கிட்காட்-1

IMG-20210429-WA0013-87bc65ee

கிட்காட் கஸாட்டா

கிட்காட்-1

கோயம்புத்தூர்.

மருதமலை முருகன் திருக்கோவில்.
மலைக்கோவில்களுள் ஒன்றான
மருதமலை, முருகப்பெருமானின் ஏழாம்
படைவீடாகக் கருதப்படும் முக்கிய ஸ்தலம். முதன்மைக் கடவுளான முருகப்பெருமான் மூலவர் மருதாசலமூர்த்தியாக கம்பீரத்துடனும் அழகுடனும் மருதமலையில் காட்சியளிக்க, கோவை நகர மத்தியிலிருந்து 12கி.மீ தொலைவில் இருந்தார் மருதாசலமூர்த்தி.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியோடு
கடந்த 800 ஆண்டுகளாக ஒன்றி,
கோவை மக்களுக்கும் அந்த கோவை
மண்ணிற்கும் அமைதியையும் அந்த
மண்ணிற்கே உண்டான இதத்தையும்
இன்றும் குறையாது தரும்
மருதாசலமூர்த்தி, அன்று காலை
வழக்கம்போல் ஐந்தரை மணிக்கு
அருள்பாவித்துக் கொண்டிருந்தார் தன்
பக்தர்களுக்கு.

தீவிர பக்தர்கள், ‘அரோகரா’ ‘அரோகரா’
என்று திரைச் சீலையை விலக்கியவுடன்
முருகனைக் கண்ட சந்தோஷத்தில்
ஆர்ப்பரிக்க, அங்கிருந்த முதிர்ந்த ஐயர்
நெற்றி நிறைய பட்டையோடும்
பக்தியோடும் முருகனிற்கு தீபாராதனை
காட்ட, அந்த அதிகாலை நேரத்தின்
மென்மையையும் இதத்தையும்
அனுபவித்துக் கொண்டிருந்தனர்
அனைவரும் மூலவர் ஸ்தலத்தில்
லயித்திருந்தபடி.

மூலவர் ஸ்தலத்தில் தங்கள்
பிராத்தனைகளை முடித்துக்கொண்டு
கும்பலோடு கும்பலாக வெளியே வந்தது
அந்தக் கும்பல். இருபத்திநான்கு
இருபத்தைந்து வயதில் இருக்கும் மூன்று ஆண்பிள்ளைகளும் இரண்டு
பெண்பிள்ளைகளும் என்னதான்
பிராத்தனைகளை முடித்துக்கொண்டு
அமைதியாக வெளியே வந்தாலும்
அவர்கள் முகத்தில் பதற்றமும் சிறிய
பயமும் போட்டிபோட்டுக் கொண்டிருந்தது.

“டேய் ரமணா! அவனுக்குக் கால்
பண்ணுடா டைம் ஆகுது பாரு” என்று
படபடத்தான் அருண்.

“வந்திடுவான்டா… கால் பண்ணா அவன்
எப்படியும் எடுக்கமாட்டான்”
சொல்லும்போதே ரமணாவிற்கு சிரிப்பு
வந்தது. இவர்கள் எதிர்பார்த்துக்
கொண்டிருப்பவன் அவ்வளவு எளிதில்
நிம்மதியைத் தருவானா என்ன?

“அவனுக்கு இதே வேலைதான்டா…”
அருண் பயத்துடன் சலித்துக்கொள்ள
அங்கிருந்த ரமணா, நவீன், வர்ஷினி,
நந்திதா எல்லோரும் ஒருவருக்கொருவர்
முகத்தைப் பார்த்துவிட்டு சிரிப்பை
கட்டுப்படுத்தினர். அதைக் கவனித்த
அருண்,

“நல்லா வாய்விட்டே சிரிங்கடா. என்
நிலைமையைப் பாத்தா சிரிப்பு வராம
இருக்குமா உங்களுக்கெல்லாம்” என்று
கோபமாகப் பேச அங்கிருந்த
அனைவருமே வாய்விட்டுச் சிரித்தனர்.

