MT 22

மாடிவீடு – 22

அழகு வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால், யார் மனதிலும் கொஞ்சமும் மகிழ்ச்சியில்லை.

விடியற்காலம் 5 மணிக்கே திருமணம் என்ற நிலையில் தீவிரமான யோசனையில் இருந்தாள் அன்பு.

ஆலமரத்தானின் செயல் கொஞ்சமும் அவளுக்கு பிடிக்கவில்லை. என் வாழ்கையில் தலையிட அவர் யார் என்ற எண்ணம் தான் அவள் மனம் முழுவதும்.

இனி யாரை பற்றியும் யோசிக்க அவள் தயாராக இல்லை. தான் எது செய்தாலும் அழகு ஏற்றுக் கொள்வான் என்று அவளுக்கு நன்கு தெரியும்.

‘எப்படியாவது நான் அமுதனுடன் சேர வேண்டும் என்பதுதான் அழகுவின் எண்ணம் என்பதும் அவளுக்குத் தெரியும்’ யோசித்தபடியேப் படுத்திருந்தாள் அவள்.

அமுதன் இல்லாத வாழ்வை அவளால் கற்பனை செய்துக்கூட பார்க்கப் பிடிக்கவில்லை.

‘உன் அண்ணன் இல்லாமல் உன்னால் இருக்கமுடியுமா?’ இன்னொரு மனம் கேள்விக் கேட்க,

‘அண்ணன், அமுதன் இருவரும் இல்லாமல் என்னால் இருக்கமுடியாதுத்தேன், ஆனால், இப்பொழுது அமுதன் எனக்கு கிடைக்கவில்லையென்றால் எப்பொழுதும் அவன் கிடைக்கவேமாட்டான்’ கண்களை மூடி அப்படியேப் படுத்திருந்தாள்.

கைகளில் செல்வி வைத்து விட்டிருந்த மருதாணி காய்ந்து விட்டிருந்தது.

கையை கழுவ, அன்பு எழ உடனே செல்வியும் எழுந்துக் கொண்டாள்.

“எங்க போற அன்பு?”

“என்ன செல்வி, உளவு பாக்குதியோ?” காட்டமாக வினவினாள்.

அவளை முறைத்த செல்வி எதுவும் பேசாமல் அன்பு முகத்தையேப் பார்த்திருந்தாள்.

செல்வியின் அசையாதபார்வையைக் கண்டவள், அவளிடம் ஒன்றும் பேசாமல் கைக்கழுவ, பின்பக்க கதவை திறந்து வெளியே செல்ல,

“என்ன வேணும் அன்பு?” என்றபடி வந்து நின்றனர் ஐயா வீட்டில் வேலை செய்யும் இருவர்.

அவர்கள் கேட்டதை கண்டுக் கொள்ளாமல் வாளியில் இருந்த தண்ணீரில் கையை கழுவியவள் சுற்றிலும் பார்த்துக்கொண்டே, கதவை சாற்றிவிட்டு வந்து படுத்துக்கொண்டாள்.

‘முறையாக தன் அண்ணன் கைப்பிடித்துதர, இந்த வீட்டு வாசலை தாண்ட வேண்டும்’ என்று அவள் எண்ணினாள்.

ஆனால், இப்பொழுது ஆலமரத்தானின் செயல் அவளாகவே அந்த வீட்டு வாசலை தாண்ட வேண்டும் என்ற நினைவை தந்திருந்தது.

அன்று, வீட்டை விட்டு ஓடிப்போவோம் என்று அமுதன் கூறும்பொழுதேத் தடுத்தவள், இப்பொழுது அவளே செல்லும் நிலை.

இருள் அடங்கிய, நடுசாமத்தில் மெதுவாக கண்விழித்தாள் அன்பு. செல்வியை பார்க்க அவன் நன்கு தூங்கி விட்டிருந்தாள்.

மருதாணியை கழுவிவிட்டு வீட்டின் உள்ளே வரும்பொழுதே கதவை மெதுவாக சாற்றி வைத்திருந்தவள், ஓசை வராமல் திறந்து வெளியே வந்துவிட்டாள்.

அழகுவும், லிங்கமும் வீட்டு வாசலில் படுத்திருந்தனர். நல்ல தூக்கத்தில் இருக்கிறார்கள் என எண்ணிக் கொண்டாள்.

வீட்டை சுற்றி இருந்தவர்கள் இப்பொழுது காணாமல் போயிருக்க, வீட்டை தாண்டி நடந்துவிட்டாள்.

