நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 07

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 07
கிருஷ்ணா தன் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றதும் சிறிது நேரம் தன் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்த அனுராதா சிறு வயது முதல் தான் பழகி வந்த யோகா பயிற்சியை தன் மன அமைதி வேண்டி அப்போது செய்ய ஆரம்பித்திருந்தாள்.
சிறிது நேரப் பயிற்சிக்கு பின்னர் அவளது மனமும், மூளையும் சிறு நிதானத்தை அடைந்திருக்க தனது முடிக்க வேண்டிய அலுவலக வேலைகளை எல்லாம் அவசர அவசரமாக செய்து முடித்தவள் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் தனக்கான பகலுணவை சமைத்து முடித்து விட்டு மீண்டும் ஹாலை நோக்கி வர, அங்கே கிருஷ்ணா அவளைப் பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்திருந்தான்.
“கிருஷ்ணா?” அவனை மீண்டும் அங்கே எதிர்பாராத்திராத அனுராதா சிறிது கோபத்துடன் அவன் முன்னால் வந்து நின்று,
“இங்கே எதற்காக வந்தீங்க? நான்தான் உங்களை இங்கே இருந்து போகச் சொன்னேன் தானே?” எனவும், அவனோ அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
“மிஸ்டர். ஹரிகிருஷ்ணா, நான் உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன், மரியாதையாக இங்கே இருந்து கிளம்பி போங்க” என்றவாறே அனுராதா வாயிலை நோக்கி தன் கையைக் காட்ட,
அவளது கையை மெல்ல இறக்கி விட்டவன், “ஏன் ராதாம்மா எப்போ பாரு கோபமாகவே இருக்க? நீ நான் வேணும்னு தானே என்னைத் தேடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்ட, இப்போ என்னடான்னா என்னைப் போ, போன்னு சொல்லுற. இதெல்லாம் நல்லாவே இல்லை” எனவும்,
தன் கைகளை இறுக மூடி தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், “நான் ஒழுங்காக பேசிட்டு இருக்கும் போதே இங்கே இருந்து போனா உங்களுக்கு நல்லது, இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. மரியாதையாக போயிடு” எனவும், அவனோ அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றிருந்தான்.
“ராதா, நடந்த விடயம் எல்லாம் எனக்கு இப்போதான் தெரியும். எங்க அம்மா இப்படி ஒரு காரியத்தை செய்வாங்கன்னு நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. அவங்க பண்ண தப்புக்கு நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன், ஆனால் தயவுசெய்து என்னை மட்டும் தப்பாக நினைக்காதே, நடந்த எந்தவொரு விடயமும் எனக்குத் தெரியாது, இதுதான் உண்மை”
“ஓஹ்! அப்போ உங்க அம்மா பண்ண தப்பு தெரிஞ்சும் நீங்க சமாதானம் பேச வந்திருக்கீங்க, அப்படித்தானே?”
“நான் அவங்க செய்த தப்பை நியாயப்படுத்த விரும்பல ராதா, ஆனா அதில் எனக்கும் சம்பந்தம் இருக்குன்னு உன்னால எப்படி நினைக்க முடியும்? என் மேலே நீ வைத்த நம்பிக்கை எல்லாவற்றையும் மொத்தமாக அழிச்சுட்டியா?”
“நம்பிக்கையா? அதுவும் உன் மேலே. வாய்ப்பே இல்லை, வாழ்க்கையில் என்ன தப்பு பண்ணாலும் அந்த தப்பை மட்டும் நான் மறுபடியும் பண்ணவே மாட்டேன். இப்போ, இந்த நிமிஷம் உன் முகத்தைக் கூட நான் பார்க்க விரும்பல, தயவுசெய்து இங்கே இருந்து போயிடு”
“ப்ளீஸ் ராதா, அவசரப்பட்டு தப்பான முடிவை எடுக்காதே. ஒரேயொரு தடவை எனக்குப் பேச வாய்ப்பு கொடு, எனக்கொரு வாய்ப்பு தந்தால் தானே என் பக்க நியாயமும் உனக்குப் புரியும்”
“ஓஹ்! நீங்க அப்படி வர்றீங்களா? சரி, சொல்லுங்க. உங்க பக்கம் அப்படி என்ன நியாயம் இருக்குன்னு நானும் தெரிஞ்சுக்கிறேன்” என்று விட்டு அனுராதா அங்கேயிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, கிருஷ்ணாவும் அவளைப் பார்த்துக் கொண்டே அவளெதிரில் அமர்ந்து கொண்டான்.
