நிஹாரி-12

IMG-20211003-WA0016-5bfdb7d5

நிஹாரி-12

சென்னையிலுள்ள அந்தக் கல்லூரி வளாகம், மாலை மங்கும் ரம்மிய
வேளையில் அனைவரின் மனதையும் கவர்ந்து, அங்கிருப்போரை
சுண்டியிழுத்து மயக்கிக் கொண்டிருந்தது.

வெல்கம் பார்ட்டியையே கல்ச்சுரல்ஸ் போல காட்டிய அலங்காரங்களும்,
கண்ணை பறிக்கும் அளவிற்கு நடைபாதையில் வைத்திருந்த, அழகிய
மஞ்சள் சுடர்விட்ட விளக்குகளும், ஒரு பக்கம் பஞ்சுமிட்டாய் நிறமும் க்ரீம்
நிறமும் வரிவரியாகக் கலந்து, கூடாரம் ஒன்றை அமைத்து, உள்ளே
விதவிதமான ஃபுட் ஸ்டால்களும் என்று அசத்திக் கொண்டிருந்தனர்
அந்தக் கல்லூரியின் இறுதிவருட மாணவ மாணவிகள்.

ஈவென்ட்ஸில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவர்களும், தங்களை
வகுப்பறையில் தயார் செய்து கொண்டிருக்க, முதலில் சிங்கிங்(singing)
இல் இருந்து நிகழ்ச்சிகள் தொடங்கியது.

ராப் சாங்க்ஸ், ஹிப்ஹாப், மெலோடிஸ், ஃபோக், பாப் என்று தொடங்கி
கர்நாடக சங்கீதம்வரை சென்று, இனிமை கீதமாய் கூடியிருந்தோர்
அனைவரின் செவியிலும் இதமாய் ஊடுருவ, ஒவ்வொருவரின்
திறமைக்கும் கைதட்டல்களும், கரகோஷங்களும், விசில்களும்
ஆடிட்டோரியத்தைத் பிய்த்துக் கொண்டு பறந்தது.

அடுத்து ட்ராமா நடக்கத் துவங்க, இங்கு வகுப்பறையில் நடனத்திற்கு
குதுகாலமும், குறும்பும் போட்டிபோட தயாராகிக் கொண்டிருந்த
அனைவரும், விளையாட்டுத் தனத்தை விட்டுவிட்டு அரக்கப்பரக்கத்
தயாராகத் தொடங்கினர்.

அடுத்து நடன நிகழ்ச்சி அல்லவா!

காலியாக இருந்த வகுப்பறையில், தன் அன்னையிடம் ரிஷ்வந்த்
பேசிக்கொண்டிருந்தான்.

“ம்மா வர லேட்டாகும். அப்பாக்கு ஃபோன் பண்ணேன் எடுக்கல. அதான்
உங்களுக்கு கூப்பிட்டேன்” ரிஷ்வந்த் அன்னையிடம் தெரிவிக்க,

“ஏன் ரிஷிப்பா. இன்னும் முடியலையா?” கயல்விழி வினவ,

“ஆமா ம்மா. லேட் ஆகும்போல” அங்கிருந்த மேஜையின் மேல் ஒரு
காலைத் தரலையிலும், மற்றொரு காலை தொங்கும் நிலையில் வைத்து
ஸ்டைலாய் அமர்ந்தவன் அன்னையிடம் உரையாடிவிட்டு வைக்க,

“ரிஷ்வந்த், நல்லா இருக்கா?” நிஹாரிகாவின் குரலில் தலையை மட்டும்
திருப்பி அவளைப் பார்த்தவன், விழி மூடாமல் இமை அசையாமல்
அவளைக் கண்டான்.

செர்ரி நிற சிகப்பு நிறத்தில் ஸ்லீவ் லெஸ் ஃபுல் மேக்ஸி(SLEEVELESS
FULL MAXI) அவள் அணிந்திருக்க, குயின் ஆனி(QUEEN ANNE)
நெக்லைன் டிசைன் அவள் கழுத்திற்கு கீழிருந்து தொடங்கி, அழகிய
மார்பில் ஏறி இறங்கி, இடைவரை இறுக்கயமாய் கவ்வி, ‘உன் உடலை
விட்டு நீங்கமாட்டேன்’ என்பதுபோல் உடை உடலோடு காதலுடன்
ஒட்டியிக்க, இடையிலிருந்து இறுக்கம் தளர்ந்து, அவள் பாதம்வரை
அழகாய் வழவழப்போடு வழிந்திருந்தது பாவையின் மேல்.

