நிலா பெண் 19
நிலா பெண் 19
அந்த பின்க் நிற சேலை கட்டிலில் பரந்து கிடந்தது. முகம் முழுவதும் மகிழ்ச்சி, அதீத திருப்தி தெரிய ஆதி அதில் சயனித்திருந்தான்.
பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. எத்தனை நேரம்தான் அங்கே நிற்பாள் இவள்?!
“துளசி, ரொம்ப நேரம் தலையை நனைக்காதே.” கட்டிலில் கிடந்த படியே குரல் கொடுத்தான் கணவன். சற்று நேரத்தில் நீர் விழும் ஓசை நின்றுவிட்டது.
அப்போதுதான் யாரோ அலைபேசியில் அழைத்தது ஞாபகம் வரவும் ஃபோனை எடுத்துப் பார்த்தான். அப்பா அழைத்திருந்தார். உடனேயே அவரை அழைத்தான் ஆதி.
“ஹலோ.” என்றார் சுந்தரமூர்த்தி.
“அப்பா, நான் ஆதி பேசுறேம்பா.”
“சொல்லு ஆதி, எப்பிடி இருக்கே? துளசி எப்பிடி இருக்கா?”
“நல்லா இருக்கோம், அம்மா என்ன பண்ணுறாங்க? நீங்க எப்பிடி இருக்கீங்கப்பா?”
“எல்லாரும் இங்க நல்லா இருக்கோம், இன்னைக்கு நம்பியோட நிச்சயதார்த்தம் இல்லை ஆதி? எப்பிடி நடந்துச்சு?”
“ம்… சூப்பர் ப்பா, நான் உங்களுக்கு ஃபோட்டோஸ் அனுப்புறேன்.”
“அனுப்பு அனுப்பு, இந்தியாவ நான் ரொம்பவே மிஸ் பண்ணுறேன் ஆதி.”
“இங்க வந்து எங்கக்கூட இருங்களேன் ப்பா.”
“அம்மா பாவம் இல்லையா ஆதி, அதைவிட நீயும் துளசியும் இங்க வந்து ஒரு மாசம் இருங்களேன், துளசிக்கும் இங்க எல்லாத்தையும் பார்த்த மாதிரி இருக்கும்.” சுந்தரமூர்த்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாத்ரூம் கதவு திறந்தது.
“நல்ல ஐடியாதான், துளசி இங்கதான் இருக்கா, நீங்க பேசுறீங்களா ப்பா?”
“குடு குடு.” அப்பா சொல்லவும் மனைவியிடம் ஃபோனை நீட்டினான் ஆதி. சுடிதார் அணிந்து தலையைத் துவட்டிய படி இருந்தாள்.
“யாரு?”
“அப்பா, உங்கிட்டப் பேசணுமாம்.” ஃபோனை வாங்கிய பெண்,
“மாமா.” என்றாள் பவ்வியமாக.
“துளசி, எப்பிடி இருக்கே? அப்பா எப்பிடி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க மாமா, அங்க எல்லாரும் சௌக்கியமா? அத்தை எப்பிடி இருக்காங்க?”
“ம்… எல்லாரும் நல்லா இருக்கோம், ஆதேஷ் வீட்டுல விசேஷம் போல, உங்கத்தையைக் கைல பிடிக்க முடியலை, ரொம்ப பிசி.”
“அப்பிடியா?! ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா.” அவளை அறியாமலேயே துளசியின் குரல் ஆர்ப்பரித்தது. ஆதி கேள்வியாக மனைவியைப் பார்த்தான்.
“ஆமா… ஆதேஷோட வைஃபுக்கு உடம்புக்குக் கொஞ்சம் முடியலைப் போல, உங்கத்தை மருமகளைத் தாங்குத் தாங்குன்னு தாங்குறா!” இப்போது பெரியவரின் குரலிலும் பூரிப்பு!
“இருக்காதா மாமா, ரொம்ப நாளைக்கப்புறமா வர்ற குட்டிப் பாப்பா இல்லையா? அத்தைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”
“ஆமாம்மா, ஆதிக்கு அப்புறமா நம்ம குடும்பத்துல வர்ற முதல் குழந்தை…” குரல் நெகிழ சுந்தரமூர்த்தி நிறுத்தினார். துளசி சட்டென்று கணவனைப் பார்த்தாள்.
“என்ன?” செய்கையாலேயே அவளிடம் கேள்வி கேட்டான் கணவன்.
