காலங்களில் அவள் வசந்தம் – 21(1)

21

காரை அரைக் கிலோமீட்டர் தள்ளி பார்க் செய்துவிட்டு அந்த செல்பேசி கடையை நோக்கி நடந்தனர் ஷானும் ப்ரீத்தியும். அந்த கடையின் ஓனர், பெட்டிங் ஏஜென்ட் என்பதை முதலிலேயே மகேஷ் துப்பு துலக்கி இருந்தான்.

இருவரும் சாதாரண உடையில்! ஷான், விரைப்பான வெள்ளை காட்டன் சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டில் இருந்தான். கையில் ரோலெக்ஸ் இல்லை. கருப்பு பட்டையிட்ட ஃபாஸ்ட்ராக். அது அவனுக்கு எடுப்பாகவும் கண்ணியமாகவும் இருந்தது. கண்களுக்கு எப்போதும் போல ரிம்லெஸ் கண்ணாடி. காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ.

ப்ரீத்தி மென்மையான ஷிபான் புடவையில் இருந்தாள். எப்போதும் டாப் நாட் போட்டுப் பழக்கப்பட்ட முடியை சிரமப்பட்டு பின்னியிருந்தாள். அது நடுமுதுகை தாண்டி அவளை தழுவிக் கொண்டிருந்தது. தலையில் ஜாதிப் பூ. கண்களில் லேசான மை. உதட்டுக்கு எப்போதும் போல மெலிதான லிப்கிளாஸ். இடது கையில் டைட்டன் ராகா. வலது கையில் மெல்லிய வளையல்கள் இரண்டு. அவை ஒன்றோடு ஒன்று உரசி அவளது இருப்பை தெரிவித்துக் கொண்டிருந்தது. பழக்கமில்லாத புடவை வழுக்கியபடியே இருக்க, அதை சரி செய்வதிலேயே அவளது கவனமனைத்தும் இருந்தது.

இருவரையும் பார்க்க, இளம் தம்பதியர் போன்ற தோற்றம். அதற்கு தகுந்தார் போல, அவ்வப்போது அவளை தீண்டிய ஷானின் பார்வைகள் வேறு!

ஆனால் இருவர் காதிலும் ஏர்போட்ஸ், அவர்களோடு தொடர்பு ஏற்படுத்தப்பட்ட ஏர்டேக்ஸ். ஏர்டேக், அவர்களுடைய ஜிபிஎஸ் சிக்னல்களை தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற செய்தி தொடர்பவர்களுக்கு வந்து கொண்டே இருக்கும். எதற்கும் இருக்கட்டும் என்று அவர்களது பாதுகாப்பிற்காக கொண்டு வந்தது.

ஷானை பொறுத்தவரை அதற்கெல்லாம் வேலை இல்லை. அவனது இடுப்பிலிருந்த சிறிய வகை பிஸ்டலை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவன் பிஸ்டல் வைத்திருப்பது, ப்ரீத்திக்கு தெரியாது. தெரிந்தால் விட மாட்டாள். அதனால் தெரிய விட மாட்டான். தன்னுடைய பாதுகாப்பு மட்டும் இப்போது கேள்விக்குரியதாக இல்லை… தன்னோடு ப்ரீத்தியுடையதும் தான். எக்காரணம் கொண்டும் அவளை அடகு வைக்க முடியாது. அது அவளே எதிர்த்தாலும் கூட, அப்படித்தான்!

எதுவாக இருந்தாலும் பார்த்து விடலாம் என்ற தைரியம் எப்போதும் அவனுக்கு உண்டு. ஆனால் இப்போது இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என்ற வெறி அவனுடைய மனதில் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

முந்தைய நாளிரவு அவனுக்குக் கிடைத்த செய்திகளின்படி இந்திய அளவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளியாக ரவி செயல்படுகிறான், அதற்காகத்தான் வாரியத்தை வளைத்திருக்கிறான் என்று உறுதி செய்தபோது அவனது ரத்தம் கொதித்தது.

