YALOVIYAM 14.1

YALOVIYAM 14.1


யாழோவியம்


அத்தியாயம் – 14

சென்னை-செங்கல்பட்டு சாலையில்…

சுடர், திலோ இருவரும் சாலையிலிருந்து இறங்கி, ஒரு பத்தடி தூரம் நடந்து வந்து நின்று கொண்டனர். நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை என்பதால், எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது? என்ற தயக்கம் இருவருக்குமே இருந்தது. அது தொடர்ந்து கொண்டே போனதில் ஒரு நீண்ட மௌனம் உருவாகியது.

கடைசியில் வயதின் அனுபவத்தில், “இப்போ கை எப்படி இருக்கு?” என்று அமைதியான குரலில் திலோ ஆரம்பித்தார்.

கட்டு அவிழ்க்கப்பட்ட நிலையில் கையில் போடப்பட்டிருந்த களிம்பைப் பார்த்து, “ம்ம்ம்! பரவால்ல” என்று உள்ளிறங்கிய குரலில் சொன்னாள்.

மீண்டும் ஒரு மௌனத்திரை விழும் முன் பேசிவிட வேண்டுமென, “மாறன் உங்களைப் பத்தி” என வேகமாக ஆரம்பித்து, “சொல்லியிருக்கான்” என்று மெதுவாகச் சொன்னார்.

தெரிந்த விடயம் என்றாலும் புதிதாய் கேட்பது போல், “ஓ!” என சாதரணமாகச் சொன்னாலும், மனம் தடதடவென அடித்துக் கொண்டே இருந்தது.

அழுத்தமான குரலில், “மாறன் அப்பா-க்கு இதுல இஷ்டமில்லை” என்று திலோ சொன்னதும், சுடரின் மனம் பிசைய ஆரம்பித்தது.

‘என்ன பேச?’ என தெரியாமல் வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு, “ம்ம்ம்” என்று மகரத்திற்குள் ஒளிந்துகொண்டாள்.

“இதைப்பத்தி உங்ககிட்ட மாறன் சொல்லியிருப்பானா-ன்னு தெரியாது. பட் தியாகு வேண்டாம்-னு சொல்றதுக்குக் காரணம் இருந்தது. மாறன் உங்களை மேரேஜ் பண்ணா, அவன் மேல ஒரு கட்சியோட சாயம் விழும்னு நினைச்சாரு.

அவன் கெரியர் ஸ்பாயில் ஆகிடும்னு பயந்தாரு. இன்கேஸ் உங்க அப்பாவை பாலோவ் பண்ணி, நீங்களும் பாலிடிக்ஸ்…” என்ற போது தொண்டை அடைத்ததில், “சாரி! சாரி” என பேச்சை நிறுத்திவிட்டார்.

நெற்றிப் பொட்டை அழுத்தியபடி நின்றவரைப் பார்த்தவள், “எதுக்கு ‘சாரி’?” என்று கேட்டதற்கு, “தியாகு நியாபகம் வந்துருச்சி… பேச முடியலை! அதான்… ” என மன்னிப்பின் காரணம் சொன்னார்.

அவர் இயல்பு, இழப்பு சுடர் மனதை என்னவோ செய்ததும், “கார்-ல தண்ணி இருக்கு. எடுத்திட்டு வரவா?” என்று குறைவானக் குரலில் கேட்டதற்கு, ‘ம்கூம்’ என்று மறுத்துவிட்டார்.

அவர் மீண்டு வர சில நொடிகள் அவகாசம் கொடுக்க நினைத்தவள், “நான் ஜர்னலிசம் படிச்ச பொண்ணு. பாலிடிக்ஸ்-க்கு வர மாட்டேன்” என்றாள்.

தொண்டையைச் சரி செய்தவாறே, “இப்போ வர மாட்டேன்-னு சொல்றீங்க. பியூச்சர்-ல எப்படி எப்படி இருக்குமோ?” என்று நிச்சயமற்ற எதிர்காலத்தை நினைத்து வாதம் செய்தார்.

