தோளொன்று தேளானது (நிறைவு) 27(அ)

TT copy-af01305f

தோளொன்று தேளானது! 27A (நிறைவு)

          வேதா பற்றி அவர் மூலமாகவே மீனாட்சிக்கு தெரிய வந்திருந்தது. வேதா எஸ்ப்பியிடம் ஒப்படைத்த மாங்கல்யத்துடனான தங்க மாலையில் இருந்த எஸ்ப்பியின் பூர்வீக தொழிலான நகைகடையின் பெயர் அதில் பொறிக்கப்பட்டதைக் கண்டதும், எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாது உண்மை ஊர்ஜிதமாகியிருந்தது.

பூஜா அவர் வசம் வந்த சந்தர்ப்பம் பற்றிய விசயங்களை ஜேப்பி வாயிலாக அறிந்து கொண்ட மீனாட்சி, மகளின் துர்பாக்கிய நிலைக்கு காரணமானவர்களைத் தூற்றி மனதைத் தேற்றியதோடு கணவரின் தற்போதைய நிலையை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள எண்ணினார்.

இதுவரை கணவனை பிறர் விசயங்களில் மட்டுமே மோசமானவராக சித்தரித்து எண்ணியிருந்தது, வேதா வந்து சென்றது முதல் முற்றிலுமாக மாறியிருந்தது.

          மகள் வழிப் பேத்தியான பூஜாவிற்குரிய நியாயம் கிடைக்க வேண்டுமென எண்ணியே, ஜேப்பியை அழைத்துப் பேசியிருந்தார் மீனாட்சி.  மறுப்பேதும் கூறாமல் பூஜாவை அவரிடம் கொண்டு வந்து சேர்க்க நேரம் கேட்ட பேரனை உச்சி முகர்ந்து வழியனுப்பியிருந்தார்.

தான் காணவேண்டும் என்றதும் தன்னைக் காண வந்த மயூரியிடம், பூஜாவைப் பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, “உன் கால்லகூட விழுந்து யாசகம் கேக்கறேன்.  ஷ்யாமோட பொறுப்பை ஜேப்பி எடுத்துப்பான்.  அவனோட அம்மா பூஜாவை கார்த்திக்கு கட்டி வைச்சு, இங்கேயே அவளும் நம்மளோட இருக்க நீதான் பெரிய மனசு பண்ணி சம்மதிக்கணும்.  மாட்டேனு மட்டும் சொல்லிராத!

உனக்கு எந்தக் குறையும் வராமப் பாத்துக்க வேண்டியது எம்பொறுப்பு.  இந்தக் குலமே குறையில்லாம வாழ நீதான் மனசு இரங்கணும் மயூரி!” கண்களில் நீரோடு கெஞ்சிய மீனாட்சியிடம் எதிர்த்துப் பேச முடியவில்லை மயூரியால்.

          கட்டளையிட்டிருந்தாலோ, தன்னை உதாசீனப்படுத்தியிருந்தாலோ, தன் முனைப்போடு அவராகவே முடிவெடுத்துச் செயல்பட்டிருந்தாலோ, மயூரியால் மீனாட்சியை எதிர்த்துப் பேச முடிந்திருக்கும்.  தனது மறுப்பை நிலைநாட்டியிருக்க முடியும்.

ஆனால், தன்னிடம் காலில் விழ வந்ததோடு கெஞ்சிப் பேசிக் கண்ணீரால் தனது உள்ளத்தைக் கரைக்கும் மூதாட்டியிடம் என்ன பேச என்று புரியாமல், தன்னால் அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அழுகையோடு வெளியேறியிருந்தாள் மயூரி.

கண்ணீரோடு கடந்தவளைக் கண்டு பதறிய சுமித்ரா, அவளின் பின்னோடு சென்று என்னவென்று விசாரிக்க, முதலில் அழுதாளே அன்றி பதில் பேச அவளால் முடியவில்லை.

தண்ணீரைக் குடிக்கத் தந்து மயூரியை ஆசுவாசப்படுத்திய சுமியிடம், மீனாட்சி பாட்டி தன்னிடம் கேட்ட யாசகத்தைக் கூறினாள் மயூரி.

          அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சுமி மயூரியிடம், “எல்லாம் அவங்கவங்க சந்தோசத்தைத்தான் பாக்கறாங்க.  சாக்லேட்டா இது.  இரண்டு பேரும் பிரிச்சு எடுத்துக்கங்கனு சொல்ல!  எப்டி மனசு வந்தது இந்தப் பாட்டிக்கு? அவங்கவங்களுக்கு வந்தாதான தெரியும்!” குமுறியவள்,  நம்பிக்கை வார்த்தை கூறிவிட்டு ஜேப்பியைத் தேடிச் சென்றாள் சுமி.

