காதல் தீண்டவே- 3

வானளவு உயர்ந்து நின்ற அந்த கட்டிடத்தின் முன்பு சென்று நின்றது அந்த வாகனம்.

உள்ளிருந்து உதிர்ந்தாள் மிதுரா.

அவள் பின்னே இரண்டு கார்த்திக்கும் வரிசையாக இறங்கினர்.

பேருந்தில் இருந்து இறங்கியவளது பார்வை அந்த கட்டிடத்தையே அளந்துக் கொண்டு இருக்க அவள் பின்னால் வந்த கார்த்திக்கோ ” நீங்க எந்த ப்ராஜெக்ட் ?” என்றுக் கேட்டு அவள் கவனத்தைக் கலைத்தான்.

“பாரத் மேஹா இன்சூரன்ஸ்.. ” என்று பதில் மொழித் தந்தாள் அவள்.

அந்த பதிலைக் கேட்டதும் அவன் முகத்தில் ஒரு அர்த்தபுஷ்டியான முறுவல்.

“நானும் அதே ப்ராஜெக்ட் தான்.. வாங்க.  ” என்று அவளை நோக்கி அழைத்தவன் திரும்பி பின்னே இருந்த கார்த்திக்கைப் பார்த்தான்.

அவனும் மெதுவான தலையசைப்போடு மிதுராவின் வலப்பக்கம் நடந்து வர இடப்பக்கம் இன்னொரு கார்த்திக் நடந்தான். இருவருக்கும் இடையில் மிதுரா.

“நீங்க new joinee ஆ??” என்று  பக்கத்தில் வந்தவனைக் கேட்டாள்.

“இல்லைங்க. நான் 5 years ஆ வொர்க் பண்றேன். ” என்று அவன் சொல்ல திடீரென சடன் ப்ரேக் போட்டு நின்றாள் அவள்.

சீனியரிடமா காலையிலேயே வம்பு இழுத்து வைத்தோம் என்ற எண்ணத்தில் தன் உதட்டுகளை கடித்துக் கொண்டாள்.

அவனோ சிறு புன்னகையுடன் ” no issues ” என்றுவிட்டு அவளுடன் நடந்தவன் லிஃப்ட்டை சமீபத்திருந்தான்.

மூவரும் உள்ளே நுழைந்ததும் ஆறாம் எண்ணை அழுத்தினான்.

லிப்ட் இன் இரண்டு கதவுகளும் சடக்கென்று மூடிக் கொண்டது.

இதுவரை தயக்கம் இல்லாமல் பேசிக் கொண்டு வந்து இருந்தவளிடத்தில் இப்போது மெல்லியதாய் தயக்கம் அரும்பி இருந்தது.

அதை பார்வையால் உணர்ந்தவன் அவளது எண்ணத்தைப் போக்கும் பொருட்டு மேலும் பேச்சை வளர்த்தான்.

“உங்களோட பெயர் என்ன?” என்று அவன் கேட்க ” மிதுரா ” என்று அரைப் புன்னகையோடு பதிலளித்தாள்.

அவன் முழுப்புன்னகையோடு தலையசைத்தான்.

அதற்குள் லிப்ட் ஆறாவது தளத்தை நெருங்கிவிட்டது. கதவுகள் இரண்டும் திறந்துக் கொள்ள இரண்டு கார்த்திக்கும் வேகமாக வெளியே நடந்தனர்.

ஆனால் மிதுராவிடம் சிறியதாய் ஒரு தயக்கம்.

சின்ன சின்ன அடி எடுத்து தயங்கி வந்தவளைத் திரும்பிப் பார்த்தான் கார்த்திக் தீரன். மெதுவாக தன் நடையின் வேகத்தைக் குறைத்தான்.

இப்போது மிதுராவும் அவனும்  ஒரே வேகத்தில் நடந்தனர்.

எதிரே கண்ணாடி கதவு எதிர்பட இருவரும் ஒரே சமயத்தில் திறக்க கை வைத்தனர்.

இருவரது கண்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்தது.

ஒரு புன்முறுவலோடு அவளைப் பார்த்தவன் தன் கரத்தை கதவில் இருந்து விலகினான்.

மிதுரா கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

மேலும் முன்னோக்கி நடக்க முயன்றவளை மீண்டும் பெயர் சொல்லி நிறுத்தினான்.

