தூறல் போடும் நேரம் – 14
தூறல் போடும் நேரம் – 14
பகுதி – 14
அழைப்பு மணியோசையில், சமயலறையில் இருந்து வெளி வந்தவளைக் கண்டவன், வழக்கம் போல் வந்த நோக்கத்தினை மறந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான்.
அன்றும் இதே போல் தாவணியை இடுப்பில் சொருகிய நிலையில், அவள் தாவணிக் கதவோரமாய் நின்ற கெண்டைக் கால், புது மணப்பெண் போல் லேசாய் எட்டி எட்டிப் பார்த்தது.
இன்றும் அவ்வாறே எட்டி எட்டி நன்றாகவே பார்த்தது தான், ஆனால் அவள் தூக்கி சொருகிய, நீலபூக்கள் தெளித்த வெள்ளை பாவடையில் இருந்து பார்த்தன. மேலே அதற்கு பொருத்தமாய் நீலவண்ண பனியன் அணிந்திருந்தாள்.
நீளக் குழலைக் கொண்டையாய் முடிந்து வைத்திருக்க, அதில் இருந்த தப்பிய நான்கைந்து முடிக்கற்றைகள் ஆலம்விழுதென அவள் முகத்தில் ஊஞ்சல் ஆடி, அவள் விழிகளை மறைத்து மறைத்து கண்ணாமூச்சி ஆடியது.
“ஹ்ஹும்…” எனத் தொண்டையைச் செருமி தன்னை அளக்கும் அவன் கவனத்தைக் கலைத்தாள் ராதா.
அவள் வாவென அழைக்கவும் இல்லை, அழைப்பு மணியை அழுத்தி விட்டு திறந்திருந்த வாயிலில், அவன் காத்திருக்கவும் இல்லை.
உள்ளே வந்து அமர்ந்தவன், மாவு கையோடு இருந்தவளைப் பார்த்து, “வேலை இருக்கா… நான் உன்ட்ட கொஞ்சம் பேசனும். வெயிட் பண்ணுறேன். முடிச்சிட்டு வா” என்றான்.
அவனின் வேலை இருக்கா என்ற வாக்கியத்தில் உரலில் மாவு இருப்பது நினைவு வர, உள்ளே சென்று மீதி மாவினை தோண்டி பாத்திரத்தில் வைத்தாள்.
மருத்துவமனையில் இருக்கும் தன் பாட்டிக்கும், அவருக்கு துணையாய் இருக்கும் அத்தைக்கும் இவள் தான் இரண்டு நாட்களாய் உணவினை சமைத்து எடுத்து செல்கிறாள். ஏனெனில் முதல் மூன்று நாட்கள், பாட்டிக்கு அவர்களே உணவு வழங்கினர்.
பின் லேசான வீட்டு உணவு வழங்கலாம் என்று அறிவுறுத்தியபடியால், அதற்கு தான் இப்போது இந்த மாலை வேளையில் இட்லி தோசைக்கு, மாவினை அரைத்து வைத்தாள்.
திருமணத்திற்கு மறுநாள், இவன் விட்டு சென்றதை அறிய கூட முடியாத அளவில், வீட்டின் சூழல் சுழன்று கொண்டிருந்தது. காலையில் ஆறுக்கெல்லாம் கண் விழிக்கும் பழக்கம் கொண்ட பாட்டி, எழாமல் இருப்பதை உணர்ந்த அவரது பெண் புவனி, அவரை எழுப்பினார்.
