தொலைந்தேன் 20💜

eiVIRAP63958-a7d5f757

“மொதல்தடவை நானே உன்னை தேடி வந்திருக்கேன். வர வைச்சிட்டான் அந்த பாவி. அவன்கிட்டயிருந்து நீதான் காப்பாத்தணும் ஆத்தா! அவன் தொல்லை தாங்க முடியல.” என்று இதுவரை மிதிக்காத தன் வீட்டு பக்கத்திலுள்ள சிறிய கோயில் வாசலில் நின்று புலம்பிக்கொண்டிருந்தாள் சாணக்கியா.

இன்று காலையிலிருந்து ரிஷி செய்த அலப்பறை அப்படி! காலை வணக்கத்திலிருந்து சாப்பாடு வரை ஒவ்வொன்றாக விசாரித்து பல குறுஞ்சிசெய்திகளை அனுப்பிக்கொண்டும் அவள் தடை செய்ய தடை செய்ய வெவ்வேறு எண்களிலிருந்து அழைப்புக்களை எடுத்துக்கொண்டும் ரிஷி அவளை ஒருவழிப்படுத்த, அலறிவிட்டாள் அவள்.

கேட்டால் காதலாம். அவளும் என்னதான் செய்வாள். நேராக கோயில்  வாசலுக்கே வந்துவிட்டாள்.

சரியாக, அவள் புலம்பிக்கொண்டிருக்கும் போதே அவளுக்கு அவளவனிடமிருந்து அழைப்பு. திரையைப் பார்த்தவளுக்கு கோபம் தாறுமாறாக எகிறியது.

வேகமாக அழைப்பையேற்று, “என்னடா உன் பிரச்சினை, இல்லை என்னன்னு கேக்குறேன். ஏன்டா என்னை இப்படி டோர்ச்சர் பண்ற? நான் பாட்டுக்கு செவனேன்னு என் டோரா கூட என் வேலைய பார்த்துக்கிட்டு இருந்தேன். எங்கயிருந்தோ திடீர்னு மொளைச்சு என் கூட வந்து ஒட்டிக்கிட்ட. ச்சே!” என்று கோபத்தில் சனா திட்டிக்கொண்டே போக, அவனோ, “நான் என்ன ஸ்வீட்ஹாட்ர் பண்ண, எனக்கு உன்னைதானே பிடிச்சிருக்கு. உனக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சாலும் என்னால உன்னை விட்டு விலக முடியல. நீ வேணும்னுதான் ஒவ்வொரு நிமிஷமும் தோனிக்கிட்டு இருக்கு.” என்றான் கூலாக.

இந்த வார்த்தைகளில் அவளுக்கோ பிபி எகிறியது.

“அடிங்க கசுமாலம்! உனக்கு இருக்குடா, இதுக்கெல்லா சேர்த்து வைச்சு அனுபவிக்க போற!” சுற்றிமுற்றி ஆட்கள் பார்ப்பதைக் கூட கண்டுக்கொள்ளாது அவள் காட்டுக்கத்து கத்த, “அதை அப்போ பார்த்துக்கலாம் டியர். இப்போ மாமாக்கு ஒரு லவ் யூ சொல்லு!” என்றான் ரிஷி குறும்பாக.

“நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாக்கும்!” என்று பற்களைக் கடித்துச் சொல்லிவிட்டு அவள் பட்டென்று அழைப்பைத் துண்டிக்க, பின்னந்தலையில் தட்டி சிரித்துக்கொண்டான் அவன்.

ஆனால், தன் காரிலிருந்து சனாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மேக்னா. அவளுக்குள் ஆத்திரம் எரிமலையாகக் கொதித்துக்கொண்டிருந்தது. ரிஷியின் மனதில் அவளிருந்த இடத்தை இன்னொருவள் பிடித்துக்கொண்ட கோபம் அது.

