EVA6

ELS_Cover3-6a44ba87

6

ஒரு பகுதி அலுவல்களை முடித்தவர்கள் மதிய உணவுக்கு பின் மீண்டும் பணியில் மூழ்கிவிட, சஹானாவுடன் அரட்டை அடிக்க ஆசையாக வந்த ஆதிரா ஆதனின், “நீ வெட்டினா போய் டீவி பாரு அவளை எதுக்கு டிஸ்டர்ப் பண்றே?”என்ற தொடர் தொணதொணப்பில்,

சஹானாவிடம், “நான் உனக்கு ஃபோன் பண்றேன் நாம பேசிக்கலாம்” கண்சிமிட்டிவிட்டு தன்னை முறைத்த அண்ணனை, “போடா போடா நெட்ட பாவைக்கா!” அவனுக்கு கேட்காதபடி முணுமுணுப்புடன் வெளியேறினாள்.

ஆகமொத்தம் ஆதனின் உபயத்தால் மாலைவரை இடையூறுகளின்றி இருந்தது.

“சரி ஆதன், கிளம்பவா” பேக்பேக்கை மாட்டிக்கொண்டு தயாரான சஹானாவை கண்டவன் மனம் ஏனோ வாட, அவளை இன்னும் சற்றுநேரம் தன்னுடன் வைத்துக்கொள்ள தோன்ற, “லேப் பாக்கறியா?” தன்னையும் மீறி கேட்டுவிட்டான்.

தயக்கமின்றி ஆர்வமாக தலையசைத்தவளை, மாடியில் தன் அறையுடன் ஒட்டியிருந்த ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்றான்.

ஹாலில் மீனாக்ஷியுடன் டீவி பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா குழப்பத்துடன், “என்னமா இது?” அன்னையை பார்க்க, அவரோ மடியிலிருந்த குஷனை கோவமாக சோபாவில் எறிந்துவிட்டு “எல்லாமே புதுசாதான் இருக்கு. விடு எனக்கு தலைவலிக்குது நான் கொஞ்சம் படுத்துக்கறேன் நீ அப்பா வந்தா காபி கொடு” என்றவர் யோசனையாய் தன் அறைக்கு சென்றுவிட்டார்.

ஆதிராவிற்க்கோ ‘என்னையே லேபுக்குள்ள விட யோசிக்கிறவன் முதல் நாளே அவளை லேபுக்கு கூட்டிகிட்டு போறான்? சரியில்லையே…’ மூக்குவேர்க்க துவங்கியது.

ஆதனின் லேபிற்குள் நுழைந்த சஹானாவின் கண்கள் எதை முதலில் பார்ப்பதென்று பரபரக்க அவள் கவனத்தை சட்டென ஈர்த்தது எதிரே திரிந்த பெரிய திரையும் அதன் முன்னே மூன்று மானிடர்களை கொண்ட கணினியும்.

அறையின் இடப்பக்கம் சுவரையொட்டி அடுக்கிவைக்க பட்டிருந்த புத்தகங்கள் விட்டுவைத்திருந்த மிச்சமீதி இடங்களில், வொயர்களும் என்னவென்று விளங்காத அறிவியல் சாதனங்கள் நிரம்பிவழியும் பெட்டிகளும் இருந்தன.

லேபின் வலப்பக்கம் டைனிங் டேபிள் அளவிலான மேஜையில் வைக்க பட்டிருந்த சார்ஜிங் ஸ்டேஷனுக்கு அருகில் ஈவா வண்டுடன் இருந்தது.

லேப் என்றால் வண்ணவண்ண ரசாயனங்களும், கண்ணாடி குடுவைகளும் இருக்குமென எண்ணி வந்தவளுக்கோ இந்த கம்ப்யூட்டர் கூடாரம் வினோதமாக தோன்றியது. முடிந்தவரை பார்வையால் அனைத்தையும் மனதில் பதித்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தாள்.

“ப்பா எவ்ளோ சமாச்சாரங்கள், தலையே சுத்துது” வாய்விட்டே வியக்க,

“இன்னும் கூட இருக்கு சஹா. பாதுகாப்பா இருக்க வேண்டிய டேட்டா இருக்க சிஸ்டம்ஸ் நான் பாஸ்வேர்ட் போட்டதான் வெளியே வரும்” ஈவாவை மேஜையில் வைத்தவன் சஹானாவை பார்வையால் அழைக்க, அவளோ மாறாக பின்னோக்கி நகர்ந்து நின்றாள்.