எத்தனை முறை அழைத்தும், எழாமல் இருந்தவரைக் கண்டு கூச்சலிட்ட புவனி, வீட்டில் வேலைப் பார்க்கும் வெள்ளையம்மா உதவியுடன் அக்கம்பக்கத்தினர் வரவழைத்த ஆட்டோவில் மருத்துவமனை சென்று அடைந்தனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர், பயப்பட ஒன்றும் இல்லை, லேசான நெஞ்சுவலி தான். ஆனால் எதற்கொன்றும் மூன்று நாட்கள் கண்காணிப்பில் இருக்கட்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
பின் தான், புவனிக்கு ராதாவின் நினைவே வந்தது. அவளுக்கு தெரிவிக்க எண்ணி, அலைப்பேசியை எடுத்த நிமிடம், ராதா அவரை நோக்கி நேரிலேயே வந்து கொண்டிருந்தாள்.
விவரம் கேட்டவளிடம், விடை சொல்லிய பின் தான், அந்த காலை வேளையில் அவள் மட்டும் அரக்கப்பறக்க அங்கு ஓடி வந்திருப்பது புரிந்தது.
அதனால் “ராதா… தம்பி எங்க? வீட்டுல இருக்குறாரா?” என வினவினார்.
முதலில் அவரின் தம்பி என்ற விளிப்பினால், தம்பி யார் என சற்று நேரம் சிந்தனையில் இருந்தவள், முடிவில் ராமை தான் கேட்கிறார் எனத் தெரிந்த பின், என்ன சொல்வது என உதட்டினைக் கடித்தாள்.
ஏனெனில் இரவு மாடியில் இருந்து வந்த பின் உறங்கியவள் தான், அவனை அவள் பார்க்கவே இல்லையே! மதியம் சென்றவன் திரும்பி வந்தானா? இல்லை வரவே இல்லையா? எனத் தெரியாமல் விழித்தாள்.
விழித்தவளுக்கு உதவியாய், “நைட்டு ரொம்ப நேரம் கழிச்சு வந்ததாலா, தூங்குறாரா?” எனக் கேட்டவர், ‘அப்போ, வந்து உறங்கி விட்டு, வேறு எங்கும் சென்று இருக்கிறானா? இப்போது என்ன சொல்வது?’ எனக் குழம்பியவள், ஒரு வழியாய் “அவர் வீட்ல இல்ல” என்ற உண்மையைப் பகர்ந்தாள்.
“என்ன! வீட்டுல இல்லையா? எங்க போனார் ராதா? உன்ட்ட சொல்லலையா?” என அதிர்ந்து போய் தான் கேட்டார்.
சற்றே அவமானத்துடன் “இல்ல… எனக்கு தெரியாது” எனப் பதில் சொன்னவளிடம் “அவரு நைட் வந்ததாவது உனக்கு தெரியுமா?” எனச் சந்தேகத்துடன் சரியான கேள்வியைக் கேட்டார்.
அதற்கும் குன்றலோடு, மறுப்பாய் தலையாட்டினாள். “என்ன பொண்ணும்மா நீ?” என தன் தாயின் நிலையை விட அவளின் நிலை பெரிதாய் அவருக்கு வாட்டியது.
என்ன தான் பாட்டியுடன் இருந்து வளர்ந்தாலும், தாய் தந்தை இல்லாது, சில விசயங்களை அவரிடம் பகிரும் தன்மை இல்லாது தனியே வளர்ந்தவளின் தனிமையை இப்பொழுது உணர்ந்தார் புவனி.
அவளின் தனிமையைப் போக்கி, அவளுக்கு தாயாய் மாற வேண்டிய தருணம் இது என்று புரிந்து கொண்டார். இல்லையெனில், அவள் வாழ்வே தனிமரமாய் நின்று விடும் எனத் தவிப்போடு எண்ணினார்.
அவருக்கு ராதாவைப் பற்றி தெரியும். சிறுவயது முதல் அவர்கள் வீட்டிற்கு வந்து செல்பவள், ஒரு நாள் விளையாட்டாக பேசிய வடிவேலின் நையாண்டி பேச்சுக்கு பின், அவர்கள் வீட்டு பக்கம், மழைக்கு கூட ஒதுங்கியதில்லை அவள்.
