MMOIP 21

1650508912096-02497d13

MMOIP 21

அத்தியாயம் – 21

 

மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த புவனா கண்கள் கீழே தங்கள் வீட்டை நோக்கி வரும் நபரைக் கண்டு ஒரு நொடி திகைத்தது.

பின் குடுகுடுவென குழந்தை போல வேகமாக உட்புற படிக்கட்டுகளில் இறங்கி ஓடியவள், வீட்டிலிருந்து வெளியே வந்து அவனெதிரே நின்றாள்.

அத்தனை நேரம் ஏதேதோ சிந்தித்தவாறு வந்தவன், ஒரு வாரம் கழித்து தன்னவளை பார்த்ததும் மெய்மறந்து நிற்க,

“எப்படி இருக்கீங்க?” என்ற அவளின் கேள்வியில் நிகழ்வுக்கு வந்தான்.

அவன் நெற்றியில் ஒட்டியிருக்கும் பிளாஸ்டரைக் கண்டு முகத்தை சுருக்கியவாறு பார்த்திருந்தாள்.

‘ரொம்ப அக்கறைதான்.’ என உள்ளே நொடித்தாலும், “ம்ம்… இருக்கேன். நீ எப்படி இருக்க?” மென்மை இல்லை அவன் குரலில். கொஞ்சம் அதட்டலாகதான் கேட்டான்.

“ம்ம்…” என மெல்ல தலையை ஆட்டினாள்.

‘இவங்களா சாதாரணமா பேசமாட்டாங்க போலயே. கதையே முடிய போகுது. நாமளே பேசுவோம்.’ என நினைத்தவள்,

“எங்கிட்ட முன்னமாறி எப்போ பேசுவீங்க?” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டேவிட்டாள்.

அதில் புருவத்தை உயர்த்தியவன், “எதுக்கு? மறுபடியும் உன்னவிட அவங்கதான் முக்கியம்னு சொல்லவா?” என கேட்டவனின் வார்த்தைகளில் அழுத்தம்…

புவி, “அன்னைக்கு எதோ தெரியாம சொல்லிட்டேன்.” என உடனே சொல்ல,

அதில், “ம்ஹூம்…” என நக்கலாக உதட்டை சுழித்தான்.

“போதும். ஒரு வருஷம் ஆச்சு. சண்டைய முடிச்சிக்குவோம். என்னை மன்னிச்சிக்கோங்க. நான் பாவமில்லையா?” என்றாள் காதை பிடித்துக் கொண்டு கெஞ்சல் குரலில்…

அவள் முகபாவனையைக் கண்டவனுக்கு கோபம் காற்றில் மறைந்த கற்பூரம் ஆனது.

‘அச்சோ… புவி க்யூட்டா பேசுறாளே. சண்டைய முடிச்சிக்கலாமா?’ என உள்ளே யோசித்தான். இப்படியொரு மன்னிப்பு படலம் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஏற்கனவே ஊருக்கு வந்தபின் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து போன கோபம், அவள் கெஞ்சலில் காற்றில் மறையும் கற்பூரம் ஆனது.

ஆனாலும் அப்டியே விட்டால் அவன் கதிர் அல்லவே!

ரொம்ப யோசிப்பது போல ஆக்ட் செய்தவன், “சரி நான் ஒன்னு கேப்பேன். அதுக்கு நல்லா யோசிச்சு சரியா பதில் சொல்லு. பதில் ஓகேனா மன்னிச்சுடறேன்.” என்று முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கூறினான்.

‘எதும் ஏடா கூடமா கேப்பாங்களோ’ என நினைத்தாலும்,

“கேளுங்களேன்.” என அவனை ஓரக்கண்ணால் கதிரை பார்த்தவாறே கூறினாள்.

