காதல் தீண்டவே-26
காதல் தீண்டவே-26
சில நேரங்களில் அப்படி தான்… இறுகப் பற்றியிருந்த முகமூடி கீழே விழுந்து நிஜமுகம் வெளிப்பட்டுவிடும்.
அப்படி வெளிப்பட்ட முகத்தை காட்ட முடியாமல் கீழே குனிந்தவளை நோக்கி பாய்ந்தது தீரனின் பார்வை.
“ஏன் ஐஸ்வர்யா இப்படி ஒரு துரோகம் பண்ண துணிஞ்சிங்க?”
“அது… என்னோட கல்யாண செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதாலே…” தயங்கியபடி அவள் இழுக்க தீரனிடம் இதழ் சுழிப்பு.
“உங்க கல்யாணசெலவுக்காக இன்னொரு கம்பெனிக்கு கைக்கூலியா மாற முடிவெடுத்துட்டிங்க ரைட்…” அவனது கேள்வியில் தலைகுனிந்து நின்றவளின் முன்பு ராஜ் ஒரு காகிதத்தை நீட்டினான்.
அவளது புருவங்களில் கேள்வி சுழல்.
“உங்க மேலே ஃபைல் பண்ண டேட்டா தெஃப்ட் கம்ப்ளெயின்ட் காப்பி.” குழப்பத்தை தீர்க்கும்படி ஓலித்தது தீரனின் வார்த்தைகள்.
“சார் எனக்கு இன்னும் இரண்டு மாசத்துலே கல்யாணம். ப்ளீஸ் சார் இப்படி பண்ணாதீங்க… ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துடாதீங்க… ” என்ற ஐஸ்வர்யாவின் கெஞ்சல் இரண்டு கார்த்திக்கையும் அசைக்கவில்லை.
“இங்கே எல்லாரும் சமம். ஆணா இருந்தாலும் சரி,பொண்ணா இருந்தாலும் சரி… கம்பெனிக்கு துரோகம் பண்ணனும்னு நினைச்சா, செக்ஷன் 471படி மூணு வருஷ ஜெயில் தான்…” அவனிடமிருந்து தீர்க்கமான வார்த்தைகள்.
மீட்டிங் ஹாலிலிருந்து வெளியே வந்த சிற்பிகாவிற்கு முதலில் எதுவுமே புரியவில்லை ஆனால் அடுத்தடுத்து விழுந்த பேச்சுக்களில் எல்லாமே புரிந்துவிட்டது.
கண்களில் திரளாக கண்ணீர்!
செய்யாத பழிக்கு தண்டனை அனுபவித்து இருக்கின்றாள்!
காரணம். இதோ, எதிரில் நிற்கும் இந்த ஐஸ்வர்யா…
அவமானத்தின் குறுகுறுப்பில் வெளியே செல்ல எத்தனித்த ஐஸ்வர்யாவை குறுக்கே புகுந்து தடுத்த ராஜ்ஜோ சிற்பியை நோக்கி கண்ணைக் காட்டினான்.
அதை உணர்ந்தவள் தயக்கமாக,
“என்னை மன்னிச்சுடு சிற்பிகா… ” என்று வேகமாக சொல்லிவிட்டு அந்த அலுவலகத்தைவிட்டே நிரந்தரமாக சென்றிருந்தாள்.
இப்போது தீரனின் கண்கள் ஷாலினியை நோக்கி விழுந்தது.
“மிஸ் ஷாலினி, நீங்களும் உங்க ஃப்ரெண்ட் இஷிதாவும் பார்த்து நடந்துக்கோங்க… முன்னாடி மாதிரி வம்பு பேச்சு பேசிட்டிருந்தா இதே நிலைமை அடுத்து உங்களுக்கும் ஏற்படும். ” கோபமாக உரைத்து முடித்தவன் சிற்பிகாவைப் பார்த்தான்.
“சிற்பிகா… உங்களை காரணமே இல்லாம காயப்படுத்திட்டோம், அதுக்காக எங்களை மன்னிச்சுடுங்க… இந்த கம்பெனியை பெரிய இழப்புலே இருந்து காப்பாத்தியிருக்கீங்க… தேங்க்ஸ் ஃபார் தட்… ” தீரன் சொல்ல அங்கே குழுமி இருந்த குழுவினிடையே கரகோஷ ஒலி.
