நிலாப் பெண் 17

நிலாப் பெண் 17

அந்த ப்ளாக் ஆடி சீறிக்கொண்டு போன வேகத்தில் அண்ணனும் தங்கையும் சற்று நேரம் கலங்கி நின்றிருந்தார்கள். ஆனாலும் நம்பி தன்னைச் சட்டென்று மீட்டுக்கொண்டான்.

“என்னாச்சு துளசி?” அந்த குரலில் மீண்டும் பெண் விசும்ப ஆரம்பித்தது.

“அழாதே, முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லும்மா.”

“அன்னைக்கு… நிச்சயதார்த்தம் நின்னு போச்சில்லை நம்பிண்ணா?” கேவல்களோடு வந்தது வார்த்தைகள்.

“ஆமா, அதுக்கு ஆதிதான் காணரம்னு அந்த அருண்குமார் சொல்றானா?”

“ஆமாண்ணா.”

“அவனோட பேச்சை முழுசா நம்ப முடியாது துளசி, அவன் மகா கெட்டவன்.” நம்பி வெடித்தான்.

“அந்த பேச்சை மாத்திரம் வெச்சு… நான் அவங்களைக் கேள்வி கேட்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா நம்பிண்ணா?”

“பின்னே… பின்னே எதை வெச்சு?” நம்பிக்கு இப்போது வார்த்தைகள் வர மறுத்தன.

ஆதிக்கு துளசி மேல் அளவுகடந்த காதல் இருந்தது அவனுக்கும் தெரியும்.

அதற்காக இந்த அளவு ஆதி இறங்குவான் என்று அவனால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தன் நண்பனைக் குற்றவாளியாக்க அவனுக்குப் பிடிக்கவில்லை.

“அவங்க டைரியை எடுத்துப் பார்த்தேன்.”
“ஓ…” அதற்கு மேல் நம்பிக்கு சாட்சிகள் ஏதும் தேவைப்படவில்லை.

“அருண் குமாரோட குடும்பம் வந்த காரை இவங்கதான் ஆள் வெச்சு ஆக்ஸிடென்ட் பண்ணி இருக்காங்க.” பெண் சொல்லிவிட்டுக் கலங்கியது.

நம்பி எதுவுமே பேசாமல் இப்போது அமைதியாக நின்றிருந்தான். செய்வதையும் செய்துவிட்டு இந்த முட்டாள் அதற்குச் சாட்சி வேறு வைத்திருக்கிறானே!

“லவ்வு அது இதுன்னு என்னமோ சொன்னாங்களே… அது என்னண்ணா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, அவன் கெடக்குறான் நீ விடும்மா.”

“ப்ளீஸ் நம்பிண்ணா, எங்கிட்ட எதையும் மறைக்காதீங்க, என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே எனக்குப் புரிய மாட்டேங்குது.” துளசி மீண்டும் கலங்கவும் நம்பி ஒரு முடிவிற்கு வந்தவன் போல பேச ஆரம்பித்தான்.

“இங்கப்பாரு துளசி, இப்போ வந்து இதையெல்லாம் உங்கிட்டச் சொன்னதால அந்த அருண் குமார் நல்லவனும் கிடையாது, இப்பிடியெல்லாம் பண்ணிட்டதால ஆதி கெட்டவனும் கிடையாது.”

“நான் யாரையும் இப்போ அளந்து பார்க்கலை நம்பிண்ணா, என்னோட அப்பாக்கு ஏதாவது ஆகிடுமோங்கிற கவலை அந்த அருண் குமாருக்கு இருக்காது… இருக்கவும் தேவையில்லை, ஆனா அது ஏன் இவங்களுக்கு இல்லாம போச்சு?”
இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் நம்பி திணறினான். கேள்வியில் இருந்த நியாயம் அவனையும் சுட்டது.

“இது என்ன மாதிரியான சுயநலம் ண்ணா? தன்னைப் பத்தி மட்டுமே சிந்திப்பாங்களா அவங்க?”

“அப்பிடியில்லை துளசி, அவன் அவனைப் பத்தி நினைச்சதை விட உன்னைப் பத்தி நினைச்சதுதான் ஜாஸ்தி.”

“நீங்களும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசாதீங்கண்ணா, எனக்கு எரிச்சலா வருது.” சொல்லிவிட்டு பெண் உள்ளே போய்விட அங்கிருந்த சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான் நம்பி.
துளசி கேட்கும் கேள்வியில் எந்தளவு நியாயம் இருந்ததோ, அதேயளவு ஆதியின் காதலிலும் உண்மை இருந்ததை அவன் அறிவான்.

