தூறல் போடும் நேரம் 1

பகுதி 1

கலப்படமற்ற இயற்கை… மண் வளம் மாறாத ஊர், எப்பொழுதுமே அழகு தான். அதற்கு ஈடு இணை எதுவுமில்லை. ஆம், காலம் பல கடந்தாலும், கால மாற்றங்கள் பல நேர்ந்தாலும், நாகரீகம் உச்சம் அடைந்தாலும் என்றும் மாறாத அழகைச் சுமப்பது இயற்கையன்னை மட்டும் தான்.

அந்த அழகி மட்டுமே எத்தனை பிள்ளைகள் பெற்றாலும், எத்தனை வயதானாலும், தன்னுள் அழகை ஒழித்து வைத்து என்றும் நித்தியக் கன்னியாய் நிமிர்ந்து நிற்பவள். அவளுடன் நாமும் பயணிக்கிறோம் என்பதே எவ்வளவு புத்துணர்வைத் தருகிறது.

அப்படி இயற்கையோடு இயைந்து அமைதியை இன்னும் தன்னுள் சுவாசித்து கொண்டு இருக்கும் அந்த ஊர் தான், காரைக்குடி. இங்கு உள்ள வீடுகளின் பிரம்மாண்டத்தை இப்போது நினைத்தாலும், மனதையும், புத்தியையும் வியக்க வைக்கிறது. வரலாற்று மாளிகைகளைத் தேடி பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு முன், அனைவரும் இங்கு வந்து பார்க்க வேண்டும்.

அந்த மாட மாளிகைகளுக்கு எல்லாம் ஈடாகும்படி தங்கள் வீட்டையே மாளிகையாய்… ஏன் கோட்டைகள் போல் பல அடுக்குகளுடன் கட்டி முடித்திருந்தார்கள், அந்தத் தமிழர்கள். என்ன ஒரு கலைநயம்! சிற்பக்கலையை அப்படியே சிறைப்பிடித்தது போல் இருந்தது.

அப்படி ஒரு வேலைப்பாடு, கூரைகளில் இருக்கும் மரவேலைப் பாடாகட்டும், உத்திரமாகட்டும், ஏன் சாதாரண தூண்களில் கூட அவ்வளவு நுணுக்கங்கள் நிறைந்து காணப்பட்டன. அதுவும் நூற்றாண்டு கடந்து பல வீடுகள் இன்றும், இம்மியளவு கூட இயல்பு குறையாமல் கம்பீரமாய் உள்ளது.

அந்தக் காலத்தில் எந்த வேலையையும் பொறுமையாய், நிதானமாய் செய்திருக்கிறார்கள் என்பதை தான் இது அறிவுறுத்துகிறதோ? அவ்வாறு கவனமுடன் சிரத்தையோடு செய்ததால் தான், காலம் கடந்தும் சிறப்புடன் விளங்குகிறது போலும். அதை விட வாழ்க்கையை, அதன் இயல்போடு வாழ்ந்து ரசித்து, மகிழ்ந்து முக்கியமாய் மனநிறைவோடு வாழ்ந்திருக்கிறார்கள் எனத் தெரியப்படுத்துகிறதோ?

ஆனால், இப்போது இருக்கும் தலைமுறை தான், இருப்பது போதவில்லை எனப் பறக்க ஆசைப்பட்டு… ஆசைப்பட்டல்ல பறக்க முடிவெடுத்து, சுற்றி இருக்கும் சந்தோஷத்தைத் தொலைத்து நிற்கிறார்கள்.

இப்போது இது போல வீடுகள் எல்லாம் கேட்பாரற்று, பராமரிக்க முடியாமல், பூட்டியே இருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இந்தக் கட்டிடத்தில்… அப்படிக் கூற கூட மனம் விழையவில்லை. இந்த வீட்டில் எத்தனைப் பேர், எத்தனைத் தலைமுறை வாழ்ந்தார்களோ? எவ்வளவு சிரிப்பும், கும்மாளமும் நிறைந்து இருந்ததோ. மேலும் எண்ண எண்ண, மனம் ஒரு பக்கம் வியந்தாலும், வலிக்கத் தொடங்கியது ராதாவிற்கு. எப்போதோ, எங்கோ படித்த கவிதையும் நியாபகத்திற்கு வந்தது.

