சமர்ப்பணம் 5

(உறுப்பு வர்த்தகம்/organ trading வறுமையை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி கொள்கிறது. மோசமான மருத்துவமனை உள் கட்டமைப்புகள், உறுப்புகள் சரியான நேரத்தில் புத்துயிர் பெறுவதற்கான திறனற்ற போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சடல மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக மனித உறுப்புகளைத் தானாக முன்வந்து நன்கொடையாக வழங்கபடுவதோ இல்லை.) 

(ஒரு உறுப்பு தானம் செய்வதன் மூலம், ஒரு நபர் எட்டு பேர் வரை உயிரைக் காப்பாற்ற முடியும் மற்றும் ஒரு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் தாய்மார்கள், மகள்கள், தந்தைகள் மற்றும் மகன்கள், சகோதர சகோதரிகள் – வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.மரணம் உங்களை அழைத்துச் செல்லும்போது, உங்கள் உறுப்புகள் தங்கி மற்றொரு உயிரைக் காப்பாற்ற முடியும்.-பராக் ஒபாமா, 2016 ஏப்ரல் 1.) 

(வக்கிரங்களாலும், கீழ்த்தனமான செயல்களாலும், பாலியல் தொந்தரவுகளாலும் பாதிக்கப் படும் பெண்களுக்கு அதி முக்கிய தேவை மன வைராக்கியம் மட்டுமே. இது போன்ற துன்பங்களுக்கு ஆளானால் அவற்றை எப்படி எதிர்கொள்வது, யார் உதவியை நாடுவது, என்ன செய்வது போன்றவை எல்லாம் பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டியது இன்றியமையாதது.)  

இன்று -2019 ஆம் ஆண்டு.    

 இடம் – சமத்தூர், பொள்ளாச்சி.  

samathur templeக்கான பட முடிவுகள்

கோயிலில் பொங்கல் வைத்து, உடன் வந்த அனைவர்க்கும் விருந்தே படைத்து விட்டனர்  ரத்தினம் குடும்பத்தினர். அவர்கள் வீட்டு செல்ல இளவரசி காயத்திரியின்  வாழ்க்கை அல்லவா!

எவ்வளவு பெரிய சம்மந்தம் அமைந்து இருக்கிறது.

எல்லோருக்கும் திருக்கோயில் வளாகத்தில் விருந்து கொடுக்கப்பட, அங்குக் குழுமியிருந்த உற்றம், சுற்றம் யாரின் குதுகலத்திலும் காயத்ரியால் கலந்து கொள்ளவே முடியவில்லை.

இதற்கும் அவர்கள் குழுமி இருப்பது அவளுக்காகத் தான் என்றாலும்.

காயத்திரியின்  கண்கள், கையில் இருந்த மொபைலில் வாய் விட்டுச் சிரித்து கொண்டு இருந்த அவளையும், அவளின் உயிராய் மாறி இருந்த வருங்கால கணவன், ராகேஷ்  புகைப்படத்தையும் கண்டு கலங்க ஆரம்பித்தது.

அங்கு நடந்து கொண்டு இருக்க வேண்டியது திருமண விருந்தா இல்லை காரிய விருந்தா?

இந்தப் புகைப்படத்தில் இருக்க வேண்டியது மனமொத்த ஜோடியாய் இருக்க வேண்டிய அவர்களா ?

இல்லை காயத்திரியின் புகைப்படம் மாலை சூட்ட பட்டு மட்டும் தானா?

ஒருத்தர் எடுக்கும் முடிவு, எப்படியெல்லாம் பலர் வாழ்க்கையை புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் அவளும், அவளின் வருங்கால கணவன் ராகேஷ் எடுத்த முடிவும் தானே!

சாப்பிட பிடிக்காமல் வேனில் ஏறி அமர்ந்திருந்த காயத்ரி நினைவுகள் தன் திருமணம் இப்படி ஊர், உலகம் மெச்ச நடக்க யார் காரணம் என்று   நினைவில் முழுகி இருந்தது.

ஆறு மாதம் முன்பு… 

பொள்ளாச்சியில் காயத்ரி பி.காம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயம். செமஸ்டர் விடுமுறை என்பதால் காயத்திரி வீட்டிலேயே இருக்க,   அந்த வீட்டுக்கு இன்னொரு திருவிழாபோல் மொத்த குடும்பமும் அவளுக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டு இருந்தார்கள்.

அஞ்சலியைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா! மணிக்கு ஒருமுறை காயத்திரிக்கு பிடித்ததை எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

“அடி ஆத்தி!… பெத்தவ நானு… நானே என் பொண்ணுக்கு இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தது இல்லையே!” என்று ராகினியே கன்னத்தில் கை வைத்து வியக்கும் வண்ணம் இருந்தது அஞ்சலியின் கவனிப்பு.

“உட்காருங்க அம்மா… உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க. செய்து தரேன்.” என்றாள் அஞ்சலி புன்னகையுடன்.

“யம்மா! தாயீ! செய்யறதில் நீயும் எடுத்து வாயில் போடு. அது போதும். சமையல் கட்டே கதியா இருக்கே!… போ… இங்க சுத்தம் செய்யறதை எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். போ அஞ்சலி.” என்று வீட்டின் மற்ற பெண்கள் அஞ்சலியை வெளியே தள்ளாத குறை.

