Kaalangalil aval vasantham 17 (1)

17

மூன்றாம் நாளாக அந்த அறையிலேயே வாசம். ஜுபிடர் கணக்கு வழக்குகளை தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தனர். ஷானும் ப்ரீத்தியும் அந்த அறையை விட்டு நகரவில்லை. அவசரத் தேவைக்கு மட்டும் வெளியே சென்று விட்டு வந்தனர். மற்றபடி நாயரும், சாலமனும் அவ்வபோது வந்து சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தனர். ரவி அவ்வப்போது வந்து பார்வையிட்டு சென்றான். அவனது கண்களில் ரேசர் கூர்மை!

“எதுவா இருந்தாலும் என்னைக் கேளு ஷான்…” அவனது வார்த்தைகளில் அத்தனை கபடம். அதை கண்டுகொண்டவனின் முகமோ, அதை சற்றும் வெளிகாட்டவில்லை.

“கண்டிப்பா மாமா. ஜஸ்ட் ஒரு ஐடியாக்கு தான் பாக்கறேன். நீங்க இருக்கீங்கல்ல…” வார்த்தைகளில் தேன்!

“கண்டிப்பா ஷான். யூ கேன் கௌன்ட் மீ இன்…”

“சியூர் மாமா. உங்களை தவிர வேற யாரை நம்புவேன். யார் யாரையோ நம்பி நான் வீணா போனது போதும். நீங்க சொன்னது எதுவுமே அப்ப எனக்கு உரைக்கல. இப்ப புரியுது. யூ ஆர் கரெக்ட்…” உருக்கமாக அவன் கூறியதை கேட்டபோது ரவிக்கு உள்ளுக்குள் பூரிப்பு. அதை பெரிதாக வெளிகாட்டிக் கொள்ளவில்லை.

“விடு ஷான். அதெல்லாம் கெட்ட நேரமா மறந்துடு…” ஆறுதல் கூறுவது போல தோன்றினாலும் அந்த வார்த்தைகளில் சற்றும் உண்மையில்லை. அது வெளிப்படையாகவே தெரிந்தது.

“இதை முடிச்சுட்டு அப்புறமா ஐபிஎல் டீம் செலெக்ஷன் டிஸ்கஷன் வெச்சுக்கலாம் மாமா. நீங்க என்ன சொல்றீங்களோ அதுதான் என் முடிவும். ஆனா உங்க கூட இருந்து என்ன பண்றது, எப்படி பண்றதுன்னு பார்த்துக்கறேன்…” வார்த்தைகளில் அத்தனை பணிவு. இவன் உண்மையில் ஷான் தானா என்று ரவிக்கு சந்தேகம் வந்தது. ஆனாலும் ஸ்வேதா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்று நினைத்து பூரித்துக் கொண்டான்.

“சியூர் ஷான்…” என்றவன், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினான்.

ஆகாஷ் இரவு மட்டும் வீட்டுக்கு சென்றான். ஆனால் உதவியாளர்கள் இடைவெளியில்லாமல் இருந்து கொண்டே தான் இருந்தனர்.

இரவில் யாரும் உதவிக்கு இல்லையென்றாலும் இந்த இருவருக்கும் இடைவெளியில்லாமல் வேலை இருந்து கொண்டே இருந்தது.

பத்தாண்டு கணக்கை பார்த்து முடிக்க வேண்டும் என்று ஷான் முடிவு செய்திருந்தாலும் மூன்று நாளில் இரண்டாண்டுகளை தாண்ட முடியவில்லை.

“ஒன் ஹவர் தூங்கு ஷான். இதுவரைக்கும் எடுத்த ரிப்போர்ட்ஸ சார்ட் அவுட் பண்ணிடறேன்.” லேப்டாப்பில் கண்களை பதித்தபடி ப்ரீத்தி கூற,

“ஓகேடா. ஒன் ஹவர்ல எழுப்பி விட்டுடு.” என்றபடி அங்கிருந்த சோபாவிலேயே படுத்துக் கொண்டான்.

அவன் எழுந்த பின் ப்ரீத்தி உறங்குவாள்.

