நேச தொற்று-3a

இருவரும் அடித்து அடித்து ஓய்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தனர்.

சுற்றி குப்பைக்கூளமாக மாறி இருந்த வீட்டை கண்டு இருவரது முழியும் பிதுங்கியது.

அவனை நோக்கி முறைத்தாள் அவள்.

“ஏன்  என் மேலே தண்ணி ஊத்துன… பாரு உன்னாலே வீடு நாசமா மாறிடுச்சு. “

“பார்ரா… அப்போ நீ அடிச்ச முட்டையிலே அப்படியே வீடு பளபளனு மாறுனா  மாதிரி சொல்ற ஆருஷா.”

“அது நீ தான் என்னை முட்டை அடிக்க தூண்டின… பாரு வீட்டையே எப்படி கோலம் ஆக்கிட்ட! ஒழுங்கா துடைப்பத்தை எடுத்து பெருக்கு”

“முடியாது. நீயும் தானே கெட்சப்பை எடுத்து ஊத்துன… ஒழுங்கா மாப்பை எடுத்துட்டு வந்து வீட்டை துடை.”

“என்ன மிஸ்டர் ஆதி… டோக்கன் இல்லைனு பயம் விட்டு போயிடுச்சு போல சார்க்கு… மறுபடியும் டோக்கன் சிஸ்டம் கொண்டு வர வேண்டியது தான்.”

“இல்லை இல்லை… வேணாம் மறுபடியும் அந்த கொடுமை வேண்டாம்.”என அவன் பதற்றமாய் மறுக்க சத்தமாகவே சிரித்துவிட்டாள்.

“சும்மா தான் சொன்னேன் ஆதி பயப்படாதே.” என்றவள் மாப்பை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்தாள்.

இவன் நைட்டியின் கீழ்ப் பகுதியை எடுத்து லுங்கியை மடித்துக் கட்டுவதை போல கட்டிக் கொண்டு பெருக்க ஆரம்பித்தான்.

இவள் அவனின் பின்னாலேயே மாப் போட்டுக் கொண்டு வந்தாள்.

பெருக்கிக் கொண்டே வந்தவன் திடீரென்று பின்னே வர மாப் போட்ட தண்ணீர் அவன் காலை வழுக்கிவிட்டது.

கீழே விழ போனவனை சட்டென்று தாங்கிப் பிடித்தாள் அவள்.

ஒரு பூங்கொத்தின் கைகளிலா நான்!

ஐயோ உடம்பெல்லாம் சிலிர்க்கிறதே…

அவளின் ஸ்பரிசம் என்னை ரோமாஞ்சனம் கொள்ள செய்கிறதே என்று ஏதேதோ யோசனை செய்து கொண்டு இருந்தவனின் சிந்தனையை கலைத்தது அவளது குரல்.

“டேய் மூதேவி. சீக்கிரமா நிமிர்ந்து நின்னு தொலைடா. என்ன கனம் கனக்குற வெயிட் தாங்க முடியல.” என்று சொல்ல தலையை சொறிந்து கொண்டே அவன் எழுந்து நின்றான்.

அதன் பின்பு இருவரும் வீட்டை சுத்தம் செய்து முடித்த நேரம் வாயில் அழைப்பு மணி ஒலித்தது. 

இவன் கதவைத் திறந்தான்.

“ஹே ப்யூட்டி.. ” என கதவுக்கு அருகில் நின்று இருந்த பெண்ணை பார்த்து சொல்ல நினைத்த நேரம்,

“ஹேண்ட்ஸம் வித் நைட்டி.. நைட்டி.. நைட்டி” என்ற வார்த்தை பல அலைவரிசைகளில் அவன் மனதில் ஒலித்து அடங்கியது.

வாயை இறுக மூடிக் கொண்டான்.

“ஆரு… இன்னைக்கு காலையிலே இரண்டு லுங்கியும் ஷர்ட்டும் கேட்டு மெசேஜ் பண்ணி இருந்தே இல்லை. இந்தா இது என் அண்ணாவோடது தான். ” என்று ஒரு கவரை கொடுத்தாள்.