இடைவரை இருந்த கருங்கூந்தலை லூசாகவிட்டு செட் செய்து
வைத்திருந்தாள்.

உடைக்கு ஏற்றார்போல் ஒற்றை சிவப்பு நிற கல் வைத்த மெலிதான
செயின், அவள் கழுத்தில் இருந்து சற்று கீழிறங்கி பளபளத்துக்
கொண்டிருந்தது.

அதேபோல ஒற்றை சிவப்புக்கல் வைத்தத் தோடு.

புருவங்களின் மத்தயின் மிகச்சிறிய சிவப்புப் பொட்டு.

கண்களின் மேல் அவளின் விழிகளை இன்னும் எடுத்துக்காட்டும்
விதமாய் விங் வைத்து ஐ லைனர் போடப்பட்டிருந்தது.

அதற்குக் கீழே, செவ்வரளி இதழ்களில் இரத்தச் சிகப்பு உதட்டுச் சாயம்.

தேவலோகத்தில் இருந்து வந்தவள்போல் இருந்தவளை, ஊசிமுனை
போல விழிகளைக் கூர்மையாக்கி, ரிஷ்வந்த் அசையாது அதே
நிலையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, தன்னையே
பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தவனைக் கண்டவளின் உடலில்
உள்ள ஒவ்வொரு அணுவும் நாணத்தை நிரப்பிக்கொண்டது.

பதில் ஏதும் சொல்லாமல் தன்னையே பார்த்திருந்தவனின் பார்வையில்,
உள்ளுக்குள் ஆயிரம் பூ ஒரே நேரத்தில் பூப்பது உணர்ந்து பூரித்தவள்,
வயிற்றுக்குள் படபடக்கும் உணர்வுகளை அடக்கி, கன்னங்கள்
செந்தணலாய் சிவப்பதை மறைத்தபடி, திரும்ப எண்ண, இருவரையும்
இடியாய் இறங்கி அதிர வைத்து, அதிர்ச்சியில் ஆழ்த்தியது அடுத்து
நடந்த அழகிய விபரீதம்.

நிஹாரிகா திரும்ப அவளின் உடையின் முதுகுப்புறம் வைத்திருந்த ஜிப்
சரியாகப் போடப்படாததாலும், இறுக்கத்தின் காரணத்தாலும், சட்டென்று
பிரிந்து கீழிறங்க இதை எதிர்பாராத இருவருமே அதிர்ச்சியின்
சிகரத்தைத் தொட்டனர்.

தன் மனதில் நிறைந்திருப்பவன் என்றாலும், திடீரென ஒரு ஆண்மகன்
முன்னால், அதுவும் அவன் பார்க்கும்போது ஏற்பட்ட இந்நிகழ்வில்,
இதயம் பன்மடங்காகத் துடித்து அதிர, அங்கே இருந்த சுவற்றில் தன்
முதுகை மறைத்து சுவற்றோடு ஒட்டி நின்றுவிட்டாள்.

அவளின் நிலையே இதுவென்றால், அவனின் நிலை வேறாக இருந்தது.

வகுப்பைவிட்டு வெளியேற நினைத்தவளை, அழைக்க நினைக்கும்
போது நடந்த நிகழ்வில் அதிர்ந்தவன், மேசையில் இருந்து மின்னல்
வேகத்தில் குதித்தான்.

யாருமில்லாத வகுப்பு என்பதால் லைட் எதுவும் போடப்படாமல் இருக்க
இருட்டில் நின்றுதான், அவன் கயல்விழியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
இருள் தொடங்கியிருந்த வேளையில், தன்முன் ரெட் வெல்வட் கேக்
போல மெழுகு சிற்பமாய் வந்து நின்றவளின் அழகில், ஏற்கனவே அவள்
அழகில் சொக்கியிருந்தவனின் மனம் இப்போது மண்டியிட்டது.

அடுத்து அவளது ஜிப் பிரிந்ததிலும், அவள் நின்ற கோலத்திலும், ஒரு
நிமிடம் தெரிந்த அவளின் வெண்ணியில் போட்டு எடுத்ததுபோல பளீர்
நிறத்தில், இருளில் கசிருந்திருந்த வெளிச்சத்தில், தெரிந்த பளபளத்த
முதுகிலும், அதில் மிளகு அளவு தெரிந்த மச்சத்திலும், மொத்தமாய்
உறைந்து சில்லிட்டுப் போனான், அவளின் மனம் கவர்ந்தவன்.