சுமித்ரா ஆரம்பத்தில் ஜேப்பிக்கு புரிய வேண்டுமே ஒரு பெண்ணது நிலை என இதமாக எடுத்துரைத்தாள்.   அவனிடம் எந்த மாற்றமும் இல்லாதிருக்கவே, “இதுலாம் அநியாயமாத் தோணலையா ஜேப்பி.  இதுக்கு நீயும் உடந்தைன்னு நினைக்கும்போது வெறுப்பா இருக்கு.  தான் அப்டிங்கற அகம்பாவத்துல ஒரு பெண்ணோட மனசைக் காயப்படுத்தாதீங்க.

          மயூரியக் கல்யாணம் பண்றதுக்கு முன்னயே இந்த முடிவை நீங்க எடுத்திருக்கணும்.  காலங்கடந்து பூஜா மேல இத்தனை கரிசனை வந்திருக்குனா, ஏதோ உள்குத்து இருக்கு.  ஆனா அதை எங்ககிட்ட இருந்து மறைச்சு, அவளை கார்த்திக்கு ரெண்டாவதா கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்?

          உங்க நொண்ணனுக்கு ஜாலியாத்தான் இருக்கும்.  உங்க பாட்டி அவரைக் கூப்டு, ‘கார்த்தி, ரெண்டு லட்டு தின்ன ஆசையான்னு’ கேட்டதும், மண்டையாட்டி மாணிக்கம் மாதிரி தலையை ஆட்டி சரினு சொல்லியிருக்கும்.

எந்த ஆம்பளை ரெண்டாந்தாரமா பெரியவங்களே பாத்துக் கட்டி வைக்கிறேன்னு சொன்னா வேணானு சொல்லும். இவரை நம்பிக் கல்யாணம் பண்ணி மாட்டிக்கிட்ட மயூரி நிலைதான் கஷ்டம்.

          பெண் பாவம் பொல்லாதது ஜேப்பி.  யோசிச்சு நல்ல முடிவா எடுக்கச் சொல்லு உங்க பாட்டியை.  ஒரு பொண்ணு வாழ, இன்னொரு பொண்ணு கண்ணைக் கசக்குறது நல்லாவா இருக்கு!

இத்தனை வருசத்துல கார்த்திக் இல்லாம வாழ பழகிட்டவளை அப்டியே விட்டுத் தொலைச்சு தலை முழுக வேண்டியதுதான?  

அவ திமிரெடுத்துப் போயி திரிஞ்சதுக்கு, இப்ப மயூவ பலிகடா ஆக்க நினைக்கறது எந்த விதத்துல நியாயம்?

இங்க வரதுக்கு முன்னவரை அமைதியா இருந்த பாட்டீக்குத் திடீர்னு எப்டி யாரு மூலமா இப்டியொரு ஞானோதயம் வந்திச்சு!  எதுக்கு திடீர்னு அவளுக்கு வாழ்க்கை குடுக்கணும், வாரிசைக் குடுக்கணும்னு அடுத்தவங்கட்ட இருக்கறதைப் புடுங்கிக் குடுக்க இந்தப் பாட்டீ முழு முனைப்பாத் திரியறாங்க!

கார்த்திக்கு இதுல என்ன கஷ்டம் வந்திரப்போகுது.  எல்லாக் கஷ்டமும் இனி மயூரிக்குதான். காசு, பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் அவளோட இழப்பை எத வச்சும் உங்க குடும்பத்தால ஈடுகட்ட முடியாது.

பொண்ணுதான் பொண்ணுக்கு எதிரியா இருக்காங்க! ச்சேய்… எப்டித்தான் இவங்களால இப்டியெல்லாம் முடிவெடுக்க முடியுதோ!” இப்டி தனக்குத் தோன்றிய எத்தனையோ விசயங்களைக் எடுத்துக் கூறி அவளின் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், சுமியின் கேள்விக்கு பதில் கூறாமல் கடந்திருந்தான் ஜேப்பி.

***

          கணவரின் செயல்பாடுகளை அறிந்து கொண்ட மீனாட்சி, “இத்தனை வருசம் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமப் போயிருச்சு.  பரஸ்பர நம்பிக்கையிலதான எல்லாப் பொண்ணும் யாருனே தெரியாத ஒருத்தவனை கல்யாணம் ஆனதும் முழுசா நம்பி அவனோட வாழ ஆரம்பிக்கிறா. 