“ஈவா ரொம்ப பிரெண்ட்லி ரோபோட். நீ பயப்படவே வேண்டாம். வா மா! நான் இருக்கேன்ல வா”

தன்னை நோக்கி புன்னகையுடன் கையை நீட்டியவனை மறுக்கமுடியாமல் தயக்கத்துடன் அவனையும் மேஜையில் அப்பாவியாய் படுத்திருந்த எலியையும் மாறி மாறி பார்த்தபடி அவனை நெருங்கினாள் சஹானா.

“தொட்டு பாரு” என்றவன் கையை பிடித்து ஈவாவின் முதுகின்மேல் வைக்க, அதன் ம்ருதுவான சருமத்தை வருடிய தன் விறல் நுனிகள் கூச ஒரு முறை விரல்களை தன்னிச்சையாய் இழுத்துக்கொண்டு மீண்டும் மென்மையாக தொட்டாள்.

ஈவாவின் பச்சிளம் குழந்தை போன்ற சருமத்திற்கும் அதன் பேச்சுக்குமான முரண்பாடை எண்ணிக்கொண்டவள், “ஏன் அமைதியா இருக்கு?”

“ஸ்லீப் மோட்ல இருக்கு… ம்ம் தூங்கறது. தைரியமா தொட்டு பாரு” புன்னகைத்தவன், “சரி நீ காஃபி டி இல்லைனா ஹாட் சாக்கலேட் எதுனா குடிக்கிறியா?”

“காஃபீ” என்றவள், “நான் கீழ போயி கொண்டுவரேன்” என்று திரும்ப,

“அதுவே வரும் மா” என்றவன், “ரெண்டு காஃபீ, ஒன்னுல எக்ஸ்டரா சுகர்” சற்று உரக்க சொன்னபடி ஈவாவின் கண்ணாடி வீட்டை நோக்கி நகர்ந்தான்.

‘என்னை வச்சு காமெடி பண்றானா?’ குழப்பமாக அவனை பார்த்தவள் மீண்டும் ஈவைவை தடவ, சில நொடிகளில் மேஜைமீது ஊர்ந்து வந்த ட்ரேயில் ஆவிபரக்க, மனம் வீசும் காபி கோப்பைகள்!

ஆதன் இப்பொழுது ஈவாவின் கண்ணாடி கூடாரத்தில் இருந்த வண்டை எடுத்துவந்து ஈவாவிற்கு அருகில் வைத்துவிட்டு, இரண்டு கப்புகளில் ஒன்றை அவளிடம் தந்தான்.

“இதுவும் ரோபோட்டா?”

“எஸ். ஈவா என் பெர்சனல் அசிஸ்டன்ட்ன்னா, இந்த பீ ஒரு தற்காப்பு ரோபோட். இன்னும் டெஸ்டிங்ல இருக்கு” காபியை ஊதி ஒரு சிப் குடித்தான்.

“தற்காப்புன்னா? தம்மாத்தூண்டு வண்டு என்ன பண்ணும்?” ஆர்வமும் நக்கலுமாகவே அவள் கேட்க,

“அளவை வச்சு எடைபோட கூடாது சஹா. இதுக்குள்ள கேமெரா, இடத்தை கண்டுபிடிக்கிற ஜிபிஎஸ், குட்டி டேசர் எல்லாமே இருக்கு…” பொறுமையாக சொன்னவன் பேச்சில் அலட்டல் இல்லை.

“டேஸர்ன்னா ஷாக் கொடுக்கிறதா?”

“ஆமா. இதோட இன்னொரு குட்டி சிப்பை, கழுத்துல டாலராவோ, காதுல தோடு மாதிரியோ ஏன் கைல பிரேஸ்லெட் இல்லை காலுல கொலுசுன்னு எதுல வேணும்னாலும் போட்டுக்கலாம், சிம் கார்ட் விட பாதிதான் அந்த சிப் குள்ள…”

அவன் பேசியது முக்கால்வாசி என்ன பாஷையென்றே விளங்காதது போல் விழித்தவள் சமாளிப்பாக காபியை சுவைக்க அதன் சுவையில் விழிகள் விரிந்தாள்.