“அது வந்து அருணுணு… அதை நீ
அவன்கிட்ட வேலையை குடுக்கும்போதே யோசிச்சிருக்கணும்டா” அவனது
தோளைத் தட்டியபடியே ரமணா சொல்ல,

“டேய் கோயில்-ன்னு பாக்கறேன்.
இல்லன்னா என் வாய்ல வர்ற வார்த்தை
என்னன்னு உனக்குத் தெரியும்”
என்றவன், “யோசிச்சனால தான்டா
இவன்கிட்ட வேலையைத் தந்தேன்” என்று ரமணா கேட்டதிற்குற்கு தன் மனதில் இருந்ததைச் சொன்னான் அருண்.

“அருண்! அவனைப் பத்தி உனக்குத்
தெரியும்ல. அப்புறம் ஏன் டென்ஷனா
இருக்க. ரிலாக்ஸ்டா. அவன்
வந்திடுவான்” நந்திதா தைரியம் சொல்ல நவீன், வர்ஷினியும் தங்கள் பங்கிற்கு தைரியத்தை அருணுக்கு அளித்தனர். மணி ஆறைத் தொட அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் அவர்களது பிளட் பிரஷரை ஏற்றாமல் வந்தான். அருணின் ஆருயிர் காதலி அகல்யாவுடன் கோவிலுக்குள் நுழைந்தான் சித்தார்த்.

இரண்டு நாட்களாக சரியாக மூச்சைக்கூட விட முடியாமலிருந்த அருணிற்கு அப்போதுதான் மூச்சே வந்தது. காதலியைக் கிட்டத்தட்ட ஒருமாதம் கழித்துப் பார்க்கிறான்.

இருவரும் அருகில் வரவர நிற்க
முடியாமல் முந்திக்கொண்டு முன்னே
சென்றான் அருண். அருண் முன்னால்
வருவதைப் பார்த்த அகல்யா அருணை
நோக்கி வர, கையை அணைப்பது போல விரித்துக்கொண்டு அவளுக்கு நேராகச் சென்றவன் அவளைத் தாண்டிச் சென்று சித்தார்த்தைக் கட்டிப்பிடித்தான். எல்லோரும் முதலில் அதிர்ந்து பிறகு சிரிக்க அகல்யா அவள் வாங்கிய பல்ப்பில் இருந்து வெளியே வராமல் சித்தார்த்தைக் கட்டிப்பிடித்திருந்த அருணை முறைத்தாள்.

“தாங்க்ஸ்டா மச்சி. இதை
மறக்கவேமாட்டேன். எனக்கு பையன்
பொறந்தா உன் பேரைத்தான்டா
வைப்பேன்” – அருண்
சுற்றியிருந்தவர்களை மறந்து டயலாக்
அடிக்க,

“அப்போ பொண்ணு பொறந்தா?”
கிண்டலாக சித்தார்த் கேட்க அவனோ
‘ஙே’வென நின்றபடியே விழிக்க, “ச்சி
நகரு… நீ இப்படியே நின்னா எனக்கும்
உனக்கும் தான் கல்யாணம்னு நினைப்பாங்கடா” சித்தார்த் சொல்லிச்
சிரிக்க நண்பனை விட்ட அருண்,

“பொண்ணு பொறந்தா… உனக்கு
வரப்போற பொண்ணு சூஸ் பண்ணட்டும் மச்சி” நண்பனிடம் சொல்லிவிட்டு திரும்பிய அருணை அகல்யா பார்த்தாளே ஒரு பார்வை. பயந்துதான் போனான் அருண்.

அவனைத் தவிர்த்து சித்தார்த்தைப்
பார்த்த அகல்யா “அண்ணா!
இவனெல்லாம் டயலாக் அடிக்கத்தான்
லாயக்கு. இவனையெல்லாம் நம்பாதீங்க” அகல்யா பொரிந்துவிட்டுத் திரும்ப அவள் கையைப் பிடித்த அவளது காதலன் அவளை சமாதானம் செய்ய முயல, சித்தார்த் நண்பர்களிடம் சென்றான்.