“ராதா, எனக்கு உன்னோட அம்மா, அப்பா இறந்த விஷயமே இன்னைக்கு காலையில் நான் இங்கே வந்து இந்த போட்டோவைப் பார்த்த பிறகுதான் தெரியும், அதுவரைக்கும் அவங்க உன் கூட இல்லைங்குற விஷயம் கூட எனக்குத் தெரியாது. இது எல்லாவற்றிற்கும் மேலே அவங்களோட இந்த நிலைமைக்கு என் அம்மாதான் காரணம் என்கிற உண்மை இப்போதான் எனக்கு தெரியும், ஒருவேளை ஆரம்பித்திலேயே இந்த விஷயம் எல்லாம் எனக்குத் தெரிந்திருந்தால் அவங்களை இப்படி ஒரு தப்பான வேலையை செய்ய நான் அனுமதித்திருக்கவே மாட்டேன். அவங்க பண்ண தப்புக்கு நிச்சயமாக அவங்களுக்கு தண்டனை கிடைக்கும், ஆனால் அவங்க இது எல்லாம் எனக்காகக்தான் பண்ணேன்னு சொன்னாங்க, அதுதான் அவங்களை விட்டு நான் வந்துட்டேன், அவங்க பண்ண தப்பை உணர்ந்து அவங்க திருந்தாத வரைக்கும் நான் அவங்களைத் தேடி போகவேமாட்டேன், உனக்கு அவங்க பண்ண கெடுதலுக்கு இதுதான் சரியான தண்டனையாக இருக்கும்”
“அடேங்கப்பா! சூப்பர் கிருஷ்ணா, சூப்பர். அட! அட! என்னம்மா கதை சொல்லுற, நீ இஞ்சினியரிங் தானே படிச்ச? ஆனா உனக்குள்ள இப்படி ஒரு கற்பனைத் திறன் இருக்கும்ன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல. எப்படி, எப்படி? இவரு என்னை பாலோ பண்ணிட்டு வருவாராம், இங்கே வந்து என் அம்மா, அப்பா போட்டோவைப் பார்த்து ஷாக்காகி நிற்பாராம், அதற்கு அப்புறம் நான் வெளியே போகச் சொன்னதும் அவங்க அம்மா கிட்ட போய் நடந்தது என்னன்னு கேட்பாராம், உடனே அவங்களும் ஒரு பிளாஷ்பேக்கை சொல்லுவாங்களாம், அதைக் கேட்டு கோபப்பட்டு இவரு வீட்டை விட்டு வெளியே வந்துடுவாராம், நான் இதையெல்லாம் கேட்டு, ‘கிருஷ்ணா! எனக்காக நீங்க உங்க அம்மாகிட்டயே சண்டை போட்டுட்டு வந்துட்டீங்களா’ன்னு கேட்டு அப்படியே மயங்கி போய் நிற்பேனாம். கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும்ன்னு சொல்லுவீங்க போல இருக்கு”
“அப்போ, நீ கொஞ்சம் கூட என்னை நம்பமாட்ட”
“நான் எதற்காக உன்னை நம்பணும்? உன்னை நம்புனா ஏதும் அவார்டா தரப் போறாங்க? நான் இங்கே வந்ததே உன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் வேரோடு அழிக்கத்தான், அதற்கு பகடைக்காய் நீ, அவ்வளவுதான்”
“உனக்கு என்ன வேணும்? பழி வாங்கணும் அவ்வளவுதானே? என்னை என்ன வேணும்னாலும் பண்ணு, என் வீட்டு ஆளுங்களை விட்டுடு. அவங்க பண்ண தப்புக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும், அதற்காக நீ உன் வாழ்க்கையை அழிக்க வேண்டாம் ராதாம்மா”
“ஓஹ்! கதை அப்படி போகுதா? அப்போ நீ இங்கே வந்தது உன் வீட்டு ஆளுங்களை நான் எதுவும் பண்ணாமல் இருக்கணும், நீ தியாகி மாதிரி என்கிட்ட சரணடைந்து நிற்கணும், அப்படித்தானே?”
