நிஹாரி-1

IMG-20211003-WA0016-4fb2f84f

நிஹாரி-1

ஹைதராபாத்!

இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக்கூடங்களையும் பெரும் வளர்ச்சியையும் உள்ளடக்கிய மாநகரம்.

உலகின் மிகப்பெரிய திரைப்படப் படிப்பகமான ராமோஜி திரைப்பட நகரமும், உலகின் மூன்றாவது இடத்தில் வசிக்கும் பெரிய தொழிற்சாலையான, ‘டோலிவுட்’ என்று பெயர்பெற்ற ஆந்திரத்திரைப்படத்துறை அமைந்துள்ளது.

தெலுங்கர்களுக்கு திரைப்படங்கள் என்றால் அவ்வளவு பிடித்தம் என்பதை இங்கு யாருக்கும் சொல்லத் தேவையில்லை. அவர்களின் திரைப்படங்களும் அள்ளித்தெளித்த கரம் மசாலாவாக இருக்க, அங்கிருக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் பஞ்சமில்லை.

ஹீரோவின் மாஸ் என்ட்ரியும், இரண்டு ஹீரோயின்களைக் கொண்ட கதையும், படத்தின் தொடக்கத்தில் ஹீரோவின் அசத்தலான சில சமயம், ‘என்னடா இது?’ என்ற சண்டைகளும், தவிக்க வைக்கும் குடும்ப சென்ட்டிமென்ட் காட்சிகளும், இடையிடையே வரும் நகைச்சுவைகளும், ஆடத்தூண்டும் பாடல்களும் என்று அறுசுவை போல அத்தனை கலவைகளும் தெலுங்கு படங்களில் உண்டு என்பதை மறக்க இயலாத கூற்று.

அவர்களது ஹீரோவின் டான்ஸிற்கும், கண் அசைவிற்கும், பன்ச் டயலாக்ஸிற்கும் வரும் விசில்களும், கைத்தட்டல்களும் வார்த்தைகளால் சொல்ல இயலாத ஒன்று. முதல் நாள் முதல் காட்சி உள்ளே சென்றவர்களுக்கு வெளியே வரும்போது காது கேட்குமா என்று கேட்டால் சந்தேகம் தான். அப்படியொரு சினிமா பிரியர்கள்.

இன்றும் அதேபோல திரையரங்குகளில் ஒரு முன்னணி ஹீரோ, ஹீரோயினின் படம் வெளிவந்திருக்க திரையரங்கே கலைகட்டிக் கொண்டிருந்தது. அதுவும் காலை நான்கு மணிக்கே ரசிகர்கள் காட்சி வைத்திருக்க, சொல்லவா வேண்டும்!

இரவே திரையரங்கு சென்று கொட்டம் அடித்துக்கொண்டிருந்தனர் நம் நாட்டை வல்லரசாக்க வேண்டிய இளைஞர்கள்.

நான்கு மணிக் காட்சியை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கு வெளியே வந்த ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய கருத்தைக் கேட்க, அந்த முன்னணி நாயகனின் ரசிகர்கள் அனைவரும் சூப்பர் டூப்பர் கருத்துக்களைத் தெரிவிக்க, படம் மெகாஹிட் என்பதை அங்கு நின்றிருந்த நந்தினி அறிந்துகொண்டு தன் அலைபேசியை எடுத்து ப்ரொடியூசருக்கு அழைத்தாள்.

ப்ரொடியூசர் என்றால் பெரிய கண்ணாடியை மாட்டிக்கொண்டு வெளியே வந்த தொப்பையும், தலையில் வழுக்கையும் விழுந்த நாற்பத்தைந்து வயதுடைய ஒருவர் அல்ல.

நந்தினி அழைத்தது ஒரு அழகுப் பதுமைக்கு. செல்வமும், வளமும், நிமிர்வும், அழகும் ஒருங்கே நிறைந்துள்ள இருபத்தைந்து வயதான ‘ஆலூரி நிஹாரிக்காவிற்கு’.