நமட்டுச் சிரிப்போடு, “உனக்கு உங்க மாமா, பாட்டியவிட நான் முக்கியமா இல்லையான்றது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பொங்கல்ல விட நான் முக்கியமா இல்லையா? அத சொல்லு… அப்போதான் பழையபடி பேசுவேன்.” என காறாராகக் கேட்க, ‘என்னது’ என்பது போல பார்த்தவள், பயங்கர டென்ஷனாகிப் போனாள்.

மன்னிப்பும் கேட்டாகிவிட்டது. அவன் கோபத்தை போக்கி பேச வைக்க வேண்டும். என்ன கேள்வி கேட்க போகிறான் என்றெல்லாம் அவள் சீரியஸாக யோசித்தால், கிண்டல் பண்ணுகிறானே.

அவனை பார்த்து முறையோ முறை என முறைக்க, கதிரோ பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

அவளை இயல்பாக்கதான் அந்த கேலி. மற்றபடி அந்த பொங்கல் பிரியைதான் அவன் உயிராயிற்றே.

புவனா எதும் சொல்லாமல் நிற்கவும்,

“தெரியும்… பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டுட்டேன்ல…?” என,

“இங்க பாருங்க…”

“எங்க?”

“ப்ச்…”

“பல்லி சத்தம் கேட்குது. நான் உண்மைதான் சொல்றேன்.”

“ரொம்ப ஓவரா பண்றிங்க. பாத்துக்கோங்க.” அவன் நிறுத்தாமல் செய்யும் கேலியில், உதட்டை பிதுக்கினாள்.

அவள் இதழ்களை ரசனையாக பார்த்தவாறே, “பாத்துட்டு மட்டும்தான் இருக்கேன். நான் இன்னும் ஒன்னுமே பண்ண ஆரம்பிக்கலையே. அதுக்குள்ள ஓவரா எங்க போறது!” என்று பெருமூச்சுவிட்டவாறு முனக,

“என்ன?” என புரியாமல் கேட்டாள்.

‘உனக்கு என்னதான் புரிஞ்சிருக்கு?’ எனத் திட்டியவன்,

‘இன்னைக்கு இவ நம்மள என்னவோ பண்றா.’ என நினைத்து தலையை எதுவுமில்லையென ஆட்டி,

“ஒன்னுமில்ல. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. அப்பறமா உன்கிட்ட பழைய மாறி பேசுறேன்.

இந்த வீட்ல ஒரு கிழவி சவுண்ட் விட்டுட்டே இருக்குமே எங்க காணோம்?” எனக் கண்களை சுழற்ற,

‘வேணும்னே பண்றாங்க. பாத்துக்கறேன்.’ என்று  பல்லைக் கடித்தவள், “பாட்டி…” என பெருங்குரலில் கத்தினாள்.

அந்த சத்தத்தில், ‘குட்டி வள்ளியம்மைனு நிரூபிக்கறா.’ என்று முணுமுணுத்தவன் காதைக் குடைந்தான்.

பின், “நகரு, வழிய அடச்சுகிட்டு.” என அவள் நகரவும், கொஞ்சம் தயங்கினாலும் முதன்முதலாக அந்த வீட்டினுள் அடியெடுத்து வைத்தான்.

அது அவன் தாத்தா, பாட்டி வீடு. ஆனாலும் ஒருமுறை கேட்டை கூட நெருங்கியதில்லை. நெருங்கும் எண்ணமும் வந்ததில்லை.

ஆனால் இப்போது!

அவர்கள் மீது பாசம் உண்டு. எத்தனை வருடங்களுக்கு அதனை மறைக்க? எல்லாம் போதும் என இன்றே அதற்கு ஒரு முடிவு கட்டவே அங்கு வந்தான்.

வெற்றி தோப்பில் இருக்கிறானென உறுதி செய்து கொண்டுதான்…

அன்றைய சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும் சூழ்நிலை இன்னும் சரியான பாடில்லை.

