ரசவாச்சியே விழி சாச்சியே!

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் 14

“என்னடா இது ஒரே நாளில் ஊமை ஆகிட்டானா என்ன?” சத்தமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் ஆரா.

பெரும் யோசனையில் இருந்தான் சைத்தன். ‘அசோகன் மும்பை போயிருப்பாரா? அடுத்த பார்சல் வரும் போது அவரோட ரியாக்ஷனை கண் முன்னால் பார்க்கணும். அவன் துடிப்பை என் கண்ணால் பார்த்து ரசிக்கணும்.’ அந்த நாளை நினைத்து இப்பொழுதே சந்தோசத்துடன் காத்திருக்க ஆரம்பித்தான் சைத்தன். 

அவனது முகத்தில் யோசனையும், அதை தொடர்ந்து வந்த ரசனையான சிரிப்பையும் கண்டவள் முகம் யோசனையானது.

“சைத்தன்.” இவள் அழைக்க,

அவளை கண்டுக் கொள்ளாமல் எழுந்து சென்றான் சைத்தன். அப்பொழுதுதான் அவனை ஒழுங்காக கவனித்தாள் ஆரா.

  காலை தாங்கி தாங்கி நடந்து சென்றான். ‘இவன் காலுக்கு என்னாச்சு?’ யோசனையாகப் பார்த்தாள் ஆரா.

இரவு உணவை அவள் முன் வைத்து அங்கிருந்து நகர, “காலுக்கு என்னாச்சு சைத்தன்?” அவள் கேட்கவே,

“தெரியல… அருவிக்கு போகும் போது ஏதோ குத்திருச்சு.” முகத்தை அந்த பக்கமாய் திருப்பிக் கொண்டு கூறியவன், தனக்கும் சாப்பாடு எடுத்துக் கொண்டு அங்கிருந்த பாறையில் அமர்ந்தான்.

 “ஹா… ஹா… கடவுள் இருக்கான் குமாரு.” சத்தமாக கூறியவள் அவனை பார்த்து சிரித்தாள்.

“என் கால்ல சுடுதண்ணீ ஊத்தினல்ல… அதுதான் கடவுள் உனக்கு ஆப்படிசிருக்கார்.” அத்தனை சந்தோசம் அவள் முகத்தில்.

 அவளின் சந்தோஷ முகத்தைப் பார்த்தவன், “அப்படியா?” புன்னகையின் முகவரியாய் கேட்க,

‘பொய் சொல்லுறானோ இவன்?’ யோசித்தவள், ‘ஏதோ ஒன்னு இவன் கால்ல அடிபட்டிருக்கு. அவ்ளோதான் சந்தோசமா இருப்போம்.’ எண்ணியவள் அவனை பார்த்தாள்.

“என்ன?” அவன் கேட்கவே,

“எனக்கு பட்ட காயத்துக்கு எல்லாம் நீ மருந்து போட்டிருக்கதானா?” இவள் கேட்கவே,

“அதுக்கு?” யோசனையாக பார்த்துக் கேட்டான். ‘இவ அவ்வளவு நல்லவ இல்லையே.’ என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

“அதுக்கு நானும் உனக்கு ஏதாவது பண்ணலாம்னு இருக்கேன்…” பீடிகையுடன் ஆரம்பிக்க,

‘சரிதான்.’ சாப்பிட்டபடி அவளை பார்க்க,

“என்னதான் நீ என் காயத்துக்கு மருந்து போட்டாலும், என் மனசு இருக்கே மனசு… அது உனக்கு நல்லது பண்ணவே விடமாட்டிக்குது. கத்தி எடுத்து உன் புண்ணை இன்னும் கீறி விட சொல்லுது. நான் என்ன செய்யட்டும்?” அவனிடமே நக்கலாக கேட்டாள் ஆரா.

அவளையே சில நொடிகள் அசையாமல் பார்த்தவன், தட்டை கழுவி அங்கு வைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

‘ஆரா பெண் அல்ல, அடிபட்ட வேங்கை. அவள் இங்கிருக்கும் வரை மிக மிக கவனமாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதித்துக் கொண்டான் சைத்தன்.

