emv22c

emv22c

எனை மீட்க வருவாயா! – 22C

 

 

திவ்யாவின் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கில், தமிழகத்தின் பல்வேறு கல்லூரியின் சார்பாக அவளின் துறையில் பயிலும் மாணாக்கர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அன்று காலை முதலே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அவர்களின் துறை.

வெளியூரிலிருந்து வருபவர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ள பதிவு செய்ய, அதுசார்ந்த பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தாள் திவ்யா.

இதர கல்லூரி மற்றும் வெளியூர் மாணாக்கர்கள், பதிவு செய்ய வரிசையில் காத்து நின்றிருந்தனர்.

நீண்ட வரிசையில் நின்றிருந்த கிருபா, தன்னோடு வந்த சக மாணவர்களோடு பேசியபடிய வர, அதேபோல பிறரும் பேசியதால் அங்கு நிசப்தமில்லாது போயிருக்க, “ப்ளீஸ் கீப் கொயட்!” எனும் சத்தம் எழுந்ததைக் கண்டு அனைவரும் அமைதி காத்தனர்.

அதேநேரம் அக்குரல் கிருபாவிற்கு மிகவும் பரிச்சயமாகத் தோன்ற, பேச்சை நிறுத்திவிட்டு, தான் நின்றிருந்த வரிசை செல்லும் திசையினை கூர்ந்து கவனித்தான்.

தலைக்குக் குளித்து, தளரப் பின்னிய கூந்தலில், மடித்து வைக்கப்பட்ட நீளமான மல்லிகைச் சரம். அத்தோடு நெற்றி வகிட்டில் குங்குமம், இதழில் நிறைந்து உறைந்திருந்த புன்னகையோடு, நல்ல மிளகாய் சிவப்பு நிற பட்டில், கரும்பச்சை நிற பார்டர், அதே நிற ரவிக்கையில் மதுரை மீனாட்சியை நினைவுறுத்தும்படி மங்களகரமாய், கருத்தரங்கில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யும் இடத்தில் அமர்ந்திருந்தாள் திவ்யா.

‘இது டீடீயா..! இல்ல அவளை மாதிரியே வேற யாருமா?’ என யோசித்தபடியே வந்தவன், தனது பெயரைப் பதிந்தான்.

கிருபாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பதிந்து உரிய ரசீது வழங்கியவள், அவனைத் தெரிந்ததுபோலக் காட்டிக் கொள்ளவே இல்லை.

இதழில் உறைந்திருந்த புன்னகையில் எந்த மாற்றமுமின்றி சலனமில்லாத பார்வையோடு இருந்தவளை, ஆச்சர்யமாய் நோக்கினான்.

அவள் கண்டுகொள்ளவில்லை என்றதும், ‘இது வேற யாரோ போல’ என்றே நினைத்துக் கொண்டான்.

அதன்பின் வந்த ஒவ்வொரு நிகழ்வுகளின்போதும் இயன்றவரை. அவன் தன்னிடம் நெருங்காமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டாள் திவ்யா .

தவிர்க்க இயலாத நிலையில் அருகே நின்றவனிடம் பேசுவதை தடை செய்திட எண்ணி, மற்றவர்களை இழுத்து வைத்துப் பேசினாள்.

மாலை வரை நீண்டிருந்த கண்ணாமூச்சு ஆட்டத்தின் இறுதியில், அவள் எதிர்பாரா நேரத்தில் அவளை நெருங்கியவன், “ஹாய் டீடீ.. எப்டியிருக்க?”

வசியப் புன்னகையோடு தன்னை நெருங்கியவனிடம், தனது தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு “நல்லாயிருக்கேன்” எனும் ஒற்றைப் பதிலோடு “எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு.. ப்ளீஸ்” என அவனைத் தவிர்த்து அங்கிருந்து அகல, அன்றைய கருத்தரங்கின் ஒரு பகுதியாக, கருத்தரங்கின் அங்கமாய் அங்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் முதல் பரிசை வென்றிருந்தவளைப் பாராட்டும் விதமாய்

“இன்னும் அதே டிடெர்மினேசனோட ஸ்டடீஸ்ல கான்சன்ட்ரேட் பண்றபோல” என பேச்சை வளர்க்க எண்ணி அவளைத் தொடர “எஸ் ஆஃப்கோர்ஸ்” என அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

விடாமல் தொடர்ந்தவன், “வேலையிருந்தா, நம்பர் தா. ஃப்ரீயா இருக்கும்போது பேசலாம்?” என்பதை ஆங்கிலத்தில் கேட்க

“சாரி, அது எதுக்கு உங்களுக்கு?” என சட்டெனக் கேட்ட திவ்யதர்ஷினியின் கேள்வியில், உண்மையில் காயப்பட்டுப் போனான் கிருபா.