அவள் கேள்வியாக திரும்பிப் பார்க்க  “உங்க ஐடி நாளைக்கு மார்னிங் வந்துடும். சோ இன்னைக்கு மட்டும் டெய்லி அட்டென்டன்ஸ் ரெஜிஸ்டர் ல சைன் பண்ணிடுங்க. ” என்று அவன்  சொல்லிவிட்டு தன் கேபினை நோக்கி நகர்ந்தான்.

நன்றியுணர்வோடு அவளது பார்வை அவனைப் பின்தொடர்ந்தது.

முதல் நாளைய அவளது வேலையின் தயக்கங்களையும் தடுமாற்றங்களையும் அவன்  இதமாக கையாண்டது, அவன் மீது ஒரு நன்மதிப்பை அவள் உள்ளத்தில் ஏற்படுத்தியது.

அந்த அட்டென்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு விட்டு அந்த அறையையே தன் கண்களால் அளவிட்டாள்.

பரபரப்பாகவும் அந்த அறையில் வேலை நடக்கவில்லை அதே சமயம் மந்தமாவும் இருக்கவில்லை.

அங்கிருந்தவர்கள் அத்தனைப் பேர் முகத்திலும் ஒரு நிதானம் குடியிருந்தது.

இருபத்து ஐந்தில் இருந்து முப்பது  வயதிற்குள் தான் அங்கு நிறையப் பேர் இருந்தனர்.

அதிலும் அங்கு இருந்த ஆண்கள் எல்லாம் பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தனர்.

பரவாயில்லை பா கண்ணுக்கு குளிர்ச்சியா வேலைப் பார்க்கலாம். என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளருகில் ஒரு நிழலுருவம் தெரிந்தது.

திரும்பி பார்த்தாள்.

அங்கே இவளைப் போலவே கண்களால் அங்கிருந்தவர்களை அளந்துக் கொண்டு இருந்தாள் ஒரு பெண்.

“பரவாயில்லை பா கண்ணுக்கு குளிர்ச்சியா வேலை பார்க்கலாம்.. ” என்று இவள் மனதில் நினைத்ததை அந்தப் பெண் உதடுகளால் வெளிப்படையாக சொல்ல ஆச்சர்யமாகத் திரும்பி அவளைப் பார்த்தாள் மிதுரா.

அடடா மனதினுள் நினைத்ததை அப்படியே உளறிவிட்டோமே என்று உதட்டைக் கடித்தபடி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தாள் அந்தப் பெண்.

மிதுரா அந்த பெண்ணை புன்னகையுடன் பார்த்து ” new joinee ஆ?” என்றுக் கேட்க தலையாட்டி ஆமோதித்தாள் அவள்.

“நானும் New joinee தான். நீங்க சொன்னது உண்மை தான்.. நானும் அதையே தான் நினைச்சேன்..  பசங்க பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்காங்க இல்லை.. ” என்று அவள் கேட்க எதிரில் இருந்தவளும் வேகமாக தலையாட்டினாள்.

“என் பெயர் சிற்பிகா.. ” என்று அந்த பெண் கை நீட்ட ” நான் மிதுரா. ” என்று சொல்லிவிட்டு அவளின் கைகளை குலுக்கினாள் மிதுரா.

பார்த்தவுடன் காதல் வருவதைப் போல  சிலர் மேல் பார்த்தவுடன் சிநேகம் தோன்றிவிடுகிறது.

சிற்பிகாவைப் பார்த்ததும் இவள் தனக்கு காலம் முழுக்க உயிர்த்தோழியாக இருப்பாள் என்று அவள் உள்மனம் சொல்லியது.

மிதுராவின் உள்மனதின் எண்ணத்தை சிற்பிகாவின் இதழ்கள் மொழிப் பெயர்த்தது.

“எனக்கு என்னமோ தெரியல. நாம ரெண்டு பேரும் லைப் லாங் பெஸ்ட் ப்ரெண்ட்ஸா இருப்போம் னு தோணுது.. ” என்று சிற்பிகா சொல்ல

” நான் நினைச்சேன்.. நீங்க சொல்லிட்டிங்க. ” என்றாள் மிதுரா.

இருவரும் பேசிக் கொண்டே இருக்கும் போது இடையில் இடறிட்டு ஒலித்தது ஒரு குரல்.

