தீங்கனியோ தீஞ்சுவையோ

தீங்கனியோ தீஞ்சுவையோ

இரண்டாவது முறை படம் பார்க்கும் போது அவள் படத்தின் நாயகனைப்  பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் நாயகனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளுக்காக யோசித்து இருக்கிறான். அவளுக்காக மெனக்கெட்டு இருந்து இருக்கிறான். அவளுக்காக அவளின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறான். இந்த எல்லாம் அவளுக்காக தான்.  அவனின் அவளுக்காக.

நினைக்கும் போதே கள் உண்ணாமல் மூளைக்கு போதை ஏறியது.  ஆம் காதல் போதை தான்.

காதலை மொழியக்கூடாது என்று நாவை அடக்கினாலும் கண்கள் அடங்காமல் அவன் மீது இருக்கும் காதலை மொழிந்துக் கொண்டே தான் இருந்தது.

யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதைப் போல தோன்ற திரும்பிய ப்ரணவ் அவளது காதல் பார்வையில் தன்னை தொலைத்தான். இவனும் தன்னை மறந்து அவளைப் பார்க்க தொடங்கி இருந்தாள்.

திரையில் அங்கே காதல் படம் ஓடிக் கொண்டு இருக்க இவர்களோ இங்கே கண்ணாலேயே ஒரு காதல் படத்தை ஓட்டிக் கொண்டு இருந்தனர்.

இருவரது கண்களிலும் அளவுக்கு அடங்காமல் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டு இருந்தது.  ஆனால் அதை மொழி பெயர்த்து வாயால் ஓப்பு கொள்ள தான் இருவரது நெஞ்சிலும் தயக்கம் வந்து தடுத்தது.

அவனையே பார்த்துக் கொண்டு இருந்த அவளை நோக்கி இவன் புருவத்தை வில்லாக உயர்த்தி என்னவென்று கேட்க அவள் தன் கனவுலோகத்தில் இருந்து உடனடியாக வெளியே வந்தாள்.

முகம்  வெட்கத்தை எடுத்து  பூசிக் கொள்ள அதை மறைத்தவாறே ஒன்றும் இல்லை என அவனை நோக்கி தலையசைத்தாள்.

அவனோ மறுபடியும் புருவத்தை உயர்த்தி அவளை நம்பாமல் பார்க்க இம்முறை அவள் வெட்கச் சிவப்பை மறைக்க அவன் தோள்களில் தஞ்சம் புகுந்துக் கொண்டாள்.

அவள் முகம் தன் தோளில் கிடக்கிறது என்பதை இவன் முதலில் நம்பவே இல்லை.  ஏதோ கனவு கண்டு இருப்பதாய் நினைத்து கைகளைக் கிள்ளிப் பார்த்தான்.  நிஜமாகவே வலித்தது.

அப்படியென்றால் இது நிஜம் தான். திரும்பி அவளைப் பார்த்தான்.

உடலில் லேசாக ஒரு நடுக்கம் படர்ந்தது. தன் கைகள் பிடிமானம் இன்றி தவிப்பதைப் போல உணர்ந்தான். நடுங்கும் தன் கைகளை சரி செய்ய அவளது கை தான் தேவை என்பது அவனுக்குப் புரிந்தது.

தயக்கத்தினூடே தன் தோள்களில் மயிலிறகாய் சாய்ந்துக் கொண்டு இருந்தவளின் கைகளை மெதுவாகப் பற்றினான்.  போக போக அது  இறுக்கமாக மாறிக் கொண்டு இருந்தது. அவளது அந்த உள்ளங்கையின் வெட்பம் போதுமாக இருந்தது அவன் உள்ளத்தை குளிர்விக்க.

இருவரது நிலையிலும்  திரைப்படம் முடியும் வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவனுடைய தோள் அவளது வியர்வையால் நனைந்து இருந்தது. அவளது விரல் வெட்பம் இவன் உள்ளங்கையில் கொதித்து கொண்டு இருந்தது.