அடர் நீலமும், ஸ்டீல் க்ரேவும் கலந்திருந்த அறையில், ஆங்காங்கே செழிப்பாக ஜாமெட்ரிக் பார்ட்டனில் தங்க நிறம் கொடுத்திருக்க, அந்த அறையின் செல்வநிலையே கோடியைத் தாண்டிக் காட்டியது. ஒவ்வொரு பொருளிலும், இடத்திலும் அந்த அறையின் செழுமையைக் காணமுடியும்.

அறையில் பொருத்தப்பட்டிருந்த சென்ட்ரலைஸ்ட் ஏசி கொடுத்த குளுமையிலும் இதத்திலும், வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கிங் சைஸ் பெட்டில் ஆழப்புதைந்து உறங்கிக் கொண்டிருந்தாள் நிஹாரிகா.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு ஏதோ கனவு போல!

உறக்கத்திலும் மென்மையாய் புன்னகைத்தவளை, அவளது ஐ ஃபோன் சிணுங்கி அழைக்க, இதழில் தவழந்திருந்த புன்னகை சடுதியில் மறைந்தது நிஹாரிகாவிற்கு.

‘ச்சு!’ என்ற உச்சரிப்போடு எழுந்து ஃபோனின் திரையைப் பார்த்தவள், “யெஸ் நந்தினி” என்றாள் தன்னுடயை கம்பீரக் குரலில்.

“மேம், படம் மெஹாஹிட்” நந்தினி சொல்ல,

“ஹம், நாக்கு தெலுசு” என்றவள் நந்தினிக்கு அவ்வளவாக தெலுங்கு தெரியாது என்பதால் மீண்டும், “எனக்கு தெரியும்” என்றாள்.

“நந்தினி, எல்லாருக்கும் பேமென்ட் செட்டில் பண்ணிடு” என்று வைத்தவள் மணியைப் பார்க்க அது ஏழு நாற்பத்தைந்தைக் காட்டியது.

படுக்கையில் இருந்து இறங்கி தனது ஸ்டூஎட் நின்னா ருச்சட் ஸ்லிப்பரை அணிந்தவள் தனது குளியலறைக்குள் புகுந்தாள். படுக்கை அறையில் இருந்த அதே வர்ணங்களோடு, டிம் லைட் பொருத்தப்பட்டு, ஒருபக்கம் குளியலறைக்குள் வைக்கப்படும் ஆடம்பரப் பொருட்களும், மற்றொரு பக்கம் மரத்தில் செதுக்கப்பட்ட அலங்கார பொருட்களும், டிம் லைட்டிங்கை ரசிக்கும் வகையில், சில ப்ரான்டட் வாசனை திரவியங்களும் அறைக்குள் மிதமாய் மிதக்க, அனைத்தும் ஆடம்பரத்தை எடுத்துக் காட்டியது.

பாத்டப்பில் மிதமான சூட்டில் தண்ணீரை நிரப்பிய நிஹாரிகா சிறிது நேரம் அதில் இருந்தபடியே நேரத்தைக் கடத்தினாள்.

குளித்துமுடித்து பாத் ரோபை அணிந்து வெளியே வந்தவள் தலையை உலர்த்திவிட்டு, தனது ப்ளமிங்கோ பிங்க் ஜரி வோவன் டிஷ்யூ சில்க் சேலையை (FLAMINGO PINK ZARI WOVEN TISSUE SILK SAREE) எடுத்து சிங்கள் ப்ளீட்ஸை விட்டுக் கட்டிமுடித்து கண்ணாடியின் முன் நின்றாள்.

இடைவரை இருந்த கூந்தலை எடுத்து வேவி லோ போனிடெயிலைப் போட்டவள், அதிகமும் இல்லாத குறைவும் இல்லாத தேவையான ஒப்பனைகளை செய்துமுடித்து, தனது உடைக்கு ஏற்ற வெர்சேஸ் ரோஸ் கோல்ட் வாட்சை எடுத்துக் கட்டிக்கொண்டு கீழ் தளத்திற்கு இறங்கினாள்.