இருவரும் ஒரு சேரத் திரும்பிப் பார்த்தனர்.

எதிரே ஒருவன் கைகளில் நியூஸ்பேப்பரை மைக் போல சுருட்டியபடி அவர்கள் முன் நீட்டி இருந்தான்.

“ஹாய் ப்யூட்டிஸ்.. ஐ யம் அபினவ். சுருக்கமா அபி.. இந்த ப்ராஜெக்ட்டோட  critical resource… அப்புறம் நான் இல்லாம இந்த ப்ராஜெக்ட்டே ஓடாது.. ” எனப் பேசிக் கொண்டு இருக்க  அங்கிருந்தவர்களிடத்தில் ஒரு மறுப்பு கூச்சல்.

“இவங்க இப்படி தாங்க. உண்மையை சொன்னாலே இப்படி கத்த ஆரம்பிச்சுடுவாங்க. சரி நீங்க உங்களை இன்ட்ரொடியூஸ் பண்ணிக்கோங்க.. ” என்றபடி அந்த சுருட்டிய பேப்பரை மைக் போல் மிதுராவின் முன்பு நீட்டினான்.

அவளுக்குள் இருந்த கடைசித் தயக்கமும் அபினவ்வின் பேச்சில் கரைந்துப் போய் இருந்தது.  இயல்பாக உரையாட ஆரம்பித்தாள்.

“குட் மார்னிங்.. ஐ யம் மிதுரா. நான் பிஇ கம்ப்யூட்டர் சையின்ஸ் ரீசன்ட் பாஸ்ட் அவுட்.. எனக்கு கோடிங் ரொம்ப பிடிக்கும்.. அதனாலே தான் ஐடி ஃபீல்ட் தேர்ந்து எடுத்தேன்.. எனக்கு பிடிச்ச இந்த ஃபீல்ட்ல கண்டிப்பா நான் என் காலடித் தடத்தை அழுத்தமா பதிப்பேன்.. ” என அவள் சொல்ல சுற்றி இருந்தவர்களிடம் பெரும் கரகோஷ ஒலி.

அதைப் புன்முறுவலோடு எதிர் கொண்டு பின்னே சென்றாள்.

இப்போது சிற்பிகா முன்னே வந்தாள்.

“நான் சிற்பிகா.. நான் Ece முடிச்சு இருக்கேன்.. எனக்கும் கோடிங்னா ரொம்ப பிடிக்கும்.. நம்ம டீம்ல முதல் நாளே வார்ம் வெல்கம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்.. ” என்று சொல்லிவிட்டு அவள் பின்னோக்கி நகர இப்போது அபினவ் பேசினான்.

“உங்க ரெண்டு பேருக்கும் இந்த கம்பெனி சார்பாக என்னோட வார்ம் வெல்கம். நாம எல்லாரும் ஒரு டீம்மா இருந்தா தான் ஒன்னா சேர்ந்து அச்சீவ் பண்ண முடியும்.. சோ ஃபீல் ஃப்ரீ..  வெல்கம் போத் ஆஃப் யூ” என்று சொல்லிவிட்டு அபினவ் யாரையோ தேடினான்.

“கார்த்திக் ராஜ் சார்.. நீங்க  new joinees கான வெல்கம் கப் கொடுக்க முடியுமா? அப்புறம் அவங்க எந்த டீம்னு பொசிஷன் டிசைட் பண்ண முடியுமா?” என்றுக் கேட்க அந்த கார்த்திக் ராஜ் முன்னால் வந்தான்.

அவனது இரண்டு கரங்களிலும் ஒரு தேநீர்க் கோப்பை அதனுடன் இரண்டு ஃபைல்கள்.

காப்பி கோப்பையை  இருவரிடமும் நீட்டினான்.

இருவரும் ஒரு அளவான புன்னகையோடு பெற்றுக் கொண்டனர்.

அவனது கைகளில் இருந்த ஃபைலை இருவரிடமும் கொடுத்தான்.

அந்த கோப்பின் மேல் பக்கத்தில் Developer என்று இருந்தது சிற்பிகாவிற்கு.

எட்டி மிதுராவின் ஃபைலைப் பார்த்தாள்.

அவளுடையதிலும் Developer என்று தான் இருந்தது.

அதைப் பார்த்தும் அவளது முகத்தினில் நிம்மதி பெருமூச்சு.