இது எதிலும் கலந்து கொள்ள முடியாதவளாய், எல்லோருக்கும் முன் உண்டதாய் பெயர் செய்து கொண்டு, தன் அறைக்குள் புகுந்த காயத்ரி மூடித் தாளிட்ட கதவின் மேல் சாய்ந்து நின்று, வாய் மூடிக் கதறி அழுதாள்.

எத்தனை நேரம், ‘ஆற்றுவார் தேற்றுவார்’ இல்லாமல் அழுதாலோ, ஒரு முடிவுக்கு வந்தவளாய் லெட்டர் ஒன்றை எழுதியவள், நள்ளிரவு ரெண்டு ஆகும் வரை காத்திருந்து, தன் சேலையை தூக்கு கயிறாய் தன் கழுத்திற்கு மாட்டி, நாற்காலியை உதைக்க கால் தூக்கிய சமயம், அந்த அறைகுள் இருந்து பலத்த கைதட்டல் கேட்கக் காயத்ரி திகைத்துப் போனாள்.

“வாவ்!.. வெல்டன் காயு. ஏன் நிறுத்திட்டே கன்டினியூ செய். நானும் லைவ்வா இதுவரை யாரும் தற்கொலை செய்வதை பார்த்தது இல்லை. ரொம்ப ஜாலியா இருக்கும் போல் இருக்கே!

நாக்கு தள்ளி, கண்களில் இருக்கும் ரத்த நரம்புகள் வெடித்து, கழுத்து எலும்பு உடைந்து, நீ துடி துடித்துச் சாவதைக் காண ரொம்ப ஆசையாய் இருக்குடீ.

ப்ளீஸ் எனக்காக ஒருமுறை தற்கொலை பண்ணிக்கோ செல்லம்.” என்ற அஞ்சலியின் குரலைக் கேட்டுத் திகைத்து நின்றாள் காயத்ரி.

“அஞ்சு!…” என்று விக்கித்து போய்க் குரல் கொடுத்த காயத்திரி கைப்பிடித்துக் கீழே இறக்கிய அஞ்சலி, ஓங்கி ஒரு அறை கொடுக்கத் தரையில் சென்று விழுந்தாள்.

“அஞ்சு.” என்று மீண்டும் திகைத்துப் போய் எழுந்து நின்றவளின் கன்னத்தைப் பலமுறை பதம் பார்த்தது அஞ்சலியின் கை.

ரெண்டு கன்னத்தையும் பிடித்துக் கொண்டு, ‘திருவிழாவில் தாயை தொலைத்த  குழந்தை அழுவதை’ போல் அழுது கொண்டு நின்ற காயத்ரியை இழுத்து நெஞ்சோடு அணைத்து கொண்டாள் அஞ்சலி.

அவள் கண்களிலும் கண்ணீர்.

“பாவி!… என்ன காரியம் செய்யத் துணிச்சுட்டே!.” என்ற அஞ்சலி, காயத்ரியின் கதறலைக் கேட்டு அடிவயிறு கலங்க நின்றாள்.

மனதை கல்லாக்கி கொண்டு, உணர்ச்சிகள் அற்ற முகத்துடன், “என்னமா காயு….லெட்டர் எல்லாம் பலமாய் இருக்கு. இரு என்ன எழுதி இருக்கே!… தீராத வயிற்றுவலி காரணமாக… பேஷ் பேஷ்! குடும்ப மானம் கப்பல் ஏறக் கூடாது என்று நல்ல ஐடியா தான். ஆனா ரியல் காரணம் என்னடீ? அடுத்த ஏழு மாதத்தில் வளைகாப்பு செய்யத் தேதி குறிக்கனுமா என்ன?” என்றாள் அஞ்சலி நக்கலாக.

அஞ்சலி சொல்லியதன் பொருள் புரியாமல் சற்று நேரம் அஞ்சலியையே பார்த்த காயத்திரிக்கு அவள் சொல்லியதன் அர்த்தம் விளங்க, “அஞ்சு!.” என்று கோபமாய் கையை ஓங்கி விட்டாள் காயத்ரி.

“ஓஹ் அது காரணம் இல்லையா! ஓஹ் காதல் தோல்வியா! உன்னைவிட வேறொருத்தி பெட்டர் என்று ஓடி விட்டானா, இல்லை அண்ணன், அப்பாவுக்குப் பயந்த தொடைநடுங்கியா? இல்லை ஒரு தலை ராகமோ!” என்றாள் அஞ்சலி.

“ஒரு மண்ணும் இல்லை… இப்படி எல்லாம் பேசாதே! என்னை என் குடும்பம் அப்படி எல்லாம் வளர்க்கலை.” என்றாள் காயத்திரி.

“ஓஹ்! அப்போ எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்களா என்ன! இரு பாட்டியையும், அம்மாவையும் எழுப்பிக் கேட்கிறேன். இது நாள்வரை இந்த விஷயம் எனக்குத் தெரியமா போச்சே!” என்றாள் அஞ்சலி. அவள் குரலில் அத்தனை நக்கல்.

“நீயுமாடீ!… அவங்க தான் என்னை அப்படி கேவலப்படுத்தினாங்க என்றால் நீயுமா? தாங்க முடியலை அஞ்சு.” என்று குமுறி அழுதாள் காயத்திரி.