மேலும் என்னவோ ஏதோ எனத் தாய் வீட்டிற்கு பார்க்க வந்த புவனிக்கு, ஒரே ஆச்சரியம். அவள் கணவனின் பேச்சை தன் தாயிடம் கூட பகிராமல், தனக்குள்ளேயே இறுகிக் கொண்டவளிடம் இதைப் பற்றி கேட்டதற்கு “பாட்டி பாவம்த்த இன்னும் எத்தனை பாரத்த தான் சுமக்கும். அதான் நான் சுமக்க பழகிட்டேன்” எனப் பத்து வயதிலேயே பக்குவப்பட்ட பெண்ணாய் பேசியவளை அணைத்து கொள்வதைத் தவிர அவருக்கு வேறு எதுவும் செய்ய வழியில்லை.
ஏனெனில் அவரும் அவரது தாய்க்கு பாரமாய் போய் விடக் கூடாதே என்ற அச்சம் தான்.
அதிலிருந்து அவள் அனாவசியமாய் எந்தப் பிரச்சனையையும் பாட்டியிடம் கொண்டு செல்வதில்லை. அதே போல் அவள் வயதொத்த சிறுமிகளுக்கு ஏற்படும் சின்ன சின்னப் பிரச்சனைகளைக் கூட தூசு போல் தட்டி விட்டு போய் விடுவாள்.
அதே போல் பாட்டி சொல்லை எந்த நிலையிலும் அவள் தட்டியது இல்லை. ஏனெனில் இளவயதில் கணவனை இழந்து, மீண்டும் இளவயது மகனைப் பறிகொடுத்து, எந்த வித சுணக்கமும் கொள்ளாமல், தன்னை ஆளாக்கும் அந்த முதிர்ந்த தாய்க்கு அவள் திருப்பி செய்யும் ஒரு அன்புக் கடன். அவ்வளவே!
அந்தக் காரணத்தால் தான், பாட்டியின் திருப்திக்காக புவனியின் மகன் சுதர்சனைத் திருமணம் செய்ய சம்மதித்திருந்தாள்.
அப்பனின் புத்தியை தப்பாமல் கொண்ட சுதர்சன், அடிக்கடி அவளைக் கேலி செய்து காயப்படுத்தினாலும், பரவாயில்லை, இப்போது மருத்துவனான அவன் திருந்தியிருப்பான் என எண்ணி தான் கரம் பிடிக்க சம்மதித்தாள்.
ஆனால், நிச்சயத்திற்கு பின் ஒரு நாள் சந்தர்பத்தில் “என் கெட்ட நேரம் உன்ன கட்டிக்கணும் இருக்கு. என் அழகுக்கும், அறிவுக்கும், படிப்புக்கும்…” என அதற்கு மேல் அவன் முடிக்காமல்,
“ஏதோ கவர்ன்மென்ட் உத்தியோகத்துல இருந்து சம்பாதிக்கற, அதனால சம்மதிச்சேன். எப்படி தான் இருந்தாலும், இந்த அழுக்கு கலர என்ன மாத்தவா முடியும்” எனத் தாவி தாவி பேசினான். அவனின் இயற்கைக் குணத்தைக் காட்ட, ராதாவுக்கு இந்த நிகழ்வே போதுமானதாய் போனது.
ஏனோ அன்றைக்கு அவனின் மீது கோபம் வரவில்லை, மாறாக கருப்பு, மாநிறம் என்றால் அழுக்கு நிறம் என்றும் வெள்ளையும் சிவப்பும் தான் அழகான நிறம் என்ற இந்த பாகுபாடை யார் படைத்தது எனச் சித்தாந்தமாய் யோசிக்க ஆரம்பித்தாள்.
அதனால் தான் அன்று ராமிடம் பேசும் போது கூட தன்னைச் சிதறடிக்க ஒருவன் இருக்கிறானே என இவனை… சுதர்சனைத் தான் எண்ணினாள்.