சும்மாவே கண்களில் குறும்பு நாட்டியம் ஆடுகிறது. இதில் இதை வேறு அவள் அவனிடம் எப்படிச் சொல்வாள்? பிற்பாடு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள்.
“துளசிம்மா!”
“சொல்லுங்க மாமா.”
“உங்க அத்தையும் எப்பப்பாரு ஆதேஷ் வீட்டுலயே இருக்கா, எனக்குத் தனியா இருக்க ரொம்ப போர் அடிக்குது.”
“ஓ…”
“அதான், ஆதிக்கிட்ட நீயும் துளசியும் இங்க கிளம்பி வாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.” மனைவியின் பின்னோடே வந்த ஆதி அவள் கையிலிருந்த டவலை வாங்கிக் கொண்டான்.
“நீ என்னம்மா சொல்றே?”
“அவங்க என்ன சொன்னாங்க மாமா?”
“அவன் பதிலே சொல்லலை, உங்கிட்டப் பேசணும்னு நினைச்சிருப்பானா இருக்கும், ரெண்டு பேரும் பேசி ஒரு மாசம் இங்க வந்து தங்குற மாதிரி முடிவெடுங்க, நான் வெச்சிடட்டுமா துளசி?”
“சரி மாமா.”
ஆதியின் கை மனைவியின் கூந்தலை மெதுவாக துவட்டி விட்டது. சில நொடிகள் அந்த வேலையில் இறங்கி இருந்த கரங்கள் அதன் பிறகு அவளை அணைத்துக் கொண்டன.
“துளசி…” கொஞ்சலாக வந்தது அவன் குரல்.
“மாமா… அங்க வர்றீங்களான்னு கேட்டாங்க.” இப்போது மனைவியைத் தன் புறமாக திருப்பினான் ஆதி.
“போய்ட்டு வரலாமா?” ஆர்வம் பொங்க கேட்டான் ஆதி.
“ம்…” தயக்கத்தோடே வந்தது அவள் பதில். மனைவியின் தயக்கம் ஏனென்று அறியாதவனா ஆதி?
“உனக்கும் மாமாக்கும் வீசா எடுக்கிறது ரொம்ப ஈஸி துளசி.”
“அப்பாவையும் கூட்டிக்கிட்டுப் போக முடியுமா?” கண்கள் மின்னக் கேட்டாள் பெண்.
“இது என்ன பெரிய விஷயமா? உனக்குக் காட்டுற அதே டாக்குமெண்ட்ஸை மாமாக்கும் காட்டிட்டா முடிஞ்சுது.”
“வீசா குடுப்பாங்களா? எடுக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்லுறாங்களே?”
“மேடம், நீங்க என்னோட வைஃப், நம்ம கல்யாணத்தைச் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணி இருக்கோம், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்தா அதெல்லாம் நத்திங் மா, ஈஸியா முடிச்சிடலாம்.”
“ஓ…”
“மேடமை கூட்டிட்டுப் போறது ஓகே… ஆனா… உங்கப்பாவைக் கூட்டிட்டுப் போறதா இருந்தா… மேடம் எனக்கு ஏதாவது ஸ்பெஷலா பண்ணணுமே…” ஆதி ராகம் பாடினான்.
“ஸ்பெஷலாவா? அப்பிடின்னா?”
“அப்பிடின்னா…” அவன் சரசம் பண்ண ஆரம்பிக்கும் போதே பாட்டியின் குரல் கீழே கேட்டது. துளசி பக்கென்று சிரித்து விட்டாள்.
“இந்தா வாரேன்!” பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக பதில் சொன்ன ஆதி ரூமை விட்டு வெளியே வந்து தடதடவென படிகளில் இறங்கினான்.
துளசியும் கீழே இறங்கி வந்தாள். பீறிட்ட சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ஆதி கதவைத் திறந்ததுதான் தாமதம்.
“ஏன்டாப்பா ஆதி! உன்னை எத்தனைத் தரந்தான் நான் கூப்பிட்டுக் கத்துறது?” பெரிய குரலில் அலுத்துக் கொண்டார் பாட்டி.
கையில் கொண்டு வந்திருந்த பாத்திரங்களை கிச்சன் டைனிங் டேபிளில் வைத்தவர் துளசியிடம் திரும்பினார். ஆதியின் கோப முகம் அவர் கண்ணுக்குத் தப்பவில்லை.