எப்படிப்பட்ட மரியாதையான குடும்பத்தில் இருந்து கொண்டு அவன் இப்படி எல்லாம் செய்கிறான் என்பதை நினைக்கும் போது உள்ளுக்குள் பழியுணர்ச்சி பொங்கியது. அவர்களது குடும்பத்துக்கும் கிரிக்கெட் வாரியத்துக்குமான உறவு எப்படிபட்டது என்பதை அறியாதவனா ரவி? கிரிக்கெட்டின் மீதான அவர்களது காதலை தெரிந்து கொள்ளாதவனா அவன்?

எல்லாம் தெரியும்!

தெரிந்ததால் தான் அவர்களது குடும்பத்தைக் கேடயமாகக் கொடு விளையாடி இருக்கிறான்.

இவனது இந்த ஊழலின் ஆணி வேர் வரை பிடுங்கி எறிய வேண்டும் என்ற ஆத்திரம், ரௌத்திரமாக மாறியது. அதற்கு மேலோட்டமாக களையெடுத்தால் போதாது. முற்றிலுமாக விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் ஆதாரங்களை திரட்ட வேண்டும் என்று தீர்மானித்தான் அவன்.

அதற்கு தானே களத்தில் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு, அருகிலிருந்த பிரீத்தியிடம்,

“என்ன பண்ணலாம்ன்னு நினைக்கற ப்ரீத்தி?” என்று கேட்டான்.

“நாம நினைக்கறதை விட விஷயம் பெருசா இருக்கும் போல ஷான்…” என்று யோசனையில் அவளது முகம் சுருங்கியது.

“எவ்வளவு பெருசா இருந்தாலும், முழுசா அவனை வாஷ் அவுட் பண்ணனும்…” பற்களை கடித்துக் கொண்டு அவன் கூற, அவனது இடக்கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

“உணர்ச்சிவசப் பட்டு காரியத்தை கெடுக்காத ஷான். நிதானமா ப்ளான் பண்ணி முடிக்கணும். கொஞ்சம் பிசிறு தட்டினாலும் ரவி உஷாராகிடுவான்…”

“எஸ். புரியுது…”

“எடுத்ததுக்கு எல்லாம் பிஸ்டலை தூக்காத. கல்லெடுத்தவனும் கல்லடி வாங்குவான்னு சொல்வாங்க. அது முட்டாள்தனம்…”

சற்று கோபமாக கூறியவளை ஆழ்ந்து பார்த்தான்.

“எக்ஸ்ட்ரீம் சிச்சுவேஷன் தவிர கண்டிப்பா யூஸ் பண்ண மாட்டேன்…” என்றவன், அவளது பற்றியிருந்த அவளது கையை இன்னும் அழுத்தமாக பற்றிக் கொண்டான்.

“நீ சினிமா ஹீரோ கிடையாது ஷான். கோபத்துல பிஸ்டலை தூக்கற… யாராவது செத்துப் போனா என்னாகறது? அது பாவமில்லையா? அந்த பாவம் உனக்கு தேவையா? அதே பிஸ்டல் உன்னை நோக்கித் திரும்பாதுன்னு என்ன நிச்சயம்? அதை எங்களால தாங்க முடியுமா?” சரமாரியாக கேள்வி கேட்டவளை இன்னும் ஆழமாக பார்த்தான்.

“எங்களாலன்னா?”

அவன் கேட்டபோது தான் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று யோசித்தாள் ப்ரீத்தி. என்ன சொல்வது என்று புரியவில்லை.

“எங்களாலன்னா… ம்ம்ம்… அப்பா, அக்கா, நான் இன்னும் எல்லா வொர்க்கர்ஸும் தான்…” என்று கூறி முடிக்க, மெல்லிய புன்னகையில் அவனது இதழ்கள் மடிந்தது.

“நான் யாரையும் கேர் பண்ண மாட்டேங்கறது உனக்கே நல்லா தெரியும்.” நிதானமாக கூறியவனை கூர்ந்து பார்ப்பது இவளது முறையானது. அவனது கைகளை விடுத்து எழுந்து நின்று கொண்டாள். உள்ளுக்குள் சிறு நடுக்கம்.

