தாரகை 21

தாரகை 21

பறவைகளின் அணிவகுப்பு இல்லை.

மேகக்கூட்டங்களின் குவியல் இல்லை.

வண்ண வண்ண பட்டங்கள் பறக்கவில்லை.

வெறுமையாய் இருந்தது அந்த வானம், எழில்மதியின் மனதைப் போல.

இலக்கற்று எங்கோ வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.

என்ன தான் ஒருதலையாய் முடிவெடுத்து காவ்ய நந்தனை பிரிந்து தனியாக வந்துவிட்டாலும் இந்த தனிமையில் அவளிற்கு உவப்பில்லை. மனதினில் நிம்மதி இல்லை.

உள்ளமெங்கும் விரக்தியின் கூக்குரல். கைகளோ விடாமல் தன் மணி வயிற்றை வருடியபடியே இருந்தது.

“பாப்பா நீ ஏன்டா அம்மா விட்டுட்டு போன? அம்மா இப்போ தனியா ஆகிட்டேன் தெரியுமா?” தன் மணிவயிற்றில் கை வைத்து பேசியவளின் விழிகளில் கண்ணீர் கசிந்த நேரம் திலக் வர்மாவின் குரல் அருகே கேட்டது.

“எழில் மா சாப்பிடுறா” என்று சொல்லியவாறே தன் தங்கையின் அருகே சாப்பாடு தட்டை வைத்தான்.

ஆனால் அவளோ உணவு தட்டை திரும்பிக் கூட பாராமல், கடந்து உள்ளே செல்ல முயன்றாள்.

அதைக் கண்ட திலக் அவளின் கையை பிடிக்கவும், அமிலம் பட்டாற் போல கைகளை உதறினாள் எழில்மதி.

“சீ பாவம் பண்ண இந்த கையாலே என்னை தொடாதே… நீ சம்பாரிச்ச காசுலே நான் ஒரு பருக்கை கூட சாப்பிட மாட்டேன்” என்று சொன்னவளின் பார்வை தீயாய் அவளை முறைத்தது.

திலக் செய்த அந்த கேவலமான செயலிற்கு பிறகு எழில்மதி அவனோடு பேசுவதையே நிறுத்திவிட்டாள். அப்படி பேசினாலும் அவள் வார்த்தைகளில் அன்பு இருக்காது, அனல் மட்டுமே இருக்கும்.

திலக்கிற்கு இந்த நிராகரிப்பு பழக்கப்பட்டு போய் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் மனது அவள் வார்த்தைகளால் ஊமையாய் அழுவதை அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

“எழில் மா… அண்ணன் பண்ணது பெரிய தப்புடா, எனக்கு புரியுது… சத்தியமா இனி இப்படி நடந்துக்க மாட்டேன். அண்ணாவை நம்புடா, எனக்கு உன்னை தவிர்த்து சொந்தம்னு யாரு இருக்கா? நீயும் இப்படி பேசாம இருந்தேனா வலிக்குதுடா” பரிதவிப்பாய் சொல்லியபடி அவள் தலையை வருட போகவும், எழில்மதி சட்டென்று அவன் கையை தட்டிவிட்டாள்.

“இந்த பாசம், பாயாசத்தை எல்லாம் இனி நான் நம்ப மாட்டேன். நீ பாம்பு அண்ணா… நீயே மாற முயற்சி பண்ணாலும் உன் பல்லுலே இருக்கிற விஷம் மாறாது. திரும்ப திரும்ப கொத்த தான் வருவே” ஊசியாய் அவனை வார்த்தைகளால் குத்திக் கொண்டிருந்த நேரம் அவள் காதுகளில்  விழுந்தது ஒரு குரல்.

“பாம்போட பல்லை பிடிங்கிட்டா எல்லா சரியா போகிடும் எழில். அவன் பல்லை பிடுங்க தான் நான் இங்கே வந்து இருக்கேன்” வெட்டுக் கத்தி போல கூர்மையான வார்த்தைகளை வீசியபடி, காவ்ய நந்தன் உள்ளே நுழையவும் எழில் விழிகள் வியப்பில் விரிந்து கிடந்தது.

“மாமா” என்றவளின் வார்த்தைகளில் தான் எத்தனை அதிர்வு.

இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. ஒரு வேளை கற்பனை உருவமாய் இந்த முகம் மறைந்துப் போய் விட்டால்!

உள்ளுக்குள் உதித்த பயத்தோடு கண்களை மூடி மூடி திறந்தாள்.

