நினைவு – 07

கிருஷ்ணா தன்னிடம் கொடுத்த கவரை மெல்ல மெல்ல தயங்கியபடியே ஹரிணி பிரித்துக் கொண்டிருக்க 

‘இது சரி வராது!’ தனக்குள்ளேயே பேசி முடிவெடுத்து கொண்ட விஷ்ணுப்பிரியா அதை வாங்கி வேக வேகமாக பிரிக்க அதற்குள் இருந்து ஒரு புகைப்படமும், விசிட்டிங் கார்டும் கீழே விழுந்தது.

 

விஷ்ணுப்பிரியா புகைப்படத்தையும், கிருஷ்ணா விசிட்டிங் கார்டையும் எடுக்க இருவர் கைகளையும் எட்டி எட்டிப் பார்த்த ஹரிணி அவர்கள் கையில் இருக்கும் பொருட்கள் சரியாக தென்படாததால் அதை பறித்து பார்க்கத் தொடங்கினாள்.

 

ஏ.வி. பிசினஸ் கம்பெனி என்ற தலைப்போடு இருந்த அந்த விசிட்டிங் கார்டில் ராமநாதன் மற்றும் வருண் என்று இருவரின் இலக்கங்கள் இருக்க அதைப் பார்த்து விட்டு மீண்டும் கிருஷ்ணாவின் கையில் கொடுத்தவள் விஷ்ணுப்பிரியாவிடம் இருந்து வாங்கி எடுத்த புகைப்படத்தைப் பார்த்து விட்டு அதிர்ச்சியாக எழுந்து நின்றாள்.

 

கிருஷ்ணா அவளது அந்த நிலையை பார்த்து விஷ்ணுப்பிரியாவிடம் 

‘என்ன இது?’ என்பது போல கேட்க

 

புன்னகையுடன் அவனைப் பார்த்து கண்சிமிட்டியவள்

“வருங்கால வீட்டுக்காரருக்கு அம்மணி இப்போவே மரியாதை கொடுத்து பழகுறாங்க போல!” என்று விட்டு சிரிக்க போக

 

“சும்மா இரு பிரியா!” அவளது தோளில் தட்டியவள்

 

கிருஷ்ணாவின் புறம் திரும்பி

“கிருஷ்! அன்னைக்கு பஸ் ஸ்டாண்டில் ஒருத்தரை பார்த்தேன்னு சொன்னேன் இல்லையா?” என்று கேட்க

 

அவனோ

“யாரு?” தன் தாடையில் தட்டியபடி சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றான்.

 

“அது தான்டா ஒரு மெண்டலி டிஸ்டர்ப்ட் ஆன ஆளு வந்து என்கிட்ட லவ் சொன்னாங்கன்னு சொன்னேன் இல்லையா?”

 

“ஆமா! இப்போ எதற்கு அது?”

 

“அந்த ஆளு வந்து இந்த ஆளு…”

 

“ஐயோ! என்னக்கா சொல்லுற? அந்த மனநலம் சரியில்லாத ஆளையா உனக்கு கல்யாணம் பேசப்போறாங்க? அப்பாவுக்கு என்ன ஆச்சு இப்படி எல்லாம் பண்ணுறாங்க? இன்னைக்கு இரண்டில் ஒன்று பார்த்துடலாம் வாக்கா!” விஷ்ணுப்பிரியா மூச்சு வாங்க கோபத்தோடு தன் அக்காவின் கையை பிடித்து இழுத்து கொண்டு செல்லப் போக

 

“அடி அவசரக்குடுக்கை! கொஞ்சம் என்னை முழுமையாக சொல்ல விடு” என்றவாறே அவளது தலையில் தட்டியவள்

 

“அந்த ஆளு கூட இருந்த ஆளு இவங்க தான்! இவங்க சொல்லி தான் அந்த மற்ற ஆளுக்கு மனநலம் சரியில்லைன்னே எனக்கு தெரியும்!” என்று கூறவும்

 

“ஓஹ் அப்படியா!” என்றவள் சிறு புன்னகையுடன் தன் தோளை குலுக்கி கொண்டாள்.