அது ஏனென்று தெரியவில்லை. அவனது போக்கு சரியில்லை என்பதை நினைத்தா? அல்லது யாருக்காவும் பார்க்க மாட்டேன் என்று சொன்னதை நினைத்தா?

அவள் எழவும், அவனும் எழுந்து கொண்டான்.

“யாரையுமேவா?” அவனது கண்களை பார்த்து ப்ரீத்தி கேட்க, அவனும் அவளது கண்களை கூர்மையாக பார்த்தபடி,

“எஸ்.” என்றான்.

“அப்பா?” அவளது வார்த்தைகளில் கூர்மை கூடியது.

“எஸ்.” அழுத்தமாக கூறினான்.

“அக்கா?” இன்னும் கூர்மையாக கேட்டாள்.

“எஸ்.” மேலும் அழுத்தமாகக் கூறினான்.

அவனது கண்களை பார்த்து கேட்டு கொண்டிருந்தவளால் அதற்கும் மேல் பார்க்க முடியவில்லை. பார்வை கீழிறங்க பார்த்தது. கைகளில் நடுக்கம் வெளிப்படையாக தெரிய,

“நா… நா… என்னை?” என்று கேட்டாள். வார்த்தைகள் பிசிறடித்தன.

“கேர் பண்ணனுமா?” என்று கேட்டவனின் கண்களில் விஷமப் புன்னகை. ஒற்றை புருவத்தை மட்டும் ஏற்றியபடி கேட்டவனை பார்க்க முடியாமல் தலைகுனிந்து கொண்டாள்.

“லவ் தான் இல்லைன்னுட்ட. ஒரு ஃப்ரெண்டா கூட கேட்கக் கூடாதா?” என்றவளின் குரலும் கீழிறங்கியது.

“ப்ரெண்டா கேட்டால்லாம் சொல்ல முடியாது. அப்புறம் லவ் இல்லைன்னு சொல்லல. கொஞ்சம் டைம் மட்டும் தான் கேட்டேன், அதுவும் உனக்கு ஸ்பார்க் வர்ற வரைக்கும் மட்டும் தான்…” என்றவனின் குரலும் அவளுக்கு சமமாக கீழிறங்க, இது சரியில்லை என்று அவளது மனம் சொன்னது.

“போதும். நான் கிளம்பறேன். என்னை ஹாஸ்டலுக்கு கொண்டு போய் விடறியா? இல்லைன்னா கேப் புக் பண்ணவா?” என்று கேட்ட ப்ரீத்தியை புன்னகையோடு பார்த்தவன்,

“ஒரு டீ போடேன்…” என்று கேட்க, மனதுக்குள் கன்னாபின்னாவென திட்டியபடி கிச்சனை நோக்கிப் போனாள். பேசிப் பேசி நா வறண்டிருந்தது.

எதுவும் பேசாமல் அடுப்பைப் பற்ற வைத்தாள். தொண்டைக்குள் சூடாக எதையாவது சரிக்க வேண்டும் என்று தோன்றியது. இரவு நேர வேலைகளின் இடையில் ப்ளாக் டீ அருந்துவது ஷானின் வழக்கமும் கூட!

பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்து நீரை டம்ளரில் அளந்து ஊற்றினாள். ஹாரிங்க்டன் கெஸ்ட் ஹவுசில் டிப்டீ, சர்க்கரை போன்றவை மட்டுமே இருக்கும்.

“கொஞ்சம் சீண்டினேன் குட்டிப்பாப்பா…”

மெளனமாக இருந்தாள். ஏன் சீண்டினாய் என்று கூட கேட்கவில்லை.

“இனிமே யாரையும் டென்ஷன் பண்ண மாட்டேன் ப்ரீத்…”

மீண்டும் அதே மௌனம் தான் அவளிடம்!

கொதித்த நீரை இரண்டு கப்களில் ஊற்றி டிப் டீயை அதில் டிப் செய்தவள், சர்க்கரை கலந்தாள்.

அவனிடமிருந்து தன்னை பிரித்தவள், அவன் கையில் ஒரு டீக் கப்பைக் கொடுத்து, தானுமொன்று எடுத்துக் கொண்டாள்.