“என்னோட பியூச்சர்… ஐ மென்ட் கெரியர்… நியூஸ் எடிட்டிங், நியூஸ் சேனல் இப்படித்தான் இருக்கும்” என எதிர்காலம் நிரப்பப்படும் விதத்தைப் பற்றிச் சொல்லி, எதிர்வாதம் செய்தாள்.

வாக்குவாதம் செய்ய விரும்பாததால், திலோ எதுவும் பேசவில்லை. கொஞ்சம் தன்மையாகப் பேசியிருக்கலாமோ? என்று நினைத்ததால் சுடர் அமைதியாக நின்றாள். ஒரு மௌனத்திரை இருவருக்கும் இடையே விழுந்தது.

நெடுஞ்சாலை, நிறுத்தப்பட்டிருந்த கார், திறந்தவெளி, அதிவிரைவில் போகும் வாகனங்கள் என இருவரும் பார்ப்பதிலே நேரம் கடந்து, பேச்சுக்கள் இல்லாமல் கழிந்தது.

அதன்பின் மௌனத்திரையை முதலில் விலக்கி, “இதெல்லாம் தியாகு சொன்னது. எனக்கு வேற சில ரீசன்ஸ் இருக்கு. சொல்லட்டுமா?” என்று திலோ கேட்டதும், “ம்ம்ம்” என்றாள்.

“இதான நாம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்றது?”

“ம்ம்”

“எனக்கு நீங்க எப்படித் தெரியணும்?”

ஒருநிமிடம் யோசித்தாள். பின், “நீங்க கேட்கிறது புரியலை” என புருவத்தைச் சுருக்கிக் கேட்டாள்.

“அதாவது, மாறனோட லவ்வர்… ஃபியூச்சர் லைஃப் பார்ட்னர்… இப்படித்தான நீங்க எனக்குத் தெரியணும்?”

மாறன் ‘லவ்வர்’, ‘லைஃப் பார்ட்னர்’ என்ற வார்த்தைகள் தந்த மகிழ்ச்சியில் ‘ஆம்’ என்று சொல்லக் கூட மறந்து, சூழலை விட்டு வெளியே சென்று சுடர் நின்றாள்.

சூழலுக்குள்ளே நின்ற திலோ, “ஆனா எனக்கு அப்படித் தெரியலை” என்றதும், “ஏன்?” என்று கேட்டாள்.

“முதல… தியாகு ஆக்சிடென்ட்-க்கு காரணம் இந்த ஸ்கேம் சம்பந்தப்பட்டவங்க-ன்னு நியூஸ் பார்த்தேன்” என்றவர், அதற்கு மேல் சொல்லாமல், “நான் சொல்ல வர்றது புரியுதா?” என்று கேட்டார்.

நன்றாகவே புரிந்தது. புரிந்தது மட்டுமில்லாமல், கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. அதை இதை செய்து கண்கள் குளமாவதை சுடர் கட்டுப்படுத்தினாள்.

திலோ, “இப்போ தியாகு ஆக்சிடென்ட் கேஸ் முடியற ஸ்டேஜ்-லதான் இருக்கு. ஸோ, தியாகு இல்லாததுக்கு காரணமானவரோட பொண்ணா மட்டும்தான்…. எனக்கு நீங்க தெரியறீங்க.

அதோட அரசியல்வாதி பொண்ணே வேண்டாம்னு சொன்னவரு, ஒரு ஸ்கேம்-ல அரெஸ்ட் ஆகப்போறவரோட பொண்ண நிச்சயம் வேண்டாம்னுதான் சொல்லியிருப்பாரு” என்று உள்ளத்தில் இருப்பதை அப்படியே பேசினார்.

ஏற்கனவே ஒருமாதிரி மனநிலையில் இருந்தவள், அவர் பேச்சு கூனிக் குறுகித் தலை குனிந்து கொண்டாள்.

