தோளொன்று தேளானது 21(அ)

தோளொன்று தேளானது! 21A

பூஜாவை அவள் வளர்ந்த இடம் மற்றும் நிலையைக் கூறி தனது சகோதரனிடமிருந்து அகற்றியவனுக்குள், அந்தஸ்து என்று அவளைத் தான் அப்புறப்படுத்தியது உணர்வில் நின்று அசைத்தது.

தனது மனம் விரும்புபவளும் ஜீரோ அந்தஸ்தில் அனாதையாக ஆசிரமத்தில் வளர்ந்தவள்தானே எனும் உண்மை அவனைச் சுட்டது. மத்தளம் போன்ற தனது மனநிலையால் சுமியை விட்டுக் கொடுக்கவும் முடியாமல், அதே நேரம் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவும் இயலாமல் தடுமாற்றமாக இருந்தான் ஜேப்பி.

‘அப்டியொன்னும் சுமி பெரிய அப்சரஸ் மாதிரியும் இல்லை.  ஆனா இந்த மானங்கெட்ட மனசு அவ பின்னாடியே விடாம விரட்டிக்கிட்டு கேவலமா ஓடுது.

எந்தப் பொண்ணைப் பாத்தாலும் ஒன்னுமே தோன மாட்டிங்கிது.  ஆனா இவளைப் பாத்தா மனசு ஜிவ்வுனு சந்தோசத்துல குதிக்குது. 

என்ன மேஜிக் செஞ்சு இந்த மாயா ஜாலக்காரி எங்கிட்ட இப்டியெல்லாம் வித்தை காமிக்கிறானு தெரியலையே!’ தனக்குத்தானே கடிவாளமிட்டு இயலாமல் தோற்றுப் போயிருந்தான் ஜேப்பி.

தாத்தா சிவபிரகாசம் கண்டிப்பாக தனது அவாவை ஆதரிக்கமாட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தும், தனது மனம் சுமியை நாடுவதைக் கண்டு அவன் மீதே கோபமாக வந்தது ஜேப்பிக்கு.

‘இந்த அயன்மேன் செஞ்சது எல்லாம் சரினு இவ்ளோ நாள் தோணுச்சு.  இப்ப நமக்குன்னு வரும்போது அதை ஏத்துக்க முடியலை.  அவளை அவாய்ட் பண்ண நினைச்சாலே வலிக்கிது. 

இந்த மனுசரைக் கண்ணைக் குத்திட்டு, நான் வாழறதுக்குள்ள கடலளவு கஷ்டத்தைக் கடந்தே வந்தாகணும்.  அந்தப் பெருங்கஷ்டத்தைக் கடக்குறதுக்குள்ள கம்பூனிருவேன்போலயே’ என சிவபிரகாசம் தாத்தாவைப் பற்றி எண்ணியதோடு, தனது நிலையையும் நினைக்க ஜேப்பி மறக்கவில்லை.

அதனால்தான் ஆரம்பத்தில் பெரும்பாலும் சுமியைத் தவிர்க்க எண்ணினான்.  ஆனால் தவிர்க்கச் செய்த அறிவு, தவிக்கச் செய்த மனதின் நிலையை எண்ணி வருந்தியது. வருத்தம், ஜேப்பியை செயல்படவிடாமல் முடக்கியது.

‘அவளைப் பாத்தாத்தான் மனசு, அறிவு ரெண்டும் ஆக்டிவ்வா இருக்கு.  இல்லைனா, எல்லாம் பஞ்சடைச்ச மாதிரி ஆஃப் ஆகிருதே’ தனது நிலையை எண்ணி வருந்தவும் செய்தான்.