கையில் அமுதன் தந்த மருத்துவமனை அட்ரஸ். அவனை அழைத்துக் கொண்டு எங்காவது செல்லவேண்டும் என்பது தான் அவளது எண்ணம். அவன் அங்கு தான் இருப்பான் என்ற நம்பிக்கையுடன் வீட்டை தாண்டி விட்டாள்.

அமுதனை தவிர வேறுயாருக்கும் கழுத்தை நீட்ட அவள் தயாராக இல்லை. அதற்கு பதில் தன்னையே அழிக்க அவள் தயார்!

ஆனால், அவள் ஏன் உயிரை அழிக்க வேண்டும். என் காதலில் ஜெயிக்க எனக்கு தைரியம் இருக்கிறது. என் காதலை யாருக்காகவும் விட்டு கொடுக்க நான் தயாராக இல்லை.

அமுதன் எனக்காகக் காத்துக்கொண்டிருப்பான். அவனுக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை திருமணம் என்றுக் கூறியும் என்னை காணவரவில்லை.

அவன் தேடி வருவான் என்றுதான் காத்திருந்தாள், இனியும் இங்கையே இருந்தால் தன்னை அவனுக்கு கட்டிவைத்துவிடுவார்கள் என எண்ணியவள் கிளம்பிவிட்டாள்.

‘அமுதனை திருமணம் செய்து, ஆலமரத்தானின் முன் நான் வாழ்ந்துக்காட்டவேண்டும்.

யார் வாழ்க்கையை முடிவெடுக்கும் உரிமையும் அவருக்குக்கில்லை என்று அவர் முகத்துக்கு நேரே கூறவேண்டும்.’

இப்படி பலவாறான எண்ணம் அவள் மனதில் ஓட, வயலை தாண்டி வேகமாக நடந்துக் கொண்டிருந்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@

‘ஹக்… ஹக்…’

செருமியபடியே கண்விழித்தான் அமுதன்.

தலைசுற்றவும் இருகைகளால் தலையை தாங்கிப் பிடித்து கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தான்.

மெதுவாக கண்களை சுழற்றிப் பார்க்க, அருகில் அவனின் அப்பா அசையாமல் படுத்திருந்தார்.

அப்படியே கண்களை உயர்த்திச்‌ சுவற்றைப் பார்க்க மணி பன்னிரண்டைக் காட்ட, அருகில் இருந்த காலண்டர் சனிக்கிழமையைக் காட்டியது அதிர்ந்து விழித்தான் அவன்.

‘அன்பு… அன்பு கல்யாணம் நேத்தே முடிஞ்சுட்டா? அவ ஏன் என்னை தேடி வரல? அவளுக்கு என்ன ஆச்சு?” ஆயிரம் கேள்விகள் அவனில் முளைத்தன.

எதற்கும் பதில் தெரியவில்லை அவனுக்கு. அன்று அன்பை பார்த்துவிட்டு வந்த பொழுது தலையில் கட்டை பிரித்து மருந்து வைத்து கட்டி ஊசி போட்டபிறகு அவன் இன்று தான் கண்விழிக்கிறான்.

அவனுக்கு என்ன ஆகிற்று, ஏன் இன்னும் மயக்கநிலையில் அவனை வைத்திருக்கின்றனர். இது எதுவும் புரியாமல் யோசனையுடன் அமர்ந்திருக்கும் பொழுது யாரோ வரும் சத்தம் கேட்கவும் அப்படியே கண்களை மூடி படுத்துக் கொண்டான்.

இவன் படுத்திருந்த அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்கவும், கண்களை இறுக்க மூடிக் கொண்டான். ஏதோ, புரிந்தும் புரியாத நிலை.

யாரோ மிக மிக அருகில் வரும் உணர்வு!

“என்ன இன்னும் கண்விழிக்கல? இந்த நேரதுக்கு மருந்தோட வீரியம் குறைஞ்சிருக்குமே?” மெதுவாக முணுமுணுத்தபடி அவனின் தலை கட்டை ஆராய்ந்தார் ஒருவர்.

கொஞ்ச நேரம் எந்த சத்தமும் இல்லை. மெதுவாக கண்விழிக்க, அவர் வாசலில் நிற்பது தெரிந்தது.

மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

“மாலதி… இந்த பேஷண்ட் எழுந்ததும் இந்த ஊசி போட்டு தலை கட்டு பிரித்து விடுங்க, காயம் ஆறிட்டு. கட்டை எடுத்துட்டு பிளாஸ்டர் மட்டும் போட்டா போதும்” கூறியவர் வேக நடையுடன் வெளியே செல்வது கேட்டது.

