avalukkenna12

அத்தியாயம் (ஈற்றயல் பதிவு)
12

கடந்த முறைபோல பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படாமல், மிகவும் எளிமையாக கோவிலில் வைத்து திருமணம் செய்வதாக அனன்யாவின் பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

மேற்படி வைபவங்கள் மகாலில் என முடிவு செய்து, அவ்வாறே குறிப்பிட்ட நாளில் அனன்யாவின் கழுத்தில் தாலி கட்டி தனது சரிபாதி ஆக்கியிருந்தான், கிஷோர் கைலாஷ்.

கிஷோருக்கு தான் எண்ணியதுபோல, அனன்யாவை தனது மணவாட்டியாக்கிக் கொண்டதில் உண்டான மகிழ்ச்சியில் இருந்தான்.

கோமதி, திருக்குமரன் இருவருக்கும் தங்களின் எண்ணம் ஈடேறியதால் நிறைவாக உணர்ந்திருந்தனர்.

தேவகி, ஈஸ்வரன் இருவரும் பெண்ணைப் பெற்றவர்கள் ஆதலால் எங்கும் குறை வராமல் நிறைவாகச் செய்ய விரும்பி, அங்கும், இங்குமாக தங்களது பங்களிப்பை பரிபூரணமாக்கும் உவகையோடு எல்லாவற்றையும் மேற்பார்வை செய்திருந்தனர்.

திருமணத்திற்கு மகனுடன் வந்திருந்த அகல்யாவைத் தன்னோடு இழுத்து வைத்துக் கொண்டாள், அனன்யா. தோழியின் அன்பில் வந்த அழுகையை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள், அகல்யா.

“பையனுக்கு பேரு என்ன வச்சிருக்க?”, அந்த நெருக்கடியான நிலையிலும் தனது தோழியைப் பற்றிய விவரம் அறிய விழைந்தாள் அனன்யா.

“அனிருத்!”, சற்று மகிழ்ச்சியாகவே மகனின் பெயரை உரைத்தாள் அகல்யா.

“அய்யா…!”, என்று சிறுபிள்ளைபோல தானிருந்த நிலை மறந்து குதூகலித்தவள், கணவனின் பார்வையில் குரலைத் தழைத்து, “என் பேருல பாதி வருதே!”, என குழந்தைபோலக் குழைந்தவளைச் சந்தோசமாக பார்த்திருந்தாள், அகல்யா.

‘எப்படிப்பட்ட வெள்ளந்தையான உள்ளம் கொண்டவளுக்கு துரோகம் செய்ய அன்று துணிந்தேனே!’, என பழைய தனது செயல்களை எண்ணி மனம் வெதும்பியதை முகம் காட்டாமல் இருக்க சிரமப்பட்டிருந்தாள், அகல்யா.

அதிக நேரம் தோழியோடு நேரம் செலவளிக்க இயலாததால், சற்று வருத்தம் இருந்தபோதிலும், கைலாஷின் கைப்பிடி சொன்ன தகவலுக்கு ஏற்றாற்போல தன்னை அறியாமலேயே, அவனோடு இணைந்து அனைத்து சடங்குகளையும் சந்தோசமாக செய்திருந்தாள், அனன்யா.

திருமண நாளின் சடங்குகளோடு அன்றைய தினம், விறுவிறுப்பாக சென்றிருந்தது.

அகல்யாவைப் பார்த்து பேச மனம் ஏங்கினாலும், அவளுடன் நேரம் செலவழிக்க மனம் துடித்தாலும், எதையும் செய்ய முடியாதவளாய், அன்றைய தினத்தின் கதாநாயகியாக வலம் வந்திருந்தாள், அனன்யா.

அகல்யாவின் மொத்த குடும்பத்தையும் காண விரும்பியவளாய் தனது தாயை அழைத்து விடயம் கூறியிருந்தாள்.

“அகல்யாவை ஃபேமிலியோட வந்து போட்டோ எடுக்க மேடைக்கு வரச் சொல்லுங்கம்மா… ரொம்ப நேரமா தேடறேன்! அவளைக் காணலையே!”, என தனது ஏக்கத்தைத் தாயுடன் பகிர்ந்திருந்தாள்.

‘தொழில்சார் பயணமாக வெளிநாடு சென்ற அகல்யாவின் கணவரால் திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை’, என்றும், அகல்யா தனது குழந்தையோடு மட்டுமே திருமணத்திற்கு வருகை தந்திருப்பதாகவும், மனம் விரும்பாத நிலையிலும் உணர்ந்தே தனது மகளிடம் பொய் உரைத்திருந்தார், தேவகி.

மேலும் தோழியைச் சந்தித்து இயல்பாக உரையாட சந்தர்ப்பம் வாய்க்காத நிலையில், தனது வைபவத்திற்கு வந்தவர்களை வரவேற்று, வாழ்த்தியவர்களை உபசரித்து மகிழ்ந்திருந்தாள் அனன்யா.
—————————–

திருமணம் முடிந்த மறுநாள் காலையில், கிஷோரின் முடிவின்படி, திருக்குமரன், கோமதி இருவரும் அனன்யாவின் வீட்டிற்கு சென்றிருக்க, கணவன், மனைவி இருவர் மட்டும் கிஷோரின் வீட்டில் இருந்தனர்.