 

“அப்போ ஏற்கனவே அறிமுகம் ஆகிட்டீங்க! அப்போ நேராக டும் டும் டும் என்று அறிவிச்சுடலாமா?” கிருஷ்ணாவின் கேள்வியில் அவனைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்தவள்

 

“இல்லை எல்லாவற்றுக்கும் முதல் நான் இவங்க கூட பேசணும் அதற்கு அப்புறமாக தான் என்னால் ஒரு முடிவை சொல்ல முடியும்” என்று கூற 

 

“அப்படியா?” தன் கன்னத்தில் தட்டியபடியே யோசித்த விஷ்ணுப்பிரியா

 

“டன் இப்போவே மீட்டீங்க்கு நாள் முடிவு பண்ணிடலாம்” என்று விட்டு

 

“அப்பா!” என்று அழைத்தவாறே ஹாலை நோக்கி நடந்து சென்றாள்.

 

அவளது குரல் கேட்டு மாணிக்கமும், ஜெயலஷ்மியும் தங்கள் அறைக்குள் இருந்து ஹாலிற்கு வந்து சேர அவளைப் பின் தொடர்ந்து ஹரிணியும், கிருஷ்ணாவும் அங்கே வந்து சேர்ந்தனர்.

 

************************************

 

தன் கையிலிருந்த புகைப்படத்தை பார்த்து வருண் அதிர்ச்சியாகி நிற்க சிறு புன்னகையுடன் அவனது தோளில் தட்டிய சாவித்திரி 

“என்னப்பா பொண்ணு போட்டோவை பார்த்து இப்படி ஷாக்காகி நிற்கிற? பொண்ணு எப்படி? நல்லா அம்சமா இருக்கா இல்லையா?” என்று கேட்கவும்

 

அந்த புகைப்படத்தை கீழே போட்டு விட்டு அவரை மீண்டும் தூக்கி இரண்டு முறை சுற்றி விட்டு கீழே இறக்கி விட்டவன் அவரது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு 

“ஐயோ அம்மா! நீ எப்படிமா எப்படியெல்லாம் யோசிக்கிற? இந்த பொண்ணை தானே இரண்டு நாளாக தேடிக் கொண்டு இருந்தேன் அந்த பொண்ணையே போட்டோவாக காட்டிட்டிங்கீளே! யம்மோவ்! எப்படிம்மா இதெல்லாம்?” சந்தோசமாக தன் பாட்டில் பேசிக்கொண்டே 

அவரோ

“டேய்! நீ என்னடா சொல்லுற?” குழப்பமாக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

 

“அன்னைக்கு பஸ் ஸ்டாண்டில் ஒரு பொண்ணைப் பார்த்ததாக உங்க கிட்ட சொன்னேன் இல்லையா அந்த பொண்ணு தான்மா இந்த பொண்ணு!”

 

“வருண் கண்ணா! என்னடா சொல்லுற? நிஜமாகவா?” சாவித்திரி கண்களிரண்டும் விரிய அவனைப் பார்த்து ஆச்சரியமாக வினவவும் 

 

அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன்

“ஆமாம்மா இந்த பொண்ணே தான்!” கீழே விழுந்து கிடந்த ஹரிணியின் புகைப்படத்தை எடுத்து புன்னகையுடன் வருடிக்கொடுத்த படியே

 

“இன்னைக்கு ஒரே நாளில் எவ்வளவு நல்ல விஷயம் மொத்தமாக சேர்ந்து வருகிறது? இதையெல்லாம் கேட்டு நான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன்!” துள்ளிக்குதிக்காத குறையாக முகம் கொள்ளாப் புன்னகையுடன் பேசிக் கொண்டே போக சாவித்திரியோ அவனது தோளில் தட்டி அவனை சிறிது நிதானத்திற்கு கொண்டு வந்தார். 

