காஃபி கிங் ரெஸ்டாரன்டின் பின்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த பெரிய நீச்சல் தடாகமும், அதைச் சுற்றி சிலுசிலுவென காற்றைப் பரப்பும் நாகலிங்க மரங்களும் வரிசையாக நிற்க அந்த மரங்களில் ஒன்றின் கீழ் நின்று கொண்டிருந்த வருண், விஷ்ணுப்பிரியா மற்றும் கிருஷ்ணாவின் முகங்களில் என்னவென்று பிரித்து சொல்ல முடியாத ஒரு உணர்வே தேங்கியிருந்தது.
அவர்கள் அனைவரதும் அந்த உணர்ச்சி மாற்றத்திற்கு காரணமான அர்ஜுனோ அந்த இடத்தில் அமர்ந்திருந்த ஹரிணியை சுற்றி ஓடுவதும், பாடுவதுமாக தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்கு முன்பு விஷ்ணுப்பிரியாவை தன் முன்னால் பார்த்ததுமே அதிர்ச்சியாக எழுந்து நின்ற வருண்
“நீங்க… நீங்க பிரியா தானே?” தடுமாற்றத்துடன் அவளைப் பார்த்து வினவ
அவளோ வீட்டிலும், வெளியிலும் தன்னை எல்லோரும் ‘பிரியா’ என்று சொல்லி அழைப்பதை நினைத்து பார்த்தவளாக
“ஆமாங்க நான் பிரியா தான்! என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” ஆச்சரியமாக அவனைப் பார்த்து வினவினாள்.
“ஏங்க! உங்களுக்கு எங்களை ஞாபகம் இல்லையா? நான் வருண் இது… இது அர்ஜுன்ங்க! உங்க அர்ஜுன்!”
“வாட்? என் அர்ஜுனா? என்ன உளறல் இது? உங்க இரண்டு பேரையும் என் வாழ்க்கையில் இன்னைக்கு தான் முதல் தடவை சந்திக்கிறேன் இதில் நீங்க என்ன புதிதாக ஏதேதோ கதை சொல்லுறீங்க?” சற்று நேரத்திற்கு முன்பு இருந்த தன் இயல்பு நிலையைத் தொலைத்தவளாக விஷ்ணுப்பிரியா படபடக்க
அவளருகில் எழுந்து சென்று அவளது கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்த ஹரிணி
“பிரியா! நமக்கு தெரிந்தவங்களோ, தெரியாதவங்களோ யாராக இருந்தாலும் இப்படி அவசரப்பட்டு பேசக் கூடாது! அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு முதலில் முழுமையாக கேளு!” என்று விட்டு
வருணின் புறம் திரும்பி
“நீங்க என்ன சொல்லுறதாக இருந்தாலும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க” என்று கூற அவர்கள் இருவரையுமே சிறிது நேரம் மாறி மாறிப் பார்த்து கொண்டு நின்றவன் சோர்ந்து போனவனாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
“முதல்ல இரண்டு பேரும் உட்காருங்க!” அவர்கள் இருவரையும் பார்த்து அமர்ந்து கொள்ளும் படி சைகை செய்தவன் விஷ்ணுப்பிரியாவின் புறம் திரும்பி
“உங்க பேரு பிரியா தானே?” என்று கேட்க
“ஹையோ! மறுபடியும் முதல்ல இருந்தா?” அவள் தன் தலையில் கை வைத்து கொண்டு ஹரிணியின் புறம் திரும்பி பார்த்தாள்.
“கேட்டால் பதில் சொல்லு!” சிறு கண்டிப்போடு அவளைப் பார்த்து கூறியவள்
பின்பு வருணின் புறம் திரும்பி
“ஆமாங்க இவ பேரு பிரியா தான்! முழுப்பெயர் விஷ்ணுப்பிரியா நாங்க எல்லோரும் பிரியான்னு தான் கூப்பிடுவோம்” எனவும்
தன் கண்களை இறுக மூடித் திறந்து கொண்டவன்
“நீங்க *****காலேஜில் தானே படிச்சீங்க?” என்று கேட்க
அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்
“நான் இப்போ தான் ***** லா காலேஜில் ஃபைனல் இயர் படிச்சுட்டு இருக்கேன்” என்று கூற அவனது முகமோ சட்டென்று வாடிப் போனது.
