NNA15

நீயும் நானும் அன்பே

அன்பு-15

 

இரண்டொரு நாள்களுக்கு முன் சங்கர், வெற்றிக்கு அழைத்துப் பேசியிருந்தான்.

 

சங்கரின் அழைப்பை எதிர்பார்த்திராதவர் முதலில் சற்றுத் திணறி பிறகு சுதாரிப்போடு பேசத் துவங்கியிருந்தார் வெற்றி.

 

வளவளவென்று பொதுவான கதைகள் எதையும் பேசாமல் நேரடியாக விடயத்திற்கு வந்திருந்தான் சங்கர்.

 

“மாமா… அம்மா, அப்பா ரெண்டு பேரும் உங்ககிட்ட வந்து பேசுனாங்களா?

 

“ம்… ஆமாப்பா… அதை… அதுக்கு நான் அப்பவே… நவீனாவுக்கு டாக்டர் மாப்பிள்ளை பாக்கறதால… வேற எடத்துல பாக்கச் சொல்லி சொல்லிட்டேனேப்பா!, என்று சிற்சில தடங்கலோடு நிதானமாகவே பேசினார்.

 

“வேற எதையும் மனசுல வச்சி நீங்க பேசலைன்னா… நான் ஒரு விசயத்தை உங்ககிட்ட சொல்லனும்…!, என்று சங்கர் இழுவையாகக் கூறி நிறுத்த…

 

ஒரு நிமிடம் என்னவோ, ஏதோ என்று பெண் பிள்ளையை பெற்ற தந்தையின் நிலையில், சரியான சூட்டில் வெடிக்கத் துவங்கிய சோளத்தைப்போல மனதளவில் பதறியிருந்தார் வெற்றி.

 

அவரின் பதற்றத்தை தொலைபேசியிலேயே உணர்ந்த சங்கர், தாமதிக்காமல், “நானும் டாக்டரேட் பண்ணிட்டுதான் இருக்கேன் மாமா…! உங்களுக்கு டாக்டர் மாப்பிள்ளைதான் வேணுனா…! எனக்கே நீங்க நவீனாவைக் குடுக்கலாமே?  அப்புறம் எதுக்கு வேற மாப்பிள்ளை பாக்கறீங்க?, என்று வினவ

 

விடயம் என்னவோ ஏதோ என்று பதறியிருந்த மனதை இதமாக உணர்ந்தவாறே,

 

“இல்லைப்பா…! அது சரி வராது!, என்கிற வார்த்தையை தண்ணீர் தொட்டியில் இருந்த அடைப்பை நீக்கியபின் வெள்ளம் வேகமாக வெளியேறுவதைப் போலக் கூறியவர்,  சற்று நிதானத்தை கையில் எடுத்தவாறே… 

 

“நான் வேற ஒரு இடத்துல இருந்து கேட்டு வந்த டாக்டர் மாப்பிள்ளைக்கு நவீனாவைத் தரதா வாக்குக் குடுத்திட்டேன்.  இனி அதை மாத்திப் பேசினா நல்லா வராது!, என்று அவரின் நிலையில் இருந்து விலகாமல் திடமான முடிவோடு நிற்க…

 

“என் தனிப்பட்ட விருப்பம் மட்டுமில்லை மாமா…! உங்க பொண்ணுக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கறதால… உங்ககிட்ட கேக்கிறேன்…! யோசிச்சு நல்ல முடிவு சொல்லலாமா?, என்று பணிவோடு கேட்டான் சங்கர்.

 

நீட்டிக்க விரும்பாத வெற்றியோ, “இல்லைப்பா…! சொன்ன சொல்லு மாறிட்டான்னு… அப்புறம் ஒரு மாதிரி பேசுவாங்க…! அதுனால… உங்களுக்கு வேற நல்ல பொண்ணா பாக்கச் சொல்லி சசிகிட்ட அன்னைக்கே சொல்லிட்டேனேப்பா!, என்று கூறினார் வெற்றி.

 

“என்ன காரணத்துனால… எனக்கு பொண்ணு குடுக்கத் தயங்கறீங்கனு சொல்ல முடியுமா மாமா?, என்று சங்கர் விடாமல் கேட்க

 

“தயக்கம் எல்லாம் ஒன்னுமில்லை…!, என்று என்ன பேசுவது எனத் தயங்கியவாறே, “…சசிகலா வந்து கேக்குறதுக்கு முன்ன அவங்க வந்து பேசிட்டாங்க…! அவங்களுக்கு சரின்னு சொல்லிட்டு, அப்புறம் பின்வாங்குனா நல்லாவா இருக்கும் தம்பி, என்று  தன்னை நியாயப்படுத்தி பேசியவரிடம்,

 

அதற்குமேல் எதுவும் பேசப் பிரியமில்லாமல், “அத்தைகிட்ட ஒரு நிமிசம் போனைக் குடுக்கீறீங்களா மாமா? என்று தயவாகக் கேட்டான் சங்கர்.

 

“ம்… தோ… குடுக்கறேன்…! என்று அருகில் நின்றிருந்த மனைவியிடம் போனை கொடுக்கத் தயங்கியவாறே முப்பது நொடிகளுக்குப் பிறகு மனதே இல்லாமல் கொடுத்தவர், மனைவியின் அருகிலேயே நின்றிருக்க,

 

கணவனது பேச்சில் காதை கழட்டிவிட்டு வேலை பார்ப்பதாக அதுவரை பெயர் செய்துகொண்டிருந்தவர், “சொல்லுங்கப்பா…!, என்றிருந்தார்.