 

“அம்மா அந்த பொண்ணு கிட்ட நான் உடனே பேசணும்மா!” வருணின் கூற்றில் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவர்

 

“அந்த பொண்ணு வீட்டுல உங்க அப்பா இப்போ தானே பேசியிருக்காங்க! இப்போ போய் உடனே அந்த பொண்ணோட தனியா பேசணும்னா எப்படிடா? அதோடு அந்த பொண்ணை பற்றி ஒரு முக்கியமான விஷயம் வேறு பேசணுமே! உங்க அப்பா வந்தால் அவரோடு சேர்ந்து பேசலாம்னு பார்த்தேன்” சாவித்திரி சற்று தயக்கத்துடன் யோசித்துக் கொண்டிருக்கையில் ராமநாதனின் கார் அவர்கள் வீட்டின் முன்னால் வந்து நின்றது.

 

ராமநாதன் வீட்டிற்குள் சரியாக அடியெடுத்து வைத்த நேரம் அவரது தொலைபேசி ஒலிக்க சற்று சலிப்புடன் தன் தொலைபேசியை எடுத்தவர் அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததுமே உற்சாகத்தோடு அந்த அழைப்பை எடுத்து பேசத் தொடங்கினார்.

 

“ஹலோ மாணிக்கம் சார்! சொல்லுங்க”

 

“ராமநாதன் சார்! வேலையாக இருக்குறீங்களா?”

 

“இல்லை இல்லை சார்! வேலை எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டேன்”

 

“ஓஹ்! அப்போ நல்லதாக போச்சு! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே! பேசலாமா?”

 

“என்ன விஷயம் சொல்லுங்க சார்?”

 

“அது வந்து…அது…” மாணிக்கம் தான் சொல்ல வந்த விடயத்தை சொல்ல முடியாமல் தயங்கி தயங்கி நிற்க அவர் முன்னால் நின்று கொண்டிருந்த கிருஷ்ணா, விஷ்ணுப்பிரியா மற்றும் ஹரிணிப்பிரியா அவரைப் பேச சொல்லி சைகை செய்து கொண்டிருந்தனர்.

 

“எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க மாணிக்.. சம்பந்தி!” ராமநாதனின் சம்பந்தி என்ற அழைப்பில் கண்கள் கலங்க புன்னகையுடன் தன் கண்களை இறுக மூடித் திறந்து கொண்டவர்

 

“அது வந்து சம்பந்தி எங்க பொண்ணு வந்து மாப்பிள்ளை கூட கொஞ்சம் பேசணும்னு சொல்லுறா! காலையில் நான் உங்க கிட்ட சொன்ன விடயங்களை பற்றி அவளாகவே உங்க பையன் கிட்ட நேரில் சொல்லி பேசணும்னு சொல்லுறா நம்ம இந்த விடயத்தை பற்றி சொல்லி அதற்கு அவங்க நம்மளை வைத்துக் கொண்டு மறுத்து பேச முடியாமல் போனாலும் போகலாம் அதனால் அவங்களே நேரில் இந்த விடயத்தை பற்றி பேசினால் நல்லது என்று நினைக்கிறாங்க அது தான்…” தான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்காமல் தயக்கத்துடன் நிறுத்த 

 

மறுபுறம் வாய்விட்டு சிரித்துக் கொண்ட ராமநாதன்

“இவ்வளவு தானா? இதற்கு எதற்குங்க சம்பந்தி இவ்வளவு தயக்கம்? இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் தானே? நாளைக்கு ஒன்றாக வாழப் போறவங்க அவங்க பேசி ஒரு புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளத் தானே வேணும்? எப்போ மீட் பண்ணணும்னு சொல்லுங்க நான் வருண் கிட்ட சொல்லிடுறேன்” என்று கேட்க 

 

அவரோ தன் முன்னால் நின்று கொண்டிருந்த தன் பிள்ளைகளை பார்த்து ‘எப்போ மீட்டிங்?’ தடுமாற்றத்துடன் சைகையில் வினவிக் கொண்டு நின்றார்.

 

“வெள்ளிக்கிழமை!”

 

“இல்லை இல்லை சடர்டே!” விஷ்ணுப்பிரியாவும், கிருஷ்ணாவும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொள்வது போல நாளைப் பற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருக்க 

 

அவர்கள் இருவரையும் சிறிதும் சட்டை செய்யாத ஹரிணி

“சன்டே ஈவ்னிங் 4 மணிக்கு!” என்று கூற மாணிக்கமும் தொலைபேசியில் ராமநாதனிடம் அதையே கூறினார்.