அவளை அழவிட்டு கைக்கட்டி வேடிக்கை பார்த்த அஞ்சலியின் மனதிற்குள் காயத்திரி நிலைமையைக் கண்டு ரத்தமே வடிந்தது உண்மை என்றாலும் அதை வெளிக்காட்ட தகுந்த சமயம் அது அல்ல என்பது புரிய தான் கல்லாய் நிற்க வேண்டிய அவசியம் புரிய அஞ்சலி தன்னை கல்லாக்கி கொண்டாள்.

காயத்திரி தேற்றி கொண்டதை கண்டு முகத்தை அலம்பி வரச் சொன்னாள். அவள் முகம் கழுவி  வருவதற்குள் சூடாகக் காபி, இனிப்பு அதிகமாய் போட்டு அவளிடம் கொடுத்தாள்.

அவள் குடித்து முடித்தவுடன், “ஹ்ம்ம்! சொல்லு.” என்றாள்.

  “ஒரு வாரம் முன் என் பிறந்த நாள் வந்ததே!… அன்று காலேஜ் வாசலில் தான் அவங்களை பார்த்தேன்.” என்றாள் காயு.

“உன் காலேஜ் பசங்களா?” என்றாள் அஞ்சலி.

“இல்லை… இல்லை இவங்க காலேஜ் பசங்க எல்லாம் இல்லை. கோட் ஷூட் போட்டுப் பெரிய காரில் தான் வந்து இறங்கினாங்க. இருவரில் ஒருவன் ‘தெலுங்கு பட ஹீரோ’ போல் இருந்தான். அத்தனை உயரம் அவன். தாடி எல்லாம் வைத்துப் பார்க்கவே மாடல்போல் தான் இருந்தான். அவன் தூரமாய் நின்று விட்டான்.

இன்னொருத்தன் பார்க்க நடிகர், ‘விஷ்ணு விஷால்’ மாதிரியே இருந்தான். அவன் தான் என் அருகே பெரிய போக்கே, பெரிய சாக்லேட் டப்பா, வைர நகை பெட்டியை நீட்டி விஷ் செய்தான். அவங்க யாருன்னு கூட எனக்குச் சத்தியமாய் தெரியாது. அம்மா ப்ராமிஸ்.” என்றாள் காயத்ரி.

காயத்ரிக்கு சினிமா பைத்தியம் அதிகம். யாரையும் அடையாளம் சொல்வது என்றால் கூட, ‘அந்தச் சினிமா நடிகர்போல், இந்த நடிகைபோல்’ இருக்கிறார்’ என்று தான் சொல்வாள்.

“நீ என்ன செய்தே?” என்றாள் அஞ்சலி.

“பயந்து காலேஜூக்கு உள்ளே ஓடிட்டேன்.  கைக்கால் உதறி, மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. மாலை காலேஜ் முடிஞ்சு வெளியே பயந்துட்டே வந்தா, ரெண்டு பேரும் அங்கேயே நிக்கறாங்க.

மினி பஸ்சில் வருவதற்க்கு பதில் காலேஜ் பஸ்ஸில் ஏறி நம்ம கிராமத்தில் வந்து இறங்கினா, அவங்க காரில் பின் தொடர்ந்து வந்துட்டு இருக்காங்க. நல்லவேளை அங்கே பஸ் ஸ்டாப்பில் கதிர் இருந்தான். அவனுடன் வண்டியில் வீட்டுக்கு வந்துட்டேன்.” என்றாள் காயத்ரி.

“ஓஹ்! அதான் ஒருவாரமாய் கதிரையும், ரகு அண்ணாவையும் படுத்தி எடுத்துட்டு இருந்தியா உன்னைக் காலேஜில் ட்ராப் செய்யச் சொல்லி.  கதிர், ரகுவை தாண்டி ஏதாவது தொந்தரவு செய்தார்களா என்ன?” என்றாள் அஞ்சலி.

“இல்லை… அதெல்லாம் எதுவும் இல்லை. ஒரு வாரம் பின் தொடர்ந்தார்களே ஒழிய ரெண்டு பேரில் ஒருத்தர் கூடக் கிட்டே வரலை. ஆனால் காலைப் பஸ் ஸ்டாப்பிலிருந்து தொடர்ந்து வருவாங்க, மாலை காலேஜிலிருந்து கிராமம்வரை தொடர்ந்து வருவாங்க பா… பார்த்திருக்கேன்.” என்றாள் காயத்ரி.

“சோ! பின்னால் வரங்களா இல்லையா என்று தேவியார் ரொம்ப தேடி இருக்கீங்க போல் இருக்கே! என்ன அவங்க பின் தொடர்ந்து, ‘பாடிகார்ட்’ வேலை பார்த்ததும்  அப்படியேஉச்சி குளிர்ந்து, கூடப் படிக்கும் பிள்ளைகள், ‘ஹே! அவன் உன்னைத் தாண்டித் தொடர்ந்து வாரான்’  என்றதும்  மேடம்முக்கு அப்படியே வானத்தில் பறக்கும் பீல் வந்து,  காதல் பொங்கோ பொங்குன்னு பொங்கிடுச்சோ மேடம் உங்களுக்கு?” என்றாள் அஞ்சலி.

