காதல் தீண்டவே-20

பல யுகங்கள் கழித்து அலுவலகத்திற்குள் வருவது போன்ற பிரம்மை மிதுராவிற்கு…

கடந்து போன இந்த நான்கு நாட்களில்தான் அவளது வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள்… எவ்வளவோ திருப்பங்கள்!

எப்போதும் தீரனை மரியாதையாக  பார்ப்பவளின் விழிகள் இன்று  காதலின் சாமரத்தை வீசிக் கொண்டிருந்தது.

ஆனால் அவனோ இவளை பெயருக்குக்கூட திரும்பிப் பார்க்காமல் கணினியே கதியாக கிடந்தான்.

‘நீ திரும்பலைனா என்ன? நானே உன்னை திரும்ப வைக்கிறேன் ஆதா.’ நினைத்தவளது இதயத்தில் புதுத்திட்டம்.

‘இதோ என் கையிலே இருக்கிற இந்த பேனா…
இதை கீழே போட்டா எடுத்துத் தர கண்டிப்பா நீ குனிவ… நானும் குனிவேன்!
ரெண்டுபேர் நெத்தியும் ஒன்னுக்கொன்னு முட்டிக்கும். அப்புறம் கண்ணுல காதலை தேக்கி நான் பார்க்கிற பார்வையிலே நீ க்ளீன் போல்ட் ஆகிடுவ” என மனதிற்குள் கணக்குப் போட்டபடி தன் கையிலிருந்த பேனாவை நழுவவிட்டாள்.

அதுவும் கீழே உருண்டு விழுந்தது.

ஆனால் வலப்பக்கமாக உருள வேண்டியது, திசை மாறி இடதுப்பக்கமாய் உருண்டு ராஜ்ஜின் கால்களில் சரண்புகுந்தது.

‘ஐயோ சொதப்பிட்டேனே!’ தன்னைத்தானே கடிந்தபடி பேனாவை எடுக்க குனிந்தபொழுது ராஜ்ஜூம் குனிந்தான்.

இருவரது நெற்றியும் எதிர்பாராவிதமாய் மோதிக்கொள்ள இவளோ நெற்றியை தேய்த்துக் கொண்டு அவசரஅவசரமாக திரும்பி தீரனைப் பார்த்தாள்.

வெற்றுப்பார்வை அவன் கண்களில்!

அவன் இருதயம் முழுக்க  வேட்டையாடப்படும் மிருகத்தின் ஓலம்.

காதல் என்னும் மிருகம் அவனை துடிக்கத்துடிக்க வேட்டையாடத் துவங்க அதன் கோரப்பிடியிலிருந்து தப்பித்தோடும்  முயற்சியாய் ராஜ்ஜிடம் திரும்பினான்.

“ராஜ், உங்களுக்கு பதிலா நான்   பெங்களூர் போறேன். நீங்க அடுத்த மாசம் எனக்கு பதிலா போங்க.” என்ற தீரனை குழப்பமாக பார்த்தவன்  சரியென தலையசைத்தான்.

அவனது இந்த முடிவைக் கேட்டு மிதுரா அதிர்ந்து திரும்பினாள்.

‘ஏதே… மூணு வாரம் பெங்களூர் போகப் போறானா? அப்போ என் சபதம் என்னாகுறது’ பரிதவித்தபடி அவனைப் பார்த்தாள்.

அந்த பார்வை இதயத்துக்குள் ஊடுருவி அவனை ஏதோ செய்ய பார்க்க சட்டென திரும்பிக் கொண்டான்.

மிதுராவிடமிருந்து விலகி ஓடுவதுதான் நல்லது!

அப்போது தான் பலகாலம் கழித்து ராஜ்ஜின் உதடுகளில் மலர்ந்த இந்த புன்னகை வாடாமல் இருக்குமென முடிவெடுத்தவன் அவள் பார்வையிலிருந்து தப்பித்தோடி பெங்களூருக்கும் வந்துவிட்டான்.

ஆனால் அவள் நினைவுகள் பின்தொடருகிறதே என்ன செய்ய?

அவள் பார்வையில் இருந்து தப்பித்து  இப்போது கவிதைகளிடம் சிக்கிக் கொண்டான்.

