நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 20 (இறுதி அத்தியாயம்)

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 20 (இறுதி அத்தியாயம்)
இரவு நேரத்துப் பூச்சிகளின் ஒலி அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்க கிருஷ்ணா மற்றும் அனுராதா ஒருவரையொருவர் பேச வார்த்தைகளின்றிப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
இத்தனை நாட்களாக அனுராதாதான் கிருஷ்ணாவைத் தன்னை விட்டு விலக்கி வைக்க ஏதேதோ விடயங்களை எல்லாம் செய்து கொண்டிருந்தாள், ஆனால் இப்போது கிருஷ்ணா அவளைத் தன்னை விட்டும் விலகிச் செல்ல சொல்லுவது அவளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்த அழுத்தமான நடையுடன் அவன் முன்னால் வந்து நின்றவள், “நீ நிஜமாகவே உன்னை விட்டுட்டு போகச் சொல்லுறியா கிருஷ்ணா?” என்று வினவ, அவனோ அவளை நிமிர்ந்து பார்க்கவும் மனமில்லாமல் தன் தலை குனிந்தபடியே ஆமோதிப்பாக தலையசைக்க, அவன் சட்டைக் காலரை இறுகப் பற்றியவள் அவனது கன்னத்தில் மாறி மாறி அடிக்க ஆரம்பித்தாள்.
“எதற்காக இப்படி பண்ண? எதற்காக என் வாழ்க்கையில் வந்த? எதற்காக எனக்கு மறுபடியும் வாழணும்னு ஆசையைத் தந்த? எதற்காக உன் காதலை எனக்குத் தந்த? உன்னைப் பழி வாங்க வந்தேன்னு சொன்ன பிறகும் எதற்காக என்னை அவ்வளவு காதலிச்ச? எதற்காக? சொல்லு கிருஷ்ணா, சொல்லு? அப்போ இத்தனை நாளாக என்னைக் காதலிக்கிறேன்னு நீ சொன்னது எல்லாம் பொய்யா?” தன் சட்டையைப் பற்றி உலுக்கியபடி கோபமாக நின்று கொண்டிருந்த அனுராதாவை நிமிர்ந்து பார்த்தவன்,
“எதுவும் பொய் இல்லை ராதாம்மா, நான் காதலிப்பது நிஜம், ஆனா…” என்றவாறே தயங்கி நிற்க,
அவனது முகத்தை வலுக்கட்டாயமாக தன் புறம் திருப்பியவள், “என்ன ஆனா? சொல்லு. என்ன ஆனா?” என்று வினவ, அவனோ அவளை விட்டு இரண்டடிகள் விலகி நின்று கொண்டான்.
“நீ என் கூட சேர்ந்திருந்தால் நாளைக்கு நம்மைச் சுற்றி இருக்கும் ஆளுங்க பேசும் பேச்சை எல்லாம் நீ தாங்கிக்க மாட்ட ராதாம்மா”
“அப்படி என்ன பேசுவாங்க?”
“அது வந்து…அது…”
“சொல்லு. என்ன பேசுவாங்க?”
“என் அம்மா உயிரோடு இருக்கும் வரைக்கும் என்னையும், என் குடும்பத்தையும் பிடிக்காதுன்னு சொல்லிட்டு எங்களை விட்டுப் போக நினைத்த அதே பொண்ணு, இப்போ அவங்க இறந்த பிறகு மறுபடியும் எங்களோடு சேர்ந்து வாழ வந்திருக்கேன்னு யாரும் சொன்னால்…”
“சொன்னால் என்ன?”
“என்ன?” அனுராதாவின் பேச்சில் அதிர்ச்சியான கிருஷ்ணா அவளைக் குழப்பமாக நிமிர்ந்து பார்க்க,
சிறு புன்னகையுடன் அவனெதிரில் வந்து நின்றவள், “அது உண்மை இல்லையே, பொய்யான ஒரு விடயத்தைப் பார்த்து நான் எதற்காக ஒளிந்து ஓடணும்?” என்று கேட்க, கிருஷ்ணாவிற்கோ அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று சிறிதும் புரியவில்லை.