ஐந்தரை அடி உயரத்தில், பால் நிறத்தில் அழகுப் பெட்டகமாய், அதே சமயம் கம்பீரத்துடனும், சிறிய அளவான திமிருடனும் இறங்கி வந்து கொண்டிருந்த சின்ன எஜமானியைக் கண்டு பேசிக் கொண்டிருந்தவர்கள் வாய் கூட மூடிக்கொண்டது. அத்தனை ஆளுமை நிஹாரிகாவின் முகத்தில்.

இறங்கியவள் முதலில் சென்று வணங்கியது தனது பாட்டி வரலட்சுமியின் புகைப்படத்தை. கையெடுத்துக் கும்பிட்டு வணங்கிவிட்டு, நேராக தாத்தாவின் அறைக்குச் சென்றாள். வழக்கமாக அவ்வீட்டின் அனைத்து படுக்கை அறையுடனும் ஒரு லிவ்விங் ரூம் உண்டு. தாத்தாவின் அறைக்குச் சென்றவள் படுக்கை அறையை ஒட்டியிருந்த லிவ்விங் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கிருந்த கான்டினோ லார்ஜ் ஷோபாவில் அமர்ந்தவள் அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்து தங்களின் சேனலிற்கு மாற்றினாள். அவர்கள் படத்துடைய ரிவ்யூ தான் ஓடிக்கொண்டிருந்தது.

முகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ஏதோ செய்தியைப் போல் அவள் பார்த்துக் கொண்டிருந்தவள், “பங்காரம்(தங்கம்)” என்ற தாத்தாவின் விழிப்பில் திரும்பினாள்.

“தாத்தைய்யா” எனச் சிரித்தவள், “நம்ம படம் மெஹா ஹிட் தாத்தையா” என்றாள். (தாத்தாவும் பேத்தியும் தெலுங்கில் பேசுவதை சில இடங்களில் தமிழில் மாற்றப்பட்டுள்ளது).

“நீ கையில எடுக்கும்போதே தெரியும்டா பங்காரம்” என்றவர், “ஈரோஜு நுவ்வு சால அந்தங்கா கனிபிஸ்துன்னாவ்வு பங்காரம்(இன்னிக்கு ரொம்ப அழகாயிருக்க தங்கம்)” என்று நெட்டி முறித்தார். பாட்டி இருந்தவரை அவர் செய்ததை தவறாமல் தற்போது செய்து வருகிறார், ‘ஆலூரி சக்கரவர்த்தி’.

ஒரு காலத்தில் தெலுங்கு திரைப்படத்துறையை ஆண்டவர். இவரின் தந்தை தெலுங்கில் துணை நடிகராக இருக்க சக்கரவர்த்திக்கு சினிமா வாய்ப்பு சிறிது எளிதாகக் கிட்டயது. தனது நடிப்புத் திறமையாலும், ஸ்டைலினாலும் ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென்று கிடுக்கிப்பிடி போட்டு வைத்துக்கொண்டார். அவருக்குப் பெண் ரசிகர்களும் ஏராளம்.

அந்தக் காலத்திலேயே அவருடைய படம் தமிழ்நாட்டிலும் வெளியாக அவருக்கென்று அங்கும் ரசிகர்கள். அவரின் கால்ஷீட் கிடைக்கவே இயக்குனர்கள் பெரும்பாடுபட்டனர். வருடந்தோறும் ஆறு படங்கள் நடத்து வெளியாகி அனைத்திலும் ப்ளாக் பஸ்டர், மெஹாஹிட் கண்டு பணத்தை கேஸ் கேஸாக வீட்டிற்கு எடுத்து வந்து அடுக்கியவர்.

ஒருநாள் ஒரு விழாவிற்காக தமிழ்நாட்டிற்குச் சென்றவர் தன்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க வந்த வரலட்சுமியின் லஷ்மி கடாட்சமான முகத்தில் வீழ்ந்துதான் போனார். பின்னர் அவரைப்பற்றி தன் உதவியாளனை வைத்து விசாரித்து தந்தையிடம் சொல்லி அவரைக் கையும் பிடித்தார்.