 

“இடம் எங்கே சம்பந்தி? உங்க ஏரியாவிலா? இல்லை..” அவரது அடுத்த கேள்வியில் தன் கையில் இருந்த தொலைபேசியை ஒரு கையால் மூடிக்கொண்டவர்

 

“இடம் எங்கே?” என்று கேட்க மறுபடியும் மூவரும் இடத்தை பற்றி பேசுவதாக கூறிக் கொண்டு வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்.

 

“ஐயோ! ஒரு அப்பான்னு கூட பார்க்காமல் இந்த பசங்க பண்ணுற அலம்பல் தாங்கலையே!” மாணிக்கம் தன்னை மறந்து வாய் விட்டு புலம்ப மறுபுறம் நின்று கொண்டிருந்த ராமநாதன் வெகு நேரமாக தன் கேள்விக்கு பதில் வராமல் போகவே 

 

“ஹலோ! சம்பந்தி! லைனில் இருக்கிங்களா?” மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு கொண்டு நின்றார்.

 

தன் கையிலிருந்த தொலைபேசி அதிர்வதைப் பார்த்து அவசரமாக அதை தன் காதில் வைத்தவர்

“சாரி சம்பந்தி சிக்னல் கட் ஆகிடுச்சு” என்று விட்டு மீண்டும் தன் பிள்ளைகளை பார்க்க அவர்களோ சைகையில் வருணை சந்திக்க போகும் இடத்தை செய்து காட்டினர்.

 

“சம்பந்தி வர்ற ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நான்கு மணிக்கு மாப்பிள்ளையை அடையாரில்…. கா…ஃபி… கிங்… ரெஸ்…டாரன்ட்க்கு வரச் சொல்லிடுங்க!” ஒவ்வொரு வார்த்தையையும் சரியாக கண்டுபிடித்து சொன்ன திருப்தியோடு மாணிக்கம் அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்து கொள்ள மறுபுறம் ராமநாதன் சிறிது நேரம் அவரோடு இயல்பாக பேசிவிட்டு அந்த அழைப்பை துண்டித்து கொண்டார்.

 

“பசங்களா அப்பாவுக்கு ஜுஸ் சொல்லுங்கபா முடியல!” மாணிக்கம் தன் நெற்றியில் முத்து முத்தாக பூத்திருந்த வியர்வை துளிகளைத் துடைத்து விட்டபடியே கூறவும் 

 

அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவரருகில் வந்து அமர்ந்து கொண்ட விஷ்ணுப்பிரியா, ஹரிணி மற்றும் கிருஷ்ணா

“அப்பா இந்த சின்ன விஷயத்துக்கே இப்படி பயப்பட்டால் நாளைக்கு இன்னும் எவ்வளவு பண்ண வேண்டி இருக்கு?” ஒரே நேரத்தில் ஒன்றாக கேட்க

 

அவரோ

“ஐயோ அம்மா! இதற்கு மேல் என்னால் முடியாது சாமி!” என்றவாறே தன் தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு கொண்டபடியே அங்கிருந்து எழுந்து ஓடி விட அவர்கள் மூவரது சிரிப்பொலியும் வெகு நாட்களுக்கு பின்னர் அந்த வீட்டில் எதிரொலித்தது.

 

தன் பிள்ளைகளின் சிரிப்பொலி கேட்டு ஜெயலஷ்மி சந்தோஷம் தாளாமல் கண்கள் கலங்கி நிற்க அவரைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட மாணிக்கம்

“இனி உன் முகத்திலும் சரி நம்ம பிள்ளைங்க முகத்திலும் சரி இந்த சந்தோஷம் எப்போதும் இருக்கணும்! அதற்காக நான் எதையும் பண்ணத் தயாராக இருக்கேன்!” என்று கூற பல வருடங்களுக்கு முன் தொலைந்த சந்தோஷம் மீண்டு வந்தது போல் திருப்தியோடு அவரும் தன் கணவரின் மேல் வாகாக சாய்ந்து கொண்டார்.