“இதோ பாரு கிருஷ்ணா, நான் உங்க அம்மா பண்ண தப்புக்கு தண்டனை கொடுக்க நினைத்தது என்னவோ உண்மைதான், ஆனா அவங்களை இப்படியே ஒரேயடியாக உங்களை விட்டுப் பிரிக்கணும்னு நினைக்கல. நாம நினைப்பது போல எல்லாம் நடப்பதும் இல்லையே, அதோடு இது பிராக்டிகல் வாழ்க்கை கிருஷ்ணா. ஒரு விஷயத்தை இழந்தால்தான் இன்னொன்னு கிடைக்கும். ஒருவேளை உங்க அம்மா உயிரோடு இருந்திருந்தாலும் நான் உன்னை அவங்களை விட்டுப் பிரிச்சுத்தான் கூட்டிட்டு போயிருப்பேன், இதை சொல்ல எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. இதுதான் நான், இதுதான் என்னோட குணம்.
ஊரில் நாலு பேரு நாலு விதமாக பேசுவாங்கன்னு வாழ நினைத்தால் கடைசியில் நம்ம செத்து ஆவியாகிய பிறகுதான் நமக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ முடியும், ஒருவேளை உங்க அம்மா உன் கூட இருந்து, அதற்கு அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு நான் மனசு மாறியிருக்கலாம் தானேன்னு கூட நினைக்கலாம், மே பீ அப்படியும் நடந்திருக்க வாய்ப்பு இருக்கு, ஆனா அது எப்போன்னு யாருக்கும் தெரியாது. இப்படி நிச்சயமே இல்லாத ஒரு விஷயத்திற்காக காத்திருப்பதை விட என்ன நடக்குதோ அதற்கேற்ற மாதிரியே நம்ம வாழ்க்கையை அமைச்சுக்கணும், அதுதான் புத்திசாலித்தனம். ஒருவேளை உன் மனதிலும் உன் அம்மா இறந்ததற்கு அப்புறம்தான் நான் உன்னோடு வாழணும்னு திரும்பி வந்திருக்கேன்னு நீ நினைத்தால் கூட எனக்கு கவலையே இல்லை, ஏன்னா நான் உன்னைத் தேடி வந்தது உன் காதலுக்காகத்தானே தவிர வேறு எதற்காகவும் இல்லை. எதை நீ ஏற்றுக் கொண்டாலும் சரி, இல்லைன்னாலும் சரி” என்றவள் சிறிது நேரம் கரு மேகங்கள் சூழ்ந்திருந்த வானத்தைப் பார்த்தபடியே,
“அந்த வானத்தில் இருக்கும் மேகங்களைப் பார்த்திருக்கியா கிருஷ்ணா? அந்த மேகமெல்லாம் நீர் மட்டும்தான் இருக்கும், அந்த நீரெல்லாம் வெளியே போயிடுச்சுன்னா அந்த மேகம் எல்லாம் ஒண்ணுமே இல்லை. அதேபோலத்தான் உன்னோட காதல் இல்லைன்னா இந்த அனுராதாவும் எதுவும் இல்லை” என்று விட்டு தங்கள் அறைக்குள் சென்று விட, கிருஷ்ணாவோ அவள் சென்ற வழியைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.
இன்று மட்டுமல்ல என்றும் அவன் அனுராதா மீது கொண்ட காதல் குறைந்ததில்லை, ஆனால் அவன் மனதிற்குள் அரித்துக் கொண்டிருக்கும் அந்த ஒரு விடயம் அவனது காதலை அவனை முழுமையாக அனுபவிக்க விடுவதில்லை.
இப்போது அனுராதா பேசிய விடயங்களையும், அவள் தன் மீது கொண்டிருக்கும் காதலையும் எண்ணி வியந்து போனவன் அவளைக் காண எண்ணி அறைக்குள் செல்ல, அங்கே அவள் தன் பெட்டியை எடுத்து அதனுள் தன் ஆடைகளை அடுக்கி வைத்துக் கொண்டு நின்றாள்.
