தீங்கனியோ தீஞ்சுவையோ-10
தீங்கனியோ தீஞ்சுவையோ-10
வினய்யை அணைத்தப்படியே ப்ரணவ்வின் முகத்தைப் பார்த்தாள். அது உயிரற்றுப் போய் இருந்தது.உணர்வற்று போய் இருந்தது.. வெறுமை சூழ நின்று இருந்தது அவன் கண்கள்.
நான் போனால் சந்தோஷப்படுவேன் என்று சொல்லியவனை வருத்தப்பட வைத்த திருப்தியில் இதழில் புன்னகை உதிர்ந்தது. வருத்தமேப்படமாட்டேன் என்றவனை ஸ்தம்பித்து நிற்க வைத்ததன் பிரதிபலிப்பாய் அந்த புன்னகை.
நான் சென்றால் அவனுக்கு வலிக்கும் என்று அவன் கண்களே காட்டி கொடுக்கிறதே. பிறகு ஏன் என்னை காயப்படுத்த வலிக்காது என்று பொய் சொல்ல வேண்டும் என்று அவனையேப் பார்த்துக் கொண்டு இருக்க ப்ரணவ் விருட்டென்று அங்கு இருந்து நகர்ந்தான்.
தன்னை விட்டு செல்லும் ப்ரணவ்வை பார்த்தவள் அவனை நோக்கி தன்னிச்சையாக போக எத்தனிக்க அவள் கைகளில் கோர்த்து இருந்த வினய்யின் விரல்களைப் பிரிக்க வேண்டும். திரும்பி வினய்யைப் பார்த்தாள். அவன் அவள் கைவிரல்களைப் பிரித்து எடுத்தான். போகும் ப்ரணவ்விற்கும் நிற்கும் வினய்யிற்கும் மத்தியில் விக்கித்துப் போய் நின்று இருந்தாள்.
எந்த திசையில் செல்ல வேண்டும் என தெரியவில்லை. மனம் வருந்தி தன்னை விட்டுப் போகும் உயிருக்கு உயிரான காதலனை சமாதனம் செய்வதா இல்லை. மன வருத்தப்பட வைக்காமல் தன் உயிருக்கு மேலான நண்பனை காப்பாற்றுவதா என தெரியவில்லை. அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் எந்தளவுக்கு விபரீதமாக முடியும் என்று கண்டவளது கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தோடியது.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அன்று நான் எடுத்த அந்த அவசரமான முடிவினால் என்னையும் சேர்த்து மூன்று பேரை காயப்படுத்தினேனே.. நான் பாவி நான் பாவி…
யாரையும் என்னால் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியவே இல்லை என்று பழைய யோசனைகளின் பிடியில் இருந்த உத்ராவை மீட்டு எடுத்தது அந்த அலைபேசியின் தொடுதிரையில் பிறந்த ஒளி….
எடுத்துப் பார்த்தாள்… ப்ரணவ் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
“இன்று மாலை சந்திக்கலாமா??? ” என்று அவன் கேட்டு இருந்தான்.
அதைப் படித்தவுடன் அவள் கை கால்கள் எல்லாம் நடுக்கம் கொண்டது. பிடிமானத்துக்காக அருகில் இருந்த நாற்காலியைப் பற்றி கொண்டாள். கண்களில் விடாமல் கண்ணீர் வழிந்ததது.
“இவ்வளவு நடந்த அப்புறம் எப்படி ப்ரணவ் உன்னை பார்க்க முடியும் என்னாலே? இது எப்படி நடக்கும்? ” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதவள் ஒரு முடிவுடன் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
வினய்யை அழைத்தாள்.
“சீக்கிரமாக வீட்டுக்கு வா வினய். உன் கிட்டே ஒரு முக்கியம் விஷயம் சொல்லணும்” என்று அவனிடம் சொல்லிவிட்டு அவன் வருகைக்காக காத்திருந்தவள் மனதினில் மீண்டும் கடந்த கால நினைவுகள் துளிர்விட்டது.
💐💐💐💐💐💐💐💐💐💐
அங்கே அந்த பூங்காவில் அவனை கட்டிக் கொண்டு இருந்த உத்ராவை காண திராணி இல்லாமல் அங்கிருந்து கிளம்பிய ப்ரணவ் நேராக
வீட்டிற்கு வந்தான். அதுவரை தொண்டைக் குழியில் அடக்கி வைத்து இருந்த அனாதையாய் விடப்பட்ட கேவல் வெடித்து வெளிப்பட்டது.
