத் துளைத்தெடுக்க, எதிரில் இருந்தவனோ திமிரான பார்வையோடு நின்றிருந்தான். உதடுகளில் வழிந்திருந்த ரத்தத்தைத் தனது தோளில் துடைத்தவன் கோணல் சிரிப்போடு ஆதித்யனை ஏறிட்டான்.

“நேத்து வரைக்கும் நாம ஃப்ரெண்ட்ஸ் ஆதி. ஆனா இன்னைக்கு…?” அந்த நிலையிலும் சிரிப்பு வழிந்தது அவன் உதடுகளில்.

மேலும் மேலும் ஆத்திரம் பொங்கியது ஆதித்யனுக்கு. துரோகம்… மன்னிக்கவே முடியாதது. எதிரியைக் கூட மன்னிக்க முடியும். ஆனால் துரோகத்தை…

செய்யும் தொழில் எதுவாகினும் செல்லும் பாதை எப்படியாகினும் அதில் நேர்மை முக்கியம். நேற்றுவரை நிதீஷ் போலவே தன்னோடு இருந்தவன் இன்று எதிரே… எதிரியாக! இல்லையில்லை துரோகியாக.

ஒரு கணம் கண்களை இறுக மூடித் திறந்தான், “வருண்… நியூஸ் கன்ஃபார்மா?”

“யெஸ் ஆதி.” இறுகிய குரலில் வருண் கூற,

“செண்ட் பர்சண்ட் கன்ஃபார்ம் ஆதி. இன்னைக்கு நம்மைப் பற்றிய தகவல்களை போலீஸ்க்கு கசிய விட்டது இளங்கோதான்.” பதில் கூறிய நிதீஷ் குரலிலும் அவ்வளவு ஆத்திரம் இருந்தது. தப்பித்து வர பட்ட கஷ்டம் அவனுக்குத்தானே தெரியும்.

மௌனமாய் ஒரு நிமிட கழிதலுக்குப் பின்,

 “முடிச்சிடு…” உறுதியான குரலில் கூறிய ஆதித்யாவை அதிர்ந்து பார்த்தனர் நிதீஷூம் வருணும்.

ஒரு வருட இரு வருட பழக்கமில்லை அவர்களது. நிதீஷ் இளங்கோ ஆதித்யன் வருண் நால்வரும் சிறுவயது முதலே நண்பர்கள். பின்னாளில் தொழிலும் அவர்களைப் பிணைத்திருக்க, இளங்கோ இப்படி மாறிப்போவான் என்பது கனவிலும் நினைத்திராத ஒன்று.

 ஒரு நொடி அதிர்ந்தாலும் ஆதித்யாவின் முடிவே சரியென்று தோன்ற தனது பிஸ்டலை எடுத்தவன் இளங்கோவின் பின் மண்டையில் வைத்து அழுத்தினான் நிதீஷ்.

“வே… வேணாம் ஆதி. நீ தப்புக்கு மேல தப்பு பண்ற. என்னைக் கொன்னுட்டு நீ தப்பிக்க முடியாது. என்னைக்கா இருந்தாலும் நீ மாட்டுவ. என்னை விட்டுடு.”

“ஹாஹாஹா… பயத்துல உளறாத இளா. என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்ச உன்னை எப்படி வெளியவிட முடியும். நோ சான்ஸ்.” ஆதித்யன் கண்களைக் காட்ட நிதீஷூம் வருணும் இளங்கோவை இழுத்துச் செல்ல முயன்றனர்.

சட்டென்று நிதீஷின் பிடியில் இருந்து விலகிய இளங்கோ வருணைத் தள்ளிவிட்டு, ஆதித்யன் மீது பாய, கண்ணிமைக்கும் நொடியில் அவனை எதிர்க்கொண்ட ஆதித்யன் இளங்கோவை அடித்து வீழ்த்தியிருந்தான்.

வருண் மற்றும் நிதீஷின் பிஸ்டல் இளங்கோவை குறி வைத்திருக்க, ஆதித்யனின் பிஸ்டலோ இளங்கோவின் நெற்றியில் அழுந்தி இருந்தது.

அந்த நேரம் படாரென்று அறைக்கதவு திறக்கப்பட ஒரு நொடி அதிர்ந்துதான் போயினர் அனைவரும்.

 அவர்கள் அனைவரது பார்வையும் சரேலென அறை வாயிலைப் பார்க்க, நிலைத்த விழிகளோடு தான் கண்ட காட்சியின் தாக்கம் குறையாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் திவ்யா.

ரதிபூர்ணிமாவைத் தேட மாடியேறிய திவ்யா ஒவ்வொரு அறையாகத் திறந்து பார்த்தபடி வந்தாள். மாடியில் ஒரு சில அறைகள் காலியாக இருக்க, மீதமிருந்த அறைகளில் திருமண வீட்டார்களின் பொருட்களே இருந்தன.