அன்றைய தினம் முழுமையிலும் அதிகமாக உச்சரிக்கப்பட்ட அவளின் பெயர், அவளின் திறமைக்காக என்பதை எண்ணியவனுக்கு நம்ப முடியாத நிலை.  படிப்பில் சுட்டிதான் என்றாலும், அவளின் முதுகலைக் கல்வி என்பதே நடவாத விசயம் என எண்ணியிருந்தவனுக்கு, அவளை இந்நிலையில் சந்தித்ததே உலக ஆச்சர்யம்தான்.

தோற்றப் பொலிவு மற்றும் அவளின் ஆடை அலங்காரம், அத்தோடு அன்றைய நிகழ்விலும் சரி, அதிகம் பேசப்பட்ட அவளின் பெயரைக் கேட்டு “இது அவள்தானா?” என்கிற அவனது ஆழ்மனதில் உண்டான கேள்வியை நம்பவே, அவனுக்குப் பாதி நாள் ஆகியிருந்தது.

‘ஏதோ பட்டிக்காட்டானக் கல்யாணம் பண்ணிகிட்டானு சொன்னானுங்க. நானும், அவ இன்னேரம் பாத்திரத்தைத் தேச்சிட்டு, அம்மா கணக்கு படத்தில வர அமலாபால்போல, அடுப்போட மல்லுக்கட்டிட்டு வாழ்ந்திட்டு இருப்பான்னுல நினைச்சேன்’ என அவளைப் பற்றி எண்ணியிருந்தவனுக்கு, தற்போதைய அவளின் நிலை ஏமாற்றமே தந்தது. 

‘பீஜி படிக்கறதோட, காரைக்குடியவே ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்காபோலயே’ என்பதாக கிருபா அவளையே யோசனையோடு பார்த்திருந்தான்.

கிருபாவும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் நன்கு மாறியிருந்தான்.

கிருபாவிற்கு திவ்யாவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஆரம்பத்தில் இருந்ததால்தான், அவளைக் காதலித்தான் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், எப்போது ஈஸ்வரியைச் சந்தித்து, அவரின் பேச்சைக் கேட்டானோ, அப்போதே ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

ஈஸ்வரி கூறிய, வீட்டோடு மாப்பிள்ளை என்பது, அத்தோடு நாத்தனார்கள் இல்லாத வீட்டில்தான், தன் மகளைக் கொடுப்பேன் என்று சொன்னது எல்லாமே அவனை யோசிக்கச் செய்ததோடு, நிதானிக்கச் செய்திருந்தது.

மேலும் திவ்யாவின் புறத்தோற்றம் மற்றும் செழுமை இரண்டிற்கும், அவளின் அந்தஸ்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம் இருப்பதை, அவளின் வீடு மற்றும் தாயாரின் தொழில் ஸ்தாபனத்திற்கு வந்தபோது உணர்ந்தான்.

தங்களின் அந்தஸ்திற்கு சற்றும் பொருத்தமில்லாத குடும்பம் என்பதும் அவனது எண்ணத்தில் இமயமாய் வந்து அடுத்து அவளுக்காய், அவளின் அன்பு, உண்மையான நேசம் பற்றி யோசிக்க விடாமல் தடுத்திருந்தது.

முடிவாய், ‘இந்தக் குடும்பம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது’ என்பதுதான் அது. அத்தோடு திவ்யாவிடமிருந்து விலக்கிக் கொள்ளும் முடிவிற்கு வந்திருந்தான்.

தற்போது அழகிலும், அறிவிலும் மிளிர்ந்து, பேரழியாய் நின்றவளைக் கண்ணுற்றவனுக்கு, திவ்யா அடுத்தவன் மனைவி என்பதே மறந்திருந்தது. அவள் செல்லுமிடமெங்கும் அவனது பார்வையும் மலரின் தேனைத் தொடரும் வண்டாய்த் தொடர்ந்தது.

ஆனால் தற்போது, ‘அவ அம்மாவை யோசிச்சு, இவளைக் கோட்டை விட்டுட்டேன்போலயே’ என்பதுதான் அவனது மனநிலை.

தனது தமையன் ராகேஷிடம், தன்னைத் தெரியாது என்றவனிடம் இத்தனை தூரம், தான் பேசியதை எண்ணிய வருத்தம் திவ்யாவிற்கு.

அவன் கேட்டபோது, ‘நீங்க யாருன்னு கேட்டு அவன் மூஞ்சியில கரியப் பூசியிருக்கணும்.  அதைவிட்டுட்டு… ஈனு போயி பேசிட்டு இப்ப வந்து, இப்ப புலம்புற.  அறிவுகெட்டவளே… உனக்கே இது அதிகமாத் தோணலை’ என அவள் மனமே அவளைச் சாடியது.