சிற்பிகாவின் இதயத்தை அந்த கைத்தட்டல் ஒலி சமன்படுத்தவில்லை.
பழைய அவமானங்களின் சுவடு அவள் இதயத்தை விட்டு இன்னும் அழியவில்லையே!
ஓசையற்று உடைந்து கிடந்தவளை கண்டுகொண்ட தீரன், “சிற்பிகா மீட்டிங் ஹாலிற்கு வாங்க… ” என்றவன் ராஜ்ஜையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே வந்த சிற்பிகாவின் முகத்திலோ கோபத்தின் அலை.
“எந்த தப்பும் பண்ணாம என்னை இப்படி காயப்படுத்திட்டிங்களே. அத்தனை பேர் முன்னாடி எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா?” உதிர துடித்த கண்ணீரை அடக்கியபடி கேட்டவளை கண்டு இருவரும் நெகிழ்ந்தனர்.
“சிற்பி, உனக்கு பண்ணது பெரிய அநியாயம்… நாங்க ஒத்துக்குறோம்… பட் எங்களுக்கு வேற வழி தெரியல.” என்று தொடங்கிய தீரன் அன்று நடந்த சம்பவத்தை முழுவதுமாக அவளிடம் விளக்க துவங்கினான்.
ஞாயிற்றுக் கிழமை…
இஷிதாவை ரெஸ்ட்ரூமிற்குள் விட்டுவிட்டு அவளுடைய ஐடி கார்டை எடுத்துக் கொண்டு வந்தாள் ஐஸ்வர்யா.
அங்கேசிற்பிகா அபியின் கணினியில் ஏதோ செய்து கொண்டிருப்பதை கண்டவளின் மூளையிலோ பல புதுத்திட்டங்கள்.
சிற்பிகா அங்கிருந்து சென்ற அடுத்த நொடியே உள்ளே புகுந்து ,அபியின் சிஸ்டத்திலும் மிதுராவின் சிஸ்டத்திலும் ப்ராக்ராமை மாற்றிவிட்டு வஞ்சமாய் புன்னகைத்தவளுக்கு தெரியாது, இவள் மாற்றிய அடுத்த நொடியே ராஜ்ஜிற்கு நோட்டிஃபிகேஷன் சென்றுவிட்டதென்று.
சில நிமிடங்களிலேயே ராஜ் ப்ராக்ராமை மாற்றியமைத்துவிட்டு, சுமார் நூறு போலி கஸ்டமர் ஐடிகளுக்கு இவனாகவே தப்பாக ப்ரீமியம்மை ப்ராசஸ் செய்து கம்பெனியில் சலசலப்பை உருவாக்கி, பழியை தூக்கி சிற்பிகாவின் மீது போட்டான்.
இதில் மிதுராவின் பெயர் அடிப்படவில்லையே என குழப்பத்தில் சுருங்கிய ஐஸ்வர்யாவை இரண்டு கார்த்திக்கின் எக்ஸ்ரே கண்களும் கண்டுகொண்டது.
அதிலேயே பாதி உறுதிப்பட்டு போய்விட முழுவதாய் உறுதி செய்து கொள்வதற்காக அரங்கேற்றப்பட்ட அடுத்த நாடகம் தானிது.
அபி, இஷிதாவை மேலே வரவிடாமல் கேன்டீனில் பிடித்து வைத்திருக்க, இங்கே மீட்டிங் ஹாலில் இருந்த ஐஸ்வர்யாவை இரண்டு கார்த்திக்கின் கண்களும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
இறுதியில் ஆடு தானாக கசாப்புகடைக்கு வந்து மாட்டிக்கொண்டது!