முதலில் அவரின் ரசிகையாய் இருந்த வரலட்சுமிக்கு அவர்கள் வீட்டில் பெண் கேட்கவும் மயக்கம் வராத குறைதான். பெரியவர்களால் திருமணம் உறுதி செய்யப்பட, அவருக்கு திருமண நாள் நெருங்க நெருங்க படபடப்பு. ஏதோ கனவுலகம் போலிருந்தது அவருக்கு.

சக்கரவர்த்தியின் புகழும், பணமும் அச்சத்தையும் அவ்வப்போது தருவது
போலிருந்தது அவருக்கு. ஆனால், திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய காதல் கடலால் மனைவியை மூழ்க வைத்தவர், அவரை ஒரு குறையும் வைக்காமல் பார்த்துக்கொண்டார்.

நாளடைவில் நடிப்புடன் பாடல் எழுதுவது, பாடுவது, படம் தயாரிப்பது என்ற வழிகளில் கால் பதித்த சக்கரவர்த்தி அதிலும் தோற்றது இல்லை. சொல்லப்போனால் சக்கரவர்த்தி சக்கரவர்த்தியாக வலம் வந்தார் சினிமாத் துறையில். எவ்வளவு சேர்த்தார் என்று கேட்டால் அவருக்கே தெரியாது. அந்தளவு பணம் கொட்டிக் கிடக்கிறது.

நிஹாரிகா அவர்களின் மகள்வழிப் பேத்தி. பேத்தியின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். மனைவியின் அச்சைப்போல இருக்கும் பேத்தியின் மேல் அவ்வளவு பிரியம் அவருக்கு. அவள் கேட்டு அவர் ஒன்றும் மறுத்ததாக இல்லை. அவர் வற்புறுத்தி அவளை அனுப்பி வைத்த ஒரே விஷயம் தனது, “ஸ்ரீ லஷ்மி புரொடக்ஷன்ஸ்”ஐ தலைமை தாங்கத் தான்.

நிஹாரிகாவிற்கு சினிமாத்துறை என்றாலே அலர்ஜி. சோஷியல் டிஸ்டன்ஸ் கூட வைத்திருக்க பிடிக்காமல் அந்தப் பக்கமே தலை திருப்பாமல் இருந்தவள் ஒரு காலத்தில். படம் பார்க்கப் பிடிக்கும். ஆனால், உள்ளே நுழைய சிறிதும் அவளிற்கு விருப்பம் இருந்ததில்லை. அப்படியிருந்தவளை தாத்தா கொஞ்சிக் கொஞ்சியே அதில் காலடி எடுத்து வைக்க வைத்துவிட்டார்.

தாத்தாவும் பேத்தியும் காலை உணவிற்கு வந்தமர தாத்தாவிற்கு மசாலா இட்லியும் அதற்கு காரசாரமாக தொட்டிற்கொள்ள சட்னிகளும் இருக்க, நிஹாரிகாவிற்கு காலை எப்போதும் போல ப்ரூட் கஸ்டர்டும் இருக்க காலை உணவை இருவரும் சிரித்தபடி உண்டு கொண்டிருந்தனர்.

பொதுவாக அவ்வீட்டில் உண்ணும்போது வேளையாள் யாரும் டைனிங் ஹாலில் நிற்க மாட்டார்கள். டைனிங் டேபிளின் நடுவே வட்டமாக சுற்றும் அட்டாச்ட்டில் பதார்த்தங்களை வைத்திருக்க அதைச் சுற்றிவிட்டால் அது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நபருக்கு அருகே வரும். அதுவுமில்லாமல் தாத்தாவிற்கும் பேத்திக்கும் அவர்கள் பேசும்போது யாரும் இடையில் வந்தால் பிடிக்காது.

“இன்னிக்கு விவாஹா பர்த்டே பங்காரம்” சக்கரவர்த்தி சொல்லி பேத்தியின் முகத்தை ஆழந்து பார்த்தார்.