” ஏன் உத்ரா இப்படி பண்ண??.. ஏன் என்னை விட்டு போன??..நான் இருனு சொன்னா தான் என் கூட இருப்பியா… உனக்காக தானே டி அந்த ப்ராஜெக்ட்ல ராவும் பகலும் பார்க்காம உழைச்சேன்.. அதை successful ஆ முடிச்சு கொடுத்தா கிடைக்கிற promotion ல தானே நமக்கான வளமான வாழ்க்கையை அமைச்சுக்கலாம்னு கல்யாணத்தை கூட தள்ளி வைச்சேன்… ஆனால் நீ உன்னையே தள்ளி வைச்சதா நினைச்சுக்கிட்டியேடி பைத்தியக்காரி பைத்தியக்காரி…
இன்னைக்கு கூட கடைசி நாள் வேலையை முடிச்சுட்டு உன் கிட்டே சந்தோஷமா அந்த விஷயத்தை பத்தி சொல்லலாம்னு தானே வந்தேன்.. ஆனால் இப்படி ஆகிடுச்சே.. ஐயோ இதை கொஞ்ச நாளுக்கு முன்னாடியே உன் கிட்டே சொல்லி இருந்து இருக்கலாமோ…
இப்படி திடீர்னு விலகுனது உனக்கு கஷ்டமா தான் இருந்து இருக்கும்ல… அது அப்போ புரியல உத்ரா எனக்கு.. வேலை வேலைனு வேலை மேலேயே கவனம் இருந்ததாலே உன் மேலே கவனம் குறைஞ்சுடுச்சு.. என்னை மன்னிச்சுடு உத்ரா..
நீ என் மேலே சொன்ன குறைகளை எதிர்த்து சொல்ல என் கிட்டே ஒரு நிறை கூட இல்லை.. அதனாலே தான் குற்ற உணர்வுல தலை குனிஞ்சு நின்னேன்… நீ என் கிட்டே சொன்ன ஆதங்கத்துக்கு பதிலா சொல்ல என் கிட்டே ஒரு ஆறுதல் கூட இல்லை உத்ரா அதான் உண்மை..
நீ கண்ணீர் மல்க என்னைப் பார்த்து சொன்ன எல்லா வார்த்தைகளையும் கேட்டு என் உத்ராவை நானே காயப்படுத்தினேனு தவிச்சு நின்ன அந்த நொடி தான் நீ அந்த வார்த்தையை சொன்ன உத்ரா…
என்னை காதலிக்கிறதுக்கு பதிலா வினய்யையே காதலிச்சு இருந்து இருக்கலாம்னு சொன்னியே அப்பவே ஸ்தம்பிச்சு போயிட்டேன் டி..
உனக்கு எந்த அளவுக்கு என் மேலே வருத்தம் இருந்து இருந்தா அந்த வார்த்தை உன் வாயிலே இருந்து வந்து இருக்கும்.. அந்த வார்த்தையை உன் வாயிலே இருந்து வர வைச்ச நான் எவ்வளவு பெரிய பாவி?
உன்னை இந்த அளவுக்கு வருத்தப்பட வெச்ச எனக்கு எப்படி டி உன்னை தடுக்கிற உரிமை வரும்.. அதான் போனு சொன்னேன்.. ஆனால் நீ போன அப்புறம் உயிரை யாரோ அறுத்துட்டு போனா மாதிரி இருக்கு டி… ப்ளீஸ் டி என் கிட்டே வந்து டி.. ஐயோ இல்லை இல்லை…
வேணாம் நீ என் கிட்டே திரும்பி வர வேணாம்.. நீ அப்படி என் கிட்டே மறுபடியும் திரும்பி வரணும் நான் ஆசைப்பட்டா வினய் உன்னை நல்லா பார்த்துக்காம இருக்கணும்னு நான் நினைக்கிறா மாதிரி இருக்கும்.. நீ தோத்து திரும்புறதை நான் விரும்புறா மாதிரி இருக்கும்… நீ அந்த உறவுல காயப்பட்டு வெளியே வரணும்னு நான் ஆசைப்படுறா மாதிரி இருக்கும்… வேண்டாம் நீ வராதே..
அந்த உறவுலவாயது சந்தோஷமா இருடி… உன்னை என் பக்கத்துல வெச்சு தான் சந்தோஷமா பார்த்துக்கல.. நீ தூரமா இருந்தாவது சந்தோஷமா இருடி.. நான் விலகிக்கிறேன்… ஆனால் என் காதல் உன்னை விட்டு போகாது டி” என்று பிதற்றியவன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.
எப்போதும் அவள் குறுஞ்செய்திகளாலும் அழைப்புகளாலும் நிரம்பி இருக்கும்.. ஆனால் இப்போதோ வெறுமையாக காட்சி அளித்தது.
ஐயோ அவள் நிமிடத்திற்கு ஒரு முறை போன் பண்ணும் போது தொல்லையாக இருக்கும். ஆனால் இப்போது எதுவும் செய்யாமல் அமைதியாய் இருப்பது அவஸ்தையாக இருக்கிறதே.