“சிற்பி எங்களுக்கு வேற ஆப்ஷன் இல்லை. ஒன்னு உங்க மேலே பழி போடணும் இல்லை, மிதுரா மேலே… ஏற்கெனவே மிதுரா நிறைய மனக்காயங்களிலே இருந்ததாலே அவங்களை தேர்ந்தேடுக்காம உங்களை தேர்ந்தேடுத்தோம்… எங்க சாய்ஸ் தப்புனா தாரளமா எங்க மேலே நீங்க எச்.ஆர் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணலாம்… ” தீரன் சொன்ன அடுத்த நிமிடம் சிற்பிகா சட்டென்று நிமிர்ந்தாள்.
“நோ நோ… மிதுராவுக்கு பதிலா என்னை தேர்ந்தெடுத்தது தான் சரி… தேங்க்ஸ் ஃபார் தட். என் மிதுவுக்கு பதிலா நான் பழி ஏத்துக்கிட்டது எனக்கு சந்தோஷம் தான். எனக்கு கோபம் உங்க மேலேயில்லை, அந்த அபி மேலே தான்…” என்றவளது முகத்திலோ முன்னிருந்த வருத்தத்தின் வீரியம் குறைந்திருந்தது.
“எங்கே அந்த அபி?” என கேட்டவளிடம்
“இஷிதா கூட உட்கார்ந்து கேன்டீன்ல அரட்டை அடிச்சுட்டு இருக்கான்… ” ராஜ் டைப் செய்து காண்பிக்க சிற்பிகா என்னும் புயல் அபியை மையம் கொள்வதற்காக கேன்டீனை நோக்கி நகரத் துவங்கியது.
“டேய் ஏன்டா இப்படி பண்ண?” என்றான் தீரன் பெருமூச்சுவிட்டபடி…
“சும்மா ஃபன்க்கு… அந்த அபி ஜாலியா சுத்திட்டு இருந்தான்ல… நல்லா அனுபவிக்கட்டும்… ” கண்ணடித்தபடி வாயசைத்தான் அவன்.
💐💐💐💐💐💐💐💐💐💐
அங்கே கேன்டீனில்…
இஷிதாவிடம் இளிக்கஇளிக்க பேசிக் கொண்டிருந்த அபியின் முன்பு கோபமாய் வந்து நின்றாள் சிற்பிகா.
பின்னால் ராஜ்,தீரன்,மிதுரா மற்றும் அதிதி…
“இஷிதா, உங்களை ஷாலினி தேடுறாங்க…” தீரன் அங்கிருந்து இஷிதாவை அனுப்பிவிட, அந்த இருக்கையில் இப்போது கோபமாக விழுந்தாள் சிற்பிகா.
அபி வேகமாக ராஜ் பக்கம் திரும்பி கண்களால் கண்டுபிடித்துவிட்டாயா என கேட்க அவனோ இல்லையென்று தோளை குலுக்கினான்.
அதைக் கண்டவனுக்கோ ‘ஐயோ இன்னும் இந்த நடிப்பை தொடரணுமா…’ என்று சலிப்பு தட்டியது.
வேகமாக எழுந்த அபி, “என் மேலே பழியை சுமத்த முயற்சி பண்ண உன் பக்கத்திலே உட்கார மாட்டேன்… ” சொல்லியபடி கிளம்ப முயல அதிதியோ தம்பியை கோபமாக முறைத்தாள்.
ராஜ்
உதட்டில் துளிர்த்த சிரிப்பை அடக்கியபடி அவனை பார்த்தான்.
“நியாயமா, இது நான் கேட்க வேண்டிய கேள்வி. எல்லாம் தெரிஞ்சு இருந்தும் நீயும் என்னை ஏமாத்திட்டேயில்லை… என்னை அழ வெச்சுட்டேயில்லை… அதுவேற இல்லாம அந்த இஷிதா கிட்டே இளிச்சுஇளிச்சு பேசுறல.” சிற்பிகாவின் கேள்வியில் அபிக்கு எல்லாமே புரிந்துவிட்டது.
கோபமாக ராஜ்ஜை முறைத்தவன்
கெஞ்சலாக திரும்பி சிற்பிகாவைப் பார்த்தான்.