தினமும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை ஸ்டேட்டஸில் வைக்கும் அவள் கவிதைகளைப் பார்க்கக்கூடாது என்றுதான் நினைப்பான். ஆனால் நினைத்த அடுத்த கணத்திலேயே அதை மீறியிருப்பான்.

போட்ட சட்டங்களை மீறுவது தானே காதலின் ஆதி குணம்!

அவன் பெங்களுர் டிரெயின் ஏறியபோது ஸ்டேட்டஸில் வைத்த கவிதையிது,

நீ என்னை
   விட்டுப் போனதால்
என் நெஞ்சம்
   இங்கே பட்டுப் போனது…

அதற்கடுத்த இரண்டு மணி நேரத்தில் மீண்டுமொரு கவிதை,

கண்டதும் காதல் என்று
   உணரவில்லை தான்,
ஆனால் உன்னை காணாத
   தருணங்களில் உணர்ந்தேன்
இதுதான் காதலென்று…

இப்போது கூட இரண்டு நிமிடத்திற்கு முன்புகூட ஒரு கவிதை போட்டிருந்தாளே,

என் இதய வலைத்தளத்தின்
    தேடல் பகுதியில்
என்றும் நீ தானென…

என்ன தான் வேண்டுமாம் இவளுக்கு!

இறுக்கி கட்டிய என் இதயநூலை கத்திக்கு பதிலாய் கவிதையால் அறுத்துக் கொண்டிருக்கின்றாள்.

இத்தனை காலம் சில்லுனு ஒரு காதல் நிகழ்ச்சியில் காதலை பிரித்து மேய்ந்த அவனால் நன்றாகவே உணர முடிந்தது, தன் மீது மிதுராவிற்கு ஈர்ப்பு  இருக்கிறதென்று.

தானும் அந்த ஈர்ப்பு விசையில் சிக்கிக் கொண்டு இருக்கின்றோம் என்பதையும் அவன் உணர்ந்தே இருந்தான்.

ஆனால் ராஜ்!

அவன் மிதுராவின் மீது வைத்திருக்கும் அன்பு. பல வருடங்கள் கழித்து ஒரு பெண்ணிடம் நெருங்கத் துவங்கியிருக்கும் தன் நண்பனை தானே நொறுக்கி போடத் தயராயில்லை அவன்.

அவன் மனம் முழுக்க ராஜ் மீண்டும் காயப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணம்  மட்டுமே… ராஜ்ஜுக்கு பதில் இவன் மனமுவந்து காயங்களை ஏற்றுக்கொண்டான்.

தன் நண்பனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராயிருந்தான் தீரன்.

ஆனால் அவன் செல்லும் எல்லா எல்லைகளிலும் புன்னகைத்தபடி மிதுரா நின்றுக் கொண்டிருக்கின்றாளே!

இன்றோடு மூன்று வாரம் முடியப்போகிறது. நாளை அவளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் எப்படி எதிர்கொள்வது?  அவள் கண்களின் கதிர்வீச்சை எப்படி சமாளிப்பது?

பேசாமல் வேலையிருக்கிறது என்று சொல்லி இன்னும் ஒரு வாரம் இழுத்தடித்துவிட்டு இங்கேயே இருந்துவிடாலாமா என யோசித்தவனுக்குள் இன்னும் நான்கு நாட்களில் ராஜ்ஜின் பிறந்தநாளென்பது நினைவிற்கு வந்தது. மறுயோசனையின்றி சென்னைக்கு வர முடிவெடுத்தது அவன் மனது.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

கடந்து சென்ற மூன்று வாரங்களை மூன்று யுகம் போல தள்ளியிருந்தாள் மிதுரா.

அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிப்பதில்லை. அழைப்புகளையும் துண்டித்துவிடுகின்றான்.

எதற்காக என்னை தவிர்க்கின்றான் இவன்?

ஒரு வேளை அதிக வேலைபளுவோ?

இருந்தாலும் இருக்கலாம்…

ஆனால் எனக்குள் காதல்பளு கூடிக்கொண்டு போகின்றதே என்ன செய்ய!

இந்த மூன்று வாரங்களில் ஆதனின் குரல் மட்டுமில்லை என்றால் என்ன ஆகியிருப்பாளோ அவளே அறியாள்.