 

மறுபுறம் ராமநாதன் மனதிற்குள் எழுந்த சந்தோஷ உணர்வோடு தன் தொலைபேசியை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு ஷோபாவில் காலை மடித்து சிறு குழந்தை போல் அமர்ந்திருந்து கையில் இருந்த காகிதங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுனின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்து விட்டு அவன் முன்னால் அமர்ந்து கொள்ள அதே நேரம் சாவித்திரியும், வருணும் அவர் முன்னால் தயங்கி தயங்கி வந்து நின்றனர்.

 

தன் முன்னால் நிழலாடுவதைப் பார்த்து நிமிர்ந்து பார்த்தவர் வருணைப் பார்த்ததும் புன்னகையுடன் அவனை ஆரத் தழுவிக் கொள்ள அவனுக்கோ அது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

 

காலையில் திருமண பேச்சை எடுத்த போது தான் எதுவும் பேசாமல் எழுந்து சென்றதற்காக ஏதாவது பேசுவார் என்று நினைத்து வந்தவன் இப்போது அவர் அவனை அணைத்துக் கொண்டதைப் பார்த்து ஆச்சரியமாக அவரிடம் இருந்து விலகி 

 

“அப்பா! என்ன இது?” கேள்வியாக அவரை நோக்க

 

முகம் நிறைந்த புன்னகையுடன் அவனது தலையை வருடிக் கொடுத்தவர்

“கூடிய சீக்கிரம் உன் கல்யாணம் நடக்கும்னு எனக்கு தோணுது நீ வேணாம்னு சொல்ல மாட்டேன்னு நம்பி எல்லாம் பண்ணுறேன் கல்யாணம் பண்ணிப்ப தானே வருண்?” என்று கேட்க சாவித்திரியும் புன்னகையுடன் அவனைப் பார்த்து கொண்டு நின்றார்.

 

“சரிப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்! ஆனா அதற்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லணுமே!”

 

“என்ன வருண் சொல்லு?”

 

“அது வந்து அந்த பொண்ணை…”

 

“என்ன அந்த பொண்ணு? அட நல்ல வேளை வருண் இப்போவே நீ வந்து பேசுன இல்லைனே நான் மறந்தே போய் இருப்பேன்!”

 

“என்னப்பா?” வருண் குழப்பமாக ராமநாதனைப் பார்க்க 

 

“வர்ற ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நான்கு மணிக்கு நம்ம வீட்டுக்கு வரப்போகும் மருமகள் அடையாரில் இருக்கும் காஃபி கிங் ரெஸ்டாரன்டில் உன்னை சந்தித்து பேசணும்னு வரச் சொல்லி இருக்கா மறக்காமல் போயிடு” என்று விட்டு அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்து விட்டு சென்று விட அவனோ தன் காதில் விழுந்த வார்த்தைகள் உண்மை தானா என்று நம்பமுடியாமல் நின்று கொண்டிருந்தான்.

 

“நீ நினைச்ச அந்த பொண்ணு சொல்லிட்டா! இப்போவே யோசிக்கிற விதத்தில் கூட அவ்வளவு பொருத்தம்!” சாவித்திரி அவனது தோளில் தட்டி கொடுத்தபடியே கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட அவனுக்கோ மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் அலை பாயத் தொடங்கியது.

 

“ஏங்க அந்த பொண்ணுக்கு நடந்த ஆக்சிடென்ட் பற்றி வருண் கிட்ட எதுவுமே சொல்லலையே!” சாவித்திரி குழப்பத்துடன் தன் கணவரைப் பார்த்து வினவ

 

சிறு புன்னகையுடன் அவரைத் திரும்பி பார்த்தவர்

“அந்த விடயத்தை பற்றி நேரில் பேசத்தான் நம்ம மருமகள் வருணை சந்திக்க வேண்டும் என்று கேட்டு இருக்கா அது தான் இப்போ அதைப் பற்றி எதுவும் நான் அவன் கிட்ட சொல்லல அவங்களே நேரில் பேசி ஒரு முடிவுக்கு வரட்டுமே! எப்படியும் இந்த வார இறுதியில் சந்தித்து பேசத் தானே போறாங்க! எது எப்படியோ வருண் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டானே அது வரைக்கும் போதும்” மனம் நிறைந்த நிம்மதியோடு கூறவும் சாவித்திரியும் அவரது கூற்றுக்கு ஆமோதிப்பது போல தலையசைத்து கொண்டார்.