“கேர் பண்ணலைன்னு சும்மா சொன்னேன். எல்லாரையும் கேர் பண்றேன் தான். ஓகே வா?”

சரணடைந்தான் அவளிடம்!

சிறு புன்னகை அவளது இதழில்!

டீயை குடித்தவன், தொண்டையை செறுமிக் கொண்டான்.

“கிரிக்கெட்ல பெட்டிங் புதுசு கிடையாது. காலகாலமா இருந்துட்டு வர்றதுதான். ஆனா டீம் மேனேஜ்மென்ட்டே பெட்டிங்ல ஈடுபடறது கிடையாது. எனக்குத் தெரிஞ்சு அட்லீஸ்ட் நாம பண்ணது கிடையாது.” என்றவன், முகம் சுருங்கினான்.

“ம்ம்ம்”

“நம்ம குடும்பத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் இருக்க பந்தம் எவ்வளவு வருஷம்ன்னு நினைக்கற ப்ரீத்தி?” என்ற அவனது கேள்வியை எதிர்பாராதவள்,

“தெரியலையே…” என்றாள்.

“கிட்டத்தட்ட நூறு வருஷத்துக்கும் மேல…” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“வாவ்…”

“ம்ம்ம்… எங்க தாத்தா… தாத்தாவுக்கு தாத்தான்னு போகும்… மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் ஆரம்பிச்சதுல இருந்து நாம அதுல இருக்கோம். அதுக்கும் முன்னாடியே கொள்ளு தாத்தா எள்ளு தாத்தால்லாம் கிரிக்கெட்டை ஊக்குவிக்கறதுல ரொம்ப ஆர்வமா இருந்திருக்காங்க…” என்றவன், முழு வரலாறையும் சுருக்கமாக கூறினான்.

அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு தகவல்களாக தெரியலாம். ஆனால் அவை ஒவ்வொன்றும் அவனது குடும்பத்தின் பெருமைகள். அது அவனையுமறியாமல் அவனிடத்தில் வெளிப்பட்டது.

“சான்ஸே இல்ல ஷான். நீ இவ்வளவு பெரிய ஆளா?” என்றவளின் ஆச்சரியம் அவனை சிரிக்க வைத்தது.

“இவ்வளவு நாள் தெரியாதா?” புன்னகையோடு கேட்டான்.

“ஏதோ பெரிய ஆளுங்க, பெரிய குடும்பம்ன்னு நினைச்சுருக்கேன்… ஆனா இப்ப நீ சொல்றதை வெச்சு பார்த்தா… அம்மாடியோவ்… முடியல…” என்றவள், “இப்படியொரு குடும்பத்துல பிறந்துட்டு உனக்கு ஏன் கொஞ்சம் கூட அறிவில்லாம போச்சு? ஒருத்தன் ஏதாவது சொன்னா, அப்படியே நம்பிட்டு எல்லாத்தையும் விட்டுட்டு போவியா? குடும்பம் வேண்டாம்… அது வேண்டாம்… இது வேண்டாம்ன்னு சொல்வியா? ரவி இந்தளவு விளையாடி இருக்கான்னா அதுக்கு காரணம் நீதான். உன்னோட பொறுப்பில்லாத்தனம் தான்…”

அவளது ஆச்சரியமனைத்தும் அவன் மேல் கோபமாக திரும்பியது.

“ஏய் என்னடி என் மேலேயே பாயற?”

“பின்ன? அறிவிருக்கவன் பண்ற காரியமாடா நீ பண்ணி வெச்சுருக்க? ஊசி இடம் குடுக்காம நூல் எப்படி நுழையும்?” என்று பொங்கியவள், “நானெல்லாம் படிக்கும் போது பத்து பில்லோ கவர் அடிச்சா தான் பத்து ரூபாய் கிடைக்கும். நாலு பெட்ஷீட் அடிச்சா இருபது ருபாய். அப்படி சேர்த்து வெச்சுதான் என்னோட செலவு, ஸ்கூல் பீஸ்ன்னு எல்லாம் பார்த்துகிட்டேன். எங்கப்பா சும்மா பேருக்கு தான். ஒவ்வொன்னுக்கும் நானா சம்பாரிச்சா தான் உண்டு.” ஆற்றாமையோடு கூறியவள், சற்று மௌனமானாள்.

