நேச தொற்று -10b

வெளியே வொய்ங் வொய்ங் என்ற ஒலியுடன் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.  அதில் இருந்து வரிசையாய் பல பேர் இறங்கி வந்துக் கொண்டு இருந்தனர் கைகளில் ஏதோ கருவியோடு. ஒருவர் கைகளில் மைக்கை பிடித்துக் கொண்டு முதலில் மலையாளத்திலும் பிறகு ஆங்கிலத்திலும் சொன்ன செய்தி இது தான்.

“இந்த அபார்ட்மென்ட்டில் வந்து காய்கறி விற்றவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இங்கே உள்ளே அனைவருக்கும் பரிசோதனை செய்ய வந்து இருப்பதாகவும் எல்லோரையும் ஒத்துழைப்பு செய்ய சொல்ல கேட்டுக் கொள்வதாகவும் மைக்கில் தெரிவித்துக் கொண்டு இருந்தார் அவர்.

அதைக் கேட்டு ஆருவிடம் கிலோக்கணக்கில் அதிர்வு!

ஏனென்றால் இத்தனை நாட்களாக ஆதி தான் காய்கறி வாங்கிக் கொண்டு வந்து இருந்தான்.

அதைக் கேட்டதும் ஐயோ என்று இருந்து அவளுக்கு.

காலையில் இரண்டு முறை இருமினானே என்று மனது லேசாகப் பதற்றப்பட வேறு செய்தது.

இவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது.. ஒன்றும் ஆகக்கூடாது என்று பெயரறியாத பல தெய்வங்களிடம் எல்லாம் கோரிக்கை வைத்தாள்.

நிவி,தர்ஷி, ஆதவ், அபி எல்லோரும் அவர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

டெஸ்ட் செய்ய வரும் போது அவரவர் வீட்டில் இருப்பது தானே முறை.

ஆரு கவலையாய் ஆதியைப் பார்த்துக் கேட்டாள்.

“ஆதி ஏன் காலையிலே இரண்டு முறை இருமுனே? உனக்கு தொண்டை வலி ஏதாவது இருக்கா?” என்று கண்களில் நீர் கோர்த்தபடி கேட்டாள்.

“அதெல்லாம் இல்லை ஆரு. காலையிலே புளி சாதம் சாப்பிட்டேன். அது எனக்கு ஒத்துக்காது. அதனாலே தான் லைட்டா இருமுனேன். கொஞ்சமா ஜூரமும் வந்துடுச்சு” என சொல்லிக் கொண்டே இருந்தவன் சட்டென ப்ரக்ஜை போய் அப்படியே  மயங்கி விழுந்தான்.

பதறிப் போனாள் ஆரு.

ஓடிச் சென்று தண்ணீரை கொண்டு வந்து அவன் மீது தெளித்தாள்.

லேசாக கண்விழித்தவனை அணைத்தபடி கூட்டிச் சென்று கட்டிலில் சாய்த்தாள்.

குளுக்கோஸ் கலந்து அவனை குடிக்க வைத்தபடி வாடி இருந்த அவன் முகத்தைக் கண்டாள். இனம் புரியாத திகில் கண்டது அவள் மனது.

“ஐயோ தப்பு பண்ணிட்டேனே. உனக்கு பதிலா நான் காய் வாங்க போய் இருந்தா உனக்கு இந்த நிலைமை வந்து இருக்காதே. உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டேனே. சாரி ஆதி. நீ இப்படி வாடிப் போய் இருக்கிறதைப் பார்க்க பார்க்க என் மனசு வலிக்குது. ஐ யம் சாரி  “

“ஹே ஆரு. இங்கே பாரு. எனக்கு எதுவும் ஆகல. நான் ஓகே தான். என்ன லைட்டா மயங்கி விழுந்துட்டேன். ரெண்டு இருமு இருமிட்டேன். அதுக்குனு எனக்குனு கொரானானே confirm பண்ணிடுவியா? அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆரு எனக்கு பயப்படாதே. அதான் டெஸ்ட் எடுக்க வந்து இருக்காங்க இல்லை. அதுவரை பொறுமையா இரு. என்னை விட்டு விலகியும் இரு. எனக்கு உன் ஹெல்த் முக்கியம். ” என்று அவன் சொல்ல இன்னும் நெருங்கி அமர்ந்தாள்.

“ஹே நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் ஆரு. என்னை விட்டு தள்ளிப் போ. என் பக்கத்துல வராதே” என்று அவன் மீண்டும் தள்ளி உட்கார அவள் மீண்டும் அவன் அருகே அமர்ந்தாள்.

“ஆரு இங்கே பாரு. நான் சொல்றதை ஒழுங்கா கேளு. என்னை விட்டு தள்ளிப் போ.”

“நான் போக மாட்டேன். உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.” என்றாள் தலையை மறுத்து அசைத்தபடி.