‘வாழ்ந்தா அவளோட வாழணும்.  இல்லைனா வாழ்க்கை முழுசுக்கும் நம்ம அயனோடவே திரிஞ்சிட்டு, ஒண்டிக்கட்டையாவேதான் போயிச் சேரணும்’ எனத் தோன்றிய மனதை அவனாலேயே ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

‘எதுக்கு அப்டிச் சாகணும்.  இருக்கறது ஒரே ஒரு வாழ்க்கை.  அந்த வாழ்க்கை முழுசுக்கும் நான் சந்தோசமா இருக்க, சுமி மட்டுந்தான் என்னோட தேவை.   அதுக்காக எந்தளவுக்கும் இந்த ஜேப்பி இறங்குவான்’ பட்டை தீட்டிய வைரம்போல, தாத்தாவிற்கு எதிராக கூறாகப் பாய ஏதுவாக அவனையே மாற்றத் துவங்கினான்.

இளங்கன்று பயமறியாது எனும் வார்த்தைக்கேற்ப அவனுக்கென தனி உலகில், தன்னவளோடு வாழ ஏதுவான வழிவகை செய்வதில் முனைப்போடு இறங்கத் தீர்மானித்துவிட்டான்.

முடங்கிக் கிடந்து பழக்கமில்லாதவன், அப்படி இருக்க விரும்பாது, ‘சுமியில்லாத வாழ்க்கை பெரும் சுமையா இருக்கும்போல.  அதுக்கு மத்தவங்களை எதித்துட்டு மனம்போல அவகூட சந்தோசமா வாழ்ந்திட்டுப் போயிருவேன்’ இறுதியாக ஜேப்பியின் மனம் தீர்க்கமான முடிவெடுத்து விட்டது.

அந்தஸ்து பார்க்கக்கூடிய மனோபாவம் ஜேப்பிக்குள்ளும் அதுவரை ஆளமாகப் பதிந்து போயிருந்தாலும், சுமித்ரா என்று வரும்போது அனைத்தும் பின்னுக்குச் சென்று, அவனது நேசம் மட்டுமே உணரும் நிலையில் உணர்வு வயப்பட்டவனாக ஆளே முற்றிலுமாக மாறிப் போயிருந்தான் ஜேப்பி.

சுமியின் பார்த்தும் பாராத பார்வை, தனது தகுதி கருதி தள்ளி நின்ற பாங்கு, இன்றைய நவீன பெண்களுக்கு மத்தியில் தனித்துத் தெரியும் அவளின் செயல்பாடுகள், வாய்ப்புகள் இருந்தும் ஒதுங்கிச் சென்ற அவளின் பண்பு இப்படி ஜேப்பியைக் கவர்ந்த விசயங்கள் சுமித்திராவிடம் கொட்டிக் கிடக்க, அவளிடமிருந்து விலகிச் செல்லவோ, வேறு யாரிடமும் விட்டுக் கொடுக்கவோ மனதில்லாதவன் துணிவாக முடிவெடுத்திருந்தான்.

 அது, சிவபிரகாசம் எனும் மனிதரிடமிருந்தும், அவரின் கொள்கைகள் மற்றும் யாருமறியாமல் அவரின் நிழலாக இதுவரை தொடர்ந்திருந்த பணியிலிருந்தும் முற்றிலுமாக தனது வாழ்வின் விடிவெள்ளியான சுமித்ராவிற்காக விலகிக் கொள்வது என்பதே அது.

சட்டென விலகினால், பத்து நயா பைசாவையும் தனது கண்ணில் தாத்தா காட்ட மாட்டார் என்பதை நன்குணர்ந்து இருந்தமையால், அவர் எங்கெல்லாம் தனக்கு செக் வைப்பாரோ, அந்த இடங்களை, வாய்ப்புகளை சரிசெய்து கொள்ள எண்ணி, அயராது உழைக்கத் துவங்கினான் ஜேப்பி.

பணம் என்பதைக் காட்டிலும் தங்களை எதுவும் செய்யத் துணியக் கூடியவர் என்பதை அறிந்திருந்ததாலேயே, வெகு தொலைவில் தனக்குப் பிடித்தமான இடத்தில் தங்களின் இருப்பிடத்தைத் தேர்வு செய்திருந்தான்.