அன்றொரு நாள் அவன் திட்டியதன் பிறகு ஆதி சிகரெட் பிடித்து இவன் பார்க்கவில்லை. அவன் எண்ணம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது தன் தங்கைதானே!
ஒரு ஆண்மகனாக ஆதியின் உணர்ச்சிகளை அவனால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் துளசி? அவளை எப்படிச் சமாதானம் செய்வது?
ஒன்றுமே புரியாமல் படிகளில் கீழே இறங்கி வந்தவன் ஆதியை அழைத்தான். ஃபோன் முழுதாக ஒரு முறை அடித்து ஓய்ந்தது.
லேசாக பயம் பிடித்துக் கொள்ள நண்பனை மீண்டும் அழைத்தான் நம்பி. இப்போது சற்று தாமதித்து அழைப்பு ஏற்கப்பட்டது.

“டேய்! எங்கடா இருக்க?”

“ஏன்? இங்க வந்து உன்னோட பாசமலர் என்னைத் திட்டப் போறாளாமா?”

“அறிவு கெட்டவனே! வீட்டுக்கு வாடா, துளசி இங்க தனியா இருக்கா.” எதைச் சொன்னால் தன் நண்பனை வழிக்குக் கொண்டு வரலாம் என்று தெரிந்து வைத்திருந்தான் நம்பி.

“இப்பதானே ஏழு மணி… கொஞ்ச நேரம் உன்னோட தங்கைக்கு நீயே காவல் இரு, ஆ ஊன்னா என்னை விட்டுட்டு உங்கிட்டத்தானே ஓடி வர்றா.”

“டேய்! முதல்ல எங்க இருக்கேன்னு சொல்லுடா?”

“பீச்ல இருக்கேன், நிம்மதியா இருக்கேன்… ஆளை விடு.” சொல்லிவிட்டு பட்டென்று அழைப்பைத் துண்டித்தான் ஆதி.
அதற்கு மேல் நம்பி தாமதிக்கவில்லை. ஒரு டாக்ஸியைப் பிடித்துக்கொண்டு அவன் சொன்ன இடத்திற்குச் சென்றான்.

தலைக்கு அணையாக கையைக் கொடுத்து வானம் பார்த்துப் படுத்திருந்தான் ஆதி. ஆர்ப்பரிக்கும் கடலை விட இந்த பொன் மணற்பரப்பைத்தான் ஆதி அதிகம் விரும்பினான்.
ஏனென்றால் அவன் பிறந்த நாட்டில் இதுபோல மணற்பாங்கான கடற்கரைகளைக் காண்பது அபூர்வம். அந்த மெல்லிய மணலில் உடலைப் புதைத்துப் படுத்திருந்தான்.

“பண்ணுறதையும் பண்ணிட்டு சுகமா வானத்தைப் பார்த்துக்கிட்டு காத்து வாங்குறீங்களோ?!” கேலியாக தன்னருகில் கேட்ட குரலை அலட்சியம் பண்ணிவிட்டு அப்படியே கிடந்தான் ஆதி.

“நான் உங்கிட்டத்தான் பேசுறேன் ஆதி.”

“நான் இங்க நிம்மதியா இருக்கிறதா உங்கிட்டச் சொன்னதா ஞாபகம்.”

“ஓ… அங்க ஒருத்தி அழுது பொலம்புறா, ஐயாக்கு இங்க நிம்மதி கேக்குதோ?” இப்போது ஆதி அமைதியாகி விட்டான்.

“இப்போ பேசேன்டா!” தன் நண்பன் நீட்டியிருந்த காலில் உதைத்து விட்டு அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டான் நம்பி.

சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. தன் தங்கை மேல் வைத்த காதலினால் சிலுவை சுமக்கும் நண்பனைப் பார்த்த போது நம்பிக்கும் கவலையாக இருந்தது.

“ஏன்டா, பண்ணுறதுதான் பண்ணுறே… ஒளிச்சு மறைச்சு பண்ண மாட்டியா? எல்லாக் கருமத்தையும் எதுக்குடா அந்த டைரியில எழுதி வெச்சே?”
“…………….”
“சரி எழுதித்தான் தொலைச்சே… அதை எங்கேயாவது மூலையில போட்டு வெக்கப்படாதா? அதை எதுக்குடா துளசி கண்ணுல படுற மாதிரி வெச்சே?”