என் கல்யாணத்துக்கு முன்ன வேதாவோட உங்க கல்யாணம் நடந்திருந்தாலும், அந்தஸ்துனு இதுவரை எங்களையெல்லாம் ஏமாத்திட்டு பெரியாளு தோரணையில மிரட்டிட்டு இருந்தது எல்லாம் இப்ப முடிவுக்கு வந்திருச்சு.

இங்க இருந்தா ஒவ்வொரு நிமிசமும் அதையே நினைச்சு நினைச்சு வெந்து போறதுமில்லாம, நொந்து போகவும் செய்வேன்.  இதனால உங்களுக்கும் நல்லதில்லை.

          இனியும் உங்களை சகிச்சிக்கிட்டு இங்க இருக்க எனக்கு இஷ்டமுமில்லை.  கடைசி காலத்தை காசி, இராமேஸ்வரம்னு போயி கழிக்க வேண்டிய நேரம் வந்துட்டதால, நான் ஜேப்பியோட போறேன்.

          ‘அதுக்கு அவனோட எதுக்குப் போற?’ குளறலாகக் கேட்ட எஸ்ப்பிக்கு, “அவனைத் தவிர வேற போக்கிடம் எனக்கில்லை இப்ப” என்றவர், “உங்களுக்கு உங்க மயன், மருமக, பேரப் பிள்ளைகள்னு எல்லாரும் இருக்காங்க.  அதனால, அவங்களே உங்களைப் பாத்துப்பாங்க.  எனக்கு இங்க இனி வேலையில்லை” என்று ஜேப்பியுடன் கிளம்பிச் சென்றிருந்தார் மீனாட்சி.

***

          சுமித்ரா எவ்வளவோ கூறியும், கணவன் அவனது வேலையில் கருத்தாக இருந்ததைக் கண்டதும், ‘சண்டைக்காரன் காலுல விழறதுக்கு, சாட்சிக்காரன் காலுலயே விழுந்து தொலைப்போம்’ என மீனாட்சியிடமே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தாள் சுமி.

          அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட மீனாட்சி, “என்ன செய்யச் சொல்றம்மா?  என் வயித்தில பிறந்த பாவத்தைத் தவிர வேற எந்தப் பாவத்தையும் எம்மக சுதா செய்யலை. 

அதுக்கு ஒரு புள்ளை பிறந்து, வாழ வழியில்லாம நடுத்தெருவுல நிண்டதே தெரியாமே இங்க நான் பட்டுலயும் பணத்துலயும் வாழ்ந்ததை நினைச்சு, நோகவா!

அந்தப் பிஞ்சுக் குழந்தை வேசியோட உழைப்பால உயிரை வளக்கணும்னு விதிய வச்ச ஆண்டவனை நினைச்சு, நோகவா? 

இத்தனை காலம் தெரியாம இருந்த விசயம் இப்பக் காதுல விழுந்துதே அதை நினைச்சு நோகவா?” தனது மகளின் வாழ்வையும், பேத்தியின் நிலையையும் எண்ணி வருந்திய மீனாட்சி பாட்டி,

          “அப்பன் செஞ்ச தப்பு அஞ்சாறு தலைமுறைக்கும் விடாதுன்னு சொல்லுவாங்க.  உங்க தாத்தா அந்த வேதாவுக்கு பண்ண கொடுமைக்கு காலங்கெட்ட காலத்துல எந்தப் பிராயச்சித்தமும் என்னால செய்ய முடியாது.

          ஆனா, வாழவே செய்யாத இந்தப் புள்ளைக்கு வாழ்க்கை அமைச்சுக் குடுத்தா இந்த வம்சத்துக்கு வர கேடுல பாதியாது குறையும்ல!

          அப்ப யாராவது ஒருத்தவங்க பெரிய மனசு பண்ணி விட்டுக் குடுக்கணும். அதுக்குத்தான் நான் மயூரிக்கிட்ட பிச்சை கேட்டேன்.  அந்த புள்ளையும் வரட்டும்.  ஒரு வார்த்தை அவகிட்டயும் பேசிட்டு முடிவுக்கு வரலாம்னு இருக்கேன்.” கண்ணீரோடு உரைத்தவர்,

“என்னடா மனசாட்சியில்லாதவளா இருக்காளேன்னு பாக்குறியா?  எனக்கு இவரு இப்டித்தான்னு அறுபது வருசத்துக்கு முன்னயே தெரிய வந்திருந்தா, அந்தப் பொம்பளை எப்டி இருந்திருந்தாலும், எங்க இருந்திருந்தாலும் கூட்டிட்டு வந்து நடுவீட்டுல வச்சிக் குடும்பம் நடத்துங்கனு சொல்லியிருப்பேன்.

