சரணாலயம் – 9

சரணாலயம் – 9

“சரண்!” காதில் கிசுகிசுத்த அழைப்பில் நிகழ்விற்கு வந்தாள் சரண்யா. மகன் மீது தன் கவனத்தை வைத்துக் கொண்டே சசிசேகரன்தான் மனைவியை அழைத்துக் கொண்டிருந்தான்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல ஃப்ளைட் லேண்ட் ஆகிடும். முழிச்சுக்கோ!”

“நான் தூங்கல சசி…”

“ஓ… கண்ணை மூடி தியானம் பண்ணிட்டு வந்தியா?”

“நினைச்சு பார்க்க எத்தனையோ இருக்கு? அதையெல்லாம் ரீவைண்ட் பண்ணேன்!” என்றவள் மகனை தன் வசம் வைத்துக் கொள்ள,

விமானத்தில் இருந்து இறங்கியதும் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வரும் வேலையை செய்து முடித்திருந்தான் சசிசேகரன்.

சோட்டுவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பெற்றோரிடத்தில் கேட்பதற்க்கு கேள்விகளும்  சந்தேகங்களும் அவனுக்கு மலைபோல் குவியத் தொடங்கின.

“அந்த அங்கிள் என்ன காஸ்டியூம் போட்டுருக்கார்?” என ஆணொருவன் அணிந்திருந்த வேட்டியை சுட்டிக்காட்டி கேட்டான்.

“இந்த ஆண்ட்டி ஏன் சாரி இந்த பக்கம் கட்டி இருக்காங்க?” பெண்மணி ஒருவர் இடது பக்கம் மாராப்பு எடுத்து கட்டியிருப்பதை பார்த்து கேட்டான்.

“எல்லா நேம் போர்டுலயும் என்ன எழுதி இருக்காங்க?”

“இங்கே மழை பெய்யாதா?”

“இது சிட்டியா? வில்லேஜா?” இடைவிடாத கேள்விகளை பொடியன் அடுக்கிக்கொண்டே போக, இவனது பெற்றோர்கள் மூச்சு வாங்கினார்.

“இப்பவே கண்ணு கட்டுதுடா சோட்டு!” அலுத்தபடியே மகனிற்கு ஐஸ்கிரீம் ஊட்ட ஆரம்பித்த சசி,

“இப்போ நாம இருக்கறது மதுரை சிட்டி… இனிமே தான் கார்ல ஏறி வில்லேஜூக்கு போகப் போறோம்…” சலிக்காமல் விளக்கம் கொடுத்தான்.

கம்பம் செல்வதற்காக காரினை பதிவு செய்து விட்டு, ஹோட்டலில் அமர்ந்து தேநீர் அருந்தும் நேரத்தில், சோட்டுவின் கேள்விப்படலம் ஆரம்பமாகி இருந்தது.  

“இது தமிழ்நாடு தர்ஷூ! இங்கே எல்லாரும் இப்படிதான் டிரஸ் பண்ணுவாங்க” சரண்யாவும் சேர்ந்து விளக்கம் கூற,

“நாணா கர் கப் ஆயேகா பாபா? (தாத்தா வீடு எப்போ வரும்)” அடுத்த கட்ட கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தான்.

“தமிழ் மே போலோ சோட்டு பேட்டா…” என சசிசேகரன், மகனிடம் தாய்மொழியில் பேசு என அறிவுறுத்த,

“இதையே ஹிந்தியில சொன்னா, எப்படி அவன் தமிழ்ல பேசுவான் சசி? அவனை வழிக்கு கொண்டு வர்றத விட, உங்களை இழுத்து பிடிக்கிறதுதான் பெரிய வேலையா இருக்கு…” சரண்யா சலித்துக் கொண்டாள்.

“அம்மா தாயே! வருசக்கணக்கா பேசின வழக்கத்தை ஒரேடியா மாத்திக்க சொன்னா எப்படி? எனக்கே கஷ்டமா இருக்கும் போது குழந்தை என்ன பண்ணுவான்?”

“நீங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணாம இருந்தாலே போதும்” என்றவள்,

“தர்ஷூ குட்டி! நீங்க தமிழ்ல பேசினா, அம்மா ஸ்டேடஸ்ல என் குட்டி பையன் ப்ளேயிங்(playing) போட்டோஸ் நிறைய வைப்பேன். டெய்லி அவுட்டிங் கூட்டிட்டு போவேனாம். அப்புறம் என் செல்லக்குட்டி பிடிச்ச மாதிரி நிறைய நேரம் அம்மா உன்கூட விளையாட வருவேன்…. டீலா?” என கட்டை விரலை உயர்த்திக் கேட்க, சிறுவனின் மனம்  சிறகடித்து பறக்கத் தொடங்கி விட்டது. 

