அன்பின் உறவே… 9

அன்பின் உறவே… 9

அன்பின் உறவே… 9

 

நீ சொல்லி நானும்

நான் சொல்லி நீயும்

கேட்காத ஒன்று…

நீ எனக்காக அழுவதும்

நான் உனக்காக அழுவதுமே!

நாம் நமக்காக சிரிப்பதிலும்

சந்தோசக் கண்ணீரால்

அழுகையில் கரைகிறோம்..!

 

மிதமிஞ்சிய தவிப்போடு காதலியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தான் பிரஜேந்தர்.

மனதிற்குள் குமைந்து கொண்டிருக்கும் குருமூர்த்தியின் மீதான கோபத்தை தன் நேசப்பெண் மீது ஏற்றி வைக்க பிஸ்தாவிற்கு கடுகளவும் இஷ்டமில்லை.

ஒருமணி நேரமாக வாட்ஸ்-அப் மூலம் அவளிடம் பலமுறைகளில் பலவிதமாக மன்னிப்பினைக் கோரினாலும் அவனது தவிப்பிற்கு இளகி, ரவீணா பதில் அனுப்பவே இல்லை.

“சாரி’டா பிங்கி!” வாட்ஸ்-அப் டெக்ஸ்ட்டில் நூறாவது முறையாக மன்னிப்பை வேண்டி நிற்க, அதைப் பார்த்தாலும் அவள் பக்கம் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

“…”

“திரும்பவும் வந்து உன் வில்லன் அப்பாகிட்ட சாரி கேக்கவா?”

‘…’

“இந்தளவுக்கு போகும்னு பிராமிஸா நினைக்கல… என்னை நம்புடீ!”

“…”

“நமக்குள்ள இது ரொட்டின் தானேன்னு சட்டுன்னு கொடுத்திட்டேன்!” உதட்டு முத்தத்திற்கு இவன் நியாயம் பேச, சரமாரி குத்து ஸ்டிக்கர்களை பரிசாகக் கொடுத்து மேலும் கோபத்தை ஏற்றிக்கொண்டாள்.

காணொளி மற்றும் குரல் அழைப்புகள், சாரி ஸ்டிக்கர்கள் என வரிசையாக அவளிடம் சென்று சேர்ந்தாலும் எதற்கும் மசியவில்லை ரவீணா…

“இப்ப நீ பேசாம இருந்தா, உண்மைக்குமே உன் வீட்டுக்கு வந்திடுவேன்! என்ன ஆனாலும் பரவாயில்ல… ஜஸ்ட் ஐ டோண்’ட் கேர்!” வீராப்பு பேச, சிவந்த தக்காளி நிற எமோஜியை கணக்கிலடங்காமல் அனுப்பி சினத்தை வெளிப்படுத்தினாள்.

“என் மூஞ்சியில காரித் துப்பவாவது பேசுடீ பட்டு!”

“…”

“என் தங்கமே… வைரமே! முத்தே… பவளமே!” தேர்ந்த நகை வியாபாரியாக கொஞ்சிப் பேச, சிவப்பு எமோஜிகளின் எண்ணிக்கை பன்மடங்காக அலைபேசியில் பவனி வரத் தொடங்கியது.

“ம்ஹூம்… இது சரி வராது! தோ… கிளம்பிட்டேன்! வந்துட்டே இருக்கேன்! மாமனுக்கு பிஸ்தா பருப்பு போட்டு பால் காய்ச்சி வை!” டெக்ஸ்ட் செய்து விட்டு அமைதியாக தோட்டத்தில் அமர்ந்து கொண்டான்.

காரசாரமான பதில்களை அளவில்லாமல் தந்த பெண்ணின் மனம், இப்பொழுது தாறுமாறாக சிந்திக்கத் தொடங்கியது. பிறரின் மனதை கருத்தில் கொள்ளாமல் தனக்குச் சரியென்று பட்டதை மட்டுமே செய்து பழக்கப்பட்ட அடாவடிக்காரன்.