“உனக்கு காசோட அருமை தெரில. ஒவ்வொரு ரூபாயும் சம்பாரிக்கறது எவ்வளவு சிரமம்ன்னு தெரியாம வளர்ந்துட்ட. அதான் எல்லாத்தையும் தூக்கி யாருக்கோ தாரை வார்த்துருக்க…” ஸ்வேதாவின் பெயரை கூறாமல் அவனை பிடியோ பிடி என்று பிடித்தாள்.

“அப்படி எல்லாம் இல்லடி. எங்கம்மாவும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான். உன்னை மாதிரி…” என்று இடையிட்டவனை பார்த்து முறைத்தாள்.

“அப்புறம் எங்க போச்சு புத்தி? புல் மேய போயிருச்சா? எப்பேர்பட்ட குடும்பம்… யாருக்கு கிடைப்பாங்க இப்படியொரு அப்பா? எங்கப்பா மாதிரி ஊரு முழுக்க கடன் வாங்கி வெச்சு நீ அடைச்சியா? இல்லைன்னா குடும்பத்தை கவனிக்காம ஃப்ரெண்ட்ஸ் கூட ஊரை சுத்திட்டு வெத்து பெருமை பேசிட்டு இருந்தாரா? இல்ல, உங்கம்மா நகைய வித்து, ஜாலியா செலவு பண்ணாரா? இல்ல, கல்யாண வயசு தாண்டிட்டு இருக்க பொண்ணை சம்பாரிக்க சொல்லிட்டு உட்கார்ந்து செலவு பண்ணிட்டு இருக்காரா? உனக்கு எல்லாம் இருந்தும் இப்படி இருந்திருக்க பாரு… உன்னை தான்டா சொல்லணும்…”

இத்தனை நாள் சேர்த்து வைத்த கோபமனைத்தையும் அவள் கொட்ட, ஷான் மெளனமாக வாங்கிக் கொண்டான். அவள், தன்னுடைய குடும்பம் பற்றியெல்லாம் இவ்வளவு கூறியதே இல்லை. அவன் மேல் அவள் கொண்ட ஆற்றாமையும் கோபமும் அவளை இப்படியெல்லாம் கூற வைத்திருக்கிறது. அதுவுமில்லாமல் ப்ரீத்திக்கும் இவ்வளவு கோபம் வரும் என்பதையே இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த கோபமும் அவனுக்காகத்தானே!

அவளது பொறுப்புணர்வையும், தனது தான்தோன்றித்தனத்தையும் நினைத்துப் பார்த்தான். உண்மை அதுதான்!

கோபத்தை கொட்டிய பிறகு சற்று ஆசுவாசமானவள், அவனுக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

அவனது கைகளை பற்றிக் கொண்டவள், “உனக்கு திறமை இருக்கு. அதனால தான் இவ்வளவு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிய ஈசியா ரன் பண்ற. அறிவு ரொம்ப இருக்கு… ஹேக் பண்ணதை எப்படியெல்லாம் ஹேண்டில் பண்ணன்னு நான் கூட இருந்து பார்த்துருக்கேன். புத்திசாலித்தனம் எக்கச்சக்கமா இருக்கு… இனிமே எப்படி கம்பனிய கொண்டு போகணும்ன்னு நீ ப்ளான் பண்றதுல இருந்தே அதை தெரிஞ்சுக்கலாம். ஒரு காரியத்தை எடுத்தா கண்டிப்பா நீ முடிப்ப ஷான். முழுசா உனக்கு பொறுப்பே இல்லைன்னு நான் சொல்லல… ஆனா இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமேங்கற கோபம் தான்…”

அவன் தலையாட்டினான். இதை முகத்தில் அறைந்தார் போல சொல்வதற்கும் அவள் அவனுக்கு தேவைதானே!