இருவரும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. ஏனென்றால் இருவருக்கும் தெரியும். பேசினால் இந்த மோன நிலைக் கலைந்துவிடும் என்று. ஆதலால் இருவரும் மௌனத்தைக் கையாண்டனர்.

தங்கள் வாழ்நாளின் அதி சிறப்பான நொடிகளை தங்களது நினைவுப் பெட்டகங்களில் பத்திரமாக  சேகரிக்கும் வேலையில் இருவரும் ஈடுபட்டு  கொண்டு இருந்தனர்.

இந்த நிலை இந்த கணம் இந்த தருணம் அப்படியே உறைந்துப் போய்விடக் கூடாதா என இருவரும் எண்ணிய அந்த நொடி  அங்கே படம் முடிந்ததற்கான அறிவிப்பாய் விளக்குகள் ஒளிர்விடத் தொடங்கியது.

உடனே அவள் தோளில் இருந்து தலையெடுக்க அவன் அவள் கைவிரல்களுக்கு விடுதலை கொடுத்தான். இருவரும் வேகமாய் எழுந்து திரையரங்குக்கு வெளியே வந்தனர்.

வெளியே வந்த பிறகும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அங்கே மௌனம் தீவிரமாய் கொடியை நாட்டி தன் ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்தது.

அவன் பைக்கை கொண்டு வந்து அவள் முன்னால் நிறுத்த இவள் பின்னே ஏறிக் கொண்டாள். எப்போதும் அவன் தோள்களை பிடிமானமாகக் கொண்டு பின்னே அமர்பவள்,  இன்று ஏனோ பைக்கின் பின்னால் இருந்த கம்பிகளை ஆதரவாகக் கொண்டு ஏறினாள்.

அவனுக்கு இந்த மாற்றம் நெஞ்சை உறுத்தினாலும் எதுவும் வாயைத் திறந்து கேட்கவில்லை.

மேடு பள்ளங்கள் வந்த பொழுதுகளில் கூட தன் தோளைப் பிடிக்காதது ஏனோ அவனை வருத்தத்தில் ஆழ்த்தியது.

கண்ணாடி வழியாக அவளின் முகத்தை பார்க்க அதில் பல சிந்தனை கோடுகளை நெற்றி வரைந்துக் கொண்டு இருந்தது.

என்ன ஆச்சு ஏன் பேச மாட்டேங்குறா? ஏன் இப்படி முகத்தை வேற வெச்சு இருக்கா?  நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா…. இல்லையே….  அவள் தானே முதலிலே என் தோளிலே சாஞ்சது… அப்புறம் தானே நான் அவள் கையைப் பிடிச்சேன்…. எதனாலே இப்படி இருக்கா? ஒரு வேளை அவள் தோளிலே சாய்ஞ்சதை நான் தப்பா எடுத்துக்கிட்டேனு நினைச்சு சங்கடப்படுறாளா??….

அது எப்படி என் உயிர் என் தோளிலே சாஞ்சதுக்கு நான் தப்பா எடுத்துப்பேன்… என்ன பிரச்சனை தான் அவளுக்கு?? என்ற அவனின் எண்ணவோட்டத்துக்கு இணையாக பைக்கின் ஓட்டமும் வேகமாக இருக்க அவள் வீடு இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டான்.

அவன் பைக்கை நிறுத்தியவுடன் அவள் சிறகுப் பறவைத் தளர்த்தி தரையிறங்கினாள்.

இதுவரை அவள் உடல்மொழியில் அவன் இப்படி ஒரு நளினத்தை பார்த்ததே இல்லை.

அவள் அழகியல்புகளின் இலக்கணத்தை படித்துவிட்டு அதில் கைதேர்ந்த மாணவியாய் ஒவ்வொரு அசைவிலும் அழகின் சாயலை நளினத்தை கடைபிடித்தாள்.

இவளா அவள்???. அழகின் இயல்புகளைப் பற்றி எதுவும் கவலை கொள்ளாமல் தன் போக்கில் தன் இயல்பில் வலம் வரும் அவனது உத்ராவா இவள்?

