நறும்பூவே நீ நல்லை அல்லை

13-17-18-19152-249d649b097103f8966bf6971b7e349e

நறும்பூவே நீ நல்லை அல்லை

 
அந்த ஸ்கோடா வீட்டின் வாசலில் வந்து நின்றது. மாதவனும் பல்லவியும் ஏதோவொரு வேற்று உலகத்தில் இருப்பது போல மிதந்து கொண்டிருந்தார்கள். இருவரும் இது வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
 
“மாதூ… அத்தை…” கூவியபடி அற்புதாவும் ஜானவியும் காரை நோக்கி ஓடி வந்தார்கள். கர்ப்பம் உறுதிப்பட்ட உடனேயே மாதவன் அக்காவை அழைத்து விஷயத்தைச் சொல்லி விட்டான்.
 
விஷயம் கிடைத்த உடனேயே அம்மாவும் மகளும் புறப்பட்டு வந்துவிட்டார்கள். வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஓடி வந்து பல்லவியின் கார்க்கதவைத் திறந்து விட்டார் அற்புதா.
 
“அண்ணீ…” சந்தோஷ மிகுதியில் பல்லவியை இறுகக் கட்டிக் கொண்டார் நாத்தனார். 
 
“மாது விஷயத்தைச் சொன்ன உடனேயே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா? இருப்பே கொள்ளலை. அதான் ஓடி வந்துட்டோம்.” படபடவென பொரிந்தவர் தம்பியின் பக்கமாக ஓடிப் போய் அவனையும் அணைத்துக் கொண்டார்.
 
“மாதூ… ரொம்ப சந்தோஷம்டா. ஜானவிக்கு அப்புறமா இப்பதான் நம்ம வீட்டுல இன்னொரு குழந்தை. எவ்வளவு காலத்துக்கு அப்புறம். அடேங்கப்பா! பதிமூனு வருஷத்துக்கு அப்புறமா ஒரு குட்டி பாப்பா.” அக்காவின் ஆர்ப்பரிப்பில் மாதவனும் நிறைந்து போய் புன்னகைத்தான்.
 
“நான் இப்பவே சொல்லிட்டேன் மாது. குழந்தை பொறந்த உடனேயே நானும் ஜானுவும் இங்கேயே வந்திடுவோம். மாடியில இருக்கிற ஒரு அறை எங்களுக்குத்தான்.”
 
“சரிக்கா.” மாதவனுக்கு இப்போது வாய் கொள்ளாத சிரிப்பு.
 
“ஐயோ! எனக்கு எப்போ பத்து மாசம் பறந்து போகும்னு இருக்குடா.” பொங்கிப் பொங்கி சந்தோஷித்த தன் உடன்பிறப்பை இப்போது அடக்கினான் தம்பி.
 
“அக்கா… முதல்ல உள்ள போகலாம்கா. அப்புறமா எல்லாத்தையும் பேசலாம்.” 
 
“ஆமால்ல.” ஜானவி பல்லவியைக் கட்டியபடி உள்ளே நுழைய அக்காவும் தம்பியும் பின் தொடர்ந்தார்கள். சோமசுந்தரம் ஹாலிலேயே இவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
 
“தாத்தா… மாமாவும் அத்தையும் வந்தாச்சு.” இப்போது ஜானவி தாத்தாவிடம் ஓடினாள்.
 
“பார்த்துடா செல்லக்குட்டி.”
 
“ஐயோ அப்பா, இனி ஜானவியை நீங்க செல்லக்குட்டி சின்னக்குட்டின்னு எல்லாம் கூப்பிட முடியாது. அதுக்கு இப்ப வேற ஆள் வந்தாச்சு.” அற்புதா சொல்லவும் பல்லவியின் முகம் சிவந்து போனது. 
 
சோமசுந்தரம் மகனையும் மருமகளையும் நோக்கி வந்தவர் பல்லவியின் தலையை இதமாக வருடிக் கொடுத்தார்.
 
“ரொம்ப சந்தோஷம் பல்லவிம்மா. மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு.” மருமகளிடம் பேசியவர் மகனின் கையைப் பற்றி அதைத் தட்டிக் கொடுத்தார். மாதவன் அப்பாவின் செய்கையில் கொஞ்சம் வெட்கப்பட்டாற் போல தெரிந்தது. 
 