சனாவை மேலிருந்து கீழ் பார்த்தவள், ஒரு ஏளனப் புன்னகையோடு அங்கிருந்து புயல் வேகத்தில் காரை செலுத்திக்கொண்டு சென்றிருக்க, தூசுக்களை கிளப்பிவிட்டு தன்னை கடந்துச் செல்லும் காரை கவனித்த சனா, ‘நமக்குன்னே எங்கயிருந்துதான் வருதுங்களோ? லூசுப்பயல் மாதிரி காரை ஓட்டிட்டு போறானே’ என்று காரிலிருந்தது ஆணென்று நினைத்து திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தாள்.

அதேநேரம், “வரேவா! சாணக்கியா ராஜலிங்கத்துக்கு இப்போ சொகுசு வாழ்க்கைதான் போ!” என்ற குரல். அந்த குரலுக்கு சொந்தக்காரனை அடையாளங் கண்டுக்கொண்டவள், விழிகளை சலிப்பாகச் சுழற்றியவாறு, திரும்பிப் பார்க்க, எதிரே ப்ரவின்தான்.

“என்ன சிஸ்டர், கொஞ்சநாளா செம்மயா வாழ்ற. அடிக்கடி கார்ல நம்ம ஏரியாவுக்கே வந்து உன்னை பார்க்குறான். அவன் மூஞ்சதான் பார்த்ததில்லை ஆமா… யார்ரவன், உன் பாய்ஃப்ரென்டா? பிடிச்சதுதான் பிடிச்ச, புளியங்கொம்பாதான் பிடிச்சிருக்க.” என்று நக்கல் தொனியில் அவன் பேசிக்கொண்டே போக, ஆரம்பத்தில் அவனின் வார்த்தைகளில் இவன் ரிஷியை அடையாளங் கண்டுக்கொண்டானோ? என்று பயந்தவள், பின் இல்லையென்றதும் எரிச்சலாக விழிகளை மூடித் திறந்தாள்.

“அவ்வளவுதானா பேசிட்டியா?” என்றுவிட்டு அவள் நகரப் போக, “என்னடீ உன் வண்டவாளம் மாட்டிக்கிட்டதும் தடுமாறுற மாதிரி தெரியுது. இருந்தாலும், நீ இந்தளவுக்கு கீழ்தரமா போயிருக்க கூடாது. அப்பாவுக்கு ஏத்த மாதிரி இருந்திருந்தா ஏதோ கொஞ்சம் காசாச்சும் கிடைச்சிருக்கும். ஓவரா பேசி வரயிருந்த வருமானத்தையும் கெடுத்துக்கிட்ட. இப்போ காசுக்காக…” என்று இழுத்து, “ச்சீ…” என்று அவன் நாக்கில் நரம்பில்லாதுப் பேச, ஒருகணம் உலகமே தலைகீழானது போல் நின்றுவிட்டாள் சனா.

என்னதான் தன் தந்தையின் இரண்டாம் தாரத்திற்கு பிறந்த பையனாக இருந்தாலும் உள்ளுக்குள் அவன்மேல் தம்பியென்ற ஒரு உரிமை உணர்வும் ஒரு இனம்புரியாத பாசமும் இருக்கத்தான் செய்தன. அதை ஒரே வார்த்தையில் சுக்குநூறாகச் சிதைத்துவிட்டான் அவன்.

இருவருக்குமிடையே பல சண்டைகள் இருந்தாலும் இந்தளவுக்கு கீழ்த்தரமாக ஒருவரையொருவர் பேசிக்கொண்டதில்லை. ஆனால், இப்போது அவனின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து பேசக் கூட திராணியற்று நின்றுவிட்டாள்.

அதுவும் சில கணங்கள்தான். சுதாகரித்த மறுநொடி கன்னத்தில் ஓங்கி ஒன்று விட்டிருந்தவள், அவன் மறு வார்த்தை பேசும் முன் அடுத்த அறையை விட, அதிர்ந்துவிட்டான் ப்ரவின்.

