நேச தொற்று-5a

வாயில் ஓசை மணி விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது. அபி,நிவி,ஆரு மூன்று பேரும் திரும்பி வாசலைப் பார்த்தனர்.

“ஆதியா தான் இருப்பான் பாரு. கோழி கிடைக்கலனு எப்படி சின்னக்குழந்தை மாதிரி முகத்தை வெச்சுட்டு சொல்ல போறானு மட்டும் பாருங்க” என்று சொல்லியபடி கதவைத் திறந்த ஆரு அப்படியே வாயைப் பிளந்து நின்றாள்.

அவளால் நம்பவே முடியவில்லை.

கைகளை கிள்ளிப் பார்த்தாள்.

வலித்தது!

அப்படி என்றால் நிஜம் தான்…

உண்மையாகவே நிஜம் தானா?

அவன் கோழியைப் பிடித்துவிட்டானா?

ஓடிச் சென்று பால்கனி வழியே வானத்தைப் பார்த்தாள்.

மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

அப்படி என்றால் மழை கண்டிப்பாக வருவது நிச்சயம்.

உள்ளே நுழைந்த அவனையே மூவரும் அதிர்ச்சியோடு பார்க்க அவன் ஹீரோ பி.ஜி.எம்மோடு உள்ளே நுழைந்தான் கெத்தாக.

கோழியின் காலில் கயிறு கட்டி தலைகீழாக பிடித்து இருந்தவன்
ஆருவிடம் கொடுக்க அவள் இன்னும் அதிர்ச்சி விலகாமல் வாங்கினாள்.

“என்ன ஏன் எல்லாரும் இப்படி அதிர்ச்சியா பார்க்கிறீங்க.. நம்ப முடியலயா? நான் கோழியோட திரும்பி வந்ததை நம்ப முடியலயா?” என கேட்க நம்ப முடியவில்லை என ஒரு சேர தலையாட்டினர்.

“சே இன்சல்ட். வெட்கம் வேதனை துக்கம் துயரம். நம்புங்க மக்களே நம்புங்க. அதான் என் கையிலே தான் கோழி இருக்கே நம்புங்க.” என்று சொல்லியவன்

“ஆரு மா… நான் சொன்னா மாதிரி சிக்கன்க்கு மசாலா மிளகு எல்லாம் ரெடி பண்ணிட்டியா.” என்று பேசிக் கொண்டே திரும்பி பார்த்தவனின் பார்வை அங்கே இருந்த ஜல்லிக்கரண்டி துடைப்பக்கட்டையின் மீது பதிந்தது.

“அப்போ நீ துடைப்பக்கட்டையும் ஜல்லிக்கரண்டியும் தான் ரெடியா வெச்சு இருக்கியா? நான் கோழி கொண்டு வருவேனு கொஞ்சம் கூட நம்பலயா?” என கேட்க அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

“சரி விடு… போனா போகுதுனு உன்னை மன்னிச்சுவிடுறேன். போ போய் சிக்கன் செஞ்சு எடுத்துட்டு வா ஆரு.” என சொல்ல அவள் எதுவும் பேசாமல் குழப்பத்தோடே கோழியை வாங்கிக் கொண்டு சமைக்க சென்றுவிட்டாள்.

“சாரி ஆதி அங்கிள்… வயித்துல வேகமாக அடிச்சுட்டேன். உங்களுக்கு வலிக்குதா.” என சொல்லி நிவி வயிற்றை தேய்த்துவிட

“பரவாயில்லை நிவி மா… இதெல்லாம் என் வீர வாழ்க்கையிலே சகஜம் தான். ” என்றவனின் கன்னத்தில் நிவியும் அபியும்  முத்தம் பதித்தனர்.

“என் செல்ல அங்கிள்… இன்னைக்கு உங்களாலே தான் சிக்கன் சாப்பிட போறோம். தேங்க்ஸ் அங்கிள்.”

“அட நிவி மா.. இதுக்குலாம் தேங்க்ஸ் சொல்லுவாங்காளா?” என்று குழந்தைகளுடன் பேசிக் கொண்டு இருந்தவன் கடிகாரத்தையும் கைநடுக்கத்தையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்தான்.

“ஆரு டைம் ஆச்சு… வேகமா சாப்பாட்டை கொண்டு வா” என அன்று வழக்கத்திற்கு மாறாய் ஆதி அதட்டினான்.

வழக்கத்திற்கு மாறாய் ஆரு பதிலுக்கு எதுவும் பேசாமல் அமைதியாய் உணவை மேசையின் மேல் கொண்டு வந்து வைத்தாள்.

“ஐயோ வாசமே ஆளை தூக்குதே… என்ன மணம்… என்ன நிறம்… என்ன குணம்… ” என்று சொல்லியபடி அவன் தட்டில் சிக்கன் குழம்பை எடுத்து ஊற்றினான்.