மீண்டும் வந்து என்ன மாதிரியான பிரச்சனைகளை இழுத்து வைக்கப் போகின்றானோ என்ற பதட்டம் ரவீணாவின் மனதை கலங்கடித்து விட்டது.

‘எனக்கென்ன… வந்து, வாங்கிக் கட்டிக்கொள்’ எரிச்சலுடன் வெளிப்பார்வைக்கு கோபத்தில் கொந்தளித்தாலும்,

உள்மனம், ‘பாவி… பாவி! இவன் மேல முழுசா கோபப்படவாவது விடுறானா? வில்லங்கம் பண்ண விசா வாங்கிட்டு வர்றேன்னு சொல்லியே எனக்கு டென்சன் ஏத்தித் தொலைக்கிறான்!’ காதலனை காரித்துப்பி அவனுக்காக பாவம் பார்த்தது.

ஐந்துநிமிட இடைவெளியில் ரவீணா, பல டெக்ஸ்ட் மெசேஜுகளை அனுப்பியும் இவன் பார்க்காமல் அமைதியாகவே இருக்க, முடிவில் அவனை அழைத்தே விட்டாள்.

“சொல்லுடா கன்னுகுட்டி! எதுக்கு இப்ப என்னை கூப்பிட்ட? நான் ட்ராஃபிக்ல இருக்கேன்… வீட்டுக்கு வந்து பேசட்டுமாடா செல்லம்?” அழைப்பினை ஏற்றுக் கொண்டே இவன் அலட்டிக் கொள்ள,

“அப்படியே, அந்த டிராபிக் ரெட் சிக்னலுக்கு நிக்காம போயி, போலீஸ்ல மாட்டிக்கோ, அறிவுக்கெட்டவனே!” பல்லிடுக்கில் புகழ்மாலையை சூட்டியபடியே அலைபேசியில் பேசத் தொடங்கினாள் ரவீணா.

கோபமும் ஒருவகை அன்புதான்; அதை அனைவரிடமும் காட்டமுடியாது… உரிமையும் உணர்வும் கூடிக்கலந்த இடத்தில் மட்டுமே பிரதிபலிக்கும்.

மனதிற்கினியவளின் குரலைக் கேட்டதும் நெஞ்சுக்குள் படர்ந்திருந்த வேதனை, குழப்பம் அனைத்தும் பறந்தோடி விட்டது பிஸ்தாவிற்கு. அன்பு கொண்டவர்களின் கோபம் கூட ஒருவகை அக்கறைதானே!

“அடிப்பாவி! உனக்கு அத்தனை ஆசையிருந்தா, சும்மா கூட ஜெயிலுக்கு போயி களி திங்குறேன்! அதுக்காக சிக்னலுக்கு நிக்காம போ, போலீஸ்ல மாட்டிக்கோனு தப்பு பண்ணச் சொல்லாதே! காமெடிபீஸா மாத்தி, என்னை பார்த்து ஊரே சிரிக்கும்படி அசிங்கப்பட வச்சுடாதே தங்கம்!” நல்லவனாய் உருகிப் பேச, அவளுக்கு இனிக்கவா செய்யும்? பதிலுக்கு வெகுண்டு போனாள்.

“நீ அசிங்கப்படுறதுக்கு முன்னாடியே உனக்கு எரியுதாடா பக்கி? இதைவிட ஆயிரம் மடங்கு இங்கே நான் எரிஞ்சுட்டு இருக்கேன்! அதபத்தி கொஞ்சங்கூட கவலப்படாம, யோசிக்காம, எப்படிடா பேச முடியுது உன்னால? நிஜமாவே உனக்கு சூடு சொரணையே இல்லடா…” வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து கனலைக் கக்கினாள் ரவீணா.

“உன் விசயத்துல நான் அதையெல்லாம் பார்க்க மாட்டேன் பிங்கி… உன்னோட இந்த வேதனைக்கு காரணமானவனே உன்ன சமாதானம் பண்ண நினைக்கிறேன்… அது தப்பா’டீ?”

