நிரல் மொழி 11.1
நிரல் மொழி 11.1
உள்ளே வந்த இருவரும், நிகிலை நெருங்கி வந்தனர்.
அதில் ஒருவர், காவல்துறை துணை ஆய்வாளர். மற்றொருவர் காவலர்.
நேற்று இரவு வந்தவர்கள்தான்!
இருவரும் அருகில் வந்ததும், “சார்.. என்..” என்று நிகில் பரிதவித்துக ஆரம்பிக்கும் பொழுதே,
“ஷில்பா-ங்கிறவங்களை உங்களுக்குத் தெரியுமா?” என்று துணை ஆய்வாளர் கேட்டார்.
‘என்னவாக இருக்கும்?’ என்று மனம் பதறினாலும், “என்னோட ஃபிரண்ட். ஏன்? என்னாச்சு?” என்று நடுங்கும் குரலில் நிகில் கேட்டான்.
வந்தவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“சார் என்னாச்சு-ன்னு சொல்லுங்க? ப்ளீஸ்” என்றான் பதறும் குரலில்.
“அவங்க நேத்து நைட் கொலை செய்யப்பட்டிருக்காங்க” என்றார், துணை ஆய்வாளர்.
“சார்… அது எப்படி…” என்று நிகில் தொடங்கும் போதே, தொண்டைக்குள் வார்த்தைகள் தடைபட்டன.
இரண்டு நிமிடங்களில்,
“சார், கன்பார்மா ஷில்பாதான??” என்று, ‘கண்டிப்பாக ஷில்பாவாக இருக்காது’ என்ற நம்பிக்கை குரலில் கேட்டான்.
“அவங்கதான்! அவங்க ஐடி கார்டு பார்த்து வெரிஃப்பை பண்ணியாச்சு” என்றார்.
நிகில், அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றான். மூச்சு முட்டியது.
“அவங்க வாலெட்ல உங்க விசிட்டிங் கார்டு இருந்தது. ஸோ…” என்றவர், அவன் கலங்கிப் போய் இருப்பதைப் பார்த்து, பாதியிலே நிறுத்தினார்.
‘ஏன் இப்படி ஆயிற்று?’ என்பது போல் அலைப்புற்றான்.
உடலின் வலியை விட, மனதின் வலி அதிகமாயிக் கொண்டே போனது.
அடக்க முடியாத சோகத்தில், கண்கள் இரண்டும் கலங்க ஆரம்பித்தன!!
சற்று நேரம், அவன் உணர்வுகளுக்கு மரியாதை தந்து, இருவரும் அமைதியாக நின்றனர்.
அடுத்து இரண்டு நிமிடங்கள் கழித்து… துணை ஆய்வாளர், அவர் கடமையைச் செய்ய ஆரம்பித்தார்.
“நிகில்” என்று அழைத்தார்.
‘என்ன?’ என்று கேட்கும் நிலையில் அவன் இல்லை.
“நிகில்” என்று மீண்டும் அழைத்தார்.
“ம்ம்ம், சொல்லுங்க சார்” என்றான், கண்ணீரை அடக்கிக் கொண்டு!
“உங்களை அடிச்சவங்களுக்கும்… உங்க ஃபிரண்ட கொலை செஞ்சவங்களுக்கும்… ஏதாவது சம்பந்தம் இருக்கும்-னு நினைக்கிறீங்களா?”
‘கொலை’ என்ற வார்த்தையில், மீண்டும் நிகில் கண்கலங்கினான்.
“எனக்குப் புரியுது? பட், இப்படியே இருக்காதீங்க. உங்களுக்குத் தெரிஞ்சதை சொன்னாதான், நாங்க ஏதாவது செய்ய முடியும்” என்று விளக்கினார்.
“தெரியலையே சார்”
“நேத்து இதேதான் சொன்னீங்க. இன்னைக்கும் இப்படிச் சொன்னா எப்படி?” என்றார்.
“ஷில்பா, அவங்க கம்பெனி-ல ஏதோ ப்ராபளம்-னு சொன்னா”
“ஓகே! அதைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? இல்லை உங்ககிட்ட ஏதும் சொல்லிருக்காங்களா??”
“பேப்பர்-ல வந்தது! அவ்வளவுதான் எனக்கும் தெரியும். அதைத்தான் ஷில்பாவும் சொன்னாங்க! வேற எதுவும் தெரியாது”
“நேத்து உங்களை அடிக்க வர்றப்போ, அவங்களும் இருந்தாங்களா?!”