ஸ்பூனில் எடுத்து தாத்தாவுடன் சிரித்தபடி உண்டு கொண்டிருந்த நிஹாரிகாவின் சிரிப்பு அப்படியே வடிந்து இறுக்கத்தைத் தத்தெடுத்தது. சில நொடி ஸ்பூனால் பௌளை அளந்தவள் மீண்டும் உண்ணத் தொடங்கினாள்.

“ஃபோன் போட்டு பேசலாமே பங்காரம்” தாத்தா சொல்ல,

கடைசி வாயை எடுத்து வாயில் போட்டு உண்டு முடித்தவள், “ஸாரி தாத்தையா” என்று எழுத்துகொண்டாள்.

இதில் மட்டும் பேத்தி எப்போது மாறுவாள் என்று நினைத்து சலிப்புத் தட்டியது அவருக்கு. என்ன செய்தும் அவளை மாற்ற முடியவில்லையே. ஏன் அதைப் பற்றியப் பேச்சைக் கூட நயமாக மறுத்துவிடுகிறாளே.

ஒருநாள் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையோடு தனக்காக வைத்திருந்த ராகிக்கூழை எடுத்து அருந்திவிட்டு வரவேற்பறைக்கு வர நிஹாரிகா தனது புடவைக்கு ஏற்ற நிறத்தில் ஒரு ரோஸ் கோல்ட் வாலட்டோடு வந்தாள்.

புன்னகையோடு அவர் பேத்தியைப் பார்க்க, “தாத்தையா! நான் நம்ம சேனலுக்குப் போயிட்டு நம்ம புரொடக்ஷன்ஸுக்கு போயிட்டு வந்திடறேன்” என்றவள் வழக்கம்போல அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டு வாயிலை நோக்கி நடந்தாள்.

வீட்டின் வாயிலை அடைந்தவள் தன்னுடைய சிவப்புநிற ஐ பேஸ் ஜாக்குவாரை எடுக்க அவளிற்காகவே சக்கரவர்த்தி ஏற்பாடு செய்திருக்கும் பாதுகாவலர்கள் அவளைப் பின் தொடந்தனர் அவர்களுடைய காரில்.

காரில் பறப்பது என்பது நிஹாரிகாவிற்கு பிடித்த ஒன்று. அதனாலேயே டிரைவரை வைத்துக்கொள்ள மாட்டாள். அதுவும் தனக்குப் பிடித்த ஜாக்குவாரை அவளே தான் இயக்குவாள்.

“ஐ டெலிவிஷன்” முன்பு காரை நிறுத்திய நிஹாரிகா, வாலட்டையும் கார் கீயையும் உருவிக்கொண்டு இறங்க, அதற்குள் அவளது பாதுகாவலர்கள் வந்து அவளை யாரும் நெருங்க விடாதபடி சூழந்துகொண்டனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, நிஹாரிகாவும் சென்றிருக்க அவளை க்ரஷ் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டனர் வாலிப இளைஞர்கள். அதிலிருந்து அவளிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது சக்கரவர்த்தியால்.

ஹீரோயின்களையே மிஞ்சும் அழகில் இருந்தவளை யாருக்குத் தான் பிடிக்காமல் போகும். சிறு வயது முதலே அழகாய் இருந்தவளுக்கு இப்போது அறிவும், கம்பீரமும் சேர்ந்துவிட சொல்லவே தேவையில்லை. நிருபர்கள் சூழ்வதற்குள் அவளை உள்ளே அழைத்துச் செல்ல, சிங்கிள் ப்ளீட்ஸாக விட்டிருந்த சேலைத் தலைப்பை ஸ்டைலாக முன்னே இழுத்து நுனிவிரல்களில பிடித்திருந்தவள், புன்னகை முகம் மாறாமல் உள்ளே நுழைந்தாள்.