“யோசிச்சுப் பாருங்க” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவரை, ‘என்ன யோசிக்கணும்?’ என்பது போல் சுடர் நிமிர்ந்து பார்த்தாள்.

“உங்க ரெண்டு பேர் மேரேஜ் நடந்ததுக்கப்புறம், எனக்கு உங்களைப் பார்க்கிறப்பெல்லாம் இதே எண்ணம் வந்தா?… நீங்க, நான், மாறன் வாழற வாழ்க்கை நரகமாயிடாதா?” என்று சுடரைப் பார்த்து கேட்டார்.

காயம் பட்டிருந்த மனதை மேலும் மேலும் காயப்படுத்துவதாக இருந்தது, அந்தக் கேள்வி. ஆனால் எதையும் உடல்மொழி வாயிலாக வெளிப்படுத்தாமல், சுடர் பார்த்துக் கொண்டாள்.

“சரி! என்னை விடுங்க. சப்போஸ் மாறன் அப்படிப் பார்த்தா? அவன் அப்பா-வ கொன்னவரோட பொண்ணா உங்களைப் பார்த்தா?”

அவசர அவசரமாக, “இல்லை… இல்லை… மாறா… அப்படிப் பார்க்க மாட்டான்” என காதலன் மீதிருந்த நம்பிக்கையில் சொன்னாள்.

“அப்புறம் ஏன் அவன்கூட பேச மாட்டிக்கிறீங்க?” என்றொரு கேள்வி கேட்டார்.

நேராக அவரைப் பார்க்காமல், “அது… அது… என… எனக்கு ஒருமா… ஒருமாதிரி ஹெஸி… தய… தயக்கம்” என்று தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தாள்.

“ஏன்?”

பதிலிருந்தது. ஆனால் சொல்லத்தான் முடியவில்லை. எங்கெங்கோ பார்த்துக் கொண்டு, அமைதியின் கைப்பிடித்துக் கொண்டு நின்றாள்.

“நான் சொன்ன அதே காரணம்தான். கரெக்ட்-டா?” என்று கேட்டவர், “வெளி உலகத்தில உங்களை எப்படிப் பார்க்கிறாங்களோ, அப்படித்தான் நீங்களும் உங்களைப் பார்க்கிறீங்க. அதான் இந்தத் தயக்கம்… தடுமாற்றம்” என்றார்.

மீண்டும் திலோவே, “நான் ஒன்னு சொன்னா நம்புவீங்களா?” என்று கேட்டதும், ‘இன்னும் என்ன சொல்லப் போகிறார்?’ என்று சுடர் உள்ளம் பாடுபட்டது.

“உங்க லவ்வ தியாகு வேண்டாம்-னு சொன்னதும், மாறனுக்காக அவரை கன்வின்ஸ் பண்ணனும் நினைச்சேன். பட் அதுக்கு தியாகு உயிரோட இருந்திருக்கணுமே…?? அவரைத்தான் உங்க அப்பா…” என வேதனையில், பாதியிலே பேச்சை நிறுத்தினார்.

மனதிற்குள், ‘ஏன்-ப்பா இப்படியெல்லாம் செஞ்சீங்க?’ என்று கேள்வி கேட்டு, சுடர் கலங்கி நின்றாள்.

கண் இமைகள் படபடத்து கண்ணீரைக் கட்டுப்படுத்திய திலோ, “உங்களுக்கு என் நிலைமை புரியாது. தியாகுவ எனக்கு அவ்வளவு பிடிக்கும். சடன்-னா அவர் இல்லாதது ரொம்ப ரொம்பக் கஷ்டமாயிருக்கு” என்று உணர்ச்சி வசப்பட்டார்.

மேலும், “இப்போ தியாகு இல்லை. அவர் இல்லாத சூழ்நிலையில அவருக்குப் பிடிக்காத விஷயத்தை பண்றது-ல எனக்கு உடன்பாடில்லை” என்று கரை சேர்ந்த காதலுக்காகப் பேசினார்.