“அனுராதா, நீ என்ன பண்ணிட்டு இருக்க?” கிருஷ்ணா தயக்கத்துடன் அனுராதாவைப் பார்த்து வினவ,
அவனை நிமிர்ந்து பாராமலேயே தன் உடைகளை மடித்துக் கொண்டு நின்றவள், “ஏன் பார்த்தால் தெரியலையா? என் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைச்சுட்டு இருக்கேன்” என்று கூற,
அவனோ, “ஆனா ஏன்? நீதான் வெளியே வைத்து நிறைய பேசுனியே அதற்கு அப்புறம் ஏன்?” என்று வினவ, அனுராதாவோ தன் இதழோரம் தவழ்ந்த புன்னகையை மறைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
‘ஓஹ்! சார் அப்போ நான் வீட்டை விட்டுப் போகப் போறேன்னு நினைச்சு இருக்காரு போல. மனதில் அவ்வளவு ஆசையை வைச்சுட்டு வெளியே அப்பாவி மாதிரி ஆயிரம் கேள்வி. மிஸ்டர் ஹரிகிருஷ்ணா, கொஞ்ச நேரம் உங்க கிட்ட விளையாடிப் பார்க்கிறேன், உங்க வாயாலேயே என்னை விட்டுட்டுப் போகாதே ராதாம்மான்னு சொல்ல வைக்கிறேன்’ சிறிது நேரம் கிருஷ்ணாவோடு விளையாடிப் பார்க்கலாம் என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்,
“பின்ன வேறு என்ன பண்ணட்டும் கிருஷ்ணா? நீதான் என்னை இங்கேயிருந்து போ, போன்னு சொல்லுறியே, அதற்கு அப்புறமும் நான் எப்படி இங்கேயே இருக்கிறது? நானும் உன் அளவிற்கு உப்பு எடுத்துக்கலேன்னாலும் ஏதோ கொஞ்சமாக உப்பு போட்டு சாப்பிடும் ஆளுதான் பா” என்று விட்டு மீண்டும் தனது உடைகளை மடிக்கும் வேலையைத் தொடர,
அவளது கையைப் பிடித்துக் கொண்டவன், “இந்த நேரத்தில் நீ எங்கேயும் போக வேணாம், எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கலாம்” என்று கூற, அவளோ அவனது கையை எடுத்து விட்டு விட்டு தனது வேலையை மும்முரமாக செய்யத் தொடங்கினாள்.
“ராதாம்மா, ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற? இந்த ராத்திரி நேரத்தில் நீ திடீர்னு உங்க வீட்டுக்குப் போய் நின்னா உங்க அம்மா, அப்பா எல்லாம் எவ்வளவு டென்ஷன் ஆகுவாங்கன்னு நீ யோசிக்கவே இல்லையா?”
“ஏன் காலையில் போய் நின்னா மட்டுமே அப்படியே ஜாலியா பார்டியா வைக்கப் போறாங்க? எப்படிப் பார்த்தாலும் டென்ஷன் ஆகத்தானே போறாங்க. அன்ட் இன்னொரு விஷயம், பிடிவாதம் பிடிக்கிறது நான் இல்லை மிஸ்டர் ஹரிகிருஷ்ணா, அது நீங்கதான்”
“நானா? நான் என்ன பிடிவாதம் பண்ணேன்?”
“ஆமா, மனசுக்குள்ள எவ்வளவோ ஆசையிருந்தும் அதை வெளியே சொல்லத் தைரியம் இல்லாமல் ஏதேதோ சாக்கு சொல்லுறிங்களே. உங்க மனசுக்குப் பிடித்த விஷயத்தை யாரோ சம்பந்தம் இல்லாத ஆளுங்களுக்காக யோசிச்சு மறைச்சு வைக்கப் பார்க்குறீங்களே, இதெல்லாம் எங்க ஊரில் பிடிவாதம்ன்னு தான் சொல்லுவாங்க?”
“அப்போ நீ உண்மையாக வீட்டை விட்டுப் போக ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கலயா?” கிருஷ்ணாவின் கேள்வியில் தன் கையிலிருந்த ஆடையைக் கீழே போட்டு விட்டு அவனை முறைத்துப் பார்த்தவள்,
“நீங்க எல்லாம் இங்கே இருக்க வேண்டிய ஆளே கிடையாது, மியூசியத்தில் இருக்க வேண்டிய அரிய வகை உயிரினம்” என்று விட்டு, சோர்ந்து போனவர்களாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
“ஏன் கிருஷ்ணா என்னை இப்படி படுத்துற? நான் வேணாம்னு சொல்லும் போது வேணும்னு சொல்லி பின்னாடி வர்ற. சரின்னு நான் உன்னை வேணும்னு சொல்லி வந்தால் நீ வேண்டாம்னு சொல்லுற. இப்படி ஆளுக்கு ஆள் மாறி மாறி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிட்டே இருக்கணுமா? உன் மனதில் இருக்கும் குழப்பம் என்ன? உன் அம்மா இறந்ததற்கு அப்புறம்தான் உன்னோடு நான் சேர்ந்து வாழ நினைச்சிருக்கேன்னு என்பது தானே?”