நீ பார்த்தா பாரு இல்லைனா போ… எனக்கென்ன வந்தது என்றபடி கைகளை நளினமாக வீசாமல் ஏனோ தானோவென வீசி அழகின் இயல்புகளில் இருந்து விடுபட்டு நிற்பவள் தான்  முந்தைய உத்ரா.

ஆனால் இப்போதைய உத்ரா முற்றிலும் வேறு விதமாய் இவனுக்குத் தென்பட்டாள். செய்யும் ஒவ்வொரு செயலிலும் அழகின் இலக்கணம் வந்து புகுந்து கொண்டு நிற்கின்றது.

அது எல்லாம் தனக்காக தன்னால் தான் என்று அறிந்தே தான் இருந்தான். இந்த உத்ராவை அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவனுக்காக என அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவன் காதல் கொண்ட மனம் மேலும் மேலும் காதலை வளர்க்கத் தொடங்கி இருந்தது.

இதோ இப்போது கூட  அவள் கைப்பையை மாட்டிக் கொண்டு கிளம்பட்டுமா என வாயால் கேட்காமல் கண்களால் கேட்டபடியே அவனை நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கிறாளே இப்போது கூட அவன் கொண்ட அந்த காதல் மட மடவென வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி பல பல விஷயங்களை என் நெஞ்சினில் ஊற்றி தான் இவள் காதல் என்னும் செடியை பெரியதாக வளர்த்துவிட்டாள்.

 

இப்போது நான் தலையை இட வலமாக அல்லது மேலும் கீழுமாக என ஏதாவது ஒரு திசையில் ஆட்டி என் பதிலை தெரிவிக்க வேண்டும்.
இடவலமாக அசைக்க நினைத்த மனதை கட்டுப்படுத்தி கொண்டு போ என தலையசைக்க அவள் தயங்கியபடி இவனை கடந்து  சென்றாள்.

ஏனோ தெரியவில்லை அவளை விட்டுவிட்டு செல்ல அவனுக்கு மனம் ஒப்பவே இல்லை. அவளோடே இந்த வாழ்க்கை முழுக்க பயணிக்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் இடையில் நிறுத்தம் வந்து தானே ஆகும். அவளும் நானும் இறங்கி தானே ஆக வேண்டும்?

அந்த சிறிய கால இடைவெளி கூட மனதில் பெரிய பாரத்தை உருவாக்குமென அவன் நினைக்கவில்லை.

முன்னே சென்று கொண்டு இருந்த அவளது நடை திடீரென்று தடைப்பட்டு நின்றது. அவனை நோக்கித் திரும்பினாள்.

” வீட்டுக்கு வா… வந்து ஏதாவது சாப்பிட்டு போ”  என்று அவனை நோக்கி கூப்பிட்டாள்..

” இல்லை உத்ரா இப்போவே லேட் ஆகிடுச்சு… நான் வீட்டுக்கு போக இன்னும் லேட் ஆகும்…. அம்மா சாப்பாடு வேற செய்து இருப்பாங்க…. நான் அப்புறம் ஒரு நாள் வரேனு அத்தைக் கிட்டே சொல்லு சரியா…. நீ சீக்கிரமா சாப்பிட்டு ரெஸ்ட் எடு… பாய் டி… டேக் கேர் ” என அவன் சொல்ல அவள் முகத்தில் அப்போதும் சந்தோஷத்தின் சாயல் தெரியவில்லை.

அவனை நோக்கி வீட்டிற்கு வர மாட்டியா என்பதைப் போல் தான் பார்த்தாள். அவளின் கண்களிலேயே அதைக் கண்டு கொண்டவன் அவளை நோக்கி முறுவலித்தான்.