“மண்ணாங்கட்டி!… பஸ்சை அத்தனை பெரிய படகு காரில் தொடர்ந்து வருவது, ஜன்னல் அருகே வந்து ஹார்ன் அடிப்பது, காதல் பாடல்களை எல்லாம் தேடி எடுத்து, சத்தமாய் போட்டுட்டு இல்லாத குரங்குத்தனம் எல்லாம் செய்தால் தெரியாதா என்ன!

இதுக்கு ஸ்பெஷல்லா வேற நோட் செய்வாங்களாக்கும்? எங்கே அமர்ந்தாலும் ரோட்டில் அவனுங்க பண்ணும் சர்க்கஸ், குரங்குத்தனம் எல்லாம் தெரியாமலா போய்டும்? யார் கிட்டேயும் சொல்ல முடியாமல் எப்படி பயந்தேன் என்று எனக்குத் தான் தெரியும்.” என்றாள் காயத்திரி.

“என் கிட்டே வந்து சொல்வதற்கென்ன? மத்ததை எல்லாம் வாய் கிழிய பேசு. அறிவு இருக்கா இல்லையா? எத்தனை சம்பவம் படிக்கறே! பின்னாடி தொடர்ந்து வந்து ராக் செய்து, காதல் என்று உளறி, ஸ்டாக்கிங் செய்து, ஆசிட் அடிப்பது, கொலை செய்வது, ஒரு பெண்ணைச் சுற்றிப் பின்தொடர்வது, கடத்தல் பற்றி எல்லாம் தினம் தினம் நியூஸாய் வருதில்லை?

பார்த்துட்டு தானே இருக்கே! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகி இருந்தால்…? ஒருத்தன் பின் தொடர்கிறான் என்பது சந்தோஷப்படவோ, கர்வ படவோ கூடிய விஷயம் இல்லை.‘வரும் முன் காப்பதை’ பற்றி எத்தனை போலீஸ் அறிக்கை வருது?

“ஒரு பெண்ணைக் கவர்ந்திழுக்கும் முதல் பத்து வழிகள்”, “கலை” என்ற பெயரில் அரங்கேறும் வக்கிரங்கள் சொல்லிக் கொடுக்க, கைட் செய்ய ஆயிரம் சினிமா, ட்ராமா, கதைகள் வருகின்றன.

”காதல்” என்ற பெயரில் ஒரு பெண்ணைப் பின்தொடர்வதும், துன்புறுத்துவதும், கிண்டல் செய்வதும் பெரும்பாலான படங்களில், தொலைக்காட்சி தொடர்களில், கதைகளில் தவறானதாகக் கருத படுவதில்லை.

ஆண் என்றால் எவ்வளவு கேடுகெட்டவனாய் இருந்தாலும் பணம் இருந்தால், அவன் சுற்றினால் உடனே பெண் என்பவள் அவனுக்கு மடங்கி ஆக வேண்டும் என்று பாடம் எடுக்கும் சினிமா, கதை, எல்லாம் இங்கே அதிகம்.

STALKING IS NOT LOVE. அது கூடப் புரியாமல் ஒரு ஆண் பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதல் சொன்னால் அது தெய்விகம், அமரக் காவியம் என்று வழியும் கும்பல் இங்கே அதிகம். அந்தக் கருமத்தை எல்லாம் படித்து விட்டு, பார்த்து விட்டு நம்ம வீட்டு பெண்களின் பின்னால் ஒருவன் சுற்றும்போது தான் அதன் வலி, வேதனை புரியும்.

கடத்தல் சாதாரணமானது. பின்தொடர்தல், அன்றாட நிகழ்வு. பெண் கத்துகிறாள், எதிர்ப்பு தெரிவிக்கிறாள், வெட்கப்படுகிறாள், பின்னர் மென்மையாக்குகிறாள், காதலை ஏற்று கொள்கிறாள்.

இது திரைப்படங்களில் நடந்தால், கதையாக வந்தால் அது சரியாக இருக்க வேண்டும், இல்லையா?’ என்று புத்தி கேட்டு அலையும் வக்கிரம் பிடித்த ஜென்மங்கள் இங்கே அதிகம்டீ.

அது கூடவா காலேஜ் படிக்கும் உனக்குத் தெரியாது?. நாலு ப்ளடி ப்ளாக்கர்ட்ஸ் 300 பெண்ணைத் தங்கள் கண்ட்ரோலில் வைத்து இருந்த கொடூரத்தை எல்லாம் நியூஸில் பார்த்தே தானே?

பெங்களூரு, டெல்லி, சென்னை, நியூஸ் பார்த்தபிறகும் கூட நீங்க எல்லாம் திருந்த மாட்டிங்களாடீ? ஒருத்தன் உன்னைத் தொடர்ந்து வருகிறான் என்றால் உன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல வேண்டும் என்பது பேசிக் அறிவு. அது கூட இல்லாமல் ஒரு வாரமாய் அவனுங்களுக்கு பயந்துட்டு இருக்கே.” என்று கையை ஓங்கி இருந்தாள் அஞ்சலி மீண்டும்.

“ஆமா வீட்டில் சொல்லியிருந்தால் மானம் போச்சு, மரியாதை போச்சு. ‘எவன் என்னைக் கட்டுவான்?’ என்று டயலாக் பேசி, நீ படிச்சு கிழிச்சது போதும்… உடனே உனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைக்கணும் என்று சொல்லிப் படிபையே நிறுத்தி இருப்பார்கள்.