இவ்வளவு அமர்க்களம் நடந்த போதும் பவானி கிச்சனை விட்டு நகரவில்லை. ஆனால் அவர் கடைக்கண் பார்வை இவர்களையே வலம் வந்ததை பல்லவி கவனிக்கத் தவறவில்லை.
 
“அண்ணி நீ போய் ரெஸ்ட் எடு. நான் உனக்குக் குடிக்க ஃப்ரெஷ்ஷா ஜூஸ் பண்ணிக் கொண்டு வர்றேன்.” அற்புதா கூட அம்மாவைக் கண்டு கொள்ளவில்லை.
 
எது எப்படி இருந்த போதும் பல்லவி விஷயத்தில் தங்களது அம்மா பண்ணியது நியாயமில்லை என்று பிள்ளைகள் இருவருக்கும் புரிந்திருந்ததால் முடிவை பல்லவி வசமே விட்டு விட்டார்கள்.
 
பல்லவிக்கு கிச்சனைத் தாண்டி மாடிக்குச் செல்ல கால்கள் வரவில்லை. இத்தனை நாளும் எப்படியோ… ஆனால் இன்று தாய்மை என்னும் உணர்வு அவளுக்குள் முழுதாக விகசித்து நின்றது.
 
சோமசுந்தரம் அவர் அறைக்குள் சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டவள் கிச்சனுக்குள் சென்றாள்.
 
அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
“அத்தை…” தனக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றிருந்த பவானியை அழைத்தாள் பல்லவி. ஆனாலும் பவானி திரும்பிப் பார்க்கவில்லை. பல்லவிக்கு வருத்தமாக இருந்தது.
 
“அத்தை… டாக்டர்கிட்ட போனோம். செக் பண்ணிப் பார்த்தாங்க.” பல்லவி தொடர்ந்து பேசினாள். இருந்தும் பவானி திரும்பவில்லை. அற்புதாவும் மாதவனும் அம்மாவின் செய்கையில் திகைத்துப் போனார்கள்.
 
“உங்க பையனோட கொழந்தை அத்தை. எம்மேல இருக்கிற கோபத்துல அதைக்கூட நீங்க கண்டுக்க மாட்டீங்களா?” பல்லவியின் குரல் இப்போது லேசாகத் தழுதழுத்தது.
 
அதற்கு மேல் பவானியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பல்லவியை நோக்கித் திரும்பியவர் முகத்தை இரு கரங்களாலும் மூடிக்கொண்டு ஓவென்று கதறினார். 
 
“உம்மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை பல்லவி. எம்மேலதான்… எம்மேலதான் எனக்கு அத்தனைக் கோபமும்.” சொன்னவர் அவர் கைகளாலேயே அவர் தலையில் அடித்துக் கொண்டார்.
 
“அத்தை! என்ன இது?” பல்லவி எவ்வளவு தடுத்தும் பவானியை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. சட்டென்று அங்கே வந்த மாதவன் தன் அம்மாவின் கரத்தைப் பிடித்துக் கொள்ள மகனின் மேல் சாய்ந்து அழுதார் பவானி.
 
என்றைக்கும் மகனோடு நின்று ஒரு வார்த்தைப் பேசியிராத பவானி இன்று இப்படி நடந்து கொள்ளவும் பெண்கள் இருவருக்கும் கண்கள் பனித்து விட்டது. 
 
மாதவன் கூட நெகிழ்ந்து போனான். கை தானாக அம்மாவின் தலையை வருடிக் கொடுத்தது.
 
“எம் புள்ளையை மட்டுமே நினைச்சு உனக்கு அநியாயம் பண்ணிட்டு இப்ப வாரிசு வந்த உடனேயே உன்னோட உறவு பாராட்டினா என்னை விட சுயநலவாதி வேற யாரு இருக்க முடியும் பல்லவி? என்னோட மனசாட்சியே என்னைக் கொல்லுதே பல்லவி. உங்கூட எப்பிடி நான் பேசுவேன்? எந்த முகத்தை வெச்சுக்கிட்டு இந்த சந்தோஷத்தைக் கொண்டாடுவேன்?”
 