“இந்தப் பொடிப்பயல் என்னை எதுக்கு முறைக்கிறான் துளசி?”
“ஏன்? அதை எங்கிட்ட கேக்க மாட்டீங்களோ?”
“சரி, நீயே சொல்லு, எதுக்கு என்னை அப்பிடி முறைச்சுப் பார்க்கிறே?”
“நீங்க எதுக்கு நான் என்னோட பொண்டாட்டியைக் கொஞ்சுறப்போ எல்லாம் கூப்பிடுறீங்க?”
“ச்சீ… போடா போக்கத்தவனே! பேசுற பேச்சைப் பாரு!”
“ரங்கநாயகி!”
“கொன்னுடுவேன் படவா! நீ என்னடா என்னோட ஆத்துக்காரர் மாதிரி பேர் சொல்லிக் கூப்பிடுறே?”
“எல்லாம் நீங்க என்னோட ஆத்துக்காரியைக் கொஞ்ச விடலையேங்கிற ஆதங்கம்தான்.”
“அடிதான் வாங்கப்போறே, திரும்பத் திரும்ப நீ எக்குத்தப்பாவே பேசுறே.”
“பாவம் நம்பி, பக்கத்து வீட்டுல இருக்கிற எனக்கே இதுதான் நிலைமைன்னா ஒரே வீட்டுல இருக்கப்போற அவன்பாடு எப்பிடி இருக்கும்?” சத்தமாகவே புலம்பினான் ஆதி.
துளசி வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு கிச்சனுக்குள் போனாள்.
“துளசிம்மா, தாகமா இருக்கு, குடிக்க ஏதாவது குடுடி கொழந்தை.”
“காஃபி போடட்டுமா பாட்டி?”
“போடு போடு, அப்பிடியே இந்த கடங்காரனுக்கும் குடு, ரொம்பத்தான் எம்மேல பாயுறான்.”
“மழை வேற லேசா பேயுது, இப்ப யாரு உங்களை இந்தப் பாத்திரங்களைத் தூக்கிட்டு வரச்சொல்லி அழுதா?”
“பசியோட இருப்பியேடா ஆதி… மழை வேற, அதான் தூக்கிட்டு வந்தேன், சங்கரபாணிக்கும் குடுத்துட்டேன், அவனும் டைமுக்கு சாப்பிட்டுட்டு மாத்திரைப் போடணும் இல்லை?” அந்த அன்பில் ஆதி நெகிழ்ந்து போனான்.
பாட்டியின் அருகில் போனவன் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். லேசாக அவர் கன்னங்களைப் பிடித்துக் கிள்ளினான்.
“போடா… இவ்வளவு நேரமும் திட்டிட்டு இப்போ கொஞ்சுறான்.”
“பாட்டி, நானும் துளசியும் யூகே போக போறோம்.”
“என்னையும் கூட்டிண்டு போடா ஆதி.” சின்னப்பிள்ளைப் போல கோரிக்கை வைத்தார் பாட்டி.
“ஐயையோ! முடியாதுப்பா, நான் அங்க போயாவது எம் பொண்டாட்டியை நிம்மதியா கொஞ்சணும்.”
“டேய் ஆதி! பாட்டியை விட நோக்கு உம் பொண்டாட்டிதான் முக்கியமா?”
“ஆமா, அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?”
“பார்த்தியா துளசி, கல்யாணம் முடியும் வரைக்கும் என்னமா நேக்கு கூஜா தூக்கினான்? இப்போ எப்பிடிப் பேசுறான் பார்த்தியா?” காஃபியை நீட்டிய துளசியிடமே புகாரிட்டார் பாட்டி.
“நான்… என்னோட மாமனாரைக் கூட்டிட்டுப் போகப் போறேன் பாட்டி.” கணவனுக்கும் காஃபியை கொடுத்துவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டாள் துளசி.
“பேஷ் பேஷ், சங்கரபாணியை கூட்டிண்டு போ, கடங்காரா! நோக்கு அதுக்காவது மனசு வந்துச்சே!”
“என்னோட மாமனாருக்கு இப்போ புதுசு புதுசா ஆசையெல்லாம் வருது பாட்டி.”
“அப்பிடியா? என்னவாம்?”
“அவருக்குப் பேரன் பேத்தி எல்லாம் வேணுமாம்.” சொல்லிவிட்டு மனைவியைப் பார்த்தான் ஆதி. சட்டென்று எழுந்தவள் மீண்டும் கிச்சனுக்குள் போய் விட்டாள். இப்போது பாட்டி பலமாக சிரித்தார்.