“துளசி பார்க்கட்டும்னுதான் வெச்சேன்.”

“என்ன?!” ஆதியின் பதிலில் நம்பி திடுக்கிட்டுப் போனான்.
“ஆதி?! என்னடா சொல்றே?!”

“அவக்கிட்ட மறைக்க எங்கிட்ட எதுவுமே இல்லை நம்பி.”

“அதுக்காக இதையெல்லாம் போய் சொல்லுவியா துளசிகிட்ட?”

“வொய் நாட்? எப்போ இருந்தாலும் தெரிய வேண்டியதுதானே?”

“டேய்… டேய்…” நம்பிக்கு இப்போது அடங்காத கோபம் வந்தது. ஆனால் ஆதி நிதானமாக இருந்தான்.

“இங்கப்பாரு நம்பி, துளசிக்காகத்தான் எல்லாம் பண்ணினேன், ஆனா அவங்க அப்பா நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு விழுவார்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல்லை.”

“அதுக்காக?”

“அந்தக் குற்ற உணர்ச்சி மனசுல நிறையவே இருந்துச்சு, எப்பிடியாவது இந்த விஷயத்தைத் துளசிக்கிட்டச் சொல்லி சாரி கேக்கணும்னு நினைச்சேன்.”

“இப்போ இது ரொம்ப அவசரமா?”

“இவ்வளவு அவசரமா இதெல்லாம் நடக்கணும்னு நானும் எதிர்பார்க்கலை, ஆனா அந்த அருண் குமார் எல்லாத்தையும் கெடுத்துட்டான்.”

“உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலை ஆதி!”

“துளசிக்கு எப்பவுமே நான் கெட்டது நினைக்க மாட்டேன்னு நீ உறுதியா நம்புற இல்லை நம்பி?”

“என்ன பேச்சு இது ஆதி? உன்னை நம்பாம நான் வேற யாரைடா நம்பப்போறேன்?”

“அது போதும் எனக்கு.”

“ஆதி… நான் ஒன்னு கேட்டா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே.”

“என்ன? கேளு…”

“ராபினை எதுக்கு அவாய்ட் பண்ணினே?”
“…………….”
“உம்மனசுல என்ன இருக்கு ஆதி?”

“ராபின் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை நம்பி, சொல்லப்போனா அவன் துளசி…” மேலே பேச இஷ்டப்படாதவன் போல கண்களை இறுக மூடினான் ஆத்ரேயன்.

“ஆதீ…”
“என்னால அதை நினைச்சுப் பார்க்கக் கூட முடியலை நம்பி, துளசி எனக்கு மட்டுந்தான்…” பேச்சை நிறுத்தியவனின் முகத்தில் சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம், ரௌத்திரம்.

“மனசுல இருக்கிறதைக் கொட்டிடுடா.”

“அவனைத் தள்ளி நிறுத்தணும்னு நானா நினைக்கலை, அவனா வம்பை இழுத்துக்கிட்டு வந்தான், சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக்கிட்டேன்.”

“ஏன்?”

“துளசியை ஒரு ஏக்கத்தோட அவன் பார்க்கிறதை என்னால சகிக்க முடியலை நம்பி, அவனை எதிர்வீட்டுல வெச்சுக்கிட்டு நான் எப்பிடிடா துளசியோட சந்தோஷமா குடும்பம் நடத்துறது?”

நம்பிக்கு தன் நண்பனின் பேச்சு எல்லாமே நியாயமாக பட்டது. ஒரு ஆண்மகனாக ஆதியின் பேச்சிலிருந்த உரிமையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“சரி எந்திரி வீட்டுக்குப் போகலாம், துளசி தனியா இருப்பா.”

இருவரும் எழுந்து கால்புதைய அந்த மணலில் நடந்தார்கள். நம்பி நேரத்தைப் பார்த்தான். எட்டைத் தாண்டி இருந்தது.

“ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாமா ஆதி?”

“இல்லையில்லை, ஏற்கனவே எம்மேல கொலை வெறியில இருப்பா, இதுல நீ வேற ஏன்டா?”

“எப்பிடிடா ஆதி சமாளிக்கப் போறே?”
“வேற வழி… கால்ல விழ வேண்டியதுதான்.”