“ஆமா கிழிச்ச… எதையாவது பேசி என் மனசை மாத்திட்டு திரும்பவும் ஐ வாண்ட் டைட் ஹக் அண்ட் கிஸ்னு கேட்டு, பழையபடி வழிஞ்சிட்டு வந்து நிப்ப… உனக்கு, உன் ப்ளஷர் தானே முக்கியம்?” அனலாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

இவள் சொல்வதும் சரிதானே! அவனது விருப்பத்திற்கு, பேசிப்பேசியே காதலியை இணங்க வைத்து விடுவான். பிரஜேந்தரின் மனமும் பெண்ணின் பக்கமே சாய அவளிடம் முற்றும் முழுதுமாய் சரணடைந்தான். 

“ப்ளீஸ்… ப்ளீஸ்! கொஞ்சம் அமைதியா இருடா பிங்கி! நான், உன் பின்னாடி அலையுறவன்தான். இல்லன்னு பொய் சொல்லமாட்டேன். எங்கே, என்ன செஞ்சா நீ சமாதானம் ஆவேன்னு சொல்லு… அதை செய்றேன்! என்கூட பேசாம மட்டும் இருக்காதே’டீ! என்னால தாங்கமுடியாது” பரிதாபமாய் குரலும் உள்ளே சென்று விட்டது,

“தாங்க முடியலன்னா அப்டியே போயிடு எரும! என் முன்னாடி வந்து நின்னு, என்னை கொலைகாரியாக்காதே!”

“உஷ்ஷ்… முடியலடி! உனக்கு இவ்வளவு ஹார்ஸா கூட பேசத் தெரியுமா? நீ இப்படி கோபப்பட்டா கல்யாணத்துக்கு அப்பறம் உன்னை எப்படி மலையிறக்குறது?” மிக முக்கிய கேள்வியாக இவன் கேட்க, அவளுக்கு உண்டான கோபத்திற்கு அளவே இல்லை.

“நீயே வேண்டாம்னு சொல்றேன்… நீ, நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசுறியா?”

“ஏண்டீ! ஒரே ராத்திரியில உன் அப்பன் எந்த லாடுலபக்குதாஸ கொண்டு வந்து நிறுத்துனான்? நான் வேணாம்னா வேற யாரையாவது கமிட் பண்ணிட்டு போற ஐடியால இருக்கியா?” பெண்ணின் பேச்சில், இவனது வார்த்தைகளும் தாளம் தப்பியது.

“ஆமாமா… போகத்தான் போறேன்… பூமியில புதைஞ்சு, மொத்தமா இல்லாம போயிடத் தான் போறேன்! லைஃப்ல மறக்க முடியாத அளவுக்கு என்னை அசிங்கப்படுத்திட்டு எப்டி அடுத்தவன் கூட போயிடுவியான்னு உன்னால ஈசியா கேக்க முடியுது?” கோபத்தின் காரணம் இப்பொழுது வேறாகியிருக்க, முன்னிலும் விட அதிகமாய் சினமேறிப் போனது பெண்ணிற்கு.

‘என்ன நினைத்திருக்கிறான் இவன்? நிமிடத்திற்கு நிமிடம் மாற்றிக் கொள்ளும் உடையென, என் காதலை எடை போட்டு விட்டானா? நான் மட்டுந்தான் இவன் மீது மலையளவு காதலை வைத்து கொண்டு மீள முடியாமல் தவிக்கிறேனா?’ பொல்லாத எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்க, நிதானத்தை தவறவிட்டு வார்த்தைகளை சிதற விட்டாள் ரவீணா.

“சாரி, சாரி’டா… திரும்பவும் சொதப்பிட்டேனா? கூல்டவுன்’மா! இன்னைக்கு என்னோட பேச்சும் செய்கையும் எனக்கு எதிராவே ஆட்டி வைக்குது. என் நேரமே சரியில்ல… நான் கேட்டது தப்புதான்… கையில சாட்டையோட எதிர்ல வந்து நிக்கிறேன். அதை கொண்டே உன் ஆசைதீர என்னை அடி! ஆனா, என்னை வெறுக்க மட்டும் செய்யாதே பிங்கி!” வார்த்தையை முடிக்கும்போதே குரலில் அதீத வருத்தம் தோய்ந்து ஒலித்தது. இன்னும் எத்தனை வேதனைகளைத் தான் தாங்க வேண்டுமோ இந்தக் காதலுக்காக…

“டார்ச்சர் பண்றடா நீ!”