மதிய சமையலுக்கான மெனுவை கிச்சனில் சமையல்காரரிடம் சென்று கூறிவிட்டு, தங்களின் அறைக்குள் வந்தவளை, அனன்யா எதிர்பாராமல் அள்ளியெடுத்து மடியில் வைத்திருந்தான், கைலாஷ்.

“எனக்கு ஒரு மாதிரியா இருக்கு!, இங்க நான் உங்க பக்கத்துல உக்காந்துக்கறேனே!”, என பாவமாக கேட்டவளை முறைத்துப் பார்த்தபடியே பதில் கூறினான்.

“கல்யாணத்துக்கு முன்ன சொன்ன…! சரி… என்ர அம்முவ கஷ்டப்படுத்தக் கூடாதுனு விட்டேன். இன்னும் ஒரு மாதிரியா இருக்குனா…?”, என தனது உரையை இடையில் நிறுத்தியவன், “நான் உன்ர விருப்பத்தை சரியா கவனிக்கலனு அர்த்தமாகுது அம்மிணி! அதனால நான் சொல்றத இப்ப கேட்டு சமத்தா இருப்பியாம். மாமன் மடிய விட உனக்கு சேஃபான ப்ளேஸ் எங்கயும், எப்பவும் இல்ல புரியுதா?”, என பேசியவனை, இன்னும் முந்தைய நாளின் பிந்தைய வேளையில் ஆரம்பித்திருந்த பித்தம் தெளியாதவனாய் கைலாஷ் இருப்பதாக எண்ணிப் பார்த்திருந்தாள், அனன்யா.

“இன்னும் எவ்வளவு நாளுக்கு இப்டி தூக்கி வச்சிக்கறீங்கனு நானும் பாக்கறேன் மாமு. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்னு ஆண்கள சொல்லுவாங்க… உங்களுக்கு தெரியும்ல…!”, என்று தன்னவனிடம் தனது முகபாவனைகளை மாற்றாது கேட்டாள் அனன்யா.

“அது மத்தவங்களுக்கு அம்மிணி…! எனக்கு மட்டும் இது எப்பவுமே பொருந்தாதுன்னு நீயே போகப் போக புரிஞ்சுக்குவ கண்ணு…! அதனால இதப்பத்தி இனி நாம டிஸ்கஸ் பண்ணவேண்டாம் அம்மு!”, என்றவன், “ம்.. ஏனுங்க அம்மிணி வித்தியாசமா இந்த மாமன பாக்குறீங்களே… நான் என்ன விசயோமுனு தெரிஞ்சுக்கலாமா?”, என ஒரு கனம் யோசித்தபடியே கேட்டிருந்தான்.

“…ம்… அட அது ஒன்னுமில்ல மாமு… இந்த கோயம்புத்தூரு பாசையெல்லாம் நல்லா பேசுறீங்க… ஆனா இவ்வளவு நாளா எங்க ஒளிச்சி வச்சிருந்தீங்கனு ஒரே யோசனையா இருந்தேன்”, என்று தனது மாறுபட்டிருந்த முகபாவனைக்கான காரணத்தைக் கூறியதோடு, தனது பேச்சின் மாற்றத்தையும் கணவனிடம் கூறியிருந்தாள். அனன்யா.

“அதுவாங்க அம்மிணி… சென்னையில சில வருசம் போயி தங்கியிருந்து படிச்சதில… எல்லா பாசையும் கலந்து கத்துக்கிட்டேன். பேச்சை வச்சே என்னைக் கோவையானு கேட்டத மாத்த நினைச்சு அப்டியே என் பாஷையவே மாத்திட்டேன்.

என்னோட ஃபிரண்ட்ஸ் சிலருக்கு என் நேட்டிவ் கோவைனே தெரியாதுனா பாரேன். எங்க அம்மாகிட்ட மட்டும் எப்பவாவது நம்ம ஊரு பாஷையில பேசுவேன். இன்னிக்கு உங்கூட பேசணும்னு தோணுச்சு பேசினேன். ஏங்கண்ணு உனக்கு பிடிக்கலயா?”, என்று ஊடுருவும் பார்வையோடு மனைவியைப் பார்த்தபடியே கேட்டான்.

“பிடிக்கலனு இல்ல! எங்க வீட்டுல அம்மா, அப்பா ரெண்டு பேரு நேடிவ் மதுரைனால அவங்க அந்தத் தமிழ் தான் பேசுவாங்க… நானும் அகியும் ஸ்கூலுக்கு போகும் போது கோவை பாஷை கத்துகிட்டோம். அப்புறம் காலேஜ் போயி கொஞ்ச நாள்லயே எங்க பேச்சை மாடர்னா மாத்திக்கறதா நினைச்சு கோவை பேச்சை கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டோம். உள்ளூருல மூனு வருசம் படிச்சதுக்கே அப்டினா… நீங்கள்லாம் சென்னை போயி ரொம்ப வருசமாச்சுல்ல…!”, என்று கணவனின் அப்போதைய பேச்சு முறைகளை யோசித்தபடியே, “ஹாஸ்பிடல்ல இப்டி நம்ம ஊரு பாஷைய பேசியிருந்தீங்கன்னா அப்போவே நீங்க யாருன்னு கண்டுபிடிச்சிட்டிருந்திருப்பேன் மாமு!”, என்று கூறினாள். அதில், தான் கைலாஷை யாரென கண்டுபிடிக்க இயலாத தோல்வியை எண்ணி வருந்தியவளாய் மனைவி பேசியதை உணர்ந்து கொண்டான் கைலாஷ். மனைவியை திசைதிருப்ப எண்ணி வேறு கதை பேசத் துவங்கியிருந்தான் அந்தக் கணவன்.