” ஹே நானும் வீட்டிற்கு வரேன் வா போலாம்… என்னமோ தெரியல திடீர்னு பசிக்கிறா மாதிரி இருக்கு  வா ” என்று பைக்கை நிறுத்திவிட்டு அவளுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அவர்களை கண்ட மீனாட்சி வேகமாக உணவைப் பார்த்து பரிமாற தொடங்கினாள். அதற்குள் டிவியில் சீரியல் போட்டுவிட சோபாவில் சென்று ஐக்கியமாகிவிட்டார்.

இருவரும் உணவினை உண்டார்களா இல்லையென தெரியவில்லை. ஆனால் ஒருவரது முகத்தை இன்னொருவர் ஆழமாக தின்று கொண்டு இருந்தனர்.

சும்மாவா சொன்னார்கள் கவிஞர்கள் பார்த்தால் பசி தீரும் என்று.

இவர்கள் பார்வையாலேயே தங்களது பசியினை தீர்த்துக் கொண்டு இருந்தனர்.
இருவரும் பெயருக்கு ஏதோ உணவை கொறித்து முடித்தனர்.

இப்போது அவன் கிளம்பி ஆக வேண்டிய கட்டாயம்.

அவளை நோக்கி போகட்டுமா என இவனும் அவளைப் போலவே  கேட்க அவளோ தலையை இடமும் வலமுமாக ஆட்டி போகாதே என்றாள். இவனுடைய உள்ளம் நெகிழ்ந்தது. சட்டென அவள் உள்ளங்கையை அழுந்தப் பற்றி விடுவித்தான்.

இப்போது அவன் உள்ளங்கையில் கொஞ்சம் அவளுடைய அணுக்கள் கொஞ்சம் ஒட்டிக் கொண்டு விட்டது. இப்போது அவளை விட்டுப் போவதாய் தோன்றவில்லை.

அவளுடைய உள்ளங்கை வெப்பத்தையும் அணுக்களையும் இவன் அவனுடனேயே கொண்டு செல்கிறான்.

சிரிப்புடன் வெளியே வந்து பைக்கை எடுத்து கொண்டு அவளைத் திரும்பி பார்க்க அவள் பிரியா விடை கொடுத்து அனுப்பினாள்.

பைக்கை ஓட்டிக் கொண்டே வழி முழுதிலும்  அடிக்கடி கையை  பார்த்தபடி அவளை உள்ளங்கையில் தேட இவளோ அறையில் தலையணையைக் கட்டிக் கொண்டு இவளது உள்ளங்கையில் அவன் தடங்களை தேடிக் கொண்டு இருந்தாள்.

💐💐💐💐💐💐💐💐💐

அவன் அலைபேசியை வைத்துக் கொண்டு மௌனமாக அதையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தான்.

முன்பு எல்லாம் நேரங்காலம் பார்க்காமல் எந்த யோசனையும் செய்யாமல் அவளிடம் பேசும் காலம் சென்று இப்போது எல்லாம் அழைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் மனம் அவனை தள்ளி இருந்தது.

” சாப்பிட்டியா? ”

” என்ன பண்ற”

இந்த இரண்டு கேள்விகளுக்குப் பிறகு அலைபேசியின் இடுக்குகளுக்கு இடையில் பெருத்த மௌனம் நிலவும்.

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் அலைக்கற்றையை விரயம் செய்ய துவங்கிவிடுவர்.

அடுத்து பேச நிறைய இருந்தாலும் அதற்கான வேலியை போட்டது இவர்கள் தங்களுக்கு தானே ஏற்படுத்திக் கொண்ட சிறை.

அவன் அவளது கைகளை பிடித்தது இவனிடத்தில் ஒரு தயக்கத்தை உண்டு பண்ணியது.. அவள் அவனது தோளில் சாய்ந்தது அவளிடத்திலும் பெரும் தயக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இப்போது நட்பாகவும் பேச முடியாது. காதலாகவும் பேச முடியாது. இரண்டிற்கும் இடையில் சிக்கிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில் மௌனத்தால் மட்டுமே பேச முடியும்.

இந்த நிலையில் இருந்து மீண்டும் நட்பு என்ற உறவுக்குள் செல்ல முடியாது. ஆனால் காதல் என்ற உணர்வுக்கு செல்ல முடியும்.