“…குட்டி பசங்களும் உபயோக படுத்தணும்னு இன்னும் கொஞ்சம் மெருகேத்திகிட்டு இருக்கேன், ரொம்ப சின்ன குழந்தைனா அவங்களால ஆபத்தை உணரமுடியாதுல” என்றவன் கண்ணில் படாமல் கண்களில் சேர்ந்திருந்த நீரை வேகமாக துடைத்துக்கொண்டவள்,

“இந்த வண்டு… சாரி பீ எப்படி கூடவே இருக்கும்?”

“ஒரு மீட்டர் தூரத்துல பறந்து கூடவே வந்தா யாருக்கு தெரிய போகுது? இது உடம்பெல்லாம் சுற்றுப்புறத்தை பிரதிபலிக்கிற செட்டப்…”

அவன் பேச்சுக்கள் காதில் விழுந்தாலும் மூளையை எட்டவில்லை. சஹானாவின் மனமோ காலத்தில் பின்நோக்கி சென்றிருந்தது!

ஆதன் பேசுவதை நிறுத்திவிட்டு கையிலிருந்த காஃபீ தளும்ப மெல்லிய நடுக்கத்தில் இருந்தவளின் தோளை மென்மையாக பற்றி, “ஈவாவ எழுப்பவான்னு கேட்டேன். பயப்பட மாட்டேன்னா” கேட்க, “ம்ம்” என்றாள்.

குழந்தைபோல மெல்லிய சிணுங்கலுடன் கண்விழித்து “குட் ஈவினிங் பாஸ்” என்ற எலியை பார்க்க, அள்ளியெடுத்து கொஞ்ச வேண்டுமென்று பொங்கிவந்த ஆசையில், பழைய ஞாபகங்கள் தந்த நடுக்கம் குறைவைதை உணர்ந்தாள்.

“ஈவா இது சஹானா, சஹானா இது ஈவா” நண்பர்களை அறிமுகம் செய்துவைக்கும் பெருமிதம் அவன் முகத்தில்.

“ஹாய் ஈவா” சஹானா சினேகமாக புன்னகைக்க,

“ஹாய் ஜுனியர்” என்றது ஈவா.

ஆதன், “அதென்ன ஈவா ஜுனியர்?” பீயின் இறக்கையை ஆராய்ந்தபடி கேட்டான்.

“நான் தானே பாஸ் உங்களுக்கு முதல் அசிஸ்டண்ட், இவ ரெண்டாவது தானே?”

ஆதனின் சிரிப்பு சஹானாவிற்கு கோவத்தை தூண்ட, முகமூடியாய் புன்னைத்து வைத்தாள்.

கால் வர, பேசியபடி அவன் வெளியே செல்ல, சஹானா மேஜை மீதிருந்த வண்டை ஆவலுடன் தொட போக, குறுக்கே வந்த ஈவா,

“ஹேய் இடியட்! அத தொடாத!” வேகமாக சஹானாவின் விரலை முட்டித்தள்ளியது.

“இடியட் கிடியட்டுன்ன பல்லை பேத்துடுவேன்!” அதை முறைத்தவள், மீண்டும் பீயை தொட முயற்சிக்க, மறுபடி அவள் விரலை தள்ளிவிட்ட ஈவா, “என் பல்லை உன்னால உடைக்க முடியாது!” என்றது ஜம்பமாக.

“ஆமா பெரிய டெர்மினேட்டர்! சோப்பு டப்பா சைசுல இருந்துகிட்டு” ஈவாவின் முதுகை அடித்தவள் வலியில். “ஸ்ஸ்” என்று கையை உதறிக்கொண்டாள்.

“இதுக்குதான் உன்னை முட்டாள்னு சொன்னேன்! என் உடம்பு டைட்டேனியம்ல செஞ்சது. உன் பலத்துக்கு பலூன் கூட உடையாது” ஏளனமாக சொன்ன ஈவா, “என்னை கம்பேர் பண்ணா பீ ரொம்ப வீக். உன்னை மாதிரி. பாக்கறியா?” பெருமை பேசியபடி, வண்டின் இறக்கையை கவ்வி தூக்க, அதுவோ அப்பாவியாய் தரையில் விழுந்தது!