தீரனால் ஏற்படுத்தப்பட்ட வெறுமையை அவனே ஆதனாய் உருமாறிவந்து இதம் தந்து சென்றிருந்தான்.

‘அடேய் ஆதா! மூணு வாரமா பேசலல… இன்னைக்கு வா. உனக்கு இருக்கு’ ஜன்னலிருக்கையில் அமர்ந்தபடி யோசித்தநேரம் பேருந்து சட்டென்று நின்றது.

வரிசையாக உள்ளே வந்தனர் இரண்டு கார்த்திக்கும்.

மிதுரா வேகவேகமாக ஜன்னல் இருக்கையிலிருந்து நகர்ந்து தீரனுக்கு வழிவிட முயல  தீரனோ சைகயாலேயே வேண்டாமென்று தடுத்தான்.

“நீங்களே விண்டோ சீட் கிட்டே உட்காருங்க மிதுரா.” சொல்லிவிட்டு ராஜ் பக்கத்தில் அமர எத்தனித்தான்.

“நோ நோ நீங்களே  உட்காருங்க தீரன்” என்று இவள் விட்டுக்கொடுக்க அவன் மறுக்க என தொடர்ந்து நிகழ்ந்த களோபரத்தை பார்த்து ராஜ்ஜே அந்த  விண்டோ சீட்டில் அமர்ந்துவிட்டு இருவரையும் பார்த்தான்.

மிதுரா ராஜ்ஜிற்கு அடுத்து அமர்ந்துவிட தீரனோ இவள் பக்கத்தில் அமர்ந்தாக வேண்டிய நிலை.

தயங்கி நின்றவனை பார்வையாலேயே அமர சொன்னாள்.

அவன் தேகம் அவளது அசைவுக்கு தன்னையறியாமல் இசைந்து சட்டென்று அமர்ந்துவிட்டது.

‘எப்படி தப்பிச்சு போக ட்ரை பண்ணாலும் கடைசியிலே இவள் கிட்டே மாட்டிக்கிறோமே’ தன்னைத் தானே நொந்து கொண்டவனின் முன்பு மிதுரா ஹெட்செட்டை நீட்டினாள்.

நீட்டிய ஹெட்செட்டையே வெறித்துப் பார்த்தான்.

அவளுடன் இணைந்து தன் நிகழ்ச்சியைக் கேட்கும்போது அவனுக்கு இதமாகயிருக்கும்.

ஆதனுடைய எந்த வார்த்தை எப்படி தன் மனதினில் தாக்கத்தை ஏற்படுத்தியதென்று அவள் விவரித்து சொல்வதையெல்லாம் மனதினில் குறித்துக் கொள்வான். அது அவனது நிகழ்ச்சியை இன்னும் மேம்படுத்த உதவியிருந்தது.

அவன் பேசும் ஒவ்வொன்றையும் ரசித்து சிலாகிக்கும் அவளுடைய முகத்தைப் பார்க்க பிடிக்கும். 

ஆனால் இனி அவள் முகத்தை ரசித்துப் பார்க்க முடியாதே!

“இல்லை மிதுரா. நானே நேத்து நைட் ஆதன் ஷோவை ரெக்கார்ட் பண்ணிட்டேன். என் ஹெட்ஃபோன்ல கேட்டுக்கிறேன்” 

தன்னை தவிர்த்தவனை புரியாமல் பார்த்தாள்.

முன்பு பார்த்த தீரனுக்கும் இந்த தீரனுக்கும் மலையளவு வித்தியாசம்.

எப்போதும் நட்பாக பழகுபவனின் கண்களும் குரலும் இப்போது தயக்கத்தை குத்தகை எடுத்திருந்தது.

எதனால் என்னிடம் பேசிடத் தயங்குகிறான்? ஒரு வேளை நான் எழுதும் கவிதை அவன் இதயத்தை மயிலிறகால் வருடாமல் நகத்தால் கீறிவிட்டதோ?

சிவானியின் நினைவால் கலங்குகின்றானோ?

யோசனையுடன் திரும்பி அவனைப் பார்த்தவள் தன் ஸ்டேட்டஸில் கவிதையை கிறுக்கத் துவங்கினாள்.