‘ஆக, பக்கா பிளான் போட்டு தான் என்னை இங்க தங்க வச்சிருக்காங்க, யார் இப்படி பண்ணியிருப்பா?’ எண்ணியவன் அவன் அப்பாவை பார்க்க அவர் அதே பழைய நிலையில் தான் படுத்திருந்தார்.

‘எப்படியாவது இங்கிருந்து வெளியே போகணும், அன்புக்கு என்ன ஆச்சு தெரியல? நான் இங்க இருக்கதுக்கும் அன்புவுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமா? இதெல்லாம் யாரோட வேலையா இருக்கும்’ மனம் பலவாறாக குழம்பி தவித்தது.

அதற்குள் அவளை யாரோ அழைக்க வெளியில் சென்றாள் அந்த மாலதி என்பவள்.

‘இனியும் தாமதிக்க முடியாது’ என எண்ணியவன் உடனே படுக்கையை விட்டு எழுந்தான்.

அறைக்குள் இருந்த தலைகாணி, தண்ணீர் பாட்டில், சின்ன ட்ரே எல்லாம் எடுத்தவன், அவன் படுத்திருந்தது போல் வைத்து பாண்டியை எழுப்பினான்.

“ம்ம்… ம்ம்” என்ற சத்தம் மட்டும் தான் அவரிடம் இருந்து எழுந்தது.

‘அப்பாவை வந்துப் பார்த்துக்கொள்ளலாம்’ என எண்ணியவன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான்.

எங்கும் கும்மிருட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த வண்டியையும் காணவில்லை.

‘எப்படியாவது அன்பை பார்த்து பேசவேண்டும், ஏன் என்னை விட்டு இன்னொருவனை திருமணம் செய்தாய்? என்று கேட்கவேண்டும்’ இப்படியான எண்ணம் அவன் மனதில்.

தூரத்தில் ஒரு டி‌வி‌எஸ் வருவதைக் கண்டான் அமுதன். கைகளை நீட்டி வண்டியை மறித்தான்.

“அண்ணே என்னை அந்த பாலம் பக்கம் இறக்கி விடுங்களேன்” என கெஞ்சுதலாக அந்த பைக்காரனைப் பார்த்துக்கேட்டான்.

அவனோ வண்டியில் முன்னும் பின்னும் மூட்டையை வைத்திருந்தான்.

அமுதன் கையில் கட்டைப் பார்த்தவன், பின்னாடி இருந்த மூட்டையை எடுத்து முன்னால் வைத்துவிட்டு,

“சார்… இந்த பூவையும், மாலையையும் மட்டும் கையில வச்சிகோங்க” என்றபடி முன்னால் தொங்க விட்டிருந்த கவரை எடுத்து அமுதன் கையில் கொடுத்தான் அவன்.

பூவை கையில் வாங்கியவன் பின்னால் அமர பைக் மெதுவாக வேகமெடுத்தது.

“பக்கத்துல ஒரு கோவில் திருவிழா சார்… காலையிலையே பூஜையாம். அது தான் அவசரமாப் போறேன். கோவிலுக்கு பூ குடுத்துட்டு அப்படியே ஒரு கல்யாண வீடும் இருக்கு, அங்கையும் குடுக்கணும். விடியற்காலம் கல்யாணம் போல”

“அப்படியா” என்றவன் பலகதைகள் பேசி பயணம் தொடங்கியது.

தன் காதலியின் திருமணத்துக்குதான் பூவும், மாலையும் எனத் தெரியாமலே மடியில் சுமந்து செல்கிறான் அந்த காதலன்.

@@@@@@@@@@@@@@@@@@@@

அந்த காட்டுவழியே வேகமாக நடந்துக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் இந்த இடங்கள் அன்பு நன்கு அறிந்ததுதான்.

அவளை தொடர்ந்து தூரத்தில் வந்துக் கொண்டிருந்தான் லிங்கம்!

‘அன்பு ஏதோ எண்ணத்துடன் தான் இருக்கிறாள்’ என்று கூறியிருந்தாள் செல்வி. அதிலும் இருவரின் காதலையும் கூறியிருந்தாள்.

அது தான் மிக கவனமாகப் பார்த்திருந்தான் லிங்கம்.

ஆனால் அன்பு வீட்டை விட்டு செல்வாள் என்று அவன் கொஞ்சமும் எண்ணவில்லை!

அவள் செல்லவும் பின்னாடியே கிளம்பிவிட்டான். அவளைதடுக்க அவன் வரவில்லை. அவளின் பாதுகாப்புக்காக  அவன் வருகிறான் அவ்வளவே!

ஒருவழியாக மருத்துவமனையை அடைந்துவிட்டாள் அன்பு.

