காற்றும் பேசுமடி நம் காதலை

 

ட்ரிங்க் என்று விடியற்காலை ஐந்து மணி அலாரம் அடிக்க கண்விழித்தான் ஆர்யவர்தன்.நெருக்கமானவர்களுக்கு ஆர்யா,திரையுலகிற்கும் அவனின் முரட்டு ரசிகர்களுக்கும் ஏ.வி.

பதினாறு வருட கடின உழைப்பால் துணை நடிகனாக திரையுலகில் நுழைந்தவன் இன்று தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகனாக மிளிர்ந்துக் கொண்டிருந்தான்.வருடத்திற்கு வரும் அவனின் ஆறேழு படங்களும் நூறு நாட்களுக்கு மேலேயே ஓடியது.பிரபல தயாரிப்பாளர்கள் அவனை வைத்து சினிமா தயாரிக்க அவன் வீட்டு வாயிலில் தவம் கிடந்தனர்.ஆனால் ஏனோதானோ என்ற கதைகளை அவன் ஒப்புவதே இல்லை.ஆக்ஷன் அழுத்தமான கதை இந்த இரண்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தான்.அதனால் ஏ.வியின் சினிமா என்றால் தங்கள் குடும்பத்தோடு பார்க்கலாம் என்று மக்கள் நம்ப புகழ் ஏணியில் சரசரவென உச்சிக்கு ஏறியிருந்தான் அவன்.

புகழும் செல்வாக்கும் அதிகரிக்க அதே அளவு விரோதிகளும் பெருகி இருந்தனர் அவனுக்கு.அவனும் அவர்கள் தாக்குதல்களை அனாயாசமாக தகர்த்து வந்தான்.அவனின் அதிரடி எதிராளியை நடுநடுங்க செய்யும்.அதனாலேயே அவர்களுக்கு அவன் சிம்மசொப்பனமாக இருந்தான்.

தன் உள்ளங்கையை பார்த்துக் கொண்டே எழுந்தவன் நேராக அவனின் வடிவமைப்பான ஜிம்மிற்கு சென்று வியர்வையில் குளிக்கும் வரை உடற்பயிற்சி செய்தான்.அவன் வயதை யாராலும் கணக்கிட முடியாததற்கு அவனின் உணவு பழக்கமும் விடாத உடற்பயிற்சியுமே காரணம்.ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளித்து படிப்பிடிப்பிற்கு கிளம்பி விட்டான்.

ஏ.வி ப்ரொடெக்ஷன்ஸ் கட்டத்தின் உள்ளே அவனின் புகாட்டி நுழைத்த போது அதுவரை களோபரமாக இருந்த இடம் அமைதியாக மாறியது.அவனின் கடின உழைப்பின் பலன்தான் இந்த படதயாரிப்பு கம்பெனி.நீண்ட நாள் அவனின் கனவான இது மூன்று வருடங்களுக்கு முன் தான் நிறைவேறியிருந்தது.வருடத்தில் வரும் அவனின் படங்களில் இரண்டு இங்கேதான் தயாரிக்கப்பட்டது.

நேராக தன் ஆபிஸ் அறையில் சென்று அவன் அமர்ந்த போது அவனின் உயிர் நண்பனும் அந்த கம்பெனியின் மேனேஜருமான விஷ்வா அவன் முன் ஒரு ஃபைலை கொண்டு வந்து வைத்தான்.அதைக் கண்டு கண்களை விரித்த ஆர்யா,

“டேய் என்னடா இது?வந்தோன்னையே ஃபைலா?! நான்தான் இந்த கருமமே வேண்டாம்னு எல்லாத்தையும் உங்கிட்ட விட்டுட்டேன்ல…”என்று முகத்தில் கடுப்பும் கண்களில் சிரிப்புமாக கேட்டான்.

நண்பனை பற்றி நன்கு அறிவதானாதலால் அதற்கு சாவகாசமாகவே,

“எல்லாத்தையும் நான்தான் பாக்குறேன் ஆனா இது மட்டும் உன் பர்சனல் விஷயம் அதான் உங்கிட்டியே விட்டுட்டேன்…நீயே பாத்து பதமா இதமா செலெக்ட் பண்ணு!”என்று விஷமமாக புன்னகைக்க

“வாட் பர்சனலா?…டேய் விளையாட்றியா?! எனக்கு ஏதுடா பர்சனல்”என்ற அவன் கோப குரலோடு சொல்ல முடியாத விரக்தியும் சேர்ந்தே இருந்தது.