“அத்தை… அப்பிடியெல்லாம் இல்லை அத்தை.” பவானி பேச்சில் பல்லவி இப்போது தவித்துப் போனாள்.
 
“யாருக்காக இதெல்லாம் பண்ணினீங்க? உங்க பையனுக்காகத் தானே? உங்க பையன் இல்லைன்னா நானுமே இல்லைதானே அத்தை?”
 
“நீ ஆயிரம் காரணம் சொன்னாலும் என்னாலயே என்னை மன்னிக்க முடியலையே பல்லவி.”
 
“அத்தை, இங்கப்பாருங்க… ஏதோ நடந்து போச்சு. மறந்திடுங்க. நம்ம வீட்டு சந்தோஷம் இது. நீங்க உயிரையே வெச்சிருக்கிற உங்க பையனோட வாரிசு அத்தை.” பல்லவி சொன்ன மாத்திரத்தில் மகனிடமிருந்து விடுபட்ட பவானி பல்லவியைக் கட்டிக்கொண்டு மீண்டுமொரு பாட்டம் அழுது தீர்த்தார்.
 
“மாமியாரும் மருமகளும் ஒரு ஓரமா போய் நின்னு அழுறீங்களா? முழுசா கிச்சனை இப்பிடி அடைச்சுக்கிட்டு நின்னா நான் எப்பிடி ஜூஸ் போடுறது?” நிலைமையை சகஜமாக்க அற்புதா கேலியில் இறங்கினார்.
 
“மாது… மாமியார் மருமகள் சண்டையைக் கொஞ்ச நாள் சுவாரஸ்யமாப் பார்க்கலாம்னு பார்த்தா என்னடா ரெண்டும் பட்டுன்னு ராசியாகிட்டாங்க?” 
 
“நாம குடுத்து வெச்சது அவ்வளவுதான்கா.” அக்காவோடு சேர்ந்து ஜால்ரா அடித்த கணவனை முறைத்து விட்டு மாடிக்குப் போய் விட்டாள் பல்லவி. பவானியும் புன்னகைத்துக் கொண்டார்.
 
தங்கள் அறைக்கு வந்த பல்லவி கட்டிலில் சாய்ந்து கொண்டாள். உடம்பை ஏதோ பண்ணியது. அதற்கும் மேலாக மனது சந்தோஷத்தில் கிடந்து ஆர்ப்பரித்தது.
 
பல்லவி இப்படியொரு விஷயத்தை இப்போது கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. மனதுக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்ததால் இதையெல்லாம் அவள் கவனிக்கவே இல்லை.
 
வயிற்றை லேசாகத் தடவிக் கொடுத்தாள், சிலிர்த்தது.
 
கதவின் ஓசைக் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள். கதவின் மேல் சாய்ந்த படி மாதவன் நின்றிருந்தான். கண்கள் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தன.
 
இருவருக்கும் தனிமை இப்போதுதான் கிடைக்கிறது. கூடி இருந்தவர்களின் ஆர்ப்பாட்டமும் இருவரையும் வெகுவாகத் தாக்கி இருந்தது.
மாதவன் மெதுவாக நடந்து வந்து பல்லவியின் அருகில் உட்கார்ந்தான். அவன் பார்வையைத் தாங்க முடியாமல் பல்லவி பக்கத்தில் கிடந்த தலையணையைப் பார்த்தாள்.
 
மாதவன் இதழ்கள் இளநகையில் விரிந்தது.
 
அவள் சேலை முந்தானையை விலக்கியவன் அந்த மணிவயிற்றில் முத்தம் வைத்தான். தன் ஒரு கன்னத்தை மனைவியின் வயிற்றில் வைத்தவன் அங்கேயே தாமதித்து விட்டான். பல்லவியின் கை தானாக கணவன் தலையைத் தடவிக் கொடுத்தது.
 
“பல்லவி… இங்கதானே பல்லவி… சின்னதா அழகா… நம்ம கொழந்தை…” வார்த்தைகள் கோர்வையாக வராததால் ஏதேதோ பிதற்றினான் மாதவன்.
 