“டேய் கடங்காரா! ஏன்டா அவளைப் படுத்துறே? இப்பதான் வந்து உக்கார்ந்தா, அதுக்குள்ள அவளை உள்ள ஓட வெச்சுட்டியே!” இப்போது ஆதி சிரித்தான்.
“அதான் உன்னோட மாமனாரே சொல்லிட்டாரே, சீக்கிரமா ஒன்னைப் பெத்துக்குடு.”
“அதுக்குத்தான் நானும் துளசியும் உங்க தொல்லை இல்லாத இடமா பார்த்து தனியா போகப்போறோம்.”
“துளசிம்மா! நான் கிளம்புறேன், இந்த கடங்காரன் இன்னைக்கு ஒரு மார்க்கமாவே பேசுறான், சூடா இருக்கும் போதே சாப்பிடுங்க.” பாட்டி அதற்கு மேல் அங்கே நிற்காமல் கிளம்பி விட்டார்.
ஆதி கதவை லாக் பண்ணிவிட்டு வந்தவன் துளசியை தேடினான். கிச்சனில் அவள் இல்லை.
“துளசி!” அழைத்தபடி மாடிக்கு வந்தான். பால்கனி இருளில் நின்றிருந்தாள். மழை இன்னும் லேசாக தூறியபடி இருந்தது.
“இங்க என்ன பண்ணுற துளசி?”
“………….”
“என்னாச்சு?” வேண்டுமென்றே குனிந்து அவள் முகம் பார்த்தான். அவன் நெஞ்சில் கையை வைத்து அவனைத் தள்ளி விட்டது பெண்.
“ஹா… ஹா…” மனைவியை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் ஆதி.
“அதென்ன பேச்சு பாட்டிக்கிட்ட? அவ்வளவு அடாவடியா?”
“நம்ம பாட்டிதானே துளசி?”
“அதுக்காக? எம் பொண்டாட்டியைக் கொஞ்சுறேன், எம் பொண்டாட்டியைக் கொஞ்சுறேன்னு ஊரெல்லாம் சொல்லுவீங்களா?”
“ஆமா, சொல்லுவேன்…” சிரித்தபடி சொன்னவன் சட்டென்று எதுவோ ஞாபகம் வந்தது போல் மனைவியைப் பார்த்தான்.
“என்ன?”
“அப்பாக்கிட்ட என்னமோ பேசினியே துளசி, என்ன அது?”
“அது… அ…” துளசிக்கு எப்படிச் சொல்வதென்று புரியவில்லை. கணவன்தான், இருந்தாலும்…
“என்னடா?” கண்கள் மின்ன அந்த நாணத்தை ரசித்தான் கணவன்.
“அங்க… உங்கண்ணா வைஃப்…”
“அவங்களுக்கு என்ன?” சட்டென்று கேட்டவன் மனைவியைக் கூர்ந்து பார்த்தான்.
“ஹேய்! பேபியா?”
“ம்…” அவள் தலையை ஆட்டினாள்.
“வாவ்! சூப்பரில்லை துளசி?! ஆதேஷுக்கு பேபியா?!” தன்னை மறந்தவன் போல சிரித்தான் ஆதி. கணவனின் சந்தோஷத்தைப் பார்த்த போது அவள் முகமும் மலர்ந்தது.
“உங்களுக்கு அப்புறமா வர்ற முதல் பேபியாம்.”
“யாரு சொன்னா? அப்பாவா?”
“ம்… உங்கம்மா அங்கேயே போயிட்டாங்களாம்.”
“சும்மாவே அம்மாக்கு ஆதேஷ்னா செல்லம், இப்போ கேக்கவே வேணாம்.”
“அப்போ நீங்க யாரோட செல்லம்?” மனைவியின் குரல் அவனைச் சீண்ட மீண்டும் அவளைத் தன்னோடு இழுத்து இறுக்கிக் கொண்டான் ஆதி.
“நான்… துளசியோட செல்லம்!”
“அய்யே! அப்பிடி யாரு சொன்னாங்களாம்?”
“யாரும் சொல்லத் தேவையே இல்லை, அதான் நாங்களே கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தோமே!”
“பார்ப்பீங்க, பார்ப்பீங்க…” சொன்னபடி முகத்தை அவன் மார்புக்குள்ளேயே மறைத்தது பெண். சில்லிட்ட காற்றொன்று அப்போது பார்த்து வீச இன்னும் அவனுக்குள் புதைந்தது பெண்.
