தாரகை 20

வாழ்க்கை.

நாம் ஒன்று  நினைத்திருக்க அது  வேறு ஒன்றை நடத்தி முடித்திருக்கும்.

அப்படி தான் நடந்து முடிந்ததன் வலியை ஏற்க முடியாமல் சிலையென சமைந்திருந்தான் காவ்ய நந்தன்.

அவன் முகத்திலிருந்தது கோபமா, பரிதவிப்பா, குற்றவுணர்வா ஆற்றாமையா?

மொத்தத்தில் உணர்வுகளின் கொதிப்பில் நின்றிருந்தான்.

“பேஷண்ட் முழிச்சுட்டாங்க” என்று நர்ஸ் வந்து சொல்லவும் சட்டென்று எழுந்த காவ்யன், மற்றவர்களிடம் தான் பார்த்து கொள்வதாக கையசைத்துவிட்டு வேகமாய் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான்.

உள்ளே வந்த காவ்ய நந்தன் அணு அணுவாய் எழில்மதியை விழிகளால் உள் வாங்கினான்.

சுற்றி மருத்துவ உபகரணங்களின் பிடியில் சோர்ந்து போய், படுக்கையில் வீழ்ந்து கிடந்திருந்தாள் அவள்.

தன்னை நோக்கி வந்தவனை ஒளிர்வற்ற கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த எழில்மதிக்கு தேவையான எல்லாவற்றையும் நான்கு நாட்களாக அவன் தான் தாயை மாறி  கவனித்துக் கொண்டான்.

ஆனால் அவளிடம் ஒரு வார்த்தை பேசினானில்லை. அவளே பேச வந்தாலும் ஒரே கண் பார்வையில் அவளை அடக்கிவிடுவான்.

ஏற்கெனவே வலியில் இருப்பவளின் மீது கோபத்தை காட்டி மேலும் வலிக்க வைத்துவிடுவோமே என்ற பயத்தில் அவனும் பேசவில்லை.  அவளையும் பேசவிடவில்லை.

எழில்மதியோ தன் வயிற்றையே வருடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதையோ இழந்த உணர்வு.

அவள் உடல்  நிலை கருதி, குழந்தையைப் பற்றிய விஷயத்தை யாரும் அவளிடம் சொல்லவில்லை. ஆனால் இத்தனை நாட்களாக இன்னொரு உயிரை உள்ளுக்குள் சுமந்தவளுக்கோ நெஞ்சு கூடு காலியானதைப் போல ஒரு உணர்வு.

தன்னருகில் அமரந்து பழத்தை வெட்டிக் கொண்டிருந்த காவ்ய நந்தனின் கையைப் பிடித்தவள், “குழந்தை?” என பரிதவித்த முகத்தோடு அவன் முகத்தைப் பார்த்து கேட்க இவன் வேதனையாய் தலை குனிந்தான்.

அவனுடைய மௌனம் இவள் பயத்தை மேலும் அதிகரிப்பதாய்.

“இரண்டு மாசமா நிறைஞ்சு இருந்த வயிறுக்குள்ளே இப்போ வெறுமையா இருக்க மாதிரி இருக்கு” தன் வயிற்றில் அவன் கையை அழுத்தமாக வைத்துவிட்டு  சொல்ல துடித்துப் போய் நிமிர்ந்தான்.

“ரெண்டு மாசம் தானா?” என்று கேட்டவனின் நெற்றி சுருக்கங்கள் எதையோ கணக்குப் போட்டது.

“ஆமாம்” என்று வலியோடு தலையசைத்தவள் ட்ரிப்ஸ் போட்ட கையோடு தலையில் அடித்துக் கொண்டாள்.

“நான் பாவி! குழந்தைக்கு இந்த நிலைமை வர நான் தான் காரணம். நம்ம குழந்தை வயித்துலே இருக்கிறது முன்னாடியே தெரிஞ்சு இருந்தா நான் ஊரை விட்டு போய் இருப்பேனே… இப்படி என் குழந்தை என்னை விட்டு போய் இருக்காதே” உடைந்து அழுதவளைக் கண்டு உடைந்துப் போய் நின்றான்.