இரு நாட்களாக அண்ணனை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

சிடுசிடுவென இருக்கும் அவன் கோபத்திற்கு காரணமென்ன? என யோசிக்க, வீட்டில் சொல்லி எதும் பிரச்சனை ஆகியிருக்குமென புரிந்தது.

ஆதலாலே வெற்றி கோபத்தை போக்க வேண்டுமானால் பாட்டியை சமாளிக்க வேண்டுமென இந்த வீட்டில் இன்றைய விஜயம். 

சுவற்றில் மாட்டியிருந்த ராஜரத்தினம், தாமரை, தங்கவேலு, மணிமேகலை ஆகியோரின் புகைப்படத்தை பார்த்தவனுக்குள் அவர்கள் யாரையும் பார்த்ததில்லையென்றாலும் இனம் புரியா சோகம்.

குரலைச் செருமியவாறு அவன் பின்னே வந்தவள், பாட்டியின் அறையைக் காண்பிக்க, தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான்.

அவரோ யோசனையாக அமர்ந்திருந்தார்.

இதுவரை அன்பு பேரன் கூறி எதையும் அவர் மறுத்ததில்லையே!

ஆனால் அவர் கண்டிப்பாக வேண்டாமெனக் கூறுவதை கேட்கமாட்டேன் என்றுவிட்டானே. உள்ளே மனதுக்கு மிக கஷ்டமாகதான் இருந்தது.

என்னதான் மாணிக்கத்தின் மீதும், மீனாட்சியின் மீதும் கோபமிருந்தாலும், அதை கதிரைக் காணும்போது திட்டி, சண்டையிட்டு வெளிப்படுத்தினாலும், சுந்தரம் மீது வெறுப்பு உண்டு. ஏனென்று தெரியாத வெறுப்பு.

மகன் அன்று அவ்வாறு பேசி சென்ற பின், அவனை ஒதுக்கி பேரன், பேத்தியோடு அன்பாக வாழ்ந்தாலும், எதோ ஒரு மூலையில் வெறுமை இருக்கவே செய்தது.

மாணிக்கம் அப்படி பேசினார், மீனாட்சி அதற்கு காரணம் என்பதை விட, சுந்தரம் அப்படி பேச வைத்திருப்பாரோ என சரியாகவே யூகித்திருந்தார்.

அதற்காக இப்போதும் அவர்களிருவரிடம் உறவு கொண்டாட போகிறாரென்று சொல்லமுடியாது.

மகன் சுயநலம் அவனை அடியோடு வெறுக்க வைத்திருந்தது. அது மாறுமென தோன்றவும் இல்லை.

ஆனால் கதிர் நிச்சயம் அதற்கு விதிவிலக்கு!

உருவில் அப்படியே ரத்தினத்தை உரித்து வைத்திருப்பவனை எப்படி அவரால் தள்ளி வைக்க முடியும்? வெறுக்க முடியும்?

அதற்கு பயந்தே அவனைக் கண்டால் கத்தி, விரட்டுவது போல, கோபப்படுத்துவது, தள்ளி வைப்பது போல பேசி உடனே நகர்ந்து விடுவார்.

எனவே அன்று வெற்றி… கதிர், புவனா பற்றி சொல்லும்போது அதற்கு ஒப்புக் கொண்டார்.

ஆனால் இப்போது அந்த சுந்தரத்தின் மகளை, அவரின் அன்பான பேரனுக்கு? (வெற்றி) கட்டி வைக்க வேண்டுமா?

அவர் மறுத்து பேசியடியே இருக்க, வெற்றி கடைசியாக அவரின் மனநிலையை குழப்பிவிட்டு சென்றுவிட்டான்.

அத்தனை நேர கெஞ்சல்கள் எதும் பாட்டியிடம் எடுபடாமல் போக,

“பாட்டி கல்யாணம்னு எனக்கு ஒன்னு நடந்தா அது அவளோட மட்டும்தான்.