“எல்லாம் ரெடியா?” சாதாரணமாக அவன் கேட்க எல்லோரும் பார்த்த பார்வையின் அர்த்தத்தை அவன் அறிவான்.

“பிரச்சனை ஆகலையே” வர்ஷினி கேட்க அவனோ மௌனமாக இருபுருவத்தைத் தூக்கி அப்பாவிப் போல முழித்தான். பிரச்சனை ஆகாமல் இருந்தால் தான் அதிசயமே. பின்னே கல்யாண மண்டபத்திற்கே சென்று
மணக்கோலத்தில் இருந்த பெண்ணைத்
தூக்கி வந்திருக்கிறானே நம் ஹீரோ.

“பெருசா எதுவும் பிரச்சனை இல்லை…
ஆனா வரும்போது அகல்யாவை
கல்யாணம் பண்ண இருந்தவன்
பாத்துட்டான்” சித்தார்த் சிரிப்பை
அடக்கியபடி சொல்ல எல்லோரும்
அதிர்ந்தனர்.

“அப்புறம்…?” எல்லோரும் ஒருசேர வினவ,

“அப்புறம் என்ன… அவனை அங்கிருந்த
பாத்ரூம்ல தள்ளி லாக் பண்ணிட்டு நாங்க வந்துட்டோம்”.

“அய்யோ! பாவம் அகல்யா
பயந்திருப்பா இல்ல?” நந்திதா வினவ,

“எங்க? நானாவது அவனைப் பிடிச்சு
உள்ள தள்ளினேன்… அந்தம்மா ஒருபடி
மேல போய் நான் எதுக்கும்
இருக்கட்டும்னு வச்சிருந்த
மயக்கமருந்தை அடிச்சு, ‘எவ்வளவு
சொல்லியும் என்னை கல்யாணம் பண்ண வந்த இல்ல… உனக்கு வேணும்டா’ அப்படின்னு ஒரு மிதி மிதிச்சா பாரு” என்று சிரித்த சித்தார்த், “நம்ம அருண் கல்யாணத்துக்கு அப்புறம் ம்ம்ம்ம் செத்தான்” என்றபடி திரும்ப,

அருண் அகல்யாவின் கையைப் பிடித்துப் பேசிக்கொண்டிருக்க அவளது முகமோ சிவந்திருந்தது. “மச்சி! இவன் விட்டா இங்கையே குழந்தையை பெத்து பேரு வச்சிட்டு தான் போவான் போல”
ரமணாவின் காதை சித்தார்த் கடித்தாலும் அருகிலிருந்த அனைவருக்கும் அது கேட்டது.

“போல எல்லாம் இல்லடா… கொஞ்சம்
விட்டா நடத்திடுவான்” ரமணா அடித்துச்
சொல்ல,

“டேய் இது கோவில்டா கோவில்”
இருவரிடமும் நினைவூட்டிய நந்திதா,
“அவனைக் கூப்பிடுங்கடா டைம் ஆச்சு”
என்றாள்.

“சரிங்க மிஸஸ்.நவீன்” ரமணாவும்
சித்தார்த்தும் போலியான
சீரியஸ்னஸுடன் சொல்லி அவளின்
முறைப்பை வாங்கிக் கொண்டனர்.

“சரிசரி கூல்… அங்க பாரு நவீன்
எவ்வளவு கூலா இருக்கான்னு” -சித்தார்த்.

“எனக்கும் சேத்தி என் பொண்டாட்டியே
பேசிடுவா மச்சி. அதான் நான் கூலா
இருக்கேன்” மனைவியைத் தாங்குவது
போலத் தாங்கி வாரிவிட்டான் நவீன்.

“எனக்கென்ன போங்க” என்று
சிடுசிடுத்தவளை எல்லோரும் சமாதானம் செய்துவிட்டு மணமகன் மணமகளை அழைத்துக்கொண்டு செல்ல, எல்லா ஏற்பாடுகளையும் முன்னரே வந்து செய்து
வைத்திருந்தான் நவீன்.