மேலும், பண பலத்தோடு ஆள் பலத்தையும், உயர் பதவிகளில் இருந்தவர்களோடு இணக்கமான நல் உறவையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தான் ஜேப்பி.

பொருளீட்டும் பொருட்டு, அடுத்தடுத்து வெவ்வேறு மாநிலங்களில் தனது கிளையை விஸ்தீகரித்தான்.  தொட்டதெல்லாம் துலங்கிட, ஏற்றம் அவன் வாழ்வில் அத்தனை விரைவில் வந்தது.

ஒவ்வொரு நிலையிலும் தனது உழைப்பிற்கான ஊதியமாகப் பெற்றுக் கொண்ட பணத்தைக் கொண்டே, மல்லிபட்டினம், அமராவதி மற்றும் பெல்லாரி மூன்று வெவ்வேறு பகுதிகளில் இடங்களை வாங்கியவன், அதன்பின் அதில் வீடு கட்டிட எண்ணி முழுமூச்சாக இறங்கியிருந்தான்.

அந்த நேரத்தில் சுமி ஜேப்பியிடம் கொண்ட சிறு மனச் சுணக்கத்தினால் அவளாகவே விலகிச் செல்ல எண்ணினாள். எப்பொழுதும், தான் எனும் அகங்காரம் கொண்டிருந்த ஜேப்பியின் மனம் அவளோடு மல்லுக்கு நின்றது.  அந்த நிலையால், சுமியிடம் இறங்கிச் செல்ல ஏனோ மனம் இடங்கொடுக்கவில்லை. 

அதனால் அவளை விட்டுப் பிடிக்க எண்ணி, சுமியை வற்புறுத்தாமல் விட்டிருந்தான்.  அதனால் இருவருக்கிடையே பெரும் இடைவெளியினை அவனறியாமலேயே ஏற்படுத்தியிருந்தான்.

சென்றவள், அவளாகவே தன்னைத் தேடி வருவாள் என எண்ணியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.  ஆனாலும், தாத்தாவை எதிர்க்கும் அளவிற்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டி, முதலில் தனது நிலையை ஸ்திரப்படுத்துவதில் கவனம் செலுத்தினான் ஜேப்பி.

ஜேப்பியைப் பற்றி தவறாக எண்ணி பிரிந்து சென்ற சுமித்ரா, குழந்தை பிறப்பிற்கு முன்பாகவே தனியாக இருந்த பூஜாவிற்கு துணையாகச் சென்று தங்கியிருந்து உதவினாள்.

அவளைப் பற்றி சுமி விசாரித்தபோது, வாயைத் திறந்தாளில்லை பூஜா. ஆண் குழந்தையான ஷ்யாமை பூஜா பிரசவித்ததும் ஆரம்பம் முதலே குழந்தையின் பொறுப்பை சுமி முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தாள்.

பூஜாவும் பிள்ளைப் பொறுப்பை மனமுவந்து ஏற்க முன்வரவில்லை.

இரண்டு மாதங்கள் ஆனதும், குழந்தையோடு கோயம்பத்தூருக்கு தனது ஜாகையை மாற்றிக் கொண்டிருந்தாள் சுமி.  பூஜாவை அதன்பின் அவள் சந்திக்கவே இல்லை.

அவளிடம் சுமி, “எதாவது தேவைன்னா உன்னை எந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணட்டும்” என்று கேட்டபோது, “உன்னோட நம்பர் எங்கிட்ட எப்பவும் இருக்கும் சுமி.  அதனால நானே கூப்பிடறேன்” என்றவள், “வேணுனா என்னோட மெயில் ஐடி மட்டும் வச்சிக்கோ” அதை மட்டும் குறித்துத் தந்திருந்தாள் பூஜா.