“ஹே… ஜாலி ஜாலி… டீல்!” அவனும் விரல் உயர்த்தி, ஆமோதித்தவன், சட்டென்று தன் அம்மாவிடம் தாவி, “லவ்யூ மாம்!” எனக் கூறி முத்தம் வைக்க, பதிலுக்கு அவளும்,

“லவ்யூடா குட்டி!” என்றவாறே மகனை கொஞ்சினாள்.

“என்னாங்கடா நடக்குது? நான் என்ன பாவம் பண்ணேன்? எனக்கு யாரும் லவ்யூ சொல்லல… உம்மா குடுக்கல?” முகத்தை தூக்கி வைத்து, சசிசேகரன் குறைபட்டுக் கொள்ள,

“நீங்க சொன்னாதான், நாங்க சொல்ல முடியும். அப்படிதானே குட்டி?” சரண்யா சீண்டு முடிக்க,

“ஹாங் பாபா… நீங்க ஃபர்ஸ்ட் எங்க ரெண்டு பேருக்கும் லவ் சொல்லி கிஸ் பண்ணுங்க! நெக்ஸ்ட் நாங்க…” என்றவன் மீண்டும் தாயை அணைத்துக் கொண்டான்.  

“நான் டெய்லியும் சொல்லிட்டு இருக்கேன்டா சோட்டு! உங்கம்மாக்குதான் ஃபர்ஸ்ட் சொல்வேன். கேட்டுப்பாரு!” என்றவன் மனைவியை பார்த்து கண்சிமிட்ட,

“யாரு நீங்க சொன்னீங்க? அதுவும் என்கிட்ட… இத நான் நம்பவா?” நக்கலுடன் வம்புச் சண்டைக்கு தயாரானாள்.

“சொல்லாம தான் நம்ம குட்டி வந்தானா?”

“அதெல்லாம் இன்ஸிடெண்ட், கோ-இன்ஸிடெண்ட், ஆக்ஸிடெண்ட்ல சேர்த்தி… நீங்க இதுவரைக்கும் என்கிட்ட லவ் சொன்னதில்ல… உங்க மனசாட்சிய கேட்டுப் பாருங்க என்ஜினியர் சார்!” சிலிர்த்துக் கொண்டு உண்மைகளை உளறிக் கொட்ட, சிறுவன் புரியாமல் முழித்தான்.

“எங்கே வந்து, எப்படி மானத்தை வாங்குறடி அழகி? இதே கேள்விய வீட்டுல கேட்டுருந்தா என் பதில ஸ்ட்ராங்கா சொல்லியிருப்பேனே? ஹோட்டல்ல காபி சாப்பிடும்போது தானா உனக்கு இப்படியெல்லாம் சண்டை போட தோணனும்?” என்றவனின் குரலும் கிறக்கத்துடன் ஒலித்தது.

“என் பையனோட அப்பாவாச்சே நீங்க… அதான் பொழைச்சு போகட்டும்னு விட்டு வைச்சேன் மிஸ்டர்! இப்ப விளையாட்டை விட்டுட்டு புக் பண்ணின கேப் வருதான்னு பாக்குறீங்களா?” சீண்டலை தொடர்ந்து கொண்டே உத்தரவிட,

“அதானே! நான் கொஞ்சம் சந்தோஷமா ஃபீல் பண்ணிடக் கூடாதே? உனக்கு கண்ணு எரிய ஆரம்பிச்சுடும்” என்றவாறே அந்த சிறிய குடும்பம், கம்பம் பயணத்தை தொடங்கியது.

உண்மையில் தன் மனைவி சொல்வதைப் போல இருவருக்கும் இடையேயான நேசம் வார்த்தைகளால் இன்னமும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

வெட்கம் விட்டு வெளிப்படையாக பரிமாறப்படும் காதலை விட, சொல்லாமல் செயலால் பகிரப்படும் நேசம் ஆயிரம் மடங்கு சந்தோசங்களை கொடுக்க கூடியதாய் இருக்கும்.

வாழ்க்கை போராட்டத்தில் அன்றாட பிரச்சனைகள் முந்திக் கொண்டு நிற்கும் பொழுது, உயிர் வருடிச் செல்லும் ஆத்மார்த்தமான உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணங்களும் மழுங்கிப் போய் விடுகின்றன.