இறக்கையை மட்டும் வாயில் கவ்வியபடி ஈவா சஹானாவை பார்த்து விழிக்க,

“ஓவர் சீன போட்டா இப்படித்தான்” சிரித்தவள் குனிந்து வண்டை கையிலெடுக்க அதுவோ ஒருபக்கம் நசுங்கி ரெக்கை இருந்த இடத்தில வொயர்கள் பல் இளித்தன.

“அடப்பாவி! பலத்தை காட்டுறேன்னு உடைச்சே போட்டுட்டியா?” அதிர்ச்சியுடன் பீயை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு மேஜை மீது வைத்தாள்.

“சரி இங்க வை. இவனெல்லாம் ஜுஜுபி! நானே சரி பண்ணிடுவேன்” மிடுக்காக சொன்ன ஈவா, வண்டின் முன்னே சென்று பின்னங்கால்களில் நின்றபடி முன்னிரு கால்களை நீட்ட அது சிறிய அளவிலான மனித கைகளைபோல நீண்டது.

பீயை திருப்பி போட்டு ஈவா அதன் மேற்புற கவசங்களை லாவகமா நீக்க, “என்ன பண்றே ஈவா?” சஹானா குனிந்து உன்னிப்பாக பார்க்க துவங்கினாள்.

ஒவ்வொரு பாகமாக ஈவா பீயை பிரித்துமேய அப்பாவி வண்டு இரண்டு முறை மெல்லிய சத்தத்துடன் குதித்து சிலையானது!

“ஓஹ் காட்! நீ சரி பண்றேன்னு அதை இன்னும் நாஸ்தி பண்றேன்னு நினைக்கறேன். அவரை கூப்படறேன்” அவள் வேகமாக திரும்ப,

“ஹேய் வெயிட்! நான் சரி பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று ஈவா கத்தியது.

“நோ வே!” சஹானா திரும்பி முறைக்க,

“நான் பாஸைவிட அறிவாளி!” என்ற ஈவா இப்பொழுது பீயின் பாகங்களை வேகமாக பிரிக்க துவங்கியது.

“அக்குவேறா ஆணிவேரா பிரிச்சுப்புட்டு பேச்சை பாரு!” முணுமுணுதவள், டமால் என்ற சத்தத்தில் அலறினாள்.

மெல்லிய கருநிற புகை திரைக்கு பின்னால் வெடித்து சிதறிய பீ இருந்த இடத்தில தீவிர யோசனையில் இருந்த ஈவா, “ப்ளூ வயர் தானே பிச்சேன்” தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

“ஆதன்! ஐயோ! ஆதன்!” அலறிக்கொண்டு வெளியே ஓடினாள் சஹானா.

“இடியட்!” ஓடியவளை திட்டிய ஈவா, சிதறி இருந்த வண்டின் பாகங்களை சேகரிக்க துவங்கியது.

சுற்றும் முற்றும் ஆதனை தேடியவள், கீழ்தளம் நோக்கி ஓடினாள். டீவியில் மூழ்கியிருந்த ஆதிரா முன்பு நின்ற சஹானா, நெஞ்சை பிடித்தபடி, “ஆ ஆதன் சார் எங்க?” மூச்சிரைத்தாள்.

“என்ன வேணும் சஹா? அவன் கீழ வரலையே. என்ன விஷயம் ஏன் இப்படி ஓடிவர?”

“அது… ஈவா பீயை பிச்சு… பீ வெடிச்சு…” படபடத்தவள் “ஆதனை கூபிடுங்களேன் ப்ளீஸ்” கண்களால் அவனை தேடினாள்.

“ஷிட்! நெனச்சேன் என்னிக்கோ அது பொறாமைல இப்படி செஞ்சுவைக்கும்னு” ஆதிரா மேல் தளத்துக்கு ஓட, அவளை பின் தொடர்ந்து ஓடினாள் சஹானா.

பீ என்ற வண்டு இருந்ததற்கு ஆதாரமாக ஒரே ஒரு ரெக்கை மட்டுமே இருக்க,மீதி பாகங்கள் இன்னதென்று விளங்கமுடியா வண்ணம் சிதைந்திருந்தன.

“முட்டா எலியே! என்ன செஞ்சு வச்சுருக்க?” ஆதிரா கத்த,

“நான் சொன்னேன், லூசு கேக்கல” என்றபடி வந்தாள் சஹானா.