          வலிக்கத்தான் செய்யும்.  ஆனா, அவளோட வலியைப் பொருட்படுத்தவே இல்லைனா, இந்தக் குலமே நாசமாவுல்ல போயிரும்.  அதுக்கு நான் ஒருத்தி மட்டும் மனசு கஷ்டப்பட்டா என்னாகிறப் போவுதுன்னு மனசக் கல்லாக்கிட்டு இருந்திருப்பேன்.

          கடவுள் எனக்கு அந்தக் கொடுப்பினையைக் குடுக்கலை தாயி.  ஆம்பளை தெரிஞ்சோ தெரியாமயோ செய்யறது எல்லாம், பொம்பளைக்குத்தான் பாரமா வந்து சேருது.

          வளக்கும்போதே சொல்லி வளத்தாலும், வழி மாறிப் போயி வம்சத்தையே வாழவிடாமப் பண்ணிருதுங்க சில வைராக்கியமில்லாத ஆம்பளைங்க!” விளக்கம் கூறியதைக் கேட்டதும் சுமியால் அதற்குமேல் எதுவும் பேச இயலவில்லை.

          வயோதிகம் கற்றுக் கொடுத்திருந்த நியாய, அநியாயங்களைப் பற்றிப் பேசும் மீனாட்சியிடம் வாதிடத் தோன்றாததால், ‘வர்றவ எடுக்கற முடிவு நல்ல முடிவா இருக்கணும்’ பிரார்த்தனையோடு அகன்றாள் சுமி.

          சென்னை வந்த இருபதாவது தினத்தில், பூஜாவை நேரில் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் ஜேப்பி.  அனைவரும் வந்தவளை வரவேற்க, ஒருத்தி மட்டும் பெயருக்கு வா என்று வரவேற்று ஒதுங்கியது பூஜாவின் மனதில் பதிந்தது.

          பூஜாவைப் பார்த்ததுமே, தனது மகளின் சாயலில் கூடுதல் நிறத்தோடு இருந்தவளைக் கண்டு உள்ளம் பூரிக்க அணைத்து உச்சி முகர்ந்திருந்தார் மீனாட்சி.

          அனைவரும் பூஜாவிடம் இன்முகமாகப் பேச, மயூரி மட்டும் ஒதுங்கிச் சென்றது பூஜாவிற்குமே புரியவில்லை.

          அன்போடுடனான பாட்டியின் கவனிப்பில் குளிர்ந்து போயிருந்தாள் பூஜா.  வந்தவளை ஒரு வாரம் தங்கச் சொல்லி, பாசமழையில் குளிர்வித்திருந்தார் பாட்டி.  அந்த சமயத்தில் தனது அவாவை அவளிடம் நாசூக்காகத் தெரியப்படுத்தினார் மீனாட்சி.

          அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட பூஜா, “எனக்கு அதுல விருப்பமில்லை பாட்டீ.  நான் ஜேப்பிக்கிட்ட கார்த்தி கல்யாணத்துக்கு முன்னயே கேட்டேன்.

ஜேப்பி முடியாதுன்னு சொன்னதும், எனக்காக வேதா மாத்தாவும் வந்து பேசினாங்க.  ஆனா ஜேப்பி மறுத்துட்டான்.  அதனால, எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு வாழப் பழகியாச்சு.  இப்டியே வாழ்ந்துட்டு போறது ஒன்னும் எனக்கு கஷ்டமில்லை” என்றுரைத்திருந்தாள் பூஜா.

          மீனாட்சியின் பேச்சைக் கேட்ட பின்புதான், மயூரியின் ஒதுக்கம் எதனால் என்பதற்கான காரணம் பூஜாவிற்குப் புரிய வந்தது.

சுமியை ஜேப்பியின் மனைவியாகப் பார்த்ததும் ஆச்சர்யமானவள், “எப்டி கமுக்கமா இருந்து கல்யாணம் பண்ணிருக்கீங்க நீயும், ஜேப்பியும்” என்றவள், மறந்தும் ஷ்யாமை உரிமையோடு நெருங்கவில்லை.

          அப்படி தான் உரிமை எடுத்துக் கொண்டால், அது அங்கிருக்கும் கார்த்திக், மயூரி மட்டுமல்லாது சுமித்ராவின் மனதையும் பாதிக்கும் என உணர்ந்து, தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் பூஜா.