அடித்தவள் எதுவும் பேசவில்லை. விழிகளில் கண்ணீர் தேங்கி நிற்க, அவனை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சனா விறுவிறுவென அங்கிருந்து ஓட, இப்போது அவளின் விழிகளில் தெரிந்த வலியை உணர்ந்தானோ என்னவோ, கன்னத்தை ஒற்றை கரத்தால் பிடித்துக்கொண்டு தரையை வெறித்தவாறு நின்றுவிட்டான்.

அடுத்த சில நாட்களை ஏனோ பிராபகரனின் வேலை காரணமாக ரிஷிக்கு மேக்னாவுடன் கழிக்க வேண்டியதாக போயிற்று, அதுவும் இருவருக்கும் வசதியான ராகவனின் ஸ்டூடியோவில்.

ரிஷி இத்தனை பாடல்களில் கொடுத்திராத முழு முயற்சியை பிரபாகரனின் கனவுத் திரைப்பட பாடல்களுக்காக கொடுத்து தான் எதிர்ப்பார்த்த வெளியீட்டை பெற முயற்சிக்க, பல வருடங்கள் கழித்து கிடைக்கும் தன்னவனுடனான நேரத்தை ரசித்து ரசித்து அனுபவித்தாள் மேக்னா என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்காக வேலையில் அலட்சியமென்றும் சொல்லிவிட முடியாது. ஒரு கண் ரிஷியின் மீதிருந்தாலும் மற்றகண் வேலையிலிருந்தது. ரிஷியுடனான வேலை, அத்தனை சுலபமாக இருந்துவிடுமா என்ன?

அதுமட்டுமன்றி அவளே வேலைகளுக்கு நடுவே நெருங்கி பேச முயன்றாலும், நாசூக்காக நழுவி பேச்சை மாற்றி கவனத்தைத் திசைத் திருப்பிவிடுவான் அந்தப் பாடகன்.

அன்று இருவரும் இணைந்து எழுதிய பாடல் வரிகளுக்கான இசையை உருவாக்கும் முயற்சியிலிருக்க, சட்டென மேக்னாவின் விரல்கள் கீபோர்டில் வேறொரு இசையை இசைத்தன. இத்தனைநேரம் நிமிர்ந்தும் பார்க்காது வரிகள் அடங்கிய காகிதத்தில் பார்வையை பதித்திருந்த ரிஷியின் பார்வை சட்டென நிமிர்ந்து அவளை அதிர்ந்து நோக்க, விழிகளில் ஆர்வத்தோடு அவனை நோக்கினாள் அவள்.

அது மேக்னா ரிஷியை காதலிக்கும் சமயத்தில் இயக்கிய முதல் இசை, அதுவும் ரிஷிக்காக. அதைக் கேட்டவனுக்கு சில பழைய நினைவுகள் தோன்றி மனம் ரணமாக  வலிக்க, நரம்புகள் புடைத்து சிவந்த முகமாக தரையை வெறித்துக்கொண்டு அவன் அமர்ந்திருந்த நிலையில் பதறித்தான் போனாள் அவள்.

விழிகள் கலங்க, “ரிஷ்…” என்று அவன் கரங்களை அவள் மெல்ல தொட, கையை வெடக்கென்று உதறித் தள்ளியவன், “என்னை விட்டு தள்ளி இரு!” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறியிருக்க, அவளோ போகும் அவனை மனம் கனக்க பார்த்திருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த சனாவின் தூக்கத்தை கலைத்தது அவளுக்கு வந்த அழைப்பு.

இந்நேரம் அழைப்பவன் யாரென்று ஏற்கனவே அறிந்து வைத்திருப்பவள் அவள். ஏற்காவிட்டால் வீட்டு வாசலிலேயே வந்து நின்றுவிடுவான் என்று பயந்தே வேகமாக அழைப்பையேற்று காதில் வைத்தாள்.