அப்படிதான் இவர்கள் இருவரின் இடையிலும் அன்பும் நேசமும் கொட்டிக் கிடந்தன, கிடக்கின்றன. ஆனால் அதனை உறுதியாய் உணர்ந்து கொண்ட நாட்கள் அத்தனை கடினமானதாகவும் வெறுப்புகளுடனும் தான் பயணப்பட்டன.

அந்த அவஸ்தையான நாட்களை நினைக்கையிலேயே சசிசேகரனின் முகம் தன்னால் கனிவான புன்னகையை பூசிக் கொண்டது.

இந்த அழுத்தக்காரியின் தைரியமும் பிடிவாதமும் இல்லாவிட்டால் இவர்களின் சொல்லாத காதலும் கானல் நீரினைப் போல மாயமாய் மறைந்தே தான் போயிருக்கும்.

மகனின் உலகத்தில் மனைவி ஐக்கியமாகியிருக்க, இவனது எண்ணங்களோ இருவரும் நேசத்தை அறிந்து கொண்ட நாட்களில் குவிந்தது.

********************************************

சசிசேகரனால் துளசியை போல அனைத்தையும் ஒதுக்கி வைத்து சரண்யாவிடம் பேச முடியவில்லை. அவளை பார்க்கும் போதெல்லாம் தன்னை அறியாமலேயே வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தான். ஆவலுடன் பேச வந்தாலும் எரிக்கும் பார்வையால் அவளை தள்ளியே நிறுத்தி வைத்தான்.

சரண்யாவிற்கும் அவன் மேல் கோபம்தான். அவனது சுயநலத்திற்கு, பிரச்னையை தன் மீதல்லவா திசைதிருப்பி விட்டான். இவனால், இவள் வாங்கிக் கட்டிக்கொண்ட பேச்சுகள் தான் எத்தனை… எத்தனை?

சொந்த வீட்டிலேயே, தன்னை அந்நியமாய் நிற்க வைத்து விட்டானே என மனதோடு குமுறிக் கொள்ளாத நாட்கள் இல்லை.  

ஆனால் இருவரும் தங்களின் உடன்பிறப்புகளை முன்னிட்டே உண்மையை வெளியே சொல்லாமல் இருந்ததை எளிதாக மறந்திருந்தனர்.

துளசிக்கு, சரண்யா படிக்கும் கல்லூரியிலேயே இடம் கிடைத்து விட, அங்கேயே மேற்படிப்பை தொடர்ந்தாள். வேலாயுதத்தின் தேர்வும் தங்கையின் விருப்பமும் ஒன்றாக இருக்க, சசிசேகரனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

தங்கையின் படிப்பு செலவினை இனி தானே பார்த்துக் கொள்வதாக கூறி, வீம்புடன் சிவபூஷணத்தின் உதவியை மறுத்து விட்டான் சசிசேகரன். இளநிலை பொறியியல் படிப்பு முடிந்திருந்ததால், சொல்லிக் கொள்ளும்படியான வருமானம் வர ஆரம்பித்திருந்த காலகட்டம் அது.

இரு பெண்களுக்கும் ஒரே கல்லூரி தான் என்றாலும் பாடப்பிரிவும் விடுதி கட்டிடமும் வேறுவேறு. அதனால் சரண்யாவை அடிக்கடி பார்க்கும் நிலை ஏற்படாது என்றெண்ணியே சசிசேகரனும் அங்கே சேர்ந்து படிக்க சம்மதித்திருந்தான்.

ஆனால் இரண்டு பெண்களும் அப்படி இருக்கவில்லை. அந்தகால கட்டத்தில் சகஜமாகத் தொடங்கியிருந்த அலைபேசியும் பெண்களின் பிணைப்பை அதிகப்படுத்தியது. சசிசேகரன் அழைக்கும் பெரும்பலான நேரங்களில் துளசி சரண்யாவோடு தான் இருப்பாள்.

ஏன் எதற்காக அவளுடன் இருக்கிறாய் என ஆரம்பத்தில் கேட்டவன், நாட்போக்கில் விட்டுவிட்டான். பெண்களின் விருப்பத்தில் ஒரளவிற்கு மேல் தலையிடுவது, சுவற்றில் முட்டிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்து கொண்டதால் வந்த ஞானோதயம் அது.

ஆனால் தனது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அதே சிடுசிடுப்புடனும் கடுப்புடனும் தான் நாட்களை கடத்திக் கொண்டிருந்தான்.

அவனது வாழ்வில் அடுத்தடுத்து படையெடுத்த இன்னல்களும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சரண்யாவின் குடும்பத்துடன் இருந்த தொடர்பை முற்றிலும் துண்டித்திருக்க, இவளிடம் பேசாதது ஒன்றும் பெருங்குறையாகவே தோன்றவில்லை.