                                           ***

ஆரியனுடன் அமர்ந்து உணவை உண்டுக் கொண்டிருந்தார் ஆண்டாள். ஆரியனின் அமைதி அவரை ஏதோ செய்ய,

“ஆரி…” என்றழைத்தார் ஆண்டாள்.

எதுவும் கூறாமல் அவரை நிமிர்ந்தான் பார்த்தான் ஆரி.

“உனக்கு ஒன்னு தெரியுமாடா? உன் தங்கச்சி உன் மேல் அவ்ளோ பாசமா இருப்பா. இப்போ பாரு அவ காணாம போய் அஞ்சாறு நாள் ஆகுது. அவ இங்க இல்லன்னு உனக்கு தெரியுதா?

உனக்கு ஒன்னுன்னா அவ அவ்வளவு துடிச்சு போவா. நீன்னா அவளுக்கு உயிரு தெரியுமாடா. உன்கிட்ட, என்கிட்ட பேசாம அவளால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. இப்போ பாரு இந்த பாட்டிக் கூட சண்டை போட கூட அவ இல்லை. அவ இல்லன்னு கூட உனக்கு தெரியல. எல்லாம் விதி. யார் விட்ட சாபமோ தெரியல. நம்ம குடும்பத்தை இப்படி வதைக்குது.” அவனிடம் கண்ணீருடன் கூற, எதுவும் கூறாமல் அவர் முகத்தையே பார்த்திருந்தான்.

 “நான் சொல்லுறது உனக்கு புரியுதாடா?” என்றார் அவனது முழியை பார்த்து.

“ம்மா தம்பிக்கு இப்போ அவரையே தெரியல நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க?” மணி அவரிடம் கேட்க,

“அவன்கிட்ட அப்பப்ப பழய நினைவுகளை டாக்டர் பேச சொல்லிருக்கார்.” எனவும்,

“நீங்க இப்போ பழசு பேசலியேம்மா.” அவர் கூறவே,

“எனக்கு தெரியும்டா. என்ன பேசணும்னு. நீ அவனுக்கு குழம்பு ஊத்து.” அவர் கூறவே அமைதியாக குழம்பை ஆரிக்கு ஊற்றினார்.

ஆனாலும் பேச்சை நிறுத்தவில்லை ஆண்டாள். சிறு வயதில் நடந்தவையும், ஆராவை செல்ல பெயரிட்டு அழைக்கும் குட்டி ஆரியனையும் பற்றியும் அவனோடு பேசிக் கொண்டிருந்தார்.

அவர் கூறுவதை எல்லாம் அசையாமல் கேட்டுக் கொண்டிருந்த ஆரியனின் இதழ்கள், “தனும்மா” என்று மெதுவாக முணுமுணுத்தது.

                                         ***

மும்பை சென்ற அசோகனுக்கு எப்படி எங்கு ஆரம்பிப்பது? என்று தெரியவில்லை.

பார்சலில் இருந்த சீலை வைத்து இடத்தை கண்டுபிடித்து, அசோகனுடன் காவலர்களையும் அனுப்பி வைத்தார் ஜனார்த்தனன்.

அசோகனுக்கு தெரிந்த டீலர்களின் ஆபிஸ்க்கு திடீர் விசிட் அடிக்க, அத்தனை பேரும் நல்ல விதமாக வரவேற்கதான் செய்தனர். ‘அடுத்து என்ன செய்வது?’ அவருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.

‘ஊருக்கு திரும்பி விடலாம்.’ என்ற முடிவுக்கு வந்த அசோகன் மிகவும் வருத்தத்துடன் கோவைக்கு கிளம்ப எண்ணினார்.

கொரியரின் சீலில் இருந்த எண்ணை வைத்து எந்த நாள் என கண்டுப்பிடித்த காவலர்கள் அன்றைய புட்டேஜை எடுத்து சோதித்தும் பார்த்தனர் அதில் பதிவானவர்கள் ஒருவரையும் அசோகனுக்கு தெரியவில்லை.