வேலை செய்யும் பெண்கள் என்றால் ‘வேலையை விடு. உன் சம்பாத்தியத்தில் தான் இங்கே அடுப்பெரிய வேண்டும் என்று இல்லை.’ என்பார்கள்.

ஆக மொத்தம் எந்த மார்கழி மாதத்து நாயோ நாக்கை தொங்க போட்டுட்டு பின்னால் வருவதற்கு தண்டனை பெண்களுக்குத் தான் வீட்டில் வந்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.

எனக்கு என் படிப்பு மிக முக்கியம்.பெண்கள் வாழ்வில் படிப்பு தான் எல்லாவற்றிக்கும் துணை. ஏதோ கண்ட நாய் பின்னால் அலைவதற்கு எல்லாம் பயந்து கொண்டு வீட்டில் சொல்லி, அவர்கள் பயந்து என்னையும் என் படிப்பையும் நிறுத்து வீட்டிற்குள் வைப்பார்கள் என்று தான் பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் எதையும் வெளியே சொல்வதே இல்லை அஞ்சு.

ஆமா உன் கிட்டே சொல்லிட்டா மட்டும் என்ன ஆகப் போகுது சொல்லு!  நீ தானே பெரிய இவ மாதிரி கண்டிஷன் எல்லாம் போட்டே. எங்கேயும் கூப்பிட கூடாது என்று. உனக்கு நீயே போட்டுக் கொண்டு இருக்கும், ‘இந்த லக்ஷ்மண கோட்டை தாண்டி வந்து’ அவனுங்களை லெப்ட் ரைட் வாங்க போவது போல் பேசாதே. தவிர ஒருமுறை தானே கிட்டே வந்தான். அதுக்கெல்லாமா உன்னிடம் புலம்ப முடியும்?” என்றாள் காயத்திரி.

“அடியேய்!… எதுவும் நடக்கலைன்னா எந்த இதுக்குடீ தற்கொலைவரை போனே! லவ்வான்னு கேட்டா இல்லங்கறே… அவனுங்க கூட எல்லை மீறவில்லை. நீயும் போய்ப் பேசலை. அறைஞ்சேன்னு வச்சிக்கோ நிஜாமாலுமே டிக்கெட் வாங்கிடுவே.” என்றாள் அஞ்சலி.

கண் கலங்கி விட்டது காயத்ரிக்கு. “அது… அது எனக்குக் காலேஜில் tc கொடுத்துட்டாங்க.” என்றாள்.

“வாட்!…. TCயா? நீ என்னடி செய்தே, அதுவும் TC கொடுக்கும் அளவிற்கு?” என்றாள் அஞ்சலி.

“நான் என்னடீ செய்தேன்? எல்லாம் அவனுங்க பின் தொடர்ந்து வரும் விஷயம் காலேஜ் முழுக்க தெரிந்து விட்டது. பசங்க, பொண்ணுங்க கூடக் கேவலமாய் , ‘என்ன ரேட்?’, ‘இவ காஸ்டலி,’ என்று பேச ஆரம்பிச்சுட்டாங்க. சிலர் வாட்சப்பில் ‘ஒரு நாள் ரேட் என்ன?’ என்று மீம்ஸ் போட்டாங்க.

ஏதோ வயசு பசங்க. மத்தவங்க மனசு நோகும் என்று புரிந்து கொள்ளாமல் பேசும் வயசு… ஆனா… ஆனா பிரின்சிபால் சார் கூப்பிட்டு ரொம்ப கேவலமாய் பேசிட்டார் அஞ்சு.

நான் நல்ல குடும்பத்து பெண் என்று நினைத்துத் தான் சீட் கொடுத்தாராம். ஆனா நான் ஆம்பிளை பின்னால்… அலை… அலை… என்று சொல்லிட்டார். காலேஜ் திறக்கும்போது ப்ரெண்ட்ஸை கூட்டி வந்து tc வாங்கிக்க சொன்னார்.

ஒரு ஒழுக்கம் கெட்ட…. அவர் காலேஜில் படிப்பது அவருக்குக் கேவலமாம். அப்பா, அண்ணன்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்னைக் கொன்னுட்டு அவங்களும் செத்துருவாங்க. அதனால் நான் மட்டும் போயிட்டா யாருக்கும் எந்தக் கெட்ட பெயரும் வராதுன்னு தான்.” என்று அஞ்சலியை அணைத்து கொண்டு கதறி அழுதாள் காயத்திரி.

‘தவறே செய்யாதவளுக்கு தண்டனை, அவப்பெயர். வீட்டு மானத்தை காக்க தூக்கு…மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா? கடவுளே’ என்று அரற்றியது அஞ்சலி மனம்.

“கண்ணைத் துடை காயு! … தவறே செய்தாலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பவர்களுள்ள காலம் இது. தப்பே செய்யாத நீ எதுக்குடீ உன் உயிரை விடணும்? நான் பார்த்துக்கறேன். நான் திரும்ப வரும் வரை அமைதியாய் உட்கார்ந்து இரு. புரிந்ததா?” என்றவள் கட்டளைக்குத் தலை அசைத்துக் காயத்ரி சம்மதம் சொல்ல, அந்த அறையின் வாயிலுக்குச் சென்ற அஞ்சலி தன் மொபைல் எடுத்துக் கதிருக்கும்,  ரகுவிற்கும் அழைப்பு விடுத்தாள்.