ஐயர் மந்திரத்தைச் சொல்ல அங்கிருந்த
குட்டி ஹோமாம் முன்னால்
உட்கார்ந்திருந்தனர் அருணும்
அகல்யாவும். ஐயர் தாலியை எடுத்து
அருணின் கையில் தர கொஞ்ச
தூரத்திலிருந்து வந்த சலசலப்பில்
அனைவரும் திரும்பினர். அகல்யா
வீட்டினர் தான்.

அவர்களைப் பார்த்த அருண் ஐயர்
கையிலிருந்த தாலியை படக்கென்று
பிடுங்கி அகல்யா கழுத்தில் கட்டப்போக
அவன் கைகளோ பதட்டத்தில் நடுங்கியது. பயத்தில் அகல்யாவின் கழுத்தின் பின் தாலியை அவசரமாகக் கொண்டு சென்றவனுக்கு படபடப்பில் தாலி கட்ட வராமல் அவன் விரல்கள் ப்ரேக் டான்ஸ் ஆட,

“டேய் எருமை ஒரு முடிச்சாவது போடு”
வர்ஷினியும் நந்திதாவும் பரந்தனர்.
அவன் ஒன்றையாவது போட்டால்
நாத்தனார் முடிச்சு மாதிரி பெண்களே
போட்டுவிடலாம் அல்லவா. அதை வைத்து அவர்கள் சொன்னது.

அந்த ரணகளத்திலையும்
கிளுகிளுப்புக்கு எண்ணிய சித்தார்த்,
“மச்சான், அவன் கை நடுங்குதுடா”
ரமணாவிடமும் நவீனிடமும் சொல்லிச்
சிரிக்க அவர்களும் குபீரென்று சிரித்தனர்.

“டேய் விவஸ்தை இல்லையா?” வர்ஷினி
இவர்களை அதட்ட, ஒருவழியாய் முதல்
முடிச்சை அகல்யா குடும்பத்தினரைப்
பார்த்தபடியே பயத்தில் போட்டு
முடித்தான் அருண். அடுத்து, நந்திதா அடுத்த இரண்டு முடிச்சுகளை அவர்கள்
வருவதற்குள் முடிச்சிட்டாள்.

முன்னால் வந்த அகல்யாவின் அப்பா
கோபத்தோடு மகளைப் பார்வையால்
எரிக்க, “இவன்தான் மாமா அகல்யாவைக் கடத்தி என்னை ரூம்ல லாக் பண்ணிப் பூட்டுனது” அகல்யாவை திருமணம் செய்ய இருந்த மணமகன் கோபமாகப் பேச,

“அது ரூம் இல்லை… பாத்ரூம்” சித்தார்த்
சீரியஸாகச் சொல்ல ஒருசிலருக்கு
சிரிப்பு வந்தது கூட்டத்திற்குள்.

“சார், எங்க பொண்ணைக் கடத்தி
கல்யாணம் பண்ணியிருக்காங்க…
பிடிங்க சார் இவங்களைப் புடிச்சு உள்ள
போடுங்க” தாம்தூமென்று குதித்து
ஆவேசத்தில் அகல்யாவின் அப்பா
கத்தினார்.

“மச்சா இந்தாளு இப்படியே மூச்சுவிடாம
பேசுனா… கண்டிப்பா அந்தாளு
தொப்பைல இப்பவோ அப்பவோன்னு
இருக்க வேட்டி கழண்டு விழப்போகுது”
ரமணா சொல்ல சித்தார்த்திற்கு அவரின்
தொப்பையையும் அவர் ஒரேமூச்சில்
பேசப்பேச அது உள்ளே போய்
வருவதையும் கண்டு சிரிப்பு பீறிட
ரமணாவும் உடன் சிரித்தான்.

“என்னங்கடா சிரிப்பு” என்று வந்திருந்த
எஸ்ஐ எகிற,

“சார் சார்… அந்தப் பையன் நம்ம
எஸ்.எம்.கே.வி வாரிசு” அருகிலிருந்த
ஏட்டு சொல்ல அப்படியே நின்றார் எஸ்ஐ.