“அப்படி இல்லை அனுராதா, நீ தப்பான வழியில் போகக் கூடாது, அதுதான் என் எண்ணம்”
“தப்பான வழியா?” கிருஷ்ணாவைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே அவன் முன்னால் வந்து நின்ற அனுராதா,
“என்னுடைய அகராதியில் இரண்டே இரண்டு விடயம் தான், நான் என்ன எல்லாம் பண்ணுறேனோ அதெல்லாம் சரி. நீயும், உன் குடும்பமும் என்ன எல்லாம் பண்ணுறீங்களோ அதெல்லாம் தப்பு. இதைத்தவிர வேறு எதுவும் என் மனதில் பதியாது. அதனால என்னை வேவு பார்க்கும் வேலையை விட்டுட்டு உருப்படியாக ஏதாவது பண்ணு, போ” என்றவாறே கிருஷ்ணாவின் அருகிலிருந்த அவனது பையை எடுத்து வெளியே விட்டெறிந்தவள்,
“உன்னுடைய இந்த பை மாதிரி உன்னையும் தூக்கி எறிய எனக்கு ரொம்ப நேரம் ஆகாது, அதனால நான் பொறுமையாக பேசும் போதே வெளியே போயிடு, உன் மரியாதையை காப்பாற்ற நினைத்தால் கிளம்பி போ” என்று விட்டு அவனைத் தாண்டிச் செல்லப் போக, அவனோ அனுராதாவின் பின்னால் கெஞ்சிக் கொண்டே நடந்து செல்ல ஆரம்பித்தான்.
ஒரு சில நிமிடங்களுக்கு மேல் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனது சட்டைக் காலரை வேகமாகப் பற்றியவள் அவனை தரதரவென இழுத்துக் கொண்டு சென்று தன் வீட்டு வாயிலிலிருந்து வெளியே தள்ளி விட, அவனோ நிலை தடுமாறி வாயில் படிகளில் உருண்டு போய் மண்தரையில் வீழ்ந்தான்.
“இதோ பார், இன்னைக்கு உனக்கு ஏற்பட்ட இதே நிலைமை கூடிய சீக்கிரம் உன் வீட்டிலிருக்கும் எல்லோருக்கும் ஏற்படும், அதுவும் என்னால தான் ஏற்படும். அதையெல்லாம் பார்க்க தயாராக இருந்துக்கோ” என்று விட்டு அனுராதா வீட்டுக் கதவை வேகமாக அறைந்து சாத்தி விட்டு உள்ளே சென்று விட, கிருஷ்ணா கீழே விழுந்ததில் அடிபட்ட கால்களுடனும், அங்கங்கே ஏற்பட்ட சிறு சிராய்ப்புகளுடனும் தள்ளாடியபடி தன் பையை எடுத்துக்கொண்டு அந்த வீட்டின் தோட்டத்தில் போடப்பட்டிருந்த மர நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.
“ராதா, ஏன் நான் சொல்லுவதைக் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மாட்டேங்குறா? என் அம்மா பண்ண தப்புக்காக அவ என்னைத் தண்டிக்க நினைக்கிறா, பரவாயில்லை, ஆனா எந்த தப்புமே செய்யாத என் தம்பி, தங்கையை ஏன் தண்டிக்கணும்? அவளோட இந்த எல்லையில்லாத கோபம் அவளுக்கு எத்தனை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்ன்னு அவளுக்குப் புரியலையா? அவகூட இருந்து அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை எது, தப்பான விடயம் எதுன்னு புரியவைக்கலாம்ன்னு தானே நான் இவளைத் தேடி வந்தேன், ஆனா இவ என் வார்த்தையைக் கேட்க கூட விரும்பல, இதற்கு எப்படி நான் தீர்வு காணுவேன்?” தன் கையிலும், கால்களிலும் ஏற்பட்டிருந்த சிறு சிறு காயங்களை ஆராய்ந்து பார்த்தபடியே கிருஷ்ணா அனுராதாவின் நடவடிக்கைகளை எண்ணிக் கவலை கொண்டவனாக அமர்ந்திருக்க, மறுபுறம் அனுராதா எந்தவொரு சிந்தனையும், கவலையும் இன்றி தான் சமைத்து வைத்த உணவை எடுத்து உண்ணத் தொடங்கியிருந்தாள்.