“தேங்க்ஸ் தர்ஷி. உள்ளே வா… ஏன் வெளியவே நிக்குற? “

“இல்லை ஆரு மா… கொஞ்சம் வேலை இருக்கு, நான் மதியமா வீட்டுக்கு வரேன். ” சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் அவள்.

‘ஓஹோ இந்த பியூட்டி பேரு தர்ஷியா… நல்லா தான் இருக்கு பேரு’ என்று மனதுக்குள் நினைத்தவன் ஆருவிடம் இருந்து அந்த கவரை வாங்கிக் கொண்டு முன்னே இரண்டு அடி வைத்தான்.

ஏதோ தோன்ற திரும்பி அவளைப் பார்த்தான்.

அவள் என்னவென்று பார்வையாலே கேட்க,

“இல்லை நான் கூட நீ என்னை பழி வாங்க தான் நைட்டி கொடுத்தியோனு தப்பா நினைச்சுட்டேன். ஆனால் இப்போ யோசிச்சு பார்க்கும் போது தான் புரியுது.
thanks ஆரு. காலையிலேயே மெசேஜ் பண்ணி நைட்டி கொண்டு வர சொன்னதுக்கு… சீ சீ ஷர்ட் கொண்டு வர சொன்னதுக்கு” என்று தலையில் அடித்துக் கொண்டு சொல்ல சிறு சிரிப்போடு அந்த நன்றியை ஏற்றுக் கொண்டு அன்றைக்கான அலுவலக வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள்.

இவனுக்கோ எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பது பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.

கையில் அலைபேசியும் இல்லை.

அது நீரோடு போய்விட்டது.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு எதிர் வீட்டில் இருந்த பாப்பா நியாபகம் வந்தது.

கதவோரம் நின்று கொண்டு அபி அபி என்று கூப்பிட கதவை திறந்து கொண்டு அபி வந்தான்.

“ஹேய் அபிக்குட்டி… அங்கிள் பேரு தெரியுதா உங்களுக்கு… காலையிலே பார்த்தோமே. ” என்று இவன் கேட்க அந்த குழந்தையோ நாலாபுறமும் தன் பார்வையை திருப்பி எதையோ தேடியது.

இவன் மீண்டும் குழந்தையின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முனைந்தான்…

“அபிக்குட்டிக்கு அங்கிள் பேரு தெரியலயா?” என்று கேட்க உதட்டை பிதுக்கிய அந்த குழந்தை

“என் கண்ணுக்கு உங்க பேரு தெரியலையே அங்கிள் ” என்று சொல்ல வாயடைத்துப் போனான் இவன்.

‘அடப்பாவி இரண்டு வயசு இருக்குமாடா உனக்கு அதுக்குள்ளே இப்படி கலாய்க்கிறீயே’ என்று அரண்டு போய் நின்ற நேரம் அந்த சிறு குழந்தையின் பின்னே இன்னொரு பெரிய குழந்தை வந்து நின்றது அழுத படியே

“அபி வாடா நமக்கு இந்த வீடு வேணாம். வேற வீட்டுக்கு போயிடலாம். ” என்று புலம்பியபடியே சொல்லி கொண்டு இருந்த அந்த குழந்தையை புன்னகையுடன் பார்த்தான்.

“ஹாய் ஸ்வீட்டி ஏன் அழறீங்க.” என்று கேட்க அவனைப் பார்த்து யாரென்று கேள்வியாய் நோக்கியது அந்த குழந்தை.

“நான் ஆரு அக்காவோட கெஸ்ட். ” என்றிவன் சொல்ல அந்த குழந்தை அவனைப் பார்த்து புன்னகைத்தது.

“ஓ ஆரு அக்கா கெஸ்டா… “

“ஆமாம் டா ஸ்வீட்டி. உங்க பேரு என்ன?”