          ஷ்யாம் அவனாகவே சென்று தன்னை பூஜாவிடம் அறிமுகம் செய்து கொண்டு சற்று நேரம் பேசியபோது, பூஜாவும் சாதாரணமாகப் பேசினாள்.  உள்ளுக்குள் உடைந்த உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள்.

          பூஜாவின் மறுப்பைக் கேட்ட மீனாட்சி, “இப்டியே உன்னைத் தனியே விடறதுக்கா கூட்டிட்டு வரச் சொன்னேன்.  பழச மறந்துட்டனு நீ சொல்றது உண்மைனா, நான் வேற மாப்பிள்ளை பாக்கறேன்.  உண்மையச் சொல்லிக் கேக்கலாம்.  விருப்பமிருந்தா முன்வரட்டும்.  என்ன சரியா?” பாட்டி விடாமல் நச்சரித்துக் கேட்டும் மறுத்தவளை விட்டுப் பிடிக்க எண்ணினார் மீனாட்சி.

          பணியின் நிமித்தமாக பங்களூர் செல்பவள் அவ்வப்போது சென்னைக்கு வந்து செல்வதை வாடிக்கையாக்கியிருந்தாள் பூஜா.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப, அடுத்து வந்த மூன்றாம் மாதத்தில் மீனாட்சி பாட்டியின் கெடுபிடிக்கு ஒத்துழைப்பு தரும் விதமாக அமைதியாகிவிட்டாள் பூஜா.

பூஜாவின் வித்தியாசமான அமைதி மீனாட்சி பாட்டிக்கு நம்பிக்கையைத் தந்திட, அவளின் திருமண விசயம் பற்றிப் பேசத் துவங்கினார்.

          அப்போதும், “எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க பாட்டீ” என்றவளிடம், “நாலு வருசமா தனியாத்தான இருக்க.  இன்னும் அந்தத் தனிமையிலேயே இருக்கணுமா?  சீக்கிரமா உன்னோட முடிவைச் சொல்லு” என்றுரைத்ததும்,

‘விசயம் தெரிஞ்சு எவனும் நம்மைக் கல்யாணம் பண்ணிக்க வரமாட்டான்.  இந்தப் பாட்டி ஏமாறத்தான் போகுது’ மனதிற்குள் நினைத்தபடியே பாட்டிக்காக ஒப்புக் கொண்டவள், தனது பணியின் நிமித்தமாக அங்கிருந்து விடைபெற்றிருந்தாள் பூஜா.

          பூஜா சென்றதும், ஜேப்பியிடம் அவளிடம் மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி மீனாட்சி கூற, அதற்கும் சம்மதித்திருந்தான் ஜேப்பி.

          சுமித்ராவிற்கு பிரசவ காலம் நெருங்குவதால், பிள்ளைப்பேறு சென்னையில் வைத்துப் பார்க்கும் எண்ணத்தில் அங்கேயே தங்கியிருந்தனர் ஜேப்பி குடும்பத்தினர்.

          முக்கிய திருமணத் தகவல் மையங்களில் பூஜாவின் விபரங்களை பதிவேற்றம் செய்திருந்தான் ஜேப்பி.

          நிறைய ஜாதக வரன்கள் பூஜாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தொடர்புகொள்ள, பூஜாவை வரவழைத்து அவளிடமே, “உனக்கு இந்த வரன்கள்ல யாரைப் புடிக்குதுனு சொன்னா, விசாரிக்கச் சொல்லிரலாம்” மீனாட்சி பேத்தியிடமே பொறுப்பை ஒப்படைக்க, ஒரு வாரம் சென்றிருக்க, அவள் காட்டிய வரனை விசாரிக்க உத்தரவிட்டார் ஜேப்பியிடம்.

          தெரியாத மனுசங்களுக்கு, தெரிந்த மனுசனே மேல் எனும் முடிவிற்கு வந்திருந்தாள் பூஜா.

          ஜேப்பி அந்த படத்தைப் பார்த்ததுமே, “விசாரிக்கவே தேவையில்லை பாட்டீ.  நமக்குத் தெரிஞ்ச பையன்தான்!” நம்பிக்கை வார்த்தை கொடுக்க, திருமணத்திற்கு வேண்டிய அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானது.

          சுமித்ராவிற்கும், மயூரிக்கும் பூஜாவின் முடிவில் சற்றே ஆசுவாசமாக உணர்ந்திருந்தனர். அதனால் மற்ற விசயங்களில் தலையிடாமல் அவரவர் உண்டு, அவர் வேலையுண்டு என்றிருந்தனர்.

***