எதுகை மோனை சேர்த்தும்
    அழகு பெறாத என்
கவிதைகள் உன் இரு இதழ்கள்
    சேர்த்து படித்ததும்
அழகுற்றது எப்படி?

எழுதிவிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து  பார்க்க அவளது ஸ்டேட்டஸிற்காகவே காத்திருந்தவன் வேகமாக அந்த கவிதையை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

படித்ததும் இதழ்கள் தன்னையறியாமல் ரகசிய புன்னகை உதிர்த்தது. அவன் கண்களில் மின்னலின் கதிர் வீச்சு.

அவனை தான் மீண்டும் கவிதையால் காயப்படுத்தவில்லை, ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தவளின் முகத்தில் நிம்மதி.

கூடவே சேர்ந்து ஒரு கலக்கமும்.

‘ஒரு வாரத்திற்குள் தயக்கம் விலகி காதலை சொல்வானா?’ என்ற கேள்வி மனதை தைத்தது. 

‘சொல்லவில்லை என்றாலென்ன சொல்லவைப்போம்’ என்று மறுமனம் தைரியம்தர களத்தில் குதித்தாள்.

பத்து நிமிடத்திற்கு ஒருமுறை “சார் ஒரு சந்தேகம்” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு தீரனின் முன்பு நின்றாள்.

“ராஜ், ப்ளீஸ் ஹேண்டில் மிதுரா” ஒரே வார்த்தை சொல்லிவிட்டு அவளிடமிருந்து தன்னை கத்தரித்துக் கொண்டான்.

மனம் வாடியவள் அடுத்த திட்டத்தை செயல்படுத்த முயன்றாள்.

பேருந்தில் இருந்து இறங்கியவுடன் தனியாக செல்ல பயமாக இருக்கிறது துணைக்கு கூட வரமுடியுமா என தீரனிடம் கேட்க,

அவனோ “ராஜ் மிதுராவை கூட்டிட்டுப் போய் விடு.. எனக்கு வேலை இருக்கு” என்றுவிட்டு விலகி சென்றான்.

அதற்கடுத்து மிதுரா எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வியைத்தான் தழுவியது.

கிட்டத்தட்ட நான்கு நாட்களாக அவளிடம் சிக்காமல் மீட்டிங் ஹாலிற்குள் புகுந்துக் கொண்டு, கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருந்தான் அவன்.

ஆனால் இன்றும் அதேபோல தப்பிக்க முடியாதென நினைத்தவள் மனதினிலோ நம்பிக்கை வெளிச்சம்.

இன்று ராஜ்ஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களெல்லாரும் குட்டியாய் ஒரு ஹாலை புக் செய்திருந்தனர்.

எல்லாரும் வந்துவிட்டிருக்க இன்னும் விழாவின் நாயகனும் அவன் நண்பனும் வந்திருக்கவில்லை.

‘எப்போ வருவ ஆதா?’ யோசித்தபடி நிமிர அங்கே இரண்டு கார்த்திக்கும் வந்து கொண்டிருந்தனர்.

தீரனின் பார்வை எதிரிலிருந்த மிதுராவின் மீது தடுமாற்றமாக படர்ந்தது.

எப்போதும் காட்டன் சுடிதாரும் குர்தியோடும் வலம் வருபவளைப் பார்த்து பழகிய தீரனுக்கு வெள்ளை நீற அனார்கலியில் மின்மினியைப் போல மினுமினுத்தவளைப் பார்த்து மூச்சுமுட்டியது.

‘செம அழகாயிருக்க மிது!’ என தீரன் மனதினுள் நினைத்த நேரம் ராஜ் மிதுராவைப் பார்த்து “செம அழகா இருக்கு மிது” என்றான் வாயசைத்து.

ஒத்த அலைவரிசை மீண்டும் வேலை செய்கிறது! விரக்தியில் சுழிந்தது தீரனின் உதடுகள்.

“பர்த்டே பாய் நீங்களும் செம ஹேண்ட்ஸமா இருக்கீங்க” புன்னகையுடன் சொல்லியபடி தீரனிடம் திரும்பினாள்.

அவன் இதழ்களில் மௌனகோடு.