“ஐ யம் ஸாரிங்க! உங்களைப் பார்த்ததுமே எனக்கு எங்க காலேஜில் படித்த பிரியாவை பார்த்த மாதிரி இருந்தது அதுதான் கொஞ்சம் குழம்பி போய் விட்டேன் போல! இந்த உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்லுவதை நான் இப்போ தான் நம்புறேன் உங்களைப் பார்த்தால் அப்படியே அர்ஜுனோட பிரியாவைப் பார்ப்பது போலவே இருக்கு!” தன் வலியை மறைத்தவனாக இயல்பாக புன்னகைத்த படியே வருண் பேச அவன் முன்னால் இருந்த மூவரும் அவனைப் பார்த்து சற்று சங்கடத்துடனேயே அமர்ந்திருந்தனர்.
சிறிது நேர அமைதிக்குப் பின் ஹரிணியை நிமிர்ந்து பார்த்தவன்
“நான் உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்னு தான் வந்தேன்” என்று கூற
அவளோ தன் மனதிற்குள்
‘என்ன நாம சொல்ல வந்ததை இவங்க சொல்லுறாங்க!’ யோசனையுடன் அவனைப் பார்த்து கொண்டே
“சொல்லுங்க என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
“இல்லை அன்னைக்கு பஸ் ஸ்டாண்டில் வைத்து நீங்க அர்ஜுனைப் பற்றி பேச வந்தீங்க தானே அதற்கு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்கா?”
“சேச்சே! அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க ஏனோ அவரை அந்த நிலைமையில் பார்க்க கஷ்டமாக இருந்தது அது தான் கேட்டேன்” ஹரிணி இயல்பாக பதிலளிக்க வருணிற்கு தான் மனதிற்குள் பல்வேறு விதமான கேள்விகள் அணிவகுக்கத் தொடங்கியது.
‘பரிதாபத்தினால் தான் இவங்க அர்ஜுனைப் பற்றி கேட்டாங்களா?’
‘அர்ஜுனோட இந்த மாற்றங்களுக்கு அப்போ இவங்க காரணம் இல்லையா?’
‘பிரியா மாதிரியே தோற்றத்தை கொண்டிருக்கும் இவங்க தங்கை அர்ஜுன் வாழ்க்கையில் சம்பந்தப்படவில்லையா?’
‘ஐயோ! எங்களை சுற்றி என்ன நடக்கிறது?’
‘அர்ஜுன் குணமாகிவிடுவான்னு நான் ரொம்ப நம்பிக்கையோடு இவங்களை தேடி வந்தது எல்லாம் வீணாகிப் போய் விட்டதா?’ ஒவ்வொரு விதமான கேள்விகளும் வருணை மேலும் மேலும் குழப்ப அவனுக்கோ தலையே வெடித்து விடும் போல் பாரிய வலி தலை முழுவதும் பரவ ஆரம்பித்து இருந்தது.
சிறிது நேரம் அந்த இடத்தில் அர்ஜுனின் குரலைத் தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் இருக்க பலத்த சிந்தனையோடு அமர்ந்திருந்த விஷ்ணுப்பிரியா
‘இந்த காலேஜ் பேரை எங்கேயோ கேட்டு இருக்கேனே! எங்கே? எங்கே?’ தன் தலைக்குள் இருக்கும் சிறு மூளையை கசக்கி பிழிந்து யோசித்துக் கொண்டிருக்க
‘அட இது ஹரிணி படித்த காலேஜ் பேரு ஆச்சே!’ அவனிடம் அதை சொல்லலாம் என்று நினைத்து தன் வாயைத் திறக்க போனவள்
‘ஹேய்! வெயிட்! வெயிட்! ஹரிணியோட முழுப்பெயர் ஹரிணிப்பிரியா தானே! அப்போ ஒரு வேளை இவங்க கேட்டது ஹரிணியைப் பற்றி இருக்குமோ? அக்காவோட ஆபரேஷனுக்கு பிறகு பெரும்பாலும் நிறைய பேரு என்னை தானே அவ என்று நினைத்து பேசி இருக்காங்க அப்படின்னா ஹரிணியை நினைத்து தான் இவங்க என்னைப் பிரியான்னு கேட்டு இருக்காங்க! ஆனா ஒரே காலேஜ் என்றாலும் எதற்கு அவரு இவ்வளவு ஷாக் ஆகணும்? அர்ஜுனோட பிரியான்னு வேற இவங்க சொல்லுறாங்க அப்படின்னா அக்காவால் தான் அர்ஜுன் இப்படி இருக்காரா? சேச்சே இருக்காது எதற்கும் லைட்டா பேச்சு விட்டு பார்க்கலாம்’ தனக்குள்ளேயே பேசி ஒரு முடிவெடுத்து கொண்டு வருணை நிமிர்ந்து பார்த்து
“நான் ஒரு விஷயம் கேட்டால் தப்பாக எடுத்துக்க மாட்டீங்க தானே?” என்று கேட்க
அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்
“இல்லை கேளுங்க!” தன் குழப்பத்தை மறைத்தவனாக புன்னகை முகமாகவே பதிலளித்தான்.