அவள் தன் மீது காதல் கொண்டு இருக்கிறாள் என்று உணர்ந்த பின்பும் அறிந்த பின்பும் ஏன் இன்னும் காதலை சொல்ல தயங்க வேண்டும் சொல்லிவிடலாம் என நினைத்து அலைபேசியில் அவளது எண்ணை எடுக்க வந்தவன், என்ன நினைத்தானோ அதை அப்படியே மேசையின் மீது வைத்துவிட்டு நாட்காட்டியின் பக்கம் வந்து நின்றான்.

காலண்டரில் ரிஷபம் என்ற ராசிக்கு நேர் இணையாக என்ன எழுதி இருக்கிறது என பார்த்தவன் ஓ என நெஞ்சை பிடித்துக் கொண்டு நின்றுவிட்டான்.

ரிஷபம் – தோல்வி  என்று எழுதி இருந்தது.

அவ்வளவு தான் காதலை சொல்ல வேண்டும் என்ற முடிவை கண நேரத்தில் மாற்றிக் கொண்டான்.

நோ நோ ப்ரணவ்…. என்ன ஆனாலும் சரி…. இன்னைக்கு அவள் கிட்டே காதலை சொல்லக்கூடாது காலண்டரிலே அபசகுணமா வேற போட்டு இருக்கு.  என நினைத்த அடுத்த நொடியில் அவளிடம் இருந்து அழைப்பு வந்து இருந்தது.

எடுத்து காதில் வைத்த அடுத்த நொடி ஒலித்த கேள்வி இது தான்

“ஹாய் டா….சாப்பிட்டியா” என்பது தான்.

இவன் அந்த கேள்விக்கு பதில் சொல்லிய பிறகு என்ன கேள்வி வரும் என்று நன்கு அறிவான். அவன் நினைத்ததைப் போல தான் அவளும் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

“என்ன டா பண்ற” என்ற கேள்வி தான்.

இவனோ மனதுக்குள் நினைச்சேன் டி… இந்த கேள்வியைத் தான்  கேட்பேனு.இப்போ நான் இதுக்கு பதில் சொன்ன அப்புறம் பேச வார்த்தையை கிடைக்காது… ரெண்டு பேரும் சைலண்டா தான் இருக்கப் போறோம் என நினைத்தபடியே அவளுக்கு பதிலளித்தான்..

அவன் நினைத்த மாதிரியே அந்த இரண்டு கேள்விகளுக்கு அடுத்து இவர்கள் இடையில் பேச வார்த்தைகள் இல்லை.

வார்த்தைகளின் பற்றாக்குறையில் திண்டாடினார்கள். மௌனத்தை பேச விட்டார்கள். அந்த நீடித்த மௌனத்தை கலைக்கும் நோக்கோடு உத்ராவின் குரல் ஒலித்தது.

“ப்ரணவ் இப்போ எல்லாம் நாம சரியா பேசுறதே இல்லையே… ஏன்னு உனக்கு தெரியுதா?” என்றாள்.

“தெரியலயேடி… ”

“ப்ரணவ் நடிக்காதே உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்… ஏன் நாம ரெண்டு பேரும் இப்படி கண்ணாமூச்சி விளையாடணும்?. அதனாலே தெரிஞ்சு இருந்தே தெரியாம நடிக்க வேண்டாமே….”

“ஹே லூசு எனக்கு எதுவும் புரியல… எப்போ இருந்து நீ கமல் மாதிரி பேச ஆரம்பிச்ச…. எனக்கு எதுவும் புரியல…. தெளிவா சொல்லு டி… ”

“டேய் அநியாயம் பண்ற டா… இன்னுமா உனக்கு புரியல… நான் என்ன சொல்ல வரேனு…. ”

“அடியே உண்மையா புரியல டி…. கொஞ்சம் தெளிவா சொல்லு ” என்றவன் மனதிலோ தான் மனதினில் நினைப்பதை தான் அவளும் சொல்ல நினைக்கிறாளோ என உறுதி செய்து கொள்வதற்கான நோக்கம் தெரிந்தது.