இவனது வெறுப்பை ஓரளவிற்கே பொறுத்துப் பார்த்த சரண்யாவும், ‘நீயெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல’ என்கிற ரீதியில் அவனை தவிர்க்க தொடங்கினாள்.

கொட்டக் கொட்ட குனிபவளாக இவள் அமைதியாக இருந்திருந்தால், அவனும் அப்படியே வெறுப்போடு பயணித்திருப்பான்.

ஆனால் சரண்யாவோ கோபமும் கடுப்பும் உனக்கு மட்டுமல்ல, எனக்குமே சொந்தமானதென்று அவனை பார்க்கும் பார்வையிலும் பேசும் வார்த்தையிலும் அலட்சியப்படுத்தி விட, முடிவில் இவன்தான் தவிக்க ஆரம்பித்தான்.

பெண்ணின் பாரமுகத்தை அத்தனை எளிதாக சசிசேகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவர்களின் பக்கம் தவறை வைத்துக் கொண்டு எகத்தாளத்தை பார் என மனதிற்குள் உறுமினான்.

பாதிக்கபட்டவன் நானே அமைதியாக இருக்கும் போது இவளுக்கென்ன அத்தனை வீம்பு? என்னை அலட்சியப் படுத்துவதால் இவளுக்கென்ன லாபம் என குமைந்தான்.

முடிவில் இவளை பார்க்காமல் இருந்தால் தோன்றும் தவிப்பும், நேரில் பார்த்தால் மனம் படும் அவஸ்தையும் இவளின் மீது, தான் கொண்டது காதல்தான் என்று கட்டியம் கட்டி கூற, மொத்தமாய் பின்னடைந்தான் சசிசேகரன்.

நாளுக்கு நாள் சசிசேகரன் தன்னை விலக்கி வைப்பதன் அளவு கூடிக்கொண்டே போனதில், மனதளவில் சரண்யாவும் உடைந்தே போனாள். அழுதே சாதிக்கும் ரகமென்றால் வாய்விட்டே புலம்பியிருப்பாள். ஆனால் இவளின் சுபாவம் அப்படியல்லவே!

எதையும் ஆளுமையாக உத்தரவிட்டே, சொல்லியும் கேட்டும் பழக்கப்பட்டவளுக்கு அவனின் மேல் இருந்ததெல்லாம் கோபம் கோபம் மட்டுமே!

அவனின் மேலுள்ள ஆதங்கமெல்லாம் கோபமாய் தோழிகளிடத்தில் வெளிப்படுத்திட, அவர்களின் ஆராய்ச்சி பார்வையில் பலவந்தமாய் சிக்கிக் கொண்டாள்.

இவளது கோபத்தின் கருப்பொருளை அறிந்து கொண்ட தோழிகளும், சசிசேகரனின் மீது அவள் கொண்ட ஈடுபாடுதான் காரணமென்று சொல்லி அவளை வாயடைக்க வைத்தனர். அதனை மறுத்த வீம்புக்காரியோ ஆற்றாமையுடன் தன்னிரக்கத்தில் வெடிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தாள்.

துளசி கல்லூரியில் முதலாம் ஆண்டை நிறைவு செய்த நேரம், அவளின் பிறந்தநாளை ஒட்டி பத்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்திருந்தான் சசிசேகரன்.

தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியவன், தினமும் தங்கையை பார்த்து பேசிவிட்டு, முடிந்தால் அவளை வெளியே அழைத்து சென்றும் வருவான். அந்த நேரங்களில் துளசி வம்படியாக சரண்யாவையும் தன்னுடன் அழைத்துக் கொள்வாள் துளசி.

வீட்டிற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்திருந்தவளுக்கு அது பெரிய ஆறுதலாக இருந்தாலும், சசிசேகரனின் ஒதுக்கத்தை நினைத்தே, சரண்யாவும் அவர்களுடன் செல்ல வேண்டாமென ஒதுங்கி விடுவாள்.

“உன் அண்ணன், என்னை பார்த்தாலே பொறிக்க வைச்ச சோளமா வெடிப்பான்… இதுல நானும் கூட வந்தா உன்னையும் சேர்த்தே ஃப்ரை பண்ணிடுவான் துளசி!”