“டேய்!” நம்பி பலமாக சிரித்தாலும் மனதுக்குள் கவலைப்பட்டான். துளசி அத்தனைச் சுலபத்தில் இளகிவிடுவாள் என்று தோன்றவில்லை
அதே எண்ணம் ஆதியின் மனதிலும் இருந்தது. காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் போனான். கீழே ஹாலில் மட்டும் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்க மாடி முழுவதும் இருட்டாக இருந்தது.

பெட் ரூமின் லைட்டை ஆன் பண்ணினான் ஆதி. கட்டிலில் தலைசாய்த்து இவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தாள் துளசி.

“துளசி பசிக்குது.” எதுவுமே நடவாதது போல பேசிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான். குளியலை முடித்துக்கொண்டு அவன் வெளியே வந்தபோதும் மனைவி அப்படியேதான் அமர்ந்திருந்தாள்.

“துளசி எனக்குப் பசிக்குது.” மீண்டும் அவன் குரல் சற்றே அழுத்தமாக வந்தது.

துளசிக்கு ஏனோ எரிச்சலாக இருந்தது. எப்போதும் இது போல விஷயங்களுக்கு அவள் உதவியை நாடுபவன் அல்ல அவன்.  அவளுக்கும்சேர்த்து அவனே அனைத்தையும் செய்து முடித்து விடுவான். இன்று வேண்டுமென்றே செய்கிறான்.

கட்டிலை விட்டு எழுந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக கீழே போனாள். அவன் பின் தொடர்வது தெரிந்தது. உணவுப் பதார்த்தங்களை எடுத்து டைனிங் டேபிளில் வைத்தவள் நகரப்போனாள். அவள் கையைப் பிடித்து அவளைத் தடுத்தான் ஆதி.

“எங்க போறே துளசி? சாப்பிடு.”
“எனக்குப் பசிக்கலை.” அழுதிருப்பாள் போலும். குரல் ‘ஙஞணநமன’ போட்டது.

“பரவாயில்லை… கெஞ்சமா சாப்பிடு.” அவன் வற்புறுத்தவும் கையை விலக்கிக் கொண்டவள் பெயருக்கு ஏதோ கொறித்துவிட்டு மாடிக்குப் போய்விட்டாள்.

ஆதி அமைதியாக உண்டுவிட்டு கிச்சனை க்ளீன் பண்ணினான். கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு அவன் மேலே வந்தபோது துளசி ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.
கடந்த ஒரு வாரமாக அவர்களுக்குக் கிடைக்காத தனிமை அன்று கிடைத்திருந்தது. அத்தையும் ஷிவானியும் முதலில் கிளம்பினார்கள், பிற்பாடு அம்மாவும் அப்பாவும்.
துளசி சில இரவுகள் அவர்களோடே தூங்கி இருக்கிறாள். சில இரவுகள் இவன் ரூமிற்குள் வரும்போது அவள் அயர்ந்து தூங்கி இருப்பாள்.

கட்டிலில் அமர்ந்தவன் மெதுவாக அவள் புறம் நகர்ந்தான். கையை அவள் முழங்கை மேல் வைத்தவன்,

“துளசி…” என்றான் கெஞ்சுதலாக.
“தொடாதீங்க!” சட்டென்று சீறினாள் மனைவி.

இப்படியொரு எதிர்ப்பை ஆதி சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை. சுர்ரென்று அவனுக்கும் கோபம் தலைக்கேறியது.
“ஓ…” என்றவன் அவளைத் தன்புறமாக திருப்பினான்.

“என்னைத் தொடாதீங்கன்னு சொன்னேன்!” மீண்டும் அவள் குரலை உயர்த்திச் சொன்னாள்.

“உன்னைத் தொடாம வேற யாரைத் தொடுறது?”

“யாரை வேணும்னாலும் தொடுங்க, அதான் உங்க அத்தைப் பொண்ணு இருக்கா, கேத்தரின் இருக்கா.”

“தப்பாப் பேசாதே துளசி!”

“இங்க எல்லாம் கரெக்டாத்தான் நடக்குது பாருங்க, நான் மட்டுந்தான் தப்புத்தப்பாப் பேசுறேன்.”

“இப்போ என்ன ஆச்சுன்னு இப்பிடி குதிக்கிற துளசி?”