“அப்போ கூட ஊரை விட்டு தான் போய் இருப்பியா? என் கிட்டே வந்து இருக்க மாட்டியா எழில்?” என்று கேட்டவனுக்குள் மலையை தூக்கி மனதிற்குள் வைத்ததைப் போல பாரம்.

“எப்படி மாமா வர முடியும்? உங்களுக்கு என் மேலே காதலும் இல்லை எந்தவிதமான நல்ல அபிப்ராயமும் இல்லை… அப்புறம் எந்த முகத்தை வெச்சுட்டு உங்க முன்னாடி வந்து நிற்க முடியும்?” என்றவளின் கேள்விக்கு அவனிடம் மௌனமே பதிலாக.

“நான் எல்லா உண்மையும் உங்க கிட்டே வந்து முன்னாடியே சொல்லியிருந்தா, ஏன் என்னை அடிச்சுட்டு உன்னை உன் கற்பை காப்பாத்திக்கலைனு கேட்டிருப்பீங்க தானே?”  என்றவளின் கேள்விக்கு ஆம் என்பதைப் போல மௌனம் காத்தான்.

“எப்படி மாமா உங்களை அடிக்க எனக்கு மனசு வரும். உங்களுக்கு நான் எப்படியோ தெரியாது, ஆனால் எனக்கு நீங்க உயிர்… உங்களை காயப்படுத்த மனசு வரலை மாமா” என்றவளின் விழிநீர் அவன் உயிரை சுட்டது.

“ஒரு பெண்ணுக்கே உரிய பயம் எனக்கும் இருக்கும் தானே மாமா… எல்லா உண்மையும் சொன்ன அப்புறம் என்னை நம்பாம நீங்க தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டா? இல்லை என்னை நம்பலைனா? இல்லை உங்களை மயக்க தான் இப்படி பண்ணேனு சொல்லிட்டா? இதே மாதிரி நிறைய கேள்வி,குழப்பம்,பயம் மாமா…” என்றவளுக்கு அந்த நாள் தான் பட்ட கஷ்டங்கள் மனதிற்கு நினைவு வந்து வருத்தியது.

அவன் ஊரார் முன்பு அசிங்கப்படக்கூடாது என்று யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டை விட்டு வந்தவள் அவனிடம் உண்மையை சொல்லிவிடலாமா என எத்தனையோ தடவை நினைத்திருக்கிறாள்.

தன் அண்ணனின் மீது ஏற்கெனவே பகை கொண்டிருப்பவன். தன்னை நிமிர்ந்தும் கூட பாராதவன் அவன்.

நடந்த உண்மையை சொன்ன பிறகு காவ்யனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை நினைத்தாலே அவளுக்குள் உதறியது. ஆனாலும் சொல்லி பார்க்கமாலே என்ற முடிவோடு அவள் நிமிரும் போது தான் காவ்ய நந்தனுக்கு திருமணம் என்ற செய்தி அவள் காதில் வந்து விழுந்தது.

அதுவும் தன் அண்ணன் காவ்யனின் கல்யாணமத்தை நிறுத்துவதற்கு எந்த சதி வேண்டுமானாலும் என சவால் விட்டது தெரிந்து இவள் வயிற்றில் பய உருண்டை உருண்டது.

வேகமாய் எடுத்து வைத்த அவளது கால்கள் மௌனமாய் பின்வாங்கியது.

“எல்லா உண்மையும் உங்க கிட்டே சொல்லலாம்ணு வந்த அப்போ உங்களுக்கு கல்யாண ஏற்பாடு நடந்துட்டு இருந்தது. இப்போ வந்து உண்மையை சொன்னா கல்யாணத்தை நிறுத்த பொய் சொல்றதா நினைச்சுட்டா… அதனாலே அமைதியா இருந்துட்டேன் மாமா” என்றவளின் விழிகளில் தாரை தாரையாய் நீர் கொட்டியது.