அதுவும் அடுத்த நொடியே சுவற்றோடு சென்று பல்லிபோல ஒட்டி,
தலைக்குனிந்து நின்றவளைக் கண்டு அவனுக்கு மென்முறுவலே
அதரத்தில் சிறிதாய் நெளிந்தது.

அவள் நாணத்திலும் அச்சத்திலும் துடிதுடித்து நின்றிருந்த விதம் அவன்
மனதில் ஆழமாய், அழகாய், அடக்கமாய், நாணத்தில் சிவந்திருந்த
நாசியை வைத்து அஞ்சுகமாய், இந்த அடங்காத அஞ்சிட்டனின்
நெஞ்சில் அச்சாய்ப் பதிந்தது.

ஒரு நொடி அவன் மனதை இளமை உணர்வு ஆட்கொண்டாலும், அவள்
ஓடிச்சென்று சுவற்றில் ஒன்றிய விதத்தில், அனைத்தும் அழிந்தது
அவளின் மேல் அவன் வைத்த காதலால்! பிரம்மன் போட்ட முடிச்சால்!

ரிஷ்வந்தின் நிஹாரிகா.

இதற்காகத் தானே அவளை பிரம்மன் தன் மொத்த வித்தையையும்
கொட்டி, மெனக்கெட்டு அவனிற்காக, அவனவளை அழகே சொக்கி
பொறாமைப்படும் வண்ணம் படைத்தது.

“ரி.. ரிஷ்” அவள் திக்கித்திணறி ஏதோ பேச வரும்முன் வெளியே
சென்றுவிட்டான்.

அவன் சென்றபின் இருநொடி கழித்து வந்த சக்தியை முறைத்தவள்,
“ஏன்டி ஜிப் போட்டு விட்டியே.. மேல ஹூக் யாரு போட்டுவிடுவா. க்ரிப்
இல்லாம அப்படியே கீழ இறங்கிடுச்சு” சக்தியைத் திட்டுக்கொண்டே
வந்தவளின் குரல், இறுதி வரியை சொல்லும்போது மட்டும் ஏதோ
குலறியதுபோல் ஆனது.

“ஸாரிடி..” என்றவள், அவளைத் திரும்பச் சொல்லி ஜிப்பை மேலே
ஏற்றிவிட்டு ஹூக்கையும் போட்டுவிட்டாள்.

அவள் போட்டுமுடித்தவுடன் இருவரும், அனைவரும் இருந்த
வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

வகுப்பறைக்குள் நுழைந்த நிஹாரிகா ரிஷ்வந்தின் அருகில் நின்றாலும்,
அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. நாணிக்கோணி
நெளிந்துகொண்டு அவஸ்தையாய் நின்றிருந்தாள்.

அவளின் முகமாற்றங்களையும், உதடு துடிப்புகளையும், கன்னக்
கதுப்புகளையும், உடல் கோணியதையும் உணர்ந்தவன், கர்வமாய் தன்
இதழ்களில் மென்புன்னகையை தத்தெடுக்க, இருவரையும் பார்த்துக்
கொண்டிருந்த கவினிற்கும் சேர்ந்து ஏதோ வெட்கம் வந்தது.

‘இவனுக லவ் பண்றாங்க. இவனுக வெக்கப்படறாங்க. நம்ம ஏன்
சம்மந்தமே இல்லாம வெக்கப்படறோம்’ என்று சிங்கிள் சின்னசாமியாக
மனதிற்குள் சிணுங்கிக்கொண்டவனுக்கு, முதன்முதலாய் காதலில்
ஆர்வம் பிறந்தது.

“ஹே, பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட் டான்ஸ் போயிட்டாங்க. அடுத்து நம்ம
தான்” தியா சொல்ல மொத்த வகுப்பே நடனத்தைக் காண
ஆடிட்டோரியம் புறப்பட்டது.

சக்தி, பிருந்தாவுடனே நடந்து வந்து கொண்டிருந்தாலும், தன் பின்னால்
நண்பர்களுடன் பேசியபடியே வரும் ரிஷ்வந்தை அவ்வப்போது
திரும்பிப் பார்த்தாள் நிஹாரிகா.