 

புஷ்பாவின் பேச்சைக் கேட்ட சங்கர், “அத்தை எல்லாரும் நல்லாயிருக்கீங்கள்ல…!, என்று சம்பிரதாய நலனை விசாரித்ததாக பெயருக்குக் கேட்டுவிட்டு, புஷ்பாவின் பதிலுக்காகக் கூட காத்திராமல்,

 

“மாமா ஏதோ மனசுல வச்சி… எனக்கு வீனாவைக் குடுக்க யோசிக்கிறாங்க…! என்னனு உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க…!, என்றவனது பேச்சைக் கேட்ட புஷ்பா

 

‘புருசனப் பத்தி மத்தவங்கட்ட பேசினா பங்கம் குடும்பத்துக்குதான… இதைப் போயி நான் என்னனு யாருக்கிட்ட சொல்ல… என்று மனம் கூக்குரலிட சங்கரின் பேச்சைக் கேட்டு அமைதியாகவே இருந்தார் புஷ்பா.

 

“…விளக்கம் குடுக்க நான் தயாரா இருக்கேன். அவசரப்பட்டு வீனாவை கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்ண வேணானு தோனுது.  ஏறத்தாழ எட்டு, எட்டரை வருசமா ஒருத்தருக்கொருத்தர் மனசுல ஆசைய வளத்திட்டோம்…

 

அடப்பாவிகளா…. அப்ப நாந்தான் அப்பாவியா… பூனை கண்ண மூடிட்டு உலகமே இருட்டுனு யோசிச்ச மாதிரி இருந்திருக்கேனா…  புஷ்பா

 

“….இப்ப திடீர்னு மனசை மாத்திறது… கஷ்டம்தான்…! அதைவிட ஒரே வீட்டுக்குள்ள வாழறதுங்கறதைவிட வேற வேற வாழ்க்கைத் துணையோட வாழறது நரகம்! மாமாகிட்ட பேசிப் பாருங்கத்தை!, என்றுவிட்டு

 

புஷ்பாவின் பதிலை எதிர்பாராமல், “வைக்கிறேன் அத்தை!, என்று தொடர்பைத் துண்டித்திருந்தான் சங்கர்.

 

‘அண்ணந்தான் அரவேக்காடு… பய சூட்டிகாதான் யோசிக்கிது… நல்ல பயலுக்கு இப்டி ஒரு சோதனை, என்று வேதனையோடு எண்ணியவாறே தொலைபேசியை வைத்திருந்தார் புஷ்பா.

 

மனைவி எதுவும் பேசாமல் ம்… ம்க்கும்.. என்று சில ஒலி எழுப்பலோடு, எதுவும் பேசாமலேயே போனை வைத்ததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தவராக, “என்னவாம் பய கிடந்து கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுறான்?”, என்று எகத்தாளத்தோடு மனைவிடம் கேட்க

 

“ம்… நீங்க ஏதோ மனசுல நினைச்சுட்டுத்தான் நவீனாவை அதுக்குத் தர யோசிக்கீறீங்கனு சொல்லிச்சு!, என்றுவிட்டு நகர எத்தனிக்க…

 

“அதையா இவ்வளவு நேரம் சொன்னான்!, என்று விடாமல் நம்பிக்கையற்ற பார்வையோடு மனைவியைக் கேட்க

 

“ம்… அவசரமில்லாம நவீனா கல்யாணத்துல முடிவெடுங்கனு சொல்லிச்சு!, என்று கணவரிடம் கூறிக்கொண்டே நகர்ந்திருந்தார் புஷ்பா.

 

“இவன் வயசுக்கு நமக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு வளந்திட்டானாமா?  மீசை முளைச்சிட்டா… உடனே வயசு பாக்காம எதாவது வாய்க்கு வரதை பெரியவங்ககிட்ட பேசிறதாமா?, என்று மனைவியிடம் கேட்க

 

“போனைப் போட்டு அந்தப் பையன்கிட்டயே கேக்க வேண்டியதுதான! எங்கிட்ட வந்து கேட்டா என்னனு பதில் சொல்ல?, என்றுவிட்டு அவரது பணியில் மூழ்கியிருந்தார் புஷ்பா.

 

“அப்டியென்ன… சாந்தனுவைவிட இவன் ஒசத்தி உனக்கு!, என்று புஷ்பாவிடம் சண்டை இழுக்கும் விதமான முறையில் வெற்றி விடுவேனா என்று மீண்டும் பேச்சைத் துவங்க…

 

“எல்லாம் அண்ணன், தம்பி புள்ளைங்க…! எனக்கு யாரும் ஒசத்தியும் இல்லை…! யாரும் தாழ்ச்சியும் இல்லை!”, விட்டேத்தியான பதிலோடு விலக எண்ணினார்.

 

விடாமல், இல்லையே…! நானும் இந்த கல்யாணப் பேச்சை எடுத்த நாளுல இருந்து பாக்கறேன்..! சங்கருக்கு சப்போர்ட் பண்ற… சாந்தனுவை வேணாங்கறயே ஏன்?, என்ற மனைவியிடம் வார்த்தைகளில் மல்லுக்கு நின்றிருந்தார் வெற்றி.

 

பதில் கூறாவிட்டால் விடமாட்டார் என்பது தெரிந்த புஷ்பா, “எங்கண்ணனை மட்டுமே வச்சி, சங்கரோட நல்ல விசயத்தை எதையும் கண்ணுல பட்டாலும், கருத்துல கொண்டு வராம முடிவெடுக்கிறீங்க…!