“நிஜம் தான் நம்பு. எத்தனை தடவை கண்ணை மூடி நீ திறந்தாலும் என் உருவம் மறையாது” என்று எழிலைப் பார்த்து சொன்னவன்,

“வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு ஒரு சொம்பு தண்ணீ கூட கொடுக்க மாட்டியா மச்சான்” அந்த மச்சான் என்ற வார்த்தையில் காவ்ய நந்தன் அழுத்தம் அதிகம் கொடுக்கவும் திலக் வர்மாவின் முகம் அஷ்ட கோணலாகியது.

“மச்சான்… என்ன அப்படி பார்க்கிற” என்று மீண்டும் மச்சான் போடவும்,

“யாருக்கு யாருடா மச்சான்” என்று சிலிர்த்து கொண்டு காவ்ய நந்தனின் சட்டையில் கை வைத்தான் திலக் வர்மா.

“பரதேசி மேலே இருந்து கையை எடுடா…” என்று காவ்ய நந்தன் கோபத்தில் பதிலுக்கு சட்டையைப் பிடித்து முட்ட தயாராகவும்,

‘ஐயையோ இவங்க ரெண்டு பேரும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களே. இனி வீட்டுக்குள்ளே இரத்த ஆறு ஓடுமே’ என எண்ணியவாறே எழில்மதி சோர்வாய் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

அதைக் கண்டு பதறிப் போன காவ்யனும் திலக்கும் ஒருவர் சட்டை மீதிருந்து ஒருவர் கையை வேகமாய் பிரித்து எடுத்தனர்.

“என்னடா ஆச்சு?”  ஒரு சேர கேட்டபடி, எழிலின் அருகே ஓடி வந்தவர்கள்

“என் தங்கச்சியை பார்த்து எனக்கு தெரியும். நீ போடா அங்குட்டு”

‘நீ போடா இங்குட்டு” என அடித்துக் கொள்ளவும் எழிலுக்கு உண்மையிலேயே மயக்கம் வந்துவிட்டது.

அதைக் கண்டு கலவரமான காவ்யன், “தள்ளி போ டா நாயே… என் பொண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்று திலக்கைப் பிடித்து தள்ளிவிட்டு எழிலை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

காவ்ய நந்தன் உதட்டிலிருந்து வந்த ‘பொண்டாட்டி’ என்ற வார்த்தையில் எழிலின் முகமெங்கும் புன்னகை பரவியது.

விழியகலாமல் தன் கணவனையே பார்த்ததங்கையை கண்ட திலக் அவன் மீதிருந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, மௌனமாய் கதவை சாத்திவிட்டு வெளியேறினான்.

அவன் சென்றதை திருப்தியாக கண்ட காவ்யன், திரும்பி தன் மனையாளைப் பார்த்தான். அவளும் இமை தட்டாத பார்வையைக் கண்டு அவன் என்னவென்று புருவம் உயர்த்தினான்.

அதைக் கண்டு தன் மோன நிலையைக் கலைந்தவள், “நீங்க என்னை பொண்டாட்டினு சொன்னீங்க மாமா” என்றாள் ஆனந்த அதிர்வில் சிக்குண்ட மலராய்.

“பின்ன பொண்டாட்டியா பொண்டாட்டினு சொல்லாம, போன்டா டீனா சொல்லுவாங்க” எனக் கேட்டபடி தன் பையை திறந்து பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்தான்.

“ஆனால் இதுக்கு முன்னாடி என்னை நீங்க பொண்டாட்டியா  ஏத்துக்கலையே” ஏக்கமும் வருத்தமும் ஒரு சேர போட்டி போட்டு கேட்டவளின் வாயருகே காவ்யன்  பிஸ்கெட்டை வைக்கவும், மெதுவாக கடித்தாள்.

“அப்போ நீ பொய் சொன்னேன்ற கோவம் எழில். அதான் பொண்டாட்டியா ஏத்துக்க முடியலை… இப்போ தான் நீ பொய் சொல்லலைனு தெரிஞ்சுடுச்சே” என்று சொன்னவனின் கவனம் அவளுக்கு பிஸ்கெட் ஊட்டுவதிலேயே இருந்தது.

“இந்த ஒரு வேளை மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணி பிஸ்கெட் சாப்பிடு எழில். அடுத்த வேளை சாப்பாட்டை நாம நமக்கு தனியா சமைச்சுக்கலாம். அந்த நாய் காசுலே சாப்பிட வேண்டாம் சரியா” என சொல்லியபடி அடுத்த பிஸ்கெட்டை ஊட்ட அவனையே விழியகலாது பார்த்து வைத்தாள்.