நிவியும் அபியும் வேக வேகமாக சாப்பிட்டனர்.

ஆனால் ஆரு மட்டும் ஏதோ சிந்தனையிலே ஆழ்ந்து இருந்தாள்.

அதைக் கவனித்த ஆதி,

“என்ன ஆரு மா? ஏன் சாப்பிடாம எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கே… “

“உண்மையா நீ தான் கோழி பிடிச்சியா ஆதி?” என்று நம்பாத குரலில் கேட்டாள்.

சாப்பிட்டு கொண்டு இருந்தவனுக்கு சட்டென புரை ஏறியது.

“ஆரு நான் தானே கோழியை கொண்டு வந்தேன்… இதுல என்ன சந்தேகம் உனக்கு?” என்று தண்ணீர் குடித்தபடியே கேட்டான்.

“சரி கோழியை எப்படி பிடிச்சேனு சொல்லு?”

“எப்படி பிடிச்சேனு உனக்கு கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா?”

“ஆமாம்.” என்றாள் தீர்மானாய் அவள்.

“நான் கோழி கிட்டே போனேனா… “

“ஹான் கிட்ட போய்… “

“அதையே முறைச்சு பார்த்தேனா?” 

“ஹான் அப்புறம்.. “

“அதுவும் என்னை முறைச்சு பார்த்துதா… “

“அதுக்கு அப்புறம்.. “

“பக்கத்துல போய் என் கிட்டே வா கோழியேனு சொன்னேனா. உடனே என் கை மேலே ஏறிக்கிச்சு. ” என சொல்ல ஆரு அவனை முறைத்துப் பார்த்தாள்.

“இதை என்ன நம்ப சொல்றீயா? ஒழுங்கா கோழியை எப்படி பிடிச்சேனு சொல்லு டா. “

“எப்படியோ பிடிச்சேன்… சாப்பிடு ஆரு. எனக்கு நல்லா பசிக்குது. இப்போ தான் எல்லா டீட்டெயிலும் கேட்ப ” என்று சொல்லிவிட்டு சாப்பிடுவதில் கவனம் செலுத்தினான்.

அவளும் வேறு எதுவும் கேட்காமல் சாப்பிட துவங்கினாள்.

நால்வரும் சாப்பிட்டு முடித்துவிட்டு பெரியதாக ஏப்பம் விட்ட படி சோபாவில் அமர்ந்தனர்.

“ஆரு அக்கா. போர் அடிக்கிது. ராஜா ராணி விளையாடலாமா?” என நிவி கேட்டாள்.

“இல்லை நிவி மா… எனக்கு வேலை இருக்கு. நீங்க விளையாடுங்க.”

“அட என்ன ஆரு அக்கா சன்டேல கூட வேலையைப் பார்த்துக்கிட்டு கொஞ்சமாவது ரிலாக்ஸ் பண்ணுங்க அக்கா. டேய் அபி நீ போய் அந்த பேப்பர், ஸ்கேல், பேனாவை எடுத்துட்டு வா டா.. ” என்று நிவி கட்டளையிட அபி ஓடிச் சென்று பேப்பரை எடுத்து வந்தான்.

ஆருவும் மறுப்பு எதுவும் சொல்ல முடியாமல் விளையாட சம்மதித்தாள்.

முதல் ஆட்டத்தில் எல்லா சீட்டுகளையும் குலுக்கி அபி கீழே போட சரியாக ஆருவுக்கு போலீஸ் சீட்டு வந்து இருந்தது.

இப்போது திருடன் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த மூன்று திரு முகங்களையும் ஊன்றிப் பார்த்தாள்.

பார்த்தவள் முப்பது நொடிகளிலேயே கண்டுபிடித்துவிட்டாள்.

சீட்டை கீழே வைத்தவள் ஆதி என்றாள்.

அவன் திருட்டு முழியுடன் திருடன் என்பதை ஒத்துக் கொண்டான்.

பின்னர் வந்த பல ஆட்டங்களில் ஆருவுக்கு போலீஸ் சீட்டே வர திருடனாக ஆதியே அமைந்தான்.

“இல்லை நான் தெரியாம தான் கேட்கிறேன். எப்படி ரெண்டே செகன்ட்ல நான் தான் திருடன்னு கண்டுபிடிக்கிற ஆரு. உண்மையை சொல்லு யாரு உனக்கு சொல்லி தரா… நிவியா அபியா?”

“உன் மூஞ்சு தான் சொல்லி தருது. திருடன் சீட்டு வந்தா அப்பட்டமா உன் face reaction ஹே காமிச்சு கொடுக்குது. உனக்கு பொய் சொல்லவே வராது. அப்படி சொன்னாலும் மாட்டிப்பே. இப்போவாது உண்மையை சொல்லு.அந்த கோழியை எப்படி பிடிச்ச?”