எத்தனை பேர் வாழ்ந்த வாழ்க்கையிது

எத்தனை பேர் சேர்ந்த சொர்க்கமிது

எத்தனை பேர் கூடி ஆடிய கட்டிடமிது என எண்ணிய நொடி, அந்தத் தூணில் தெரிந்த வண்ணக் கலவையோடு இருந்த தாமரைப்பூ வேலைப்பாட்டைத் தன் கைகளால் தடவிப் பார்த்தாள். ஏனோ அவள் தான், அந்த வீட்டைக் கட்டி முடித்து, அன்று தான் புதுமனை புகுவிழா காண்பவள் போல் உணர்ந்தாள். ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்து, ரசித்து… தடவிப் பார்த்து, மகிழ்ந்து புளங்காகிதம் அடைந்தாள்.

“ஏ பார்த்துமா… கையோட எல்லாம் வந்துடப் போகுது. ஏற்கனவே நீ வந்ததுல இருந்து தூணோட அகலமெல்லாம் குறைஞ்ச மாதிரி தெரியுது” என்ற பெண்ணின் குரலில் தான் கலைந்தாள் ராதா.

“ம்ம்… தெரியும் தெரியும்…” என வாயை சுழித்தப்படி, “உனக்குலாம் ரசனையே இல்ல. எவ்வளவு அழகா இருக்கு இந்தத் தூண் எல்லாம்…” எனச் சிலாகித்து கூறியவள், மீண்டும் அதைத் தடவிக் கொடுத்து, “உதயா… நல்லா பார்த்துக்கோ” என அவளின் தோழியை விளித்து, அத்தூணினை நன்றாக முடிந்த மட்டும் இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்தாள்.

அதைக் கண்டு வியப்புற்ற உதயா “அடிப்பாவி… நிஜமாவே கிறுக்காயிட்டியா… நீ வர வர சரியில்ல. கிளம்பு கிளம்பு வீட்டுக்கு போகலாம்” என்று இருவரும் உதயாவின் வீட்டிற்கு விரைந்தார்கள்.

காரைக்குடியில் செட்டியார் வீட்டின் அழகைக் காண வேண்டி வந்திருந்தாள் ராதா. காரைக்குடி வரை வந்து விட்டு, பின்னே செட்டிநாட்டு வீடுகளைப் பார்க்காமல் போக முடியுமா! அந்த எண்ணத்தைத் தான், காரைக்குடிக்கு, தன் தோழி உதயாவின் வீட்டு விஷேசத்திற்காக வந்தவள் தன் தோழியிடம் தெரிவித்தாள்.

அவளும் தோழியின் விருப்பத்தை நிறைவேற்ற, காரைக்குடியில் உள்ள அண்ணாமலை செட்டியார் வீடு, முத்தையா செட்டியார் வீடு, ஆயிரம் ஜென்னல் வீடு, நாச்சியப்ப செட்டியார் வீடு என இன்னும் பல நாட்டுக்கோட்டை செட்டியார் பெயர்களைக் கூறி அவர்களின் வீட்டையெல்லாம் ஒரே நாளில் பார்த்து விடலாம் என உதயா திட்டம் தீட்டினாள்.

ஒரே நாளில் இத்தனை வீடுகளையும், அதுவும் செட்டிநாட்டு வீடுகளைப் பார்ப்பதா? ராதாவுக்கு ஆச்சரியமாயிற்று. அதை விட குழம்பி போனாள். ‘செட்டிநாட்டு வீடுகளை அல்ல அல்ல செட்டிநாட்டின் ஒரு வீட்டை முழுமையாய் பார்க்கவே ஒரு பொழுது ஆகிவிடும் என நாம் எண்ணினோமே. ஆனால், இவள் ஒரே நாளில் இத்தனை வீடுகளையும் காட்டுகிறேன் என்கிறாளே. அப்போது நாம் தொலைக்காட்சியில் பார்த்தது, கேட்டது எல்லாம்… இல்லையில்லை இவள் ஏதோ உளறுகிறாள்’ என எண்ணி உதயாவை நம்பாத பார்வைப் பார்த்தாள்.

“என்ன என்னை நம்பலையா? இரு நான் இப்போவே காட்டுறேன்.” எனக் கூறி விட்டு உள்ளே சென்றாள்.

‘இந்த அந்திப்பொழுதுல கூட்டிட்டு போய் காட்டுறாளா. ஐயோ கடவுளே! இவ பைத்தியம் தான் போல. ஆமா, காட்டுறேன்னு சொல்லிட்டு, ஏன் உள்ள போனா?’