“இதுவரை யாருக்கும் நான் சொல்லாத ஒரு விசயம் உனக்கு மட்டும் சொல்லட்டா!”, என மனைவியின் காதில் ரகசியமாகக் கேட்டான் கைலாஷ்.

காது மடல் தீண்டிய மீசையின் உராய்வினால் உடம்பு சிலிர்த்திட, “வீட்லயே யாருமில்லை. ஏன் இப்டி காதுக்குள்ள வந்து ரகசியம் சொல்றீங்க மாமு? அப்டி என்ன ரகசியம்னு சீக்கிரம் சொல்லுங்க!”, என துரிதப்படுத்தியதோடு ஆவலாகக் கேட்டாள் அனன்யா.

“நீ பிறந்து கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ஃபங்சன் வச்சாங்க அம்மு”, என்று கூறியவன் கண்களில் கண்ட விடயம் சொன்னது. கைலாஷ் தனது மனப் பொக்கிஷமாக வைத்திருக்கும் நினைவலைகள் அவை என்று. அத்தனை மகிழ்ச்சி, ஆசை அந்தக் கண்களில் காண நேர்ந்தது. ஆனாலும் இடையூறு செய்யாமல் கணவனைப் பார்த்தபடியே அமைதியாக கேட்டிருந்தாள்.

“அப்ப… என்ர அப்பா, அம்மாகூட உன்ர வீட்டுக்கு வந்திருந்தேன்! உன்ர அம்மா மடியில வச்சிருந்த உன்னை, என் மடியில தூக்கி வைக்கச் சொல்லி அன்னிக்கு ரொம்ப அடம்பிடிச்சேன். ஏன் அழக்கூட செஞ்சதா ஞாபகம்!

அப்போ எல்லாரும், அவ கொஞ்சம் வளர்ந்த பின்ன மடியில வச்சுக்கலாம். இப்ப வேணாண்டானு என்னைய சமாதானம் சொல்லிட்டாங்க. நானும் ரொம்ப நேரம் சமாதானம் செய்ததுல சரினு வந்துட்டேன்.

அது எவ்வளவு தப்புன்னு அப்போ எனக்குத் தெரியல. ஆனா அந்த சந்தர்ப்பத்தை தவற விட்டதை நினைச்சு பின்னாடி நான் ரொம்ப வருத்தமெல்லாம் பட்டதுண்டு…”, என்று சோகமாகக் கூறியவன் தன்னை பழைய நினைவுகளில் இருந்து மீட்டுக் கொண்டு,

“அன்னிக்குல இருந்து… உன்ன எம்மடியில வச்சுக்கணும்னு நினைச்சு… உன்ர வீட்டுக்கு எங்கம்மா வரும்போதெல்லாம் கூடவே வருவேன்.

சாக்குபோக்கு சொல்லியே வருசமாச்சு, நீயும் வளர்ந்தாச்சு! ஆனா எனக்கு அதுக்கு வாய்ப்பே இல்லாம போயிருச்சு!

நீயும் வளர்ந்து பெரியவளாகி காலேஜ் போன, வேலைக்குப் போன…! எனக்கு முன்னாடியே ரோட்டுலகூட போன! பாத்து ஏங்க மட்டுமே முடிஞ்சது. அப்படி தட்டி தட்டிப் போன வாய்ப்பு… தானா கல்யாணத்துக் அப்புறம்தான் எனக்கு அமைஞ்சிருக்கு!

அதுக்கும் நீ போக்குக் காட்டி இப்பவும் என்னைய சாகடிக்கிற..!”, என பழம்பெருங்கதையை மூச்சுவிடாமல் சொல்லியவனின் பேச்சைக் கேட்டுச் சிரித்தபடியே பார்த்திருந்தவளுக்கு, முடிவில் அவன் சற்று வருத்தம் கலந்த கோபத்தோடு பேசியதைக் கேட்டவளுக்கு அவனிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

பாத்து ஏங்கியதாக அவன் கூறிய தருணத்தைக் கேட்டவள், “அப்ப… என்னை முன்னமே உங்களுக்குத் தெரியுமா மாமு?”, என அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டிருந்தாள்.

“ஓஹ் தெரியுமே!”, என்று பரவசம் தளும்பச் சொன்னவன், “என்ரவளை எனக்கு எப்டி தெரியாம போகும் அம்மிணி!”, என கேசுவலாகக் கேட்டிருந்தான்.

“உங்கள மட்டும் எனக்கு அடையாளம் தெரியலயே!”, என வருத்தம் மேலிட கூறியவளிடம்

“அதுக்கு இன்னொரு கதை சொல்லணும். கேக்கறியா கண்ணு?”, என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான் கைலாஷ்.

“சரி சொல்லுங்க மாமு”, என்று குங்குமச் சிரிப்போடு ஊக்கப்படுத்தியிருந்தாள் அனன்யா.