“நிவி”

“ஓ சரிங்க நிவி டார்லிங். ஏன் அழுதீங்க. “

“சுவத்துல பெயிண்ட் பண்ணதுக்கு போட்டு அடிக்கிறாங்க அங்கிள்.. “

” ப்பூபூ இவ்வளவு தான் விஷயமா? இங்க வாங்க… இங்கே நிறைய சுவரு இருக்கு. ஜாலியா கிறுக்கலாம் ” என்றவனை  ஆருஷா நிமிர்ந்து முறைத்தாள்.

அந்த பார்வையைக் கண்டதும் உடனே சமாளிக்க தொடங்கியது ஆதியின் வாய்.

“எதுக்கு சுவத்துலலாம் கிறுக்கிக்கிட்டு செல்லம்… அதுக்கு பதிலா என்னோட முதுகையே யூஸ் பண்ணிக்கோ  வரைய ” என்று அவன் சொல்ல அந்த குழந்தை ஓடிப் போய் ஸ்கெட்சை எடுத்துக் கொண்டு வந்து இவன் முதுகின் பின்னே வந்து நின்றது.

ஸ்கெட்ச் பட பட அவன் உடல் லேசாக கூச துவங்கியது

“நிவி கூசுது “

“இருங்க அங்கிள் முடிஞ்சுடுச்சு. finishing touch தான் பாக்கி.” என்று அவனது முதுகில் தன் கைவண்ணத்தை காட்டி முடித்தாள் நிவி.

“அங்கிள் வரைஞ்சு முடிச்சுட்டேன்.”

“என்ன வரைஞ்சீங்க செல்லம்… அங்கிளாலே பார்க்க முடியாதே ” என சொல்ல அந்த குழந்தை ஓடி சென்று ஆருவின் போனை வாங்கி வந்து அவன் முதுகில் வரையப்பட்ட ஓவியத்தை புகைப்படம் எடுத்து அவனிடம் காட்டியது.

இதயம் வரைந்து அதற்கு இடையில் அம்பு விட்டு இருந்தாள் அந்த சின்ன பெண்.

“என்னனு தெரியுமா இது?” என்று அவன் சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க அந்த குழந்தை தெரியும் என்று தலையசைத்து சொல்லியது.

“heart பொண்ணோடது… அம்பு பையனோடது… பையன் விடுற அம்பு பச்சக்குனு போய் பொண்ணு ஹார்ட்ல ஒட்டிக்கும்.” என்று சொல்ல கண்களை விரித்தான் அவன்.

‘அடப்பாவிங்களா இப்படி பிஞ்சுலயே என்னா பேச்சு பேசுதுங்க!’

குழந்தைகளை சொல்லி என்ன ஆகப் போகிறது. குழந்தைகளை பெரியவர்களை போல யோசிக்க வைத்தது இந்த சினிமாக்கள் தானே.

உதடுகளை மீறி துளிர்த்த சிரிப்பை அவன் அடக்கிக் கொண்டு

“இரு இரு  இப்பவே உன் அம்மா கிட்டே சொல்றேன்.. ” என்று அவன் கத்த வர அந்த குழந்தை வேண்டாம் என்று வாய் பொத்திவிட்டு தன் தம்பியைக் கூட்டி கொண்டு எதிர் ஃப்ளாட்டிற்கு ஓடியது.

அவர்களை சிரித்தபடியே பார்த்தவன் இந்த பக்கம் திரும்ப ஆரு வயிற்றைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டு இருந்தாள்.

அவளது சிரிப்பையே இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தான்.

ஐயோ சிரிப்பாலே கொல்கிறாளே!

இவள் சிரிப்பு அழகு என்றால் கோபம் பேரழகு.

தன்னை மறந்து  அவளை ரசித்தவன்  தன்னை மறந்து கேட்டும் விட்டான், அந்த வார்த்தையை…

“நான் விட்ட அம்பு உன் ஹார்ட்ல பச்சக்குனு ஒட்டுச்சா ஆரு… ” என்று கேட்க அதுவரை சிரித்துக் கொண்டு இருந்தவள் திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.