“ஏன் ஆரு இப்படி சின்னக்குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற. ப்ளீஸ் தள்ளிப் போ மா.” என அவன் கெஞ்சிக் கொண்டே இருந்த நேரம்  சட்டென இறுக்கி அணைத்துக் கொண்டாள் ஆரு.

அதன் பின்பு ஆதியின் மொழிகள் எங்கே சென்று ஒளிந்து கொண்டது என்பது அவனுக்கு தெரியவில்லை.

தன்னை அணைத்தவளின் தலையை இதமாக வருடினான்.

அந்த சமயம் காலிங்பெல் ஒலிக்க இருவரும் சட்டென விலகி அமர்ந்தனர்.

ஆரு அவனை அமர சொல்லிவிட்டு கதவை திறந்தாள்.

கொரானா பரிசோதனை செய்வதற்காக வாயிலில் ஒருவர் நின்று இருக்க, வேகமாக ஆதியை உள் அறையில் இருந்து கூட்டிக் கொண்டு வந்தாள்.

அவர் ஆதிக்கும் ஆருவுக்கும் பரிசோதனை முடித்த பின்னர் எதிரில் இருக்கும் நிவி வீட்டில் சோதனை செய்ய சென்றனர்.

கதவை மூடியவள் அவனை திரும்பி கலக்கமாக பார்த்தாள். அவள் இதயத்தில் இனம் புரியாத பயம்.

“ஆதி வா நான் உன்னை கட்டிலிலே கொண்டு போய் விடறேன் “

“ஐயோ ஆரு எனக்கும் ஒன்னும் இல்லை. நீ குளுக்கோஸ் தண்ணீர் கலந்து குடுத்ததும் தெம்பா மாறிட்டேன். ஆனால் நீ தான் கலக்கத்துல ரொம்ப வாடிப் போய் இருக்க. போ போய் ரெஸ்ட் எடு “

“நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்று சொல்லி அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

இதுவரை எவ்வளவு உறுதியாய் இருந்த பெண் இவள்!

இன்று எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று உறுதிக் குலைந்து இப்படி சிறுப்பிள்ளையாய் மாறி நிற்கிறாளே என்று கவலைக் கொண்டது அவன் மனது.

“ஆரு மா. பயப்படாதே… எதுவும் ஆகாது. இன்னும் ஒரே நாளிலே ரிசல்ட் தெரிஞ்சுடும். அப்படி கொரானா வந்தாலும் குணப்படுத்த முடியாத வியாதிலாம் இல்லை. சீக்கிரமா குணப்படுத்திடுவாங்க. நீ இப்படி பயப்படாதே ஆரு மா. ப்ளீஸ்”

“என்னனு தெரியல ஆதி. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த காய்கறி வாங்க நான் போய் இருந்து இருக்கலாம்” என்று கலங்கியபடி சுவற்றைப் பார்த்து சொன்னவளை தன் பக்கம் திரும்பினான்.

“ஆரு எனக்கு ஏதாவது ஒன்னுனா கூட நான் தாங்கிடுவேன் தைரியமா இருப்பேன். ஆனால் உனக்கு ஒன்னுனா நான் அவ்வளவு தான். புரிஞ்சுக்கோ. நான் காய் வாங்க போனது தப்பு இல்லை. அது சரி தான்.. ” என்று அவன் சொல்ல அழுதுக் கொண்டே அவன் மார்பில் சாய்ந்தாள்.

“ஹே இப்ப தானே ஆரு சொன்னேன். உனக்கு ஏதாவது ஆனா நான் தாங்க மாட்டேனு. ஒழுங்கா தள்ளிப் போ டி.” என்று சொல்ல அவளோ இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.

அவள் செய்வதைப் பார்த்து ஆனந்தப்படுவதா? இல்லை வருத்தம் கொள்வதா? என்று அறியாமல் நெற்றியில் குழப்ப முடிச்சோடு அப்படியே நின்றான்.

அன்று ஒரு நாள் மட்டும் அவன் அறைக்கும் ஹாலுக்குமாய் நூறு முறைக்கு மேலே நடந்து இருப்பாள்.

இருபது நிமிடத்திற்கு ஒரு முறை temperature செக் செய்து கொண்டே இருந்தாள்.

சாப்பிட வந்தவனின் கைகளை தட்டிவிட்டு அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

அவளது பாசம் கண்டு மெய் சிலிர்த்தவனின் தோளில் மறுபடியும் சாய்ந்தாள்.

என்ன சொன்னாலும் அவள் விலகிப் போக மாட்டாள். எதற்கு வீணாய் சொல்லிக் கொண்டு என்று அமைதியாய் அவன் இருந்த நேரம் ஆரு வாயைத் திறந்தாள்.

“ஆதி இன்னைக்கு உன் ரூம்லயே படுத்துக்கட்டுமா?” என்று கேட்டவளை அதிர்ச்சி கலந்த வியப்போடு பார்த்தான்.

இவளா அவள்?

அன்று கட்டிலில் தூக்கம் வராமல் படுத்ததற்கு எட்டி மிதித்தாளே அவள் தானே இவள்?