“சிற்பி, நான் உன்னை முழுசா நம்புறேன்டா. நம்ம டூர்க்கு போய் இருந்தப்போ செவத்துல தப்பா கிறுக்கினது அந்த மூணு கிறுக்குங்கனு அப்பவே கண்டுபிடிச்சுட்டேன். கம்பெனி டேட்டாவை யாரோ திருடுறாங்கனு தீரனும் ராஜ்ஜும் முன்னாடியே சொல்லும்போது எனக்கு அவங்க மேலே தான் சந்தேகம். அப்புறம் சிசிடிவி கேமராவை பார்க்கும்போது சந்தேகம் உறுதிப்பட்டு போயிடுச்சு. ஆனால் இந்த ராஜ் தான் என்னை கோபமா இருக்கிறா மாதிரி நடிக்கணும்னு சொன்னான்… ப்ளீஸ் சிற்பி உன் மேலே விழுந்த பழியை துடைக்கணும்னு தான் வேண்டாவெறுப்பா நடிச்சேன். பிலீவ் மீ… ” என்றான் கெஞ்சலை கண்ணில் தேக்கி வைத்தபடி.
“வேண்டா வெறுப்பா நடிக்கிறவங்க காலையிலே இருந்து கேன்டீன்ல உட்கார்ந்து கடலை போட்டுட்டு இருக்கமாட்டாங்க மிஸ்டர் அபி.” என்றவள் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இந்த ராஜ் தான் அப்படி பண்ண சொன்னான்… அப்போ தான் கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க முடியுமாம்.”
“கண்டுபிடிச்ச அப்புறமும் கேன்டீன்ல கடலை போட்டுட்டு இருக்கிறது எந்த கணக்குலே சேரும் அபினவ்… அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சுடுச்சு. இனி நீங்க எனக்கு எனிமி கிடையாது. உங்களுக்கும் எனக்கும் இடையிலே எந்த ரிலேஷன்ஷிப்பும் கிடையாது… எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்… ” என்றாள் முடிவாக.
“ஏதே… எல்லாத்தையும் முடிச்சுக்கலாமா?” என்று அதிர்ந்தவன்
“சிற்பிமா… இது தவறான முடிவுடா. ப்ளீஸ்… ” என்று கெஞ்சி கொண்டிருக்க அவன் பக்கமே திரும்பாதவள்
“தீரன், ரொம்ப பசிக்குது. நாம ஆர்டர் பண்ணலாமா?” என்றாள் கேள்வியாக.
“இதோ நானே ஆர்டர் பண்றேன் சிற்பிமா. உனக்கும் எனக்கும் சேர்த்து ரெண்டு முட்டை பஃப்ஸ் இப்பவே வாங்கிட்டு வரேன். ” அபி வெகுவேகமாக எழ அதே வேகத்தில் சிற்பிகாவிடமிருந்து மறுப்பு.
“ஏன் ஒரு முட்டை பஃப்ஸ் சாப்பிட்டு நான் பட்டது எல்லாம் பத்தாதா?
போதும் பட்டது எல்லாம்…
இனி இந்த முட்டை பஃப்ஸை ஜென்மத்துக்கும் தொடாது இந்த சிற்பிகாவோட கை… ” படபடவென்று சொல்லிவிட்டு திரும்பி கொண்டாள்.
“சிற்பி, கைப்படாத அந்த முட்டை பப்ஃஸை இனி இந்த அபியோட கையும் தொடாது… இது சத்தியம் ” என சத்தியபிரமானம் செய்தவனைக் கண்டு
சிற்பிகா உட்பட அங்கிருந்தவர்கள் வெடித்து சிரித்துவிட்டனர்.
ஆனால் இருவரின் முகத்தில் மட்டும் புன்னகைசுவடே இல்லை.
மிதுரா தீரனின் விழிகள் ஒன்றையொன்று மௌனமாய் வெறித்துக் கொண்டிருந்தது.
அலுவலகத்தில் நடந்த பிரச்சனை காரணமாக தன்னுடைய பிரச்சனையை தற்காலிகமாக ஒதுக்கிப் போட்டிருந்தவளின் மனதை செல்லாய் அரித்து கொண்டிருந்தது அந்த கேள்வி.
தீர்க்கப்படாத கேள்வியாக மிதுரா!
பதில் அறிந்தும் மௌனமாய் விடைத்தாளை பார்க்கும் மாணவனாக தீரன்!