‘அழகா இருக்கேனு சொல்லித் தொலையேன்டா!’  ஏக்கமாய் மிதுரா பார்க்க, அவளது பார்வையைத் தவிர்த்தவன் அபியிடம் திரும்பி “அபி கேக் எங்கேடா?” என்று கேட்டான்.

“இதோ இதோ ராஜ்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கேக்” சொல்லியபடியே ஒரு ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வந்தான்.
அதில் உருளை வடிவில் சிறியதாய் ஒரு கேக்.

“அபி, இந்த குட்டி கேக் எப்படிடா எல்லாருக்கும் பத்தும்? நான் உன்னை பெரிய கேக் தானே ஆர்டர் பண்ண சொன்னேன்” தீரன் முறைப்பாய்க் கேட்க அபி முகத்திலொரு மர்மசிரிப்பு.

“தீரா, பெரிய கேக் பின்னாடியே வந்துட்டு இருக்கு… இது ராஜ்க்காக நானே செஞ்ச ஸ்பெஷல் கேக். எனக்காக இந்த குட்டி கேக்கை கட் பண்ண மாட்டியா ராஜ்?” அபி பாவமாய்க் கேட்க ராஜ்ஜோ மறுயோசனையின்றி வெட்ட கத்தியை வாங்கினான்.

ராஜ் கத்தியால் மெதுவாக அந்த கேக்கை தீண்ட தான் செய்தான்.

ஆனால் பட்டென்ற சப்தத்துடன் கேக் வெடித்து சிதற உள்ளிருந்து தண்ணீர் பீய்ச்சு அடித்தது.

வாட்டர் பலூன் மேல் சாக்லேட் க்ரீமைத் தடவி மேலே ஹேப்பி பர்த்டே என்று எழுதி எடுத்து வந்திருந்த அபியோ,

“ஹா ஹா… தொப்பி… தொப்பி… ராஜ் ஏமாந்துட்டான்” உரக்க சொல்லி சிரித்தவனை ராஜ்  துரத்தினான்.

தீரனின் விழிகள் அங்கு நடந்த எதையும் கவனிக்கவில்லை, பார்வை முழுக்க மிதுராவின் மீது மட்டும் தான்.
அதைக் கண்டு மௌனமாக சிரித்துக் கொண்டது அவளது உதடுகள்.

“பெரிய கேக் வந்தாச்சு… வந்தாச்சு…” கூக்குரலுடன் சிற்பி கேக்கை கொண்டு வந்து வைக்க, ராஜ் புன்னகையுடன் வெட்டி முதலில் தீரனுக்கும் அடுத்து மிதுவுக்கும் ஊட்டினான்.

அந்த நேரம் பார்த்து அபிக்கு கால் வர எடுத்து பேசியவனது முகத்திலிருந்த சந்தோஷம் மொத்தமும் வற்றிப் போயிருந்தது.

அதைக் கண்டு கொண்ட சிற்பி அவனருகில் வந்து என்னவென்று கேட்க இந்த சந்தோஷமான வேளையை கவலையாக்க விரும்பாதவன்,

“ஒன்னுமில்லை சிற்பி. ஒரு சின்ன வொர்க். போயிட்டு வரேன்…” சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பிவிட்டான்.

எல்லாரும் வரிசையாக வாழ்த்திவிட்டு சென்றுவிட இப்போது அங்கே ராஜ், மிது, தீரன் மட்டும் தான்.

அந்த அறையே  பரிசுப் பொருட்களால் குவிந்து இருந்தது. ஆனால் ராஜ்ஜின் மனது மட்டும்  நிரம்பவில்லை.

இன்னமும் மிதுராவிடமிருந்து பரிசு வரவில்லையே!

“என் கிஃப்ட் எங்கே?” கேட்டவனின் முகத்தில் சோகம் ததும்பியது.

மிதுராவின் முகத்திலோ கள்ளச்சிரிப்பு.

“கிஃப்ட் எல்லாம் ரெடியா இருக்கு… ஆனால் அதுக்கு நீங்க ரெண்டு பேரும் என் வீட்டுக்கு வரணும்.”  மிதுரா சொல்ல தீரன் அவசரமாய் இடையில் புகுந்தான்.