சுமியும் அதற்குமேல் அவளை வற்புறுத்தவில்லை.

சுமியும் ஜேஜே பில்டர்ஸில் இருந்து சென்று நீண்ட நாள்கள் ஆகியிருந்தது.  தன்னைத் தேடி வராதவளைத் தனது ஆன்மாவின் தேடலுக்காகத் தேடிக் கண்டு பிடித்து, அவ்வப்போது அவளறியாமல் பார்த்துச் செல்வதை வாடிக்கையாக்கியிருந்தான் ஜேப்பி.

***

ப்ருத்வி ஆஸ்ரமத்திலிருந்து வெளிவந்தபோது சூமின் கீழ் பணியாற்றிய மேனனை எதிர்பாரா நிலையில் அவன் தங்கியிருந்த பகுதியில் சந்தித்திருந்தான்.

ப்ருத்வி பெரும்பாலும் கையேந்தி பவன் வகை ஹோட்டல்களில் இரவு உணவை வாங்கி உண்பான்.  அப்படி ஒரு நாள் உண்டு கொண்டிருந்தபோது, மேனன் அவனுக்கெதிரே அமர்ந்து உண்டபோதுதான் முதன் முதலாகப் பார்த்திருந்தான்.

பெரும்பாலும் இரவு நேரங்களில் ஒருவரையொருவர் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் பேசிக் கொண்டதில்லை.  அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான், மேனனது பேண்டில் இருந்து வேலட் தவறியது தெரியாமல் வழமையான கையேந்தி பவனிற்கு உண்ண வந்திருந்தான்.

உண்டு முடித்து பணம் கொடுக்கத் தேடியபோது கையில் பணமில்லாததை உணர்ந்து பரிதவிப்போடு தேடிக் கொண்டிருந்தவனைக் கண்ட ப்ருத்வி, “நல்லா பாருங்கண்ணே.  இருக்கும்” ஆறுதல் கூறினான்.

ஆனால் தவறியது தெரியாமல் மிகவும் தலையிறக்கமாக எண்ணிய மேனனது உணவிற்கும் சேர்த்து ப்ருத்வியே பணம் கொடுக்க முன்வந்திருந்தான்.

“இல்லைபா.  நீ எதுவும் குடுக்காத.  நான் ஓனர்கிட்ட பேசிக்கறேன்” என்ற மேனனிடம்,

“தினமுமா உங்களுக்குத் தரேன்னு சொன்னேன்.  இன்னைக்கு ஒரு நாள் தான பணம் குடுத்தேன்.  இதுக்குப் போயி ரொம்ப யோசிச்சிட்டு இருக்காதிங்கண்ணே.” ப்ருத்வி

“ரொம்ப தேங்க்ஸ்பா.  நாளைக்கு எப்டியாவது பணத்தைத் தந்திரேன்” ப்ருத்வியிடம் கூறிக் கொண்டு விடைபெற்றவனுக்குள், அத்தனை வருத்தம் இருந்ததை ப்ருத்வி உணர்ந்து கொண்டான்.

ஆனால் மறுநாளே வந்து, “இந்தாப்பா தம்பி.  இன்னைக்கு உனக்கு சாப்பாட்டுக்கு நாந்தான் காசு தருவேன்” உண்டு கொண்டிருந்தவனிடம் நேரில் வந்து பேசிய மேனனது செயலில் ப்ருத்விக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது.

‘இந்தக் காலத்தில் எந்த சோம்பேறிடா ஏமாந்திருப்பான்.  அப்போ அவனேட அரைஞாண் கயிறோட அடிக்கலாம்னு தெரியற மக்கள் அதிகமாயிட்ட காலத்தில இப்டியும் ஒருத்தரா!’ வியந்து போயிருந்தான் ப்ருத்வி.