 

நான், சங்கரைவிட சாந்தனுவை நம்ம வீட்லயே கொஞ்சகாலம் வச்சிப் பாத்திருக்கேன்.  எது சோடை… எது நல்லதுன்னு எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்றேன்!”, என்று தனது அனுமானத்தைக் கூறினார் புஷ்பா.

 

“ம்ஹூம்… அப்புறம் நான் பாத்த மாப்பிள்ளைய வேற என்ன குறை சொல்லப் போற?”, என்று புஷ்பாவைச் சீண்ட

 

“இது குறையில்ல…!  பெண்புத்தி பின்புத்தினு… குறைவா எங்களை மதிப்பிட்டே ஆம்பிளைங்க உலகம் சந்தோசப்பட்டுக்க நினைக்குது…! அதுல நீங்களும் விதிவிலக்கில்ல…!, என்று விரக்தியோடு கூறியவுடன் வெற்றி மனைவியை முறைத்துப் பார்க்க… 

 

அதைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளாமல் வேலையோடு பார்வையை வைத்துக் கொண்டு கணவருக்கு பதில் கூறத் துவங்கியிருந்தார் புஷ்பா, “ஆனா உண்மையில… பின்புத்திங்கறது… எந்த ஒரு விசயத்தையும், பொண்ணு முக்காலத்துலயும் இது சரியா வருமானு யோசிக்கறதால சொல்லி வச்ச வார்த்தைன்னு சிலருக்கு புரியறதில்ல…!, மனைவியின் குத்தல் பேச்சைக் கேட்டு

 

‘நல்லாத்தான் பேசுறா…! இத்தனை நாளு இப்டி பேசுனதில்லையே!, என்ற எண்ணத்தோடே மனைவியைக் கவனித்திருந்தார் வெற்றி.

 

“…அப்டி நான் யோசிச்ச வரையில… சங்கரைத் தவிர நவீனாவுக்கு ஏத்த மாப்பிள்ளை எங்கயும் கிடைக்கும்னு தோணலை!  உங்களுக்கு சாந்தனு மட்டுமே கண்ணுக்கு உயர்வாத் தெரியுது!

 

பொண்ணுங்களோட மன எதிர்பார்ப்பு, வரப்போறவன், அன்பா, அனுசரணையா… நல்ல குணவானா இருக்கனும்னு நினைப்போம்!

 

அறியாமையினால… தான் தவறுன நேரத்தில கட்டுனவன் கண்டிச்சாலும், தயங்கி… பின்தங்குற நேரத்துல தட்டிக் கொடுத்து கைகொடுத்து தூக்கி விடற மாதிரியான, எல்லா நிலையிலும் தனக்காக தோள் கொடுக்கறவங்களா வரப் போற புருசன் இருக்கனும்னு எல்லா பொண்ணுங்களுமே நினைப்பாங்க!

 

நம்மை குழந்தை மாதிரி ரொம்ப எதுக்கெடுத்தாலும் கண்டிக்காம… எதாவது கஷ்டத்தில எழ முடியாம தவிக்கிற நேரத்துல தூக்கிவிட்டு, ‘ஒன்னுமில்லை… பயப்படாம அடுத்து செய்ய வேண்டியதை துணிஞ்சு செய்யி… நான் இருக்கேன்னு!, வார்த்தைகள்லயோ, இல்லை செயல் மூலமாகவோ கூட நிக்கிறவங்களை வாழ்க்கைத் துணையா வரணும்னு ஆசைப்படுவாங்க…!

 

அந்த விதத்துல… நம்ம நவீனாவோட எதிர்பார்ப்பு எனக்கு தப்பாத் தோணலைங்க!, என்று கூறிவிட்டு

 

“அந்தப் பையன் இவ்ளோ தூரம் இறங்கி வந்து கேக்குது…! ஆனா அதை நீங்க கன்சிடர் பண்ணவே யோசிக்கிறீங்க…! இந்தக் காலத்துப் புள்ளைங்க நம்ம மேல மரியாதை வச்சி… இந்தளவு இறங்கி வந்து கேக்கறதே பெரிசு.  அதை கண்டுக்காம விட்டுட்டு, பின்னாடி வருத்தப்படறதில அர்த்தமில்லைனு எனக்குத் தோணுது!, என்றவர் அதற்குமேல் அங்கிருந்து அகன்றிருந்தார்.

 

மனைவியின் பேச்சில் யோசனையோடு சென்று அமர்ந்திருந்தார் வெற்றி.

 

ஆனாலும் மனம் தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மறுத்தது.

//////////////

 

நவீனாவின் பேச்சிற்குப் பிறகு, நிதானமாக யோசித்திருந்தான் சங்கர்.

 

தாங்கள் இருவரும் எடுக்கப்போகும் முடிவினால் வரக்கூடிய சாதக, பாதகங்களை குறித்துக் கொண்டு, இயன்றளவில் வேலையை துரிதமாக முடிக்க இலக்கு நிர்ணயித்துக் கொண்டான்.

 

அன்று இரவு தாயிடம் பேசியவன், “ம்மா… வீனா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்றா…! நீங்க, அப்பா, ஆத்தா மூனு பேரும் கிளம்பி மதுரை வாங்க… இங்க வச்சி நேருல பேசலாம்!, என்றவன், பொதுவான பேச்சுக்களைப் பேசிவிட்டு வைத்துவிட்டான் சங்கர்.