ஆனால் கண்கள் மட்டும் ஊற்றாகப் பெருகி அவள் வயிற்றை நனைத்தது.
 
பல்லவிக்கும் கண்கள் கலங்கியது. எழுந்து உட்கார்ந்தவள் அவனையும் நிமிர்த்தி தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
 
“என்ன இது சின்னப் புள்ளை மாதிரி.”
 
“என்னால தாங்க முடியலை பல்லவி. உடம்பெல்லாம் என்னமோ பண்ணுது.” ஒரு புன்னகையோடே கணவனின் தலையை வருடிக் கொடுத்தாள் பெண். எத்தனைத் தைரியசாலியாக இருந்தாலும் குழந்தை என்று வந்துவிட்டால் இந்த ஆண்கள் இப்படித்தான் மாறிப் போவார்களா என்ன?!
 
“அத்தான்.”
 
“ம்…”
 
“எனக்கு… எனக்கு…” பல்லவியின் தோளிலிருந்து நிமிர்ந்தவன் மனைவியைப் பார்த்தான்.
 
“என்ன பல்லவி? எதைச் சொல்ல இப்பிடித் தயங்குற?”
 
“எனக்கு அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.” மாதவன் இப்போது உண்மையிலேயே திகைத்துப் போய்விட்டான். அங்கே போகும் பொழுதெல்லாம் சரோஜா மகளோடு ஒரு வார்த்தைப் பேசிவிட எவ்வளவோ முயற்சித்தும் பலனேதும் இருக்கவில்லை.
 
ஒரு கட்டத்தில் மாதவனுக்கே அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. மனைவியை எந்த விதத்திலும் வலுக்கட்டாயமாக மாமியாரோடு பேச வைப்பதில் அவனுக்கு இஷ்டம் இல்லை. 
ஆனால் அதே பல்லவி இப்போது இளகி வந்திருப்பது அவனுக்கு அதிசயமாக இருந்தது. 
 
“பல்லவி! நிஜமாத்தான் சொல்றியா? அத்தையை இங்க வரச் சொல்லட்டுமா?”
 
“ம்…” அவள் தலை மேலும் கீழுமாக ஆடியது.
 
“இதோ…” ஃபோனை எடுத்துக் கொண்டு சட்டென்று ரூமை விட்டு வெளியே வந்தான் மாதவன்.
 
பல்லவியின் வீட்டிற்கு ஏற்கனவே நல்ல செய்தி போயிருந்தது. இருந்தாலும் அவள் மனநிலையை அறிந்த பின்பு அவர்கள் வரட்டும் என்றுதான் மாதவன் நினைத்திருந்தான்.
 
இப்போதைக்கு பல்லவியின் உடலும் உள்ளமும் அமைதியாக இருப்பதுதானே முக்கியம். 
 
ஃபோன் பேசிவிட்டு மாதவன் கீழே வந்த போது கிச்சனில் பவானி கோபமாகப் பேசுவது கேட்டது. எதிரே வாணி கன்னத்தைப் பிடித்தபடி நின்றிருந்தாள்.
 
“என்ன நடக்குது இங்க?” மாதவனின் குரல் கேட்கவும் இரண்டு பெண்களும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.
இருவர் முகத்திலும் பயத்தின் சாயல் தெரிந்தது. 
 
“ஐயா! ஒன்னுமில்லை ஐயா. சும்மா… சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்.” வாணி தந்தியடிக்க பவானி முகத்தைக் கவனமாக மகனுக்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டார். ஏதோ பெண்கள் சமாச்சாரம் என்று மாதவன் நகர்ந்து விட பவானி மீண்டும் வாணியை முறைத்துப் பார்த்தார்.
 
“ஐயோ அம்மா! நான் பல்லவிமாவைத் தப்பா எதுவும் சொல்லலை. ஐயாவும் அற்புதாம்மாவும் அன்னைக்குத் தோட்டத்துல பேசிக்கிட்டது எங்காதுல விழுந்துச்சு. அதைத்தான் உங்கக்கிட்ட சொன்னேன்.”
 
