TholilSaayaVaa20B

கோவிலை அவர்கள் அடைந்தநேரம் இன்னும் கூட்டம் ஏகத்திற்கும் அதிகரித்திருந்தது.

மணவறையில் அமர்ந்திருந்த மாயா பைரவிடம், “கொஞ்ச பேருக்கு மட்டும்தான் இன்வைட்ன்னு சொல்லிட்டு ஊரையே திரட்டி வந்துச்சுருக்க? எங்க ரிலேட்டிவ்ஸ தேடினா கூட கண்டுபிடிக்க முடியாது போல இருக்கு” விழிகள் விரிய கேட்க,

“பார்த்து பார்த்து கூப்பிட்டதே இவ்ளோ” சிரித்தவன், “ரிலாக்ஸ் டா நான் கூடவே இருக்கேன்ல. ஜஸ்ட் என்ஜாய்” என்றபடி அவள் கைகளை பற்ற, படபடப்பு குறைவதை உணர்ந்தவள்,

“தேங்க்ஸ்!” என்று மட்டும் சொல்லிவிட்டு தலை தாழ்த்த,

“ஹே வெட்க படுறியா?” பைரவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!

“ஷ்ஷ்! அதெல்லாம் இல்ல. வெக்கம் வந்தமாதிரி இப்படி இருக்கணும்னு நேத்து வாணிமா சொல்லிக்கொடுத்தாங்க” மெல்லியகுரலில் சொல்ல.

“அதான பாத்தேன் என்னடா அழாக்குக்கு வெட்கம் வந்துருச்சோன்னு ஒருநிமிஷம் ஷாக் ஆயிட்டேன்” சிரித்தவன்,

“நீ பிரீயா இருடா, மெனக்கெட்டு இதெல்லாம் செய்யவேண்டாம். பீ பிரீ” அன்பாய் புன்னகைக்க,

“மந்திரம் சொல்லுங்க, அப்புறம் ஆற அமர பேசிண்டே இருக்கலாம்” சாஸ்திரிகள் பரிகசிக்க, மணமக்கள் அசடுவழிந்தபடி அமைதியாக, அருகில் இருந்தவர்கள் சிரிக்க துவங்கினர்.

சுற்றமும் நட்பும் வாழ்ந்த, அங்கே இனிதாய் அரங்கேறியது பைரவ், மாயா திருமணம்! ஆயுள் முழுவதும் நண்பர்களாய் இருக்க நினைத்தவர்களை, இயற்கையே தன்வழியில் காய்நகர்த்தி வாழ்க்கையில் இணைத்து வைத்தது.

நாள் முழுவதும் வெவ்வேறு திருமண சம்பிதாயங்கள் நடக்க மாலை ஓய்வாய் தன் அறையில் உட்கார்ந்த மாயா அப்படியே சில நிமிடங்கள் உறங்கிவிட்டாள்.

“இப்போவே தூங்கிக்கொ அப்புறம் தூங்கமுடியாது” பரிகசித்தபடி வந்த பெண்கள் பட்டாளம் அவள் உறக்கத்தை கலைக்க,

‘அடேய் எப்போடா தூங்கறது? இதுல இதுங்க தொல்லவேற! எப்போ பாத்தாலும் கும்பலாதான் சுத்துங்களா? ஒருத்தி கொஞ்சநேரம் கண்ணசர கூடாதே!’ பாதி தூக்கத்தில் முன்னும்பின்னும் ஆடியபடி இருந்தாள் மாயா.

“போயி குளிச்சுட்டுவா லேட் ஆகுது” கீதா விரட்ட,

“அதான் காலைலயே குளிச்சேனே!” தர்க்கம் செய்ய, கீதாவின் கொலைவெறி முறைப்பில் முணுமுணுத்தபடி குளிக்க சென்றாள்.

***

பைரவின் அறையில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்ய பட்டிருந்தது.