 

அதுவரை சசிகலாவையே கவனித்துக் கொண்டிருந்த அன்னம்மாள், “நாளைக்கு எனக்கு மதுரைல டாக்டருகிட்ட காமிக்கப் போறதா சொல்லிட்டு கிளம்புவோம் சசி, என்றவர்

 

“இப்பவே போயி உம்புருசன்கிட்ட எதயும் சொல்ல வேணாம்.  காலையில சொல்லிக்கலாம்.  போயி நிம்மதியா படுத்துத் தூங்கு!, என்றுவிட்டு யோசனையில் ஆழ்ந்துவிட்டார் அன்னம்மாள்.

 

“சரி அத்தை, என்றுவிட்டு படுத்த சசிகலாவிற்கு, மனதில் ஏனோ தயக்கமாக இருந்தது.

 

வெற்றி என்ன நினைத்துக் கொள்வாரென்பதைவிட, தனக்கு ஒரு பெண் குழந்தை இருந்து இதுபோன்ற நிகழ்வு நடந்தால், தான் அதை எப்படி எதிர்கொள்ளுவோம் என்கிற எண்ணமே வந்து மனதை அரித்தது. அறுத்தது.

 

விடியல் வரை அரைகுறையான உறக்கத்தோடு, கழித்தவர், மற்ற பகுதிகளில் மரியாதைக்காக மாமியாருக்கு உடல்நலக்குறைவாக இருப்பதால் மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு, மூவருமாக கிளம்பியிருந்தனர்.

 

மதுரையில் சங்கர் தான் பார்த்திருந்த வீட்டிற்கு மூவரையும் நேராக அழைத்துச் சென்றவன், பெண்ணின் முடிவோடு தனது பங்கு எதிர்பார்ப்பையும் பகிர்ந்து கொண்டிருந்தான்.

 

அனைத்தையும் அமைதியாகக் கேட்டிருந்த அன்னம்மாள், வீடு பால் காய்ச்ச நல்ல நாளை சசியிடம் பார்க்கச் சொன்னார்.

 

அடுத்த நாளே ஏதுவான நாளாக இருக்க, வேண்டிய சாமான்களை வாங்கிவிடப் பணித்தார் அன்னம்மாள்.

 

அடுத்து பேரனை அழைத்தவர், “இன்னைக்கு அந்த மகராசி மனசுல இருக்கற கலக்கத்துல… உங்கிட்ட கல்யாணத்துக்கு நாள் பாக்கச் சொல்லிட்டா சங்கரூ…! ஆனா அவசரப்பட்டு நாம ஏனோ தானோனு செஞ்சிட்டா…! பிற்காலத்துல ஒரு சொல்லு வந்திரும்.  அதனால… அவ சொன்னாலும் நாம எந்தக் குறையுமில்லாம நிதானமாவே நல்லா செஞ்சிருவோம்!, என்றுவிட்டு

 

“உங்க மாமனாரூகிட்ட சமீபத்துல எதாவது பேசினியா?, என்று சங்கரிடம் கேட்க

 

சொல்லவா? வேண்டாமா? என்ற சிந்தனையோடு தயங்கி நின்றவனைக் கண்டு கொண்டவர், “அப்ப பேசியிருக்க… என்ன கேட்ட? என்ன பேசுன?, என்று பேரனைப் பார்த்துக் கேட்டவர்

 

“எதுக்கு இந்த ஆத்தா இதைக் கேக்குதுன்னு யோசிக்கிறியா?  நம்ம மேல எந்தத் தப்புமில்லைனு பொண்ணு நினைக்கிற அளவுக்கு எல்லாத்தையும் சரியா செய்யனும் சங்கரு.  இல்லைனா பிற்பாடு வருத்தத்துல… பொண்ணு வாயில சுணக்கமா ஒரு வார்த்தை வந்திட்டா… உனக்கும் மனக்கஷ்டம் வந்திரும், என்று பேரனிடம் காரணம் கூறியவர்

 

பேரனின் பதிலுக்காக காத்திருந்தார்.

 

சங்கரும், தான் பேசியதை ஒளிவு மறைவில்லாமல் அன்னம்மாளிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.

 

அனைத்தையும் அமைதியாகக் கேட்டவர், “எனக்கு என்னவோ உங்கப்பன் பண்ணதை பாத்துட்டு, அவங்க பொண்ண உனக்கு குடுக்க யோசிக்கற மாதிரி தெரியுது, என்று தனது மனக் கருத்தை மறையாது கூறியிருந்தார் அன்னம்மாள்.

 

விலுக்கென்று தாயின் பேச்சில் நிமிர்ந்து அமர்ந்த தாஸ், “என்னம்மா சொல்ற?, என்று குறைந்த குரலில் குற்றமுள்ள நெஞ்சோடு கேட்க

 

“நீயும், உம்பொண்டாட்டியும் போயி பொண்ணு கேட்டுட்டு வந்து சொன்னதையும், சங்கரு பேசினதையும் வச்சிப் பாக்கும்போது எனக்கு அப்டிதான் தோணுது, என்று மகனிடம் கூறியவர்

 

பேரனிடம் திரும்பி, “சங்கரு… உங்கப்பா மாதிரி இடையில நீயும் மாறிருவியோனு மாப்பிள்ளை பயப்படற மாதிரி தெரியுதுப்பா!  இல்லைனா நீ இவ்ளோ இறங்கிப் பேசியும் மறுத்துப் பேசுற மனுசனே கிடையாது”, என்று யோசனையோடு கூறியவர்

 