“ஆரா காணாமல் போன மறுநாள்தான் கொரியர் அனுப்பிருக்காங்க, கொரியர் நம்பர வச்சு அந்த டைமுக்கு வந்து போனவங்களை மும்பை மாதிரி பெரிய சிட்டில தேடுறது ரொம்ப கஷ்டம். கடத்தல்காரங்க உங்களை பயபடுத்ததான் இப்படி அனுப்பி இருக்காங்க, சோ அவங்களோட நெக்ஸ்ட் மூவ் வரைக்கும் நீங்க வெயிட் பண்ணுங்க சார்.” காவலர்கள் கூறியதை ஜனாவிடம் கூற, 

‘அவங்க சொல்லுறது சரிதான். கடத்தல்காரன் அடுத்த மூவ்மென்ட் எப்படி இருக்குன்னு பார்த்து கிளம்பு அசோகா.’ என்று கூறிய ஜனார்த்தன் ஃபோனை வைத்து மிகவும் யோசனையில் இருந்தார்.

காலில் அடிப்பட்டிருக்கிறதென்று இரண்டுநாள் மில்லுக்கு வராத சைத்தன், அன்று போல் இன்றும் ஆராவுக்கு மாத்திரை கொடுத்துவிட்டு மில் நோக்கி வந்திருந்தான்.

வந்திருந்த பார்சல்களை தரம் வாரியாக பிரித்துக் கொண்டிருந்தான் சைத்தன். அப்பொழுது அங்கிருந்த ஒரு பார்சல் வித்தியாசமாக தெரிய, அதை எடுத்து பிரித்தான்.

அதில் இருந்த புடவை சைத்தனை பார்த்து சிரிக்க, உடனே அசோகனை அழைத்து கூறியிருந்தான்.

அசோகனுக்கு முன் ஜனார்த்தனன் அவன் முன் வந்து அமர்ந்தார்.

சைத்தன் கூறிய அடுத்த நொடியே ஜனார்த்தனை அழைத்துக் கூறியிருந்தார் அசோகன்.

“சொல்லுங்க தம்பி இது யார் கொண்டு வந்தா?”

“தெரியல சார்… மில்லுக்கு வர வேண்டிய பார்சல் கூடவே வந்திருக்குது. நான் கவனிக்கல. எல்லா பார்சலையும் எடுத்து பார்க்கும் போதுதான் இது வித்தியாசமா இருக்கவும் என்னதுன்னு பிரிச்சு பார்த்தா மேடம் புடவை மாதிரி இருந்தது. அதுதான் சார்கிட்ட சொன்னேன்.” இவன் கூறவே,

“மேடம் புடவைன்னு உனக்கு எப்படி தெரியும்?” அவனை யோசனையாகப் பார்த்துக் கேட்டார் ஜனார்த்தனன்.

“என்ன சார் இப்படி கேட்குறீங்க. மேடம் கீழ்தான் நான் வேலைப் பார்த்தேன். அவங்க இந்த புடவை கட்டி நான் பார்த்திருக்கேன்.” மேஜை மீதிருந்த புடவையைப் பார்த்தபடியேக் கூறினான் சைத்தன்.

“சரி இதை பத்தி யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்.” அவர் கூறவே,

“சரி சார்.” என்றபடி நகர்ந்தவன் முகத்தில் அப்பட்டமான கேலி புன்னகை.

  கையில் இருந்த பார்சலை திருப்பி திருப்பிப் பார்த்தார் ஜனார்த்தன். அந்த அட்ரெஸ் பார்க்க, சென்னை என்று மட்டும் குறிப்பிட்டிருக்க, யோசனையானார் மனிதர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஜனார்த்தன் முன் மிகவும் கலங்கி அமர்ந்திருந்தார் அசோகன்.

இத்தனை வருட வாழ்க்கையில் இப்படி ஒரு தவிப்பை கலக்கத்தை உணர்ந்ததில்லை அசோகன்.

“ஆராதனா.” இந்த ஒற்றை பெயர் அவர் உயிர் முழுவதும் நிறைந்து இருந்தது. சரியாக சாப்பிடாமல், தூங்காமல் தலை கலைந்து மிகவும் களைத்து போய் இருந்தார்.

எப்பொழுதும் தூய வெள்ளை பேண்ட் & வெள்ளை சட்டையில் மிகவும் கம்பீரமாக இருப்பார் அசோகன்.