இப்பொழுது யோசனையாக அன்பைப் பார்த்தான் லிங்கம்.

‘இங்கனத்தேன் அமுதன் இருக்காகளா? அன்பு எதுக்கு இங்க வந்திருக்கு’ என்ற யோசனையுடன் அவளை நெருங்கினான் லிங்கம்.

“அன்பு” என அழைக்க,

அதிர்ந்து விழித்தாள் அன்பு.

“இங்க என்ன பண்ணுத?”

“அது வந்து அண்ணே” என்றவள் தயங்க,

“உன்னை ஒன்னும்  சொல்லமாட்டேன், அமுதன் இங்கனதேன் இருக்காகளா?”

“அண்ணே” கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளின் கண்ணீரைத் துடைத்தவன், “என்னாச்சி” என கேட்க,

சுருக்கமாக அவனுக்கு நடந்த விபத்தையும், அமுதன் அவளை அழைக்க வருவேன் என்று கூறியதையும், அதுவும் இல்லாமல் உனக்கு வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் இந்த மருத்துவமனைக்கு வா என்று கூறியதையும் எடுத்துக் கூறினாள்.

எல்லாம் அமைதியாக கேட்டவன் யோசனையுடன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அங்கு அமுதன் அறைக்கு சென்றுப் பார்த்தால், மெதுவாக கண்களை திறக்க முயற்ச்சி செய்துக் கொண்டிருந்தார் பாண்டியன்.

அதற்குள் மருத்துவரை அழைத்து வந்திருந்தாள் அந்த மாலதி என்பவள்.

லிங்கம் தான் கூறியிருந்தான். இருவரையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போவதாகவும், மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று.

அன்பு, அருகில் இருந்த கட்டிலைப் பார்க்க முழுவதும் மூடியிருந்த தோற்றம் தெரிய, டக்கன்று போர்வையை எடுத்தவள் அதிர்ந்தாள்.

அவள் மட்டும் இல்லாமல் அங்கிருந்த எல்லாரும் அதிர்ந்தனர்.

‘நான் பாக்கும் பொழுது அவர் இருந்தாரே?’ என்ற எண்ணம் அந்த மாலதிக்கு.

அவள் வெளியில் இருந்து எட்டிப் பார்க்க அவன் இருந்ததுப் போல் இருக்க பேசாமல் வெளியே ஒரு நாற்காலியை போட்டு தோழியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

இதை இப்பொழுது இங்கு சொன்னால் டாக்டர் கோபப்படுவார் என உணர்ந்து அமைதியாக நின்றுக் கொண்டாள்.

“இவன் எங்க போனான், ஆலமரம் கேட்டா நான் என்ன சொல்லுறது?” தன்னையறியாமல் மருத்துவர் முனங்க,

அருகில் நின்ற லிங்கம் காதுகளில் நன்றாகக் கேட்டது.

அவன் எண்ணியது சரிதான், ஆக எல்லாம் ஆலமரத்தானின் திட்டம் தான் “டாக்டர்… நான் இவங்களை இப்போ அழைச்சிட்டு போகலாமா, ஆலமரத்தான் ஐயாதேன் சொல்லிவிட்டாக” என,

திகைப்புடன் லிங்கத்தைப் பார்த்தாள் அன்பு.

அவளை கண்களால் அடக்கியவன், அவரிடம் மேலும் பலக் கூறி பாண்டியனை அழைத்து செல்ல அனுமதி வாங்கினான்.

“அமுதன்” என அன்பு இழுக்க,

“அவக ஊருக்குத்தேன் போயிருப்பாக?” உறுதியாக கூறியவன் பாண்டியன் கண்விழிப்பதற்க்காக காத்திருந்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அதிகாலை 3 மணி,

“டே… அழகு, அன்புவைக் காணும்” முத்தார் வேகமாக அழகை உலுக்கி எழுப்பினார்.

மெதுவாக கண்களை திறக்க,

“அன்புவைக் காணும் அழகு” என மீண்டும் அவனை உலுக்கினாள் முத்தார்.

“நல்லாப் பாத்தீகளா? பக்கத்துல எங்கையாச்சும் இருப்பா?” அசட்டையாக உரைத்தான்.

“அண்ணே நிஜமாவே அன்புவைக் காணும்” செல்விதான் கூறினாள்.

அப்பொழுது தான் அழகுவுக்கு பகீர் என்றது.

வேகமாக எழுந்து வீட்டுக்குள் போனான். அவளைக் காணவில்லை.

அந்த ஒற்றை அறையை பலமுறை சுற்றி வந்தான். அவளின் பொருட்கள் எல்லாம் அந்தந்த இடத்தில் அப்படியே தான் இருந்தன. ஆனால் அவளை மட்டும் காணவில்லை.