“என்னடி இப்படி பார்க்கிற” எனக் கேட்டவனின் கண்களை மேலும் ஊடுருவிப் பார்த்தவள்,

“என்ன மாமா, திடீர்னு என் மேலே இவ்வளவு பாசம்? ஒருவேளை பரிதாபம் பார்த்து என்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டியா?” என்றாள் அவன் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் புரிபடாமல்.

அவள் கேள்வியில் விரக்தியாக சிரித்தவன், “காதல் அது இந்த ஜென்மத்திலே எனக்கு வராதுடி” என்றான் அத்தனை தீர்க்கமாக.

அந்த பதிலில் எரிச்சலான எழில்மதி, சட்டென்று அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தாள்.

“இப்போ எதுக்குடி தள்ளி போற” எனக் கேட்டபடி நந்தன் அவளருகில் இன்னும் நெருங்கி அமர்ந்து பிஸ்கெட்டை வாயில் ஊட்ட எத்தனிக்கவும், அவள் வாயை திறக்கவில்லை.

“வாயைத் திறடி” என்றவன் சொன்னாலும் அவளிடம் அசைவில்லை. அவனை விட்டு தள்ளி செல்வதிலேயே குறியாக இருந்தாள்.

“மாமா, காதல் இல்லாம அப்புறம் ஏன் என்னை தேடி வந்தீங்க?” குழப்பமும் கலக்கமும் குழைத்த பார்வையில் அவனைப் பார்த்தவள்,

“அன்பு எதுவும் இல்லாமல் வெறும் குற்றவுணர்வாலே நீங்க என்னை ஏத்துக்கிறதை நான் விரும்பலை” என்றாள் உடையத் துடித்த கண்ணீர் குமிழியை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு.

“நீ வேணா உன் காதலுக்காக என்னை விட்டு தள்ளி இரு, எழில்.  ஆனால் என்னாலே கட்டின பொண்டாட்டியை தனியா தவிக்க விட்டுட்டு இருக்க முடியாது” என்றவன் அடவாடிக்காரனாய் அவள் வாயில் பிஸ்கெட்டை நுழைக்க அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

அவள் அறிந்த காவ்ய நந்தன் இவனில்லையே. முன்பிருந்தவன் ஒதுங்கிப் போய் அவளை காயப்படுத்துவான். இவனோ நெருங்கி வந்து தன்னை சீண்டுகின்றான்.

ஏன் எதற்காக?

அவன் நிம்மதிக்காக, தான் அவனை விட்டு விலகி வந்து நின்றாலும் ஏன் இவன் விடாமல் இங்கே வந்தான்.

அவள் கேள்வியோடு அவனைப் பார்க்க,  காவ்யனோ தான் கொண்டு வந்த பையை எடுத்து சென்று எழில்மதி அறைக்குள் வைத்துவிட்டு வந்தான்.

“எல்லா கேள்வியும் நீயே கேட்டுட்டு என்னை பேச விடாமல் நீயே எல்லா பதிலையும் சொல்லிட்டு கிளம்பி இங்கே வந்துட்டே… ஆனால் என் பக்கத்திலே இருக்கிற கேள்வியையும் பதிலையும் நான் கேட்க வேண்டாமா, சொல்ல வேண்டாமா?” என்றவன் கூர்மையாய் கேட்க அதுவரை புரியாமல் முழித்துக் கொண்டிருந்த எழில்மதிக்கு அப்போது தான்  ஒன்று  புரிந்தது.

அவன் சம்பவம் செய்ய தான் இங்கு வந்திருக்கின்றான் என்று.

இனி சிறப்பாக திலக்கை வைத்து செய்யப் போகின்றான்.

💐💐💐💐💐💐💐💐

பொள்ளாச்சி.

இயற்கை எழிலை வஞ்சனையில்லாமல் குத்தகை எடுத்திருக்கும் பசும் பொழில்.

எப்பேற்பட்ட கவலையில் இருக்கும் மனதையும், இயற்கை அசைத்துப் பார்க்கும்.

அந்த அழகில் தன் மனையாளும் அசைந்துவிட மாட்டாளா என்ற ஏக்கத்தோடு அவளை அழைத்துக் கொண்டு இங்கே பொள்ளாச்சிக்கு வந்திருந்தான்.

காவ்ய நந்தன் பாட்டி கட்டளையை ஏற்று தன் பிறந்தநாள் அன்று எழில்மதியை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற நேரம் முகில் இங்கே தன் அன்னையிடம் வந்து நின்றான்.

மேகாவை அழைத்துக் கொண்டு கொஞ்ச நாட்கள்  வெளியே சென்றுவிட்டு வரவா என அவன் அனுமதி கேட்கவும் அவர்களும் மகிழ்ச்சியாக இவர்களை அனுப்பி வைத்தனர்.