‘எப்போது தீர்க்கப்படும் இந்த கேள்வி?’ மனம் தளர்ந்து போய் கேட்க,
‘இப்போதே கேட்டுவிடு’ என மூளை கட்டளையிட்டது.
ஒரு முடிவோடு எழுந்தாள் மிதுரா.
“தீரன், என் கூட வர முடியுமா? முக்கியமான விஷயத்தை கேட்கணும்” அவள் அழைக்க தீரனிடம் தயக்கம்.
அவள் என்ன கேட்கப் போகிறாள் என்று தெரியும். ஆனால் அந்த கேள்வியை எதிர் கொள்ள அவனிடம் துணிவில்லையே!
தயங்கியபடி அமர்ந்திருந்தவனை நோக்கி “தீரன் இப்பவே பேசணும்” என்றாள் அழுத்தமாக.
இனி தப்பித்தோட வழியேயில்லை…
எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்!
சோர்வாக நிமிர்ந்தான்.
தளர்வுடன் எழுந்தவனையும் கேள்வியுடன் நின்றவளையும் ராஜ்ஜின் கண்கள் கூர்மையாக கவனித்ததை அறியாமல் இருவரும் லிஃப்ட்டை சமீபித்திருந்தனர்.
மதியம் இரண்டு மணிக்கு மேல் எப்போதும் லிஃப்ட் காலியாகயிருக்கும்.
இன்றும் அதே போல் காலியாகயிருக்க மிதுராவுக்கு அது வசதியாக போய்விட்டது.
லிஃட்டிற்கு நுழைந்தவளின்
முதல் கேள்வியே கூர்மையாக வந்து விழுந்தது.
“இவ்வளவு களேபரம் நடந்த அப்புறம் கூட நீங்க சிற்பியையும் என்னையும் மனசார சந்தேகப்படல. ஆக கயல் விஷயத்தாலே நீங்க ப்ரேக்-அப் பண்ணலைனு தெளிவா புரிஞ்சுடுச்சு… இப்போ என்ன காரணம் சொல்லி அடுத்து சமாளிக்க போற கார்த்திக். ஒருவேளை உங்க சொத்துக்காக ஆசைப்பட்டு காதலிச்சேனு சொல்ல போறீங்களா?” நேருக்கு நேர் நின்று கேட்டவளை பார்க்க முடியாமல் தீரன் தலைகுனிந்தான்.
“கார்த்திக் உன் கண்ணுலே காதல் தெளிவா தெரியுது. அதை மறைக்குறதுக்காக நீ போடுற வேஷமும் தெரியுது. ப்ளீஸ்… இப்படி உன்னையும் கொன்னு என்னையும் கொல்லாதே… ஐ நீட் ஆன்சர். இப்பவே இங்கவே… ” அவள் கேட்கவும் லிஃப்ட் ஆறாவது தளத்திற்கு வந்தடையவும் சரியாகயிருந்தது.
வேகமாக மீண்டும் கீழ்தளத்திற்கான எண்ணை அழுத்தியவளை நோக்கியவனின் முகமோ உணர்ச்சியை அடக்க போராடி கொண்டிருந்தது.
“இல்லை மிதுரா. நமக்குள்ளே ஒத்துபோகாது. நான் அவசரத்திலே அன்னைக்கு காதலை சொல்லிட்டேன். நிதானமா யோசிச்சு பார்த்தபோது தான் உனக்கும் எனக்கும் செட் ஆகாதுனு புரிஞ்சுது” என்றான் எங்கோ பார்த்தபடி.
“பொய் பொய் மறுபடியும் பொய். நீ பொய் சொல்ற கார்த்திக்… உனக்கு என் மேலே காதல் இருக்கு. என்னாலே உணர முடியுது. ஆனால் எதுக்காக வேஷம் போடுற? ” கோபமாக கத்தியவளின் மூளையில் பளீரிட்டது அந்த கேள்வி.
ஒருவேளை முன்னாள் காதலின் வலியால் மறுக்கின்றானோ!
அந்த எண்ணம் விழுந்த அடுத்த நொடியே அவளது முகத்தில் நிதானம் குடியேறியது.