நீங்க சொன்னீங்க நிலைமை இப்படி அது இதுனு வேற யாரையும் கல்யாணம் பண்ணுவேன்னு கனவுல கூட நினைக்காதீங்க.

மறுபடி உங்க மகன் போல பலர் வாழ்க்கைக்கு கஷ்டம் தரதுல எனக்கு விருப்பம் இல்ல.

நான் வருவேன்னு எனக்காக அவ ஒவ்வொரு நாளும் காத்துருப்பா. 

உங்களுக்கு என் சந்தோஷம் முக்கியம்னு தெரியும். அவகூட மட்டும்தான் நான் சந்தோஷமா இருப்பேன்.

நான் அவள கல்யாணம் பண்ணதான் போறேன். நீங்க முன்ன நின்னு நடத்தி வைக்கதான் போறீங்க.

என் பொண்டாட்டியா அவ இந்த வீட்டுக்கு வந்த பின்ன, உங்க மனசு மாறுற வர… உங்கள தொல்லை பண்ணமாட்டாள்.

நாளைக்கு உங்களுக்கு கொள்ளு பேரனோ பேத்தியோ பொறந்து கொஞ்ச ஆச வருமா?இல்ல அந்த மனுஷன் மகளோட குழந்தைனு கொஞ்ச மாட்டிங்களா? அதையும் பாக்கறேன்.

என்னால அவள விட்டுக்கொடுக்க முடியாது பாட்டி. தயவு செஞ்சு புரிஞ்சிக்கோங்க.

புதன் கிழமை அவளுக்கு பொண்ணு பாக்க வராங்க. நாம போறோம் அத தடுத்து நிறுத்தி, அவங்க வீட்ல பேசி எனக்கும் அவளுக்கும் கல்யாண ஏற்பாடு பண்றோம்.” என படபடவென நீளமாக பொரிந்தவன் முடிவாக கூறி சென்றுவிட,

அவன் பேச்சில் உறுத்திய சில உண்மையில் மனம் கலங்கினாரென்றால்,

‘இத்தனை காதலா அவள் மீது? என்னையே எதிர்த்து பேசுறானே? அப்படி என்ன அவகிட்ட இருக்காம்?’ நொடித்துக் கொண்டாலும், பேரனின் பேச்சுத் திறமையை மெச்சாமலும் இருக்க முடியவில்லை.

அதில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்க்கவே செய்தது.

‘கல்யாணமே இன்னும் ஆகல அதக்குள்ள கொள்ளு பேரன் வர போறான். படவா.’ என செல்லமாக திட்டினார்.

(அட நீங்க வேற, அவங்க இன்னும் பேசிக்கவே இல்ல பாட்டி… அவ்வ்…)

இரண்டு நாட்களாக நன்கு யோசித்தவர் மனம் பல விஷயங்களை புரிந்து, அவர்கள் சந்தோசமே முக்கியமென முடிவெடுக்கக் கூறியது.

தெளிவாக முடிவு செய்தவர் ஆள் அரவம் கேட்டு திரும்ப, கண்களில் பட்டான் கதிர்.

அவனை எதிர்பார்க்காமல் முதலில் அதிர்ந்தவர், “இங்க என்னடா பண்ற?” என கேட்க, அவன் முகம் விழுந்துபோனது.

அன்று தன்னிடம் பேசியது உரிமையாய் அடித்தது வெற்றிதானே. என்னதான் அவருக்காக வந்தாலும், பாட்டி இன்னும் மனம் மாறியிருக்க மாட்டார்தான என நினைத்தவன்,

‘எந்த நினைப்புலடா இங்க வந்த?’ அவனையே கடிந்துகொண்டு வேகமாக திரும்பி செல்ல எத்தணிக்க, அவன் முகமாறுதலே அவருக்கு கஷ்டமாகப் போனது.

கதிர் திரும்பிச் செல்லவும், எட்டிப் அவன் கைகளை போகாதவாறு பிடித்துக் கொண்டார்.