“ஏன்னா சசிய தாஸூக்கு கட்டிக் கொடுக்க மாப்பிள்ளைய வச்சித்தான் பேசி முடிச்சோம்.  அப்புறமும் நம்ம புஷ்பாவ கட்டிக் குடுத்ததுக்கு பின்னதான் உங்கப்பன் விவரம் தெரிய வந்துது…! அதுக்கு முன்ன நல்லா வந்து போயிட்டு இருந்த மாப்பிள்ளை… உங்கப்பனை பத்தி தெரிஞ்ச பின்னாடி அவரோட வரத்தை குறைச்சிட்டதோட… நம்ம புஷ்பாவையும் இங்க வரவிட்டதில்ல!, என்று யோசித்தபடியே கூறியவர்

 

“இதையெல்லாம் வச்சிப் பாக்கும்போது, எனக்கு விசயம் அப்டித்தான்னு தோணுது!, என்று வெற்றியின் நடவடிக்கைகளைக் கொண்டு கணித்துக் கூறினார் அன்னம்மாள்.

 

சங்கரும் ஒரு புறம் அமர்ந்து வெற்றியின் மனநிலையில் தானும் அவ்வாறே யோசிப்போம் என்ற முடிவுக்கு வந்திட, இனி என்ன செய்ய என்று அன்னம்மாளிடமே வந்து நின்றான்.

 

“நல்ல நாளு பாக்க ஐயருகிட்ட சொல்லிட்டு, அந்தத் தேதியில இங்க திருப்பரங்குன்றத்துல வச்சி தாலியக் கட்டு சங்கரு!  அப்புறம் நடக்கிறதை பாத்துக்கலாம்.

 

இன்னொரு விசயம், மாப்பிள்ளைக்கு இருதய ஆப்பரேசன் பண்ணிருக்காரு….! அதனால அவரு காரைக்குடில இருக்கிற சமயமாப் பாத்துக் கல்யாணத்தை வச்சிக்குவோம்!, என்று பாட்டியின் பேச்சில் மற்ற மூவரும் புரியாமல் பார்க்க,

 

“புஷ்பா பக்கத்தில இருக்கும்போது இப்டி ஒரு விசயத்தைப் பத்திக் கேட்டு, மாப்பிள்ளை கோபத்துல எதுவும் முடிவெடுத்தாலோ, இல்லை பொண்ணு கல்யாணப் பேச்சைக் கேட்டு அதிர்ச்சில உடம்புக்கு எதுவும்னாலும் அவ பாத்துக்குவா…!

 

இல்லை தனியா இருக்கற நேரத்தில விசயம் தெரிஞ்சு… மாப்பிள்ளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா…! நாளைக்கு நவீனாவே நமக்கு எதிரா திரும்பறதுக்கு வாய்ப்பு இருக்கு!

 

அதனால… மாப்பிள்ளை ஊருக்கு வர தேதியில… மதுரையில உங்களுக்கு கல்யாணத்தை வச்சிக்கற மாதிரி பாத்துக்குவோம்!, என்று முடித்திருந்தார்.

 

அன்று மாலை நவீனாவை அழைத்து வரச் செய்து பெண்ணிடம் நேரடியாகவே அபிப்ராயம் கேட்டிருந்தனர் மூவரும்.

 

“எனக்கு முழுச் சம்மதம் ஆச்சி…!, என்றவள்

 

“இப்பவும் நான் சொல்லலைனா… இப்டியே என்னை வேற யாருக்காவது தாரை வார்த்துக் குடுத்துட்டு தாடி வளர்த்துத் தெரியற ஐடியாலதான் உங்க பேரன் இருக்கற மாதிரி தெரிஞ்சது…! அதான் நானே வந்து வெக்கத்தை விட்டுச் சொல்லிட்டேன்.  என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்கனு!, என்று அன்னம்மாளிடம் கூறியவள் சற்று நேரம் இருந்துவிட்டுக் கிளம்பியிருந்தாள்.

 

அடுத்த நாள் பால் காய்ச்ச வேண்டி இருப்பதால், வந்து செல்ல இயலுமா என அன்னம்மாள் கேட்க, “எனக்கு காலையில ஹாஸ்பிடல்ல டியூட்டி… அதனால… பாலைக் காய்ச்சி என் பங்கை பத்திரமா எடுத்து வச்சிருங்க…! எனக்கு நேரம் கிடைக்கும்போது வந்து குடிப்பேன், என்று ஆணையாகக் கூறிவிட்டு கிளம்பியிருந்தாள் நவீனா.

 

///////////

பால் காய்ச்சிவிட்டு அன்று மாலையே ஊருக்குத் திரும்பியவர்கள், திருமணத்திற்கு முந்தைய தினம் காலையில் மீண்டும் மதுரைக்கு வந்தார்கள்.

 

அன்றும், அன்னம்மாள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டே ஊரிலிருந்து கிளம்பியிருந்தார்.

 

கோவிலில் திருமணம் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் நண்பர்களைக் கொண்டு முன்னேற்பாடாக செய்திருந்தான் சங்கர்.

 

தனது நண்பர்கள் சிலரை மட்டுமே திருமணத்திற்கு அழைத்திருந்தான்.  நவீனாவிடம் அவளது சார்பில் மிக நெருங்கிய தோழமைகளை அழைக்கும்படி கூறியிருந்தான்.

 

அதிகாலை முகூர்த்தத்தில் திருமணம் செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தான் சங்கர்.