***
அடுத்த நாள் துளசி கண் விழிக்கும் போதே நன்றாக விடிந்து விட்டது. அவசர அவசரமாக குளித்துவிட்டு அப்பாவின் வீட்டிற்கு முன்னால் கோலம் போட்டவள், அதை முடித்து விட்டு தங்கள் வீட்டிற்கு முன்பாகவும் கோலம் போட்டாள்.
லேசாக பசித்தது. நேற்றைய இரவைக் கணவன் கொண்டாடித் தீர்த்திருந்ததால் அவளால் சரியாக உண்ணவும் முடிந்திருக்கவில்லை.
“துளசி… ஒரு கப் காஃபி கிடைக்குமா ப்ளீஸ்…” மாடியிலிருந்து ஆதியின் குரல் கேட்டது.
“இதோ கொண்டு வர்றேன்.” சத்தமாக பதில் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் போனாள். ஆதி குளிக்கும் சத்தம் கேட்டது.
“துளசி…” நம்பி உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.
“வாங்க நம்பிண்ணா.” சொல்லிய படியே திரும்பியவள் நம்பியின் வாடிய முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.
“என்னாச்சு? ஏன் ண்ணா முகம் ஒரு மாதிரியா இருக்கு?”
“ம்ப்ச்… எரிச்சலா இருக்கு துளசி.”
“என்னாச்சு?” நம்பி இது போலெல்லாம் பேசாதவன் என்பதால் துளசி அதிசயப்பட்டாள்.
“இன்னைக்கு நானும் ஸ்வாதியும் வெளியே போறதா இருந்துச்சு.”
“ஓ… இப்ப என்னாச்சு?”
“ஃபோன் பண்ணுறா… அப்பாக்கு உடம்புக்கு முடியலையாம்.”
“ஐயையோ! அவருக்கு என்னவாம்? நேத்து நல்லாத்தானே இருந்தாரு?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, லேசா பிபி ஏறியிருக்கும் போல, அதெல்லாம் நல்லாத்தான் இருக்காரு.” சலிப்போடு வந்தது பதில்.
“நீயே சொல்லு துளசி, இதுநாள் வரைக்கும் நானா ஒரு ஃபோன் போட்டுப் பேசி இருக்க மாட்டேன், இந்த ஆதி என்னைக் கேலி பண்ணித் தள்ளுறான், நான் சாமியாராம்… உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம்னு.”
“அவங்க சும்மா சொல்லி இருப்பாங்கண்ணா.”
“இருந்தாலும் அதுதானே உண்மை? நான் ஏன் அப்பிடியெல்லாம் இருக்கேன்? முறையா நிச்சயதார்த்தம் நடக்கட்டும், அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்னுதானே?”
“……………”
“இப்பப் போயி இப்பிடிச் சொன்னா என்ன அர்த்தம்?”
“அப்பாக்கு உடம்புக்கு முடியலைன்னா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்கண்ணா.”
“அதான் அப்பாவை இத்தனை வருஷம் கட்டிக்கிட்டு அழுதாச்சு இல்லை, கொஞ்சம் என்னைப் பத்தி இப்போ யோசிக்கலாம்ல துளசி.” நம்பியின் குரல் ஆத்திரமாக வந்தது.
துளசி திடுக்கிட்டுப் போனாள். பசித்த வயிறு, போட்ட காஃபி அனைத்தும் மறந்து போனது.
நம்பியா இப்படிப் பேசுவது?! அமைதி, பொறுப்பு இவற்றின் உறைவிடமான நம்பி அண்ணாவா இப்படிப் பேசுவது?!
“என்ன? தலைவர் காலங்காத்தால இங்க வந்து பொலம்புறாரு?” குளித்து முடித்துவிட்டு படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் ஆதி.
“டேய்! வாடா எங்கேயாவது வெளியே போகலாம்!” மீண்டும் கோபமாக வந்தது நம்பியின் குரல்.
“சரி சரி, பொறு… வாழ்க்கைன்னா இதெல்லாம் சகஜம் நம்பி.”
“ஆதி… வேணாம்! செம கடுப்புல இருக்கேன், கொன்னுடுவேன் உன்னை!”
“ஹா… ஹா… ஒரு கப் காஃபி, எம் பொண்டாட்டி கையால குடிச்சிட்டு வர்றேன்டா.”