வேவி போனிடெயில் அசைந்தாட நேரான நடையுடன் கம்பீரமாகவும், அதே சமயம் சுறுசுறுப்பான நடையுடன் வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து அனைவரும் தன்னால் எழுந்து நின்று அவளிற்கு வணக்கத்தைத் தெரிவித்தனர். தலையசைப்புக் கூட இல்லாமல் அதே சமயம் திரும்பிப் பார்க்காமலேயே யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவள் நேராக தன் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் நந்தினியை அழைக்க உள்ளே நுழைந்தாள்.

“குட்மார்னிங் மேம்” நந்தினி.

“குட்மார்னிங் நந்தினி… ஓகே டெல் மீ வாட்ஸ் தி ப்ராப்ளம்” நிஹாரிகா வினவ நந்தினி அதிர்ந்தாள். ‘எப்படி வரும்முன்னே அதுவும் நாம் சொல்லும் முன்னே அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்’ பிரம்மித்தாள்.

“வாட் நந்தினி… வாயே திறக்க மாட்டிறீங்க… தெலுங்குல கேட்கணுமா?” நிஹாரிகா கேட்க, நந்தினி ஒப்பிக்கத் தொடங்கினாள்.

இன்று வெளிவந்திருந்த படத்தின் கதாநாயகன் தொகையை அதிகம் கேட்பதாகவும், அதுவும் இல்லாமல் நிஹாரிகாவை சந்திக்க வேண்டும் என்றும், குடுக்கும் தொகையையும் வாங்க மறுப்பதாகவும் நந்தினி சொல்ல, முகத்தில் எந்தவித பிரதிபலிப்பையும் காட்டாமல் இருந்தவள், “மீரு இப்படு வெல்லவச்சு(நீங்க இப்ப போகலாம்)” நிஹாரிகா.

வந்ததில் இருந்து சிறிது தெலுங்கு புரிய ஆரம்பத்ததில் நிஹாரிகா சொன்னதை புரிந்துகொண்ட நந்தினி அங்கிருந்து அகன்றாள்.

ஒரு புதுவித நிகழ்ச்சி ஆரம்பிப்பது பற்றி டெவலப்பர் என அனைவரையும் அழைத்து மீட்டிங்கைத் தொடங்கியவள், அடுத்த அரைமணி நேரத்தில் வெளியேவர, நந்தினி நிஹாரிகாவின் கண் அசைவிலேயே அவள் பின் சென்றாள்.

அவளின் அருகே காரில் ஏறி நந்தினி அமர, நிஹாரிகா காரை அதிவேகத்தில் எடுத்தாள். அவளின் வேகத்தில் சற்று பயந்துதான் போனாள் நந்தினி. அதே சமயம் ஸ்டியரிங்கை தனது கன்ட்ரோலில் வைத்திருந்தவளின் அறிவும், தெளிவும், தொழில் நுணுக்கங்களும் என அனைத்தும் நந்தினியை மிரள வைத்துக்கொண்டிருந்தது.

நேராக சென்று நிஹாரிகா தங்களது புரொடக்ஷனில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைய நந்தினி ஓடாத குறைதான்.

உள்ளே நுழைந்தவள் புயலாகச் செல்ல அவள் வரும் தகவலை முன்பே அறிந்து அங்கு வேலைகள் பரபரப்புடன் நடந்துகொண்டிருந்தது.

தன்னறையின் முன் இன்று வெளியான படத்தின் நாயகன், “ஆத்விக் உப்பல்லபதி” கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்க, நிஹாரிகா அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

அவனின் மேல் ஒரு அலட்சியப் பார்வை வீசியவள், “அதான் எல்லாம் செட்டில் பண்ண சொன்னனே நந்தினி… அப்புறம் ஏன் இங்க எல்லாம் வர்றாங்க… அதுவும் எந்த அப்பாயின்ட்மெண்ட்ஸும் இல்லாம” தெலுங்கில் அவன் காதில் விழுமாறு பேசிக்கொண்டே நிஹாரிகா தன்னறைக்குள் நுழைந்தாள்.

தனது இருக்கையில் அமர்ந்தவள் ஆட்காட்டி விரலால் நெற்றியில் யோசித்தவாறு, “கால் ஹிம் நந்தினி” என்றாள்.