அவள் அணிந்திருப்பதிற்கு ஏற்ப, அதே செர்ரி நிறத்தில் சட்டை
அணிந்து, அதில் முதல் பட்டனிற்கு விடுதலை அளித்திருந்தவன், வைட்
ஜீன்ஸ் அணிந்து, சிகையை ஜெல் வைத்து செட் செய்திருந்தான்.

நேரான நடையுடன், அழகும் வசீகரமும் எனக்கே எனக்கு என்று
அவனிடம் நிறைந்திருக்க, அவனிடமிருந்து பார்வையைத் திருப்ப
மிகவும் சிரமப்பட்டாள் அந்த அழகிய மங்கை.

ஆடிட்டோரியம் வர அவர்களது நடனத்திற்கு தயாராகினர்.

அனைத்து டிபார்ட்மெண்ட்ஸும் ஆடவேண்டும் என்பதால், ஒரு
வகுப்பிற்கு நான்கு நிமிடம் ஐந்து நொடிகள் தான் தந்திருந்தனர்.
முதலில் ட்ரிப்ளட், அடுத்து க்ரூப் டான்ஸ், அடுத்து டூயர் என்று
பிரித்திருக்க, ஒரு நடனத்திற்கு ஒரு நிமிடம் ஐம்பது நிமிடங்கள்
எடுத்திருந்தனர்.

முதலில் ட்ரிப்ளட். மூன்று பெண்கள் ஆடத்தொடங்க, உடலில் ஒருபக்கம்
பரதமும், உடலின் மறுபக்கம் வெஸ்டர்னும் வைத்து ஆட, பரதத்தில்
அவர்கள் நளினமும், வெஸ்டர்னில் அவர்கள் வேகமும் என்று இரண்டும்
கலந்து மேடையைக் கலக்க, அவர்களின் இந்த முயற்சியிலும்
நடனத்தின் நேர்த்தியிலும், கைதட்டல்கள் ஆடிட்டோரியத்தைத் தாண்டிப்
பறந்தது. அவ்வளவு அழகாக ஆடி முடித்திருந்தனர்.

அவர்கள் முடிக்கவும் மேடையின் இருபக்கத்திலும் இருந்து, அவர்கள்
வகுப்பிலிருந்து குரூப் டான்ஸில் இருந்தவர்கள் அழகாய் வர, மூன்று
பெண்களும் பின்னால் ஆடியபடியே நகர்ந்தனர்.

அவர்கள் நகர்ந்தவுடன் குரூப் டான்ஸில் இருந்தவர்கள், “V” வடிவில்
நின்று குத்துப் பாடல்களுக்கு ஆடத்துவங்க, அரங்கமே அவர்களுடன்
சேர்ந்து ஆடத் தொடங்கியது.

இளம் இரத்தங்கள். அதுவும் சுதந்திரத்துடன் சிறகை விரித்துப் பறக்கும்
கல்லூரிப் பருவம்.

தாம்தூமென்று மேடையில் இருந்தவர்களும் சரி, மேடையின் கீழ்
இருந்தவர்களும் சரி, குதித்த குதியில் நிலநடுக்கம் வந்துவிட்டதோ
என்று மற்றவர் அதிரும் வகையில் இருந்தது அந்த ஆடிட்டோரியத்தின்
உள்.

குரூப் டான்ஸ் முடிவுக்கு வரவும், மேடையில் ஏறும்போது வந்ததுபோல
பன்னிரெண்டு பேரும் மேடையின் முன் ஒரே கிடைமட்ட(horizontal)
வரிசையில் நின்றவர்கள், ஆறு பேராய் பிரிந்து ஆடியபடி இடமும்
வலமும் நகர, ரிஷ்வந்தும் நிஹாரிகாவும் கீழே பார்த்தபடி கைகோர்த்து
நிற்க, ஆடிட்டோரியத்தின் கீழே இருந்த விளக்குகள் அணைத்தும்
அணைக்கப்பட்டது.

மேடையில் டிம் விளக்குகள் மட்டும் போடப்பட, ரிஷ்வந்த் நிஹாரிகா
பின்னிருந்த பெரிய திரையில், ரோஜா இதழ்கள் கொட்டுவது போல்
படம் ஓட, மேடையின் இருபக்கமும் இருந்து இதய வடிவ ஹீலியம்
பலூனை வகுப்பின் மற்றவர்கள் பறக்க விட, அரங்கமே அமைதியானது
இவர்களின் நடனத்தைக் காண.