“ஹெலோ…” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, “ஸ்வீட்ஹார்ட் ஒரு முக்கியமான மேட்டர், உனக்காகதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் வெளில வா!” என்று பதட்டமாக அவன் பேசி அழைப்பைத் துண்டித்துவிட, அதற்குமேல் அவளுக்கு பதறிவிட்டது.

“டேய் டேய் டேய்!” என்று கத்தியவள், அவன் அழைப்பைத் துண்டித்ததை உணர்ந்ததும், நேரம் நடுநிசி ஒருமணியைக் காட்டுவதைப் பார்த்து குழந்தைப் போல் கைகால்களை தரையில் கோபமாக உதறி அழுதாள்.

எங்கு இன்னும் நேரத்தைக் கடத்தினால் வந்துவிடுவானோ என்று பயந்து வேகவேகமாக எழுந்து வழக்கம் போல் அவன் கார் நிற்கும் இடத்திற்குச் செல்ல, அங்கு அவள் எதிர்ப்பார்த்தது போல் அவள் வருவதை பார்த்ததும் கார் கதவு தானாக திறந்தது.

சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டு வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறிக்கொண்டவள், உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு ரிஷியை திரும்பியும் பார்க்காது அமர்ந்திருந்தாள்.

அவளை குறும்புச் சிரிப்போடு ஓரக்கண்ணால் பார்த்தவன், “இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்… இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்… இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும்… என்ன சொல்லப் போகிறாய்…” என்று அடக்கப்பட்டச் சிரிப்போடு பாட, “மண்ணாங்கட்டி!” என்று கத்திய சனா, “என்னை எங்கடா கூட்டிட்டு போற?” என்று மூச்சு வாங்கியவாறுக் கேட்டாள்.

ஆனால் அவனிடமோ பதிலே இல்லை. கேட்டும் கேட்காதது போல் ரிஷி பாவனை செய்ய, கோபமாக பற்களைக் கடித்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

அடுத்த சில நிமிடங்களில் ஒரு மைதானத்தின் முன் ரிஷி வண்டியை நிறுத்த, வேகமாக ஓடி வந்து கார் கதவைத் திறந்தவன், அவள் இறங்கிய அடுத்தகணமே அவள் இதழில் அழுந்த முத்தம் பதித்திருந்தான்.

அது கொடுத்த அதிர்ச்சியில் விழிகளை விரித்து சனா அதிர்ந்து நிற்க, அவளின் அந்த அசையாத தருணத்தை பயன்படுத்தி அவள் கண்களை தன் இரு கரங்களால் பொத்தி மைதானத்திற்குள் அழைத்துச் சென்றான் ரிஷி.

“அன்னைக்கு உன்னை காப்பாத்தாம இருந்திருந்தா இப்போ நான் நிம்மதியா தூங்கிட்டு இருந்திருப்பேன். இந்த அர்த்த ராத்திரியில அடிக்குற குளிருல என்னை சோதிக்கிறியே!” என்று புலம்பியவாறு வந்தவளின் வார்த்தைகள் காதில் கேட்ட ரிஷியின் பாடல் ஒலியில் சட்டென்று நிற்க, அடுத்தகணமே அவள் விழிகளிலிருந்த தன் கரங்களை விலக்கினான் ரிஷி.

விழிகளை திறக்கும் முன்னே ஏதோ ஒரு வெளிச்சத்தை அவள் விழிகள் உணர, மெல்ல கண்களைத் திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியம். அவள் முன்னே பெரிய திரை. அதில் ரிஷியோடு சனா இணைந்து நடித்த ஆல்பம் பாடல் ஓடிக்கொண்டிருக்க, ஆவென வாயைப் பிளந்து திரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

ரிஷியோ மெல்ல அவள் வலக் கரத்தோடு தன் இடக்கரத்தை இணைத்து, “நாளைக்குதான் யூடியூப்ல இதை ரிலீஸ் பண்ண போறோம். பட், அதுக்கு முன்னாடி உன் கூட இதை பார்க்கணும்னு தோனிச்சு.” என்றுவிட்டு, “பிடிச்சிருக்கா?” என்று ஹஸ்கி குரலில் கேட்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