“இன்னொரு நாள் எதாவது விசேசத்தன்னைக்கு வாங்கிக் குடுங்கண்ணே.” என்றதும் மேனன் மிகவும் வருத்தமாக, “இன்னொரு நாளும் வாங்கித் தாரேன்.  ஆனா இன்னைக்கும் என்னோட காசுல சாப்பிடு தம்பி.  அப்பத்தான் இந்த மனசுக்கு திருப்தியா இருக்கும்” என வேண்ட, மேனனின் விருப்பத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டதோடு, அதன்பின் இருவருமே ஒரு சினேக பாவத்தோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் காணும் சந்தர்ப்பங்களில் பேசிக் கொள்வதை வாடிக்கையாக்கியிருந்தனர்.

சிறிது நாளில், ப்ருத்வி பங்களூர் செல்வதாக மேனனிடம் கூறிட, “அப்டியா.  நான் பங்களூர்ல வேலையா வந்தா உன்னைப் பாக்க வரேன்” என்றதோடு ப்ருத்வியிடம் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு ப்ருத்வியிடமிருந்து விடைபெற்றிருந்தான் மேனன்.

பங்களூர் சென்றவன், நான்கைந்து முறை மேனனோடு பேசியிருந்தான் ப்ருத்வி.

அதுபோன்ற சந்தர்ப்பத்தில், மேனனுக்கு சாந்தனிடமிருந்து வந்த தகவலில், ப்ருத்வியின் புகைப்படத்தோடு அவனை விபத்துபோல கொல்ல தன்னை அதற்கு நியமித்திருப்பதை அறிந்தவன், தனது தொழிலா அல்லது மனம் நெருங்கியவனது உயிரா என நீண்ட மனப் போராட்டத்திற்குள் சிக்கி கொண்டான் மேனன்.

இறுதியில் ப்ருத்வியின் உயிர் என முடிவு செய்தவன் அவனுக்கு அழைத்து, “வெளிநாடு போகணும்னே சொல்லிட்டு இருந்தியே ப்ருத்வி எப்ப போற?” வினவ,

“இன்னும் மூனு மாசத்துல கிளம்பற ஐடியால இருக்கேன்.  ஏன்ணே கேக்குறீங்க?” ப்ருத்வி

“உனக்காக ஒரு விசயம் சொல்லப் போறேன். ஏன் எதுக்குன்னு கேக்காம அடுத்து என்ன செய்யணும்னு மட்டும் முடிவெடுத்திட்டு வெளிநாடு கிளம்பற வழியப் பாரு” என்றவன்,

“உன்னை போட்டுத்தள்ள ஒரு கும்பல் தெரியுது.  அதனால நீ இந்த மாசம் பத்து தேதிக்குள்ள ஒன்னு வெளிநாடு போ.  இல்லையா எங்கையாவது போயி தலைமறைவா இருந்துரு.  இனி இந்த ஊருப் பக்கமே வந்திராத” என மிகவும் தீவிரமான தொனியில் பேச,

யார், என்ன என்பதைப்பற்றி ப்ருத்வி எவ்வளவு விசாரித்தும், மேனன் வாய் திறக்கவில்லை. “எம்மேல நம்பிக்கையிருந்தா, நான் சொன்னதைக் கேளு.  மொதல்ல உன்னோட சிம்மை மாத்திட்டு உடனே வேற எங்கேனாலும் கிளம்பிப் போயிரு.  அதுக்குமேல என்னால எதுவும் பேச முடியாது” என்றதும், ப்ருத்விக்கு ஏனோ சிவபிரகாசத்தின் நினைவுதான் வந்தது.

குறிப்பிட்ட தேதிக்குள் ப்ருத்வியால் வெளிநாடு செல்ல இயலவில்லை.  ஆனால் வேலையில் இருந்தபோது சொல்லிக் கொள்ளாமல் மும்பைக்குக் கிளம்பிச் சென்றிருந்தான்.