“ஏன்? அந்த காஃபியை வெளியே எங்கூட குடிக்க மாட்டீங்களோ?” கோபமாக முறைத்தவன் கார் கீயை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டான்.
“காஃபி…” நீட்டிய மனைவியிடமிருந்து வாங்கி அவசர அவசரமாக குடித்தான் ஆதி.
“தலைவர் ரொம்ப கோபமா இருக்காரு போல, நான் லேட் பண்ணினா அவ்வளவுதான், தொலைச்சிடுவான்!” சொல்லிவிட்டுத் திரும்பிய ஆதி சட்டென்று நின்றான்.
மனைவியின் திகைத்த முகம் அவனை நகர விடவில்லை. அவளருகே வந்தவன் அந்த கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
“பசங்கன்னா அப்பிடித்தான் துளசி, பொண்ணுங்க மாதிரி சென்டிமென்ட் எல்லாம் பார்க்க மாட்டாங்க.”
“அதுக்காக…”
“இத்தனை நாளும் பொறுமையா இருந்தவன், நேத்து நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சுன்னு ஆசையா வெளியே போக கூப்பிட்டிருப்பான்.”
“ஸ்வாதியோட அப்பாக்கு உடம்புக்கு முடியலையாம்.” மனைவியின் பதிலில் லேசாக புன்னகைத்தவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெளியே போய்விட்டான்.
“என்ன இவங்களும் இப்பிடிப் பேசுறாங்க? நம்பிண்ணா ஏன் இப்பிடி நடந்துக்கிறார்?” வீட்டில் யாரும் இல்லை என்கின்ற தைரியத்தில் துளசி வாய்விட்டுப் புலம்பினாள்.
ஆண்பிள்ளைகள் என்றால் இப்படித்தானா? சில பொழுதுகளில் அவர்கள் தரப்பு நியாயம் மட்டும்தான் அவர்களுக்குப் பெரிதாக தெரியுமா?! மற்றவர்களைப் பற்றி யோசிக்கவே தோன்றாதா?
எண்ணங்களோடே மாடிக்குப் போனவள் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தாள். நம்பி அண்ணாவின் போக்கு துளசிக்கு அன்று ஆச்சரியமாக இருந்தது.
எப்போதுமே நிதானமாக இருக்கும் நம்பி அண்ணாவுக்கு இன்று என்ன ஆனது? சுற்றத்தார் என்று வரும்போது அமைதியாக அனைத்தையும் சீர்தூக்கி அலசும் அண்ணா கூட, அவன் மனைவி என்று வரும் போது இப்படித்தான் நடந்து கொள்வானா?
தனது மனைவி என்று வந்துவிட்டால் எல்லா ஆண்களும் இப்படித்தானா? காதல் என்று வந்து விட்டால் ஆத்ரேயன் வேறு நம்பி வேறு இல்லையா?!
ஏதேதோ எண்ணமிட்ட படி கட்டிலில் சாய்ந்திருந்த துளசி அப்படியே உறங்கிப் போனாள். சிறிது நேரம் கழித்து மென்மையாக ஒரு கை தன் கன்னத்தைத் தடவவும் லேசாக இமைகளைப் பிரித்தாள்.
“மேடம் ரொம்ப டயர்டா இருக்காங்க போல!” அவன் குரல் துளசியின் காதோரம் மெதுவாக ஒலித்தது.
“பசிக்கலையா துளசி?”
“ம்… பசிக்குது, டைம் என்ன?”
“பத்து மணி.”
“அதுக்குள்ள பத்து மணி ஆகிடிச்சா? நம்பிண்ணா எங்க?” கேட்ட படியே அவள் எழப்போக அவளுக்கு முன்னால் ப்ளேட்டை வைத்தான் ஆதி.
“நான் வரும் போது தோசை வாங்கிட்டு வந்தேன்.” என்றபடி ஒரு விள்ளலை எடுத்து அவள் வாயில் வைத்தவன் அடுத்ததைத் தான் உண்டான்.
“நம்பிண்ணா வரலையா?”
“தலைவர் இப்போ ஜாலியா ஸ்வாதி கூட ஷாப்பிங் பண்ணுவாரு.”
“என்ன… எப்பிடிங்க?!” ஆச்சரியமாக விழி விரித்த மனைவியைப் பார்த்துச் சிரித்தான் ஆதி.