“நீங்க எதனால் அந்த காலேஜ் அன்ட் பிரியா என்கிற பெயர் பற்றி கேட்டீங்கன்னு நான் தெரிந்து கொள்ளலாமா?” விஷ்ணுப்பிரியாவின் கேள்வியில் அவளது தோளில் தட்டிய ஹரிணி
“எதற்கு நீ இதெல்லாம் கேட்குற?” மெல்லிய குரலில் கண்டிப்போடு கேட்கவும்
அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்ட வருண்
“பரவாயில்லைங்க கேட்கட்டும்! அவங்களுக்கு ஒரு வேளை பிரியாவை தெரிந்து இருக்கோ என்னவோ?” என்றவன் அர்ஜுனின் புறம் திரும்பி அவனது தலையை மெல்ல வருடிக் கொடுத்தான்.
“இவன் என் பிரண்ட்..இல்லை…இல்லை என் கூடப் பிறக்காத தம்பி அர்ஜுன்! சின்ன வயதில் இருந்தே நாங்க இரண்டு பேரும் ஒன்றாகத் தான் வளர்ந்தோம், ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ்! எல்லாவற்றிலும் ஒரே மாதிரி தான் இருப்போம் ஒரு சில விஷயங்களைத் தவிர! அப்படியான விடயங்களில் ஒன்று தான் படிப்பு! நான் பார்டரில் பாஸ் பண்ணாலே போதும்னு படிக்கிற ஆளு ஆனா அர்ஜுன் எல்லாவற்றிலும் பர்ஸ்ட்! பர்ஸ்ட்! பர்ஸ்ட்! அவனோட திறமை யாருக்கும் வராது”
“அப்போ எப்படி இவங்களுக்கு இப்படி ஆச்சு?” ஹரிணி அவன் பேச்சை இடை மறித்து கேட்க
தன் நண்பனின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிய அந்த நாளின் தாக்கத்தில் தன் கண்களை சிறிது நேரம் மூடித் திறந்தவன்
“நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டேனே பிரியா என்று ஒருத்தங்க! அவங்களால் தான்” என்று கூற
“என்ன?” விஷ்ணுப்பிரியா மற்றும் ஹரிணிப்பிரியா அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தனர்.
“எஸ்! அந்த பொண்ணும், அர்ஜுனும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப ரொம்ப காதலித்தாங்க! அவன் எந்தளவுக்கு அந்த பொண்ணை விரும்புனான்னு அந்த பொண்ணுக்கு தெரிந்து இருக்குமோ என்னவோ? ஆனால் எனக்கு தெரியும்! தன்னோட உலகமே அந்த பொண்ணு தான்னு வாழ்ந்துட்டு வந்தவன் கண்ணு முன்னாடி ஒரு நாள் ஆக்சிடெண்டில் அந்த பொண்ணு!”
“இறந்துட்டாளா?” விஷ்ணுப்பிரியாவின் பதட்டமான கேள்வியில் வருணின் தலை இடம் வலமாக அசைந்தது.
“இல்லை!”
“அப்போ?”
“அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல அந்த ஆக்சிடென்டைப் பார்த்து இவன் பிரமை பிடித்த மாதிரி கத்த ஆரம்பிச்சுட்டான் எனக்கு அந்த நேரத்தில் அர்ஜுன் தான் முக்கியம்ன்னு தோணுச்சு அது தான் அங்கே இருந்து உடனே அர்ஜுனோடு வந்துட்டேன் அன்னைக்கு இப்படி ஆனவன் தான் இன்னைக்கு வரைக்கும் அப்படியே இருக்கான் அந்த பொண்ணு உயிரோடு இருக்கா? இல்லையா? அதுவும் தெரியலை! ஏழு வருஷமாக என் அர்ஜுன் குணமாகிடுவான்னு காத்துட்டு இருக்கேன் எத்தனையோ டாக்டர்ஸ், எத்தனையோ ட்ரீட்மெண்ட்ஸ் எதுவும் சரி வரல
போன வாரம் உங்களை பஸ் ஸ்டாண்டில் பார்த்ததற்கு அப்புறம் இருந்து அர்ஜுன் கிட்ட நிறைய மாற்றங்கள்! இப்போ கூட நீங்க ஒரு வார்த்தை சொன்னதும் அமைதியாகிட்டான் அது எல்லாம் வைத்து பார்த்து தான் உங்களுக்கு இவனைப் பற்றி முன்னாடி எதுவும் தெரிந்து இருக்குமோன்னு பேச வந்தேன் இன்பாக்ட் அதற்காகத்தான் இந்த மீட்டிங்கிற்கும் சரின்னு சொன்னேன்” வருணின் கூற்றில் ஹரிணியின் முகம் சற்று வாட விஷ்ணுப்பிரியாவோ அவன் கூறியவற்றை எல்லாம் தனக்குள் மீட்டிப் பார்த்து கொண்டிருந்தாள்.
‘ஏழு வருடங்களுக்கு முன்னாடி ஆக்சிடெண்ட், அக்கா படித்த அதே காலேஜ், பேரு கூட கனெக்ட் ஆகுது! அப்படின்னா அக்காவால் தான் அர்ஜுன் சாருக்கு இப்படி ஆச்சா? இதை எல்லாம் எப்படி நான் ஹரிணியை வைத்து கொண்டு இவரிடம் கேட்பது? தன்னால் தான் ஒருத்தர் இந்த நிலையில் இருக்காங்கன்னு தெரிந்தால் ஹரிணி தாங்கிக் கொள்ளுவாளா?’ தன் மனதிற்குள் எழுந்த விடயங்களை எல்லாம் வெளியே கேட்க முடியாமல் தவிப்போடு அமர்ந்திருந்த விஷ்ணுப்பிரியா
“ஐந்து நிமிடம் இருங்க வந்துடுறேன்” அவசரமாக அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்று அந்த ரெஸ்டாரன்டின் பின்பக்கமாக இருந்த தோட்டத்தில் சென்று நின்று கொண்டாள்.
அவளின் நடவடிக்கைகளைப் பார்த்து அவள் எதை நினைத்து இப்படி நடந்து கொள்கிறாள் என்பதை புரிந்து கொண்டவனாக கிருஷ்ணாவும் அவளைப் பின் தொடர்ந்து சென்று விட ஹரிணி மற்றும் வருண் அவர்கள் இருவரும் நடந்து கொள்வதை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
“என்ன ஆச்சு இவங்களுக்கு?” வருணின் கேள்வியில் அவனைப் பார்த்து இடம் வலம் தலையசைத்தவள்
“தெரியலையே! நான் போய் கேட்டுட்டு வர்றேன்” என்றவாறு அங்கிருந்து எழுந்து கொள்ள
“இருங்க நானும் வர்றேன்” என்றவாறே வருணும், அர்ஜுனோடு அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.
“பிரியா நீ எதை நினைத்து இப்படி இருக்கேன்னு தெரியும் நீ நினைத்த அதே விடயங்களை தான் நானும் நினைத்தேன்! ஆனா இப்போதைக்கு அந்த விடயங்களை எல்லாம் வருண் சாருக்கு முன்னால் ஹரிணியை வைத்து கொண்டு பேச முடியாது வேறு ஒரு நாள் பார்த்து பேசலாம் இப்போ இங்கே இருந்து கிளம்பலாம் வா அவங்க அங்கே காத்துட்டு இருப்பாங்க” கிருஷ்ணாவின் கூற்றில் சற்று தன் மனதை தேற்றிக் கொண்டவள் அங்கிருந்து செல்லலாம் என்ற எண்ணத்தோடு திரும்ப அங்கே அவர்கள் இருவருக்கும் முன்னால் வருண் மற்றும் ஹரிணி அவர்கள் இருவரையும் கேள்வியாக பார்த்து கொண்டு நின்றனர்.
“என்ன விடயத்தை இவ்வளவு தூரம் ரகசியமாக இரண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க?”