அதன்பின் விபத்தில் இறந்ததாக ப்ருத்வியை அவன் பணிபுரிந்த ஜேஜே பில்டர்ஸின் பெயரிட்ட நிறுவனத்தின் பணியாளர் என வெளியான செய்தியை, மேனன் ப்ருத்விக்கு அனுப்பிட அதைக் கண்டவனுக்கு அத்தனை ஆதங்கம்.

உண்மையை உணர்ந்து கொண்டவன், அதற்கு மேலும் தாமதியாது வெளிநாடு கிளம்பிச் சென்றிருந்தான் ப்ருத்வி.

இரண்டு ஆண்டுகள் கழித்து ஊருக்கு திரும்ப எண்ணியவன், தன்னிடமிருந்த சுமியின் எண்ணுக்கு அழைத்துப் பேச, “ப்ருத்வியா…!” பயந்துபோய் பேசினாள் சுமி.

“ஏய், நான் ப்ருத்விதான் பேசறேன்.  நான் செத்து ஆவியா வந்து பேசறேன்னு போனைக் கட் பண்ணிறாத” என்றான் ப்ருத்வி.

முதலில் நம்ப முடியாமல் பிறகு யோசித்துப் பேசியவளிடம், “செத்தவன் எப்டிப் பேசறான்னு பயப்படாத.  அது நேருல வந்து சொல்றேன்” எனத் துவங்கியவன்,

சுமி, “நான் சென்னையில இல்ல.  இப்போ கோயம்பத்தூர்ல இருக்கேன்” விபரம் பகிர்ந்தாள்.

“ரொம்ப நல்லதாப் போச்சு.  எனக்கும் அங்க எதாவது ஜாப் ஆப்பர்சூனிட்டி வந்தா சொல்லு சுமி” என்றவன், அடுத்த இரண்டரை மாதங்களில் இந்தியாவிற்கு வந்திருந்தான்.

ப்ருத்வியைப் பொருத்தவரை, தனது மேல் பகையோடு இருந்தது சிவபிரகாசம் என்பதோடு, ஜேப்பி, ஜேக்கே இருவரின் தாத்தாதான் இந்த தாத்தா என்பதே அதுவரை தெரியாமலிருந்தான்.

ப்ருத்வி ஜேஜே பில்டர்ஸில் இருந்தவரை, சிவபிரகாசம் அங்கு வந்ததைக் கண்டதும் இல்லை.  அவர் பற்றி பேசுவதற்கான முகாந்திரமும் இல்லாமல் இருந்தது.

சுமியோடு குழந்தை இருப்பதைப் பார்த்து வினவியவனிடம் பூஜா ஜேப்பி இருவரின் குழந்தை என்பதை மட்டும் பகிர்ந்து கொண்டதோடு, “நம்ம எவ்ளோ கஷ்டபட்டிருக்கோம்.  நம்ம கண்ணெதிரேவே ஒரு குழந்தை அனாதை ஆகிறதை ஏத்துக்க முடியலை ப்ருத்வி.  அதான் இவனை எம்பொறுப்புல பூஜாகிட்ட இருந்து வாங்கிட்டேன்” என்றிருந்தாள்.  ஆரம்பத்தில் தனித் தனியாகவே வீடெடுத்து வசித்து வந்தனர்.

சில மாதங்கள் சென்றபின், குழந்தையின் நலன் கருதியும் தோழிக்கு உதவும் நோக்கிலும் ப்ருத்வியும் சுமியின் குடும்பத்தோடு வந்து தங்கிக் கொண்டான்.

“இது உன்னோட ஆளுக்காகத்தான?” கிண்டல் செய்த சுமியிடம், “அப்டியும் வச்சிக்கே.  ஆனா அப்ப நீ யாருக்காக இந்தக் குழந்தையோட பொறுப்பை ஏத்துக்கிட்டேனு நான் தெரிஞ்சிக்கலாமா?” ப்ருத்வி வினவ,

“நாந்தான் உங்கிட்டே ஏற்கனவே ரீசன் சொல்லிட்டேன்ல” சமாளித்திருந்தாள் பிருத்வியை.