ஆனால் அதே இவள் தான் இத்தனை முறை என்னை அவள் அன்பால் ஆச்சர்யப்படுத்துகிறாள்.

உண்மை தான் அடிக்கிற கைகள் தான் அணைக்கும் என்று யோசித்தபடியே அவன் தலை தன்னிச்சையாய் அசைந்து அவளுக்கு சம்மதம் தெரிவித்தது.

அவள் தலையணை போர்வை எல்லாவற்றையும் கொண்டு வந்து அவன் கட்டிலின் மீது வைத்தாள்.

பிறகு temperature தண்ணீர் எல்லாவற்றையும் கொண்டு வந்து அவன் பக்கத்தில் வைத்தாள்.

அவள் அக்கறை அவனை திக்குமுக்காட வைத்தது. கட்டிலின் ஒருபுறம் அவன் படுக்க மறுபுறம் அவள் படுத்தாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.

“ஆரு மா தூங்கு. ரொம்ப சோர்ந்து போய் இருக்கே. இன்னைக்கு ஹாலுக்கும் என் ரூமுக்குமே அந்த நடை நடந்த. ஒழுங்கா படுத்து தூங்கு டா”

“மாட்டேன்”

“ஏன் ஆரு இப்படி சின்னக்குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற.  ஒழுங்கா தூங்கு மா.”

“இல்லை ஆதி. நீ இப்படி இருக்கும் போது எனக்கு எப்படி தூக்கம் வரும்”

“சரி வா நான் உன்னை தூங்க வைக்கிறேன். ” என்று சொல்லி அவன் தொண்டையை சரி செய்துக் கொண்டு பாடத் தயாரானான்.

ஆராரோ ஆரோரிரா
   ஆருக்குட்டிக்கு என்ன ஆச்சோ
கண்ணு இரண்டும்
   நையாகரா ஃபால்ஸ் ஆச்சோ
விடாம பேசுற வாய்க்கு
    பூட்டை பூட்டு போட்டோச்சோ
கெத்து ஆரு எங்க போயாச்சோ
   ஆதி கிட்டே சரண்டர் ஆயாச்சோ
ஆராரோ ஆரோரிரோ
    என் ஆருக்குட்டிக்கு என்ன ஆச்சோ.

என்று அவன் பாட முறைத்தபடி எழுந்து அமர்ந்தாள்

“பாவம் பச்சைப்புள்ளையாச்சே. ஜூரம் வந்தா கஷ்டப்படுமே, போனா போட்டும்னு பாவம் பார்த்து பண்ணா நக்கலாடாவா பாடுற. உடம்பு சரியில்லைனு பார்க்கிறேன் இல்லாட்டி தூக்கிப் போட்டு மிதிச்சு இருப்பேன்” என்று அவள் வார்த்தைகளில் கோபத்தோடு சொன்னாலும் குரலில் கோபம் சிறிதளவும் கோபம் ஒட்டவில்லை.

இதழில் வழிந்த புன்னகையோடு ஆருவையேப் பார்த்தவன், அவளை சிரிக்க வைக்க தான் எடுத்த முயற்சி வெற்றிக் கண்டதும்  புன்னகையோடே படுத்தான்.

நல்ல உறக்கத்தில் அவன் நெற்றியில் அவள் ஸ்பரிசம் படுவதை உணர்ந்தாலும் கண்ணை திறக்கவில்லை அவன்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து அவன் ஜீரத்தை அவள் அளவிட்டுக் கொண்டு இருக்க அதில் அவளது அன்பின் அளவீடும் தெரிய புன்னகையோட கண்ணை மூடிக் கொண்டிருந்தான். அவளும் வெகு நேரம் கழித்து சோர்வோடு கண்களோடு மூடிவிட்டாள்.

இருவரும்  நன்றாக உறங்கிக் கொண்டு  இருந்த நேரம் காலிங் பெல் சப்தம் கேட்டது.

ஆரு அதிகாலை மூன்று மணிக்கே உறங்கி இருந்ததால் முதலில் அவள் கண்ணை திறக்கவில்லை.

ஆதி எங்கே அவள் தூக்கம் கலைந்துவிடப் போகிறதோ என்று எண்ணி வேக வேகமாய் எழுந்து வெளியே போக ஆள் அரவம் கேட்டு ஆருவும் கண் விழித்து இருந்தாள்.

ஆதி கதவைத் திறக்க அங்கே ஒருவர் கையில் பேப்பரோடு நின்று கொண்டு இருந்தார்.

அந்த பேப்பர் கொரானா பரிசோதனை முடிவைத் தாங்கி இருந்தது.

அதைப் பார்த்தவனின் கண்கள் கலக்கத்துடன் நிமிர்ந்துப் பார்க்க எதிரில் ஆரு நின்றுக் கொண்டு இருந்தாள்.

அவனது முக வாட்டத்தில் இருந்தே அதன் முடிவுகளை அறிந்த ஆரு ” ஐயோ ஆதி ” என மடிந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.