“அவன் கூட்டிட்டு போறான்னு ஏன் நினைக்கிற? நமக்கு கருப்பு பூனையா காவலுக்கு வர்றான்னு நினைச்சுக்கோ! அவன் பேச்சுக்கு பயப்படுற ஆளா நீ?” என்ற துளசியின்  சீண்டலில், இவளும் சிலிர்த்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

துளசி சொன்னபடியே இவர்கள் முன்னே நடக்க, அவன் பின்னே வந்தான். அந்த வணிக வளாகத்தில் இருந்த மூன்று மணிநேரமும் ஒரு வார்த்தை கூட இவளிடம் பேசவில்லை, இவளை பார்ப்பதையே தவறென்று, வெட்டி விட்டு தொடர்ந்து வந்தான். இதையெல்லாம் பார்த்தவள், அறைக்கு வந்ததும் தோழிகளிடம் தாளமுடியாமல் புலம்பித் தள்ளி விட்டாள்.

“என்கூட பேசல, சிரிக்கல… ஏன் நான் இருக்கேன்னு கண்டுக்கவே இல்லை. மூணாவது மனுஷி மாதிரி என்கிட்ட நடந்துக்கிட்டான்” தோழிகளிடம் புலம்பியவளின் கண்களும் ஏனோ கலக்கம் கொண்டது

“சரி, சரி… இதெல்லாம் புதுசா என்ன? ரெண்டு வருஷமா இப்டிதான் சுத்துறான்னு நீதானே சொன்ன சரணி?” தோழிகளில் ஒருத்தி ஆறுதல் கூற வர,

“எதுக்கும் ஒரு அளவு வேணாமா? அவனை சப்போர்ட் பண்ணி யாரும் பேச வேணாம்… போங்கடி அந்த பக்கம்….” என கடுகடுத்தாள்.

“அடியே சரணி! அவன் மேல உள்ள கோபத்துக்கு, எங்கமேல எரிஞ்சு விழறியா?” சண்டையுடன் இன்னொருத்தியும் வர,

“எனக்கு கோபமா வருது அவனை நினைச்சா… அவன் பேசாததை நினைச்சா ஆத்திரமா வருது” பல்லை கடித்து தன் கோபத்தை அடக்கினாள் சரண்யா.

“போடி பைத்தியம்! ஏன்டா என்கூட பேசலன்னு மெசேஜ் பண்ணி கேட்குறத விட்டுட்டு இப்படியா வாயால வடகம் பொரிப்ப?”

“அன்னைக்கு துளசி, இவன் நம்பர் கொடுத்தா… ஹாய்னு மெசேஜ் அனுப்பி, ஒரு வாரம் தொடர்ந்து குட்மார்னிங் மெசேஜ் கூட ஷேர் பண்ணேன்…” என பாவமாய் கூற,

“ஓஹ்… அவ்வளவு தூரம் போயிருக்கா கதை! பதிலுக்கு அவன் என்ன செஞ்சான்?”

“இப்போ வரைக்கும் ஒரு ரிப்ளையும் இல்ல… ஹாய்ன்னு கூட அனுப்பல தெரியுமா? அதான், நானும் சரிதான் போடான்னு அனுப்புறதை விட்டுட்டேன்” சின்னப்பெண் போல சிணுங்குபவளை சிரிப்புடன் பார்த்தார்கள் தோழிகள்.

“அவன் சும்மா இருந்தா, அப்பிடியே விட்டுடுவியாடி?” ஒருத்தி அவளை உசுப்பேற்ற,

“அவன் ரிப்ளை பண்ணலைன்னா என்ன? நம்ம கடமைய நாம தொடர்ந்து செய்வோம். இப்பவே ஹாய் மெசேஜ் அனுப்பி அவனுக்கு கடுப்பேத்துவோம். டோன்ட் வொர்ரி!” மற்றொருத்தியும் அலைபேசியை கையில் எடுத்து ‘ஹாய்’ என அவன் எண்ணிற்கு செய்தி அனுப்பினாள்.

சரண்யா வேண்டாமென தடுக்கும் முன்னர் சசிசேகரனுக்கு மெசேஜ் போயிருந்தது.

ஒருபக்கம் சந்தோசமாகவும் மறுபக்கம் அவன் செய்தியை பார்ப்பானா, பதில் அனுப்புவனா என ஆர்வமாகவும் நொடிக்கொரு முறை அலைபேசியை பார்த்துக் கொண்டாள்.

“அவன் மூஞ்சிய தூக்கி வைச்சிருக்கும் போதே, ஏன்டா இப்படி இருக்கேன்னு சட்டைய பிடிச்சு சண்டை போட்டிருக்கலாம். அத விட்டுட்டு இப்படி சினிமா ஹீரோயின் மாதிரி அவன்தான் வந்து பேசணும், வழியனும்னு ஏன் எதிர்பார்க்கற?” தோழிகள் கேள்வியில் நிறுத்த,

“அவன் எதுவும் பேசாம நானா எப்படி பேசுறது?” பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சரண்யாவின் அலைபேசியில் செய்தி வந்ததிற்கான மணியோசை ஒலித்து அடங்கியது.