“அங்க கேட்டா அதை நீ அங்கயே விட்டிருக்கணும். அதை விட்டுட்டு எதுக்கு அதை இங்க தூக்கிக்கிட்டு வந்த? என்ன… மாமியாருக்கும் மருமகளுக்கும் நடுவுல உறவு நல்லா இல்லை, நாம சிண்டு முடிஞ்சு விடலாம்னு பார்த்தியா?”
 
“ஐயையோ! அம்மா! நான் அப்பிடியெல்லாம் எதுவுமே நினைக்கலைம்மா.” வாணி பயத்தில் கிடுகிடுவென்று நடுங்கினாள்.
 
“இது ஐயாக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்னு உனக்குத் தெரியும்தானே?” அதற்கு மேல் வாணி பவானியின் காலில் விழுந்து விட்டாள்.
 
“அம்மா… எம் பொழைப்புல மண்ணை அள்ளிப் போட்டுடாதீங்கம்மா.”
 
“எந்திரிடி… நான் பண்ணின தப்பையே எங்க கொண்டு போய் கரைக்கிறதுன்னு தெரியாம பிதுங்கிப் போய் நிக்குறேன். அந்தப் பொண்ணு மகராசி என்னை மன்னிச்சதே பெரிய விஷயம். இதுல புதுசா நீ ஆரம்பிக்கிறயா? கொன்னுடுவேன். வேலைச் செய்யப் பிடிச்சா இங்க இரு. இல்லைன்னா இடத்தைக் காலி பண்ணு. எம் மருமக யாருன்னு எனக்குத் தெரியும். பெருசா இவ பேச வந்துட்டா.” பவானி தன்னை அதோடு விட்டால் போதுமென்று காய்கறிகளை நறுக்க ஆரம்பித்து விட்டாள் வாணி.
 
அவர்கள் உலகத்தில் இருந்தபடி வாயாடிக் கொண்டிருந்த இரு பெண்களும் மாதவன் திரும்ப வந்ததையோ இவர்கள் பேசியதைக் கேட்டதையோ கவனிக்கவில்லை. 
 
மாதவன் ஒரு புன்னகையோடே நகர்ந்து விட்டான்.
 
********
 
திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
 
மதியத்திற்கு மேல்தான் முகூர்த்தம் இருந்ததால் கோவிலில் வைத்துத் தாலி கட்டிவிட்டு அன்று பிற்பகலே ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷன் நடைபெற்றது.
 
இரு தரப்பினருமே பெரும் வியாபாரப் புள்ளிகள் என்பதால் நகரின் பிரபல்யமான முக்கியஸ்தர்கள் அனைவரும் வருகைத் தந்திருந்தார்கள்.
 
அத்தோடு மணமக்களின் நண்பர்கள், மகளிர் மன்ற உறுப்பினர்கள் என்று மக்கள் அலை மோதினர்.
 
கவிதா கூட்டத்தின் நடுவே திண்டாடிப் போனாள்.
 
அத்தனைப் பெரிய ஹாலை புக் செய்திருந்த போதும் எள் விழ இடம் இல்லாதது போல இருந்தது அந்த இடம்.
 
தன்வியை நெருங்கக் கூட அவளால் முடியவில்லை. அவள் அப்பாவும் திருமணத்திற்கு வந்திருந்ததால் அவரோடு அதிதிகளுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
 
இரவு விருந்தும் அதே ஹோட்டலின் அடுத்த பகுதியில் ஆயத்தம் செய்யப் பட்டிருந்தது. மணமக்களை வாழ்த்தி முடித்தவர்கள் அங்கே சென்று உணவருந்த ஆரம்பித்திருந்தார்கள். 
 
எல்லாக் குதூகலமும் இனிதாக நிறைவு பெற நள்ளிரவைத் தாண்டியது. இருந்தாலும் மணமக்கள் பத்தரைக்கு மேல் ஹோட்டலில் தங்கவில்லை.
 
கௌதம் அவர்கள் இருவருக்குமாக வேறு ஒரு ஏற்பாடு பண்ணி இருந்தான். நகரைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த ஒரு காட்டேஜ் இவர்களுக்காகக் காத்திருந்தது.
 