‘ஆனால் இதை எல்லாவற்றையும் ஒரே ஒரு… இல்லை… அதுக் கூட இல்லை அரை நொடியில் அனைத்தையும் மாற்றி, தன் வாழ்க்கையில் இருந்து அந்த சுதர்சனை சிதறடித்து தனக்கு சிறகு கொடுத்து விட்டானே’ எனத் தன்னை விட்டு சென்றவன் என எண்ணாமல் தனக்கு விடுதலை அளித்தவன் என நல்லெண்ணமாய் எண்ணினாள்.
அவள் எண்ணிய மறுநொடி மழைக் கொட்ட தொடங்கியது. தூறல் போடவும், அவளுக்கு உதறல் எடுத்தது. எப்பொழுதும் அவளுக்கு ஏதேனும் இடர் நேரிடும் பொழுது தான் ஆறுதல் சொல்வது போல் மழையும் தூறும்.
அதனால் தான் இப்பொழுது தூறவும் பயமழை கொண்டது அவள் மனது. ‘ஏன் இப்போது தூறல் தூறுகிறது? ஒரு வேளை அவனைப் பற்றி தெரிந்து, அவனிடம் இருந்து உன்னைக் காப்பாற்ற தான் தாலி கட்டினேன். மற்றபடி எதுவும் இல்லை எனக் கூற வந்திருக்கிறானோ?’ என மழையின் சாரலால், திடம் கொண்ட அவளின் மனம் சிறிது சறுக்கியது.
அவனைப் பற்றி ராமிற்கு எப்படி தெரியும் என அவள் அறியவில்லை. இதே சாதாரண மனநிலையில் இருந்திருந்தால், உதயாவின் கைப்பேசியில் இருந்து தன் எண்ணை எடுத்தது போல் உதயா மூலம் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது என அவள் யூகித்து இருக்கலாம்.
ஏனெனில் சில விசயங்களை தோழி என்ற முறையில் சில சமயங்களில் அவளிடம் பகிர்வதுண்டு. ஆனால் இப்போது அவளின் மனமும் மூளையும் வேலை செய்ய மறுத்தது.
அவனிடம் இருந்து காரணத்தைப் பெறும் வரை அது இயங்காது போலும். இவ்வாறு பல்வேறு எண்ணங்களை எண்ணியபடி வேலையை முடித்தவள், கழுவிய கைகளை துடைத்து கொண்டாள்.
துடைத்தவளின் பின்னே இருந்து “கொஞ்சம் டீ போட முடியுமா?” என்ற கேள்வி பறந்து வந்தது.
ஏனெனில் இடைவெளி விட்டு தான் நின்றிருந்தான் ராம். ராமின் கேள்வியால், திடுகிட்டவள் துடைத்த துணியை நழுவ விட்டாள்.
“ஹே… என்னாச்சு?” என அருகில் நெருங்கியவனை, “ஒண்ணுமில்ல…” என கை நீட்டி தடுத்து நிறுத்தினாள்.
அவளின் தடுமாற்றத்தை உணர்ந்தவன், “டீ…” எனத் தயங்கினான்.
“இதோ போடுறேன்…” என்றவள், வந்தவனுக்கு ஒரு வாய் தண்ணீர் கூட தரவில்லை என்பதை உணர்ந்தவள், “ஒரு நிமிஷம்” என அவனை நிறுத்தினாள்.
நின்றவனிடம், குவளை நீரை நீட்ட, “குடிச்சுட்டேன்” எனக் கூறியவனை வித்தியாசமாய் பார்க்கவும், “நான் தண்ணி பாட்டில் கொண்டு வந்தேன்.” என விவரம் கூறினான்.
சமையலறை விட்டு அகலும் அவனையே பார்த்தவளுக்கு, சமையலறைக்கு நேரே இருந்த வரவேற்பறையில் இருந்த அவனின் பை கண்ணில் பட்டது. அவன் கூறிய விவரத்திற்கு விடைத் தெரிந்தது ஆனால், அந்த விடையே இப்போது வினாவை எழுப்பியது. ‘ஏன் பையோட வந்திருக்கான்? இங்கயே தங்கப் போறானா?’