இது மாதிரி நள்ளிரவில் எல்லாம் அஞ்சலி அழைத்தது இல்லையென்பதால் பதறி அடித்து வந்தார்கள்.

“என்னமா என்ன ஆச்சு? யாருக்கு? என்ன ஆச்சு?” என்றனர் சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை.

“ஷ்! … சத்தம் போடாமல் என் பின்னே வாங்க.” என்ற அஞ்சலி, காயத்ரி அறைக்குள் நுழைய அவர்களை வரவேற்றது தூக்கு கயிறு.

உடல் நடுங்க, முகம் வெளுத்துக் காண்பதை நம்ப முடியாமல் அவர்கள் திகைத்து நிற்க, அவர்களைத் தன் அறையில் எதிர்பாராத காயத்திரிக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது.

‘சமுத்திரம்’ படத்தை நிஜ வாழ்க்கையில் ஓட்டிக் காண்பிக்கும் அண்ணன்மார்கள் அவர்கள் இருவரும். உள்ளங்கையில் காயத்ரியை தாங்காத குறை.

இன்றோ அவர்கள் தங்கை ‘உலக வாழ்க்கை வேண்டாம்’ என்று துணிந்து இருக்கிறாள். அதை கூடக் கண்டு கொள்ளாத தாங்கள் இருவரும் உடன் பிறந்து என்ன பயன் என்று தங்களையே நொந்து கொண்ட அவர்கள் இருவரின் கண்களில் கண்ணீர்.

அஞ்சலி கதவைத் தாளிட்டு மூட, காயத்ரி அண்ணன்கள் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

“ரகு அண்ணே!…கதிர் அண்ணே!… அம்மா, பாட்டிமேல் சத்தியம். நான் எந்தத் தப்பும் செய்யலை அண்ணா. ப்ளீஸ் நம்புங்கனா. நீங்க என்னை அது மாதிரி வளர்க்கவில்லை அண்ணா.

நான் தப்பானவ இல்லை அண்ணா. ப்ளீஸ் அவங்க சொல்வதை எல்லாம் நம்பிடாதீங்க.” என்று கதறும் தங்கையைத் தேற்றும் வழி தெரியாமல் விக்கித்து போய் நின்றார்கள் அந்த அண்ணன்மார்கள்.

“காயு!…காயு!…” அஞ்சலியின் குரல் எட்டாதவளாய் அழுது கொண்டிருந்தவளை, கைப்பிடித்து எழுப்பி நிறுத்திய அஞ்சலி மீண்டும் ஒரு அறை கொடுத்து, காயத்திரி இருந்த எஸ்க்ஸ்ட்ரீம் உணர்ச்சி நிலையிலிருந்து மீட்டாள்.

சமூகத்தில் போலியாய் ஏற்படுத்தப்பட்டு இருந்த அவ சொல்லை அந்தக் குழந்தை மனம் படைத்த பெண்ணால் தாங்க முடியவில்லை. மனதளவில் உடைந்து போய் இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

பைத்தியம் பிடித்தவள் போல் அவள் வாயில் இருந்து வந்த வார்த்தை, “நான் தப்பானவ இல்லை” என்பது மட்டும் தான்.

அஞ்சலி கொடுத்த அடி அவளைத் தன்னிலைக்கு கொண்டு வர, அவள் பருகத் தண்ணீர் கொடுத்த அஞ்சலி, “கண்ணைத் துடைத்துட்டு பேசாமல் போய் உட்கார். இங்கே நாங்க யாரும் உன்னை அப்படி எல்லாம் நினைக்கவேயில்லை. முதலில் அதை உன் மனதில் பதிய வை.” என்ற அஞ்சலி அடுத்து திகைப்பில் இருந்த சகோதரர்கள் இருவரை தன்னிலைக்கு வரவழைத்தாள்.

“அஞ்சு!… என்னடீ இது! இவ என்ன காரியம் செய்யத் துணிந்து இருக்கா! என்ன ஆச்சு?” என்றான் கதிர்.

கதிருக்கும், அஞ்சலிக்கும் ஒரே வயது என்பதால் அவர்களிடம் நல்ல நட்பு, புரிதல் இருந்தது.

“நீ எப்படிம்மா கரெக்டா இவ ரூமில்? நீ மட்டும் இல்லையென்றால் நினைத்துப் பார்க்கவே முடியலையே. உனக்கு எப்படி!” என்றான் ரகு.

“பாம்பின் கால் பாம்பரியதா அண்ணா?” என்றவள், ‘ஒரு காலத்தில் ஒருத்தி பல முறை இதே முடிவை எடுக்க முயன்று அவளைக் காப்பாற்றிய எனக்கா தெரியாது இதன் அறிகுறி!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்,

“வந்ததிலிருந்து இவ முகமே சரியில்லை. ஓவர் ஆக்ஷன் செய்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று மேடமே காட்டி கொடுத்துட்டாங்க. அதான் முன்பே வந்து இவள் ரூமில் ஒளிந்து கொண்டேன்.” என்றவள் காயத்திரி தன்னிடம் கூறியதை சொன்னவள், அவள் எழுதிய லெட்டரையும் காண்பித்தாள்.

“யாருடீ அவனுங்க. செத்தானுங்க… அவனுங்க தலையைக் கொண்டு வந்து உன் காலடியில் போடலைன்னா எனக்கெல்லாம் மீசை ஒரு கேடு.” என்றான் கதிர் வெறி கொண்டவனாக.