நிஹாரிகாவிற்கு எரிச்சலாக இருந்தது. ஆத்விக்கைப் பற்றி அவளிற்கு நன்கு தெரியும். தந்தைக்குப் பின் நடிக்க வந்தவன். அதனால் சிறிய வயதில் இருந்து அவன் வளர்ந்திருந்த விதம் எடுத்துரைக்கத் தேவையில்லை. அவனுடன் நடிக்கும் கதாநாயகிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்பவன். அதை நேராக ப்ரொடியூசரிடமே வாய்கூசாமல் கேட்டுவிடுபவன்.

இப்படத்திலும் அவன் நிஹாரிகாவை அறியாமல் தனது பிஏவின் மூலம் அதைக் கேட்டிருக்க நிஹாரிகா, “இந்த படத்தில் நடிக்க மட்டும் தான் வரணும்…” ஒரே வரியில் முடித்துக்கொள்ள நிஹாரிகாவின் திமிரான பதிலில் ஆத்விக்கின் கோபம் ஒருபுறம் என்றால், நிஹாரிகாவின் மேலேயே ஒரு கண்ணும் வந்திருந்தது.

அவள் அவ்வப்போது ஷீட்டிங்கிற்கு வரும்போதெல்லாம் கழுகுப்பார்வை பார்க்க ஆரம்பித்தான். இம்மாதிரி பார்வைகள் இந்தத் துறையில் ஏராளம் என்பதை அறிந்திருந்த நிஹாரிகா அவனையெல்லாம் குப்பையாக எண்ணி கடந்து கொண்டிருந்தாள்.

உள்ளே நுழைந்த ஆத்விக், “ஹாய், நிஹாரிகா” என்று கைநீட்ட தனது ஐபோனில் இருந்தவள் கண்களை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தாளே தவிர கை குலுக்கவில்லை. அவளது பார்வையே, ‘நான் கை குலுக்கக்கூட நீ தகுதியில்லாதவன்’ என்று பறைசாற்ற அவனின் முகம் அவமானத்தில் இருண்டது.

முகத்தை சடுதியில் மறைத்தவனிடம் உட்காரும்படி சைகை செய்தவள், “ஏமி விஷயம்(என்ன விஷயம்)?” வினவினாள்.

“நத்திங் நிஹாரிகா”.

“…” கேள்விப் பார்வை பார்த்தாள்.

“உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்”

“…” கேலியாய் ஒரு புன்னகை நிஹாரிகாவிடம்.

“கேன் வி ஹேவ் எ டேட்” ஆத்விக் வெளிப்படையாக வெளியே டேட்டிங்கிற்கு அழைத்தான்.

“வாட்? கம் அகைன்” நிஹாரிகா கேலிக்குரலில் கேட்ட விதத்தில் அவன் மீண்டும் கேட்கவே தயங்கினான்.

“ஸீ மிஸ்டர் ஆத்விக்… உங்க நானாவிற்காகத்(அப்பா) தான் இத்தனை மரியாதை தந்து உள்ளே விட்டிருக்கேன்…” என்றவள் அவனை ஆழ்ந்து நோக்க, ஆத்விக்கோ அவளின் பார்வையின் ஆளுமை தாளாமல் பார்வையை திருப்பினான்.

அவனை சொடக்கிட்டு தன்னை நோக்கச் செய்தவள், “என்கிட்ட வந்து என் இடத்திலேயே இப்படி பேச, எப்படி இவ்வளவு தைரியம் வந்துச்சு ஆத்விக்?” கேட்க,

“ஜஸ்ட் டேட்டிங் கேட்டதுக்கு எதுக்கு இப்படி ரியாகட் பண்ற நிஹாரிகா” ஆத்விக் நிஹாரிகாவின் பின்புலம் அறிந்தவனாய் லேசாக பம்மினான்.