“யாரு ஏட்டு? அந்தப் பச்சை சட்டையா?”
சித்தார்த்தைக் காட்டி எஸ்ஐ கேட்க ஏட்டு
தலையாட்டினார். அவரும் கேள்விப்பட்டு
இருக்கிறார் அதன் பெருமையைப் பற்றி.
பெரிய இடம் என்றதும் அப்படியே
இறங்கினார் அந்த எஸ்ஐ.

“இவங்க உங்களைக் கடத்திட்டு
வந்தாங்களா?” அகல்யாவைப் பார்த்து
அவர் கேட்க இடமும் வலமும் தலையை
ஆட்டி மறுத்தாள் அவள்.

“சாரிங்க. உங்க பொண்ணு இஷ்டப்பட்டு
வந்துதான் கல்யாணம்
பண்ணியிருக்காங்க. அவங்க மேஜர்.
நாங்க எதுவும் பண்ணமுடியாது” என்றவர் மணமக்களுக்கு வாழ்த்தைத்
தெரிவித்துவிட்டுக் கிளம்பினார்.

“அங்கிள், இவங்களை கல்யாணம்
பண்ணிக்க தூண்டுனதே நீங்கதான்”
அகல்யாவின் அப்பாவை சித்தார்த்
குற்றம்சாட்ட அவரோ அதிர்ந்து விழித்தார்.

“இவங்க லவ் மேட்டர் தெரிஞ்சப்போ
அமைதியா இல்லாம உங்க பொண்ணை அடிச்சு ஃபோனைப் பிடுங்கி அவங்களை பிரிச்சீங்க. அப்புறம் அவசர அவசரமா
கல்யாணம் ஏற்பாடு வேற. நாங்க
கன்வின்ஸ் பண்ணி அருண் அப்பாவை
வச்சு உங்ககிட்ட பேசுனா அவர்கிட்டையும் நீங்க முகம் குடுக்கல. அதுதான் அவங்களை இப்படி பண்ண வச்சிடுச்சு” சித்தார்த் முழுதாக பேசி முடிக்க அகல்யாவின் தந்தை தலை குனிந்தார்.

“மச்சான் டயலாக் கரெக்டா?” ரமணாவிடம் சித்தார்த் மூக்கை சொரிந்தபடி திரும்பி வினவ,

“கரெக்டு கரெக்டு, மிரட்டு மிரட்டு” சைகை செய்தான் அவன்.

“உங்க பொண்ணு கல்யாணத்தைப்
பாக்க உங்களுக்கும் ஆசையிருக்கும்.
பெத்தவங்க இல்லாம கல்யாணம்
பண்றது கொடுமைதான்” இடைவெளி
விட்டவன்,

“அதான் கல்யாணம் இங்கன்னு
உங்களுக்கு ஃபோன் பண்ணி
சொன்னேன்” என்று சித்தார்த் முடிக்க
அனைவரும் அதிர்ச்சியாய் அவனைத்
திரும்பிப் பார்த்தனர். இது அகல்யாவின்
வீட்டிற்கே தெரியாத ஒன்று. பெண்ணைக் காணவில்லை என்று தேடியபோது யாரோ ஃபோன் செய்து சொல்லித்தான் அவர்கள் வந்தது. அது சித்தார்த் என்று அவர்களுக்கும் தெரியாது.

“இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே”
ரமணாவும் நவீனும் வாயைப் பிளக்க,
மற்ற நண்பர்கள் எல்லோரும் அவனை
முறைக்க, தன் கூர்மையான கண்ணை
மேலே பார்த்து, “மச்சி இந்த சிற்பங்கள்
எல்லாம் சுமார் 800 வருஷத்துக்கு
முன்னாடி…” சித்தார்த் ரமணாவிடம்
விளக்க,

“எப்படி சமாளிக்கறான் பார்” வர்ஷினி
நந்திதாவிடம் பல்லைக் கடிக்க அவளும்
சித்தார்த்தை முறைத்துக் கொண்டுதான்
இருந்தாள்.