அவளது வார்த்தைகளால் அவன் உள்ளத்தில் இருக்கும் எண்ணத்தை உறுதிப் படுத்துவதற்காக கேட்டான்.

ஆனால் உத்ராவுக்கோ வார்த்தைகள் எதுவும் இல்லாமலேயே தன் உள்ளத்தில் உள்ளதை தெரிந்து கொள்ள மாட்டானா என்கின்ற ஏக்கம் குடியிருந்தது.

இது கூடவா புரியாது.  எல்லாம் விலாவரியா சொல்ல வேண்டுமா என்று செல்ல சலிப்பும் கூட.

அவனுக்கோ தப்பாக புரிந்து கொண்டுவிடக்கூடாதே என்ற வீணான பதற்றம்.

மீண்டும் இருவரிடையே மௌனம் நீடித்தது. இந்த முறை அந்த மௌனத்தை பிரணவ் கலைத்தான்.

“புரியலனு தானே டி கேட்கிறேன்…. நான் என்ன யாரோவா…இப்படி தயங்குறதுக்கு…. தைரியமா கேளு… ” என்று அவளை ஊக்கினான்.

“இல்லைடா ப்ரணவ்… முன்னாடி எல்லாம் நான் எதைப் பத்தியும் யோசிக்காம உன் கிட்டே இயல்பா பேசுவேன்…. ஆனால் இப்போ எல்லாம் உன் கிட்டே நார்மலா பேச முடியல டா… ஏதோ என்னை பேச விடாம தடுக்கிது. ”

“அப்படி என்ன தடுக்குது மேடம் ” என்று இதழ்களில் துளிர்த்த புன்னகையை வார்த்தைகளில் வெளிப்படுத்தாமலேயே பேசினான்.

” ஹான் வேலி வந்து தடுக்கிது… போடா… நான் போனை வைக்கிறேன்…. ”

“ஹேய் லூசு போனை வைக்காதே டி… எனக்கு கூட எது தடுக்கிதுனு ஓரளவுக்கு புரிஞ்சுக்க முடியுது… சரி நீ மேலே சொல்லு…. ”

“என்னை மேலே சொல்றது… அதெல்லாம் எதுவும் சொல்றதுக்கு இல்லை…. நான் கோவமா போனை கட் பண்றேன்… ”

“அடியே என்னை டி சும்மா போனை கட் பண்றேன் கட் பண்றேனு சொல்லிட்டு காமெடி பண்ணிட்டு இருக்க… ”

“நான் காமெடி பண்றனா… நீ தான்டா எருமை என்னை கடுப்பா ஆகிட்ட… போ எனக்கு கோவம் வருது… நான் போறேன்… ”

“சரி சரி கோவப்படாதே… நீ சொன்னா மாதிரி தான் எனக்கும் தோணுச்சு… நாம சரியா நேர்ல பேசிக்கலனு…. ஆனால் உனக்கு ஒன்னு தெரியுமா??… நாம மனசுக்குள்ளே நிறைய பேசிக்கிறோம்னு…. இப்போ எல்லாம் என்னை விட உன்னைப் பத்தி தான் அதிகமா நினைக்கிறேன் டி….”

“நான் கூட அப்படி தான் ப்ரணவ்… எப்பவுமே உன்னைப் பத்தி தான் யோசிக்கிறேன்… எவ்வளவு சாப்பாடு சாப்பிடுவேன்… இப்போ எல்லாம் சாப்பிட கூட தோண மாட்டேங்குது… எப்படி தூங்குவேன் நானு… ஆனால் இப்போ எல்லாம் என் தூக்கத்தை பறிகொடுத்துட்டேன்… ”

“நானும் தான் டி… நேர்லயும் கனவுலயும் வந்து என்னை கொலையா கொல்ற”

ம் ப்ரணவ் இதெல்லாம் என்னனு உனக்கு புரியுதா?? ஏன்னு தெரியுதா??”