“ராஜ், நீ மிதுரா கூட அவங்க வீட்டுக்குப் போயிட்டு வா. எனக்கு வேற வேலையிருக்கு” மெதுவாக நழுவ முயன்றவனை முறைத்துப் பார்த்தான் ராஜ்.

“என்னை விட்டுட்டு போற அளவுக்கு அப்படி என்ன பெரிய வேலை உனக்கு? ஒழுங்கா என் கூட வா” கண்டித்தபடி தீரனை இழுத்துக் கொண்டு கார் நிற்குமிடத்திற்கு வந்தான்.

தீரன் காரை எடுக்க ராஜ்ஜும் மிதுவும் பின்னால் அமர்ந்தனர்.

இருவரும் இன்றைய கொண்டாட்டத்தை விவரித்தபடி வர தீரனின் கவனமோ சாலையின் மீதிருந்தது.

கார் சரியாக மிதுரா வீடு இருக்கும்  தெருமுனையை நுழைய முயன்ற நேரம் மிதுவோ அவசரமாக காரை நிறுத்த சொன்னாள்.

குழப்பத்துடன் மிதுராவை நோக்கியது இரண்டு கார்த்திக்கின் பார்வையும்.

“இல்லை இங்கே இருந்து நடந்தே போகலாமே ப்ளீஸ்… ” அவள் கெஞ்சலுடன் கேட்க இருவரும் மறுக்க முடியாமல் காரைவிட்டு இறங்கினர்.

மிதுரா காரைவிட்டு இறங்கும்போது கீழேயிருந்த கல் அவளது காலை இடறிவிட்டது.

சட்டென்று அவளது இடையைத் தாங்கிப் பிடித்தனர் இரண்டு கார்த்திக்கும்.

“பார்த்து நட மிது” என்ற வாயசைவோடு ராஜ் இடையிலிருந்து கையை விலக்கிவிட்டு முன்னோக்கி நடக்க,  தீரனின் கைகளோ அவளது இடையிலேயே அழுத்தமாக பதிந்து கிடந்தது.

கையை விலக்ககூட தோன்றாமல் அவளது கண்களையே ஆழந்துப் பார்த்தவனை நோக்கி இவள் புருவத்தை உயர்த்த அவனும்  என்னவென்று புருவத்தை உயர்த்தினான்.

கொடியென இடையில் படர்ந்து கிடந்த அவனது கையை பார்வையால் சுட்டிக்காட்ட, அதுவரை ஏதோ ஒரு உணர்வில் ஆழ்ப்பட்டு கிடந்தவன் சட்டென தன்னிலைக்கு மீண்டு வேகமாக கைகளை விலக்கினான்.

அவன் முகத்தில் இப்போது தயக்கத்தின் தடங்கள்.

‘ஐயோ தீரா இப்படி பொசுக்குனு கன்ட்ரோலை இழந்துட்டியேடா…’ தன்னைத் தானே கடிந்தபடி முன்னால் நடந்தவனுக்குள்ளே விஸ்தாரமெடுத்து நின்றது அந்த கேள்வி, “மிதுரா தன்னை இந்தளவுக்கா பாதித்திருக்கிறாள்?”

அந்த சாலையில் இறங்கி நடந்த ராஜ் மிகவும் வித்தியாசமாக உணர்ந்தான்.

கடந்து செல்பவர்களெல்லாம் அவனை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தனர்.

பதின்வயது  சிறுமியின் மேல் அவன் தெரியாமல் மோதிவிட அவள் கையிலிருந்த சாக்லேட்கள் கீழே  சிதறிவிழுந்தது.

இவன் வேகமாக அதையெடுத்து கொடுக்க அவளோ “தேங்க் யூ” சைகையில் சொல்லியபடி சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள்.

ஆனந்த அதிர்வுடன் அதைப் பெற்றுக் கொண்டவனை, கடந்து சென்ற இன்னொரு மனிதரோ  “குட் ஈவினிங்’ சைகையில் சொல்லிவிட்டுப் போக  இன்னொருவரோ “வெரி ஹேண்ட்ஸம்” என்று பாவனையால் சொல்லிவிட்டுப் போனார்.

ராஜ்ஜின் மனதால் சட்டென்று எதையும் உட்கிரக்க முடியவில்லை.