அபினவ்வின் பார்வை எதிரே இருந்த கார்த்திக் தீரனிடம் சென்றது.

“தீரன் சார், இரண்டு பேரும் உங்க டீம் தான்..” என்று சொல்ல கார்த்திக் தீரனிடம் மெல்லிய புன்னகையுடன் கூடிய ஆமோதிப்பு.

“இரண்டு பேரும் வாங்க.. உங்களுக்கான வொர்க் ப்ளேஸ் நான் காட்டுறேன்.. ” என்று சொன்ன கார்த்திக் தீரன் தனக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையை சிற்பிகாவிடம் சுட்டிக் காட்டினான்.

அவளும் புரிந்துக் கொண்டவளாக அந்த இருக்கையை தன்னகப் படுத்திக் கொண்டாள்.

மிதுராவிற்கு கொடுக்கப்பட்ட இருக்கையை  தள்ளி ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கை சிற்பிகாவிற்கு கொடுக்கப்பட்டது.

அந்த இருக்கையில் அமர்ந்த சிற்பிகா, மிதுராவைப் பார்த்து புன்னகைக்க அவளும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு  இடப்பக்கம் திரும்பினாள்.

அங்கே கார்த்திக் தீரன் ஒரு  சின்ன முறுவலிப்போடு அவளைப் பார்த்தான்.

அவளும் பதிலுக்கு முறுவலித்துவிட்டு முன்னே திரும்பிய நேரம், அவளுக்கு வலப்பக்கம் காலியாக இருந்த இருக்கை யாராலோ ஆக்கிரமிக்கப்பட்டது.

திரும்பிப் பார்த்தாள்.

அருகே  கார்த்திக் ராஜ்.

மீண்டும் இரண்டு கார்த்திக் கிற்கு இடையிலா என்ற  பெருமூச்சு பெரியதாக வெளிப்பட்டது அவளிடம்.

அவன் இவளது பெருமூச்சைக் கூர்ந்துப் பார்க்க அசட்டு சிரிப்போடு அவனைப் பார்த்தாள் ஆனால் பதிலுக்கு கூட ஒரு புன்னகை பூக்காமல் முன்னே திரும்பிக் கொண்டான் அந்த கார்த்திக் ராஜ்.

💐💐💐💐💐💐💐

அலுவலகத்தின் அந்த முதல் நாளைக் கடப்பதற்கு பெரும் உதவியாய் இருந்தது சுற்றி இருந்தவர்கள் தந்த  கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம்  புன்முறுவல் கொஞ்சம் அரவணைப்பு.

அவளுக்கு அந்த இடம் அந்நியமாகவே தோன்றவில்லை.

ஏதோ பழக்கப்பட்ட கூட்டிற்குள் திரும்பியதைப் போன்ற ஆசுவாசம்.

யார் முகத்திலும் எடைப் போடும் பாங்கில்லை.

யார் கண்களிலும் போட்டிப் போடும் பொறாமை தெரியவில்லை.

சுற்றி இருந்தவர்கள் தோழாமையாகவேப் பழக அவளுக்கு பெரும் நிம்மதியாய் இருந்தது.

அந்த நிம்மதியுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழை நெருங்கி இருந்தது. அவள் கிளம்ப வேண்டிய சமயமும் நெருங்கிவிட்டது.

திரும்பி சிற்பிகாவைப் பார்த்தாள்.

அவளும் கிளம்பும் முனைப்போடு தான் கைப்பையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு  இருந்தாள்.

மிதுரா எழுந்துக் கொள்ளவும் அவளும் வெளியே செல்ல எழுந்துவிட்டாள்.

கிளம்பும் முன் இருவரும் அட்டென்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்துவிட்டு வெளியே வந்தனர்.

அதுவரை உடலைக் கவ்விக் கொண்டு இருந்த குளிரூப்பட்ட காற்று உடலை விட்டு நீங்க மென்மையான இளங்காற்று அவர்கள் உடலைத் தழுவ ஆரம்பித்தது.

இருவரும் அந்த காற்றை ரசித்தபடியே மெல்லியதாக நடைப்போட்டனர்.

“எந்த ஊரு மிதுரா நீ?” என்று பேச்சைத் துவக்கி வைத்தாள்  சிற்பிகா.

“நான் அம்பத்தூர் மா.”