“ஹோ ஐ ஸீ… ஆத்விக் ஐ நோ யூ… உன்னுடைய டேட்டிங் பத்தி இந்த இன்டஸ்ட்ரீல இருந்துட்டு எனக்குத் தெரியாதா?” நக்கலாய் உரைத்தவள்,

“நான் நினைச்சா நீயெல்லாம் இருக்கிற இடமில்லாம ஆக்கிட முடியும்” அழுத்தமாக மிரட்டும் தொனியில் நிஹாரிகா பேச, ஆத்விக்கிற்கு லேசாகக் குளிரெடுத்தது அவளின் அச்சமில்லாத, அதே சமயம் அனலைக் கக்கும் பார்வையைக் கண்டு.

‘ஒரு பெண்ணிடம் தோற்றுப் போவதா’ கீழ்த்தரமான எண்ணம் வேறு எழுந்தது.

ஆனால், எதிரில் இருப்பவளிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டால் தொலைத்துவிடுவாள் என்று அவனிற்குத் தெரியும்.

நிஹாரிகா நந்தினியை உள்ளே அழைக்க அவள் சொல்லும் முன் எழுந்துவிட்டான் ஆத்விக்.

“ஆத்விக், பேமென்ட் நந்தினி உங்க பிஏகிட்ட செட்டில் பண்ணுவாங்க…” நிஹாரிகா சொல்ல, தலையசைப்புடன் கிளம்பிவிட்டான்.

அவன் வெளியில் முகம் செத்துப் போவதைப் பார்த்த நந்தினிக்கு லேசாக சிரிப்பு வந்தது.

“ம்கூம்” செறுமிய செறுமலில் நந்தினி நிஹாரிகாவிடம் பட்டென்று திரும்பினாள்.

“நந்தினி, நான் சொல்ற வொர்க்ஸ் நோட் பண்ணிக்கங்க” என்றவள் வரிசையாகச் சொல்லி முடித்தாள்.

நிஹாரிகாவின் இன்டர்வியூ அடுத்து இருந்தது அவர்களின் சேனலில். அவள் மீண்டும் அங்கு செல்ல இயலாது என்பதால் அவர்களுடைய புரொடக்ஷன் ஹவுஸிலேயே ஒரு இடத்தில் செட்டிங் அமைத்திருந்தனர்.

நிஹாரிகா அங்கு சரியான நேரத்திற்குச் செல்ல படக்குழுவே அங்கிருந்தது. இயக்குனர், ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், வில்லன் என்றிருக்க நிஹாரிகாவும் கலந்து கொண்டாள். எதுவுமே நடக்காதது போல ஆத்விக்கிடம் அனைவரின் முன் ஒரு தலையசைப்பும்.

அங்கிருந்த பெண் நிஹாரிகாவிற்கு அவளது சேலையில் மைக்கை பொருத்திவிட ஆத்விக்கோ நிஹாரிகாவை கழுகாய் கவனித்தான். அவளின் கழுத்திலிருந்த செயினின் பென்டன்ட்டில், கல்லினம் வைரம் உறவாடிய இடத்தைப் பார்த்தவனிற்கு மோகத்துடன் கூடிய பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.

ஏதோ உறுத்திய நிஹாரிகா திரும்ப அவன் பார்வையை திருப்பிக் கொண்டான். இயக்குனர் அருகில் அமர்ந்த நிஹாரிகா, கேட்ட கேள்விகளுக்கும் ஷூட்டிங்கில் நடந்த நிகழ்வுகளை பகிரவும் என ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை பகிர கலகலப்பாக முடிந்தது.

அனைவரிடமும் இன்முகத்துடன் விடைபெற்று தன்னறைக்குள் நுழைந்தவளை அவளது அலைபேசி சிணுங்கி அழைத்தது. ஃபோனின் திரையைப் பார்த்தவளிற்கு சலிப்புத் தட்டியது.

ஃபோனை எடுத்தவள், “சொல்லுங்க” என்றாள் தமிழில்.

“இன்னிக்கு…” அவர் அந்தப்பக்கம் தொடங்க படீரென்று ஃபோனை வைத்துவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

மீண்டும் ஃபோன் சிணுங்க, திரையைப் பார்த்தவளின் முகத்தில் புன்னகையின் சாயல்.