ப்ருத்வியின் இரண்டாண்டு காலத்திற்கு முன்பான இறப்புச் செய்தியைப் பற்றி வினவிய சுமியின் கேள்விக்கு, “அது என்னோட செட்ல ஜெயதேவ் அப்டிங்கறவனோட சேந்து பிஸினெஸ் பண்ணதுல வந்த பிரச்சனையால, அவங்க தாத்தாவுக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம்.  அதுலதான் ஏதோ இப்டி பண்ணி ஒருத்தவங்களோட ஹெல்ப்னால நான் தப்பிச்சிட்டேன். 

ஆனா, அந்தப் பொறியில வேற யாரோ மாட்ட, அது நான்னு நினைச்சிட்டாங்க” என்று ப்ருத்வி கூறக் கேட்ட சுமி,

“சின்ன விசயத்துக்கெல்லாம் உயிரெடுக்கற அளவுக்கு இருக்காங்களா?” ஐயமாகக் கேட்டவளிடம், தனது பெற்றோரின் கதையை சுமியோடு பகிர்ந்து கொண்டிருந்தான் ப்ருத்வி.

 “எங்க அப்பா சின்னப் பையனா ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது கல்யாணமாகாத அத்தை ஒருத்தவங்க வேதானு அவங்க வீட்ல இருந்திருக்காங்க. 

ரெண்டு பையன்களுக்கு மத்தியில ஒரே பொண்ணு.  அதனால ரொம்ப செல்லமாம். அவங்களும் அத்தனை அழகா இருப்பாங்களாம்.

வயசுப் பொண்ணா கல்யாணமாகாம இருந்திருக்காங்க.  அப்போ எங்க அப்பாவை ரொம்ப அன்பா பாத்துக்குவாங்களாம்.

அவங்க நல்லா டான்ஸ் ஆடுவாங்கபோல.  அப்போ அரங்கேற்றம் பண்ணாங்களாம்.  அந்த சமயத்துல அதே ஊருல வாழ்ந்த நகைக்கடைக்காரவரோட மகனான சிவபிரகாசம் அப்டிங்கறவரு அத்தையோட அழகுல மயங்கி எல்லா இடத்துக்கும் தவறாம வந்திருவாராம்.

ரொம்ப நாளு அவரு வந்தது எல்லாம் எங்கப்பாவுக்குத் தெரியாதாம்.

ஒரு நாள் அப்பாகிட்ட கைல பேப்பரைக் குடுத்து, அதை அவங்க அத்தைகிட்ட கொடுக்கச் சொல்லியிருக்காரு.  எங்கப்பாவும் அத்தை வாங்கித் தர தின்பண்டத்துக்கு ஆசைப்பட்டு யாருக்கும் தெரியாம இப்டி கை மாத்தி விட்ருக்காரு.

அது அப்டியே தொடர்ந்திருக்கு.   இவரு குடுக்கறதை அவங்க அத்தைகிட்யும், அத்தை குடுத்ததை அவருகிட்டயும் மாத்தி மாத்தி குடுத்திருக்காரு.

இப்டியே போயிட்டு இருந்திருக்கு.  எவ்ளோ நாளுன்னு தெரியலை.

திடீர்னு எங்கப்பாவோட அத்தையக் காணல. எல்லாரும் தேடினா, எங்கையும் ஆளைக் கண்டுபிடிக்கவே முடியலை. அப்போ எங்கப்பா அவங்கம்மாகிட்டப் போயி, இந்த மாமா வந்து கேட்டா அத்தை எங்க போயிப்பானு எப்டி சொல்லுவேன்னு அழுதுருக்கார்.