பெரும்பாலான மன வருத்தங்களுக்கு வடிகால் இதுபோன்ற பழி வாங்கல்களின் வாயிலாக நிறைவேறக் கூடும். அதை விட்டுவிட்டோமே என்கிற பதைபதைப்பு அவளை எதிலும் ஒன்றி, ஈடுபட விடாமல் தடுத்தது.

சூழல் அப்படி.  அதனால் பேசும்படி ஆனதை எண்ணித் தன்னைத் தேற்றினாலும், அவன் தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதாய் ஆழ்மனதில் பதிந்திருந்த விசயங்கள் ஒவ்வொன்றாய் மேலேழுந்து வரத் துவங்க, அது அவளை வதைத்து இம்சித்தது.

வீட்டிற்கு திரும்பியவளுக்கு, அவளின் மீதான கோபம், வீட்டு வேலைகளில் வெளிப்பட்ட வண்ணமிருந்தது.

ஜெகன் இரவு வீடு திரும்பியதும், அதை அவனிடமும் காட்டத் துவங்கியிருந்தாள்.

வழமைபோல மனைவியோடு வேலைகளில் வந்து ஈடுபட்டவனுக்கு, அவனின் சுள்ளெனும் பேச்சு, யோசிக்காமல் வார்த்தைகளை விட்டது, பஞ்சமாகிப் போன சிரிப்பு என அனைத்தும் மனைவியை கூர்ந்து நோக்கச் செய்தது.

ஒரு கணவனாக திவ்யாவை ஓரளவிற்கு படித்திருந்தான்.  மாதாந்திர தொந்திரவின் போது மட்டுமே, உணவுன்ன சற்று முரண்டு பிடிப்பது, உடல் இயலாமையினால் சட்டென கோபப்படுவது, எரிந்து விழுவது என இருப்பாள்.

அப்போதுமே, அந்த நாள்களைக் கடந்ததும், “சாரிங்க, ஏதோ டென்சன்ல அப்டி பேசிட்டேன்.  நானும் ரொம்ப சைலண்டா இருக்கணும்னுதான் ஒவ்வொரு மாசமும் நினைக்கிறேன்.  ஒவ்வொரு தடவையும் இப்டி எதாவது பேசிட்டு, மன்னிப்பு கேக்கறேன்னு யோசிக்காதீங்க.. என்பவள், என்னை  திமிரு புடிச்சவன்னு நினைச்சுக்காதீங்க.  எதையும் மனசுல வச்சிக்காதீங்க” என்பது போல தனது செயலுக்காய் வருந்திக் கூறுவாள்.  ஆனால் அன்று மட்டுமல்லாது அடுத்து வந்த நாள்களிலும், தனது எந்த செயலுக்கும் அவள் பொறுப்பெடுக்காமல், தொடர்ந்தாளே அன்றி கிஞ்சித்தும் வருத்தமில்லாதிருந்தாள்.

இரவிலும் ஆழ்ந்த உறக்கமில்லாமல் புலம்பல்கள் துவங்கியிருந்தது.  ஆனால் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே அதில் புரிந்தது.  அதனைக் கொண்டு எந்த முடிவிற்கும் வர முடியாமல் இருந்தான் ஜெகன்.

நேரிடையாக கேட்டபோதும், “நல்லாத்தான் இருக்கேன்” என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.

இயல்பான பேச்சுகள், சிரிப்பு, பொழுதுபோக்கு எல்லாம் மறந்தது.

இறுதி பருவத் தேர்வு வகுப்புகள் ஆரம்பமாகியிருக்க, திவ்யாவிற்கு புரொஜெக்ட் வேலைகள் துவங்கியது. பெரும்பாலும் கணினி மையங்களில் அவளின் கோடிங் வேலைகள் சென்றது.  கல்லூரிக்கு பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சென்று வரும்படி கால அட்டவணை மாற்றப்பட்டிருந்தது.

படிப்பு சார்ந்த வேலைகளில் இருக்கும்போது இயல்பாக இருந்தவள், வீட்டிற்கு வந்ததுமே, குற்றவுணர்வில் தன்னை ஒடுக்கிக் கொள்ளத் துவங்கினாள். ‘எப்பவும் இப்டி இருக்க மாட்டாளே’ என யோசித்தவனுக்கு, விட்டுப் பிடிக்கலாம் என நிதானித்தான்.

கிருபாவையே நினைத்தபடி இருந்தவளுக்கு, ‘அவனைப் போயி நம்பி, அவந்தான் எல்லாமேன்னு அப்ப நான் எப்டி அவ்ளோ லூசா இருந்தேன்னு, இப்போ நினைச்சா, அது நாந்தானான்னு என்னால நம்பவே முடியலையே.  என்னை நினைச்சா எனக்கே அருவெறுப்பா இருக்கு’ என உள்ளம் வாதனையாய் மாறியது திவ்யாவிற்கு.