மாலை நேரம் தன் வேலைகள் முடியும் வரை வீட்டிற்குள்ளேயே இருந்தவள் மறந்தும் கூட கிருஷ்ணாவைத் தேடி வரவில்லை, ஏன் அவன் அங்கே இருக்கிறானா என்று கூட பார்க்க முயற்சிக்கவில்லை.
வழமை போல் தன் வேலைகளை முடித்து விட்டு தனக்கான இரவுணவையும் செய்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியவள் தோட்டத்தில் சோர்ந்து போய் அமர்ந்திருந்த கிருஷ்ணாவைப் பார்த்தபடியே வீட்டைப் பூட்டிவிட்டு காலையில் தான் வந்தே வழியே சென்று விட, கிருஷ்ணா அவளைப் பாவமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“இவ என்னை ஒரு சக மனுஷனாக கூட மதிக்கல போல இருக்கே, வீட்டை வேறு பூட்டிட்டு போயிட்டா, அப்படின்னா இன்னைக்கு நமக்கு இந்த தோட்டம் தான் பெட்ரூம் போல” என்றவாறே அந்த தோட்டத்தை சுற்றி நோட்டம் விட்டுக் கொண்ட கிருஷ்ணா தன் கையிலிருந்த பையை தலையணை போல வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்துக் கொண்டான்.
மாலை மங்கி வானம் மெல்ல மெல்ல இருளைத் தத்தெடுக்க ஆரம்பித்திருக்க, காலையிலிருந்து பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த கிருஷ்ணா தன்னையும் அறியாமல் கண்ணயர்ந்திருந்தான்.
அடுத்த நாள் தனக்கு என்னவிதமான அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தரக் காத்திருக்கின்றதோ என்று எண்ணியபடியே கிருஷ்ணா உறங்கியிருந்த நேரம், அனுராதா அவனது வீட்டைச் சென்று சேர்ந்திருந்தாள்.
மதிய நேரம் கிருஷ்ணா கோபமாக வீட்டை விட்டு வெளியே சென்றதிலிருந்து அழுதபடியே அமர்ந்திருந்த வள்ளி மாலை நேரம் வாயில் கதவைத் திறந்து கொண்டு யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டதும், “கிருஷ்ணா! என் கிருஷ்ணா வந்துட்டான்” என்றவாறே வாயிலை நோக்கி ஓடிச் செல்ல, அங்கே புன்னகை முகமாக அனுராதா நின்று கொண்டிருந்தாள்.
“நீயா?” வள்ளியின் அதிர்ச்சியான முகபாவனையைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அனுராதா அவரைக் கடந்து செல்லப் போக,
அவசரமாக அவள் முன்னால் வந்து நின்ற மூர்த்தி, “கிருஷ்ணா இல்லாமல் நீ மட்டும் வந்திருக்க? எங்கே என் பையன்?” என்று கேட்கவும்,
சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டுக் கொண்டவள், “ஓஹ்! உங்க பையன் வீட்டை விட்டு ஓடிப் போயிட்டானா?” என்று கேட்க, வள்ளி கோபத்துடன் அவளை அடிக்க தன் கையை உயர்த்தி இருந்தார்.
வள்ளியின் ஓங்கிய கையை தன் பலம் கொண்டும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட அனுராதா, “அத்தை, உங்களுக்கு எப்போ பாரு அவசரம். ஒண்ணு ஆளைக் காலி பண்ணுறது, இல்லைன்னா இப்படி கையை ஓங்குறது. ஆனா கையை ஓங்க முன்னாடி எதிரில் இருக்கும் ஆளைப் பற்றி தெரிஞ்சு உயர்த்தணும், என்ன சரியா?” என்றவாறே அவரது கையை உதறிவிட, அவரோ நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
“வள்ளி!”
“ஐயோ! அம்மா” மூர்த்தியும், கிருஷ்ணாவின் தம்பி, தங்கையும் தங்கள் அன்னை கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து பதட்டத்துடன் அவரருகில் ஓடிவர, அவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் தன்னைறைக்கு வந்து சேர்ந்த அனுராதா எப்போதும் போல ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதில் மூழ்கிப் போய் விட, மறுபுறம் வள்ளி மற்றும் மூர்த்தி கிருஷ்ணாவை எண்ணி வெகுவாகக் கலங்கிப் போயினர்.
“என்னங்க இது? கிருஷ்ணா இவளுக்காகத் தான் நம்ம கூட சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போனான், ஆனா இப்போ இவ மட்டும் இங்கே வந்திருக்கா, நம்ம பையன் எங்கேங்க போய் இருப்பான்?”