கடலை அண்மித்த இடமென்பதால் பார்க்க அத்தனை ரம்மியமாக இருந்தது. அந்த ப்ளாக் ஆடி அன்று மாப்பிள்ளைத் தோழன் போல அத்தனை ஜம்மென்று நின்றிருந்தது. இள ரோஜா வண்ணத்தில் இரண்டொரு ரிப்பன்கள் அலங்கரிக்க ஆங்காங்கே சிவப்பு ரோஜாக்கள் பதிக்கப்பட்டிருந்தன.
 
கறுப்பும் சிவப்புமாக அந்த இளம்புலி ஜரூராக அந்த காட்டேஜ் வாசலில் வந்து நின்றது. சிப்பந்தி ஒருவன் கார்க்கதவைத் திறந்து விட அந்த அழகிய பழுப்பு நிற கவுனில் இறங்கினாள் தன்வி. கையில் அடர் சிவப்பில் பெரிய ரோஜாக் கொத்து. அவளுக்கு மாட்சாக கௌதமும் ஃபுல் சூட்டில் இருந்தான். 
 
தன் புத்தம் புது மனைவியை அழைத்துக் கொண்டு அவர்களுக்காக ஏற்பாடாகியிருந்த காட்டேஜுக்குப் போனான் கௌதம். நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த கடற்காற்று அவர்கள் மேனியை இதமாக வருடிக் கொடுத்தது.
 
காட்டேஜ் வாசலிலேயே கூம்பக வடிவில் விறகுகள் அடுக்கப்பட்டு நெருப்பொன்று எரிந்து கொண்டிருந்தது. கடற்காற்றின் மெல்லிய தாளத்திற்கு அந்த நெருப்பு ஜுவாலை அழகாக நடனமாடிக் கொண்டிருந்தது. 
 
காட்டேஜின் உள்ளே முதலிரவிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே நிறைவேற்றப் பட்டிருந்தன. அவற்றையெல்லாம் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்ட கௌதம்,
 
“தன்வி.” என்றான்.
 
“என்ன கௌதம்?”
 
“இன்னைக்கு ஃபுல் மூன், தெரியுமில்லை?”
 
“ம்… ஆமா.”
 
“சீக்கிரமா வாஷ் எடுத்துட்டு ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. ஒரு வாக் போகலாம்.”
 
“ம்…” தலையை ஆட்டியவள் அலங்காரங்களைக் களைந்து விட்டு மாற்றுடைகளையும் எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போனாள். 
 
எல்லாம் அவன் ஏற்பாடாகவே இருந்தது. நல்ல சிவப்பு நிறத்தில் முழு நீள ஸ்லீவ்லெஸ் ஜார்ஜட் ஃப்ராக். அவள்
கணுக்கால்களுக்கு ஒரு சாண் உயரத்தில் நின்றிருந்தது.
 
அலங்காரங்களால் அன்று அலுத்துப் போயிருந்தவள் கூந்தலைத் தூக்கி ஒரு கொண்டைப் போட்டுக் கொண்டாள். ஆபரணங்கள் எதுவும் அணியவில்லை.
பாத்ரூமை விட்டு வெளியே வந்த பெண்ணை கௌதமின் கண்கள் லேசாக அளவெடுத்தது. அவன் கண்களில் மெல்லிய திருப்தி.
 
“டூ மினிட்ஸ் பேபி.” சொல்லியவன் பாத்ரூமிற்குள் புகுந்து வெளியே வந்தபோது வெள்ளை ஷர்ட் பான்ட்டில் இருந்தான். தன்விக்கு இமைக்க முடிவில்லை. அவன் அழகன்தானே!
 
“போகலாமா?” அவன் கேட்கவும் தலையை ஆட்டினாள். அவர்கள் வெளியே வந்தபோது வாசலில் இருந்த நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. 
 
காலில் எதுவும் அணியாமல் அந்த வெண்மணலில் இருவரும் நடந்தார்கள். கடலலைகள் அவர்கள் காலைத் தொட்டுத் தொட்டுச் சென்றது.
 
மௌனம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. வானில் முழு நிலா. பக்கத்தில் தேவதைப் போல ஒரு பெண். சுற்றிவர இருள், சுகமான ஈரக்காற்று. கௌதம் அந்த நொடிகளை மிகவும் அனுபவித்தான்.
 