 

மறுபுறம் இயல்பாக சிரித்து பேசிக்கொண்டு செல்லும் தன் பெற்றோரை பார்த்து கொண்டு நின்ற வருண்

‘நோ வருண் நோ! எதையும் அந்த பொண்ணு கூட பேசி முடிவெடுத்த அப்புறம் ஆசைப்படு இப்போ வீணாக எதையும் யோசிக்காதே! அர்ஜுன் விடயத்தில் எல்லாம் சரியான பிறகு தான் கல்யாணமோ, எல்லாமோ பண்ணணும் சோ அது வரைக்கும் கன்ட்ரோல் மேன்!’ 

தன் மனதிற்குள் தனக்குத்தானே அறிவுறுத்தலின் கொண்டு தன் கையிலிருந்த புகைப்படத்தை பார்த்து புன்னகைத்த படியே தன் அறையை நோக்கி நகர்ந்து செல்ல விதியோ அவர்கள் எல்லோரையும் வைத்து கண்ணாமூச்சி ஆடக் காத்திருந்தது.

 

பழைய விடயங்கள் எல்லாம் மீண்டும் அவர்கள் முன்னால் வந்து நிற்கும் கணம் அதன் தாக்கம் உண்மையாக யாருக்கு அதிகமாக வந்து சேரும் என்பது அந்த கடவுளுக்கு கூட தெரியாது. 

 

எல்லாவற்றுக்கும் இடையில் ஹரிணிக்கு விபத்து நடந்து அவள் பழைய விடயங்களை எல்லாம் மறந்து போன விடயம் வருண் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன சந்தோஷத்தில் அவனுக்கு தெரிவிக்கப்படாமலேயே போனதும் அந்த காலத்தின் விளையாட்டு தான் போல!

 

சுயநினைவை இழந்து சித்த பிரமையில் இருக்கும் அர்ஜுனும், பழைய நினைவுகளை முற்றாக மறந்து புதிதாக உலகத்தில் இருப்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹரிணியும் தங்கள் கடந்த காலத்தைப் பற்றி மீண்டும் நினைவு படுத்தி கொள்ளுவார்களா? இல்லையென்றால் இப்படியே அவர்கள் வாழ்க்கை நகர்ந்து போகுமா? அந்த காலம் அவர்களுக்காக வைத்திருக்கும் ஆச்சரியங்களை காத்திருந்து பார்க்கலாம்!

 

காலையில் வழக்கம் போல ஜாக்கிங் செல்வதற்காக வருண் தன் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள முதல் நாள் இரவு நேரத்திற்கு தூங்கியதால் என்னவோ அர்ஜுனும் தன் துயில் கலைந்து நேரத்திற்கே எழுந்து கொண்டான்.

 

வருண் வெளியே செல்ல போவதைப் பார்த்து அவன் முன்னால் அவசரமாக ஓடி வந்து நின்று கொண்ட அர்ஜுன்

“வருண் நானும்! நானும்!” அவன் கையைப் பிடித்துக்கொண்டு தன்னையும் அழைத்து செல்லும் படி கூற 

 

சிறு புன்னகையுடன் அவனது தலையை கலைத்து விட்டவன்

“சரி வா போகலாம்!” என்று விட்டு அவனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு ஜாக்கிங் சென்றான்.

 

மிதமான வேகத்தில் வருணுக்கு ஈடு கொடுத்தவாறே அவனைப் போல பாவனை செய்து கொண்டே அவனருகில் ஓடிக் கொண்டிருந்த அர்ஜுன் வானத்தில் பறந்து செல்லும் பறவைகளையும், வீதியில் நடந்து போகும் மனிதர்களையும் ஏதோ ஒரு அரியவகை பொருட்களைப் பார்ப்பது போலவே பார்த்து கொண்டிருக்க அவனது முகமாற்றங்களை எல்லாம் நன்றாக கவனித்து கொண்டே வந்தவன் அவனது முகத்தில் சிறு களைப்பைப் பார்த்ததுமே சிறிது தூரம் தள்ளிச் சென்றதும் ஒரு இடத்தில் அவனை அமரச் செய்து விட்டு அவனருகில் தானும் அமர்ந்து கொண்டான்.