அவன் சரித்திரம் முழுவதும் அறிந்தவனால் மேலும் அவனை சோதிக்காமல்,

“மிஸ்டர் ஆர்யவர்தன்!இது ஸ்ரேயாவை பாத்துக்க வரும் மெயிட் வேலைக்கு வந்த அப்ளிகேஷன்ஸ்…இதுல நிறைய வடிகட்டி அஞ்சு மட்டும் வச்சிருக்கேன்.இதுல உங்களுக்கு சரிவரும்னு நினைக்கிறதை செலெக்ட் பண்ணுங்க”என்று நக்கலாக கூற தன் தாழ்மையின்மையை லட்சமாவது முறையாக நொந்த ஆர்யா,

“சாரிடா எனக்கு தான் பொறுமை கம்மின்னு உனக்கு தெரியுமே…இதை முதல்லையே சொல்ல வேண்டியது தானே”என்றான் உள்ளிறங்கிய குரலில்.

“நீ எங்கடா ஆரம்பிச்சதை முடிக்க விட்ட…எப்பயுமே எதிலேயும் அவசரம் தான் உனக்கு…இதை மாத்திக்க இதுனால உனக்கு என்னிக்கும் தொந்தரவு தான் நான் சொல்லிட்டே தான் இருக்கேன்…ஆனா நீ விட்றதா இல்ல! போகட்டும் விடு! சீக்கிரம் இவங்கள்ல ஒருத்தரை செலெக்ட் பண்ணு”என்று அறிவுரையோடு சமாதானமும் கூறினான்.

“ஒன்ஸ் அகைன் சாரிடா!எவ்ளோ கண்ட்ரோல்ல இருந்தாலும் சில நேரம் என்னையும் அறியாம ஏதாவது பேச்சுலையும் செயல்லையும் ஏடாகூடம் பண்ணிட்றேன்”

“விடுடா…உன்னை எனக்கு தெரியாதா லீவ் இட்…முதல்ல ஃபைல் பாரு… ஷுட்டிங்கு நேரமாச்சு”என்று அவன் தோளை ஆதரவாக தட்டினான்.அவனும் அறிவான் வேறு யாரேனும் ஆர்யாவின் நிலையில் இருந்தால் இதைவிட மோசமாக மாறியிருப்பர் என்று.

தன் முன் இருந்த விண்ணப்பங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டவன் கடைசியாக இருந்த ஃபைலுக்கு வந்த போது அதிலிருந்த பூமுகத்திலிருந்து அவனால் தன் கண்களை எடுக்கவே முடியவில்லை.

வெறும் வண்ணப் பூச்சு முகங்களையே தலைவிதியே என்று பார்த்து வந்தவனுக்கு அதில் துளிக் கூட இல்லாமல் குழந்தைத்தனமான அந்த முகம் நொடியில் அவனை கவர்ந்து விட்டது என்பதில் சந்தேகமேயில்லை.அனுசுதா என்ற பெயரை லேசாக தடவியவன் கடினப்பட்டு அந்த படத்திலிருந்து தன் கண்களை பிரித்தெடுத்து கீழே அவளைப் பற்றிய விவரங்களை பார்வையிட அந்த வேலைக்கு அவளுக்கு சரியான தகுதியும் இருக்க அந்த பக்கத்தை நண்பனின் அருகே நகர்த்தினான்.அதைக் கண்டு ஆச்சரியமான விஷ்வா ‘நீ இந்த பொண்ணைத்தான் செலெக்ட் பண்ணுவேன்னு எனக்கு முன்னாடியே தெரியுமே’என்று மனதிற்குள் சிரித்தான் நண்பனை நன்கறிந்த அந்த நல்லவன்.அதை மறைத்து வெளியே,

“ஓகே டா இவங்களுக்கு அபாயிண்மெண்ட் ஆர்டர் அனுப்பிட்றேன்..நீ கெளம்பு இப்பவே லேட்டாயிடுச்சு“என்று அவனை அனுப்பி வைத்தான்.

அதிலிருந்து மூன்று நாட்களுக்கு பின்

மண்மணக்கும் மதுரையிலிருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது பொன்வயல் கிராமம்.புழுதி பறக்கும் தெருவில் மச்சுவீடுகளை கடந்து கடைசியில் இருந்த சின்னஞ்சிறிய ஓட்டு வீட்டில் தன் முன் வெண்ணெய் திருடி மாட்டிக் கொண்ட கண்ணனைப் போல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு பார்க்கும் தன் மகளை கோபமாக முறைத்தார் மீனாட்சி.