நிஹாரிகாவும், ரிஷ்வந்தும் இன்னும் வகுப்பறையில் நிகழ்ந்த அழகிய
நிகழ்விலிருந்தே வெளிவராத நிலையில், இருவருக்கும் கைகோர்த்து
நின்றிருந்ததும், மேடையின் முன் இருந்த இருளும், இருவருக்கும்
தங்கள் இருவரையும் தவிர சுற்றியும் யாரும் இல்லை என்ற தனிமை
நிலையைத் தர, பாடல் தொடங்கியதும் காதலில் கட்டுண்ட இரண்டு
மனங்களின் கால்களும் தன்னால் ஆடத் துவங்கியது.

பாடல் : yedho ondru cover song – Amos paul (யூ ட்யூப்ல அடிச்சு ஒரு
தடவை கேட்டுக்கங்க மக்களே).

‘வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே’

என்ற வரியில் இருவரும் கைகளை மேலே தூக்கி இருபக்கமும்
கொண்டு சென்று வானவில்லைப் போல் விரித்து, பிரிந்து இரு அடி
நடக்க,

‘உனக்காக எதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ’

வரிகளில் அருகருகே தங்களை காந்தம் போல் ஈர்த்து ஓடி வந்து
இடைவெளிவிட்டு நின்று, ‘நீ எனக்கென செய்வாயோ’ என்ற வரிகளில்
நிஹாரிகாவின் இரு கன்னங்களையும் ரிஷ்வந்த் பட்டுப்பூவைப் போல்
பற்ற,

ஏற்கனவே பார்வையால் உருகிக் கொண்டிருந்த மெழுகு
பொம்மையவள், அவனின் சூடான கரம் தன் கன்னங்களைத்
தீண்டியதில் மொத்தமாய்க் கரையத் தொடங்கினாள்.

‘இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது’

வரிகளில் அவனின் சட்டைக் காலரை நிஹாரிகா பற்றி, ஒரு சுற்று
சுற்றிய பின்,

‘ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது’ வரியில் ரிஷ்வந்தின் நெஞ்சில் முகம் புதைக்க, அவளின் ஸ்பரிசம் தன்னைத் தீண்டியதில் தன்னைத்
தொலைத்தான் நிஹாரிகாவிடம் மனதைத் தொலைத்தவன்.

‘அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது’

வரிகளில் ரிஷ்வந்த் மண்டியிட்டு மேலே நோக்கி கைகளை
கொண்டுசென்று, அவளின் மேலுள்ள காதலை முகத்தில் தேக்கி
வைத்துக் காட்டி,

‘தினம் தொழுவேன் தவறாது’ வரிகளில் தன்னவளை அருகில்
இழுத்து இடையை மென்மையாய் அணைக்க, தன்னவனின்
நெருக்கத்திலும், அணைப்பிலும்.. நாணத்தில் நிஹாரிகா சொக்க
அவளின் வதனம் முழுதும் காதலை பிரதிபலித்தது.

‘என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னுமும் என் மனம் புரியாதா’

வரிகளில் அவளை பம்பரமாய் கைகொடுத்து நான்கு சுற்று சுற்ற
அவளின் கருங்கூந்தல் அவனின் வதனத்தில் மோதி,

அவள் கூந்தலின் வாசத்தை அவனை ஸ்வாசிக்க வைத்து சித்தம்
கலங்கடித்தது.

‘அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா’

வரிகளில் அவனின் நெஞ்சோடு தன் முதுகை நிஹாரிகா
சாய்த்துக்கொள்ள, கைகளை சிறகாய் விரித்து பின் மூடி அவளைத்
தனக்குள் மலர் பந்தைப்போல் அடக்கியவன்,

தோள்களைப் வளைத்து மென்மையாய் அசைய, அவனவளும்
தன்னவனுடன் உலகம் மறந்து அசைந்தாள்.

‘ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்’

வரிகளில் அவளின் இடைப்பற்றி அவளைத் தூக்கியவன், அவளை
சுற்ற நிஹாரிகா தன்னவனின் கன்னங்களை ஆசையாய் பற்றியது.

தன்னவளைச் தன் முதுகிற்குப் பின்னே மின்னல் வேகத்தில் சுற்றி
முன்னே கொண்டு வந்து கைகளில் ஏந்தியவன்,

‘இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்’ என்ற வரிகளில்
தன் ஜீவன் மொத்தத்தையும் முகத்தில் தேக்கி வைத்துப் பாடி அவளை
இறக்கிவிட்டான்.