“நீ பேசாம இருந்தா, என்னால தாங்க முடியல’டீ!”

“ஆனா, உன்னை நினைச்சாலே என் உடம்பெல்லாம் பத்திட்டு எரியுதுடா… என்ன பண்ண?” அழுகையும் கோபமும் போட்டிபோட அலைபேசி என்றும் பாராமல் கத்தினாள் ரவீணா.

“அழுகாதேடா ப்ளீஸ்! என்னை கெஞ்ச வைக்காதே… இதை கெட்ட கனவா மறந்திடுவோம். கமான் பிங்கி… ப்ளீஸ், ப்ளீஸ்! அழுகையை நிப்பாட்டு!” பிரஜன் கெஞ்சத் தொடங்க, ஒரு வழியாக விசும்பல் நின்றது.

இவள் அழுகையை நிறுத்த எடுத்துக்கொண்ட சில நொடி இடைவெளியில் இவன் காணொளியில் அழைத்திட, அழுது வீங்கிய முகத்துடன் திரையில் தோன்றினாள் ரவீணா.

“ஒஹ் காட்! இப்படி உன் மொகத்த என்னால் பார்க்க முடியல… ரொம்ப கில்டியா ஃபீல் பண்றேன்! உன் பிறந்தநாளுக்கு மறக்கமுடியாத கிஃப்ட் பிரசண்ட் பண்ண நினைச்சு, இப்டி ஒரு வேதனையை குடுத்திட்டேன்’டீ! என்னை எவ்வளவு திட்டினானலும் தப்பில்ல…” ஆசைப்பெண்ணின் அழுது சிவந்தமுகம், மனதை பதபதைக்க வைக்க படபடப்புடன் இவன் புலம்பத் தொடங்கி விட்டான்.

“நான் ஒரு முட்டாள்! நீ சொல்ற மாதிரி எனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு! எதுலயும் நிதானமில்லாம, பக்குவமில்லாம இருக்கேன்னு என் பிரதர்ஸ் கூட, அடிக்கடி சொல்வாங்க! சுத்த பொறுப்பில்லாத தடியன்’டீ நானு” தன்னைத்தானே கீழிறக்கிப் பேச ஆரம்பித்தவனின் குரல் கரகரப்பிற்கு சென்று, துக்கம் தொண்டையில் நின்றுவிட, அவனது வேதனையை பார்க்க முடியாமல் பாவப்பட்ட பெண்ணின் மனம் பரிதாபத்திற்கு தாவியது

“விடுடா… நடந்து முடிஞ்சத யாராலும் மாத்த முடியாது. இதனால வந்த கெட்டபேர் அழியவும் போறதில்ல… உன்னோட அவசரத்துக்கும் அதிரடிக்கும் இது பிரேக்கிங் பாயிண்டுன்னு நினைச்சுக்கோ!

பிளான் பண்ணி செய்யுற பெரிய அப்பாடக்கரா நீ இருந்தா, நானே, உன் மேல கம்ப்ளைண்ட் குடுத்து உள்ளே தூக்கி வைச்சுருப்பேன்! எல்லாம் உன்னோட பொறுப்பில்லாத அரைவேக்காட்டுதனத்துல நடந்ததுதானே!” அமைதியாகப் பேசினாலும், வார்த்தைகள் குத்தீட்டியாய் பாய்ந்து குதறிக் கொத்திவிட, செக்குமாடு வண்டியைப் போல் ஆணின் மனம் பாரமேறிப் போனதே தவிர குறையவில்லை.  