“எவ்வளவு ஆசையா கிளம்பி வந்தான், அவங்கிட்டப் போயி அப்பாக்கு உடம்புக்கு முடியலைன்னா கோபம் வருந்தானே துளசி.”
“அதுக்காக? ஸ்வாதி அப்பாவைப் பத்தி யோசிக்காம சட்டுன்னு கிளம்பி வர முடியுமா?”
“அதை விடு, அது அவங்க பிரச்சினை, நீ முதல்ல சாப்பிடு.” மனைவிக்கு ஊட்டிய படியே தானும் சாப்பிடுவதில் கவனமானான் ஆதி.
“இப்போ எப்பிடி ஸ்வாதி வந்தாங்க?”
“பயல் பொலம்பித் தீர்த்துட்டான், எங்காதுல இருந்து ரத்தம் வராததுதான் பாக்கி, அதனால நேரா ஸ்வாதி வீட்டுக்கே போயிட்டோம்.”
“ஓ… அவங்க அப்பா எப்பிடி இருக்காங்க?”
“அவருக்கு ஒன்னும் இல்லை, கல்லு மாதிரி நல்லாத்தான் இருந்தாரு.”
“அப்புறம்?”
“ரெண்டு பேரும் வெளியே ஷாப்பிங் போறதா இருந்தாங்கன்னு சொல்லி பர்மிஷன் வாங்கி, நல்லா என்ஜாய் பண்ணு தலைவான்னு அனுப்பியாச்சு.”
“ம்… அதெல்லாம் நல்லாப் பண்ணுவீங்களே!”
“ஆமா… நமக்குத்தான் இப்பிடியெல்லாம் அருமையான வாய்ப்புக் கிடைக்கலை, அவனாவது அனுபவிக்கட்டுமே.”
“எப்பிடியெப்பிடி?! உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கலையா? அதுவா கிடைக்கலைன்னாலும் நீங்களா உருவாக்கிக்கிட்டீங்களே!”
“அப்பிடி என்னத்தை உருவாக்கினோமாம்?” ஆதி அங்கலாய்த்தான்.
“சிதம்பரத்துக்கு தனியா போக வேண்டியதுதானே? எதுக்குக் கூட்டம் கூட்டினீங்களாம்?”
“அது… பாட்டி வயசு போன காலத்துல நடராஜரைத் தரிசிக்கட்டுமேங்கிற நல்லெண்ணம்.”
“ஓஹோ!”
“பாட்டிக்குத் துணையா இருக்கட்டுமேன்னு நம்பி உன்னைக் கூப்பிட்டான்.”
“யாரு? நம்பிண்ணாவா?”
“ஆமா… பின்னே நான் கூப்பிட்டேன்னு நினைச்சியா?” கையிலிருந்த ப்ளேட்டை அங்கிருந்த மேஜை மேல் வைத்துவிட்டு பாத்ரூமில் கையை அலம்பினான் ஆதி.
கணவனை ஒரு வியந்த பார்வைப் பார்த்தாலும் துளசியின் எண்ணங்கள் அதன்பிறகு நம்பியை நாடிப் போய்விட்டது. கையைக் கழுவிவிட்டு வந்த ஆதி மனைவியை ஆச்சரியமாக பார்த்தான்.
“ஏய் என்னாச்சு?” நிதானமாக கணவனைத் திரும்பிப் பார்த்தாள் துளசி.
“நம்பி ண்ணாவோட இந்த முகத்தை என்னால ஜீரணிக்க முடியலை.”
“அட ஆண்டவா! உங்க அண்ணாக்கு அப்பிடி எத்தனை முகம் இருக்கு?” கேலியாக அவன் கேட்ட போதும் துளசி அதை ரசிக்கவில்லை.
“இதுக்குத்தான் ஒத்தைப் பிள்ளையா வளர்க்கப்படாதுன்னு சொல்றது, இப்பப்பாரு… உனக்கு மனுஷங்க எப்பிடி சமயத்துக்கு தக்கமாதிரி பிஹேவ் பண்ணுவாங்கன்னு கூட தெரியலை.”
‘உண்மையாக இருக்குமோ? தன் வீட்டிலும் இன்னும் இரண்டு மூன்று உடன்பிறப்புகள் இருந்திருந்தால் தனக்கும் இதெல்லாம் வித்தியாசமாக தோன்றி இருக்காதோ?!’