“உங்க வாழ்க்கையிலே இனி குறுக்கிட கூடாதுனு நான் விலகிப் போக முடிவெடுத்து சென்னையிலே என் ப்ரெண்ட் மூலமா வேலைக்கு ஏற்பாடு பண்ணேன். ஆனால்…” என்றவளால் அதன் மேல் பேச முடியவில்லை. வெறுமையாக இந்த தன் வயிற்றையே அவள் கரங்கள் பரிதவிப்போடு வருடி கொடுத்தது.

“ஆனால் அதுக்குள்ளே உங்க குழந்தை என் வயித்துலே தன்னோட இருப்பை காட்டி கொடுத்துடுச்சு…” என்றவள் தேம்பி தேம்பி அழ காவ்யன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு மெல்ல கண்ணீரை துடைத்துவிட்டான்.

“ஒரு புறம் அங்கே உங்க கல்யாணத்தோடே மேள தாள சப்தம் காதுக்குள்ளே விழுந்து என் மனசை ரணப்படுத்திட்டு இருக்க, இன்னொரு புறம் அதை தாங்க முடியாம இங்கே மயங்கி கீழே விழுந்தேன்… அதைப் பார்த்து பயந்த என் அண்ணா டக்குனு டாக்டரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான். அப்போ தான் உங்க குழந்தை என் வயித்துலே வளரதே எனக்கு தெரியும்” என்றவள் தேம்பவும் அவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“யார் குழந்தைக்கு காரணம்னு  கேட்டு அண்ணா மிரட்டுனான்… அப்பவும் உண்மையை சொல்லாம அமைதியா தான் இருந்தேன். ஆனால் நம்ம குழந்தையை கொன்னுடுவேனு சொன்னதோடு மட்டுமில்லாமல் அதுக்கான மாத்திரையையும் கலந்து என் வாயிலே ஊத்த பார்த்தான். நம்ம குழந்தையை காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலை மாமா… அதான் அன்னைக்கு” என்றவளின் முகம் அன்றைய வேதனையில் கசங்கியது.

“என்னை மன்னிச்சுடுங்க மாமா. எந்த வலி உங்களுக்கு கொடுக்கக்கூடாதுனு நினைச்சேனோ அதே வலியை இரண்டு மடங்கா அன்னைக்கு உங்களுக்கு கொடுத்துட்டேன்…” என்றவள் வார்த்தையைக் கேட்டு அவன் முகம் எஃகு துண்டாய் இறுகிக் கிடந்தது. அதே இறுக்கம் அவளை அணைத்து கிடந்த கைகளில் வெளிப்பட எழில்மதி மௌனமாய் ஏறிட்டு அவனைப் பார்த்தாள்.

“அப்புறமாவது உண்மையை சொல்லி தொலைஞ்சு இருக்கலாமேடி…” என்று கேட்டவனின் முகத்தில் நடந்து முடிந்த சம்பவங்களின் வேதனை பரவிக் கிடந்தது.

“ஏற்கெனவே நீங்க ஊர் முன்னாடி அசிங்கப்பட்டதை நினைச்சு கஷ்டப்பட்டுட்டு இருந்தீங்க. இந்த நேரத்துலே உண்மையை சொல்லி மேலும் உங்களை உடைக்க விரும்பல. நீங்க என்னை விரும்புனதுக்கு அப்புறம் உண்மையை சொல்லலாம்னு நினைச்சேன். அப்போ தானே மாமா உங்களை உரிமையா தேத்த நான் பக்கத்துலே இருக்க முடியும்” என்றவள் கசங்கிப் போய் இருந்த அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“ஆனால் ஏன் மாமா என்னை நீ காதலிக்கவே இல்லை… என் மேலே இருந்த வெறுப்பு உனக்கு குறையவே  இல்லை” என கேட்டவளின் முகத்தில் அவன் அன்பை பெற முடியாத ஏக்கம் வானளவு விரவி கிடந்தது.

“நான் உன் பக்கத்துலே இருந்தா உனக்கு என் மேலே கோபம் இரண்டு மடங்காச்சு. வெறுப்பு பல மடங்கா கூடுச்சு. உன் சந்தோஷத்துக்காக, உன்னை விட்டு போகலாம்னு முடிவெடுத்தேன் மாமா. ஆனால் அதுக்குள்ளே நம்ம குழந்தை” என்று சொன்னவளால் மேலும் வார்த்தையை முடிக்கவில்லை. அடக்கி வைத்த துயரமெல்லாம் அடங்காமல் உடைப்பெடுக்க கதறி அழுதாள்.