“ரகசியமா? சேச்சே! அதெல்லாம் எதுவும் இல்லையே! நீங்க இரண்டு பேரும் தனியாக பேசணும்னு தான் நாங்க எழுந்து வந்தோம் நீ தானே ஹரிணி அவங்க கூட தனியாக பேசணும்னு சொன்ன?” விஷ்ணுப்பிரியா சமாளிப்பது போல சிரித்துக் கொண்டே ஹரிணியைப் பார்த்து கூறவும்
அவளை விசித்திரமாக பார்த்தவள்
“நீ இப்படி சமாளிக்கும் போதே எனக்கு தெரியும் ஏதோ இருக்கு என்ன விஷயம் சொல்லு?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை அக்கா! நீ போய் பேசிட்டு வா நாங்க இங்கே இருக்கோம்” கிருஷ்ணா அவளது தோளில் கை வைத்து அவளை அங்கிருந்து நகர்த்தப் போக
கோபமாக அவனது கையை தட்டி விட்டவள்
“இப்போ என்ன நடந்ததுன்னு சொல்லப் போறீங்களா? இல்லையா?” மூச்சு வாங்க கோபத்தோடு அவர்களைப் பார்த்து வினவினாள்.
ஹரிணியின் சத்தத்தில் சற்று தள்ளி நின்று விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுன் வேகமாக அவளருகில் ஓடி வந்து
“பிரியா யாரு உன்னை அடிச்சது? எதற்கு சத்தம் போடுற? இந்த வருண் உன்னை அடிச்சானா? இரு அவனுக்கு நான் அடிக்கிறேன்” என்று விட்டு வருணின் கையில் மாறி மாறி அடிக்க
கண்கள் கலங்க அவனைப் பார்த்து கொண்டு நின்ற வருண்
“ப்ளீஸ் பிரியா உங்களுக்கு நான் சொன்ன பிரியாவைப் பற்றி எதாவது தெரிந்து இருந்தால் சொல்லுங்க ப்ளீஸ்!” தன் இரு கரம் கூப்பி விஷ்ணுப்பிரியாவைப் பார்த்து கேட்கவும்
பதட்டத்துடன் அவனது கையை இறக்கி விட்டவள்
“இல்லைங்க நான் எப்போதும் போல சாதாரணமாக தான் எழுந்து வந்தேன் உங்க இரண்டு பேருக்கும் கொஞ்சம் பிரைவஸி வேணும்னு தான் எழுந்து வந்தேன்” என்று கூற ஹரிணி அவளது தோள்களைப் பற்றி கோபமாக தன் புறம் திருப்பினாள்.
“அர்ஜுன் அவங்க நிலைமையைப் பார்த்தியா? இப்படி ஒரு நிலைமையில் அவங்க இருக்கும் போது அந்த பொண்ணைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியும்னா சொல்லேன் பிரியா! எதற்கு மறைக்கிற? சொல்லு பிரியா! சொல்லு!” ஹரிணியின் கேள்வியில் கண்கள் கலங்க அவளை நிமிர்ந்து பார்த்தவள்
‘அந்த பொண்ணு நீ தான்னு நான் எப்படி சொல்லுவேன் ஹரிணி? அதை தாங்கிக் கொள்ளும் சக்தி உனக்கு இருக்கா? இந்த விடயத்தை நீ தாங்கிக் கொள்ளுவியா?’ தன் உடன்பிறந்தவளின் நிலையை எண்ணி உடைந்து போனவளாக அப்படியே முழங்காலிட்டு சரிந்து அமர்ந்து கொள்ள கிருஷ்ணா வேகமாக அவளைத் தன் தோளில் தாங்கிக் கொண்டான்.
“பிரியா ப்ளீஸ் இப்படி பண்ணாதே!”
“என்ன வேறு என்ன தான் கிருஷ்ணா பண்ணச் சொல்லுற? இவ கிட்ட எப்படி இதெல்லாம் சொல்லுறது? அந்த பொண்ணு பற்றி தெரிந்தால் சொல்லு சொல்லுன்னு கேட்கிறா அந்த பொண்ணே இவ தான்னு…”
“பிரியா!” கிருஷ்ணாவின் அதட்டலான குரலில் தன் வாயை இறுக மூடி கொண்டவள் பதட்டத்தோடு ஹரிணியை நிமிர்ந்து பார்க்க அவளோ அதிர்ச்சியாகி போய் நின்றாள்.