ஒரு பக்க அறைகளை சோதனை செய்து முடித்தவள் அடுத்த பக்கம் செல்ல முயற்சிக்கையில் மூடி இருந்த ஒரு அறையில் இருந்து விநோதமான சப்தம் எழவும் கதவைத் தள்ளி திறந்திருந்தாள்.

இப்படி ஒரு காட்சியைக் காண்போம் என்று கனவிலும் அவள் நினைத்திருக்க மாட்டாள். பேச்சு மூச்சின்றி அதிர்ந்த நிலையிலேயே அவள் நின்றிருக்க, முதலில் சுதாரித்தது வருண்தான்.

“ஆதி, க… கல்யாணப் பொண்ணுனு நினைக்கிறேன். உன்னைப் பார்க்க வந்திருக்காங்க போல. நீ அவங்களோட பேசு. நாங்க இவனைப் பார்த்துக்கறோம்.”  என்றபடி இளங்கோவின் வாயைப் பொத்தி நிதீஷூம் வருணும் இழுத்துச் சென்றனர்.

மணப்பெண்ணை ஆதித்யனே பார்த்ததில்லை. ஆகவே திவ்யாவை மணப்பெண் என்றே நினைத்துக் கொண்டனர் அனைவரும்.

கை கால்கள் வெடவெடக்க திறந்த வாயை மூடாமல் அவர்கள் இளங்கோவைத் திமிரத் திமிர இழுத்துச் சென்றதையே பார்த்திருந்தாள் திவ்யா.

“அ…அது ஒரு சின்னப் பிரச்சனைதான். நான் பார்த்துக்கறேன். நீ…நீங்க பயப்படாதீங்க.”

ஆதித்யனின் குரலில் திரும்பி அவனைப் பார்த்தவளின் பார்வை முழுக்க பயம்… பயம்… பயம் மட்டுமே…

“வா…வாங்க உள்ள வாங்க… என்ன பேசணும்?” அவனுமே மணப்பெண் என்று எண்ணிதான் அவளோடு பேசிக் கொண்டிருந்தான்.

அவன் மனம் முழுக்க இப்போது இவளை எப்படி சமாளிப்பது என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. திருமணம் நின்றுவிடுமோ என்ற பயமெல்லாம் துளிகூட அவனுக்கு இல்லை. ஆனால் அதன்பிறகு தாத்தா பாட்டியை எப்படி சமாளிப்பது என்பது மட்டுமே அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

வேர்த்து வழிந்து பயமாய் தன்னைப் பார்த்து எச்சில் விழுங்கிய பெண்ணைப் பார்க்கையில் சற்று பாவமாய் தோன்ற குரலில் சற்று மென்மையைக் கொண்டு வந்தான்.

“இங்க பாருங்க. இங்க நடந்ததை யார்கிட்டவும் சொல்ல வேணாம். நானே இதைப்பற்றி உங்களுக்கு அப்புறமா எக்ஸ்ப்ளைன் பண்றேன். பயப்படாதீங்க. யார்கிட்டவும் எதுவும் சொல்ல வேணாம்.”

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே திவ்யாவின் அலைபேசி அதிர, அனிச்சையாக எடுத்து காதில் வைத்தாள்.

“ரதியக்காவ பார்த்துட்டேன். கீழ இறங்கி வா திவி.” மதுவின் குரல் காதில் விழுந்ததும், “ம… மது… ம… மது…” திக்கியவளை அதட்டியது மதுவின் குரல்.

“என்னடி… சீக்கிரம் கீழ வா. அப்புக்குட்டிய வேற கூப்பிடனும். கரெக்டான டைமிங். யாரும் பார்க்கல. எஸ்கேப் ஆகிடலாம் நாம.” என்றபடி அலைபேசியை வைத்திருந்தாள்.

 “நா… நான் கீழ போகணும்.” அலைபேசியை காதில் வைத்தபடியே நடுங்கிய குரலில் மெதுவாய் கூறிய திவ்யாவைப் பார்த்தவன், “நான் உங்களைப் பிடிச்செல்லாம் வச்சிருக்கலயே. போங்க…”

அவனைப் பார்த்தபடியே பின்னோக்கி நான்கெட்டு எடுத்து வைத்தவள் திரும்பி பின்னங்கால் பிடறியில் பட ஓடிப் போனாள்.

அவள் ஓடிய வேகத்தைப் பார்த்ததுமே முடிவு செய்து விட்டான் ஆதித்யன் இந்த திருமணம் நின்றுவிடுமென்று. ஆனால் வரக்கூடிய பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்ற யோசனையிலேய அவள் ஓடிய திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.

கைகள் அனிச்சையாக இடுப்பில் சொருகியிருந்த பிஸ்டலை வருட, மெல்ல நடந்து மண்டபத்தின் பால்கனி அருகே சென்று நின்றான். அவனது பார்வையில் விரிந்தது பின்புறம் இருந்த ஏரி.

— தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!