“பிஸினஸ்ல இறங்கி ராத்திரி பகல்னு பார்க்காம வேலை பார்க்கிறேன், ஒரு தரம் செம ஸ்னோ… லண்டனுக்கு போன லாரி மோட்டர் வேயில ரெண்டு நாள் மாட்டிக்கிச்சு, லாரி பூரா வெஜிடபிள்ஸ், என்ன பண்ணுறது சொல்லு?” கணவனை யோசனையோடு பார்த்தாள் துளசி.
‘இவன் இப்போது என்ன பேசுகிறான்?’
“இப்பிடியெல்லாம் முட்டி மோதி அடுத்த லெவலுக்கு வந்தா… மொத்தத்தையும் எனக்குக் குடுன்னு ஆதேஷ் வந்து நிக்குறான்.” தன் சோகத்தைச் சொன்ன குரல் வருந்தவில்லை. ஆனால் துளசிக்கு வலித்தது.
“அம்மா ஒரு பக்கம் அழுறாங்க, அப்பா ஒரு பக்கம் இவன் எவ்வளவு பெரிய சுயநலவாதின்னு சத்தம் போடுறாங்க, நான் என்ன பண்ணுறது துளசி?”
“……………”
“உறவுகள்னா அப்பிடித்தான் துளசி, ஆதேஷ் விஷயத்துல பெருந்தன்மையா நடந்துக்கிட்ட என்னால… துளசி விஷயத்துல சுயநலமாத்தான் நடந்துக்க முடிஞ்சுது.”
“……………”
“அதுக்காக நான் கெட்டவன்னு அர்த்தம் இல்லை துளசி, இன்னைக்கு இப்பிடி நடந்துக்கிட்டதால நம்பி கெட்டவன் இல்லைடா.”
“நான் அப்பிடி சொல்லலை.”
“ஆனாலும் இன்னைய நடப்பை ஏத்துக்க நீ ரொம்பக் கஷ்டப்படுறே, இது நம்பி ஸ்வாதி மேல வெச்சிருக்கிற லவ், ஆசை, எதிர்பார்ப்பு… எப்பிடி வேணா வெச்சுக்கலாம்.” ஆதி பேசி முடிக்க துளசி லேசாக சிரித்தாள்.
“என்ன சிரிப்பு?”
“நல்லாவே உங்களை நியாயப்படுத்துறீங்க.” ஆதி லேசாக அசடு வழிந்தான்.
“நான் உண்மையைச் சொன்னேன் துளசி, ஆதேஷுக்கு பிஸினஸ்ல எந்த அனுபவமும் இல்லை, ஏதோ வைஃபோட பேச்சைக் கேட்டுக்கிட்டுப் பிடிவாதம் புடிச்சான்.”
“கோபம் வரலையா உங்களுக்கு?”
“பிச்சிக்கிட்டு வந்தது, ஆனா என்ன பண்ண முடியும் சொல்லு? அப்பாவையும் விஸ்வநாதன் அங்கிளையும் கூட இருந்து பார்த்துக்கங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன், அதுக்காக ஆதேஷை என்னால வெறுக்க முடியுமா துளசி?”
“அதான் அவங்களுக்கு பேபி வரப்போகுதுன்னு சொன்னப்போ அவ்வளவு சந்தோஷப்பட்டீங்களே!”
“ஆமா, நமக்கே ஒரு குழந்தைப் பொறந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ அவ்வளவு சந்தோஷமா இருக்கு துளசி.”
“……………..”
“க்ரோ அப் துளசி, நீ ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது, நாளைக்கே நாம ஆதேஷ் வீட்டுக்குப் போகும் போது நீ அவனை நான் இப்போ சொன்னதையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு ஒரு தினுசா பார்த்தா எனக்கு வலிக்கும்.”
“இல்லையில்லை…”
“தப்பே பண்ணி இருந்தாலும் அவன் என்னோட அண்ணா.”
“இதே வசனத்தை இப்போ நானும் சொல்லணுமோ?!”
“சொன்னா சந்தோஷப்படுவேன்…”
‘சொல்லேன் பெண்ணே! என்னதான் நீ தவறு செய்திருந்தாலும்… நீ என் கணவன், உன்னை என்னால் காதலிக்க மட்டும்தான் முடியும் என்று சொல்லேன்!’ ஆதியின் பார்வை மனைவியிடம் கெஞ்சியது.
ஒரு விசித்திரமான முறுவலோடு ரூமை விட்டு வெளியே போய்விட்டாள் துளசி