கதிர், புவி இருவரும் அவரை ஆச்சர்யமாக பார்க்க, அதை பொருட்படுத்தாமல், “வீட்டுக்கு வந்தவனுக்கு தண்ணி கொடுத்தியா ஈசு?” என அவளிடம் கேட்க,

திருதிருவென விழித்தவள் இல்லயென தலையாட்டவும், “போ போய் கொண்டு வா.” எனவும் சமையலறைக்குச் சென்றாள்.

பேரனைக் கூடத்திற்கு கூட்டி வந்து அங்குள்ள சோபாவில் உட்கார வைத்துவிட்டு அவரும் அமர்ந்து கொண்டார்.

புவனாவிடம் தண்ணீரை வாங்கி ஒரு விழுங்கு குடித்தவன் எதுவும் பேசவில்லை.

பாட்டியின் செய்கை யாவும் அவனுக்கு புதிது. ஆனால் விரட்ட போவதில்லையென புரிந்து, ‘என்னதான் ஆகுதுனு பாப்போம்’ என இருக்க,

குரலைச் செருமியவர், “எதுக்குடா வந்த?” என்று வினவ,

ஆனால் இம்முறை இலகுவாக, “ம்ம்… உன்னதான் பாக்க வந்தேன்.” என கண்ணடித்து சொன்னவன், மீண்டும் நீர் அருந்த,

“இந்த கிழவிய பாக்க வந்தியா? நம்ப முடியலையே? எனக்குத் தெரியும்டா நீ யாரை பாக்க வந்துருப்பேனு.” என, வாய்க்குள் இருந்த தண்ணீரை துப்பிவிட்டான்.

இருமலும் வர, இருமிக்கொண்டே பாட்டியை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

அவன் தலையை தட்டி இருமலை நிறுத்துகிறேன் என்ற பெயரில் நாலு போட, கதிருக்கு அவரின் நடவடிக்கையெல்லாம் கண்டு புதிராகவும், சிரிப்பாகவும் இருந்தது.

“பக்கத்துல இருக்குமோது நெனச்சாக்கூட இருமல் வரும்போல.” என இப்போது புவனாவை சாடை பேச, தலையை சொறிந்தவாறு நகரப் போனவளை,

“இங்க வந்து உட்காரு.” என அதட்டலாக சொல்லவும், சமத்தாக பாட்டியின் மற்றொரு புறம் அமர்ந்து கொண்டாள்.

ஏனோ அவருக்கு உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

அவனை இதுபோல அருகில் அமர்த்திக் கொள்ள வேண்டுமென பலமுறை ஆசைக் கொண்டுள்ளார்.

வீம்பெல்லாம் போதும் என்று நினைத்தார் போலும்!

மேலும் அவரின் பேரன், பேத்தியெல்லாம் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள்… புரிந்தது.

கண்கள் லேசாக கலங்கினாலும், சிரிப்போடு இருந்தவர்… சட்டென கதிர் தோளில் சாய்ந்து கொண்டு, அவர்களிருவர் கைகளையும் ஒட்டாக பிடித்தவாறு, கண்களை மூடிக்கொண்டார்.

எதுவும் கூறவில்லை, எதுவும் கேட்கவில்லை, ஆனால் அவரின் அந்த அமைதி ஆயிரம் சொன்னது.

கதிரோ மற்றொரு கையால் மெதுவாக அவர் தலையைக் கோதினான். தோளில் அவரின் கண்ணீர் துளிகள் படுவதை உணர்ந்தவன், இத்தனை நாட்களாக தன்னை திட்டி ஒதுக்கியதற்கு வருந்துகிறாரென புரிந்து கொண்டான்.

அதை துடைத்தவன் அழ வேண்டாம் என்பது போல தலையசைத்துவிட்டு புன்னகைக்க, அவரும் புன்னகைத்தார். புவனாவும் நடப்பதைக் கண்டு நிறைவாக சிரித்தாள்.

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!