தேநீரோடு வந்தவளுக்கு, சாத்தியிருந்த வெளிவாயில் கண்ணில் பட்டது. மழை பெய்யும் போதே எதார்த்தமாய் தான் அவன் சாத்தியிருந்தான். அவளுக்கு அது நெருடலாய் பட்டது.
“உங்களுக்கு…” எனச் சொல்ல வந்தவன் கண்களை மூடி, திருத்தமாய் “உனக்கு டீ?” என உரிமையாய் ஒருமையை நாடினான்.
“ம்ம்… குடிக்கணும்” எனக் கூறியவளிடம் “போய் எடுத்துட்டு வா” எனத் தன் தேநீரை குடிக்க தொடங்கியிருந்தான்.
இந்த திருமணத்தின் திருப்பத்தை விளக்க வந்தவன், எதில் இருந்து ஆரம்பிப்பது எனத் தெரியாமல், யோசித்தவன், முதலில் இருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவுக்கு வந்தான்.
“நீ டெல்லிக்கு போனப்புறம், நான் உனக்கு எத்தனவாட்டி கால் பண்ணேன். ஏன் எடுக்கல?” எனத் தொடங்கினான்.
‘இவன் என்ன மாமனா மச்சானா? போன் போட்டதும் எடுக்க… இல்ல என் ஹெட்டா இவன் போன் பண்ணதும் எடுக்க?’ என அவளின் அசட்டையான நினைப்பே அவள் முகத்தில் பிரதிபலிக்க…
“அசால்ட்டு தனம்… ம்… நீ சட்ட பண்ணாம இருந்ததுக்கு அந்தக் கேடுகெட்டவனையே கட்டி செத்து சுண்ணாம்பா போன்னு விட்டிருக்கணும்” என இப்போதும் அவளின் திமிரான அசட்டை தன்மை, அவனை வெறுப்பேற்றியது.
“ஹலோ… ரொம்ப பேசுறீங்க… அவன் எங்க அத்தையோட பையன்” குரலுயர்த்தி கடுப்பேற்றினாள்.
“அத்த பையன்னா… நல்லவனா கெட்டவனா பார்க்க மாட்டியா? அப்படியே கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிப்பியா?” என விளாசினான்.
“எங்க பாட்டியோட ஆசை, பண்ணிக்க சம்மதிச்சேன். மோரோவர், இது என் சொந்த விஷயம்” என அவளும் அவனை விளாசினாள்.
‘நாம் என்ன சொல்றோம். இவ எவ்வளவு கொழுப்பா, உன்ன யார் தலையிட சொன்னாங்றா மாதிரி பதில் சொல்றா… தேவை தான்… எல்லாத்துக்கும் அவள சொல்லணும்’ என எண்ணியவன், “அதான் சொந்தமா குழி தோண்டி விழுறதுக்கு ரெடியானியா?” மௌநியானாள் அவள்.
“கல்யாணம் மட்டும் நடந்திருந்தா… இந்நேரம் உன் வாழ்க்கையவே சூனியமா சிதறடிச்சிருப்பான். ராஸ்கல்… அவன…” என சுதர்சன் மீது அடக்க முடியாத கோபம் எழுந்தது.
தான் உணர்ந்த சொல்லையே அவனும் சொன்னதை உணர்ந்தாலும், “உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது. அவன் என்ன பண்ணான் உங்கள…?” எனக் காரணத்தை அறிய முற்பட்டாள்.
“என்ன பண்ணல அவன்… அவனால ஒரு குடும்பமே நிலகுலைஞ்சு போச்சு” எனச் சுதர்சனின் மறுபக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.
இன்னும் தூறும்…