“எங்கப்பாக்கு ஏதாவது ஆகி இருந்திருந்தா…”

“அதான் எதுவும் ஆகலைல்ல? இப்போ எதுக்கு அதையே புடிச்சிக்கிட்டுத் தொங்குறே?” அவன் குரலில் இப்போது எரிச்சல் மண்டிக்கிடந்தது.

“பண்ணுறதையும் பண்ணிட்டு என்ன எகத்தாளம் உங்களுக்கு?” அவனின் எரிச்சல் குரல் அவளுக்கு இன்னும் கோபத்தை உண்டு பண்ணியது.

“ஆமா! இப்போ அதுக்கு என்ன பண்ணலாங்கிறே?”

“அந்த அருண் குமாரை தயவுசெய்து நல்வவன் ஆக்கிடாதீங்க.”

“ஓ! இப்போ துளசி தேவியாரோட நினைப்பு அப்பிடிப் போகுதோ?” அவன் கோணலாக கேட்க துளசி அவனை முழுதாக திரும்பிப் பார்த்தாள்.

“அந்த அருண் குமார் நல்லவன்… இந்த ஆதி கெட்டவன், அப்பிடித்தானே?!”

“போற போக்கைப் பார்த்தா அப்பிடித்தான் தெரியுது.” துளசி வாய்க்குள்தான் முணுமுணுத்தாள். ஆனால் அது அவனுக்குக் கேட்டிருந்தது.

“அந்த நல்லவனை நீங்க கல்யாணம் பண்ணி இருந்திருந்தா அவன் வீட்டுல இருக்கிற பூனைக்குட்டிக்கு லேசா அடிபட்டாலும் அதுக்கு நீங்கதான் காரணம்னு சொல்லி உங்களை உங்க வீட்டுல கொண்டு வந்து தள்ளி இருப்பானே, அப்போ மட்டும் உங்க அப்பா நல்ல ஆரோக்கியமா இருந்திருப்பாரா?!”

துளசி விலுக்கென்று நிமிர்ந்து இப்போது கணவனைப் பார்த்தாள். அவன் வார்த்தைகள் உண்மைதானே? அவன் சொல்வது நியாயம்தானே?!
அடிபட்ட அவள் பார்வையைப் பார்த்த போது ஆதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவன் எதையோ பேச ஆரம்பிக்க அதற்கு இடம் கொடுக்காதவள் போல திரும்பிப் படுத்துவிட்டாள்.

இருவருக்குமே ஒருவர் மீது மற்றவருக்கு அளவில்லாத பாசம் இருந்தது, காதல் இருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்தத் தெரியவில்லை.
தன்னை அவள் குறைவாக மதிப்பிடுவது… அதுவும் அந்த அருண் குமாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இழிவாக பார்ப்பது அவனுக்கு வேதனையாக இருந்தது.

தன் மேல் உண்மையான பாசம் இருந்திருந்தால் தன் தந்தையை இத்தனை இலகுவாக அவனால் கையாண்டிருக்க முடியுமா என்று அவள் மனம் அழுதது.
இளம் வயது… அனுபவமில்லாத மனது… ஒன்றை ஒன்று காயப்படுத்திக் கொண்டது!
***
ஆத்ரேயன் காலையில் கண்விழித்த போது மணி எட்டு. சோம்பல் முறித்தபடி திரும்பிப் பார்த்தான். துளசி அங்கே இல்லை.
‘அதற்குள் எழுந்து விட்டாளா?’ எண்ணிய படியே குளித்து முடித்தவன் கிச்சனுக்கு வந்தான். அங்கேயும் துளசி இல்லை.
மனது பக்கென்று ஆனது. எங்கே போய்விட்டாள்? தன் மேலுள்ள கோபத்தில் எங்காவது போய்விட்டாளா? மனது பதைபதைத்துப் போனது.

அவசர அவசரமாக கதவைத் திறந்து கொண்டு சங்கரபாணியின் வீட்டிற்கு ஓடினான். வீதிக்கு அந்தப்புறமாக இருக்கும் அந்த வீட்டிற்குப் போவதற்குள் ஆதிக்கு உயிர் போய் வந்தது. நெஞ்சுக்கூடு குளிர்ந்து போனது.
ஹாலில் அமர்ந்திருந்த சங்கரபாணிக்கு ஏதோ மாத்திரைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் துளசி. அவளைப் பார்த்த மாத்திரத்தில் மனதுக்குள் நிம்மதி பரவியது. ஆசுவாசமாக உணர்ந்தவன் மெதுவாக நடந்து உள்ளே போனான்.