அவள் சிந்திக்கும் பொழுதே, உதயா திரும்பி அவர்கள் பேசிக்கொண்டிருந்த தாழ்வாரத்திற்கு வந்தவள், தன் கையில் இருந்த அலைபேசியில் செட்டிநாட்டு வீடுகளை ஒளிப்படமாகப் போட்டு காட்டினாள்.

“ஏய் ஃபிராடு…” என அவளின் முதுகில் மொத்தியவள், “இது எனக்கு தெரியாதா… ஒழுங்கா கூட்டிட்டு போய் காமிச்சுடு. இல்ல அம்மாட்ட சொல்லிடு, நானா போயிக்கிறேன்.” எனக் கூறியவளிடம் “அம்மா தாயே என்னக் கேட்காம கொள்ளாம எங்கயும் போயிடாதமா. இது உங்க ஊர் இல்ல. திஸ் இஸ் காரைக்குடி, சவுத் சைடு” என ஒரு கும்பிடு போட்டாள் உதயா.

அதே போல் மறுநாள் உதயா ராதாவை செட்டிநாட்டு வீட்டைக் காண்பிக்க, காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆத்தங்குடி பெரிய வீட்டிற்கு அழைத்து சென்றாள். இது நாச்சியப்ப செட்டியாரின் வீடு எனவும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வீடு என்றும், லக்ஷ்மி விலாஸ் என அழைக்கப்பட்டது என்றும் எனப் பல தகவல்களை அள்ளி தந்தாள் உதயா.

மேலும், நிறைய திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களின் படப்பிடிப்புகளும் இந்த வீட்டில் நடைப்பெற்றது என்று அந்தப் படங்கள் மற்றும் நாடகங்களின் பெயர்களைக் கூற தொடங்கியிருந்தாள் உதயா.

ஆனால் ராதாவோ அவ்விஷயங்களை எல்லாம் ஓரம் தள்ளி விட்டு, வீட்டின் கட்டுமானத்தைப் பற்றி விவரிக்கக் கேட்டாள். அவளும் செட்டி வீட்டின் ஆத்தாப் பொண்ணல்லவா, அதனால் அழகாக விவரிக்க ஆரம்பித்தாள்.

“இது மாதிரி பிரம்மாண்டமான வீடுகள் எல்லாம் நகரத்தார் அதாவது நாட்டுக் கோட்டைச் செட்டியார்னு சொல்வோம்ல அவங்க தான் கட்டி வாழ்ந்திருக்காங்க. நாட்டில் கோட்டை போல் வீடுகளைக் கட்டி நகரத்தைப் போல் நிர்மாணித்து வாழ்ந்ததாலும் நகரத்தார் எனப் பெயர் வந்துச்சுன்னு சொல்வாங்க. இன்னும் சில பேர் இங்க இருக்காங்க, காலத்துக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் ரீநோவேஷன் பண்ணி வாழ்ந்து வர்றாங்க”

“இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்லணும்னா, இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நாம் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால், வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும், பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால் பேரலல் ஸ்ட்ரீட்ஸ் அதாவது பக்கவாட்டு தெருக்களின் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.

இப்போ வீட்டப் பற்றி சொல்றேன். இப்போ நாம வாசல் வழியா வந்தோமே அதுக்கு பேர் முகப்பு. நாம வெளிய பார்த்தோம்ல இரண்டு பக்கமும் திண்ணை மாதிரி இருந்துச்சுல அதான் முகப்பு” என்றாள் உதயா.

“நம்ம வீட்டோட முன் பகுதி அதாவது வராண்டா மாதிரி சொல்றே” என ராதாவும் கற்பூரம் போல் புரிந்து கொள்ள, “கரெக்ட். எக்ஸாக்ட்லி. உம் அறிவை யாம் மெச்சினோம்” எனத் தோழியை மெச்சினாள் உதயா.

“ம்ச்… போதும் மேல சொல்லு” எனத் தன் இரு கைகளையும் சற்றே உயர்த்தி சைகையிலும் கூறினாள் அவள்.

“அப்புறம் இப்போ பார்க்குறோமே இதுக்கு பேர் பட்டாலை. இங்க பொதுவா வீட்டின் ஆண்கள் எல்லாம் கூடி இருக்கும் பகுதி. அப்புறம் இங்க தான் கணக்குப் பிள்ளையும் இருப்பார். பொதுவா இங்க தான் விசேஷம் எல்லாம் வைப்பாங்க. பார் எவ்வளவு பெருசா இருக்கு பார்த்தியா, இங்க ஒரு கல்யாணம் வச்சா ஐநூறு பேருக்கும் குறையாம இங்கயே இருந்து பார்க்கலாம். இன்னும் பத்தலேன்னா மாடில இருந்து பார்க்குற மாதிரியும் வச்சிருங்காங்க பார்” என உதயா சொல்லவும், அந்தப் பட்டாலையை சுற்றியே கண்களை ஓட விட்ட ராதா மேலே பார்த்தாள்.