“நடந்தது நடந்திருச்சு. இனி எதுவும்
பண்ணமுடியாது சுப்பு. பேசாம
மாப்பிளையையும் பொண்ணையும்
கூட்டிட்டு போய் மத்த சடங்கையாவது
நம்ம பண்ணி வைக்கலாம்” கூட்டத்தில்
ஒருவர் சொல்ல,

“ஹப்பாடா! எப்படியோ ஒரு பெரிசு
சொல்லும்னு நினைச்சேன்.
சொல்லிடுச்சு” ரமணா முணுமுணுக்க,
சித்தார்த் கண்ணைக் காட்ட அருணும்
அகல்யாவும் அகல்யா பெற்றோரின்
காலில் விழ அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. பெற்றவர்கள் ஆயிற்றே, ஆசீர்வாதத்தைச் செய்தனர்.

“ஏன்டா அவங்க வீட்டுல சொன்ன?”,
“எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி
இருக்கலாம்ல” அவன் அருகில் சென்று
வர்ஷினி கேட்க,

“சொல்லி இருந்தா என்ன பண்ணி
இருப்ப? அடி ஜூட்னு ஓடியிருப்ப” என்று
சித்தார்த் கலாய்க்க அவனை
முறைத்தாள்.

“டேய் அதே மாதிரி அருண் அப்பாக்கும்
சொல்லி இருக்கலாம்ல” நந்திதா
ஆரம்பிக்க,

“அயய்யய்யய! இந்த பொண்ணுங்களே
இப்படித்தான்டா. ஒருத்தன் செஞ்ச
ஆயிரம் நல்லதை விட்டுட்டு ஒரு
குறையை கண்டுபிடிப்பாங்க” என்று
சலித்தவன் நவீனிடம் திரும்பி,

“ஏன் மச்சி இந்தப் பொண்ணுங்கெல்லாம் இப்படித் தானா? எப்படி சமாளிக்கறீங்க?” சித்தார்த் வினவ அவனைத் தன் நெற்றிக்
கண்களால் எரிக்க ஆரம்பித்தனர் இரு
தோழிகளும்.

“சரிசரி விடுங்க. அருண் அப்பாதான்
சொன்னாரே… ‘அவங்க வீட்டுல நான்
கேட்டும் ஒத்துக்கல அருண். இனிமேலும்
உனக்கு அந்தப் பொண்ணு வேணும்னா
நீ கல்யாணம் பண்ணிட்டுவா. என்னை
எதிர்பாக்காத கல்யாணத்துக்கு. ஆனா
நீங்க வந்தா நானும் உன் அம்மாவும்
ஆசிர்வாதம் பண்ணி ஏத்துப்போம்’ன்னு” என்று வானத்தைப் பார்த்து ப்ளாஷ்பேக் சொல்லுவதைப் போல சொன்ன சித்தார்த்,

“நானும் அவரை நேத்து நைட்
கூப்பிட்டேன் வர்ஷி. அவரு, நீங்க
முடிச்சிட்டு வரும்போது சொல்லுங்க
ஆரத்தியோட வெயிட் பண்றோம்
அப்படின்னு முடிச்சிட்டாரு. அதுக்கு மேல
என்ன பண்ண முடியும் சொல்லு” என்று
கேட்க எல்லோரும் அமைதியாகினர்.

சித்தார்த்தும் ரமணாவும்
பள்ளிப் பருவத்திலிருந்தே அதாவது
நான்காவதில் இருந்தே நண்பர்கள்.
பக்கத்துப் பக்கத்து வீடும் என்றிருக்க
அவர்களுக்குள் இருக்கும்
“நண்பேன்டா”விற்கு அளவே கிடையாது. நந்திதா, அருண், வர்ஷினி எல்லோரும் பதினொன்றாவதில் வந்து சேர்ந்தவர்கள். அவர்களது வேவ்லென்த் சித்தார்த் ரமணாவுடன் ஒத்துப்போக அங்கு ஆரம்பித்தது இவர்களின் எல்லா
லூட்டிகளும். கல்லூரியும் ஒரு பெரிய
ப்ரைவேட்டில் அவர்களுக்குப் பிடித்த
துறையில் அனைவரும் சேர அவர்களது
நட்பு அங்கேயும் தொடர்ந்தது. எந்த
வீட்டினராலும் அடக்க முடியவில்லை.
பெண்பிள்ளைகள் வீட்டிலும்
ஆண்பிள்ளைகள் நல்ல
குணமுள்ளவர்கள் என்பதால் எதுவும்
பேசவில்லை. சொன்னாலும்
கேட்டால்தானே?