இன்று அந்த வேஷம் எல்லாம் கலைந்து போய் இருந்தார். மகள் நிலை அவரை அப்படி ஆக்கி வைத்திருந்தது. ஆரி நிலை ஒரு துயரம் என்றாலும் இவரின் கண் முன் அவன் நடமாடுகிறான். ஆனால் ஆரா அவளை பற்றி கிஞ்சித்தும் அவரால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

 ‘இப்பொழுது எங்கு எப்படி இருக்கிறாளோ.’ அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. வாசலில் இருந்து அவர் பதறி ஓடி வந்த நிலை சைத்தன் முகத்தில் ஒரு சந்தோஷ புன்னகையை உண்டாக்கியது.

அடுத்தவர் வருத்தத்தில் சந்தோஷபடும் அற்ப மனிதனாக அவன் தாய் அவனை வளர்க்கவில்லை. ஆனால் அசோகன் நிலை பார்த்து அவனால் சந்தோஷபடாமல் இருக்க முடியவில்லை.

வெளியில் இருந்து ஓடி வந்தவர், முன்னே பார்சல் தூக்கிக் கொண்டு வந்த தொழிலாளியை அவர் கவனிக்காமல் ஓடி வந்து அவன் மேல் மோதி கீழே விழுந்து மீண்டும் அவர் எழுந்து ஓடிய நிலை. அங்கிருந்தவர்களை கலங்க வைக்க, சைத்தனை சிரிக்க வைத்திருந்தது.

நண்பனின் நிலையை அஅவரால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் வேடிக்கை பார்ப்பதுப் போல் தெரிய, யோசித்தார் ஜனா. ஏதாவது செய்யவேண்டும்.

உடனே அவரது போலீஸ் மூளை யோசிக்க ஆரம்பித்தது, ‘முதல் பார்சல் மும்பையில் வந்ததுன்னு கொரியர்காரன் கொண்டு வந்தான். ரெண்டாவது பார்சல் இங்க பார்சலோடு பார்சலா வந்திருக்கு? சரியில்லையே எங்கையோ இடிக்குதே?

கொரியர்காரன் கொண்டு வந்திருந்தால் பிரச்சனை இல்லை வேறு யாராவது கொண்டு வைத்திருந்தால்? அவரது மூளை நாலாபக்கமும் அலசி ஆராய்ந்தது.

இங்கிருந்துதான் மீண்டும் தேடுதலை ஆரம்பிக்க வேண்டும். நம் தேடுதலின் பொழுது யாரும் இங்கிருப்பது சரியாக இருக்காது என எண்ணியவர், சைத்தனை அழைத்து இப்பொழுது இருக்கும் எல்லா வேலையையும் முடிக்க கூறியவர், இன்னும் ஒருவாரம் கழித்து மீண்டும் வரக் கூறினார் ஜனார்த்தனன்.

விஷயம் வெளியே தெரிந்துவிட்டால் அதுவேறு அசோகனுக்கு மிகவும் பிரச்சனையாக இருக்கும்.’ முடிவெடுத்தவர் அசோகனை தேடி சென்றார்.

அறைக்கு வந்து பார்சலை கையில் எடுத்து பார்த்த அசோகன் அழுத அழுகை ஜனார்த்தன் கண்களையே கலங்க வைத்திருந்தது.

“டேய்… நீயே இப்படி கலங்கினா எப்படி. சீக்கிரம் அவளை கண்டு பிடிச்சிடலாம்டா.” அவர் கூறவே,

“எப்போ? எப்படி கண்டு பிடிப்ப? மும்பையில் இருந்து ஃபோன் பார்சல்ல வருது, அடுத்து சென்னையில் இருந்து புடவை பார்சல் வருது. அடுத்த பார்சல் என்ன வரும் என் பொண்ணு கையா? சொல்லுடா சொல்லு?” வெறி கொண்டவர் போல் ஜனாவை உலுக்கினார் அசோகன்.     

‘இதுதான் இதுதான் எனக்கு தேவை. உன் அழுகை, தவிப்பு எல்லாம் எனக்கு தேவை.’ என்பது போல் பார்த்திருந்தான் சைத்தன்.