“ம்ம், நான், என் வொய்ஃப்… பையன்… ஷில்பா! எல்லாரும் கார்ல வரும்போதுதான்… இந்த மாதிரி… “
“மேல சொல்லுங்க”
“அதுக்கப்புறம் நடந்ததை நேத்தே சொல்லிட்டேன் சார்”
சற்று நேரம் யோசித்தவர், “கேட்கணும்னு நினைச்சேன்! நேத்து நைட் கான்ஸ்டபிள்-கிட்ட மார்னிங் உங்க வீட்ல இருந்து வருவாங்க-ன்னு சொன்னீங்களாமே? இன்னும் வரலையா?” என்றார் கேட்டார்!
மிலா! ஜெரி!! அவர்கள் இருவரின் நிலை என்ன? தெரியவில்லேயே!! பதற்றம், பயம், மனதின் வலி இன்னும்… இன்னும் அதிகரித்தது!
“நிகில்”
“சார்…” என்று வார்த்தை வரத் திணறியவன்,
“ஷில்பா கூடத்தான் என் வொய்ஃப்-ம், பையனும் போனாங்க. வொய்ஃப்-க்கு ஃபோன் பண்ணா, எடுக்க மாட்டிக்காங்க. அவங்களுக்கு என்னாச்சு-ன்னு தெரியலை” என்று திக்கித் திணறிச் சொன்னான்.
“இதை முதலே சொல்லிருக்கலாமே” என்றவர், “கான்ஸ்டபிள்” என்று அழைத்தார்.
“சார்” – காவலர்.
“இவங்க வொய்ஃப் ஃபோன் நம்பர், போட்டோ வாங்கிக்கோங்க. அப்படியே பையனோட போட்டோவும்”
“சரி சார்”
“ஃபோன் நம்பர் வச்சி, லொகேஷன் ட்ரேஸ் பண்ணிட்டு, என்னென்னு போய் செக் பண்ணுங்க”
“சரி சார்”
“அப்படியே அவங்க வீட்டு அட்ரஸ் வாங்கி, வீட்லயும் செக் பண்ணிடுங்க”
“சரி சார்”
“உங்களுக்கு ரிலேட்டிவ்ஸ் யாரும் இருக்காங்களா??” என்று, துணை ஆய்வாளர் நிகிலிடம் கேட்டார்.
“இங்க யாரும் இல்லை சார். பேமிலி டெல்லி-ல இருக்காங்க” – நிகில்.
“உங்க ஃப்ரண்ட் வீட்டு அட்ரஸையும் கொடுங்க. அங்கயும் செக் பண்ணிப் பார்த்திடலாம்”
நிகில், ‘சரி’ என்று தலையாட்டினான்.
“நீங்க செக் பண்ணிட்டு, எனக்கு இன்பாஃர்ம் பண்ணுங்க” என்று காவலரிடம் சொல்லிவிட்டு, துணை ஆய்வாளர் கிளம்பிவிட்டார்.
நிகிலிடம் விவரங்கள் வாங்கிக் கொண்டு காவலரும் சென்றுவிட்டார்.
இருவரும் சென்றதும்,
நிகில், மொத்தமாக இடிந்து போய் அமர்ந்திருந்தான்.
தலைவலி இன்னும் அதிகமானது. பின்னோக்கி சாய்ந்தான்.
இரு கண்களையும் இறுக்க மூடிக் கொண்டான்.
கண்களின் ஓரங்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அழுகின்றான்!
ஷில்பாவிற்கு ஏன் இந்த நிலை? என்பதற்காக!
மிலா, ஜெர்ரி நிலை என்னவென்று தெரியாதாதற்காக!
நிகில் அழுகின்றான்! சத்தமில்லாமல் அழுகின்றான்!!
இதற்கிடையே… செவிலியர் வந்து காலை நேரத்திற்கான மருந்து, மாத்திரைகள் கொடுத்துவிட்டு… டிரிப்ஸ் எல்லாம் சோதித்து விட்டுச் சென்றார்.
செவிலியர் சென்றதும், மீண்டும் பின்னோக்கித் தலை சாய்த்துக் கொண்டு… கண் மூடினான்.
நேரம் கடந்தது.
நேரம் 10:00
ஒரு நடுத்தர வயது மனிதர்… நிகில் அறைக் கதவைத் திறந்து கொண்டு, உள்ளே நுழைந்தார்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு, கண் திறந்தவனின் உதடுகள் … ‘முரளி நீங்களா?’ என்று அசைந்தன.
வந்தவர்… எதுவும் பேசாமல், அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.
முற்றிலும் நிலைகுலைந்து போயிருந்தான் நிகில்!
‘நேற்று எப்படித் துடிப்புடன் பேசினான்? இன்று இப்படித் துன்பப் படுகிறானே’ என்று நிகிலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்படிப் பார்த்தவாறே, நேற்று நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தார்.