அதற்குள் கீழ்த்தளத்திற்கு வந்துவிட்ட லிப்ஃடின் எண்ணை அழுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.
“கார்த்திக், முதல் காதல் மாதிரி இந்த காதலும் தோத்துடும்னு பயப்படாதீங்க. நீங்க அப்போ காதலிச்சது என்னோட கவிதைகளை… இப்போ காதலிக்கிறது என்னை… அவ்வளவு தான் வித்தியாசம்” கண்ணீர் தேங்கிய கண்களோடு அவனது முகத்தை கைகயில் ஏந்திப் பேசியவளை கண்டு தீரனின் உள்ளம் அணைக்கட்டுப் போல உடைந்தது.
உள்ளம் முழுக்க வலி!
உயிராக காதலிப்பவளின் கண்ணீரை காண சகியாமல் மீண்டும் அவன் தலைகுனிந்தது.
“இந்த காதல் உங்களுக்கு வலியைத் தராது… கண்டிப்பா நாம சந்தோஷமா இருக்கலாம்… என்னை நம்புங்க தீரன். நான் காயப்படுத்தமாட்டேன். முதல் காதல் மாதிரி உடைஞ்சுடுவோம்னு பயப்படாதீங்க…” மிதுரா பேசபேச தீரனிடமிருந்த கட்டுப்பாடு முற்றிலுமாய் உடைந்து போனது.
அவன் கண்களில் உருண்டு திரண்டு நின்றது கண்ணீர்.
“இந்த காதல் என்னை உடைக்காது மிது. ஆனால் ராஜ்ஜை உடைச்சுடும்… அவன் காயப்படுவான். என்னாலே அவனை காயப்படுத்த முடியாது… என்னாலே ராஜ்ஜை மறுபடியும் காயப்படுத்த முடியாது. நான் அந்த தப்பை மறுபடியும் பண்ணமாட்…” இறுதி சொல்லை முடிக்க முடியாமல் தடுமாறிய தீரனோ,
“ஐயோ அந்த தப்பை நான் மறுபடியும் பண்ணிட்டேனே…” என தன்னைத்தானே அடித்துக் கொண்டு கதறினான்.
“நம்ம காதலாலே ஏன் ராஜ் காயப்படப் போறோங்க?” புரியாமல் கேட்டவளை வலியோடு பார்த்தான்.
அவன் மனதைப் போல மேலும் கீழுமாக பெண்டுலம் ஆடிக் கொண்டிருந்த அந்த லிஃப்ட் ஆறாவது தளத்தை அடைய இம்முறை தீரனே கீழ்த்தளத்தை அழுத்திவிட்டு மிதுராவைப் பார்த்தான்.
“உதிரத்துடிக்கும்பூ உன்னோட மெயில் ஐடி தானே?” என்றான் கேள்வியாக.
ஆமென ஆமோதித்தாள் அவள்.
“இதுக்கு முன்னாடி சில்லுனு ஒரு காதல் நிகழ்ச்சிக்கு மெயில் பண்ணி இருக்க தானே?”
“ஆமாம் நான் அனுப்பியிருக்கேன். எதுக்காக இப்போ சம்பந்தமே இல்லாத கேள்வியை கேட்கிற கார்த்திக்?எனக்கான பதிலை சொல்லு. ஏன் ப்ரேக்-அப்னு சொன்ன?” மீண்டும் அதே கேள்விப்புள்ளியில் வந்து நின்றாள் அவள்.
“சம்பந்தம் இருக்கு மிதுரா… ராஜ் காதலிக்கிறது உதிரத்துடிக்கும் பூ ன்ற மெயில் ஐடியிலிருந்து முதல் முறையா பகிரப்பட்ட வாழ்க்கைப்பதிவை..”
அவனின் சொற்களிலிருந்த வெடிமருந்து அவள் இதயநிலத்தில் விழுந்து வெடித்த நேரம் லிப்ஃட்டின் கதவுகள் திறந்தது.
எதிரே கேள்வியுடன் ராஜ்!
அருகே கண்ணீருடன் தீரன்!
இப்போது போர்க்களமாக இவள்!