 

விடியலில் எழுந்து, சசிகலாவை அழைத்த அன்னம்மாள், “ஊருக்கு போனைப் போட்டு, எங்கொழுந்தங்க… ரெண்டு பேருகிட்டயும், எனக்கு ரொம்ப முடியலைன்னு மட்டும் சொல்லு… அவங்க வரதா இருந்தா போனு போட்டுட்டு வரச் சொல்லு… வேற எதுவும் சொல்ல வேணாம், என்றிருந்தார்.

 

சசிகலாவும் மாமியாரின் சொல்லை மாற்றாமல் பேசிவிட்டு வைத்திருந்தார்.

 

உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, உடனே கிளம்பிவர இயலாததால் ராஜவேலு, சாரதா இருவரும், “பாத்துக்கம்மா… முடிஞ்சா வரோம், என்று வைத்திருந்தனர்.

 

தங்கவேலு, நன்முல்லை இருவரும் அன்றே காலையில் கிளம்புவதாக சசிகலாவிடம் தெரிவிக்க, “திருப்பரங்குன்றம் போற வழியில ஆஸ்பத்திரி இருக்கு… வந்துட்டு போனைப் போடுங்க! என்று வைத்திருந்தார் சசிகலா.

 

மோனிகா மற்றும் அவளது குடும்பம் நேராக திருப்பரங்குன்றத்திற்கு வந்திருந்தனர்.

 

நண்பர்கள் புடைசூழ பட்டு சேலையில் மணப்பெண் அலங்காரத்தில் வந்தவளைக் கண்டவனுக்கு, வீனாவின் தோற்றம் கண்டு மெய் மறந்திருந்தான் சங்கர்.

 

பெண்ணும், மாப்பிள்ளைக் கோலத்தில் வந்தவனைக் கண்டு, மன்மதனைக் கண்ட ரதியாக மயங்கியிருந்தாள்.

 

திருமணம் இனிதாக நடந்து, முறைமைகள் முடிந்து அனைவரும் அமரவும், அடுத்த பத்து நிமிடத்தில் தங்கவேலு, நன்முல்லை இருவரையும் நண்பர்கள் கோவிலுக்கு அழைத்து வரவும் சரியாக இருந்தது.

 

என்னவோ, ஏதோ என்று பதறி வந்தவர்களை ஒன்றுமில்லை என்று கோவிலுக்கு அழைத்து வர ஒன்றும் புரியாமல் வந்திருந்தனர்.

 

தாத்தா, ஆச்சியைப் பார்த்தவள், ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள் நவீனா.

 

தங்கவேலுவிற்கு அதிர்ச்சி ஒருபுறம்.  மகிழ்ச்சி மறுபுறம்.  ஆனாலும் நடந்து முடிந்த நிகழ்வு மனதை அறுத்தது.

 

ஆயிரமானாலும், மகள் வயிற்றுப் பேத்தியின் திருமணத்தில் இப்படி மூன்றாம் நபரைப்போல, எதிர்பாரா நிகழ்வில் வந்து நிற்க யாருக்குத்தான் வருத்தம் இருக்காது.

 

தங்கவேலுவின் நடவடிக்கையில் தெரிந்த குற்றம் சுமத்தும் பார்வையைக் கண்டுகொண்ட அன்னம்மாள், “தம்பி… மாப்பிள்ளைகிட்டயும் பேசியாச்சு…! அவங்களும் ஒத்து வரல…! இங்க உங்க அண்ணன் வீட்லயும் இந்த மாதிரினு விசயத்தைச் சொல்லியும் பின்வாங்கல…! வேற வழி எங்களுக்கு தெரியலை…! நவீனா சொன்னதால நாங்க முழுமனசா நின்னு இந்தக் கல்யாணத்தை முடிச்சிட்டோம்.  நீங்க நம்ம புஷ்பாவுக்கு சொல்லிருங்க!, என்று கூறினார்.

 

நவீனாவும் தாத்தாவின் அருகில் வந்து, “சாரி தாத்தா…! அப்பாகிட்ட சொன்னா என்னைக் கன்வின்ஸ் பண்ணி சாந்தனுக்கு கல்யாணம் பண்ணணும்னு சொல்றாங்க…! இவங்களை நினைச்சிகிட்டு சாந்தனுவோட ஒரு வீட்ல எப்டி என்னால வாழமுடியும்? எனக்கு வேற வழி தெரியலை தாத்தா!, என்று கண்கள் கலங்க வந்து நின்ற பேத்தியை அரவணைத்துக் கொண்ட நன்முல்லை

 

“எதுக்கு கலங்குற…! நடந்தது நடந்து போச்சு.  ஒருத்தவனுக்கு பொண்டாட்டியாக வேண்டியவளை வேற எவனும் வந்து கட்ட முடியாதுன்னு சொல்வாங்க…! இது கடவுள் போடற முடிச்சு…! இன்னாருக்கு இன்னன்ன விதி… அதைக் கழிக்க… இந்த மனுசன் மட்டுமே ஆயுளுக்கும் துணையா வரணும்னு ஆண்டவன் போட்டதை நாம மாத்த நினைக்கலாம்.  ஆனா அவன் நினைக்கிறதுதான் நடக்கும்…! அப்டித்தான் இப்ப நடந்திருக்கு…! வருத்தப்படவோ, அழவோ கூடாது…! கண்ணைத் துடை!, என்றுவிட்டு இருவரும் மனதார பேத்தி, பேரனை வாழ்த்தினர்.

 

சங்கரும், தங்கவேலுவிடம் மன்னிப்புக் கோர, சங்கரைப் பற்றி நன்கு தெரிந்தவரால் அதற்குமேல் கோபத்தை நீட்டிக்க இயலாமல், “ஒற்றுமையா ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம, சந்தோசமா இருங்க!, என்று வாழ்த்தினார்.