“ஒருத்தன் பெயர்… எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னவன் பெயர் ராகேஷ். இன்னொருத்தன் பெயர் கூடத் தெரியாது அண்ணா.” என்றாள் காயத்ரி.

“என்ன பெயர் சொன்னே! ராகேஷா! இந்த பெயரைச் சமீபத்தில் நம்ம தாத்தா சொல்லிக் கேள்விப்பட்டது போல் இல்லை. இவ கூட, ‘இதெல்லாம் என்ன பெயர் ராகேஷ், ஷோகேஸ்ன்னு’ கிண்டல் செய்தாலே!” என்றாள் அஞ்சலி யோசனையுடன்.

“என்னது அந்த, ‘ரோடு சைடு ரோமியோ’ பெயரை நம்ம தாத்தா சொன்னாரா! எப்போ!” என்றான் கதிர்.

“இருடா யோசிக்கிறேன். ஹ்ம்ம்… அப்பா ஹார்ட் அட்டாக் போது, உங்க சித்தப்பா வாசு பெண் திருமணத்தில் அந்த ராகேஷ் குடும்பமும் வந்திருக்கிறார்கள். நம்ம காயுவை பார்த்துப் பிடிச்சி, வாசு சித்தப்பா கிட்டே பேசியதாய் சொல்லிட்டு இருந்தார் தாத்தா.

பையன் பேரு ராகேஷ். அப்பா ருத்திரமூர்த்தி, அம்மா கனகா, இல்லை கற்பகம், ஒரு தங்கை ஆஷாவோ, உஷாவோ. பையன் சாப்ட்வேர் கம்பெனி சொந்தமாய் வைத்திருக்கிறான். அது தவிர நகை கடை, ஜவுளி வியாபாரம், உங்க தூரத்து சொந்தம் தானாம் அவன்.

அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். தாத்தா ஜுரத்தில் இருந்தார் என்று நம்ம சைடிலிருந்து ரெஸ்பான்ஸ் வரவில்லை என்றதும், நேரா சந்தித்து இவளிடம் பேச முயன்று இருக்கிறான் போலிருக்கு.” என்றாள் அஞ்சலி, நல்லவேளை இந்த ப்ரோபோசல் பத்தி பேசும்போது கூடவே தன்னை இருக்க வைத்ததற்கு அஞ்சலி கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

“இப்போ என்னடி செய்யறது! கிறுக்கு தனமாய் அவனுங்க ரெண்டு பேரும் செய்ததற்க்கு, இந்த லூசு தற்கொலைவரை போய்ட்டா. விஷயம் இது என்று தெரிந்தால் பெரியவங்க தாங்கவே மாட்டாங்களே!” என்றான் ரகு.

“ஒரு ஐடியா இருக்கு அண்ணா. நாளை எல்லோரும் காயத்ரிக்கு லீவு என்பதால் சுற்றுலா போவதாய் சொல்லு. நேரே ருத்ரமூர்த்தி வீட்டுக்குப் போவோம். அவங்க இழுத்து வைத்த வினை தானே அவனே அறுவடை செய்ய வைப்போம்.” என்றாள் அஞ்சலி.

“இதெல்லாம் நடக்கிற காரீயமாடீ?” என்றான் கதிர்.

“உனக்குத் தாண்டா விஷயம் புரியலை. இந்நேரம் அப்பாவுக்கும், தாத்தாவிற்கும் உடல் நலம் இருந்தால், இவர்களின் திருமணமே முடிந்து இருக்கும்.

அந்த அவசர குடுக்கை, ஒரு முந்திரி கொட்டையின் துணை கொண்டு எல்லாத்தையும் குழப்பி விட்டு இருக்கு. இங்கே பாருங்க, விஷயம் ரொம்ப சென்சிடிவ் தான்.  ஆனால் முயன்றால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும். அதைச் செய்யக் கூடியவர் ருத்திரமூர்த்தி சார் மட்டும் தான்.

இங்கே பாரு காயு, அவங்க சொல்ராங்க, இவங்க சொல்ராங்க என்று இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்காதே. உன் பெயர் கெட்டு போச்சு என்பதெல்லாம் நம்பாதே. உனக்கு ராகேஷை பிடித்து இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் புரியுதா? எதையும் யோசித்து முடிவு எடு.” என்ற அஞ்சலியின் பேச்சுக்குத் தலை ஆட்டினாள்.

“ஆனால் அது ரொம்ப கஷ்டம் இல்லை?”என்றாள் அஞ்சலி மீண்டும்.

“எதுடீ?” என்றாள் காயத்ரி.

“அதான் யோசிப்பது. அது எல்லாம் மூளை இருக்கிறவங்க செய்வது. நமக்குத் தான் ஆண்டவன் மூளை இருக்கும் இடத்தில் களிமண்ணை கூட வைக்க மறந்து விட்டார் என்னும்போது, யோசிப்பது எல்லாம் உனக்குத் தான் வரவே வராதே.

அப்படியே வந்தாலும் இதோ இது மாதிரி பைத்தியக்காரத்தனமான யோசனை தான் வரும் இல்லையா? மூளை இருந்தால் பிரச்சனை இது தான் என்று யாரிடமும் சொல்லாமல் இப்படியொரு முடிவை எடுக்கத் துணிவாயா?” என்றாள் அஞ்சலி.