கரை சேரத் துடிக்கும் காதலை கையில் வைத்திருப்பவள், ‘அப்போ மாறா இல்லைன்னா எனக்குக் கஷ்டமாயிருக்காதா?’ என்று கேட்கத் துடித்தாலும், கேட்காமல் நின்றாள்.

“ஒரே ஒரு கேள்வி. பதில் சொல்ல முடியுதான்னு பாருங்க. இப்போ மாறனுக்கு இருக்கிற பேரு… அவன் பதவிக்கு இருக்கிற மரியாதை… உங்களை மேரேஜ் பண்ணதுக்கு அப்புறம் இருக்குமா?”

பதில் சொல்ல முடியாமல் மட்டியைக் கடித்துக் கொண்டு நின்றாள். பின், “என்ன சொல்ல வர்றீங்க?”என நேரடியாகக் கேட்டாள்.

“தியாகுவோட பார்வையில மாறனுக்கு நீங்க பெர்ஃபெக்ட் பேர் கிடையாது. இப்போ எனக்கும் அதுதான் தோணுது” என இடைவெளி விட்டவர், “தோணுது-ன்னு என்ன? அதுதான் உண்மை” என்றார்.

சுயம் நயமாகத் தொட்டுப் பார்ப்பது போல் தோன்றியதும், “இதுதான் நீங்க பேசணும்னு நினைச்சதா?” என்று திலோ முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

“ம்ம்ம்! புரிஞ்சிடுச்சா?” என்று கேட்டதற்கு, எதுவும் சொல்லாமல் நின்றாள்.

தொடரும் அவள் அமைதியைப் பார்த்தவர், “உங்களுக்குப் புரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்” என சொல்லிவிட்டு, திலோ அங்கிருந்து கிளம்பினார்.

அவர் கார் சென்றதும், சுடர் தன் காருக்குள் வந்து அமர்ந்து கொண்டாள். ‘ஏன்டா வந்தோம்?’ என்ற எரிச்சல் வந்ததும், ஸ்டியரிங்-ல் தலை சாய்த்தாள்.

தலைசாய்த்த நிலையிலே கைப்பேசியில் மாறன் அனுப்பிய செய்திகளைப் பார்த்தாள். அப்படியே சாலையை வெறித்துப் பார்த்தாள். பின், ‘ஏன் இன்னும் என்னை நினைச்சிகிட்டு இருக்க?’ என முனங்கியவள், கண்களை மூடினாள்.

யாழ்மாறன் உருவம் தெரிந்தது. உடனே இன்றைய நிலைக்கு நேர்மாறாக, ‘ஏன் என்னை நினைக்கலை?’ என்று புலம்பிய நாளை நோக்கி சுடர் மனம் சென்றது.

காதல் ஓவியம் அத்தியாயம் – 13

சுடர் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தாள்.

தோழிகள், படிப்பு என்று இருந்தாலும்… நிறுவனர் சிலை, நூலகம், அடையாள அட்டை என மாறனை நியாபகப்படுத்தும் விடயங்கள் அவளை ஏதேதோ செய்து கொண்டே இருந்தது.

அந்த நேரத்திலெல்லாம், ‘அப்படி உனக்காக என்ன செய்திட்டான், இவ்வளவு பிடிக்கிறதுக்கு?’ என்று மனசாட்சி கேள்வி கேட்கும். உடனே, ‘என்ன செய்யணும், அவனைப் பிடிக்கிறதுக்கு?’ என மனதை ஆட்சி செய்பவனுக்காக மறுகேள்வி கேட்டு நிற்பாள்.

சில நேரத்தில், ‘நான் உன்னை நினைக்கிற மாதிரி, நீயும் என்னை நினைச்சிப் பார்ப்பியா மாறா?’ என்ற கேள்வி வரும்.

அதைத் தொடர்ந்து, ‘சரி வராது-ன்னு சொன்னவன் எப்படி நினைச்சிக்கிட்டு இருப்பான்?’ என்ற பதில் கேள்வியில், சிலபல கண்ணீர் துளிகள் வந்துவிடும்.