“நான் ஆஃபீஸ் போயிட்டு, ஒரு வேலையா அவினாசி யுனிவர்சிட்டி பக்கமா வந்திருந்தேன். அங்க இருக்கிற காஃபி ஷாப்ல ஒருத்தவருக்காக வயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ உன் ஃபிரண்ட்ஸோட அங்க வந்த…! நீ பெரிய பொண்ணா ஆனபின்ன அப்பதான் பாத்தேன். ஆனா டக்குனு உன்னை எனக்கு அடையாளம் தெரியல.

அப்ப உன்னை எங்கோ பாத்த மாதிரியும் இருந்தது. ஆனா யாருனு எனக்குத் தெரியல…! ஃபிரண்ட்ஸ்ஸோட ஒரே என்ஜாய்மெண்ட்டா இருந்தது. உங்களையே தான் பார்த்தும் பாக்கதது மாதிரி உக்காந்து இருந்தேன். வந்தவரு பேசிட்டு கிளம்பிட்டாரு. ஆனாலும் நான் கிளம்ப நேரமாயிட்டாலும், மனசு ஏனோ வேணாணு சொல்லுச்சு. பாத்துட்டே உக்காந்துட்டேன். அப்போ இவளை மாதிரி ஒரு பொண்ணு நமக்கு வயிஃபா வந்தாகூட ஓகேனு மனது சொல்லுச்சு…!

நீங்கல்லாம் காஃபி ஷாப்பை விட்டு வெளியே போறவரை அங்கேயே உக்காந்திருந்தேன்.

அப்புறமா, நீயும், உன்ர ஃபிரண்ட் அகல்யாவும் சேர்ந்து காருல கிளம்பினதையும் பார்த்தேன். உன்ர காரைப் பாத்தவுடனேயே, நீ ஈஸ்வரன் அங்கிள் பொண்ணு அன்யானு தெரிஞ்சிருச்சு!”, என்று தான் கோவையில் தன்னவளை சந்தித்த கதையை சந்தோசமாகப் பகிர்ந்திருந்தான் கைலாஷ்.

“ம்… அவ்ளோதானா! இன்னும் எதனா இருக்கா?”, என ஆர்வமாகக் கேட்டவளை, தனது தலையைக் கொண்டு அவளின் தலையோடு செல்லமாக முட்டி, அருகே இழுத்து கழுத்துப் பகுதியில் இதழ் பதித்திருந்தான்.

கணவனின் திடீர் செயலால், உள்ளம் உரைந்திட உணர்வுகள் தலைதூக்க, அமைதியாகி இருந்தாள் அனன்யா.

“என்னை ஒரு மனுசனா நினைச்சு நல்லா பாத்திருக்கோணும். நேந்து விட்டதக் கணக்கா பாத்தா எப்டி நினைவுல இருக்கும்!”, என தன்னை உயர்த்தி, அவளின் தவறை குறித்துக் கூறினான்.

“நீங்களும், நானும் நேருல கடைசியா பாத்தது….”, என்று சற்று தனது கண்ணத்தில் கைவைத்தபடி கண்களை மூடி யோசித்தவள், “ஃபர்ஸ் ஸ்டாண்டர்ட் போயிட்டு இருக்கும்போது ஒரு தடவை அத்தம்மாவோட வந்திருந்தேனே… அப்ப தான என்னை நீங்களும் பாத்திருப்பீங்க!”, என கேட்டவளிடம்

“பொண்டாட்டி மேடம், அதுக்கு முன்னயும், பின்னயும் நிறைய முறை வேறு வேறு இடங்கள்ல நான் பாத்திருக்கேன். நீங்க உங்களுக்கு விவரம் தெரிஞ்சபின்ன முதல்ல என்னை என்ர பத்து வயசுல பாத்திங்களா? அப்போ உங்க வயசு என்னவா இருக்கும்?”, என சிரித்தபடியே கேட்டான் கைலாஷ்.

“நாலஞ்சு வயசு இருக்காது?”, என குத்து மதிப்பாக யோசிக்கும் பாவனையோடு கேட்டிருந்தாள், அனன்யா.

“ஒன்பதா இல்ல? இருபதா சரியா சொல்லுங்க அம்மிணி?”, என்று சிரித்தான் கைலாஷ்

கணவனின் கிண்டல் பேச்சைக் கேட்டு முறைத்தவள், “போங்க… உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான்!”, என்று உதட்டுச் சுழிப்போடு சிணுங்கியவளை இழுத்து அணைத்து இதழில் இதழ் பதித்து விடுவித்திருந்தான்.

“உன்ரகூட மட்டும்தான் இப்டி எல்லா விளையாட்டும் நான் விளையாட முடியும் அம்மு, நீயும் முறுக்கிக்கிட்டா நான் பாவமில்லையா?”, என்றவனிடம்

“யாரு பாவம்! வயசானவங்கள காலைல எந்திரிச்ச உடனேயே… வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டு, இவரு பாவமாம்… நல்ல கதையா இருக்கே…! அவங்கதான் பாவம்!”, என தன் மாமியார், மாமனாருக்கு ஏற்று பேசினாள் அனன்யா.

“நல்லா யோசிச்சு சொல்லுங்க பொண்டாட்டி மேடம்!”, என தனது மனைவிக்கு கருத்துக் கூறினான்.

“யோசிக்க என்ன இருக்கு!”, என தனது அன்றைய காலைப் பொழுதின் நிலையை மறந்தவளாகக் கணவனையே வினவியிருந்தாள்.