“வா ஆதி…” சங்கரபாணியின் முகம் இவனைப் பார்த்ததும் மலர்ந்து போனது.

“ஒன்னுமில்லை ஒன்னுமில்லைன்னு எவ்வளவோ சொன்னேன், அதுக்கு துளசி இவ்வளவு தடபுடல் பண்ணிட்டா.”

“என்னாச்சு அங்கிள்?” மனைவியைப் பார்த்த படி சங்கரபாணியிடம் கேட்டான் ஆதி.

“ஏம்மா? ஆதிக்கிட்ட சொல்லாமலேயா கிளம்பி வந்த?”

“நல்லா அசந்து தூங்கிக்கிட்டு இருந்தாங்கப்பா, அதான் எழுப்பலை.” எதுவும் நடவாதது போல் இயல்பாக வந்தது பதில்.

“ஓ… அதுவும் சரிதான், ஒன்னுமில்லை ஆதி, லேசான காய்ச்சல்.”

“டாக்டர் கிட்ட போகலாம் அங்கிள்.”

“தேவையில்லை ஆதி, பாரசிட்டமோல் எடுத்துக்கிட்டாச் சரியாப்போகும்.”

“அதை டாக்டர் சொல்லட்டுமே அங்கிள்.”

“ஆதி… இங்க வந்து எம் பக்கத்துல உக்காருப்பா.” சங்கரபாணி அழைக்கவும் ஆதி சட்டென்று மனைவியைப் பார்த்தான்.

அவளும் ஆச்சரியப்பட்டபடி இவனைப் பார்த்துவிட்டுச் சட்டென்று தன் தந்தையின் புறம் பார்வையைத் திருப்பினாள். எதிர் சோஃபாவில் அமர்ந்திருந்த ஆதி சங்கரபாணிக்கு அருகில் போய் அமர்ந்து கொண்டான்.

“சொல்லுங்க அங்கிள்.” இப்போது பெரியவர் ஆதியின் கரத்தைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டார்.

“ஆதி… மனசு ரொம்ப நிறைஞ்சு போயிருக்குப்பா.”

“அங்கிள்!”

“உங்க கல்யாணம் நடந்த நாள்ல இருந்து உன்னை, உன்னோட குடும்பத்தைப் பார்த்ததுல இருந்து மனசு நிறைஞ்சு போச்சு, ரொம்ப நிறைவா இருக்கு ஆதி.”

“என்ன அங்கிள் நீங்க? எதுக்கு இப்போ இப்பிடியெல்லாம் பேசுறீங்க?”

“நீ நல்ல பையன்னு எனக்குத் தெரியும், ஆனா உன்னோட அப்பா அம்மா உன்னையே மிஞ்சிடுவாங்க போல இருக்கே!” நெகிழ்வான குரலில் சங்கரபாணி சொல்ல ஆதி புன்னகைத்தான்.
துளசி திரும்பி உள்ளே செல்லவும் பாட்டி வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

“என்னாச்சு சங்கரபாணி? நோக்கு உடம்புக்கு முடியலையாமே?” உரக்கக் கேட்டபடியே வந்து அமர்ந்தார் பாட்டி. பெரியவர்கள் பேசிக்கொண்டு இருக்கட்டும் என்று நினைத்த ஆதி உள்ளே போனான்.

துளசி கிச்சனில் நிற்பது தெரிந்தது. இப்போதெல்லாம் அவனுக்கு முன்பாக காலையில் அவள் எழும் நாட்களில்… இப்படி கிச்சனில் வேலை செய்யும் போது, பின்னால் நின்றபடி அவள் வெற்றுத் தோளில் இதழ் பதிப்பது ஆதியின் வழக்கம்.
இப்போதும் அதே நினைவில் அவள் பின்னால் வந்து நின்றவன் அவள் தோளில் முத்தம் வைத்தான்.

“குட் மார்னிங் துளசி.”

“குட்… மார்னிங்.” லேசாக தடுமாறியவள் அவன் கையில் காஃபியை கொடுத்தாள். அதை வாங்கி அங்கிருந்த டேபிளில் வைத்தவன் நகரப்போன பெண்ணின் கரம்பிடித்துத் தடுத்தான்.

“கொஞ்சம் நில்லு… என்னைப் பாரு துளசி.”

“பாட்டிக்கு காஃபி குடுக்கணும்.”