“எதுக்குடா இப்படி பேசுற. நீ சொல்லுறது போல ஒன்னும் நடக்காது. அப்படி நான் விடமாட்டேன்டா.” சிறு குழந்தைக்கு கூறுவது போல் கூறினார் ஜனார்த்தனர்.

“எப்படி விடமாட்ட? கையை வெட்ட விடாமல் உயிரை எடுக்க விடுவியா?”

“டேய் ஏன்டா இப்படி எல்லாம் பேசுற. கொஞ்சம் நிதானமா இரு…” தன் போக்கில் பேசிக் கொண்டிருந்த அசோகனை அடக்க எண்ணினார் ஜனா.

“ஐயோ என் பொண்ணு. அவ எங்க எப்படி இருக்காளோ தெரியலையே. இவ்வளவு பணம் இருந்து எதுக்கு… என் பொண்ணை என்னால காப்பாத்த முடியலையே… என் பொண்ணு எனக்கு வேணும்…” கதறியவரை,

“அமைதியா இருடா அசோகா.” ஒரு இயலாமையுடன் தன் நண்பனை பார்த்துக் கொண்டிருந்தார் ஜனா.

அசோகனின் நிலையை, அவரது புலம்பலை, அவரது கதறலை ஒரு குரூர திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சைத்தன்.

ஏதோ ஒரு விதத்தில் திருப்தி நிலவியதாக உணர்ந்தான். மனம் அமைதியடைய அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். 

                                         ***        

குகைக்கு வந்தவன் ஆராவை பார்க்க, முழங்காலை கட்டிக் கொண்டு முகத்தை முழங்காலில் புதைத்து அமர்ந்திருந்தாள் அவள் நிலை அவனுக்கே வேதனை அளிக்க,

“ஆரா.” என்றான் மெதுவாய்.

விலுக்கென நிமிர்ந்தவள், “எங்க போயிட்டு வார?” என்றாள் முகத்தில் எதையும் காட்டாமல்.

“சாப்பிட ஏதாவது வேணுமா? நான் காட்டுக்குள்ளதான் போறேன்.” அவள் கேள்விக்கு பதில் கூறாமல் அவளிடம் கேட்டான் சைத்தன். முகத்தில் ஒரு புன்னகை புதிதாக குடிவந்திருந்தது அவனிடம்.

“என்ன இன்னைக்கு உன் முகத்தில ஏதோ வித்தியாசம் தெரியுது?” அவன் முகத்தை பார்த்துக் கேட்டாள் ஆரா. 

“அப்படியா தெரியுது. எனக்கு ஒன்னும் தெரியலையே?”

“முட்டாள்… உன் முகத்தையே நீ எப்படி பார்க்க முடியும்.” சீற,

“ஆமால்ல… சரி சொல்லு உனக்கு ரம்புட்டான் வேணுமா?”

“அருவிக்கு போலாமா?” என்றாள் டக்கென்று.

“இங்க அருவிலாம் இல்லை. உன்னை நான் ரிலீஸ் பண்ணுன பிறகு எங்க வேணா போ.” முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டான்.

“பிளீஸ்… கூட்டிட்டு போயேன். சத்தம் சூப்பரா வருது. எனக்கு ஆசையாக இருக்கு சைத்தன்.” குரல் மிகவும் குழைந்து வந்தது அவளிடமிருந்து.

அவளது குரல் வித்தியாசத்தை அவன் கவனிக்கவேயில்லை. ஏதோ ஒரு மனநிலையில் சந்தோசமாக அவன் இருக்க, அவளையும் அவளின் பேச்சையும் அவன் சரியாக கவனிக்கவில்லை.

“அங்கையா அங்க எதுக்கு. அங்க மனுஷங்க யாரும் போகமுடியாது. அங்க காட்டு விலங்குதான் அதிகமா இருக்கும். நம்மளை பார்த்தா அது சும்மா விடாது. அதிலும் உனக்கு இப்போதான் கால் புண் ஆறியிருக்கு. அங்க மேல ஏறி போறது கஷ்டம்.” மிகவும் மென்மையாக கூறினான்.

“பிளீஸ் கூட்டிட்டு போயேன்.” என்றாள் கெஞ்சலாய்,

அவள் கூறிய பிளீஸ் அவனை அசைக்க, “சரி கூட்டிட்டு போறேன். தூரத்தில இருந்து பாரு. அருவில நனையக் கூடாது.” ஸ்ரிக்ட் ஆபிசராக கூறினான்.