“பிரியா என்ன சொன்னீங்க? திரும்ப சொல்லுங்க அந்த பிரியா தான் ஹரிணியா?” வருண் அவள் சொன்னதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்போடு விஷ்ணுப்பிரியாவின் முன்னால் வந்து நின்று கேட்கவும் தயக்கத்தோடு ஹரிணியை நிமிர்ந்து பார்த்தவள் கண்களை மூடி தன் கண்ணீரை துடைத்து கொண்டே ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
மனதின் ஒரு சிறு ஓரத்தில் அவள் இல்லை என்று சொல்லி விடமாட்டாளா என்று பார்த்து கொண்டிருந்த ஹரிணியோ அவளது அந்த ஆமோதிப்பான தலையசைவில் முற்றாக மனதளவில் நொறுங்கிப் போனவளாக தடுமாற்றத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள
“பிரியா!” என்றவாறே அர்ஜுன் மற்ற யாரும் அவளை நெருங்குவதற்குள் வேகமாக நெருங்கி அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவாறு பிடித்துக்கொண்டு அவளருகில் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் அவர்கள் ஐவருக்கும் இடையில் அமைதி நிலவ அந்த அமைதி பிடிக்காமல் எழுந்து நின்ற அர்ஜுன்
“பிரியா வந்துட்டா! நான் பிரியா கூட காரில் போவேனே! நான் பிரியா கூட பைக்கில் போவேனே! நான் பிரியா கூட பிளைட்டில் போவேனே!” ஹரிணியை சுற்றி வந்தவாறே பாடுவதும், ஓடுவதுமாக நின்று கொண்டிருந்தான்.
அர்ஜுனின் இத்தனை நாள் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்து இன்று அதன் அர்த்தத்தை உணர்ந்தவனாக சிறிது நிம்மதியும், அதே நேரம் ஹரிணி தான் அந்த பெண் என்பதை நினைத்து சிறிது கலக்கமும் கொண்ட வருண்
“ஆனா இது எப்படி? இவங்க ஹரிணி தானே? அப்புறம் எப்படி பிரியா? அதோடு அவங்க ஏழு வருடங்களுக்கு முன்பு பார்த்த பிரியா மாதிரி இல்லையே! அது மட்டுமில்லாமல் அர்ஜுனைப் பற்றி அவங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு வேற சொல்லுறாங்களே!” குழப்பத்தோடு அவர்களைப் பார்த்து வினவவும்
“ஏழு வருடங்களுக்கு முன்னாடி நீங்க சொன்ன மாதிரி எனக்கு ஆக்சிடென்ட் நடந்தது உண்மை தான் அந்த ஆக்சிடென்டில் எனக்கு நிறைய காயங்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்க சர்ஜரி பண்ணாங்க அதனால் நிறைய பேருக்கு என்னை அடையாளம் தெரியாது அது தான் நீங்களும் பிரியாவை பார்த்து நான்னு நினைத்து கன்பியுஸ் ஆகிட்டீங்க போல!
அந்த ஆக்சிடெண்டிற்கு முன்னாடி என் வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது ஏன்னா அந்த ஆக்சிடென்டில் நான் பழைய விடயங்களை எல்லாம் மறந்துட்டேன்
நான் யாரு? என் பெயர் என்ன? என் அம்மா, அப்பா யாரு? எனக்கு எத்தனை வயது? நான் எங்கே படித்தேன்? ஏன் ஒவ்வொரு நாளும் என் சொந்த வேலைகளை எல்லாம் எப்படி பார்ப்பதுன்னு இவங்க தான் எனக்கு சொல்லித் தந்தாங்க இந்த விடயத்தை பற்றி பேசுவதற்காகத் தான் நான் உங்களை சந்திக்கணும்னு அப்பா கிட்ட சொல்லி இருந்தேன் எனக்கு நடந்த விடயங்களை நானாக உங்க கிட்ட சொல்லி அதற்கு அப்புறம் தான் இந்த கல்யாணப் பேச்சைப் பற்றி பேசணும்னு நினைத்தேன் ஆனா இங்கே நான் எதிர்பாராத என்னன்னவோ நடந்து முடிந்து விட்டது இந்த ஏழு வருடங்களில் நான் கற்றுகொண்ட விஷயங்கள் தான் இப்போ வரைக்கும் நான் அறிந்த விடயங்கள் இன்னும் சுருக்கமாக சொல்லப் போனால் எனக்கு அதாவது இந்த ஹரிணிப்பிரியாவிற்கு தெரிந்த இந்த உலகத்திற்கு வயது ஏழு வருடங்கள் தான்!” ஹரிணி உணர்ச்சிகள் அற்ற மரத்துப் போன குரலில் பதில் கூற அதைக் கேட்டு கொண்டிருந்த மற்ற மூவரும் கலங்கிப் போய் நின்றனர்…..