“அதெல்லாம் குடுக்கலாம், நான் சொல்றதைக் கொஞ்சம் நீ…” அதற்கு மேல் அவன் பேசுவதை லட்சியம் செய்யாமல் அங்கிருந்து அகன்றாள் பெண்.
ஆதிக்கு லேசாக கோபம் தலைத் தூக்கியது. இவளுக்கு இப்போது என்னதான் வேண்டும்? எதற்காக இப்படி நடந்து கொள்கிறாள்?!
மனைவியைப் பின்தொடர்ந்து ஹாலுக்கு வந்தான் ஆதி. அங்கேதான் அவளும் நின்றிருந்தாள். பெரியவர்களின் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.

“இருந்தாலும் உடம்பை நன்னாப் பார்த்துக்கோ சங்கரபாணி.”

“இனி இந்த உடம்புக்கு என்ன ஆனா எனக்கென்ன பெரியம்மா.” சங்கரபாணியின் குரலில் மகிழ்ச்சி எல்லைக் கடந்திருந்தது.

“என்னடாப்பா இப்பிடிச் சொல்லிட்டே?”

“என்னோட துளசியை பாதுகாப்பான ஒரு கையில ஒப்படைச்சிட்டேன், உண்மையைச் சொன்னா இப்போ நிம்மதியா இருக்கேன் பெரியம்மா.”

“அது வாஸ்தவம்தான் ப்பா.”

“கடவுள் மேல நிறைய வருத்தம் இருந்துச்சு, எதுக்குப்பா எங்களை இப்பிடிச் சோதிக்கிறேன்னு.”

“அப்பிடியெல்லாம் பேசப்படாது!”

“அது புத்திக்குப் புரிஞ்சாலும் மனசு கேக்கலையே! இதையெல்லாம் ஆதியை வெச்சுக்கிட்டுப் பேசுறது சரியான்னு கூட எனக்குத் தெரியலை.” தன்னைப் பற்றிய பேச்சு வரவும் துளசி அருகில் வந்து அவள் தோள்மீது கையைப் போட்டுக் கொண்டான் ஆதி. பெண் லேசாக நெளிந்தது.

“பரவாயில்லை… சொல்லுங்க அங்கிள்.” பெரியவர்கள் இருவரும் இளையவர்கள் நின்றிருந்த கோலம் பார்த்து மனம் நிறைந்து புன்னகைத்தார்கள்.

“ஒன்னுமில்லை ஆதி… அன்னைக்கு அந்த நிச்சயதார்த்தம் நின்னு போகலைன்னா… துளசியோட நிலை என்ன ஆகியிருக்கும்?!”

“இப்போ எதுக்கு அந்த வெளங்காதவனோட பேச்சை நீ எடுக்கிறே?” பாட்டி சங்கரபாணி மேல் கோபமாக பாய்ந்தார்.

“நல்லா என்னைத் திட்டுங்க பெரியம்மா, அறிவு கெட்டுப் போய் அவனை என்னோட துளசிக்கு பார்த்திருக்கேனே! அன்னைக்கு நடக்காமப் போனது நடந்திருந்தா எம் பொண்ணோட நிலைமை என்ன ஆகியிருக்கும்?!”

ஆதி இப்போது தலையில் அடித்துக் கொண்டான். அப்பாவும் மகளும் நடக்காததை நினைத்து நினைத்துத்தான் வருந்துவார்களா?!

“அதான் நடக்கலையே… விட்டுத் தொலை சங்கரபாணி, தலையோட வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நினைச்சுக்கோ!”

“நான் புண்ணியம் பண்ணி இருக்கேன் பெரியம்மா, நான் கண்டிப்பா யாருக்கோ எங்கேயோ புண்ணியம் பண்ணி இருக்கேன்…”

“போச்சுடா… இதுக்குப் போய் கண் கலங்குவியா சங்கரபாணி?!” சொல்லிக் கொண்டே தன் கண்களில் துளிர்த்த நீரையும் துடைத்துக் கொண்டார் பாட்டி.

மனைவியை அணைந்திருந்த ஆதியின் கை அவள் தோளை லேசாக அழுத்தியது, எதையோ உணர்த்துவது போல. பெண் தலையைக் குனிந்து கொண்டது.

“நான்… வாசல்ல கோலம் போடுறேன்.” முணுமுணுத்துவிட்டு நகர்ந்தாள் துளசி. ஆதி தன்னை விட்டு விலகி விலகிப் போகும் மனைவியையே யோசனையோடு பார்த்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!