“சாரி டீ ஏதோ வேகத்தில்… யோசிக்க கூட முடியலை.” என்றாள் காயத்ரி.

“உனக்கு நான் இருகேன்டீ.” என்று அவளை அணைத்து கொண்டாள் அஞ்சலி.

மறுநாளே வீட்டினரிடம் பேசி அவர்கள் சுற்றுலா கிளம்புவதாகப் பெயர் செய்து இளம் தலைமுறை கிளம்பினார்கள் ராகேஷ் வீட்டிற்கு.

“சேமமா போய் வாங்க, ஏதோ கடவுள் அருளால் இத்தனை வருடம் கழித்து நம்ம அஞ்சலியும் கோயில், குளம் என்று போக ஆரம்பித்து இருக்கா. சூதானமாய் போய்ட்டு வாங்கய்யா.” என்று மனமாற வாழ்த்தி அனுப்பியது மூத்த தலைமுறை.

ராகேஷாலும், அவன் நண்பனாலும் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க, அவர்கள் பயணம் தொடங்கியது கோயம்புத்தூரை நோக்கி. மூன்று வருடமாய் அந்த வீட்டை விட்டு ஒரே ஒரு முறை, வாஞ்சிநாதன் உயிரைக் காக்க மட்டுமே தாண்டிய அஞ்சலி இன்று இன்னொரு உயிரைக் காக்க மீண்டும் தாண்டி இருந்தாள்.

லக்ஷ்மணன் கிழித்த கோட்டை தாண்டியதால் அந்தச் சீதை சிறை எடுக்கப்பட்டாள். இன்று கோட்டை தனக்கு தானே போட்டுக் கொண்ட இந்தச் சீதை இருப்பது அக்நாதவாசம். இதிலிருந்து இவளை மீட்க, சிறை உடைத்து இவளை விடுவிக்க எந்த ராமன் வரப் போகிறான்?

அப்படி ஒருவனை நோக்கித் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத இந்தச் சீதையை, விதி காயத்ரி, ராகேஷ் ரூபத்தில் இவளின் ராமனிடம் கொண்டு சேர்க்க ஆவண செய்து கொண்டு இருந்தது.

 அன்று -2017 ஆம் ஆண்டு.

   இடம் -பெங்களூரு.

காவ்யாவை அங்கே கண்ட பிறகு, பைத்தியம் பிடிக்க ஆரம்பித்து இருந்ததது, முரளிகிருஷ்ணா குடும்பத்திற்கு, முக்கியமாகத் தனுவிற்கு.

காவ்யா பாட, பாட ரௌத்திரத்தோடு அமர்ந்து இருந்தாள் தனு. விஷ்ணுவின்  கை மட்டும் அவளை அழுத்திப் பிடிக்கவில்லை என்றால் இந்நேரம் காவ்யாவின்  குரல்வளையை மேடையில் கடித்தே துப்பி இருப்பாள். முரளிகிருஷ்ணா, ரேணுகா முள்ளின் மேல் அமர்ந்து இருப்பது போல் தவித்துக் கொண்டு இருந்தனர்.

தங்கள் மகன் என்னும் அரக்கனின் பெண் பால் அல்லவா தங்கள் மகள்? அவனாவது முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டி விடுவான். ஆனால் தனுஸ்ரீ என்ன நினைக்கிறாள், என்ன? செய்யப் போகிறாள் அட்லீஸ்ட் என்ன? தான் உணர்கிறாள் என்று கண்டு பிடிக்கவே முடியாது.

பாடி முடித்து அமைச்சரின் கையால் விருது வாங்கிகீழ் இறங்க போன காவ்யா, இவர்களைக் கடக்கும்போது ஒரு கணம் நின்று ஒரு பொருள் விளங்காப் பார்வை ஒன்றை பார்த்து விட்டுச் சட்டென்று கீழ் இறங்கி விட்டாள்.

ஏற்கனவே விசாரிக்கும்போது நிலா கீழே நின்றவனை சுட்டி காட்டி “அப்பா” என்று சொல்லி இருந்தாள். இப்போ காவ்யா, கீழே போனபிறகு நிலா இவளை “அம்மா” என்று கட்டி அணைத்து முத்தம் தர, இதனைத் தங்கள் மகனிடம் எப்படி சொல்வது என்று அவர்களுக்குச் சத்தியமாய் புரியவில்லை. அதற்கு ‘ஓடும் ட்ரெயின் முன் நின்று விடலாம்’ என்று தான் அவர்களுக்குத் தோன்றியது.

விழா முடிந்து அனைவரும் கிளம்ப, எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டுக் கடைசியாகக் கிளம்பி கொண்டு இருந்தனர் காவ்யா, சந்தோஷ், சுமித்ரா. நிலா களைப்பில் உறங்கி விட்டாள் அவளைக் காரில் படுக்க வைத்து இருந்தனர். அப்பொழுது தான் அது நடந்தது. காரில் ஏறப் போன காவ்யாவின் முடியைக் கொத்தாகப் பிடித்துப் பின்புறமாய் இழுத்து அவள் குரல்வளையை நெறிக்க ஆரம்பித்து இருந்தாள் தனு.

இதயம் சமர்ப்பிக்கப்படும்.