எப்படியோ சசியிடம் இருந்து பதில் வந்து விட்டதென, முகம் மலர்ந்த சரண்யா, அவனது ஹாய்-க்கு பதில் அனுப்ப தொடங்கினாள்

“ஹாய் சசி…”

“ம்ம்… சொல்லு சரண்யா!” பதில் டெக்ஸ்ட் வந்ததும் பெண்ணின் மனம் தானாய் சுருங்கிக் கொண்டது.

‘ஏன் வழக்கமான இவனது சரண் என்னவாயிற்று?’ என்று உரிமையாகவே எதிர்பார்க்க தொடங்கினாள்

“பிஸியா சசி?”

“லிட்டில் பிஸி… அப்புறம் கூப்பிடுறேன்” தானாகவே பேச்சை முடித்துக் கொண்டான் சசிசேகரன்.

“ஒஹ் சாரி… அப்புறம் பேசலாம்” சுணங்கிய மனதோடுதான் அவளும் பதில் சொடுக்கினாள்.

இங்கே சரண்யாவின் மெசேஜை பார்த்ததும் சசிசேகரனுக்கும் வானுக்கும் பூமிக்கும் தாவ வேண்டுமேன்றே தோன்றியது. துளசியிடம் சொல்லி தனது அலைபேசி எண்ணை சரண்யாவிடம் கொடுக்க சொன்னதே இவன்தான்.

ஏதோ ஒரு சமயத்தில் தேவைப்படலாம் என்ற நோக்கத்தோடு கொடுக்க சொல்வதாகவும் காரணத்தையும் கூறியிருந்தான்.

ஆனால் எதிர்பாரா விதமாக அவளிடமிருந்து தினமும் அலைபேசி வழியாக செய்தி வந்ததும் மனமெங்கும் பூரித்துப் போனான். ஆனால் அதற்கு பதில் அனுப்பினால் நேரிலும் பார்த்து பேச வேண்டும்.

பிறகு அதுவே வேண்டாத வினைகளை இழுத்து விடுமென அஞ்சியே கண்டும் காணாததைப் போல் இருந்து விட்டான். அவளும் ஒருவாரம் அனுப்பியவள் அலுத்துபோய் நிறுத்தி விட்டாள்.

இப்பொழுது மீண்டும் அவளிடமிருந்து செய்தி வந்ததும் விளங்காத பரவச உணர்வில் தத்தளிக்க தொடங்கினான். முன்தினம் கோபமுகத்துடன் வெட்டும் பார்வை பார்த்தவள், மீண்டும் தானாகவே அழைத்ததும் உடலும் மனமும் கூத்தாடத் தொடங்கியது. இவளுடனான நட்பை இந்தளவிற்கு தேடுகிறானா என்று தன்னைதானே கேட்டுக் கொண்டான்.

அதற்கு பிறகான நாட்களில் சென்னையில் இருக்கும் போதெல்லாம் ஒரு ஹைஃபர் ஆக்டிவ் மோடிலே தான் வலம் வந்தான். நொடிக்கொரு முறை கைபேசியை எடுப்பவன், சரண்யா ஆன்லைனில் இருக்கிறாளா என பார்ப்பதும் மீண்டும் கைபேசியை அணைப்பதுமாக படபடத்தான்.

இரண்டு வருடத்திற்கு முன்னால் தீபாவளியன்று, சிறியவர்கள் அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அலைபேசியில் சேமித்து வைத்து, சரண்யாவின் முகத்தை மட்டும் பெரிதுபடுத்தி ரசிக்க ஆரம்பித்தான்.

அழகான பெரிய கண்கள், அளவான சின்ன உதடு, கூர் நாசி, முகத்தில் விழுந்த சில முடிகற்றைகளும் முகத்திற்கு தனி சோபையை கொடுக்க, கைபேசி வழியே அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் சரண்யா.

புகைப்படத்தில் அவள் முகத்தை மென்மையாக வருடியவன், தன்னுள் நுழைந்து, தன்னை ஆக்கிரமித்தவளின் நினைவில் அமிழ்ந்து தொலைந்து போனான். அவனால் அதை மட்டும்தான் செய்ய முடியும்.