“ம்ம்ம்… புரியுது…”

“ஆனா தயவு செஞ்சு எதையும் உணர்ச்சிவசப்பட்டு செய்யாத. உனக்குத்தான் மூளைய எக்கச்சக்கமா ஆண்டவன் கொடுத்துருக்கான்ல. அதை கொஞ்சம் யூஸ் பண்ணு. இனிமே பிஸ்டலை தூக்கிட்டு சுத்தாத…” என்றவள், சற்று இடைவெளி விட்டு, “பயமா இருக்குடா…” என்றவளின் கண்களில் லேசான ஈரம். அதை காட்டிக் கொள்ளக் கூடாது என்று தலை குனிந்து கொண்டாள்.

“பயப்படாத ப்ரீத். இனிமே உன்னை டென்ஷன் பண்ண மாட்டேன்…” என்றவனை உணர்வுகளை களைந்து விட்டு பார்த்தாள்!

இந்த விஷயத்தில் அவனை நம்ப முடியவில்லை.

***

“ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் காட்டுங்க ப்ரதர்…” ஷான் அந்த கடை சேல்ஸ் பையனிடம் கேட்டான்.

சட்டென நிமிர்ந்து பார்த்தான் அந்த கடையின் முதலாளி. பார்ப்பதற்கு வடக்கத்தியன் என்று எழுதி ஒட்டியிருந்தது. அவனுக்கு முன் சிறிய எல்ஈடி ஸ்க்ரீனில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோவொரு இன்டர்நேஷனல் மேட்ச். மறுஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். ஷானும் ப்ரீத்தியும் நின்றிருந்த முறையைப் பார்த்து, இருவரும் தம்பதியர் என்றே முடிவு செய்து கொண்டான்.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் எனவும் அவனே எழுந்து வந்தான். சும்மாவா? ஒன்றே கால் லட்சமாயிற்றே!

ப்ரீத்தி கடையை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தாள், அவ்வப்போது புடவையை சரி செய்தபடி! அவள் புடவையை சரி செய்யும் போதெல்லாம், ஷானுடைய பார்வை அவளை நோக்கிப் பாய்ந்தது. அவள் புடவை கட்டி பார்த்ததே இல்லை, இந்த ஆறு வருடத்தில்!

எப்போதும் ஜீன்ஸ் குர்தா அல்லது சுடிதார். அவளது வேலைக்கும் அதுதான் சரியாக இருக்கும் என்பதால், அவள் புடவையை தொட்டதே இல்லை. ஆனால் இந்த காரியத்துக்காக போகும் போது, போடும் வேஷத்துக்கு தகுந்தார் போல இருக்க வேண்டும் என்று ஷான் தான் புடவை அணிய சொன்னான்.

சொல்லிவிட்டு ஏன் சொன்னேன் என்று வருந்திக் கொண்டிருந்தான் மனதுக்குள். காரணம் என்னவென்றால், அவளுக்கு புடவை இடையில் நிற்கவே இல்லை. இழுத்து கட்டவும் தெரியவில்லை. புடவை வழுக்கி, இடை தெரியும் போதெல்லாம், அவன் மனம் வழுக்கி அவளது இடையில் விழுந்தது.

அதிலும் அந்த புடவை அவளது கவர்ச்சியை தூக்கிக் காட்ட, அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அதிலும் போவோர் வருவோர் எல்லாம் அவளையே பார்க்க, அவன் அடுப்பின் மேல் அமர்ந்திருப்பது போல கடுப்பானான்.

‘அடியே… இன்னொரு தடவை சேலை கட்டிப் பாரு. உனக்கு இருக்கு…’ என்று மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டான்.

“ப்ரோ மேக்ஸ்ல கலர்ஸ் இல்ல ப்ரதர்… ப்ரோ தான் இருக்கு. ஓகே வா?” எழுந்து வந்த ஓனர் கூற, தன்னை மீட்டுக் கொண்டவன், அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

“எனக்கு ப்ரோ மேக்ஸ் தான வேணும். சரி என்ன கலர் அவைலபிள்?”

“கோல்ட் மட்டும் தான் இருக்கு…”