பார்த்தவள் ஒரு தனி உலகத்திற்கே சென்று விட்டாள் எனலாம். அங்கு மேலே இருந்து பார்க்குமாறு அமைந்த மாடியும், தரைதளமும் ஒரே கூரையின் கீழ் இருக்க… அங்கு பல வித வர்ணங்களில் கண்ணைப் பறிக்கும் பூக்கல்கள் என இவர்கள் எண்ணியிருக்க… அதெல்லாம் மர வேலைப்பாடுகள் தாம், வண்ண மேலாடை அணிந்திருக்கின்றன என அங்கு உள்ளவர்கள் சொல்லவும் வியப்பின் உச்சிக்கே இருவரும் சென்று விட்டனர்.

மேலும் அதை மெருகேற்றுவது போல் நடுவில் ஆங்காங்கே தங்கத்தால் ஆன சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய செவ்வக கட்டமும், அதன் கீழே சாண்டலியர் எனப்படும் அழகான அலங்கார விளக்குகள் இருந்தன. அந்த பட்டாலையில் நிறுவப்பட்ட தூண்களின் எண்ணிக்கையே இருபதுக்கும் மேல் இருக்கும். அதை ராதா தொட்டு பார்க்க, “இது எல்லாம் இத்தாலி கிரானைட்” எனக் கூறினாள் உதயா.

பின் தரையில் தெரிந்த கருப்புவெள்ளை டைல்ஸ்களைக் காண்பித்து “இது இத்தாலி டைல்ஸ், அதோ அந்த சுவத்துல இருக்கே அதெல்லாம் ஜப்பான் வால் டைல்ஸ். எல்லாமே இம்போர்ட்டட் தான். ஏன் இந்த கண்ணாடி கூட பெல்ஜியம்ல இருந்து வந்தது தான்” என அங்கிருந்த நான்கு வாயில் போன்ற அமைப்பிலும் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியைச் சுட்டிக் காட்டி கூறினாள்.

அந்தக் காலத்திலேயே எல்லாவற்றையும் இறக்குமதி செய்து கட்டியிருக்கிறார்கள் என்ற எண்ணமும், அதன் கட்டுமானமும் கலைநயமும் இன்றளவும் மாறாமல் காண்போரை ரசிக்க தூண்டுகிறதே என்ற நினைப்பு “வாவ்… கிரேட்” என அவளை அசத்தியது.

மேலும் வெளிக்காற்று உள்புகவும், வீட்டிற்குள் இருக்கும் வெக்கை வெளியேறவும் போடப்படும் வெண்டிலேட்டர், இங்கு சூரிய வெளிச்சம் மட்டும் உள்புகும் படி சிவப்பு பச்சை என இரு வண்ண கண்ணாடியாய் பொருத்தப்பட்டிருந்தது. அந்த வெளிச்சமே அங்கு ஒரு வித்தியாசமான வர்ணஒளியை அங்கு பரப்பிக் கொண்டிருந்தது.

மேலும் பட்டாலைக்கு அடுத்து வந்த வளவு பகுதியில் சூரிய வெளிச்சமும் காற்றும் வருவதற்காக முற்றம் போல் அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி இருந்த பகுதிகள் எல்லாம் அறைகளாய் பிரிக்கப்பட்டு இருந்தன. சில வீடுகளில் இவ்வறைகளின் எண்ணிக்கையே முப்பதை தொடுமாம்.

‘நமக்கு இங்கு ஒன்று இரண்டு அறைகளுக்கே… பராமரிக்க முதுகு உடைகிறதே… அப்போது எப்படி இவற்றையெல்லாம் பரமாரித்திருபார்கள்?’ என்ற வியப்பே மேலோங்கி இருந்ததே ஒழிய அதற்கான பதிலை அவள் சிந்திக்கவில்லை.

ஏனெனில் அவள் வீட்டின் அந்தக் கலைநயத்தோடு ஒட்டிக் கொண்டாள். அதன் விளைவாய் தான் தூணிணைப் பற்றி கொண்டு மெய்மறந்து நிற்க, நேரமாகி விட்டப்படியால் அவளைத் தேடி அங்கு வந்த உதயா உண்மையாகவே அவளைத் திட்டி தான் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும், நடுக்கூடத்தில் அமைந்திருந்த வானம் பார்த்த  முற்றத்தில் இருந்த வாளியில் நீரை அள்ளி முகத்தில் அடித்து, முகம், கைக் கால்களை கழுவி விட்டு நிமிர்ந்தாள் ராதா.