“ஏய்! நீதான்டி நேத்து நைட்டுக்கு அப்புறம் உன்ர மாமன், மாமிய பாக்க அன்ஈஸியா இருக்குனு சொன்ன..!, அதான் அவிங்க கைல, காலுல விழுந்து எம்பொண்டாட்டிக்கு உங்களப் பாத்தாக்கா… வெக்க வெக்கமா இருக்காம். அவ வெக்கம் அவளை விட்டுப் போனவுடனே வீட்டுப்பக்கமா வாங்க. அதுவரை இந்த வீடு இருக்கற பக்கம்கூட தலைவச்சுப் படுக்கக்கூடாதுனு… என் வெக்கத்தவிட்டு சொல்லி அனுப்பி வச்சேன்!”, என பாவமாகக் கூறியவனை

“இதெப்போயி அவிங்ககிட்ட சொல்லிட்டிங்களா..?”, என தனது ஒரு கையால் வாயைப் பொத்தி கண்களை மூடிய நிலையில் மறு கையால் தலையில் அடித்துக் கொண்டாள்.

“அய்யா சாமி…! என்னைய விடுங்க… உங்ககிட்ட இனி எதுவும் சொல்லமாட்டேனுங்க!”, என்று கணவனின் செயலில் வெட்கியவளாய் தனது இரு கைகளையும் தலைக்குமேல் வைத்துக் கும்பிட்ட நிலையில் கூறிய மனைவியைப் பரிதாபப் பார்வை பார்த்திருந்தான் கைலாஷ்.

சில விடயங்கள் பெண்களுக்கு மரியாதைக் குறைவானதாகவும், மானக்கேடானதாகவும் தோற்றமளிக்கும். அதே விடயம் ஆண்களுக்கு அத்தகைய எண்ணத்தைத் தருவதில்லை.

புரிந்து கொள்ளவும் அவர்களால் இயலாமல் போவதுதான் மிகக் கொடுமையானது. அதே நிலையினை இங்கு அனன்யாவும் அடைந்திருந்தாள். தனது செயலின் வீரியம் புரியாமல் தன்னவளைப் புரிந்து கொள்ள முயற்சித்திருந்தான் அந்த வியாபாரி.

“அதெல்லாம் அவிங்களுக்கு புரியாமயா இருக்கும். நம்ம வயச கடந்து வந்தவங்கதான…! அதனால ஒன்னும் நினைக்க மாட்டாங்க… சரி விடு”, என்றவன் மனைவிக்கு ஆறுதல் கூறுவதுபோலத் தனக்கும் கூறியிருந்தான். பிறகு, சற்று நேரம் மனைவியிடம் வம்பு வளர்த்து, செல்ல அடிவாங்கி, இதழ் முத்தக் கடை விரித்து, மகிழ்ந்து ஒரு வழியாக மனைவியை தனது கைவளைவில் இருந்து விடுவித்திருந்தான்.

மதிய உணவிற்கான வேலைகளை மேற்பார்வையிட சமையலறை செல்ல முனைந்தவளை, முடிந்தவரை முற்றுகை இட்டு தடுத்தவன், இயலாமல் இறுதியில் விடுவித்திருந்தான்.

மனைவி சென்றதும், தனியொருவனாக படுக்கையில் இருந்தவனுக்கு, முந்தைய தின இரவை பகலாக்கியதால் வந்த அயர்வுக்கு, படுக்கையில் படுத்த சற்று நேரத்திற்கெல்லாம், அந்த நன்பகல் வேளையில் நல்ல உறக்கம் தழுவியிருக்க உறங்கியிருந்தான் கைலாஷ்.

ஒரே நாளில் தனக்குள் வந்திருந்த பல மாற்றங்களை யோசித்தவளுக்கு, அனைத்திற்கும் கைலாஷ் மட்டுமே காரணம் என்பதை உணர்ந்திருந்தாள், அனன்யா.

சமையல் பணி மேற்பார்வைக்குப்பின் விழிப்போடு அறைக்குள் நுழைந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. கணவன் துயில் கொண்டிருந்ததைக் கண்டு உறங்கியவனை தொந்திரவு செய்ய மனமில்லாது, மீண்டும் அடுக்களை பக்கம் சென்றாள். சற்று நேரம் சமையல்கட்டிலேயே பணிகள் முடியும்வரை இருந்தாள்.

அறைக்கு திரும்பி வந்தவளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அமைதியான தருணம் வாய்த்திருக்க, மனம் ஊர்வலம் செல்லத் துவங்கியிருந்தது.

மனஊர்வலத்தில், பழைய அனன்யாவை, இன்றைய அனன்யாவோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொன்னது.

நவீனுடன் பூ வைக்கும் விழா வரை சென்றிருந்தவளுக்கு, நவீனுடன் தோன்றாத இலகுத்தன்மை, கைலாஷுடன் வந்ததை எண்ணி ஆச்சர்யமாக இருந்தது.