ஏதேதோ சொல்லி தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அதுபோன்று தருணங்களைக் கடந்து வருவாள்.

யாழோவியம் அத்தியாயம்- 14 தொடர்கிறது

ஒரு பலத்த ஹார்ன் ஒலியில் கல்லூரி நினைவிலிருந்து மீண்டு வந்திருந்தாள். திலோ பேசிச் சென்றதை நினைத்ததும், ‘இனி இந்தக் காதல் என்னவாகும்?’ என்ற கேள்வி வந்தது.

அது, கவலையைக் கொடுத்தது. தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முடியா கவலையைக் கொடுத்தது. இந்தக் கவலையை… இந்தக் காதல் தரும் வலியை… மாறன் தோள் சாய்ந்து தேற்றிக் கொள்ள, சுடர் மனம் வேண்டியது.

மனதின் வேண்டுதல் எப்பொழுது நிறைவேறுமோ என்ற ஏக்கத்தில், சுடரின் கண்களிருந்து கண்ணீர் வடிந்து, காருக்குள் விழுந்து கொண்டே இருந்தன.

காதல் ஒரு விசித்திர கண்ணீர்.

தான் நினைக்கப்படுகிறோம் என்ற நிம்மதியிலும், தான் நினைவில் இல்லையோ? என்ற நிராசையிலும் வெளிவரும் விசித்திர கண்ணீர் இந்தக் காதல்.

இந்தக்கணத்தில் மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. ‘மாறா-வா?’ என்று கண்களைக் கைபேசியின் திரைக்குத் திருப்பினால், அதில் ‘அம்மா காலிங்’ என்று வந்தது.

உடனே தலை நிமிர்த்தி கண்கள் இரண்டையும் துடைத்துவிட்டு, அழைப்பை ஏற்று, “ம்மா! என்ன?” என்றாள்.

“சுடர், நீ எங்கே இருக்க?”

‘சொல்லாமல் வந்ததிற்கு ஏதாவது சொல்வாங்களோ?’ என்ற பயத்தில், “எதுக்கு-ம்மா கேட்கிறீங்க?” என்று கேட்டாள்.

“உங்க-ப்பா கோபத்தில என்னென்னமோ கத்திக்கிட்டு இருக்காரு. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல” என்று பதற்றத்துடன் பேசினார்.

“எதுக்கு கத்தனும்?”

“ராஜா-க்கு ஏன் இப்படிப் பண்ணீங்கன்னு கேட்டேன்? அதுலருந்து… இப்படித்தான். நீ கொஞ்சம் சீக்கிரம் வர்றீயா?” என்று கேட்கையில், லதா அழ ஆரம்பித்துவிட்டார்.

தன் கவலையெல்லாம் புறந்தள்ளி, “அழாதீங்க-ம்மா! நான் பக்கத்திலதான் இருக்கேன். இப்ப வந்திடுறேன்” என்று வேக வேகமாகப் பேசி, கைப்பேசியை வைத்துவிட்டு காரை கிளம்பினாள்.

சென்னையை நோக்கி சுடரின் கார் வேகமெடுத்தது.

இதே நேரத்தில் ஊடங்களில்…

லிங்கம் மற்றும் ராகினியின் ஆதரவாளர்கள் நடத்துகின்ற போராட்டங்களில் வன்முறை நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில நபர்களைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

உயர் கல்வித்துறை அமைச்சர் ராகினி முதலமைச்சரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். முதல்வரும் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

பொறியியல் முறைகேடு வழக்கில் விசாரணை ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் பேரில், ராகினி மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் லிங்கம், அவர் கட்சித்தலைவரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.

இவைகள்தான் இன்றைய பொழுதின் இந்த நேரத்திற்கான முக்கிய செய்திகளாக ஊடகங்களில் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்தன. மேலும் ராகினி சரணடையும் காட்சிகள் மீண்டும் மீண்டும் காமிக்கப்பட்டு வந்தன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!