அவனது கேள்விக்கு, “நல்லாயிருக்கு.” என்றவள், “என் முகத்தை மறைச்சதால நல்லாயிருக்கு. இல்லைன்னா…” என்று பெருவிரலை தலைகீழாகக் காட்டி சிரித்து, “எனக்கு ஒரே கேள்விதான், உனக்கு ஏன் என்னை பிடிச்சிருக்கு? எதுலேயும் நான் உனக்கு பொருத்தமாயில்லையே!” என்று கேட்டாள் வலி நிறைந்த வார்த்தைகளோடு.

அதில் புருவத்தைச் சுருக்கியவன், “தெரியல பட், ஐ லவ் யூ. என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுற சனா.” என்று காதலாகச் சொல்லி ஒரு விரலால் மெல்ல அவளின் நெற்றியிலிருந்து நாசி வழியாக உதட்டைத் தொட்டு கீழுதட்டை இருவிரலால் குவித்து அவள் கன்னத்தை வருட, அவளோ உள்ளுக்குள் உணர்ந்த ஒருவித கூச்சத்தில் விழிகளை மூடி சிலிர்த்துப் போனாள்.

அவளின் அமைதி அவனுக்கு சாதகமாக அமைய, அவளுடைய கண், மூக்கு, கன்னம், நாடி கழுத்து என்று விரல்களால் மீட்டி கழுத்தைத் தாண்டிச் செல்ல துடிக்கும் விரல்களை அடக்கி இறுதியில் மீண்டும் இதழ்களிலே வந்து நிற்க, இப்போது தன்னிதழ்களால் அவளிதழ்களை மீட்ட தோன்றியது அவனுக்கு.

கொஞ்சமும் யோசிக்காது அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்து விலகாமலேயே இதழொடு இதழ் உரச, “நீ எனக்கு வேணும்.” என்றுவிட்டு அவளிடையை கரங்களால் வளைக்க, பட்டென்று விழிகளைத் திறந்தவள், “ச்சே! ரொம்ப பெரிய தப்பு பண்றேன்.” என்று வாய்விட்டே சொன்னவாறு விலகுவதற்காக திமிறினாள்.

ஆனால், அந்த விடாக்கண்டன் அவளை விட்டபாடில்லை.

“ப்ளீஸ், வெயிட்! டூ மினிட்ஸ். நான் ட்ரை பண்றேன். ஆனா, என்னால உன்கிட்ட கன்ட்ரோல் பண்ண முடியல ஸ்வீட்ஹார்ட்.” என்றுவிட்டு அவள் கழுத்துவளைவில் முகத்தைப் புதைக்க, ‘அவுச்!’ என்று கூச்சத்தில் கத்தியவள், “வேது விடு என்னை!” என்றுக்கொண்டே மொத்த பலத்தையும் சேர்த்து தள்ளிவிட்டாள்.

விலகியதுமே நடப்பு புரிய, மாய வலையிலிருந்து விடுபட்ட எரிச்சல் ஒருபக்கம் இருந்தாலும் தன்னை மீறி அவளை நெருங்கி வற்புறுத்துவதை எண்ணி உள்ளுக்குள் தன்னைத்தானே கடிந்துக்கொண்டான் ரிஷி.

“சோரி…” உதட்டைப் பிதுக்கி எங்கோ பார்த்துக்கொண்டு அவன் சொல்ல, ஏனோ அவளுக்கு அவன் மன்னிப்பு கேட்ட விதத்தில் சிரிப்புதான் வந்தது.

ஆனால், அடக்கிக்கொண்டவள், “என்னை வீட்ல விடு!” என்றுவிட்டு விறுவிறுவென்று முன்னே நடக்க, பின்னந்தலையில் தட்டி தன்னையே திட்டிக்கொண்டவாறு அவள் பின்னாலே சென்றான் அவன்.

அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்குள் நுழைந்தவள், முதலில் சென்று நின்றது சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடி முன்தான்.

இதுவரை கண்ணாடியின் முன் தனக்குத்தானே ஆசைப்பட்டு அலங்காரம் செய்ததில்லை. வயதிற்கு வந்த புதிதில் ஆசையாசையாக கண்ணாடி பார்த்து பக்கத்து வீட்டு வனிதா கொடுத்த மையையும் உதட்டுச்சாயத்தையும் அவள் பூசுவதைப் பார்த்து ராஜலிங்கம் அடி வெளுத்துவிட்டார்.

கூடவே, “என்னடீ அலங்காரம் பலமாயிருக்கு. எவனுக்கு காட்ட இதெல்லாம்? புது புது பழக்கத்தை வீட்டுக்குள்ள கொண்டு வந்து மினுக்கிகின்னு இருந்தேன்னா அம்புட்டுதான். சாகடிச்சிடுவேன்!” என்ற அவரின் கடும் வார்த்தைகளும்.

அத்தோடு அலங்காரம் செய்வதையே நிறுத்திவள், ரிஷியின் ஆல்பம் பாடலுக்காக செய்துக்கொள்ள சம்மதித்தாள். அதுவும் இன்னொருவர் செய்துவிட கொஞ்சமும் உடன்பாடில்லாது முகத்தைக் கொடுத்து அமர்ந்திருந்தவள், கண்ணாடியில் தன் அழகை ரசித்துக் கூட பார்க்கவில்லை.

அம்மாவை இழந்த பின் வேலை வேலையென்று ஒருவேளை சாப்பாட்டுக்காக ஓடுபவளுக்கு இதற்கெல்லாம் நேரமும் இருந்ததில்லை.

இன்றுதான் ரிஷியின் வார்த்தைகளில் உருகி தன்னை அமைதியாக ரசிக்க ஆரம்பித்தாள் அவள். தன் விரலால் தன் கன்னத்தை மெல்ல வருடியவாறு கண், மூக்கு என ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்தவள், ‘நாம அம்புட்டு அழகாவா இருக்கோம்! சுமாரான கலரு, சுமாரான மூஞ்சுதான். இதுல எப்படி?’ என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டவளுக்கு ரிஷியின் வார்த்தைகளே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தன.

இதுவரை உணராத வெட்கம். கீழுதட்டைக் கடித்து சிரித்துக்கொண்டவளுக்கு சட்டென்று மனதில் ஒன்று தோன்ற முகம் சிவந்து இறுகிப்போனது.

‘இல்லை சனா, இது சரியா இருக்காது. நீ கொஞ்சமும் அவனுக்கு பொருத்தமில்லாதவ. அந்த வாழ்க்கை உனக்கு பொருத்தமில்லாத வாழ்க்கை. கேமராவுக்கு பயந்து போலியா சிரிச்சுகிட்டு சுதந்திரமில்லாத இந்த வாழ்க்கை வேணாம்.’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டவள், ‘ஆமா… ஏதோ அவன லவ் பண்ற மாதிரில நீ வாழ்க்கை பிடிக்கலன்னு பேசிக்கிட்டு இருக்க, ஒரு மண்ணும் வேணாம் சனா. நாம உண்டு நம்ம டோரா உண்டுன்னு இருந்துடுவோம்’ என்றுவிட்டு அப்படியே தரையில் பொத்தென்று அமர்ந்துக்கொண்டாள்.

அவளுக்குள் பல போராட்டங்கள். தன் அம்மாவின் படத்தைப் பார்த்தவாறே அவள் உறக்கத்திற்குச் செல்ல, நாளை நடக்கவிருக்கும் சம்பவத்தைப் பற்றி அறியாது தன் அரக்கியின் நினைவுகளில் தவித்துக்கொண்டிருந்தான் ரிஷி.