அவனை கடந்து செல்லும் எல்லாரும் சைகை மொழியில் பேசும் போது மனம் அதிராதா என்ன?

குழப்பத்துடன் சைகையில் பேசியவர்களை திரும்பி பார்த்தபடியே மிதுராவின் வீட்டிற்குள் நுழைய முயன்றவனின் முன்பு  கை நிறைய பரிசுப்பொருட்களுடன் சிறுகுழந்தைகள் நின்றனர்.

“ஹேப்பி பர்த்டே ராஜ்” அவர்களெல்லாரும் ஒரே நேரத்தில் சைகை மொழியில் சொல்ல ஸ்தம்பித்து நின்ற ராஜ்ஜின் கண்களில் தன்னையறியாமல் விழிநீர் முத்துக்கள்.

தீரனைப் போல யாராவது ஒருவராவது சைகை மொழி கற்றுக் கொண்டு தன்னிடம் பேசமாட்டார்களா என ஏங்கிய ராஜ் மனதில் இன்று சந்தோஷத்தின் அடைமழை.

தீரனின் உதடுகள் உணர்ச்சியின் குவியலில் தன்னை மறந்து நடுங்கியது. கண்களில் கோடாய் கண்ணீர். தன் நண்பனின் சந்தோஷம் அவனை நெகிழ செய்திருந்தது. கண்களை முடிக் கொண்டு சந்தோஷத்தில் அழுதவனின் கரங்களை விலக்கிவிட்டு மிதுரா அவனை ஆதரவாக பார்த்தாள்.

அதுவரை தடுத்து வைத்திருந்த காதலின் கதிர்கள் தன்னையுமறியாமல் வெளிப்பட துவங்கியது தீரனின் விழிகளில்.

அவளது கைகளை இறுகப் பற்றியவன்  “ரியலி தேங்க்ஸ் மிது மா… என் ராஜ்ஜை ரொம்ப நாள் கழிச்சு இவ்வளவு சந்தோஷமா பார்க்கிறேன்.” என்றபடி அவளை அணைக்க செல்வதற்குள்  ராஜ் மிதுராவை அணைத்து முடித்திருந்தான்.

ராஜ்ஜின் தேகம் ஆனந்த அதிர்ச்சியிலும் அதீத சந்தோஷத்திலும் நடுங்கிக் கொண்டிருந்தது. அதை உணர்ந்த மிதுரா அவனை அணைத்து ஆற்றுப்படுத்த தீரனோ வேகமாக மிதுராவின் கரங்களிலிருந்து தன் கையை விலக்க முயன்றான்.

ஆனால் மிதுராவிடவில்லை. ஒரு கையால் தீரனின் கையை இறுகப் பற்றிக் கொண்டவள் மறுகையால் ராஜ்ஜின் முதுகை ஆதூரமாய் வருடிக் கொடுத்து ஆற்றுப்படுத்த முயன்றாள்.

சிறிதுநேரத்தில் ராஜ் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு விலகிக் கொண்டான். தீரனும் விலகதான் முயன்றான்.

ஆனால் மிதுரா கைகைளை விலக்கவிட்டால் தானே விலக முடியும்!

நல்லவேளை ராஜ் குழந்தைகளிடம் சைகைமொழியில் பேசிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் இவர்களை பார்க்கவில்லை.

“மிது, அம்மா அப்பா எங்கே?”  கேட்டபடி அவளது கரத்திலிருந்து தனது கரத்தை பிரித்தெடுத்தான்.

“அம்மாவும் அப்பாவும் வெளியே போய் இருக்காங்க தீரன். அவங்களுக்கு வேண்டப்பட்டவங்க யாருக்கோ உடம்பு முடியலையாம். அதான் பார்க்க போய் இருக்காங்க.” சொல்லியபடி உள்ளேப் போனவள் ராஜ்ஜிற்காக செய்திருந்த ஒரு கேக்கை கொண்டு வந்து ஹாலில் வைத்தாள்.

அந்த கேக்கின் மேல் “கவிதையின் நாயகனுக்கு, அன்பிற்கினியவனுக்கு… ” என்று எழுதப்பட்டிருந்தது.