மெல்ல அறைக்குள் நுழைந்தவள் பைரவை தேட, அவனோ யோசனையாய், பால்கனியில் நின்றிருந்தான்.

“சார் என்ன தீவிரமான சிந்தனை?” புன்னகைத்தபடி பைரவிடம் சென்றாள் மாயா.

“ஒன்னும் இல்ல டா” என்றபடி திரும்பியவன், அழகாய் அலங்காரத்துடன் நின்றிருந்தவளை சிலநொடிகள் பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன பாஸ்?” அவள் கேட்க,

அவன் மௌனமாக ‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்து அறைக்குள் சென்றான்.

தோழியாய் பார்த்தவள் மனைவியாய் பார்க்கவேண்டிய வேண்டிய சூழல், சொல்ல தெரியாத பதட்டம் அவனை ஆட்டி படைக்க துவங்கியது.

அவள் மனதிலோ எந்த குழப்பமும் இல்லை. “இன்னிக்கி செம்ம சாப்பாடுல! சாப்பிடத்தான் முடியல…” கல்யாண விருந்தை பற்றி சிலாகித்து கொண்டிருந்த மாயாவை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன்,

“மாயா…” அவனுக்கே கேட்டிருக்குமோ கேட்டிருக்காதோ என்ற குரலில் அழைக்க,

“ம்ம்?” புருவங்களை உயர்த்தினாள்.

“சந்தோஷமா இருக்கியா?” அவன் கண்களில் ஆர்வம், ஆதங்கம்.

“கண்டிப்பா! இருக்காதா என்ன? என் பெஸ்ட் பெஸ்ட் பிரென்ட் இப்போ என் ஹாஸ்பேண்ட்! ஜாலியா இருக்குடா. யாரை கல்யாணம் பண்ணிப்பேனோ எப்படி நடந்துக்கணுமோ, ஒன்னுமே புரியாம பல நாள் தூக்கமே வராம….

நீ தான் என் புருஷன்னு எல்லாரும் சொன்ன அன்னிக்கி ராத்திரிலேந்து நிம்மதியா தூங்கறேன் தெரியுமா?” ஆசையாய் சொன்னவள் கண்களில் சந்தோஷம், கனவு, நிம்மதி.”

“ஆமா நீ சந்தோஷமா இருக்கியா பைரவ்?” அவனையே ஆர்வமாக பார்த்திருந்தாள்.

எதுவுமே சொல்லாமல் அவளை பார்த்தவன் புன்னகையுடன் கைகளை விரித்து கண்களால் அவளை அழைக்க,
“என்ன?” அவள் விழிக்க,

“ஹக் மீ டா” இப்பொழுதும் அவன் குரல் எழும்பவில்லை.

“ஹை!” குழந்தை போல ஓடி சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.

“என் ஹார்ட் பீட் கேட்குதா?”

அவன் இதயம் அத்தனை வேகமாக துடித்துக்கொண்டிருப்பதை கேட்டவள், “ம்ம் ஏன்…?”

“கொஞ்ச நேரம் அமைதியா இப்படியே இருடா” அவளை அணைத்துக்கொண்டான்.

சில நொடிகளில் அவன் மனம் நிம்மதி அடைவதை அவன் இதய துடிப்பே உணர்த்தியது.

மெல்ல தன்னவளை அணைத்திருந்தவன் கைகள் அவள் இடையை நெருங்க, தாறுமாறாக துடிப்பது இப்பொழுது மாயாவின் இதயத்தின் முறையானது.

“ டேய் என்னடா?” நெளிந்தவளின் அசைவை உணர்ந்தவன், கிளுக்கென்று சிரிக்க,

அவனை விலகியவள், “வேணும்னே தான?” அவனை முறைக்க,

பதில் சொல்லாமல் அவன் உரக்க சிரிக்க,
அவளோ “பயந்தே போயிட்டேன்” மூச்சுவாங்க நின்றாள்.