ஊர் சுற்றித் திரிந்து, வம்புகளை இழுத்து, சேர்ந்தே எல்லா வேலைகளிலும் ஈடுப்பட்டனர். ஒருவரின் மீது ஒருவருக்கு இருக்கும் பாசத்திற்கு அளவே கிடையாது. ஆனால் ஒருநாளும் வெளியே காட்டிக்கொண்டதில்லை. வம்பிழுத்து வாயடிப்பதில் அப்படி ஒரு ஆசை அந்த ஃபைவ் ஸ்டார் கும்பலுக்கு.

படிப்பை முடித்துவிட்டு ஒருவனும்
வேலைக்கு சென்றபாடில்லை. சில்அவுட்
என்ற பெயரில் ஊர்
சுற்றிக்கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஏதோ, அகல்யாவின் வற்புறுத்தலில் தான் அருண் அவன் தந்தையின் தொழிலைப் பார்க்க ஆரம்பித்தது. அப்படி ஒரு கும்பல் இது.

அதில் வந்து தெரியாமல்
சிக்கிக்கொண்டவன் தான் நவீன்.
வழக்கம்போல சாப்ட்வேர் இன்ஜினியர்.
நந்திதாவின் கணவன். கல்லூரி
முடித்தவுடன் ஒரு கால்கட்டைப் போட
வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து
அவளைத் தன் அண்ணனின்
இரண்டாவது மகனிற்கே திருமணம்
செய்து தந்தார் நந்திதாவின் தாயார்.
நவீனும் இவர்களைப் போலவே
என்பதால் இந்தக் கூட்டத்தில் சீக்கிரமே
ஒன்றினான். நந்திதாவின் தாயார் தான்
தலையில் அடித்துக்கொண்டார்.

“ஏன்டி, நீ மாறுவேன்னு பாத்தா… என்
அண்ணன் மகனை மாத்திட்டியேடி”
ஒருநாள் தலையில் அடித்துக்கொள்ள,

“ஓ… அவ்வளவு சாதாரணமா
நினைச்சிட்டியாம்மா எங்க
ப்ரண்ட்ஷிப்பை” என்று சிரித்தாள். இதை நந்திதா மட்டுமல்ல அந்த காங்கில் யாரைக் கேட்டாலும் இப்படித்தான் பதில் வரும். அப்படிப்பட்ட கும்பல் தான் இப்போது பெண்ணைத் தூக்கி திருமணம் முடித்து வைக்கும் வரை வந்தது.

“இல்ல சார் தப்பா நினைக்காதீங்க. நான் அகல்யாவை எங்க வீட்டுக்குத் தான் பர்ஸ்ட் கூட்டிட்டு போகணும்னு
நினைக்கறேன். அரேன்ஜ் மேரேஜ்
ஆகியிருந்தாலும் இதைத்தான்
பண்ணியிருப்பேன். நீங்களும் எங்ககூட
வாங்க. ஏன்னா இரண்டு குடும்பம்
ஒன்னா இருந்தா தான் எங்க இரண்டு
பேருக்குமே சாட்டிஸ்பைடா இருக்கும்”
அருண் தனது மாமனாரிடம்
பேசிக்கொண்டிருக்க,

“இவன் எப்படிடா இவ்வளவு டயலாக் பேச ஆரம்பிச்சான்? நீ எதாவது எழுதித்
தந்தியா கேப்ல?” சித்தார்த் ரமணாவிடம் கேட்க,

“அவன் மாமனாரை ஐஸ் வைக்க அடிச்சு
விட்டுட்டு இருக்கான் மச்சி… இல்லனா
அதுவே மொச புடிக்கற நாயி” ரமணா
கிண்டலடிக்க இவர்களை நோக்கி
வந்தான் அருண். வந்தவன், “டேய்
தாலிகட்டும் போது கூட டென்ஷன்
பண்ணிப் பாத்துட்டடா நீ”.