‘உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்’

வரிகளில் அவளின் பாதத்தை தனது நெஞ்சில் எடுத்து வைத்து
முத்தமிட, அவனின் முதல் முத்தத்தில் அமுதசுரபியாய் நிஹாரிகாவின்
மனதிற்குள் காதல் சொட்ட, அவளின் வதனம் மொத்தமும் தன்னவனின்
மேலான நேசத்தை காட்டியது.

‘உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்’ வரிகளில் இருவரும்
இருவரின் விழிகளையும் சங்கமித்தபடி நின்று,

நிஹாரிகா ரிஷ்வந்தின் தோள்களைப் பற்றி, ரிஷ்வந்த் நிஹாரிகாவின்
இடையைப் பற்றி கால்கள் இரண்டையும் முன்னே ஒரே நேரத்தில்
எடுத்து திருப்பி வைத்து கைகளை நீட்டியபடி பின்னே நகர்ந்து
பிரிந்தனர்.

‘உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ’

வரிகளில் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு தங்கள் துணையை
நோக்கி வந்து, சுற்றி மெதுவாய் மூச்சுக்காற்று அருகருகே படும்
அளவிற்கு நிற்க,

இருவரின் நடுவே இதய வடிவ ஹீலியம் பலூன் ஒன்று பறந்து சென்றது.
இருவரின் இதயத்தைப் போல அதுவும் ஓரிடத்தில் நிற்காமல் மிதந்து
செல்வதை உணர்ந்தவர்கள் புன்னகையை உதிர்க்க, நிஹாரிகா
ரிஷ்வந்தின் நெஞ்சில் தலை சாய்த்துக் கண்களை மூட, ஒரு கரத்தால்
அவளை அணைத்தவன், மற்றொரு கரத்தால் அவளின் தலையை
மென்மையாய் தன்னுடன் அழுத்திக்கொள்ள பாடலும் நிறைவடைந்தது.

அவர்களின் மனதைப் போன்று!

பாடல் முடிந்தபின் மேடைக்குக் கீழே மீண்டும் விளக்குகளுக்கு
உயிரூட்டப்பட தன்னிலை மறந்து நின்ற இருவரும் பிரிந்தனர்.

இருவரும் ஆடிய ரொமான்ட்டிக் மெலோடியிலும், இருவரின்
ஜோடியிலும், இருவரின் கெமிஸ்ட்ரியிலும் அனைவரும் பனியில்
விழுந்த நீர்த் துளிபோல உறைந்து நின்றிருந்தனர்.

“சூப்பர்டா” என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் உரக்கக் கத்திக் குரல்
கொடுக்க, அவனின் காட்டுக் கத்தலில் உலகம் வந்த அனைவரும்
கைத்தட்டலகளையும், விசில்களையும், அள்ளித் தெளிக்க,

கீழே இருந்து அனைவரும் வெளிப்படையாக இருவரின் ஜோடிப்
பொருத்தத்தைப் பற்றி சத்தமாகக் கமெண்ட்ஸ் அடிக்க, நிஹாரிகாவை
விட ரிஷ்வந்தின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

“வெட்கமும் அழகுதான்.
அதுவும் தன்னவனின்
வதனத்தில் வரும்
அளவில்லா வெட்கம்”

என்று நிஹாரிகா உணர, தன்னையே வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருந்தவளின் கரத்தைப் பற்றியவன், அவளை
மேடையின் வலது பக்கம், தங்களது நண்பர்கள் நின்றிருந்த இடத்திற்கு
இழுத்துச் சென்றான்.

அவளது கரத்தை விட்டவன் அவளைப் பார்க்க, அவளும் தயக்கமும்
காதலுமாக அவனைப் பார்த்தாள்.

இருவரின் பார்வை பரிமாற்றத்தைப் பார்த்த அவர்கள் கேங்கிற்குப்
புரிந்துவிட்டது காதல் கண்ணாமூச்சி நடக்கிறது என்று.

அனைத்து நிகழ்ச்சிகளும் முடிய அனைவரும் பார்க்கிங்கிற்கு வந்தனர்.
வெல்கம் பார்ட்டி என்பதால் இதில் பரிசு அதுஇது என்றெல்லாம்
இல்லை. தங்களின் திறமையைக் காட்டும் வாய்ப்பே இது.