“ஏன்? நான் இப்போ என்ன பண்ணாலும் நீ என்னை திட்ட முடியாதே இப்போ நீ என் வொய்ப்!“ மீண்டும் அவளை நெருங்கினான்.

“அது…க்காக!” மிரண்டவள் அறையை சுற்றி ஓட, அவளை நொடியில் பிடித்தவன் மீண்டும் அணைத்துக்கொண்டு , அவள் காதருகில், “பயப்படாதே, தானா நடக்கும் அப்போ நீயும் ஓடமாட்ட நானும் உன்னை பாஞ்சு பிடிச்சு இழுக்க வேண்டாம்” வெகு உறுதியாக சொன்னவன் , அவள் கன்னத்தில் முத்தமிட்டு,

“அதுக்குன்னு தள்ளி இருக்காத, கொஞ்சம் முயற்சியும் எடு பொண்டாட்டி” புன்னகைக்க, பதட்டம் தெளிந்து அமைதியானாள்.

அவன் சட்டையை பிடித்து தன் உயரத்திற்கு இழுத்து அவன் கன்னத்தில் முத்தம் தர, திகைத்தவன் அவளை வியந்து பார்க்க,“டன் ! புருஷா” என்று சிரிக்க,

“இப்படியே போச்சு, ஒரு மாசத்துக்குள்ள என் பிரம்மச்சர்யம் காணாம போயிடுமோ?” அப்பாவியாக விழிக்க,

மாயாவோ, அவ்ளோ நாள் ஆகும்னு நம்பிக்கை இருக்கா? ஒரு வரம் தாங்காது போல இருக்கே பாஸ்” சிரிக்க,

“அடிப்பாவி! ம்ம்ஹும் நீ சரி இல்ல. நான் என்னை உங்கிட்டேந்து எப்படி காப்பாத்திக்க போறேன்?”

“வேணாம்னா போ “ போலியாக கோவித்தவள் திரும்பி கொள்ள,

அவளை பின்னாலிருந்து அணைத்து,
“வேணும் வேணும்” அவளை கிச்சுகிச்சு மூட்டி மீண்டும் அணைத்துக் கொண்டான்.

“எனக்காக மெனக்கெடாதே. இதெல்லாம் தானா நடக்கும் ஒரு வாரமில்ல நாளைக்கே கூட நடக்கலாம்” அவள் கண்ணோடு கண் பார்த்து சொன்னான்.

“பயமா இருக்கு பைரவ்” அவள் முகத்தில் பயம் வெளிப்பட,

“என்ன பயம்? இது பத்தியா?” அவன் குரலில் ஆதங்கம்.

“இல்ல, நான் உனக்கு நல்ல பொண்டாட்டியா இருப்பேனா?” அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

அவள் தலையை மெல்ல வருடியவன், “நீ மட்டும்தான் இருக்க முடியும்” அவள் உச்சியில் முத்தம் இட்டவன்,
“ஆழாக்கு நீ குள்ளமா இருக்கறது வசதியா இருக்கு” அவன் குரலில் குறும்பு.

தலையை உயர்த்தி, கேள்வியாய் அவன் முகம் பார்க்க, “உன்னை அப்படியே எனக்குள்ள பொத்தி வச்சுக்க முடியுது. யு ஆர் இன்சைட் மீ ! (நீ எனக்குள்ள இருக்க) இனிமே நீ அவ்ளோதான், முயல்குட்டி மாதிரி பொத்தி வச்சுக்க போறேன்” புன்னகைத்தான்.

“வச்சுக்கோ வச்சுக்கோ” சிரித்தவள் அவன் மார்பில் மீண்டும் சாய்த்து கண்மூடினாள் .

மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தவள் தன்னைமறந்து உறங்க,
தன் உயிர் தன்னிடம் திரும்பியதை போல் உணர்ந்தவன் அவளை மென்மையாக அணைத்துக்கொண்டு கண்ணயர்ந்தான்.

****