“சீனியர் கிட்ட மரியாதையா பேசணும்!” சஹானாவை மிரட்டிய ஈவா, ஆதிராவிடம்,
“அவன் எப்படியும் டெஸ்ட் பீஸ் தானே. வேற உருவாக்கிக்கலாம்” என்றது அசட்டையாக.

தன்னுடைய ஆசை ரோபோவை உடைத்துவிட்டதே என்று ஆதிராவும், தன்னை மட்டம் தட்டுவதால் சஹானாவும் ஈவாவின் மீது கோவமாக இருக்க, அதுவோ அலட்டிக்கொள்ளாமல் சார்ஜ் போட்டுக்கொள்ள கண்ணாடி குடுவைக்குள் சென்றுவிட்டது.

“ஹேய்! இங்க வரக்கூடாதுன்னு சொன்னேன்ல?” தங்கையை முறைத்தபடி வந்த ஆதன், “என்ன சஹா ஏன் முகமெல்லாம் ஒருமாதிரி இருக்கு?”

தங்கையின் வருகையால் சஹானா பதட்டமடைந்திருக்கிறாளோ என்ற சந்தேகத்தில் பெண்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தவன் ஆதிராவின் கையிலிருந்த பீயின் இறக்கையையும் அவள் கலங்கியிருந்த கண்களையும் தாமதமாகவே கவனித்தான்.

“என்னடி ஆச்சு? பீ யோட விங்ஸ் தானே? பீ எங்க?” அவள் கையிலிருந்த இறக்கையை வாங்கி பார்க்க,

“அதுமட்டும் தான் மிச்சம் இருக்கு!” மூக்கை உறிஞ்சியவள், “எல்லாம் உன் கிறுக்குபுடிச்ச அசிஸ்டன்ட் செஞ்ச வேலை! ச்சே! வீட்டுக்குள்ள இந்த காட்டேரியை கூட்டிகிட்டு வரும்போதே நினைச்சேன் என்னவோ செஞ்சுவைக்க போகுதுன்னு!” பொரிந்து தள்ளினாள்.

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்! யாரை இப்படி மரியாதை இல்லாம பேசற!” தங்கை பழிப்பது சஹானாவை என்று நினைத்தவனுக்கோ கோவம் கட்டுக்கடங்கவில்லை.

“அவங்க சொல்றது உண்மைதான்…” தலை கவிழ்ந்தபடி சஹானா சொல்ல, ஆதன் அதிர்ந்து நின்றான்.

“நான் சொன்னா எங்க நம்பறான்? அந்த எலி என்னை கடிச்சு கொதறினாலும் இவன் அதை விட்டு கொடுக்க மாட்டான்!” கடுகடுத்த ஆதிரா கோவமாக லேபை விட்டு வெளியே செல்ல, நடந்ததை உணர்ந்த ஆதனின்,

“ஈவா!” என்ற கர்ஜனையில், லேபுடன் சேர்ந்து சஹானாவும் அதிர்ந்தாள்.

“ஆதன் ப்ளீஸ் அது ஏதோ தெரியாம…”

அவளை பார்வையால் எச்சரித்தவன், “நாளைக்கு மீட் பண்ணலாம்” என்றதில் வேறுவழியின்றி அமைதியாகவே கிளம்பியவள், ஆதன் ஈவாவை என்ன செய்திருப்பானென்ற குழப்பத்துடன் ஹாஸ்டல் சென்று சேர்ந்தாள்.

ஒரு புறம் ஈவா மீது இரக்கம் தோன்றினாலும் மறுபுறம் தன்னை மட்டம்தட்ட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஈவா கொட்டித்தீர்த்த ‘இடியட்டி’ல்,

“நல்லா ஆதன் கிட்ட கும்மாங்குத்து வாங்கினாதான் உனக்கு அறிவு வரும்” முணுமுணுத்து கொண்டாள்.

எந்த தேவதை ததாஸ்து சொன்னதோ மறுபுறம் அவ்வண்ணமே ஈவா ஆதனின் வாயில் விழுந்து கதறிக்கொண்டிருந்தது.