 

“அர்ஜுன்! நீ வர வர ரொம்ப அமைதியாக இருக்க ஏன்?”

 

“……”

 

“அர்ஜுன்! உன் கிட்ட தான்டா கேட்கிறேன்”

 

“அது வந்து!” சிறிது நேரம் தன் நெற்றியில் தட்டி யோசித்தவன் பின்னர் ஏதோ ஞாபகம் வந்தவனாக

 

“பிரியாவுக்கு அதிகமாக பேசுனா கோபம் வரும்! அப்புறம் அவ என்னை ஸ்கேல் வைத்து அடிப்பா! உனக்கு தெரியாதே!” நாக்கை துருத்தி அவனுக்கு பழிப்பு காட்டியபடியே கூறி விட்டு அதன் பிறகு பிரியா, பிரியா என்று அவள் மனதிற்குள் நிறைந்திருக்கும் அவனது மனம் கவர்ந்தவளைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கத் தொடங்கினான். 

 

அர்ஜுன் விடாமல் பேசிக் கொண்டே செல்ல வருணிற்கு தான் நேற்று புகைப்படமாகப் பார்த்தவளின் முகம் மனம் முழுவதும் வந்து செல்ல ஆரம்பித்தது.

 

எவ்வளவு தூரம் முயன்றும் அந்த முகத்தை மறக்க முடியாமல் தன் தலையை உலுக்கி கொண்டவன் சிறிது தயக்கத்துடன் தன் தொலைபேசியை எடுத்து அதில் நேற்றிரவு தந்தையிடம் ஒருவாறாக பேசி வாங்கி சேமித்து வைத்திருந்த ஹரிணி என்ற பெயரைப் பார்த்துக் கொண்டே சிந்தித்து கொண்டிருக்க 

 

அவனருகில் அமர்ந்து கொண்டிருந்த அர்ஜுனோ

“போனில் கால் இப்படி பண்ணணும் வருண் உனக்கு தெரியாதா?” அவளது இலக்கத்திற்கு அழைப்பை எடுத்து கொடுக்க பதட்டம் கொண்ட வருண் அவசரமாக அந்த அழைப்பை துண்டிக்கப் போக அதற்குள் ஹரிணி அந்த அழைப்பை எடுத்திருந்தாள்.

 

“ஹலோ! யாரு?” தொலைபேசியை காதில் வைக்காவிட்டாலும் அதில் ஒலித்த ஹரிணியின் குரலைக் கேட்டு அப்படியே தயங்கியபடி அமர்ந்திருந்த வருண் அந்த தொலைபேசியை மெல்ல தன் காதை நோக்கி கொண்டு செல்ல 

 

அதற்குள் அவன் கையில் இருந்த தொலைபேசியை பறித்து எடுத்திருந்த அர்ஜுன்

“ஹலோ! நான் அர்ஜுன் பேசுறேன் நீங்க யாரு பேசுறீங்க? சாவித்திரிம்மாவா? ராமுப்பாவா?” இயல்பாக தன் கன்னத்தில் தட்டி யோசிப்பது போல பாவனை செய்தபடியே வினவவும் 

 

மறுமுனையில் இருந்தவள் சிறிது குழப்பம் கொண்டவளாக

“அர்ஜுனா? நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே!” என்று கூற 

 

அந்த குரலைக் கேட்ட அடுத்த கணமே தன் கையில் இருந்த தொலைபேசியை தவற விட்ட அர்ஜுன் திக்பிரமை பிடித்தாற் போல அமர்ந்திருந்தான்.

 

அவனது அந்த திடீர் மாற்றத்தில் சிறிது பதட்டத்துடன் அவனது தோளைப் பற்றி உலுக்கிய வருண்

“அர்ஜுன் என்னடா ஆச்சு உனக்கு?” என்று கேட்கவும்

 

கண்கள் கலங்க அவனை திரும்பி பார்த்தவன்

“பிரியா! அங்கே!” வானை நோக்கி தன் கையை காட்டியவாறே மயங்கி சரிந்து விழுந்தான்……