முந்தைய தினக் கூடலை நினைத்தவளுக்கு தன்னை எண்ணி ஆச்சர்யமாகக்கூட இருந்தது. வற்புறுத்தவில்லை, வசியம் செய்ய முயலவில்லை. ஆனால் அவன் வசமான தன்னை எண்ணி, ‘எப்ப இப்டி ஆனேன்!’ என தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டாள், அனன்யா.
———————-

சாந்தி முகூர்த்தத்திற்கு சரியான நேரம் வரும்வரை தனியறையில் இருந்தவளை, இரவு பதினோரு மணிக்குமேல் கையில் பாலுடன் கைலாஷின் அறைக்குள் அனுப்பி வைத்தனர், பெரியவர்கள்.

திருமண வைபவ அலைச்சல் காரணமாக உடல் முழுவதும் அயர்ச்சியோடு இருக்க, ‘எப்படா படுத்து தூங்கலாம்?’, என உடம்பு கெஞ்ச அறைக்குள் நுழைந்தாள், அனன்யா.

பட்டு வேட்டி, சட்டையுடன் தன்னை வீழ்த்தும் புன்னைகையோடு, கண்களில் புதுவித ஆர்வத்தோடு வரவேற்றவனைக் கண்டவுடன், அயர்ச்சி, உறக்கம் இரண்டும் அனன்யாவை விட்டு வெகுதூரம் போயிருந்தது.

டபுள்காட் பெட்டில் உள்ள மெத்தையில் பூ அலங்காரம் இருக்க, அதற்குமேல் லாவண்டர் ரூம் ஃரெஷ்னர் வாசமும் சேர்ந்து, அறைக்குள் நுழைந்திருந்தவளை மயக்கியது.

அனன்யாவின் அலங்காரத்தில் மயங்கியவன் இமையை மூடாமல் தன்னவளையே பார்த்திருந்தான்.

‘பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க…’
என்ற பாடலை முணுமுணுத்த கிஷோர்,

தன்னவளின் அருகில் வந்து, கையிலிருந்த பாலை வாங்கி உரிய இடத்தில் வைத்தான். பிறகு படுக்கையில் அமர்ந்து, நின்றிருந்தவளை கைபிடித்து இழுத்து தனது மடியில் அமரவைத்து, “என்ன அன்யா இப்ப சந்தோசமா?”, என அவளின் காது மடல்களோடு உதடுகள் உரச சரசமாகக் கேட்டிருந்தான்.

அறைக்குள் வந்த பூக்களின் நறுமணத்தோடு, லேவெண்டர் ரூம் ஃப்ரெஷ்னர் மணமும் சேர்ந்து மயங்கியிருந்தவளுக்கு, கணவனின் மடி கொடுத்த மயக்கமும் சேர்ந்து, தன்னை மறந்திருந்தாள். அவ்வேளையில், கணவனின் சரசமான பேச்சைக் கேட்டவளுக்கு, எங்கிருக்கிறோம் என்கிற பிரஞ்ஞை இழந்தவள் போல மாறத் துவங்கியிருந்தாள். “ம்…”, என்று மட்டுமே பதில் கூற முடிந்தது. உணர்வின் கொந்தளிப்பில் ‘ம்மைத்’ தவிர வேறு பேசினாலும் காத்துதான் வந்தது அனன்யாவிற்கு.

“இப்ப பேசலாமா, இல்ல தூங்கணுமா?”, அவளிடமே ஆலோசனை கேட்டான்.

“உங்க இஷ்டம்!”, பெண்மை நாணம் கொண்டு, தனது அவாவை அவனின் மேல் திணித்திருந்தது. ‘நீ என்ன செஞ்சாலும் எனக்கு ஓகே தான்’, என சொல்லாமல் சொல்லியது பெண்.

“அப்ப உனக்குன்னு அபிப்ராயம் இல்லையா?”, மண்டூகம் போல அடுத்த கேள்வி கேட்டிருந்தான்.

“இருக்கு…!”, அதத்தான் சொல்லாம சொல்லிட்டேனே என அவள் மனம் அலறியது.

“அப்ப அத சொல்லு!”, தன்னவளின் வாயால் கேட்க விருப்பம் கொண்ட மனது, வம்பு வளர்த்து, ஆசை கூட்டினான்.

“ம.ன.செ.ல்.லா.ம்.. ப.ட.ப.ட.னு.. இ.ரு.க்.கு…! ஏ.ன்.னு.. தெ.ரி.ய.ல…! ரொ.ம்.ப.. நெ.ர்.வ.ஸா.. இ.ரு.க்.கு.., எ.ன்.ன.. செ.ய்.ய.னு.. தெ.ரி.ய.ல..!”, என புரியாத உணர்வின் பிடியில் புதுமனைவியின் வாயில் இருந்து இடைவெளிவிட்டு வந்த வார்த்தையில், அவளை முற்றிலும் உணர்ந்தவன்,

கைவளைவில் வைத்திருந்தவளை ஒரு கையால் நன்கு அணைத்தவாறே, அருகில் இருந்த பாலை எடுத்து டம்ளரில் ஊற்றிக் குடிக்க கொடுத்தான்.

வாங்கியவளின் கைகள் நடுங்குவதை உணர்ந்தவன், தனது கையால் டம்ளரைப் பிடித்து அருந்த உதவினான். அருந்தியவள், “உங்களுக்கு… நீங்க குடிக்கலயா!”, ‘எனக்கு மட்டும் கொடுத்திட்டு இந்த மாமன் என்ன பண்ணறதா இருக்காரு’ என்பதாய் கணவனைப் பார்த்தாள்.