இப்படித்தான் ஜுபிடரின் தலைமை அலுவலகத்தில் தான் கடந்த மூன்று நாட்களாக ஜாகை இருவருக்கும். மொத்த கணக்கையும் ஷான் பார்க்கிறான் என்றதும், மாதேஸ்வரனுக்கே அவரறியாமல் பதட்டம் தொற்றிக் கொண்டது.

“கொஞ்சம் நிதானமா பார்க்கலாமே ஷான்.” என்று மெல்ல சொன்னாலும்,

“இல்லப்பா. நான் உள்ள வர்றேன்னா அதுக்கு முன்னாடி, இங்க இருக்க நிலைமை முழுசா தெரியனும். ஒவ்வொரு டிப்பார்ட்மெண்ட்டும் என்ன நிலைமைன்னு கணக்கைப் பார்த்தாத்தான் அசெஸ் பண்ண முடியும். மத்தவங்க பார்ப்பாங்கன்னு எதையும் நான் விட முடியாது. முழுசா என் கண்ட்ரோல்ல இருக்கணும்.” என்றவனுக்கு என்ன பதில் சொல்ல?

அவன் சொல்வதுதானே சரி. இவ்வளவுக்கும் அவனொன்றும் சிறு பிள்ளை இல்லையே! வெற்றிகரமாக தனியொருவனாக கட்டுமானத் தொழிலை நடத்தி வருபவன் தானே! இத்தனை வருடங்களில் அவனது அணுகுமுறை புரியாமலில்லை. அவன் இறங்கிவிட்டால், அந்த இடம் முழுமையாக அவனுக்கு மட்டுமே என்பதில் தெளிவாக இருப்பவன். தேவையற்ற தலையீடுகளை விரும்பவே மாட்டான்.

எதிர்காலம் இவன் தான் எனும் போது அவன் போக்கிற்கு போவதுதான் சரி என்று தோன்றியது அவருக்கு. அதிலும் இத்தனை நாட்களாக இந்த பக்கமே தலை வைத்து படுக்காதவன், முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில் அளவில்லா ஆனந்தம். ஆனாலும் மகன் தன்னை வருத்திக் கொள்ள கூடாதே என்ற எண்ணம் மட்டும் தான்.

அதனாலேயே அவ்வப்போது பிரீத்தியிடம் அவனை கவனித்துக் கொள்ளும்படி வலியுறுத்திக் கொண்டிருந்தார். அவள் உடன் இருந்தது, நிச்சயமாக அவரளவில் தெம்பாக இருந்தது.

“சரிப்பா. நீ என்ன செய்ய நினைச்சாலும் ஓகே.” என்று அவர் முழு அனுமதி கொடுத்துவிட, அப்போது ஆரம்பித்தது, இந்த மாரத்தான்.

ஒவ்வொரு டிவிஷனின் கணக்கையும் அந்தந்த பிரிவின் தலைவர்கள் வந்து விளக்கினார்கள். அது எவ்வளவு நேரமானாலும் விடவில்லை. மாற்றி மாற்றி அவனுக்கு கேள்விகள் இருந்து கொண்டே இருந்தன. அவர்கள் விளக்கி முடித்தவுடன், அந்த கணக்குகளை தனியே பார்வையிட்டுவிட்டு, அந்த பிரிவின் அதிகாரிகளிடம் தனது சந்தேகங்களை மீண்டும் தீர்த்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு பிரிவிலும் கொடுக்கும் ரிப்போர்ட்களை வாங்கி சேகரித்து, அதனை பார்வையிட்டு சரிபார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி, உடன் நாயர்.

அக்கௌண்ட்ஸில் அவளுக்கு பெரிய அனுபவம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என்பதால், ஒவ்வொன்றையும் அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். ப்ரீத்திக்கு அவர் கூறுவதை கேட்க ஆர்வமாக இருந்தது.

முதலிலெல்லாம் கிரெடிட் டெபிட் என்பதிலேயே எரிச்சலாகி விடும். இவளுக்கு அக்கௌண்ட்ஸ் பின்னணி இல்லையே, அறிவியல் தானே!