அதில் தங்கள் காதலையும் காட்டிவிட்டனர் ஒரு ஜோடி.

“ரிஷ்வந்த், நான் உன்கூட வர்றேன்” சொன்ன நிஹாரிகா, அவனின்
பதிலை எதிர்பார்க்காமல் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

ரிஷ்வந்திடம் பைக் இல்லை. இன்று வரத் தாமதம் ஆகும் என்பதால்
தனது ஏரியா நண்பனிடம் கேட்டு அவனின் யமாகா ஆர்.எக்ஸ் 100ஐ
எடுத்து வந்திருந்தான்.

நிஹாரிகா ரிஷ்வந்துடன் ஏறியதும் தங்களுக்குள் சிரித்துக்கொண்ட
அவர்களின் நண்பர்கள், அவர்களை அனுப்பிவிட்டுத் தாங்களும்
கிளம்பினர்.

மணி இரவு 12.30

அந்தச் சாலையில் ஓரிருவர் தவிர யாரும் இல்லாது இருக்க,
வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த ரிஷ்வந்த் பேசவில்லை.
அவனின் பின் அமர்ந்து அவனை பைக்கின் கண்ணாடி வழியே
பார்த்துக்கொண்டே வந்த நிஹாரிகாவும் எதுவும் பேசவில்லை.

மேக்ஸியில் இருந்து ஜீன்ஸ் குர்தாவிற்கு மாறியிருந்தவள் இருபக்கமும்
கால் போட்டு அமர்ந்திருந்தாள்.

பீச் ரோட்டின் வழியே ரிஷ்வந்த் வாகனத்தை செலுத்த, இளந்தென்றல்
வந்து இருவரின் மேலும் பாந்தமாய் மோதிவிட்டு, இருவரின் மனதையும்
இன்னமும் பதப்படுத்தி, காதலின் இதத்தை மேலும் விதைத்தது.

வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு அவளுடன் இருப்பதே
மனம் நிறைவாக இருந்தது.

மோன நிலையில் இருந்தவனை கலைக்கும் விதமாய் நிஹாரிகாவின்
கரங்கள் அவனின் இடுப்பைச் சுற்றிப் பிடித்தது. உள்ளுக்குள் அவளின்
திடீர் செய்கையில் திடுக்கிட்டவன், அவளின் கன்னங்கள் அடுத்து தன்
தோள்மேல் சாயவும் கண்ணாடியின் வழியே அவளைப் பார்த்தான்.

‘ஒருவேளை தூங்கி நம் மீது சாய்ந்துவிட்டாளோ’ என்று நினைத்தான்.

முழித்துதான் இருந்தாள். அவனின் தோள் மீது தலை சாய்த்து கன்னம்
வைத்து சாலையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவளின் விழிகள் நிம்மதியையும், பாதுகாப்பையும், காதலையும்,
உரிமையையும், மயக்கத்தையும் பிரதபலிக்க, இப்போதே அவளை
எலும்பு முறியும் அளவிற்கு இறுக அணைத்துக் கொள்ள வேண்டும்
என்றிருந்தது அவனுக்கு.

அத்தனை அளவில்லா அடங்காத காதல் அவள் மீது அவனுக்கு!

ஆனால், இருவரின் வயதை நினைத்து அவனுக்கு சிறிது அச்சமாக
இருந்தது. அணைப்பில் துவங்கி அடுத்த கட்டத்திற்கு முன்னேற மனம்
உந்தி, தனிமையில் ஏதாவது தவறாக நடந்துவிட்டால்?

அவளின் நிலை தன்னால் எப்போதும் இறங்கிவிடக்கூடாது என்று
நினைத்தவனின் தலை தன்னையறிமால் லேசாய் அவளின் தலைமேல்
சாய, அந்த உணர்வு தந்த சுகத்தில் கண் மூடிக்கொண்டாள் நிஹாரிகா.

ஒரு கையால் வண்டியை செலுத்திக்கொண்டே, மற்றொரு கையால்
தனது வயிற்றைச் சுற்றியிருந்த அவளின் கரத்தைத் தட்டிகொடுத்தவன்,
இருவரின் மோனநிலை கலையாமல் அவளை வீட்டில் இறக்கிவிட,
அவன் முகம் காண உள்ளத்தில் துளியும் சக்தியில்லாமல் அவள்
உள்ளே சென்றுவிட, பரவசத்துடன் வண்டியை எடுத்தான் ரிஷ்வந்த்.