“ஹாங்… எல்லாமே… என்னால… என் அவசரத்துனால…” மேற்கொண்டு தொடர முடியாதபடிக்கு துக்கம் தொண்டையை முழுதாய் அடைத்துக் கொள்ள, அதனை மறைக்கவென தலையைக் குனிந்து கொண்டான்.

ஆண்மகனின் அழுகையோ, துக்கமோ தங்களுக்கு உயிரானவர்களின் முன்பு மட்டுமே வெளிப்பட்டு, உடனிருப்பவரையும் அசைத்துப் பார்த்துவிடும் வலிமை கொண்டது. இங்கேயும் அதுவே நடக்க, 

“என்னடா இது?” அதட்டலுடன் அவனையே சிலநொடிகள் உற்றுப் பார்த்தவளின் பார்வையில் சகஜமானான். கண்ணால் அவள் அளித்த ஆறுதலோ, தைரியமோ ஏதோ ஒன்று அவனை மீட்டெடுத்தது. 

“ப்ரஜூ!”

“என்னடா?”

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா? ஹெல்ப் கூட இல்ல என்னோட ரிக்குவஸ்ட்…” ரவீணா மென்று முழுங்க,

“என்ன’டீ இது புதுசா? ஹெல்ப்பு, ரிக்குவஸ்டுன்னு… எப்பவும் போல என்ன செய்யணும்னு ஆர்டர் போடு!”

“அது… நேத்து நடந்த விஷயம் எதுவும் உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு தெரிய வேணாம்’டா… உன் பிரதர்ஸ்கிட்டயும் சொல்லாதே ப்ளீஸ்!” உள்ளடங்கிய குரலில் கெஞ்சலுடன் கோரிக்கை வைத்தாள்.

“இதெல்லாம் நீ சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா? எவ்வளவு கம்பெல் பண்ணிக் கேட்டாலும் நானும் இதைபத்தி மூச்சு விடப் போறதில்ல… உனக்கு மட்டுமில்ல எனக்கும் அது பேட் எக்ஸ்பீரியன்ஸ் தான்… நீ எதுக்கு இவ்வளவு பீல் பண்றே?”

“அதில்லடா… எங்க வீட்டுல நம்மை எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அப்படியெல்லாம் பேச்சு நடந்து முடிஞ்சு போச்சு! திரும்ப ஒருதடவை இந்த விசயம் வெளியே வந்து, நம்ம குற்றவாளியா நிக்க வைச்சா, அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியாது ப்ரஜூ… செத்துப் போயிருவேன்டா!” மீண்டும் வெடித்து அழ ஆரம்பித்தாள் ரவீணா.

யாரிடமும் பகிரந்து கொள்ள முடியாத வேதனையை, அதற்கு காரணமானவனிடமே கொட்டி, தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் அப்பாவிப் பெண்ணின் அழுகையில் முற்றிலும் உடைந்து போனான் பிரஜேந்தர்.

இன்னும் இவளின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்ததும், அதனால் தனக்குண்டான அழுத்தங்களும் தெரிய வந்தால் என்ன பாடுபடுவாளோ என்ற பரிதவிப்புடன் அவளைப் பார்த்தான்.

“ரவீ’மா! எதுக்காக இப்டியெல்லாம் பேசுற? நம்ம ரெண்டு குடும்பம் மட்டுமே உலகமில்ல… நாம வாழறதுக்கு இந்த உலகம் பரந்து விரிஞ்சு இருக்கு. எங்கேயாவது கூட்டிட்டு போயி உன்னை கண் கலங்காம சந்தோஷமா வாழ வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இனிமே செத்துப் போவேன்னு சொல்லி, என்னை சாகடிக்காதே!”

“நான் எப்பவும் உனக்கு ரவீ-யா மட்டும் இருந்திருந்தா இன்னைக்கு இந்த பிரச்சனயே இல்ல’டா! நீ பிங்கின்னு கூப்பிட்டே ஓவர் அட்வான்டேஜ் எடுத்துகிட்ட…” அழுத்தமான முனகலுடன் கூற, பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போனான்.