அதன் பின் ஷானோடு அமர்ந்து கணக்கு வழக்குகள் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக பழகியது. இப்போது நாயரின் விளக்கங்களில், முழுதாக தேர்ந்து விட்டது போல சந்தோஷமாக அவருடன் விவாதித்துக் கொண்டிருந்தாள். அவளது ஆர்வத்தைப் பார்த்த ஷானுக்கும் இதழோரம் புன்னகை மலர்ந்தது.

“ப்ரீத்…” அவனது மானிட்டரில் கண்களை பதித்தபடியே அழைக்க, நாயரிடம் பேசிக் கொண்டிருந்த ப்ரீத்தி நிமிர்ந்து அவனை பார்த்து,

“எஸ் ஷான். சொல்லுங்க…” என்று கேட்க,

“பசிக்குது… என்ன பண்ணலாம்?” என்று கேட்டான். கேட்டபோது மணி இரவு பதினொன்று. தன்னிச்சையாக கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தார் நாயர். அக்கௌண்ட்ஸ் விவரங்களை சொல்லிக் கொண்டிருந்ததில் அவருக்குமே நேரம் போனது தெரியவில்லை.

மூவருமே எதுவும் உண்டிருக்கவில்லை. மற்ற இருவருக்கும் அது பழக்கம் தான் என்றாலும், பாவமாக நாயரை பார்த்தபடி, “என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என்று ஷானிடம் கேட்டாள்.

“எதாவது பண்ணு… அங்கிளுக்கும் சேர்த்ததே பண்ணு…” என்றான், மானிட்டரிலிருந்து கண்களை விலக்காமல்!

“இல்ல ஷான். வீட்ல வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. நான் கிளம்பட்டா?” என்று கேட்க, ஷான் நிமிர்ந்து ப்ரீத்தியை பார்த்தான். ‘அவர் கிளம்பட்டும்’ என்று அவள் கண்களால் சைகை செய்ய, அவனும் அவளுக்கு ஒப்புதலாக சைகை செய்தான். இருவரின் சைகை உரையாடலை பார்த்தும் பார்க்காதது போல ரசித்துக் கொண்டிருந்தார் நாயர்.

அவர்களின் அந்த புரிதல் தான் அவரையும் சாய்த்தது.  அது அவ்வளவு அழகாக இருந்தது.

“எதாவது லைட்டா சாப்பிட்டு போங்க அங்கிள். இவ்வளவு நேரம் கழிச்சு பட்டினியா அனுப்ப எனக்கு ஒருமாதிரியா இருக்கு.”

“இல்ல ஷான். வீட்டுக்கு போய் உன் மாமி கையால ரச சாதம் சாப்பிட்டா தான் எனக்கு திருப்தி.” என்று சொன்னதை கேட்டு அவன் சிரித்தான்.

“லவ்வாங்கி ப்ரீத். கேட்டியா?”

“கேட்டுட்டுத்தானே இருக்கேன்.” அவளும் சிரித்தாள்.

“உங்களுக்கு சிரிப்பா இருக்கா? இருக்கட்டும் இருக்கட்டும். நானும் பார்க்கத்தானே போறேன்.” என்று சிரித்தபடியே எழுந்தவர், நெட்டி முறித்தார்.

“என்ன பார்ப்பீங்க அங்கிள்?” நமுட்டு சிரிப்போடு கேட்டவனை, கிண்டலாகப் பார்த்தவர்,

“எப்படியும் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணத்தான் போறீங்க… என்னை மாதிரியே லவ்வாங்கி உருட்டத்தான் போறீங்க…” என்று சிரித்தார்.

“வாட்? ரெண்டு பேருக்குமா?” இருவருமே ஒரே குரலில் கேட்க, நாயர் சிரித்தபடி,

“ஆஹா… தனித்தனியா கல்யாணம் ஆகாதா? இல்லைன்னா காலம் முழுக்க தனியாவே இருக்க போறீங்களா இரண்டு பேரும்?” என்று கேட்க,

“அதப்பத்தி இப்ப எதுக்கு நாயரே?” என்று பதிலைக் கூறியபடி சிரித்தான் ஷான். முதலிலெல்லாம் கிருஷ்ணன் நாயரை சந்தோஷ மனநிலையில் அவன் அப்படித்தான் அழைப்பான்.