நீர் வழியும் முகத்தோடு “ஏய் நீ மூஞ்சி கைக் கால் எல்லாம் கழுவல?” என உதயாவைப் பார்த்து கேட்க, “நான் கால் கழுவிட்டேன். மூஞ்சியெல்லாம் கழுவுனா மேக்கப் கலைஞ்சிடும், எனக்கு பசிக்குது. நான் சாப்பிடப் போறேன்” எனச் சமையற்கட்டுப் பக்கம் விரைந்தாள் அவள்.

“உப்ப்…” என அவள் தோழியின் வினோதத்தை எண்ணி, தன் தலையை லேசாய் அசைத்தப் படி, மாடியில் உள்ள தன் அறைக்கு சென்றாள்.

அங்கு வெளியே கொடியில் காய்ந்து கொண்டிருந்த தன் துவாலையை கையில் எடுத்து, முகத்தில் ஒற்றியப்படி தனதறையில் இருந்த கட்டிலின் பக்கவாட்டில் அமர்ந்தாள் ராதா.

‘உப்ப்… என்ன வெயில்… இந்தக் குளிர்காலத்திலும் வெயில் இப்படி எரிக்கின்றதே. இனி கோடைக்காலத்தைப் பற்றி நினைக்கவே பயமாய் இருக்கிறதே’ என தைத்திங்களின் வெப்பத்தை எண்ணியப்படி, ஓய்வாக அமர்ந்தாள்.

தன் இரு கைகளையும் ஊன்றி, தளர்வாய் சற்று பின்னே சாய்ந்து, மேலே ஓடும் மின்விசிறி காற்றுக்கு தன் முகத்தைக் காட்ட, அண்ணாந்து பார்த்தப்படி அமர்ந்தாள்.

அப்போது தான் அவளுக்கு ஒன்று உதித்தது. ‘ரூமுக்கு வந்து, நாம ஃபேன் போடலையே! அப்போ அமர்த்தாம போயிட்டோமா? இல்லையே! காலைல ரூம்ம விட்டு போகும் போது, அமர்த்திட்டு தான போனேன். ஹேய்… ஆமா நான் ரூம்ம சாத்திட்டு தான போனேன். இப்போ திறந்திருக்கு.’ அதன் பின் யாரும் வந்திருப்பார்களோ என அவள் முழுதாய் எண்ணி முடிக்கக் கூட இல்லை.

“ஏய் யார் நீ? இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்ற ஆணின் குரல் அவள் பின்னே இருந்து ஒலித்து, அவளின் எண்ணோட்டத்தை இடையூறு செய்தது.

ஏற்கனவே அவளின் புத்தியின் சொல்படி, யாரேனும் வந்திருப்பார்கள் என எண்ணி, எழ முயன்றவளை அவனின் அதட்டலான பேச்சினால் முடங்கி விட, இம்முறை அதையும் அவனே கேட்டு விட்டான்.

“நான் கேட்டுட்டே இருக்கேன், பதில் சொல்லாம உக்கார்ந்துட்டு இருக்க” என நரம்பு புடைக்க அவன் கத்தியதில், ராதா உண்மையிலேயே பயந்து போய், அமர்ந்தப்படியே தன் நெஞ்சைப் பிடித்தப்படி பின்னே திரும்பி பார்த்தாள்.

அவளின் மதிமுகம் கண்டும் கூட “நீ யாரு? உனக்கு இங்க என்ன வேல?” என மீண்டும் வினவினான்.

அதன் பின் சட்டென எழுந்தவள், அவள் யாரெனக் கூற அவன் அவகாசமே தராமல், கேள்வி மேல் கேள்வி கேட்டவனுக்கு, மீண்டும் தன் நெஞ்சில் கை வைத்து, சுட்டிக்காட்டிய படி அவனுக்கு பதில் சொல்ல ஆயத்தமானாள்.

“நான்…” என அவள் தன்னைப் பற்றி கூற எத்தனித்த நொடியில் மொத்த குடும்பமே அங்கு… அவர்களின் அறை வாசலில் கூடி விட்டது.

இதை சற்றும் எதிர்பாராத இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

மீண்டும் தூறும்…