“உன் உயிரை என்னாலே சரியா பார்த்துக்க முடியலை மாமா… வரமா வந்த பொக்கிஷத்தை இழந்துட்டேனே” என கேவி கேவி அழுதவளை தோளோடு அழுத்தி கொண்டவன் அவளுக்குள் உறைந்து கிடந்த உள்ள குமுறல்  எல்லாவற்றையும் கொட்டட்டும் என்று அமைதி காத்தான்.

மொத்தமாய் அழுது முடித்தவள், வற்றிப் போன கண்களோடு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவன் முகமங்கும் வேதனை நதி பாய்ந்து கொண்டிருந்ததது.

“நடந்து முடிஞ்சதுலே  எந்த தப்பும் உன் மேலே  இல்லை மாமா… தப்பு முழுக்க என் அண்ணா மேலேயும் என் மேலேயும் தான். அதனாலே முகத்தை தொங்க போடாம நிமிர்ந்து நில்லு மாமா” என்றவள் கலங்கிப் போய் கிடந்த அவன் முகத்தை நிமிர்த்தினாள்.

இருவரின் விழிப் புள்ளிகளும் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டது.

அவன் கண்களையே ஊடுரூவிப் பார்த்தவள், “கடைசியா ஒரே ஒரு கேள்வி உன் கிட்டே கேட்கணும் மாமா. உண்மையை சொல்லுவியா?” என்று  ஏக்கமாய் கேட்கவும் மௌனமாய் தலையாட்டினான்.

“என் மேலே உனக்கு காதல் கொஞ்சமாச்சும்  இருந்துச்சா… இல்லை இருக்குதா?” என்றவளின் கேள்விக்கு மௌனமாய் தலை குனிந்தான். 

அதைக் கண்டு விரக்தியாய் சிரித்தவள்,
“எனக்கு தெரியும் மாமா. எங்க குடும்பம் பண்ண கெடுதலுக்கு இந்த ஜென்மத்திலே மட்டுமில்லை ஏழேழு ஜென்மத்திலேயும் எங்களை பிடிக்காதுனு.. இப்போ கூட நீ என்னை பார்த்துக்கிறது பாசத்தாலே இல்லை குற்றவுணர்வாலேனு எனக்கு நல்லா தெரியும் மாமா” என்றவள் கொஞ்சம் கொஞ்சமாய் சாய்ந்திருந்த அவன் தோளிலிருந்து விலகினாள்.

“எல்லா தப்புக்கும் நான் தான் காரணம் அதுக்கான தண்டனையும் நான் தான் அனுபவிக்கணும், நீ இல்லை மாமா… நம்ம இரண்டு பேருக்குள்ளேயும் இருந்த ஒரே  ஒரு இணைப்பு நம்ம குழந்தை மட்டும் தான். அதையும் இப்போ இழந்துட்டேன். உன் காதலையும் என்னாலே இந்த ஜென்மத்துலே வாங்க முடியாதுனு தெரியும் மாமா. இனி உன் வாழ்க்கையிலே குறுக்கீடா நிற்க மாட்டேன். நான் போறேன்… நீயாவது சந்தோஷமா வாழு மாமா ” என்று சொன்னவளின் விழிகளில் கண்ணீர் இல்லை. வெறுமை மட்டுமே.

அவள் இறுதி வார்த்தைகளை கேட்டு அமிலம் பட்டாற் போல உதறிக் கொண்டு நிமிர்ந்தான் காவ்ய நந்தன்.

“நான் போறேன் மாமா… இனி உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்” என்றவளின் குரலில் தெரிந்த உறுதித்தன்மை காவ்ய நந்தனை அசைத்துப் பார்க்க மௌனமாய் அவளை வெறித்தான்.

அவன் நெஞ்ச கடலிலிருந்து நீங்கிப் போக பார்க்கிறதா இந்த தாரகை!