அவங்கம்மா என்ன சொல்றாருனு புரியாமக் கேட்க, எல்லாத்தையும் அவங்கம்மாகிட்ட ஒன்னுவிடாமச் சொல்லியிருக்காரு.

எல்லாத்தையும் கேட்ட அவங்கம்மா, ‘எங்கிட்ட சொன்ன மாதிரி வேற யாருகிட்டயும் இதைச் சொல்லிறாதன்னு’ சொல்லிட்டு இருக்கும்போதே, எங்க அப்பாவோட அப்பத்தா அங்க வந்திட்டாங்களாம்.  அத்தோட அவங்க எங்கப்பாவைக் கூட்டிட்டுப் போயி விசயத்தைக் கேட்டுருக்காங்க. எங்கப்பாவுக்கு தெரிஞ்சதை எல்லாம் அப்டியே ஒன்னுவிடாம அவங்ககிட்டச் சொல்லியிருக்காரு.

அப்போ அந்த ஊருல யாரைப் பாத்தாலும், இவங்களா, இவங்களானு எங்க அப்பாவோட அப்பத்தா ஆளை அடையாளங் காணக் கேப்பாங்களாம்.

ஆறு மாசங் கழிச்சு, ஊர்த் திருவிழா நடந்தப்போ எங்க அப்பா சரியா அந்த சிவபிரகாசத்தை அடையாளம் சொல்லியிருக்காரு.  ஆனா, அப்போ சிவபிரசாகத்துக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டிகூட கோயிலுக்கு வந்து இருந்தாராம்.

அப்பத்தா, தாத்தாகிட்ட விசயத்தைச் சொல்ல, பெரியாளுங்களை வச்சி விசாரிச்சிருக்காங்க.

அவரு என்னாடான்னா, “ஒரு சின்னப் பையன் சொன்னதைக் கேட்டு என்னை அசிங்கப்படுத்தாதீங்க.  எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு.  எங்க குடும்பத்துக்குனு அந்தஸ்து இருக்கு. அப்டியிருக்க, ஆடிப் பிழைக்கற நிலையில உள்ள குடும்பத்தைச் சேர்ந்த உங்க வீட்டுப் பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சிருப்பேனா!” அப்டினு பேசி எங்க அப்பா குடும்பத்தையே கேவலமா பேசிட்டாராம்.

அதுல இருந்தே அவருக்கும், எங்க குடும்பத்துக்கும் சின்ன சின்னதா பிரச்சனை வந்திருக்கு.  கொஞ்ச நாள்ல அவங்க குடும்பமே திருச்சிக்கு போயிட்டாங்களாம்.

அதுக்கப்புறமும் எங்க அப்பாவோட அத்தைய தேடினாங்களாம்.  ஆனா அவங்க என்ன ஆனாங்க, இருக்காங்களா இல்லை செத்தாங்களானு கடைசி வரை எதுவுமே தெரியாதாம்.

அதை மனசுல வச்சி, எங்கப்பா பெரியவராகி எங்க போனாலும் எதாவது பிரச்சனை பண்ணிட்டே இருப்பாராம் அந்த சிவபிரகாசம்.  அதை எங்கிட்ட எங்க அப்பத்தாதான் சொன்னாங்க.

நான் பிறந்து விபரம் தெரிச்ச நிலையில அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் சொத்து பிரச்சனை வந்தது.

அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் இடையே பிரச்சனை வந்தப்பவும், அந்தப் பெரியவரோட தூண்டுதல்னாலதான் எ பிரச்சனை பண்றதா சொல்வாங்க, எங்கம்மா.

அப்புறம் கொஞ்ச நாள்லதான ஒரு ஆக்சிடெண்ட்ல அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க” விளக்கமாக சுமியிடம் உரைத்திருந்தான் ப்ருத்வி.

ப்ருத்வி கூறிய சிவபிரகாசம்தான், ஜேப்பியின் தாத்தா என்பது இதுவரை சுமிக்கும் தெரியாது.

***