“ஐயோ உனக்கு என்ன தான் பிரச்சனை ஆரு. அந்த சிக்கன் பத்தியே கேட்டுக்கிட்டு இருக்கே. இந்நேரத்துக்கு அது செரிச்சே போய் இருக்கும்.”

“நீ பொய் சொல்ற ஆதி. உன் முகத்துல பொய் தெரியுது.எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்.உண்மையை சொல்லிடு ” என சொல்ல அவன் கோபமாக

“என் மேலே கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாத வீட்டுல எனக்கு இருக்கவே விருப்பம் இல்லை. நான் இப்பவே கோபமா போறேன்.” என்று வெளியே போக முயன்றவனை ஆரு தடுத்தாள்.

“இப்போ தடுத்து என்ன ப்ரயோஜனம் ஆரு… பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும்.  நீ என்ன தடுத்தாலும் நான் இங்கே இருக்க மாட்டேன்”  வீம்போடு வந்தது அவன் வார்த்தைகள்.

“நீங்க தாராளமா போங்க சார்… ஆனால் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துட்டு போங்க. அதை சொல்ல தான் தடுத்தேன். ” என்று ஆரு சொல்ல அவன் கோபமாக முறைத்துவிட்டு வெளியே வேகமாக சென்றவன் படிகளில் இறங்க தொடங்கினான்.

நிவியும் அபியும் அவன் பின்னாலேயே  “போகாதீங்க அங்கிள்.” என்று ஓடி வர ஆருவும் ஓடி வந்தாள்.

“ஹே ஆதி சும்மா கலாய்க்க தான் சொன்னேன். ஓவரா சீனை போடாம உள்ளே வா.”என்றவள் அவனை தடுக்க,

“என்னை நம்பாத வீட்டுல நான் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்… என்னை நம்புறேனு சொல்லு.வீட்டுக்குள்ளே வரேன். ” என்று சொல்லியபடியே படியில் இறங்கி கொண்டு இருந்தான் அவன்.

“சரி சரி நம்புறே” என்று ஆரு முழுவதாய் சொல்லி முடிப்பதற்குள் ஒரு ஆண்மகனின் குரல் இடைப்பட்டு ஒலித்தது.

கீழே இறங்கி கொண்டு இருந்த ஆதிக்கு நேர் எதிராய் மேலே ஏறிக் கொண்டு இருந்த அந்த இளைஞனின் குரல் தான் அது.

கருநிற கேசம் நெற்றியில் புரள இதழ்களில் அக்மார்க் சிரிப்போடு நின்று கொண்டு இருந்த அவன் ஆதியைப் பார்த்து புன்னகையோடு கேட்டான்.

“என்ன மிஸ்டர் ஆதி… நான் பிடிச்ச கோழியை gravy பண்ணியாச்சா? எப்படி இருந்தது ஆதி… ஆனாலும் நீங்க ஒரு கோழியைப் பிடிக்க அந்த அளவுக்கு பயந்து இருக்கக்கூடாது நல்லவேளை நான் அந்த பக்கம் வந்ததாலே பிடிச்சு கோழிக்காலிலே நூல் கட்டி உங்க கிட்டே கொடுத்தேன். ஆமாம் உங்களுக்கு இவ்வளவு ஹெல்ப் பண்ண எனக்கு க்ரேவி இல்லையா?” என அந்த புதியவன் கேட்க ஆரு

“அதுக்கென்ன மிஸ்டர்.. கண்டிப்பா வாங்க.. இப்போ ஒரு திருட்டுக் கோழியை வெட்டி மறுபடியும் குழம்பு வைக்கப் போறோம். கண்டிப்பா நீங்களும் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க.. ” என்று  சொல்ல அந்த நெடியவன் அப்போது தான் எதிரில் இருந்த ஆருவைப் பார்த்தான்.

அவன் பார்வையில் சட்டென ஒரு வேதிவினை மாற்றம்.

அவளையே சில நொடிகள் பார்த்தவன் பிறகு சுதாரித்து கொண்டு

“Yeah sure ” என்று புன்னகைத்தபடி அவளை வைத்தக்கண் வாங்காமல் பார்த்தபடியே மேலே ஏறி சென்றான்.

‘ ஆருவோ என்ன இவன் இப்படி பார்க்கிறான்’ என எண்ணியபடி தலையை சிலுப்பிக் கொண்டவள் மீண்டும் திரும்பி ஆதியைப் பார்த்தாள்.

“அது ஆரு… அந்த கோழி… அந்த கோழி… ” என்று ஆதி ஏதோ சொல்ல வர நிவி அபி ஆரு மூன்று பேரும் ஒரே நேரத்தில் அவனை காறித் துப்பிவிட்டு சென்றுவிட்டனர்.