“இல்லை, நான் அப்படி எல்லாம்…”
“போதும் கிருஷ்ணா, உன் மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லைன்னா இப்படி ஒரு சந்தேகமே வந்திருக்காது”
“இல்லை ராதாம்மா, நான்…”
“நான் பேசி முடிச்சுடுறேன். உன் அம்மா இறந்ததற்கு அப்புறம்தான் உன்னோடு நான் சேர்ந்து வாழணும்னு நினைச்சிருந்தால் அவங்க இறந்த அன்னைக்கு என் முன்னாடி கண்ணீர் விட்டுக் கதறியழுதியே அப்போவே நான் உன்னை ஏற்றுக்கொண்டு இருக்கணுமே? ஏன் அப்படி பண்ணல? சரி, அதற்கு அப்புறம் இரண்டு மாதம் நேரம் இருந்ததே, அப்போ ஏன் வரல? ஏன் தெரியுமா? நீ கேட்ட அதே கேள்வி எனக்குள்ளேயும் வந்தது, ஆனா உன்னோட காதல் இப்படி ஒரு சந்தேகத்தை உனக்குக் கொடுக்காதுன்னு நம்பித்தான் உன்னைத் தேடி வந்தேன், ஆனா என்ன பண்ணுறது? நமக்குள்ள வர்ற கேள்விகள் கூட ஒரேமாதிரியாகத்தான் இருக்கு” என்றவாறே சிறு புன்னகையுடன் கிருஷ்ணாவை நிமிர்ந்து பார்த்தவள்,
“அன்னைக்கு எங்க அம்மா, அப்பாவோடு நீ ஊட்டியில் இருந்து வந்த போது என் அம்மா திரும்பத் திரும்ப ஒரு கேள்வி கேட்டாங்க, உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று வினவ,
அவனோ, “அவங்க நிறைய கேள்வி கேட்டாங்களே, அதில் எது?” என்றபடியே தயங்கி நிற்க, அவளோ அவனைப் பார்த்து தன் தலையில் கை வைத்துக் கொண்டாள்.
“உன்னோடு சத்தியமாக முடியலடா. நான் எதற்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கேட்டாங்களே ஞாபகம் இருக்கா?” அனுராதாவின் கேள்வியில் கிருஷ்ணாவின் தலை வேகமாக ஆமோதிப்பது போல அசைந்தது.
“ஆஹ்! அந்தக் கேள்விதான். உன்னையும், உன் குடும்பத்தையும் பழி வாங்க நினைத்தால் அதற்கு நிறைய வழி இருக்கும் போது எதற்காக இந்தத் திருமணத்தை நான் ஒரே வழியாக எடுத்துக்கணும்னு என் அம்மா கேட்டாங்க, அப்போ நான் இருந்த மனநிலையில் அதைப்பற்றி பெரிதாக எதுவும் யோசிக்கவே இல்லை, ஆனா இந்த இரண்டு மாத இடைவெளியில் நான் அதைப்பற்றி யோசிக்காத நாளே இல்லை. உன்னோடு அம்மாவுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க என்கிட்ட ஆதாரம் இல்லைதான், ஆனா அவங்க பண்ண தப்பை உன்கிட்ட சொன்னால் நீ நம்பாமல் இருந்திருக்க மாட்ட, ஆனாலும் நீயாக அதைப்பற்றி கேட்டும் நான் சொல்லல, ஏன் தெரியுமா? அந்த விடயத்தைப் பற்றி கண்டுபிடிக்கவாவது நீ என் கூட தொடர்ந்து இருப்பேன்னுதான். இதெல்லாம் கேட்டால் உனக்கு ஏதோ பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம், ஆனா அந்தப் பைத்தியக்காரத்தனம் தான் நான் உன் மேல் வைத்திருக்கும் காதல்ன்னு இப்போ நான் புரிஞ்சுக்கிட்டேன்.
நான் செய்த ஒவ்வொரு செயலுக்கும் பின்னாடி உன் மேல் நான் வைத்திருந்த பாசத்தைப் புரிஞ்சுகிட்டேன். அன்னைக்கு நீ மழையில் விடிய விடிய நனைந்து நடுங்கியபடியே நின்னதைப் பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்தது உண்மை, ஆனா நான் அதை சொல்லல, உன்மேல ஜில்லுன்னு தண்ணீரைக் கொட்டினேனே அப்போவும் அதை நான் யோசிக்கல. ஆனா அதற்கு அப்புறம் ஒரு முடிவு எடுத்தேன், இனி எக்காரணத்தைக் கொண்டும் உன்னைத் கஷ்டபடுத்தக் கூடாதுன்னு, அதேமாதிரி நீ கஷ்டப்படுவதைப் பார்க்கவும் எனக்கு மனமில்லை, அதனால்தான் உன்னை ஊட்டிக்கு போக வைத்தேன், அப்போவே உன் மேல் எனக்கு இன்னமும் காதல் இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன், ஆனா வெளியே சொல்ல என்னோட ஈகோ விட்டுக் கொடுக்கல.