‘அன்பு ஓடிவிட்டாளா?’

அப்படியே தொப்பென்று அமர்ந்துவிட்டான் அழகு.

அன்புவின் திருமணதிற்கு செல்ல ஆலமரத்தான் வீட்டில் எல்லாரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

தன் அறையில் அமர்ந்திருந்த தமிழுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

எப்படியாவது ஏதாவது செய்யவேண்டும் மனம் உறுத்திக் கொண்டே இருக்க, ஒரு முடிவெடுத்தவளாக அவளும் திருமண வீட்டிற்கு தயாரானாள்.

கையில் அணிந்திருந்த தங்க வளையலைக் கழட்டிவிட்டு, அழகு வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையலை இரு கைகளிலும் அணிந்துக் கொண்டாள்.

காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டிவிட்டு புடவைக்கு ஏற்ற பிளாஸ்டிக் கம்மலை அணிந்துக் கொண்டாள்.

கழுத்தில் அணிந்திருந்த பெரிய செயினை கழட்டியவள், சின்னதை அணிந்துக் கொண்டாள். அது கூடவே பெரிய பாசிமாலை.

மெலியக்கரையிட்ட ஒரு பட்டுப்புடவை. ஆலமரத்தானின் மகளாய் இல்லாமல், அழகுவின் மனைவியாய் தயாரானாள்!

அவன், அன்புவுக்கு தாலிக்கட்டும் நேரத்தில், தன் கழுத்தில் இருக்கும் தாலிக்கு அழகுவிடம் பதில் கேட்பதுப் போல் திருமணத்தை நிறுத்தவேண்டும் என்பது அவள் திட்டம்.

அவள் தயாராகி வெளியே வர, அவளை ஏற இறங்கப் பார்த்தார் அப்பத்தா!

“என்னடி இது கோலம்?” முறைத்தபடியே கேட்டார் அப்பத்தா.

ஆலமரத்தானும், அமுதாவும்‌ அதே கேள்வியைதான் கண்களில் தாங்கி நின்றனர்.

“ஸ்டைல் அப்பத்தா”

“எது ஸ்டைல்… இந்த அன்பு போல பாசி ஊசி கோலம் ஸ்டைலா?” கேட்டபடி முறைக்க,

“ஏத்தா, அதேன் அவ ஸ்டைலுன்னு சொல்லுறால்ல, விடுத்தா” என,

“எதுவும் எனக்கு சரியாபடல, எதுக்கும் சூதனமா கூட்டிட்டு போய்ட்டு வா” என்றதோடு முடித்துக் கொண்டார்.

ஆனால், பார்வை மட்டும் தமிழை விட்டு அகலவில்லை.

அழகு வீட்டில், பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக மாட்டுவண்டியில் இருந்து இறங்கினார் ஆலமரத்தான். அவர் அருகில் ஜாடிகேற்ற மூடிப் போல் பட்டில் இருந்தார் அமுதாம்மாள்.

இவர்கள் இரண்டு பேருக்கும் கொஞ்சமும் பொருந்தாத அலங்காரத்தில் இறங்கினாள் தமிழரசி.

வண்டியில் இருந்து இறங்கிய ஆலமரத்தான் அதிர்ந்தார் திருமணவீட்டைப் பார்த்து.

அவரை வரவேற்க ஆள் இல்லை!

மேள சத்தம் இல்லை! பாட்டு சத்தம் இல்லை! திருமணவீட்டிற்கான எந்த ஆராவாரமும் இல்லை.

“இந்த புள்ள இப்படி பண்ணும்னு அழகு நினைச்சி பாத்திருக்கவேமாட்டான்” யாரோ அருகில் கூறுவதைக் கேட்ட ஆலமரத்தான் வேகமாக அழகு வீட்டை நெருங்க,

தரையில் அமர்ந்திருந்தான் அழகு.

தமிழ் கண்கள் அப்படியே குளமாகின!

“அன்பு ஓடிப்போயிட்டாளாம்” அருகில் இருந்தவர் கூற,

அதிர்ந்து விழித்தனர் ஆலமரத்தான் வீட்டினர்.

தமிழ், தன் தந்தை முகத்தைப் பார்த்தாள். அவர் என்ன நினைக்கிறார் என்று அவளுக்கு தெரியவில்லை.

‘எல்லாம் அப்பாவால் வந்தது’ என தமிழ் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது,

“அன்பு!” என அழைத்தப்படி வீட்டு வாசலில் வந்து நின்றான் அமுதன்.