“உன்னோட சிரிப்ப பார்த்தா என் செல்லத்துக்கு கல்யாணம் பண்ண விட மாட்ட போல!” என்று அவனை ஒரு மார்கமாக பார்த்தபடி அவர் கேட்க,

“என்னை மூணு நாளா ஹாஸ்டலுக்கே விடலையாம். இதுல மேரேஜ் லெவலுக்கு போறீங்களே சர்.” என்று பெருமூச்சு விட்டாள் ப்ரீத்தி.

“ஏய்… என்ன சேம் சைட் கோல் போடற? நானும் தானே வீட்டுக்கு போகாம வேலை பாக்கறேன்…”

“எள்ளு தான் எண்ணைக்கு காயனும். எலிப்புழுக்கை எதுக்கு மேன் காயணும்?”

“இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற?”

“இன்னொரு நாள் இதே ட்ரெஸ்ல இருந்தா, அடிக்கற கப்புல ஆபீஸ்ல இருக்கவங்க எல்லாம் மயக்கம் போட்டுடுவாங்க பாஸ். அந்த மகா மோசமான சிச்சுவேஷனை நீங்க நினைச்சே பார்க்க மாட்டீங்களா?”

“ஏன் பக்கி… உன்னை போக வேண்டாம்ன்னு நான் கைய புடிச்சுகிட்டு இருந்தேனா? நாயர்… நீங்க போறப்ப இதையும் ஓட்டிகிட்டு போங்க…” என்றவனை இடுப்பில் கையை வைத்து முறைத்துப் பார்த்தவள்,

“யோவ்… நான் என்ன ஆடா மாடா? ஓட்டிட்டு போக?”

“ஆடோ மாடோ… ஆக மொத்தம் மனுஷ பிறவி மட்டும் இல்லைன்னு தெரியும்…” சிரிக்காமல் அவன் கூற,

“ஆமா மனுஷ பிறவியா இருந்தா இப்படி நீ கன்னாபின்னான்னு வேலை வாங்க முடியாது. நடுராத்திரில பேய் மாதிரி முழுச்சுட்டு இருக்க சொல்ல முடியாது…” கடுப்பாக அவள் கூறுவது போல இருந்தாலும், அவளைப் பற்றி அவனுக்குத் தெரியும். இதையெல்லாம் அவன் சொல்லித்தான் ப்ரீத்தி செய்ய வேண்டும் என்பதே இல்லை. அவனது கண்களை பின்பற்றிக் கொள்பவள், அவ்வப்போது இப்படி வம்பு செய்வது சாதாரணம் என்பதையும் அவன் அறிவான்.

“எக்சாக்ட்லி…” என்று சிரித்தவன், “டின்னர் ஆர்டர் பண்ணிட்டு மிச்ச சண்டைய போடு பாப்பா. பசிக்குது…” என்று கூற, இருவரையும் பார்த்து புன்னகைத்தார் நாயர்.

“என்ன ஆர்டர் பண்ண?”

“என்ன இருக்கோ அதை பண்ணு… ஹெவியா வேண்டாம். லைட்டா, எதாவது…”

இருவரின் இந்த நட்பை பார்க்கும் போது சற்று பொறாமையாகக் கூட இருந்தது. ஆனால் அதையும் தாண்டி, இருவருமே ‘மேட் பார் ஈச் அதர்’ என்று நினைக்காமலிருக்க முடியவில்லை.

“பேசாம கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வாங்க பிள்ளைங்களா. கொஞ்சம் பிரெஷ்ஷாகும்.” என்று அவர் கூற,

“இல்ல சர். முக்கியமான வேலை. ட்ரஸ்ட் அக்கௌண்ட்ஸ்ல நிறைய சந்தேகம் வருது. அதை முடிக்காம வெளிய வர முடியாது.” ப்ரீத்தி தான் முதல் ஆளாக மறுத்தாள்.