“முதலிலே உனக்கு புரியுதா? ” என்று அவன் கேட்ட கேள்விக்கு ஒரு பலத்த மௌனம் பிறகு யாழின் நரம்பை மெல்லியதாக மீட்டி விட்டாற் போல ஹ்ஹ்ம்ம் என்று ஒரே ஸ்வரத்தில் பதில் அளித்தாள்.

ஆயிரம் மழைத்துளிகள் ஒரே நொடியில் பொழிந்தாற் போல் அவன் நெஞ்சம் நனைந்து போனது.

அவன் குரல் அலைபேசியில் ஒலிக்காமலேயே இருக்க அவளது குரலில் பதற்றம் வந்து குடி கொண்டது.

” ஹே என்ன டா ஆச்சு… ஏன் பேச மாட்டேங்குற…. ஹலோ ஹலோ ” என்று கத்தினாள்…

அதில் இயல்புக்கு வந்தவன் புன்னகை கலந்த குரலில் “இல்ல வெயில் அடிச்சுட்டு இருந்த நேரம் பார்த்து திடீர்னு ஜோனு மழை பெஞ்சா என்னாகும்… அந்த மாதிரி தான் ஆகிட்டேன்… ”

“என்னாடா ப்ரணவ் லூசு மாதிரி உளருற… இது நைட் டைம் தானே… ஆமாம் அங்கே என்ன செம மழையோ???… இங்கே சுத்தமா அதுக்கான அறிகுறியே தெரியல மா… வானம் ரொம்ப தெளிவா இருக்கு… ”

“நானாடி லூசு… நீ தான்டி லூசு… வானம் லாம் நல்லா தெளிவா தான் இருக்கு… ஆனால் என் மனசு தான் தெளிவு இல்லாம இருக்கு… நான் பூமியில பெய்யுற மழையை பத்தி பேசல… என் மனசுல பெஞ்சிட்டு இருக்கிற மழையைப் பத்தி பேசுறேன்… இப்போயாவது புரியுதா அரை மென்டல்… ”  என்று அவன் சொல்ல சொல்ல அங்கே பெய்யத் தொடங்கிய மழை இப்போது இவளது மனதிலும் பெய்யத் தொடங்கிவிட்டது.

அவளோ சிறு வெட்கத்துடன் ” புரியுது…. ஆனால் பாதி தான் புரியுது… நீ தான் வாயைத் திறந்து நேரடியா விஷயத்தை சொல்ல மாட்டேங்குறியே… முழுசா சொன்னா தானே புரியும் ” என்று அவன் வாய் மொழியின் மூலமாகவே அவனது காதலை அறிந்து கொள்ளும் ஆவலில் காத்து இருந்தாள்.

எதிர்பக்கத்தில் பேசிக் கொண்டு இருந்த அவன் உதடுகளில் இப்போதோ சிறுமுறுவல்.

கரையுடைக்கப் பார்க்கும் காதல் வெள்ளத்தை அணைப் போட்டு தடுக்காமல் அவன் பேசத் தொடங்கினான்.

“எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு…. நான் உன்னை ” என்று சொல்லி கொண்டே பேச்சு சுவாரஸ்யசத்தில் திரும்பியவன் கண்களிலோ அந்த காலண்டர் தென்பட்டது….

உடனே மூளைக்குள் ரிஷபம் – தோல்வி என்ற குரல் மாறி மாறி வெவ்வேறு டெசிபெலில் ஒலிக்க சொல்ல வந்ததை முடிக்காமல் பட்டென்று போனை வைத்துவிட்டு கட்டிலின் மீது போட்டவன் அந்த போனையோ வெறித்துப் பார்க்க தொடங்கி இருந்தான்.

இங்கு இவளோ அவனின் அழைப்பு துண்டிக்கப்பட்டதாய் காட்டிய அந்த கைபேசியை கலவரமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இருவர் வீட்டு  நாட்காட்டியும் இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்து கொண்டு இருந்தது.

Leave a Reply

error: Content is protected !!