“சரி” என்று வேகமாக தலையாட்டினாள்.

“சரி வா.” அவன் முன்னே நடக்க,

“இப்படி கட்டி வச்சா நான் எப்படி வாரது.” எழுந்து நின்று அவள் கூறவே,

அவளை திரும்பிப் பார்த்தவன், அவள் கால் சங்கிலியை கழட்டி, அவளின் ஒரு கையில் மட்டும் இணைத்தவன் இன்னொரு பக்கத்தை தன் கையில் பிடித்துக் கொண்டான்.

ஸ்வாரசியமாக ஏதோ பேசியபடி வர, அவனும் அவளுடன் இணைந்துக் கொண்டான். அவன் சாதித்து விட்ட சந்தோசம் அவன் முகத்தில் தாண்டவமாட அவளை அவன் சரியாக கவனிக்கவில்லை. 

அருகில் செல்ல செல்ல அருவில் ஓசை பேரிரைச்சலாக அவர்கள் காதில் விழ, ஆசையாக பார்க்க ஆர்வமானாள் ஆரா.  

அவள் ஆசையாக கேட்கவும் அழைத்து வந்திருந்தான் அவன். ஆனால் அருவியில் இரைச்சல் அவனையே திகைக்க வைத்திருந்தது. அத்தனை ஃபோர்ஷாக இருந்தது நீரின் வேகம் அபரிமிதமாக இருக்க அதன் ஆர்பரிப்பு ஆக்ரோஷ இரைச்சலை கொண்டிருந்தது.

ஆனால், அவள் பிளீஸ் போட்டு கேட்கவும் அவனால் மறுக்க முடியவில்லை. அழைத்து வந்துவிட்டான். இப்பொழுது மிகவும் யோசித்தான். ‘இவளை அழைத்து வராமல் இருந்திருக்கலாமோ.’ என்று.

“நான் உன்னை இப்படி கெட்டியா பிடிச்சுகிறேன். அருவிக்குள்ள போகலாமா?” அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆசையாக கேட்கவும் அவனுக்கு மறுக்க தோன்றவில்லை. ஆனால், உள்ளே செல்லவும் தயக்கமாக இருந்தது.

‘யாராவது ஒருத்தருக்கு ஏதாவது ஒன்று ஆனால் கூட, நிலைமை கையை மீறி விடும்.  இவள் என் கட்டுப்பாட்டில் இருக்கிறாள். இவளை மிகவும் பொறுப்பாக அவள் அப்பாவிடம் ஒப்படைப்பு என் கடமை ஆகிற்றே.’ மிகவும் யோசித்தான் சைத்தன்.

ஆனாலும் அவளது, ‘பிளீஸ்’ அவன் மனதை கரைக்க, “வா…” என்று அவளை கையோடு பிணைத்து அருவி பக்கம் அழைத்து சென்றான்.

அருகே செல்ல செல்ல அந்த அருவியின் சாரல் முகத்தில் மோத, அருவியின் இரைச்சல் பேரிரைச்சலாக காதில் மோதியது.

பேரிரைச்சலாக கீழே விழும் நீரில் சாரல் முகத்தில் வீச, அருவியை விட்டு தள்ளியே நின்றனர் இருவரும்.

‘அடேய் சைத்தன் என்னடா பிக்னிக் வந்தவன் மாதிரி இப்படி கையை பிடிச்சுட்டு நிக்க விட்டிருக்க.’ மனசாட்சி கேட்க, அதை தூர தள்ளியவள் அருவியை ரசித்தான்.

“இன்னும் கொஞ்சம் உள்ளே போலாமா சைத்தன்.” என்றாள் கெஞ்சுதலாய்.

“இங்க நின்னு பாரு. இதுவே உன்னை கூட்டிட்டு வந்திருக்க கூடாது.” அவன் சிடுசிடுக்க,

“பிளீஸ் சைத்தன்… இனி இங்க நாம வர முடியுமோ முடியாதோ. கடைசி ஆசை நிறைவேத்து சைத்தன் பிளீஸ்.” என்றாள் ஒரு மாதிரி கெஞ்சலாக.