சந்தேகம் என்றதும் புருவத்தை சுருக்கியபடி யோசித்த ஷான், எழுந்து அவளது லேப்டாப்பை நோக்கி வந்தான். கிளம்ப இருந்த கிருஷ்ணன் நாயரும் அமர்ந்து கொண்டார்.

“நீங்க கிளம்புங்க நாயர்.” என்று அவன் கூறினாலும், அப்படியே விட்டுப் போக அவரால் முடியவில்லை.

“இல்ல ஷான். என்னன்னு க்ளியர் பண்ணிட்டு போறேன்…” என்றவர், “ட்ரஸ்ட் எப்பவும் இன்டிப்பண்டன்ட். அதோட அக்கௌண்ட்ஸ் முழுக்க பார்க்கறது வைஷ்ணவி மட்டும் தான். வேற யாரும் அதை பார்க்கறது இல்ல…” என்றவருக்கு நெற்றி சுருங்கியது.

லேப்டாப்பில் தீவிரமாக கண்களை பதித்திருந்த ப்ரீத்தியை பார்த்து, “என்ன சந்தேகம்டா?” என்று கேட்ட ஷானை நிமிர்ந்து பார்த்தவள்,

“இல்ல ஷான், இப்ப தான் பார்க்க ஆரம்பிச்சுருக்கேன். கேஷ் நிறைய உள்ள வந்திருக்கு. எல்லாமே டொனேஷனா… அதே மாதிரி வெளியவும் போயிருக்கு… எப்படி இவ்வளவு பெரிய அமௌன்ட் உள்ள வரும்… ஈசியா வெளிய போகும்?” என்று நெற்றியை தேய்த்துவிட்டபடி அவள் கேட்க,

“கம்பனி ப்ராஃபிட்ல பாதிக்கும் மேல ட்ரஸ்ட்க்கு தான் போகும் ப்ரீத். டேக்ஸ்ல இருந்து தப்பிக்க, நிறைய கம்பெனிஸ் அப்படித்தான் பண்ணுவாங்க.” என்றவனை, நேராக பார்த்து,

“எஸ் ஐ நோ ஷான். அப்படி போறதுன்னா ஒரு ஃபினான்சியல் இயர்ல, ஜுபிடர்ல இருந்து மேக்சிமம் எவ்வளவு எதிர்பார்க்கலாம்…” என்று கேட்க, அவன் நாயரை பார்த்தான்.

“சுமாரா தவுசன்ட் ஸி வரைக்கும் போகலாம் ப்ரீத்தி…” என்று நாயர் பதில் கூற,

“போன ஃபினான்சியல் இயர்ல டுவெல்வ் தவுசன்ட் ஸி உள்ள வந்திருக்கு. வெளிய லெவன் தவுசன்ட் ஸி போயிருக்கு. இது தப்பா தெரியலையா?”

ஷானை கூர்மையாக பார்த்தபடி கேட்ட ப்ரீத்தியை அர்த்தமாக பார்த்தான் ஷான். அது அவர்கள் இருவருக்கும் மட்டும் புரிந்த ஒன்று.

“ட்ரஸ்ட் அக்கௌண்ட்ஸ் இன்டிப்பண்டன்ட் ஷான். அதுக்கும் நம்ம கம்பெனி ஆடிட்டர் க்ரூப்க்கும் சம்பந்தமே இல்ல.” நாயர் சொல்வதில் உண்மை இருந்தது. அறக்கட்டளைகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதில் அவர்கள் குடும்பம் உறுதியாக இருந்திருக்கிறது. அந்த அறக்கட்டளைகள் வழியாகத்தான் உதவிகள் அனைத்தும் போய் கொண்டிருந்தன.

ஊழியர்களுக்கும் மக்களுக்கும் மிகக் குறைந்த விலையில் மருந்துகள், வெறும் பத்து ரூபாய்க்கு சத்தான மதிய உணவு போன்றவை எல்லாம் நடக்க இந்த அறக்கட்டளைகளே காரணம். இப்போதும் கூட அவர்களது கேண்டீன் உணவை பாராட்டாத மக்களே இருக்க முடியாது.

தரமான உணவை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்பதால் கூட்டம் அலைமோதும்.