“அட அம்பத்தூர்ல இருந்து நாவலூர் ரொம்ப தூரமாச்சே… எப்படி டெய்லி ட்ராவல் பண்ண முடியும்.. பி.ஜி ல ஸ்டே பண்றது பெட்டர் மிது.. “

“பெட்டர் தான் சிற்பி.. ஆனால் அம்மா அப்பா கூட இருக்கிற மாதிரி வராது இல்லையா. அதனாலே தான் எவ்வளவு தூரமா இருந்தாலும் ட்ராவல் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆமாம் நீ எந்த ஊர் சிற்பி?”

“நான் தாம்பரம் மா.. ஒரு மணி நேரம் தான் ட்ராவல், அதனாலே எனக்கு எந்த ப்ரச்சனையும் இல்லை… ” என்றுக் கூறிவிட்டு மெல்லியதாக  புன்னகைத்தாள்.

அதற்குள் பேருந்து நிற்கும் இடம் வந்துவிட்டது.

சிற்பிகா தன் பேருந்தைத் தேடிக் கொண்டு இருக்க அவளது கண்களில் அகப்பட்டது ஐந்து என்ற எண் ஒட்டப்பட்ட பேருந்து.

மிதுராவிடம் திரும்பியவள் ” என் பஸ் அங்கே இருக்கு… உன் பஸ் எங்கே?? ” என்றுக் கேட்டாள்.

“என் பஸ் அந்தப் பக்கம் நிக்குது சிற்பி.. நீ பார்த்துப் போ”

” ஓகே மா. நீயும் பார்த்துப் போ. ” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தவள் பேருந்தில் நுழைய முயன்ற நேரமும் இன்னொரு உருவமும் உள்ளே நுழையப் பார்த்தது.

அவசரமாய்த் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே அபி நின்றுக் கொண்டு இருந்தான் புன்முறுவலோடு.

“லேடீஸ் ஃபர்ஸ்ட் ” என்ற வார்ந்தையோடு அவன் விலகிக் கொள்ள புன்னகைப் பூத்தபடி உள்ளே நுழைந்தாள் சிற்பிகா.

அந்த பேருந்தில் இரண்டே இரண்டு இருக்கைகள் தான் காலியாக இருந்தது.

ஜன்னலோர இருக்கையில் சிற்பிகா அமர்ந்துவிட  மற்றொரு இருக்கை காலியாக இருந்தது.

அபித் தயக்கத்தோடு அந்த இருக்கையைப் பார்த்தான்.

“May I ?” என்ற  அவன் குரலிலும் தயக்கமே

“Yes please ” என்றாள் இவள் உடனடியாக.

அவள் கொஞ்சமாக நகர்ந்து உட்கார அபினவ் அவளருகில் உட்கார்ந்தான்.

இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சம்பிரதாயமாக புன்னகைத்துக் கொண்டனர்.

அபி மெதுவாக பேச்சைத் துவங்கினான்.

“மேடம் எந்த ஏரியா?” என்றுக் கேட்க

“தாம்பரம்.. நீங்க?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் அவள்.

“நானும் அதே ஏரியா தான். அப்புறம் எப்படி போச்சு ஃபர்ஸ்ட் டே??”

“எல்லாம் நல்லா தான் போச்சுங்க. எல்லாரும் ரொம்ப நல்லா  பேசுனாங்க.  ஆனால் இந்த கார்த்திக் ராஜ் சார் ஏன் இவ்வளவு உர்ருன்னு இருக்காரு. அவர் பேசவே மாட்டாரா ?” என்று அவள் கேட்க

“கார்த்திக் ராஜ் சார் எப்பவும் அப்படி தான்.. அது மட்டும் இல்லாம.. ” என்று அபினவ் ஏதோ சொல்ல வர அதற்குள் அவனது அலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

“எக்ஸ்க்யூஸ் மீ.. ” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் பேசத் தொடங்க இவளோ ஜன்னல் வழி தோன்றியக் காட்சிகளை வெறிக்கத் துவங்கினாள்.

மிதுரா பேருந்தில் ஏறியவுடன் கார்த்திக் தீரன் அவளைப் பார்த்து முறுவலித்தான்.

இவள் காலையில் அமர்ந்த இருக்கையிலேயே சென்று அமர்ந்தாள்.

அவள் அருகினில்  கார்த்திக் தீரன்.