மனைவியின் தற்போதைய பேச்சில் முந்தைய நிலையிலிருந்து சற்று மீண்டிருப்பதை உணர்ந்தவன்,
“எனக்கு படபடப்பெல்லாம் இல்ல… நான் நார்மலாதான் இருக்கேன்”, என்றவன் அவளை பாலை குடிக்கச் செய்தான்.

“அப்ப எனக்கு மட்டும் ஏனிப்படி இருக்கு!”, என பயந்த முகம் காட்டியவளை அதற்குமேல் அவளை யோசிக்க விடாமல், “ஒண்ணுமில்லடா…”, என்று இதமாக நெற்றியில் முத்தமிட்டவாறு, புறமுதுகில் தடவிக் கொடுத்தான்.

மடியில் இருந்தவளை அலேக்காக தனது இருகைகளில் ஏந்தி படுக்கையில் படுக்கவிட்டான்.

கணவனின் அணைப்பிலிருந்து வெளிவந்தவளுக்கு, அதீத பசியில் பலநாட்கள் உணவைக் காணாமல் இருந்தவனுக்கு, விருந்து உணவை தழை வாழை இலையிலிட்டுப் பரிமாறி, குழைத்து கையிலெடுத்து வாயில் வைக்கப் போகும் நிலையில் உணவை உண்ணவிடாமல் கையை பிறர் இழுத்துப்பிடித்தால் உண்டாகும் ஏமாற்றத்தின் அளவைப் போல ஆயிரம் மடங்கு ஏமாற்றமடைந்திருந்தாள் அனன்யா.

மனைவியை படுக்கையில் விட்டுவிட்டு, சாதாரண உடைக்கு தன்னை மாற்றிக்கொண்டு படுக்கைக்கு வந்தவன், அனன்யாவின் மறுபுறம் வந்து படுத்தான். ஒருக்கழித்துப் படுத்து ஓராயிரம் வினாக்களோடு சண்டையிட்டபடி இருந்தவளை அறியாதவன், தன்பக்கம் இழுத்து இதமாக அணைத்துக் கொண்டான்.

ஏனிப்படி எனப் புரிந்தும், புரியாமலும், இன்பமான அவஸ்தையை உணர்ந்தவளுக்கு, அவனை விட்டு விலகும் எண்ணமும் இல்லை. அவனும் விலக்கவில்லை.

ஆணின் அவசியம் உணர்த்தியவன் அருகில் தெளிவாக இருக்க, அடுத்து என்ன என்று பெண் மனம் எதிர்பார்ப்போடு ஏங்கியிருக்க… முற்றிலும் வேறான மனநிலையில் மோகத்தோடு அணைத்திருந்தனர்.

தாம்பத்யம் பற்றி விளக்க ஆரம்பித்தவனை குருவாக ஏற்று, அவன் சொன்னதைச் செய்யும் சிஷ்யையாக தன்னை மறந்து மாறியிருந்தாள் பெண்.

பெண்ணது பருவத்தின் எழுச்சிகளில், அவன் மேனியின் உரசல் பட்டு அவளின் உயிரைத் தீண்டியது. அவன் மெய்த்தீண்டலில் அவளின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டது.

அவளுக்கு சற்றும் குறையாத, ஆனால் பக்குவம் பெற்ற அறிவு மற்றும் மனதால் தன்னவளை மெதுவாகக் கையாண்டான், ஆண்.

உடல் முழுவதும் பொங்கிப் பரவிய உணர்வில், உணர்ச்சிக் கொந்தளிப்பு சுனாமியாக பொங்கியிருக்க, அடங்க வழியின்றி அவனிடம் கிறங்கியவளை, கூறத் திணறியவளை, உணர்ந்தவன் வழிகாட்டினான். தன்னவனின் உடல்மொழியை உணர்ந்து, அவனின் வழிகாட்டலுக்கு செவிமடுத்தாள்.

பாலபாடமாக ஆரம்பித்தவர்கள், பதறாமல் ஒருவரையொருவர் கையாள, இருவரின் கொந்தளித்த உணர்வுகளுக்கு வடிகால் வேண்டி, துவங்கினர்.

துவக்கம், இருவரையும் பேரலைபோல இழுத்துச் செல்ல, ஆயத்த பணிகளைத் தொடர்ந்து, அடுத்த கட்டம் பயணிக்கத் துவங்கி அவளின் மேலாடையாகப் பரவினான். இதமான சூழலில் இதம் தொலைத்து மூச்சுக்குத் திணறியவளை உணர்ந்தவன், மேனியில் பாரத்தைக் தனது கைகளுக்குக் கொடுத்து, பெண்ணவளை ஆசுவாசப்படுத்தினான். தடையில்லா, துன்பமில்லா இன்பம் சாத்தியமில்லை என்பதை வாழ்க்கை ஒவ்வொரு இடத்திலும் நமக்குக் கற்றுத் தருகிறது.
கணவனின் ஊக்கத்தோடு, தானும் அவனோடு ஒன்றிப் பயணித்தாள். இருவரின் குறிக்கோளும் ஒன்றாக இருந்ததால், அதை நோக்கி, இருவரும் இயங்கி, இன்பங்களை உணர்ந்து, முடிவில் சிற்றின்பத்தின் உச்சம் தொட்டனர்.