தன்வியின் வெண் பளிங்கு தேகத்திற்கு அந்தச் சிவப்பு நிற ஆடை படு வசீகரமாக இருந்தது. இப்போதெல்லாம் அவள் இப்படி நாகரிகமாக ஆடை அணிவதை வெகுவாகத் தவிர்க்கிறாள்.
 
எல்லாம் அவனுக்காக. 
கலாச்சார மோகம் கொஞ்சம் அதிகமாகவே அவனை இந்நாட்களில் ஆக்கிரமித்து இருந்ததால் தன்வி அவளை அவனுக்காக மாற்றிக் கொண்டாள் என்று அவனுக்கும் தெரியும்.
 
பெண்களுக்காக எப்போதுப் வளைந்து கொடுப்பது அவனுக்குப் பழக்கம்தான். இருந்தாலும்… பார்த்துப் பார்த்துத் தனக்காக இந்தப் பெண் பண்ணுவது அவனுக்குச் சுகமாக இருந்தது.
 
“தனு…”
 
“ம்…”
 
“என்ன எதுவும் பேச மாட்டேங்கிற?”
 
“நீங்க பேசலையே கௌதம்.”
 
“ஹேய்… நான் பேசலைன்னா நீ பேச மாட்டியா?”
 
“என்ன பேச கௌதம்? எதுவும் பேசத் தோணலையே.”
 
“பிடிச்சிருக்கா?” அவன் கேட்ட போது ஒரு புன்னகையோடு தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள் தன்வி.
 
“என்ன தனு?”
 
“ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்துப் பண்ணி இருக்கீங்க.”
 
“யெஸ்… நம்ம வாழ்க்கையில இன்னைக்கு மறக்க முடியாத நாள். இந்த அனுபவம் நம்ம கடைசி மூச்சு வரைக்கும் நெஞ்சுக்குள்ள நிறைஞ்சு நிக்கணும் தனு.” அவன் பேச்சில் இப்போது மயக்கம் தெரிந்தது. தன்வி மீண்டும் புன்னகைத்தாள்.
 
“என்ன மேடம், சிரிப்பு மட்டுந்தான் வருது? பதிலைக் காணலையே?”
 
“ரொம்ப அழகா இருக்கு கௌதம். இன்னைக்கு நடந்தது எல்லாமே… ஏதோ கனவு போல… எனக்குச் சொல்லத் தெரியலையே.” வார்த்தைகளுக்கு அவள் திண்டாட கௌதம் நடையை நிறுத்தினான். காலோரம் அலைகளின் ஸ்பரிசம் இதமாக இருந்தது.
 
தன் கன்னிக் காதலை அவன் காலடியில் சமர்ப்பித்த பெண்மை, பல கன்னிகள் பார்த்திருந்தாலும் இன்றைய பொழுது அவளுக்காகவே உருகித் தவித்த ஆண்மை… 
 
தனக்காகவே உருவெடுத்திருந்த அந்த எழிலோவியத்தை அள்ளிப்பருக கௌதம் ஆயத்தமானான்.
 
“கௌதம்…” அவள் தயக்கம் அவனுக்கு வியப்பாக இருந்தது.
 
“பேபி?”
 
“யாராவது…”
 
“இங்க யாரு வரப்போறா?”
 
“இல்லை கௌதம்…” மறுத்த பெண் சற்று விலகி நடக்கப் போக அவள் விரல்களை எட்டிப் பிடித்தான் கௌதம்.
 
“ம்ஹூம்…” மறுத்தவள் மேலும் விலக கௌதம் இப்போது அவளை தன்னை நோக்கி இழுக்க கால் தடுமாறியவள் தரையில் சரிந்தாள். இப்போதும் அலை அவர்களை வருடிச் சென்றது.
 
அகிலத்தின் அந்தகாரமும், அள்ளிப் பொழிந்த அழகிய அம்புலியும் சாட்சியாக இருக்க அங்கே ஓர் காதல் காவியம் அரங்கேறிக் கொண்டிருந்தது.
 
உருகாதே உயிரே விலகாதே மலரே…
உன் காதல் வேரை காண வேண்டி வானம் தாண்டி உனக்குள் நுழைந்த…

Leave a Reply

error: Content is protected !!