“எப்படி போச்சு முதல் நாள் ?” என்றுக் கேட்டான் புன்னகை சிதறலோடு.

“நல்லா போச்சு சார்.. ” என்றாள் இவள் சம்பிரதாயமாக.

“கேபின்க்கு வெளியிலே வந்த அப்புறம் நோ official calls. நீங்க தீரன் ஹே கூப்பிடலாம் ஆபிஸ்லயும் வெளியிலேயும்.. ” என்று அவன் சொல்ல ” ஓகே தீரன். ” என்றவளது பார்வை முன் இருக்கையில் அமர்ந்து இருந்த கார்த்திக் ராஜ்ஜிடம் சென்றது.

அவன் தீவிரமாக அலைபேசியில் மூழ்கி இருந்தான்.

சுற்றி இருக்கும் எந்த மனிதர்களையும் அவன் பொருட்டாகவே மதிக்கவில்லை.

தனக்குள் உருவாக்கிய ஒரு உலகத்திற்குள்ளே அவன் அடங்கிப் போனது போல தான் தோன்றியது.

ஒரு வேளை உயர்ந்த பதவியினில் இருப்பதால் வந்த ஒதுக்கமா இது?

ஆனால் தீரனும் உயர்ந்த பதவியில் தானே இருக்கிறான் அவனிடம் இருக்கும் கனிவும் சம்பிரதாய விசாரிப்பும் ஏன் இவனிடம் இல்லை?

பேருந்தில் ஏறியதில் இருந்து இவளும் கவனித்துக் கொண்டு தான் வந்தாள்.

தன் நண்பனான கார்த்திக் தீரனிடம் கூட சரியாக பேசவில்லையே. என்ன தான் ப்ரச்சனை இவனுக்கு?

அவன் ஏன் இப்படி இருக்கின்றான்?

யாரோடும் ஒட்டாத பாவனையோடு ,
ஒளிர்வில்வாத கண்களோடு ,
மொழிப் பெயர்க்க முடியாத மௌனங்களோடு என யோசித்துக் கொண்டு இருந்த போது மீண்டும் அவளைக் கலைத்தது கார்த்திக் தீரனின் குரல்.

“நீங்க ஆதனோட ஷோவை எப்பவும் கேட்பீங்களா?” என்றான் கேள்வியாக .

“ஆமாம் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா ஆதனோட குரலுக்கு நான் அடிமை..”

“ஓ.. நான் இப்போ தான் ரேடியோல முதல் முறையா அந்த குரல் கேட்கிறேன்.. நல்லா தான் இருக்கு..  எத்தனை மணிக்கு இந்த ஷோ டெலிகேஸ்ட் பண்ணுவாங்க?”

“பதினொரு மணிக்கு. ” என்ற அவளது பதிலுக்கு உச்சுக் கெட்டியது அவன் உதடுகள்.

அவள் குழப்பமாக அவனைப் பார்க்க ” நானும் ராஜும் சீக்கிரமா தூங்கிடுவோமே.

  அப்போ இந்த ஷோவைக் கேட்க முடியாதே. ” என்று அவன் வருத்தமாக சொன்னான்.

“நானும் இப்போ எல்லாம் சீக்கிரமா தூங்க முடிவுப் பண்ணி இருக்கேன். அப்போ தானே காலையிலே எழுந்து சீக்கிரமா கிளம்ப முடியும். அதனாலே என் க்ளோஸ் ப்ரெண்ட் கிட்டே சொல்லி ஆதன் ஷோவை ரெக்கார்ட் பண்ணி எனக்கு அனுப்ப சொல்லி இருக்கேன். நம்ம வேணா காலையிலே கேட்கலாம்.. ஓகே” என்று அவன் வருத்தத்திற்கு சரியானதொரு தீர்வு சொல்ல ” ஓகே ” என்று புன்னகையுடன் சொன்னது அவன் உதடுகள்.

“ஆமாம் காலையிலே நான் சவுண்டா வெச்சதுக்கு ஏன் கார்த்திக் ராஜ்  சார் என் கிட்டே நேரடியா ஆப் பண்ண சொல்லாம உங்க கிட்டே சொல்லி சொன்னாங்க? “

“நான் அவனுடைய குரல்ங்க. அவனுக்கு பதிலா நான் தான் பேசுவேன். ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ப்ரெண்ட்ஸ். இப்போ கூட ஒரே ரூம் மெட்ஸ் தான். ” என்று அவன் சொல்ல

“ஓ” என்று குவிந்தது அவள் உதடுகள்.