அணைப்பிற்குள் அடைக்கலமானவளை விடாமல் அணைத்திருந்தான். பருவத்தின் வேள்வித் தீயை இணைந்து அணைத்தவர்கள், அணைப்பிலிருந்து மீளவில்லை.

களைப்பு இருந்தாலும், கலையவில்லை. விடியல்வரை ஒருவருக்கொருவர் அணைவாக உறங்கி, உதயனை வரவேற்றிருந்தார்கள்.

முந்தைய நாள் இரவை எண்ணி, காலையில் எழுந்து அறையை விட்டு வெளியே வரத் தயங்கியவளை, கேள்வியாக நோக்கினான், கைலாஷ்.

கிஷோரின் தாய் கோமதியைக் காண வெட்கமாக இருக்கு என்று மனைவி கூறியதைக் கேட்டவன், மனைவி குளித்து வெளிவரும்முன், தாய், தந்தை இருவரையும் அனன்யா வீட்டிற்கு அனுப்பியிருந்தான். அத்தோடு மாமனாருக்கும் அழைத்து பேசியிருந்தான்.

“மாமு, எங்கூட்டு அம்மிணி அன்ஈஸியா ஃபீல் பண்றா உங்களயெல்லாம் பாக்க! சோ அம்மிணி நார்மல் மோடு வர்ற வரை அம்மா, அப்பா உங்க பொறுப்பு. அன்யா என்ர பொறுப்பு. பீ ஹாப்பி…!”, என்றுவிட்டு போனை வைத்திருந்தான், கிஷோர் கைலாஷ்.

பெரியவர்களுக்கு, பிள்ளைகள் இருவரின் சந்தோசமே தங்களது சந்தோசமாக எண்ணி மகிழ்வுற்றிருந்தனர்.

மதிய உணவிற்குப் பின் தாய் மற்றும் மாமியாரிடம் மட்டும் அலைபேசியில் பேசியிருந்தாள், அனன்யா. அலுவலகம் சார்ந்த பணிகளை வீட்டில் இருந்து செய்தவன், மனைவிக்காக அதிக நேரமும், பணிக்காக சொற்ப நேரமும் ஒதுக்கியிருந்தான்.

அனன்யா, கைலாஷின் அரவணைப்பில், கவனிப்பில், கரிசனையில், அனைத்தையும் மறந்திருந்தாள்.

பெரும்பாலும் இந்தியப் பெண்களுக்கு கணவனே காதல்பாடம் கற்றுக் கொடுக்கும் கந்தர்வனாக இருக்கிறான். கந்தர்வனை பெண்கள் துதித்து, மதித்து அவனே கதி என்றிருக்கிறார்கள். அனன்யாவும் விதிவிலக்காகாமல் இருந்தாள்.

கைலாஷாக, மனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்றான். புதிய மணமக்களுக்கு ஏற்ற புகலிடம் இருக்கும் இடங்களுக்கெல்லாம் தன்னவளை அழைத்துச் சென்று புதிய பாடங்கள் கற்றுத் தந்தான்.

பெற்றவர்கள்கூட பெண்ணின் நினைவை விட்டு ஓரம் போயிருந்தனர். பொழுதும், இரவும் கணவனின் அணைப்பில், நினைப்பில் சென்றது.

ஒரே வித உணவை மூன்று வேளையும் உட்கொண்டால் சலிப்பு உண்டாகும். அதனால்தான், வேளைக்கு ஒன்றாக உணவும், தொடுஉணவும் மாறிப் போகிறது.

வாழ்க்கைக்கும் அது பொருந்தும். அதைப் புரிந்திருந்தவன், ஒவ்வொரு வேளைக்கும் பழையதை நினைவுபடுத்தாத வகையில், நெருங்கினான், அவளிடம் ஒடுங்கினான்.

பெண்ணவளும், ஆயாசம் கொள்ளாமல் ஆவலோடே ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ஆகர்ஷித்துக் கொண்டாள். அனைத்தும் புதுமை. கணவனின் அண்மையே இனிமை என்று புது மனைவிக்குரிய இலக்கணத்தோடு இன்முகமாக வலம் வந்தாள்.

தன்னவளை, தன்னைத்தவிர வேறு எதையும் சிந்திக்க விடாத கணவன் உண்மையில் திறமைசாலி மட்டுமல்ல…! குடும்ப வாழ்க்கையின் சூட்சும ரகசியம் அறிந்தவன் அவன். மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல தன்னவளை ஆடச் செய்யும் திறன் படைத்தவன்.

அத்தகையவனுக்கு என்றும், எதிலும் வீழ்ச்சி இல்லை.

ஆட்டுவிப்பவன் ஆசைப்பட்டால் சுற்றம் உணருவாள் பெண். இங்கும் அதேநிலை. பெண், மகுடிக்கு கட்டுப்பட்டவளாக இருந்தாள். மகுடியாக கிஷோர் கைலாஷ் மாறிப்போனான்.

சரியான சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருந்தவன், தன்னவளிடம் அவளின் உயிர்த்தோழி, அகல்யாவைப் பற்றிப் பேச்செடுத்திருந்தான்.

இயல்பான பேச்சினூடே அகல்யாவின் உண்மைநிலை மறைக்காமல் பகிர்ந்திருந்தான்.

கணவனின் பேச்சைக் கேட்டவளின் நிலை என்ன? அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
————————–