“உனக்கு என்ன ப்ரோப்ளம் ஈவா? நானும் பாக்கறேன் சும்மா சும்மா பீ யை ஒடச்சு ஓடுபொருக்கறதே வேலையா வச்சுருக்க. என்ன தான் ட்ரை பண்றே நீ?” அதை மிரட்டிக்கொண்டிருந்தவன் கோவமாக கணினியில் ஈவாவை இயக்கும் கட்டளைகளை பிறப்பித்து கொண்டிருந்தான்.

“இல்ல பாஸ் அந்த பீ அவ்ளோ ஒன்னும் திறமையானது இல்ல, வேணும்னா நான் அதிராவை மானிடர் பண்றேன் பாஸ்”

“போ! அவகிட்டவே போ என்கிட்டே வராத!” கத்தியவன், “இந்த பேனல் மாத்து அந்த சென்சார் அப்க்ரேட் பண்ணுன்னு வந்து நின்ன…டிஸ்மெண்டில் பண்ணி காய்லாங்கடையில போட்டுடுவேன்.

இன்னிலேந்து எனக்கு சஹா மட்டும்தான் நீ வேண்டாம் போ!”

உணர்வுகளற்ற இயந்திரம் தானே என்று கோவத்தில் பொரிந்துதள்ளியவன் அறியவில்லை உணர்வுகள் இல்லாமல் போனாலும் ஈவா தனக்கு போட்டியாக சஹானாவை பதிவேற்றிக்கொண்டதை.

அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஈவா, “பாஸ்” என்று துவங்க.

“கெட் லாஸ்ட்!” என்றவனின் கர்ஜனையில் மெல்ல வெளியேறிய ஈவா, பெற்றோரிடத்தில் கோவித்துக்கொண்ட குழந்தைபோல ஆதனின் அறையை ஒட்டிய பால்கனியில் சென்று மூலையில் நின்றுகொண்டது.

ஆதன் செய்த மாறுதல்கள் இப்போது ஈவாவின் சிஸ்டத்தில் சில மாற்றங்களை தர ரீஸ்டார்ட் ஆனா ஈவா “ஹாய் பாஸ்” உற்சாகமான குரலுடன் ஆதனின் முன் சென்று நின்றது.

ஈவாவின் இன்றைய செயல்களை ஒருமுறை பார்வையிட்டான்.

தான் செய்த மாறுதல்களால் ஈவாவின் பொறாமை தன்மை அழிந்துவிட்டதென நம்பி நிம்மதியாக உறங்கிவிட்டவன் கனவிலும் அறியவில்லை,

அவன் ப்ரோக்ராமை எய்துகட்டிய ஈவா, தன்னை பாதுகாத்துக்கொள்ள ரகசியமாக தன் மெமரியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பகுதியில், இரண்டாவது எதிரியாக பதிவாக்கி வைத்திருந்த பீயை ஒருவழியாக அழித்துவிட்டு இப்பொழுது சஹானாவை அந்த இடத்திற்கு மாற்றியிருந்ததை!

பின் வந்த நாட்கள் வழமைபோல் கழிய சஹானாவும் கொஞ்சம் ஆதனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு தன்னை மெருகேற்றி கொண்டிருந்தாள். நேரம் கிடைத்தபோது எதையாவது படிப்பதென்று பொழுதை கழித்தவள் மறந்தும் ரோபோடிக்ஸ் பக்கம் தலைவைத்து படுக்கவில்லை.

ஒருமுறை ஆதன் அதை பற்றி கேட்க “என்னை விட்ருங்க பாஸ், ஒரு வார்த்தை புரியல நமக்கும் ரோபோட்டுக்கும் ஆகாது போல இருக்கு” சஹானா அலுத்துக்கொண்டதில், அவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.

***
அன்று கோவமாக பேனாவால் நோட்டுப்புத்தகத்தை குத்தி கிழித்தபடி மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள் சஹானா.

“பாவம்” என்ற குரலில் நிமிர்ந்தவள் வேகமாக அழைப்பை துண்டித்துவிட்டு “சாரி பார்கவ் ஃபோன்” என்று திணற,

“ம்ம் அதுக்கு எதுக்கு நோட்டை கொன்னுட்டு இருக்க?” சிரித்தபடி அவளை நெருங்கியவன், அவள் மேஜையிலிருந்த பெண் ட்ரைவை எடுத்துக்கொண்டான்.