“உங்களுக்கு ஆதனோட பேச்சு எதனாலே பிடிச்சது?” என்றவளது குரலில் ஒருவித சிநேகம் பரவி இருந்தது.

நமக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்கும் பிடிக்கும் போது உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் அதே மகிழ்ச்சியோடு தான் அவள் அந்த கேள்வியைக் கேட்டாள்.

“தெரியல ஏனோ பிடிச்சு இருக்கு.. ” என்று சொன்னவன் பின் தன் குரலின் டெசிபெல்லை குறைத்துக் கொண்டு  வா

“ஆனால் அந்த  ராஜ் பையனுக்கு ஆதன் வாய்ஸ் பிடிக்காது. அவன் என்னை ரேடியோவே கேட்க விடமாட்டான்.. ” என்று மெதுவான புன்னகையோடு குறைக் கூறினான்.

திரும்பி அந்த கார்த்திக் ராஜ்ஜைப் பார்த்தாள்.

“கண்டிப்பாக இவன் வித்தியாசமான ஜந்து தான்.. ” என நினைத்தபடி கார்த்திக் தீரனிடம் திரும்பினாள்.

“நீங்க கவலைப்படாதீங்க.. இனி நாம காலையிலே உங்க ப்ரெண்ட்டோட தொல்லை இல்லாம ஆதன் வாய்ஸ்ஸை கேட்கலாம்.. ” என்று இவளும் அவனைப் போல ஹஸ்கி வாய்ஸ்ஸில் பேச அவனும் ” ஓகே ” என்றான் மெல்லியதான குரலில்.

பின்பு இருவரும் வேலையைப் பற்றி  பேசிக்  கொண்டு வர அந்த கார்த்திக் ராஜ்ஜின் கவனம் அலைபேசியில் மட்டும் தான் குவிந்து இருந்தது.

சலிப்புடன் அவனைப் பார்த்துவிட்டு வெளியேப் பார்க்க அவள் இறங்கும் இடம் நெருங்குவதைப் போல இருந்தது.

ஆனால் ஏன் இவர்கள் இருவரும் இதற்கு முன்னால் நிறுத்தத்தில் இறங்கவில்லை என குழப்பமாகப் பார்த்தாள்.

அவளது குழப்பத்தை உணர்ந்தவன் போல தீரனிடம் இருந்து பதில் வந்தது.

“நாங்க ரூம் மாறிட்டோம். அம்பத்தூர்ல தான் இப்போ வீடு எடுத்து இருக்கோம்.. ” என்று சொல்ல அப்போது தான் அவளுக்குக் கொஞ்சம் புரிவது போல இருந்தது.

காலையில் ட்ரைவர் பத்து நிமிடம் ஆகும் என்று சொல்லியபின்பும் கூட எப்படி இரண்டே நிமிடத்தில் இருவரும் வண்டியில் ஏறினார்கள் என்று.

அதனால் தான் கார்த்திக் ராஜ்ஜிடம்  மொக்கையும் வாங்க வேண்டியதாகிவிட்டது என்று புரிந்த போது லேசாக ஒரு புன்முறுவல் அரும்பியது.

பேருந்தும் கடைசி நிறுத்தத்தில் நின்றுவிட முதலில் கார்த்திக் தீரனும் அடுத்து மிதுராவும் அதற்கடுத்து கார்த்திக் ராஜ்ஜூம் வரிசையாக இறங்க முனைந்தனர்.

ஆனால் மிதுரா இறங்கும் போது அவளுடைய துப்பட்டா அவளது காலடியில் இடறிவிட பேருந்தின் படியில் இருந்து தடுமாறத் துவங்கினாள்.

அவளது தடுமாற்றத்தை கவனித்தவனாக கார்த்திக் ராஜ் சட்டென்று அவளது இடையைப் பின்னிருந்து பிடித்துக் கொண்டான்.

முன்னே தடுமாறி விழப் பார்த்த கரங்களை கார்த்திக் தீரன் பட்டென்று பிடித்துக் கொண்டான்.

இருவரது பாதுகாப்பு கரங்களுக்கு இடையில் பத்திரமாக அடங்கினாள் மிதுரா.