தன் குடும்பமாகவே இருந்தாலும் தன் மனைவியின் இந்நிலை அறிந்து அவளை குறை சொல்லிவிட்டாலோ இல்லை தவறாக பேசிவிட்டாலோ அவனால் தாங்க முடியாது.

ஆதலால் மேகாவின் நிலை வீட்டினருக்கு தெரியும் முன்பே அவளை தன் அன்பால் மாற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் அவளை பொள்ளாச்சிக்கு கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.

எழில்மதிக்கு அப்படி ஆனதை முகிலிடம் சொல்ல வேண்டாம் என காவ்யன்  தடுத்துவிட்டதால் இவனுக்கு அண்ணிக்கு அப்படி ஆனது தெரியாது.

அவன் கவனம் முழுக்க முழுக்க இப்போது அவள் மனையாளின் மீது மட்டுமே இருந்தது.

எதுவும் பேசாமல் மௌனமாய் வானத்தை வெறித்து கிடப்பவளை பைக்கில் அமர வைத்துக் கொண்டு நாள் முழுவதும் சுற்றுவான்.

வெளியில் கிடக்கும் பசுமையைப் பார்த்து அவள் விழிகளில் வசந்தம் வராதா?

மென்மையாய் வீசும் தென்றல் காற்றில் அவள் கடின மனம் அசையாதா?

சுதந்திரமாய் வானில் பறக்கும் பறவைக்கூட்டங்களைப் போல அவளும் தன் கூட்டிலிருந்து வெளியே வந்து விட மாட்டாளா?

என பல முயற்சிகளை செய்து பார்த்தான். முடிவு என்னவோ பூஜ்ஜியம் தான். அவள் முகத்தில் எந்த உணர்வுகளையும் வர வைக்க முடியவில்லை அவனால்.

இன்றோடு இங்கு வந்து ஒன்றரை வாரம் ஆகிறது. ஆனால் நாட்கள் மாறுகிறதே தவிர அவளிடம் மாற்றமில்லை.

சோர்ந்துப் போனவனாக, கட்டிலில் அமர்ந்து எதையோ வெறித்தபடி இருந்த மேகாவை கண்களால் நோட்டமிட்டபடியே எல்லா காய்களையும் வதக்கிவிட்டு குக்கரில் போட்டு முடித்த நேரம்,  இயற்கை அவனை அவசரமாக அழைத்தது.

வேகமாக வெளியே வந்தவன், “மேகா மா… நான் இதோ வந்துடுறேன். இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திடு” என்று சொல்லிவிட்டு விசிலடித்தபடி போகவும் எதையோ யோசித்து கிடந்த மேகா சட்டென்று கவனம் கலைந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவன் அவசரத்தில் மூன்று தடவை விசிலடித்துவிட்டு போகவும், மூன்று விரலை மடக்கி விசிலை எண்ணிய இவளோ, சட்டென்று எழுந்துப் போய்
அடுப்பை அணைத்துவிட்டு மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்து எதையோ வெறிக்க துவங்கிவிட்டாள்.

கடமையை முடித்துவிட்டு வெளியே வந்த முகில், ஆசுவாச மூச்சுவிட்டு குக்கரை திறந்துப் பார்க்க, அவன் வைத்துவிட்டு போன காய் காயாகவே இருந்தது. வேகவே இல்லை.

யோசனையாய் திரும்பி மேகாவைப் பார்த்தவன், “ஏன் மேகா குக்கரை விசில் வராம நிறுத்துன?” என்றான் பசியில் காந்திய தன் வயிற்றை பிடித்தபடி.

“நீங்க சொன்னா மாதிரி இரண்டு விசில் வந்ததும் நிறுத்திட்டேன்”

“ஆனால் எனக்கு விசில் சத்தம் கேட்கவே இல்லையே” என்றான் நெற்றியை தேய்த்துக் கொண்டு.

“விசில் அடிச்சதே நீங்க தானே தெய்வம். உங்களுக்கு கேட்டு இருக்குமே” என்றவள் சொல்லவும்

‘குக்கர் விசிலை எண்ண சொன்னா, நான் அடிச்ச விசிலை எண்ணி வெச்சாட்டாளே’  முகில் தலையில் அடித்துக் கொண்டான்.

அருமை! அவனுக்கு அவனே விசிலடிச்சு சூனியம் வெச்சுக்கிட்டு போயிட்டான். இன்னைக்கு இரண்டு பேரும் சாப்பிட்டா மாதிரி தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!