“அதுதான் வள்ளி எனக்கும் புரியல, இப்படி ஒரு மனசாட்சி இல்லாத கொடுமைக்காரிக்காக அந்த பையன் இத்தனை வருஷம் பெற்று, வளர்த்த அம்மா, அப்பாவையே உதறித் தள்ளிட்டுப் போயிட்டான். அப்படியிருந்தும் இவ அவனை மதிக்கக்கூட இல்லை போல இருக்கே” மூர்த்தி தான் அனுராதாவின் குடும்பத்தினருக்கு செய்த தவறை சிறிதும் நினைத்துப் பாராதவராக அவளைத் திட்டியபடியே தன் மனைவியின் கைகளுக்கு மருந்திட்டுக் கொண்டிருக்க, அத்தனை நேரம் அமைதியாக இருந்த வானம் கூட அவர் சொன்ன விடயங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் தன் கோபத்தை வெளிப்படுத்துவது போல சடசடவென மழையைப் பொழிய ஆரம்பித்திருந்தது.
நேரம் செல்லச் செல்ல இடியும், மின்னலும் சேர்ந்து மழையின் வேகத்தை அதிகரித்திருக்க, வள்ளி தவிப்போடு தன் கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“ஏங்க, மழை வேறு ரொம்ப அதிகமாகிட்டே போயிட்டிருக்கு, கிருஷ்ணா வேறு எங்கே போனான்னு தெரியலை. அந்த பொண்ணு கிட்ட மறுபடியும் கேட்டுப் பார்க்கலாம் வாங்க” என்றவாறே வள்ளி மூர்த்தியை அழைத்துக் கொண்டு சென்று அனுராதாவின் அறைக் கதவைத் தட்ட,
அவர்கள் இருவரையும் வெகு நேரம் காத்திருக்கச் செய்து விட்டு தன் அறைக் கதவைத் திறந்தவள், “எதற்காக இந்த நடு ராத்திரியில் கதவைப் போட்டு உடைக்குறீங்க? வயதான காலத்தில் ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கலாம் தானே? சும்மா எப்போ பாரு நொய் நொய்னு எதையாவது பேசிட்டே இருக்கணுமா? எதற்காக கதவைத் தட்டுனீங்க?” கோபமாக அவர்களைப் பார்த்து வினவ,
அவளது பேச்சில் சங்கடத்துடன் நின்று கொண்டிருந்த வள்ளி, “வெளியே மழை அதிகமாக இருக்கு, கிருஷ்ணா வேறு வீட்டில் இல்லை, அவன் பத்திரமாக இருக்கானா, இல்லையான்னு மட்டும் சொல்லு. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்” என்றவாறே அவளைப் பார்த்து தன் இரு கரம் கூப்பி நிற்க,
தன் கண்களை கசக்கி கொண்டு அவரை ஆச்சரியமாக பார்த்தவள், “பரவாயில்லையே, என் மாமியார் என் முன்னாடி இப்படி நிற்பதைப் பார்க்கும் போது சும்மா ஜில்லுனு இருக்கு, ஆனா அதற்காக எல்லாம் உங்க கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. வேணும்னா இப்படியே கொஞ்ச நேரம் என்னைப் பார்த்து கெஞ்சிக் கேட்டுட்டு நில்லுங்க, என் மனசு மாறுனா சொல்லுறேன்” என்றவாறே அவர் முன்னால் நாற்காலி ஒன்றைப் போட்டு அமர்ந்து கொள்ள, மூர்த்தி கண்கள் கலங்க தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தார்.
“என்ன மாமனாரே! இதற்கே இப்படி தயங்கினால் இன்னும் என்ன என்னவோ எல்லாம் வைத்திருக்கேன், அதெல்லாம் எப்படி தாங்கப் போறீங்க?” முற்றிலும் சோர்ந்து போனவர்களாக நடந்து செல்லும் கிருஷ்ணாவின் பெற்றோரைப் பார்த்தபடியே தன் முகத்தில் மறையாத புன்னகையுடன் தன் கட்டிலில் சென்று விழுந்த அனுராதா நிம்மதியாக உறக்கத்தை தழுவிக் கொள்ள, மறுபுறம் கிருஷ்ணா மழையில் நனைந்தபடி நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தான்…….