உன்னோட அம்மா இறந்ததைப் பார்த்து ஒரு நிமிஷம் எனக்கே என் மேலே கோபம் வந்தது, நான் கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம்ன்னு கூட தோணுச்சு, ஆனா அப்போ கூட நீ வந்து என் அம்மாவோட ஆசை, அப்படி இப்படின்னு ஏதேதோ பேசுன, அந்தக் கோபத்தில் தான் நீ காயப்பட்டதைக் கூட பார்க்காமல் நான் கிளம்பி போயிட்டேன்” என்றவாறே கிருஷ்ணாவின் நெற்றியில் இருந்த தழும்பை வருடிக் கொடுத்தவள்,
“நான் உனக்கு பண்ண எல்லாத் தப்பையும் சாரின்னு ஒரு வார்த்தை சொல்லி சரி பண்ணிட முடியாது, உனக்கு மன்னிக்க மனமிருந்தால் மன்னிச்சுக்கோ” என்று கூறிய அடுத்த கணம் அவள் கிருஷ்ணாவின் இறுகிய அணைப்பில் சிக்கி நின்றாள்.
கிருஷ்ணாவின் அணைப்பு மெல்ல மெல்ல இறுக்கமாகுவதை உணர்ந்து அவனைத் தன்னை விட்டும் மெல்ல விலக்கி நிறுத்தியவள், “என்ன ஆச்சு கிருஷ்ணா சார்? கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி யாரோ என்னை இங்கேயிருந்து போகச் சொன்னதாக ஞாபகம்” என்று கூற,
அவளை மீண்டும் தன் அணைப்புக்குள் கொண்டு வந்து நிறுத்தியவன், “ஆமா, வெளியே பனியாக இருக்கு, பால்கனியில் இருந்து வெளியே போன்னு சொன்னேன்” என்று கூற, அவளோ அவனைப் பார்த்து அதிர்ச்சியாகுவது போல தன் வாயில் கை வைத்து நின்றாள்.
“அடப்பாவி, ஒரு செக்கனில் பிளேட்டை அப்படியே மாத்திட்ட? என்ன விஷயம்?” அனுராதாவின் கேலி கலந்த கேள்வியில் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டவன்,
“இத்தனை நாளாக நீ என்னைப் பிடிக்காமல் தான் என் கூட வந்து இருக்கேன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன், ஆனா எனக்கு எல்லா விடயமும் தெரிய வர்றதுக்கு முன்னாடியிருந்தே உன் மனதில் இருக்கும் என் மீதான காதல் மாறலேன்னு இப்போ தெரிஞ்சுடுச்சு. நீ என்னை ஒவ்வொரு தடவை கஷ்டப்படுத்தும் போதும் அது மூலமாக உனக்கு சந்தோஷம் மட்டும்தான் கிடைத்ததுன்னு நான் நினைத்திருந்தேன், ஆனா அந்த சந்தோஷத்தை விட, நான் அனுபவித்த வலியை விட நீ அதிகமாக எனக்காக கவலைப்பட்டு இருந்திருக்கேன்னு தெரியும் போது உன்னோட காதல் என்னோட காதலை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்ன்னு தெரிஞ்சுடுச்சு. எனக்கு இது போதும், இனி எந்த ஒரு விஷயத்தையும் நினைத்து நான் கவலைப்படமாட்டேன். இனி என் ஆதி அந்தம் எல்லாமே நீதான் ராதாம்மா, நீ மட்டும்தான்” என்றவாறே அவளது நெற்றியில் தன் முதல் முத்தத்தைப் பதித்து விட்டு,
“நாம காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து இப்போ வரைக்கும் என் நிழல் கூட உன்னைத் தவறான கண்ணோட்டத்துடன் நெருங்கியதில்லை, ஆனா இதற்கு மேலும் அப்படி இருக்குமான்னும் தெரியாது” என்றவாறே அவளது இதழில் இளைப்பாறத் தொடங்க, இனி அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மட்டுமே நிறைந்திருக்கும்.
எத்தனை விதமான தடைகள் வந்தாலும் ஹரிகிருஷ்ணா அவனது காதலிலும், அனுராதா அவளது காதலிலும் இருந்து மாறவே இல்லை, மாறாக அவர்கள் காதல் அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது அவர்கள் அறியாமலேயே.
நீரின்றி மேகமில்லை என்பது போல இந்த ஹரிகிருஷ்ணா இன்றி அனுராதாவுமில்லை, அவளின்றி அவனுமில்லை.
**********சுபம்**********