இளமையின் இம்சையும், நேசத்தின் பகிர்வும் என எல்லை மீறி கூத்தாட்டம் போட்ட செயல்கள் எல்லாம், இன்று இவனுக்கே எதிராகவே செய்வினை செய்து நிற்கின்றது.

“நம்ம விசயம் ஒரு முடிவுக்கு வராம, இனிமே நாம சந்திச்சு பேசக்கூடாது ப்ரஜூ!” ரவீணா அதிரடியாகக் கூறியதில் விஷயம் புரிபடாமல் ‘ஞே’ என விழித்தான் பிரஜேந்தர்.  

“இத்தனை நாள் நம்ம விஷயம் வெளியே தெரியாம இருந்ததால யாருக்கும் தெரியாம பழகினோம். இப்ப விஷயம் வெளிச்சத்துக்கு வந்த பிறகும் அந்த திருட்டுத்தனத்தை பண்ண நான் விரும்பல…

இப்பவே எங்கப்பா ஏகப்பட்ட கெடுபிடி பண்ண ஆரம்பிச்சிட்டாரு! எனக்கும் இவரோட தயவுல இனியும் இங்கே இருக்க கொஞ்சங்கூட இஷ்டமில்ல… ரொம்ப பேசிட்டாருடா!” சோர்வுடன் பேசியவளை காணொளியில் பார்த்ததும் பரபரப்பானான் பிரஜேந்தர்.

“இப்பவே வந்து கூட்டிட்டுப் போகவா ரவீ!” அவன் கேட்ட தினுசில் குருமூர்த்தியின் மீதான ஆத்திரங்களும் கோபங்களும் கிலோ கணக்கிலிருந்து டன் கணக்கில் ஏறிக் கொண்டிருந்தன.

“ம்ப்ச்… இததான் செய்யாதேன்னு சொல்றேன்! கொஞ்சம் யோசிடா! வீட்டை விட்டு போனா எங்கே போயி என்ன பண்றது? இருக்க ஒரு இடம் வேணாமா?”  

“அதுவும் யோசிக்கணும் தான்!”

“நல்லா திங்க் பண்ணு! இன்னும் ஒன்றரை மாசத்துல எனக்கு எக்ஸாம்ஸ் முடியுது. அதுக்குள்ள நீ ஸ்திரமான ஒரு முடிவோட வா! அதுவரைக்கும் என்னை பாக்கறதயோ என் கூட பேசுறதயோ மறந்திடு!” தீர்க்கமாக, தீர்மானமான முடிவொன்றை உத்தரவாக கூறி முடித்தவள் அழைப்பினை துண்டித்தாள். 

மெதுவாகத் தீட்டிய ஈட்டி, இப்பொழுது கூர்மையாக மாறி பிரஜேந்தரின் மூளைக்குள் பல மைல் தூரங்களை குறிபார்த்து வீச கணக்கிட்டுக் கொண்டது.

வெளிப்பார்வைக்கு விளையாட்டுப் பிள்ளையாய், யாருக்கும் அடங்காதவனாய் தெரியும் பிரஜேந்தர், ரவீணாவின் அழகில், அன்பில் கட்டுண்ட குழந்தை என்பது யாருமறியாத செய்தி.

தன்னை, பெண்ணின் அன்பிற்கு அடிமையாக்கிய காதலை தங்களது குழந்தையாகவே பாவித்தான். ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் குழந்தையின் எதிர்காலம் எப்படி  முக்கியமோ, அதேபோல் அவனுக்கும் தனது காதல் குழந்தையின் எதிர்காலம் மிக முக்கியம். எக்காரணம் கொண்டும் அதனைக் கேள்விக்குறியாக்கி நடுவீதியில் நிற்க வைக்க அவன் முன் வரமாட்டான்.

காதலியின் உறுதியான முடிவு, அவளது தந்தையின் குரோத மனப்பான்மை, அதனால் வெகுண்ட தனது தந்தையின் ஆங்காரம் என அனைத்தையும் நேர்செய்யும் விதம் எப்படியென தனிமையில் யோசிக்கத் தொடங்கினான் பிஸ்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!