அந்தஸ்து, இனம், பாரம்பரியம் என எல்லாவற்றிலும் வேறுபட்டு நிற்கும் இருவரும் இணைவதென்பது கனவிலும் நடக்காத விசயமாகத்தான் இருக்கும். இரு குடும்பத்தினிடையே நிலவும் சாதகமற்ற சூழலையும் மனதில் வைத்தே அவளிடமிருந்து தள்ளியே நின்றான் சசிசேகரன். 

கைக்கு எட்டா கனியாகவே அவளிருக்க, தொலைவில் இருந்தே பார்த்து ரசிப்பவனாய் தன்னை தயார்படுத்திக் கொண்டான். எள்ளவும் தனது மனதில் உள்ளதை வெளியே காட்டாமல் தன்னை பூட்டிக் கொண்டு நடமாடினான்.

அடுத்த வாரம் துளசியின் பிறந்தநாளில், தங்கையை வெளியே அழைத்து செல்வதாய் சொல்லியிருந்தான் சசிசேகரன். அந்த நாளும் வந்து விட்டிருந்தது. நேராக விடுதிக்கு சென்று, வார்டனிடம் தான் வந்த காரணத்தை கூறி அவளை வெளியே அழைத்து செல்ல அனுமதியும் வாங்கி விட்டான்.

துளசி ரெடியாகி வர, வெளியே அவளுடன் சரண்யாவும் இணைந்து கொள்ள, சசிசேகரனுக்கு நடப்பது என்னவென்று புரியாத புதிராகத்தான் போனது.

“நாந்தான் கூப்பிட்டேண்ணா… ஒருவேள நீ வராம போனா, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வரலாம்னு பிளான் பண்ணோம்!”

“இவ வெளியே வர்றதுக்கு பெர்மிஷன் வாங்க வேணாமா?” விளங்காத பார்வையில் கேட்ட சசியை பார்த்து மெலிதாய் சிரித்த சரண்யா,

“அதுக்கெல்லாம் ஆள் செட் பண்ணிட்டு தான் பிளான் போடுறதே!” என மிதப்பான பார்வை பார்க்க,

‘இங்கே வந்தும் உன் ஆட்டம் அடங்கலையா?’ என்ற கடுப்புடன் அவளை பார்த்தான் 

சென்னை வடபழனி கோவிலுக்கு மூவரும் ஒன்றாக காரில் பயணித்தனர். இவன் முன்புறமும் பெண்கள் பின்புறமும் ஏறிக்கொள்ள சீரான வேகத்தில் காரும் பயணித்தது.

முன்புறம் அமர்ந்தவன் கர்ம சிரத்தையாக சாலையை பார்த்து, டிரைவரிடம் மட்டுமே பேசிக்கொண்டு வந்தான். இவளை பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்க்கிறான் என்று அறிந்து கொண்டவளின் மனமும் அவனை கோபத்தில் அர்சிக்க தொடங்கியது.

“ரொம்ப முக்கியம்டா! இப்ப டிரைவர் கூட பேசுறது. திரும்பி கூட பார்க்க மாட்டியாடா தடியா? டிக்கில அடைச்ச  லக்கேஜ் மாதிரி எங்களை கூட்டிட்டு போறதுக்கு, ரூம்லேயே இருந்திருக்கலாம்” மனதோடு அவனுக்கு பழிப்பு காட்டியவள், அவனுக்கு போட்டியாக சென்னை மாநகரை பார்வையிடத் தொடங்கினாள்.

துளசிக்கோ தோழியோடும் சகோதரனோடும் பிறந்தநாளை கொண்டாடப் போகிறோம் என்ற நினைவே மகிழ்ச்சியை தந்தது. பெற்றோர் அடுத்தடுத்து மறைந்த பிறகு வரும் பிறந்தநாள் இது. அவர்கள் இல்லாத குறையே தெரியாத வண்ணம் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யும் அண்ணனின் அக்கறையில் மனம் பூரித்துப் போயிருந்தாள்.

அத்துடன் தோள் சாய்த்துக் கொள்ளும் நட்பான சரண்யாவிடம் வந்து சேர்ந்த பிறகு, அவளுக்கு பெற்றோரை இழந்த வேதனையும் சற்று மட்டுபடத்தான் செய்திருந்தது. எந்த நிலையிலும் இந்த மகிழ்ச்சியை விட்டுக் கொடுக்கும் மனமில்லை இவளுக்கு.

இதன் காரணமே தன் அண்ணன் வந்தாலும் வராவிட்டாலும் சரண்யாவுடன் பிறந்தநாளினை கொண்டாடுவது என்ற முடிவினை எடுத்து, அதனை செயல்படுத்தியும் கொண்டிருந்தாள்.