“இல்லை மச்சி, அன்னிக்கு நீ சொன்னீல அகல்யா ஃபோன்ல அழுதான்னு. நீயும் ஃபீல் பண்ண. ஸோ, அதான் கரெக்டா கால்குலேஷன் பண்ணேன் இப்படி நடந்தா இப்படி நடக்கும்னு. அதே மாதிரி நடந்துடுச்சு. வாழ்த்துக்கள்டா மச்சி” என்று நண்பனைக் கட்டிக்கொள்ள ரமணாவும் இருவரின் தோளிலும் கைபோட்டு சாய்ந்தான்.

“டேய்! அசிங்கமா பண்ணாதீங்கடா…
அருணு நீ உன் ஆளைத்தவிர
எல்லாத்தையும் கட்டிக்கற” வர்ஷினி
நக்கலடிக்க,

“அதெல்லாம் உங்க முன்னாடியா பண்ண முடியும்… அதெல்லாம் அப்புறமா
தனியாயா”, ‘தனியா’ என்ற
வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து
அருண் வெட்கச்சிரிப்பு சிரிக்க,
“ஓஹோ….” என்று நண்பர்கள் படை
கோரஸ் எழுப்பியது.

“நீங்களும் வாங்கடா வீட்டுக்கு” அருண்
அழைக்க,

“மச்சா நீ பார்மாலிட்டியா கூப்பிட்டா
மட்டும் வரலைன்னா
சொல்லப்போறோம்… இன்னிக்கு
ஃபுல்லா எங்க கலாய் உனக்குத்தான்”
சித்தார்த் ஆரம்பிக்க,

“சரிடா. ஆனா, நைட் எட்டு மணிக்கு
எல்லாம் கிளம்பிடுங்க” அருண்
ஸ்டிரிக்டாகச் சொல்ல,

“மச்சி உனக்குத் தெரியாதா? இன்னிக்கு
நீ எங்ககூட தான் நைட் ஃபுல்லா” ரமணா
சொல்ல,

“வாட்?” அதிர்ந்தான் புதுமாப்பிள்ளை.

“ஆமாண்டா அருணு… இன்னும் ஒரு
வாரத்துக்கு நாள் நல்லா இல்லையாம்”
நவீனும் ஆரம்பிக்க,

“ஸோ அதனால மாப்ள… இன்னும் ஒரு
வாரத்துக்கு நீ எங்க கூடத்தான்” சித்தார்த் கையை விரிக்க அருணின் ஆயிரம் வாட்ஸ் முகமோ தீச்சட்டியாய் கருகியது.

“டேய் இவனுகெல்லாம்
விளையாடறாங்க” மூவரையும் கைநீட்டி
சொல்லிய நந்திதா, “அதுக்குன்னு நீ
இப்படி அலையாதடா அருணு கர்மம்”
என்றாள்.

“ஹீஹீஹீ” இளித்து அவன் சமாளிக்க,

“அப்படியே பேசிட்டு இருக்கும்போது
என்னையும் அவன் இவன்னு
சொல்லிட்டா” நவீன் மனைவியை
வம்பித்தான்.

“ப்ளோவ்ல கெட்டவார்த்தை கூட வரும்”
அர்ஜூன் பாணியில் நந்திதா சொல்ல,

“ப்ளோவ்ல கெட்ட வார்த்தை வருமா?”
வடிவேலுவைப் போலவே நவீன் வாய்
பிளக்க, அங்கு பரவிய நண்பர்களின்
சிரிப்பலைகளின் கதிர்வீச்சு
மருதமலையையே தாண்டித்தான்
பயணித்தது.