“இல்ல அது கொஞ்சம்…” தயங்கியவள் பேனாவால் மீண்டும் நோட்டை கிழிக்க, 

நோட்டை காப்பாற்றி தள்ளி வைத்தவன், “நான் கிளைன்ட் ஆபீஸ் போறேன் நீயும் வா” என்றான்.

“இல்ல நீங்க போயிட்டு வாங்க நான்…”

“மீதி நோட்டையும் கிழிக்கிறேன்னு சொல்றியா?” வம்பிழுக்க,

“இல்ல…”

“பாண்டிச்சேரி போகணும். தனியா…மொக்கையா இருக்கும். பேச்சு துணைக்காவது வா. அங்க வந்து கார்லயே உக்காந்துக்கோ மீட்டிங்குக்கு கூட வர வேண்டாம். ப்ளீஸ் சஹா ரொம்ப டயர்டா இருக்கு தூங்கி நான் பாட்டுக்கு வண்டிய…”

“வரேன் வரேன். ஏதும் சொல்லிடாதீங்க. கிளம்பலாம்” மொபைலை எடுத்துக்கொண்டாள்.

காரில் ஏறியது முதல் விடாமல் ஏதாவது அழைப்பு வர ஆதன் சஹானாவிடம் பேச துவங்குவதற்குள் சென்னை புறநகரை அடைந்துவிட்டார்கள்.

“ஃபோன்லேயே பேசிக்கிட்டு நீங்க பாண்டி போயிட்டு வந்துருக்கலாம் நான் எதுக்கு வெட்டியா ஈ ஒட்டிக்கிட்டு” அவள் கடுகடுக்க சிரித்துக்கொண்டவன் ரேடியோவை ஆன் செய்ய சில நிமிடங்களில் லேசான சஹானா,

பார்கவின் மெசேஜ் வர பதட்டமாக அவனை அழைத்து, “டேய் என்னடா சொல்ற?” என்றதில் ரேடியோவை நிறுத்தி, வண்டியை சாலையோரம் நிறுத்தினான் ஆதன்.

“ப்ளீஸ் பார்கவ்…ஏதாவது செய்டா…உன்னால முடியலைன்னா என்ன அர்த்தம்?…தாத்தா பாட்டிய பேச சொல்லேன்…அப்போ அவரையே கட்டிக்க சொல்லு…முடியாது…வர மாட்டேன்….யோசிக்க எதுவுமில்லை…சஹானா ஓடிபோய்ட்டானு சொல்லிடு…இல்லைனா ஒரே அடியா…”

அவள் செல்போனை பிடுங்கிய ஆதன் ஆஃப் செய்து பின்னாடி சீட்டில் விட்டெறிந்தான்!

அதிர்ந்து விழுந்தவள் முன்னே கண்கள் சிவக்க முறைத்திருந்தவன் பார்வையில் மிரண்டவளுக்கு,

பற்களை கடித்தபடி, “போயிடுவியோ? விட்டுடுவேனா?” என்று உறுமியவனின் ரௌத்திரம் விளங்கவில்லை.

“அது…”

“ஜஸ்ட் ஷட்…” ஸ்டேரிங் வீலை ஒடித்துவிடுபவன் போல இறுக்கியவன், “என்னை சொல்லிட்டு என்ன வார்த்தை?”

“நா…”

“வேணாம்! எதுவும் பேசாத!”

“ப்ளீஸ்…”

“நோ! நோ! இதுக்காகவா நான் இவ்ளோ…பேசாத!” கோவத்தை கட்டுப்படுத்தமுடியாமல் காரை விட்டு இறங்கியவன் கதவை பாடாரென்று சாத்த, தானும் இறங்க நினைத்தவள் ஆதன் கார் பம்பரை எட்டி உதைத்த மாத்திரத்தில் அவ்வெண்ணத்தை கைவிட்டு காரில் இருப்பதே பாதுகாப்பென்று கண்களை மூடிக்கொண்டாள்.

நொடிகளோ நிமிடங்களோ தானே மெல்ல வந்து காரில் எறியவன், காரை கிளப்ப பேசுவதா வேண்டாமா என்ற பயத்துடன் அவனையே அவள் வெறித்திருக்க,

ஒரு நொடி அவளை பார்த்தவன், “சாரி…என்ன விஷயம், என்ன கால்?” முடிந்தவரை இயல்பாக கேட்க,

“எனக்கு கல்யாணமாம்” என்றாள்!