 

காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு, மீனாட்சியை தரிசனம் செய்யச் சென்றனர்.

 

அதன்பின் மதிய உணவினை முடித்துக் கொண்டு, தாங்கள் புதியதாக குடிவந்த வாடகை வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

////////////

 

விடயம் அதற்குள் காரைக்குடியில் உள்ளவர்களுக்கும், மானகிரியில் உள்ளவர்களுக்கும் பகிரப்பட்டிருந்தது.

 

விடயம் அறிந்தவுடன் கோபத்தோடு வாடகை வண்டி பிடித்து, மனைவியோடு கிளம்பியவரை, சாந்தப்படுத்த முயன்றதோடு, சமாதானப்படுத்தி அழைத்து வந்தார் புஷ்பா.

 

வந்தவர் சங்கரின் சட்டையைப் பிடிக்க, முன்னே வந்த மகளோ, “அப்பா… இதுவரை அவங்க உங்களுக்கு யாரோவா இருந்திருக்கலாம்.  ஆனா இன்னிக்கு அவரு கட்டுன தாலி எங்கழுத்துல இருக்கு.  இனி அவரை இப்டி தரக்குறைவா நீங்க நடத்துனா நல்லா இருக்காது…!

 

நான் உங்க பொண்ணு…! என்னை என்னனாலும் செய்யுங்க…! ஏன்னா நான் சொல்லித்தான் அவங்க இந்தக் கல்யாண ஏற்பாட்டைச் செஞ்சாங்க!, என்று நவீனா அவளாகவே முன்வந்து கூற

 

“அதுக்குள்ள நீயெல்லாம் பெரிய மனுசி ஆகிட்டனு…! நீ சொல்றதைக் கேட்டு அவனுக பண்ணாய்ங்களா?  முட்டாக் கழுதை!, என்று மகளை அடிக்க வர

 

தாஸ் வந்து வெற்றியை தடுக்க, “விடுயா… என்னை…! எம்புள்ளைய அடிப்பேன்! கொல்லுவேன்…! அதைத் தடுக்க நீ யாரு?, என்றவர் திமிரிக் கொண்டு அடிக்க வர,

 

“சின்னப்புள்ளை இல்ல மாப்பிள்ளை அது…!, என்று தாஸ் மீண்டும் வெற்றியை தனது பிடியில் நிறுத்திட முயல

 

இதுவரை மகள்மீது இருந்த கோபம் தாஸ் மீது திரும்ப, “முதல்ல எந்தங்கச்சி வாழ்க்கைய குட்டிச்சுவராக்கின…! இப்ப உம்மகன்கிட்ட எம்புள்ளை வாழ்க்கைய சீரழிக்க இப்டி திருட்டுத்தனமா கல்யாணத்தைப் பண்ணச் சொல்லி ஏவி விட்டுருக்க…! நீ எல்லாம் ஒரு மனுசனா!, என்று இதுவரை மனதிற்குள் மறைத்து வைத்திருந்ததை எடுத்து வெளியில் வார்த்தைகளாக விட்டெறிந்திருந்தார் வெற்றி.

 

தன்னால்தான் மகனின் திருமணத்திற்கு இத்தனை தடைகள் என்பதைக் கேட்டவருக்கு, மனதில் இமாலய வருத்தம் வந்திருந்தது.

 

தனது முன்யோசனையற்ற செயலால் மகன் பாதிக்கப்பட்டதை எண்ணி மனதிற்குள் கடந்த சில நாள்களாக வருந்தியவர், வெற்றியின் பேச்சினைக் கேட்டு அமைதியாகவே இருந்தார்.

 

மரியாதைக் குறைவாக வெற்றி, தாஸைப் பேச… தாஸோ எதிர்த்தோ, கோபப்பட்டோ எதுவும் பேசாமல் வெற்றியை தடுப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்.  இது பிராயச்சித்தம் என்று எண்ணி, தாஸின் மனம் அமைதியை நாடியிருந்தது.

 

வெற்றி தாஸிடமிருந்து இந்த அமைதியை எதிர்பார்க்கவில்லை.  ஏமாற்றம் கோபத்தை வரவழைத்திட… அதற்குமேல் மகளிடம் திரும்பி, “திமிரெடுத்துப் போயி திரியற…! டாக்டருக்குப் படிச்சிட்டா உனக்கு உலகம் தெரிஞ்சிருச்சுனு நினைச்சிட்டு இருக்கியா…! முட்டாள்…! உனக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்னா அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்…! அன்னிக்கு வந்தப்போ படிச்சிப் படிச்சு சொன்னேனே…! பெத்தவங்க புள்ளைங்க நல்லதுக்குத்தான சொல்லுவோம்…! நீ கெட்டுப்போக நினைப்பமா?  யோசிக்கலையே…! உன்னைப் பெத்ததுக்கு உங்க ஆத்தா(அம்மா) சும்மா இருந்திருக்கலாம்!, என்று கண்டபடி வார்த்தைகளை கட்டுப்பாடின்றி கோபத்தில் பேசியவர்

 

அத்தோடு நிற்காமல், “அவங்கப்பனை மாதிரி எவளையாவது சேத்துக்கிட்டு வந்து உம்புருசன் நிக்கும்போது… அப்பானு அழுதுகிட்டு வீட்டுப்பக்கம் வா…! அப்ப இருக்கு உனக்கு!, என்றுவிட்டு

 

“ஏய் கிளம்புடீ..!, என்று மகளின் மீதிருந்த கோபத்தை மனைவியின் கன்னத்தில் காண்பிக்கும் விதமாக ஓங்கி கன்னத்தில் ஒரு அறைவிட்டிருந்தார் வெற்றி.