கோவில் வந்ததும், “உள்ளே போலாமா?” என கேட்டபடியே நடந்தவன், பின்னால் இவர்கள் வருகிறார்களா என்று திரும்பியும் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தான்.

“உன் அண்ணனுக்கு என்னதான் பிரச்சனை துளசி? இப்படி உம்முன்னு தான் இன்னக்கு ஃபுல்லா நம்ம கூட இருக்க போறானா?”

“யாருக்கு தெரியும் சரணி? என்கூடவும் சரியா பேசல…”

“ஒருவேள, ஏடாகூடமா எதையாவது உள்ளே தள்ளிட்டு, பேதியாகி அவஸ்தை படுறானோ?” துடுக்குடன் தன் இயல்பில் பேசிவிட, முன்னால் சென்று கொண்டிருந்த சசிசேகரன் இவர்களை முறைத்துப் பார்த்தான்.

‘அடிப்பாவி! கொஞ்சம் கெத்து காட்டி ஒதுங்கலாம்னு பார்த்தா… என்னை வாரிவிட்டே புதைகுழியில தள்ளிடுவா போலிருக்கே… இன்னைக்கு மட்டும் இவகிட்ட இருந்து என்னை காப்பாத்திடு… முருகா! உன் வேலுக்கு பாலாபிஷேகம் பண்றேன்’ சசிசேகரன் மனதோடு வேண்டிக் கொண்டதை பெண்களால் அறிய முடியவில்லை.

தரிசனம் முடித்து கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்த வேளையில்,

“வேலை எல்லாம் எப்படி போகுது சசி?” தானாகவே பேச்சினை ஆரம்பித்தாள் சரண்யா.

இந்த சிடுமூஞ்சி பேசி விடுவானென்று பார்த்துக் கொண்டிருந்தால், தனக்கு பேசவும் மறந்து விடுமோ என்ற பொல்லாத பயம் மனதை கவ்வ, துணிந்து அவனோடு மல்லுகட்டவென களத்தில் குதித்து விட்டாள்.

“ம்ம்… நல்லா போகுது”

“என்ன டெஷிக்னேஷன்?”

“இப்போதைக்கு ட்ரைனிங்ல இருக்கேன் சரண்யா… போஸ்டிங் வர இன்னும் கொஞ்சநாள் ஆகும். அதுவரை ஊருக்குஊர் மாறிட்டே இருக்க வேண்டியதுதான். இந்த வருஷம் தான் மாஸ்டர் அப்ளை பண்ணேன்” என நீளமாக பேசியவன்,

“நீ எப்படி இருக்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” இடைவெளி இல்லாமல் கேள்வியும் கேட்டுவிட, நம்பமுடியாத பாவனையில் பார்த்தாள்.

“இப்பதான் கேட்கனும்னு தோணிச்சா? நடந்தத மனசுல வைச்சுட்டுதான் என்கூட பேச அவாய்ட் பண்றியோனு நினைச்சேன்”

“அதெல்லாம் விடு சரண்யா! ஒரு கட்டத்துல ஆறுதல் சொல்லக் கூட ஆளில்லாமா தவிச்சதோட வலி, சில நேரம் இப்படி பிஹேவ் பண்ணிடுறேன்! மனசுல வச்சுக்காதே!” கனமாகிப் போன இதயத்துடன் பேசியவனின் கைகளை துளசி ஆதரவாக பிடித்து ஆறுதல்படுத்த, அத்தோடு சரண்யாவும் அமைதியாகிப் போனாள்.

கிட்டத்தட்ட இரண்டு வருட முகத்திருப்பல் முடிவிற்கு வந்ததைப்போல இருந்தாலும், அத்தனை வெளிப்படையாக இருவரும் பேசிவிடவில்லை. முகத்திருப்பல்கள் தொடரத்தான் செய்தன.

மதிய உணவினை முடித்துக் கொண்டு கடற்கரைக்கு வர, அங்கே துளசியின் வகுப்பு தோழிகள் அவளை பிடித்துக் கொண்டனர். முதல்நாளே பேசிக் கொண்டபடி தோழிகள் அனைவரும் ஒன்றாக குழுமியிருந்தனர். அவர்களுடன் கடலில் விளையாடவென அவள் சென்றுவிட, சரண்யா ஒதுங்கிக் கொண்டாள்.

உள்ளுக்குள் புழுங்கி கொண்டு, முறைப்பவனின் அருகாமையில் பெண்ணவள் நேரத்தை எவ்வாறு கடத்த போகிறாள்? அடுத்த பதிவில் காண்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!