“சரி வா…” என்று உள்ளே அழைத்து சென்றான்.   

“அருவிக்கு வெளியே வந்திராதே ஆரா. இந்த இடத்தில அப்படியே நில்லு. வெளிய வந்தா ஃபோர்ஷா வர தண்ணீர் இழுத்துட்டு போய்டும். ரொம்ப கவனமா நில்லு.” அவள் கை சங்கிலியை நன்றாக பிடித்துக் கொண்டு கூறினான்.

“நீயும் வா சைத்தன்…” அவனையும் கையேடு இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அவனின் கையை கெட்டியாக பிடித்தபடி அந்த நீரில் நின்றிருந்தாள். சில்லென தலையில் பயங்கர அழுத்தமாக தண்ணீர் விழ ஒரு நிமிடம் தடுமாறி அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

“வெளிய போகலாமா? உன்னால நிக்க முடியலையா?” அவளின் முகத்தைப் பார்த்து கேட்டான் சைத்தன்.

 “இல்ல வேணாம். இதுவே நல்லா இருக்கு.” சிறு குழந்தையென கூறியவளை அசையாமல் பார்த்திருந்தான்.

‘இவளிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்… இவள் மிகவும் ஆபத்தானவள்.’ இப்படியான எந்த எண்ணமும் இல்லாமல் அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அவளோடு இணைந்து நின்றான்.

நீரின் வேகம் அதிகமாக இருந்தது. காட்டருவி அதன் வேகத்தை காட்டியது. நீரின் வரத்து போக போக அதிகரிக்க, அதன் அழுத்தம் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினாள்.

கண்களை இறுக்க மூடி, ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டு மறுகையால், முகத்தில் விழுந்த நீரை துடைக்க, நீரின் வேகத்தால் அவளால் நிற்க முடியாமல் தடுமாறினாள்.

தடுமாறியவளின் கையை பிடித்திழுத்து அருகில் இருந்த பாறை பக்கம் நகர்ந்தான்.

 “ரொம்ப ஃபோர்ஷாக தண்ணி விழுதுல்ல?” அவனின் கையை தன்னில் இருந்து பிரித்து அவனிடம் கேட்டாள். அவன் கையை தன்னில் இருந்து பிரிக்கவும், அவன் கையேடு இணைந்து இருந்த சங்கிலி அவன் கையை விட்டு நகர்ந்து அவள் கையேடு தொங்கியது.

“ம்ம்ம்… ரொம்ப…” என்றவனின் பார்வை மேலே நோக்கியது, தண்ணீர் வரத்து அதிகரித்தது.

“தண்ணீர் ரொம்ப வேகமா வருது. நாம சீக்கிரம் இங்க இருந்து கிளம்பணும் ஆரா.” கூறியவன், அப்பொழுதுதான் சங்கிலியை பார்க்க, அவள் கையை மட்டும் இணைத்து இருந்தது.

ஏதோ தோன்ற கீழே தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியை இவன் பிடிக்க வருவதற்குள், “நான் யாருன்னு தெரியாம என்கிட்ட விளையாடுறியா நீ.” கத்தியவள் அவனை ஆவேசமாக பிடித்து தள்ளி விட்டவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

“நான் இந்த காட்டை விட்டு போகும் போது நீ உயிரோடவே இருக்க முடியாதுன்னு சொன்னேன்ல. இந்த ஆரா சொன்னதை எப்பவும் செய்வா. இனிதான்டா உனக்கு இருக்குது.” விழுந்தவனைப் பார்த்து கொக்கரித்தாள்.

“தனும்மா…” என்ற அலறலுடன் நீரில் விழுந்த சைத்தனை, வேகமாக விழுந்த நீர் இழுத்துச் சென்றது.

“தனும்மா…” இந்த வார்த்தையை சைத்தன் உச்சரித்த நொடி, அவளது கால்கள் அப்படியே நின்றது. ‘என்னையா தனும்மான்னு கூப்பிட்டான்.’ அதிர்ச்சியாகி இவள் திரும்பிப் பார்க்க, வேகமாய் விழுந்த நீர் அவனையும் இழுத்துக் கொண்டு சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!