தொல்லையை கூட சகித்துக் கொள்ளலாம் ஆனால் இந்த அவஸ்தையை என்ன செய்வது.
வேக வேகமாக “.i miss u” என்று type செய்தவன் அதை அனுப்ப எத்தனிக்கும் போது விரல்கள் தானாக தடைப்பட்டு நின்றது. அனுப்ப முடியவில்லை அவனால்… தயக்கம் மேலிட்டது.. கட்டிலில் போனை விசிறி அடித்துவிட்டு சாளரம் வழியே தெரிந்த நிலவை வெறிக்க ஆரம்பித்தான்..
இங்கோ இத்தனை மணி நேரமாக ப்ரணவ் அழைப்பான் அழைப்பான் என்று காத்து இருந்தவள் அவன் அவளை அழைக்காததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்று அலைபேசியை விசிறி அடித்தாள். திடீரென்று அலைபேசியின் திரை ஒளிர்ந்தது. ஓடி சென்று சிதறிக் கிடந்த போனை எடுத்து அதன் தொடுதிரையைப் பார்த்தாள். வினய்யின் பெயர் இருந்தது. ஏமாற்றம் மேலிட அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“சாப்பிட்டியா டாம்.. “
“சாப்பிட்டேன்.. “
” என்ன பண்ணிட்டு இருக்க டாம்.??”
“சும்மா தான் இருக்கேன்”
“என்ன உத்ரா என்னை ஜெர்ரினே கூப்பிட மாட்டேங்குறே.. என்ன ஆச்சு???… any problem? ”
“ஆமாம் நீ தான் ப்ராப்ளம் வினய்… எனக்கு எப்போ உன்னை ஜெர்ரினு கூப்பிட தோணுதோ அப்போ உன்னை ஜெர்ரினு கூப்பிடுறேன்… உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னாலே கூப்பிட முடியாது… எனக்கே தோணுனா தான் கூப்பிடுவேன்..”
“ஹே டாம் டாம் பீ கூல்.. நான் என்ன உன்னை சொல்ல சொல்லியா கட்டாயப்படுத்தினேன். உனக்கு எப்போ ஜெர்ரினு கூப்பிட தோணுதோ அப்போ கூப்பிடு. நோ ப்ராப்ளம்.. டாடா.. டேக் கேர்.” என்று வைத்துவிட்டான்.
பதிலுக்கு கோப்படுவான் என நினைத்த உத்ராவுக்கோ அவன் பொறுமையாக பேசியது குற்ற உணர்ச்சியை உண்டாக்கிவிட்டது.
ப்ரணவ்வின் மேல் இருந்த வருத்தத்தை அவன் மேல் கோபமாக காட்டுவது எந்த விதத்தில் நியாயம். அவனை மறுபடியும் அழைத்தாள்.
“சாரி வினய்.. ஏதோ கோபத்துல உன்னை திட்டிட்டேன் சாரி… ”
“ஐயோ லூசு டாம் அதெல்லாம் ஒன்னும் இல்லை… எனக்கு உன் மனநிலைமை புரியுது.. டேக் யுவர் டைம் டா.. நீ காயப்படாம இருக்கிறது மட்டும் தான் எனக்கு வேணும்.. so take care of yourself tom ” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.
தனக்காக யோசிக்கும் இவன் மனதை உண்மையை சொல்லி வருத்த அவளுக்கு துணிவில்லை. என்னை மறுத்து என்னிடம் பேசாத அவனிடம் திரும்பி சென்று பேச சொல்லி மன்றாடவும் மனம் வரவில்லை.
இருதலைகொள்ளி எறும்பாய் தவித்தாள். போனை கட்டிலின் மீது கோபமாக போட்டுவிட்டு சாளரம் வழியே தெரிந்த நிலவை பார்க்க தொடங்கினாள்.
உத்ராவிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்த வினய்யின் மனதிலோ ஏகப்பட்ட குழப்பம்.
அவசரப்பட்டு உத்ரா என்னை காதலிப்பதாக சொல்லிவிட்டாளே தவிர என்னை அவள் காதலிக்கவில்லை. ப்ரணவ்வும் அவளை தடுக்கவில்லை. அவளும் ப்ரணவ்விடம் செல்லவில்லை.
இப்போது என் உத்ரா மிக தனிமையாக நிற்கிறாள். அவளுக்கு உற்ற துணையாய் நான் தான் இருக்க வேண்டும். காலப்போக்கில் அவள் மனதினில் என் மீதான காதல் துளிர்விடுமா என ஏக்கத்துடன் சாளரம் வழியே தெரிந்த நிலாவை பார்த்துக் கொண்டு இருந்தான்.