“பண்ற வேலையெல்லாம் பண்ணிப்போட்டு ஒண்ணுமே தெரியாத கொளந்தபுள்ள மாதிரியா பாக்குற நீ என்னதான் திருகு தாளம் பண்ணாலும் இந்த விஷயத்துக்கு மட்டும் நா ஒத்துக்கவே மாட்டேன்…சொல்லிட்டேன் அம்புட்டுதேன்”என்று ஆவேசத்தோடு பேசியவர் விருட்டென உள்ளே போகத் தொடங்க,

“அம்மா அப்படி சொல்லதம்மா இது மாதிரி  வேலை கெடைக்காதும்மா!நல்ல சம்பளம் கிடைச்சா அப்பாவுக்கு வைத்தியம் பாக்குலாமுல்ல…ஒத்துக்கம்மா

இவ்வளவு நேரம் வேண்டாமென வாதாடியவரால் இது ஒன்றிற்கு மட்டும் ஏதும் பதில் கூற முடியவில்லை.அவர்கள் இருவரே தன் வாழ்க்கை என்று தங்களுக்கு சொந்தமான சொற்ப நிலத்தில் ராப்பகலாக உழைத்த மீனாட்சியின் கணவர் பொன்னய்யா பக்கவாதம் வந்து இரண்டு ஆண்டுகளாக படுத்தபடுக்கையாக ஆகியிருந்தார்.மீனாட்சியின் காது கழுத்தில் இருந்த சொற்ப நகைகளை விற்றது தண்ணீராக செலவழிந்த பின்னும் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.இதுவரை வைத்தியம் பார்த்த டவுன் டாக்டர் பெரியதான சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் காட்டுமாறு கூறி ஒரு மாதம் ஆகியிருந்தது.கையில் அவ்வளவு பணமில்லாததால் இருந்த மாத்திரையையே அவருக்கு கொடுத்து வந்தனர்.இந்த நிலையில் மகளுக்கு கிடைத்த வேலை அவருக்கு சந்தோஷத்தையே அளித்திருக்க வேண்டும்.ஆனால் அவள் வேலைக்கு போக போகும் இடமோ அவர் கனவிலும் விரும்பாத ஒன்றாக இருந்தது அவருக்கு வேதனையளித்தது.

புள்ள நீ சொல்றதும் நெசந்தேன் ஆனா அந்த மாதிரி எடத்துக்கு வயசு வந்த புள்ளய அனுப்ப எந்த தாயும் ஒத்துக்க மாட்டா…நீ இந்த ஆசைய வுட்டுரு!”

“அம்மா அவிங்களும் மனுசங்க தான்…புலி சிங்கமில்ல என்னைய கடிச்சு முளுங்க”

“நீ என்னத்த சொன்னாலும் சினிமாகாரங்க எடத்துக்கு உன்னைய அனுப்ப முடியாது”

“அம்மா தயவு செஞ்சு ஒத்துக்க… கொஞ்ச நாளு அப்பா வைத்தியத்துக்கு வேணுங்கற அளவு சம்பாரிச்சதும் நா திரும்பி வந்துடுறேன்”

“நீ எதை சொன்னாலும் என் மனசு ஒப்பல ராசாத்தி! கறிவேப்பிலை போல நீ ஒரே கொளந்த எங்களுக்கு உன்னைய தெரியாத சீமைக்கு அனுப்ப எப்படிடி எனக்கு மனசு வரும் சொல்லு…அங்கன உனக்கு ஏதாச்சும் ஆகிட்டா எங்க கதி என்ன?”என்று அவள் கன்னத்தை தாங்கியவாறு அவர் கண்கலங்க அவர் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டவள்,

“அம்மா நீ கவலையே படாத நான் உன் பொண்ணுமா என் மானத்துக்கு தீங்கு வந்தா அவங்கள அழிப்பேன்… இல்ல என்னையே அழிச்சுக்குவேன்… என்னிக்கும் வழி தவறி போக மாட்டேன்…உன் பொண்ணை நீயே நம்ப மாட்டியாம்மா?”என்று கெஞ்ச இனி மகளோடு வாதம் செய்வதில் பலனில்லை என்று கண்டவர்,

“சரி நா ஒத்துகிறேன்…நீ போயிட்டு வா…ஆனா உனக்காகவே ரெண்டு உசிரு இங்க இருக்குங்கறத என்னிக்கும் மறக்காத”என்று அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

தாயின் சம்மதித்ததால் உற்சாகத்தில் வானில் சிறகில்லாமல் பறந்தாள் அனுசுதா…ஆம் சினிமா உலகின் முடிசூடா மன்னனான ஆர்யவர்தனின் மகளை பராமரிக்கும் வேலையில் சேரப் போகும் வெள்ளை மனம் கொண்ட அந்த கிராமத்து பைங்கிளி.ஆனால் அந்த வேலை அவள் வாழ்வையே மாற்ற போவதை அவள் அப்போது அறியவில்லை.