 

இதை எதிர்பார்த்திராது, நடப்பதை மட்டும் வேடிக்கை பார்த்திருந்த புஷ்பா, கணவனின் எதிர்பாராத அடியில் கன்னத்தைப் பிடித்தவாறே கத்தியிருந்தார்.

 

“ஆ…, என்று மனைவியின் கத்தலை காதில் வாங்காமல்,

 

“எல்லாம் உன்னால வந்தது…! இவங்க சாவகாசமே ஆகாதுன்னு, நான் உண்டு என் பொழப்பு உண்டுன்னு இருந்தப்போ… வினையா புள்ளையக் கொண்டு போயி, அங்க விடச் சொன்னதிலதான் ஏதோ மாய்மாலம் பண்ணி ஒன்னுந் தெரியாத எம்புள்ளைய ஏமாத்திட்டாங்க!, என்று திட்டியவாறே

 

“இதுக்குமேல மகன்னு ஒன்னு நமக்குப் பெறக்கலைங்கறதை மனசுல பதிய வச்சிட்டு கிளம்பு!, என்று மனைவியிடம் கூறியவர், புஷ்பாவை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தார் வெற்றி.

 

அன்னம்மாளை நவீனாவைத் தவிர, சங்கர், தாஸ், சசிகலா மூவரும் அர்த்த்தோடு திரும்பிப் பார்க்க, எதையும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார் அன்னம்மாள்.

 

‘இதையெல்லாம் எதிர்பார்த்தது தான், எனும்படியாக  அன்னம்மாள் அனைத்தையும் பொறுமையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

வீடே சற்றுநேரத்தில், சுனாமி வந்து சென்றதைப் போன்று மாறியிருந்தது.

 

நவீனாவிற்கோ தந்தையின் வார்த்தைகளைக் கேட்டாலும், மனதில் தந்தையை வருந்தச் செய்த தனது செயலால் குற்ற உணர்வில் இருந்தாள்.

 

கணவன் என்ற உறவையும் மீறி இன்று வரை தன்னிடம் சங்கர் நடந்து கொண்ட முறைமைகளை வைத்து, அவனிடம் மரியாதையும், நம்பிக்கையும் கொண்டிருந்தவளால் தந்தையின் பேச்சு எந்த எதிர்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

 

ஆனாலும் பெண்ணுக்கு மிகுந்த வருத்தம் இருந்தது.

 

தனது பேச்சைக் கேட்டு, ஒன்றிற்கு நான்கு முறை தன்னிடம் கருத்துக் கேட்டு நிச்சயித்த திருமணத்தில் இவ்வளவு பிரச்சனைகள் வரும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

அதன்பின் ராஜவேலு குடும்பத்து சார்பில் வந்து, வாசலில் நின்று பேசிவிட்டு என்பதைவிட கத்திவிட்டுச் சென்றிருந்தனர்.

 

அதுவரை அமைதியாக இருந்த அன்னம்மாள், “ஏந்தம்பி… உங்க வீட்ல நீங்க பண்ணது எல்லாம் சரின்னா…! நாங்க இப்ப பண்ணதும் சரிதான்…! சேந்து வாழனும்னு நினைச்சவங்களுக்குத்தான் நாங்க கல்யாணம் பண்ணி வச்சோம்!  ஒருத்தவனை நினைக்கிற புள்ளைய வம்படியா கேட்டு கல்யாணம் பண்ணி வைக்கிற கேவலமான வேலையெல்லாம் எனக்கு பண்ணத் தெரியாது!, என்று பேசியிருந்தார் அன்னம்மாள்.

 

மாலை வரை ஆயுதங்களாக வார்த்தைகளை பிரயோகித்து போர்க்களமாகக் காட்சியளித்த அவ்வீடு, அதற்குப் பிறகு சற்று மாறியிருந்தது.

 

சங்கர் அனைத்தையும் எதிர்பார்த்திருந்தமையால், அனைத்தையும் சீரணித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

யாரிடமும் வார்த்தைகளை விடாமல் இருக்குமாறு அன்னம்மாள் கூறியிருந்ததால், அமைதியாகவே இருந்தான்.

 

நவீனாவின் முகவாடலைக் கண்டு சற்று மனவருத்தம் வந்திருந்தது சங்கருக்கு.

 

சங்கரின் இயல்பைத் தொலைத்த முகத்தைக் கண்ட நவீனாவோ, தன்னால்தான் கணவன் முகம் மாறியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவள் தனனை இயல்பாக்கிக் கொண்டதைப் போன்ற தோற்றத்தில் வளைய வர முயன்றாள்.

 

திருமணத்திற்கு வர இயலாத தோழமைகள் அங்கு வருகை தந்திட சற்று இளக்கம் மீண்டிருந்தது.

 

புது மணத் தம்பதியருக்குரிய எந்த ஆர்வமும் இல்லாமல், அன்று நடந்த நிகழ்வுகளை அசைபோட்டவாறே மனதிற்குள் இறுகி இருந்த தம்பதியர் வாழ்வில் வசந்தம் வந்ததா?

 

இளக்கம் மீண்டிருந்த முன்னிரவைப் போல… அடுத்து வரக்கூடிய காலங்கள் தம்பதியருக்கு அமையுமா?

 

அடுத்த அத்தியாயத்தில்…