அதைக் கண்டு புன்னகை தடங்கள் இரண்டு கார்த்திக்கின் முகத்திலும்.

மீண்டுமொரு முறை கேக்கை வெட்டிவிட்டு அதை அங்கிருந்த சிறுகுழந்தைகளுக்கு கொடுத்த ராஜ் மிதுராவின் அருகே புன்னகையுடன் வந்து நின்றான்.

“காலத்துக்கும் மறக்க முடியாத கிஃப்ட் தந்திருக்க மிது. ஐ யம் ப்ளெஸ்ட் டூ ஹேவ் யூ இன் மை லைஃப்…” மனதார வாயசைத்தவன் புன்னகையோடு அங்கிருந்து கிளம்ப, தீரனோ எதுவும் பேசவில்லை சொல்ல வேண்டியதையெல்லாம் கண்களில் தேக்கி அவளை ஒரு பார்வை பார்த்து சென்றுவிட்டான்.

இருவரும் காருக்குள் வந்து அமர்ந்தபோது தீரனின் அலைப்பேசி மின்னியது.

எடுத்து பார்த்தான்.

ராஜ்ஜின் தாய் கல்யாணி வீடியோ காலில் அழைத்திருந்தார்.

ராஜ்ஜிற்கு பிறந்தநாள் வாழ்த்தை சொல்லியவர் எப்போதும் கேட்கும் “கல்யாணம் எப்போடா பண்ணிக்க போற?” என்ற கேள்வியை இம்முறையும் தவறாமல் கேட்டார்.

ராஜ்ஜின் பிடி கொடுக்காத பதிலில் சோர்வடைந்தவர் “தீரா நீயாவது எப்போ கல்யாணம் பண்ணிக்க போறேனு சொல்லுடா. எங்களுக்கும் பேர பிள்ளைகளை பார்க்க ஆசையா இருக்காதா?” என்று ஆரம்பித்தவர்  இருவரையும் வறுத்தெடுத்துவிட்டு போனை வைத்துவிட்டார்.

அவர் வைத்ததும் ராஜ் காதை குடைந்தபடி பெருமூச்சுவிட,

“ராஜ், நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு அடம்பிடிக்கிற?” கவலையாக வெளிப்பட்டது தீரனிமிடருந்து வார்த்தைகள்.

“தோணலைடா” சோர்வாக பதில் வந்தது ராஜ்ஜிடம்.

“நீ இன்னும் கயலை நினைச்சுட்டு இருக்கியா?” தீரனின் கூர்மையாக கேள்விக்கு,

“யாரு கயல்? அந்த பேருல யாரையும் எனக்கு தெரியாது” என்றான் ராஜ் சுவாரஸ்யமின்றி அந்த பதிலில் நிம்மதியடைந்தவன் அடுத்த கேள்வியை கேட்க முயன்ற போது லேசாக தொண்டை இடறியது.

கமறிர தன் குரலை சரிப்படுத்திக் கொண்ட தீரன்,
“தென், டூ யூ ஹேவ் ஃபீல் பார் சம் ஒன்?” மெல்லிய பதற்றத்தோடு கேட்க ராஜ்ஜிடம் பெரும் மௌனம்.

“சொல்லு டா ராஜ்… ” தீரன் மீண்டும் அழுத்தமாய்க் கேட்க ராஜ்ஜிடம் ஆமாம் என்ற உறுதியான தலையசைப்பு.

தீரனின் மனதினில் லேசான கலக்கம்.

ஒரு வேளை அவளாக இருக்குமோ? அப்படி இருந்துவிட்டால்…
அதற்கடுத்து அவனால் யோசிக்கவே முடியவில்லை.  

சட்டென தலையை உதறிக் கொண்டவன் முகத்தில் வருத்தத்தை மறைத்துக் கொண்டு “யாரை?” என்றான் எடையற்ற குரலில்.

தீரனைத் திரும்பிப் பார்த்த ராஜ்ஜின் உதடுகள் மெதுவாக அந்த பெயரை சொல்ல ,அந்த உதட்டசைவைப் படித்த தீரனின் விழிகள் திகைப்பில் தெறித்தது.

ராஜ் சொன்ன அந்த பெயர் ஒருவேளை மிதுராவாக இருக்குமோ?