இரவில் நெருங்கிய கணவனிடம், ஒதுக்கம் காட்டினாள்.

திருமணமாகி வந்த இத்தனை காலங்களில் அவ்வாறு நடந்து கொள்ளாதவள், திடீரென இவ்வாறு நடந்து கொண்டதும் ஜெகனுக்கு முன்னிலும் வருத்தம்.

ஒரு வாரம் மனைவியிடம் எதுவும் கேட்கவில்லை.  இயல்பாய் அவன் பேச வந்தாலும், குற்றவுணர்வில் அவனைத் தவிர்த்தாள்.

‘இவரைக் கல்யாணம் பண்ணிட்டு, இப்போ போயி அந்தக் கழிசடையையே நினைச்சிட்டு இருக்கேனே.  கடவுளே… எனக்கு ஏனிந்த கஷ்டம்’ அவளுக்குள் வைத்து மருகினாள்.

காதல் … ஒவ்வொருவருக்கும் இனிமையான உணர்வுதான்.

அதில் பெருந்தோல்வி கண்ட பெண்களில், குறைவற்ற நேசம், அன்பு, புரிதல், காலம், தாம்பத்தியம், அணுசரணை போன்றவை தன் கணவன் வாயிலாக, கணிசமான அளவிற்கு ஒரு பெண்ணுக்குக் கிடைத்துவிட்டால், கைநழுவிப் போன காதலை எண்ணி, அவள் ஏங்கி மருகுவதில்லை. உருகுவதில்லை. 

மாறாய் அந்த நாள்களை அறவே வெறுத்து ஒதுக்குவாள். அவர்களின் வாழ்வில் அது கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது.

அந்த நிலையில்தான் தற்போது திவ்யா இருந்தாள்.

ஜெகன் என்பவன், அவளை ஆள, அவள் அதில் நிறைவாய் வாழத் தழைப்பட்ட காலத்தில், கிருபாவைச் சந்தித்ததும், அதனை ஆழ்மனம் இயல்பாக எடுத்துக் கொள்ள இயலாமல், அவளை நிலையில்லா மனத்தோடு, குற்றவுணர்வோடு வாழச் செய்தது.

அவன் அவளின் பழைய கருப்பு தினங்களை நினைவூட்டிச் சென்றிருக்க, தன்னையே அருவெறுக்கத்தக்கவளாய் எண்ணி, நத்தையைப்போல கூட்டுக்குள் ஒடுங்க எண்ணுகிறாள்.

இது பிற எண்ணங்களின் தாக்குதல் என்பதை, அவளும் அறியாமல் திணறினாள்.

பிரபஞ்சம் முழுக்க பரவி சிதறிக் கிடக்கும் எண்ணங்கள், ஒவ்வொரு உயிரின் திணிவிற்கு ஏற்ப, தன்னிடம் திணிக்கப்படும் உணர்வுகளை ஏற்பதும், விலக்குவதுமாய், நம் வாழ்வை பதம்பார்க்கும் என்பதை அறியாத நிலையில் குமுறிக் களைக்கிறாள் திவ்யா.

குறிப்பாய் நம்மை எண்ணி, பிரபஞ்சத்தில் கலந்து போய் காணப்படும் எண்ணங்கள், நம் வாழ்வின் இன்ப, துன்பங்களைத் தீர்மானிக்கும் என்பதையும் அறியாத சாமான்யர்களின் பட்டியலில் திவ்யாவும் இணைந்து கொண்டிருந்தாள்.

வராத யோசனைகள் வந்ததன் காரணத்தை அறிய முடியாத அறிவிலியாகிப் போனாள் திவ்யா.

ஆம், திவ்யாவைக் கண்டது முதலே, வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்ததுபோல, அவளை இழந்த தருணங்களை எண்ணி, அவளைப் பற்றி நித்தமும், நிமிடமும், வினாடியும் சிந்தித்து நொந்து கொண்டிருக்கிறான் கிருபா.

ஆகையினால், நடப்பிற்கும், நடந்து முடிந்த நிகழ்விற்கும் இடையே அல்லாடத் துவங்கிய மனதோடு, அனைத்திலிருந்தும் ஒரு ஒதுக்கம் வந்திருந்தது திவ்யாவிற்கு.

இடையிடையே ஜெகனும் மனைவியை மீட்க எண்ணி, அவளோடு பேசிக் களைக்கிறான். அவளை அணுகித் தோற்கிறான்.  ஆனால் துவளாமல் மீண்டும் தொடர்கிறான்.

மீள முயன்றாளா? மீட்க வருவானா?

…………………………………

Leave a Reply

error: Content is protected !!