பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை 27 (final)

தேரில் வந்திறங்கிய பரிவாதனியை காதல் பார்வைப் பார்த்தபடி நின்றிருந்தார் மகேந்திர வர்மர். ஆனால் அதை உணரும் நிலையில் பெண் இல்லை. 

பதட்டமாக தன் அன்பரிடம் ஓடி வந்தார். அந்த பதட்டத்தில் மகேந்திர வர்மரே ஒரு கணம் திடுக்கிட்டு போனார்.

“அன்பரே! என்னாகிவிட்டது? உங்களுக்கு ஆபத்து ஒன்றுமில்லையே?!”

“பரிவாதனி! ஏனிப்படி பதட்டப்படுகிறாய்? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.”

“இப்படி அகால வேளையில் தேரை அனுப்பி உடனேயே புறப்பட்டு வா என்றால் நான் என்னவென்று அர்த்தம் கொள்வது?!” அந்த குரலில் இன்னும் பதட்டம் மீதமிருந்தது.

“ஏன்? முன்பொரு முறை இப்படி அழைத்த போது நீ முழு அலங்காரத்தில் அதிரூப சுந்தரியாக வரவில்லையா?!” சக்கரவர்த்தியின் குரலோ சரசத்தில் இறங்கி இருந்தது.

“அன்றைக்கும் இன்றைக்கும் நிலைமை ஒன்றா அன்பரே?!”

 மகேந்திரருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று தெரிந்த பிற்பாடு பரிவாதனியின் குரலும் நிதானத்தைத் தத்தெடுத்து கொண்டது.

“என்றைக்கும் எப்போதும் எனக்கு நீ என்று வந்துவிட்டால் எல்லாமே ஒன்றுதான் பரிவாதனி, இப்போது கூட என் கண்களுக்கு நீ பேரிளம் பெண்ணாக தெரியவில்லையே, குமரியாகத்தான் தெரிகிறாய்!”

“ஆமாம் ஆமாம், தெரியும் தெரியும்.” எப்போதும் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கவசம் போல எதுவோ ஒன்றைப் போர்த்திக்கொள்ளும் பரிவாதனி அன்று நல்ல மனநிலையில் இருந்தோரோ என்னவோ… பேச்சு அவர் அன்பருக்கு சாதகமாகவே வந்தது.

“ஹா… ஹா… இந்த இடத்தின் ராசி அப்படி பரிவாதனி, கல்லு போல இருக்கும் என் தேவி கூட இன்று மனம் இளகி எனக்கு இணக்கமாக பதில் சொல்கிறாளே!” ஆச்சரியப்பட்ட படி பெண்ணின் அருகில் வந்து அவளை அணைத்து கொண்டார் சக்கரவர்த்தி.

“ஐயையோ! சித்தரஞ்சன்…” அன்றைக்குப் போல இன்றைக்கும் சட்டென்று விலகியது பெண்.

“ஆமாம்… சித்தரஞ்சன், அவனுக்கென்ன தேவி?”

“இல்லை… அது…” தடுமாறியது பெண். அந்த உயர் ஜாதி புரவி பரிவாதனியை பொறுத்தவரை ஐந்தறிவு ஜீவனல்ல, அவர்கள் காதலின் ஓர் அங்கமல்லவா? 

அன்பரை மறந்து அசுவத்திடம் போனது பெண். மெதுவாக சித்தரஞ்சனின் முகத்தைத் தடவி கொடுக்க அது பரிவாதனியை அனுமதித்தது.

“உங்கள் குதிரை இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறதே?!” ஆச்சரியப்பட்டார் பரிவாதனி.

“அது என் குதிரை தேவி! அத்தனைச் சுலபத்தில் என் மனதிற்கினியவர்களை மறந்து போகாது!” 

“ஆமாம் ஆமாம், மனதிற்கினியவர்களுக்காக கடமையை மறந்து போகும் மனது!”

“ஆஹா! இது அநியாயமான குற்றச்சாட்டு தேவி!”

“அது சரி, இப்போது எதற்காக இந்த ராத்திரி வேளையில் என்னை இங்கே இவ்வளவு அவசரமாக வர சொன்னீர்களாம்?!”

“அதுவா… ஒரு முக்கியமான விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும்.”

“என்ன அன்பரே?!”

“இன்றைக்கு ஒரு முக்கியமான நபரைச் சந்தித்தேன்!”

“அப்படியா? யாரது?!”

“அவரைப் பார்த்த பிற்பாடு எனக்கு இந்த அருவிக்கரை ஞாபகம் வந்துவிட்டது, கூடவே உன் ஞாபகமும் வந்தது பரிவாதனி!” மகேந்திரரின் குரல் குழைந்தது.

“ஓ… மைத்ரேயியை பார்த்தீர்களா?”

“ஆமாம்.”

“என்ன சொன்னாள்? ஏதும் தவறாக பேசி விடவில்லையே?” பரிவாதனியின் குரல் இப்போது கவலையைக் காட்டியது.

“எப்போதும் என் பெண்ணைக் குறைத்து மதிப்பிடுவதே உனக்குத் தொழிலாகி போய்விட்டது.”

“இல்லை ஸ்வாமி, சிறு பெண் இல்லையா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வயது போதாது, என் மேல் உள்ள கோபத்தை உங்கள் மேல் காட்டி புண்படுத்தி விடுவாளோ என்று கவலைப் பட்டேன்.”

“எப்போதும் என் நினைவு ஒன்று மட்டும்தானா பரிவாதனி? உனக்கு வேறு நினைவுகளே இல்லையா?!”

“இல்லை ஸ்வாமி.” சட்டென்று வந்த அந்த பதிலால் சித்தரஞ்சனையும் மறந்து பெண்ணை இறுக அணைத்தார் சக்கரவர்த்தி.

“இந்த அன்பிற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் தேவி!” மகேந்திரரின் குரலில் வலி இருந்தது.

“பாக்கியம் செய்தது நானல்லவா அன்பரே?!”

“இல்லை… உன் விஷயத்தில் நான் செய்தது எல்லாமே அநியாயம் தேவி, நான் சொல்வதைக் கேள் பரிவாதனி, என்னோடு அரண்மனைக்கு வந்துவிடு, இனிமேலாவது உன்னோடு சேர்ந்து வாழ எனக்கொரு வரம் கொடு! உன்னைக் கெஞ்சி கேட்கிறேன்!”

“பல்லவேந்திரா! என்ன வார்த்தைப் பேசுகிறீர்கள்? இதற்கு இந்த பரிவாதனி சம்மதிப்பாள் என்று எப்படி நீங்கள் நினைக்கலாம்? அரண்மனை வாழ்க்கைக்கு நான் என்றைக்கும் ஆசைப்பட்டவள் அல்ல!”

“இப்போது நான் அப்படி சொல்லவில்லையே தேவி! உன்னோடு நான் வாழ நினைத்த வாழ்க்கையை இனிமேலாவது நான் வாழ வேண்டும், அதற்கு நீ மனம் வைக்க கூடாதா?”

“அந்த வாழ்க்கையை இந்த அருவிக்கரையிலே, இந்த கானகத்திலே கூட வாழலாமே! அரண்மனை எதற்கு 

அன்பரே?!”

“இதுதான் உன் உறுதியான முடிவா பரிவாதனி?”

“ஆமாம் அன்பரே!”

“நீ மாறவே போவதில்லையா?”

“நானும் உங்கள் சித்தரஞ்சனை போலத்தான்! என் கொள்கைகள் எதையும் எப்போதும் எளிதில் மறந்து போக மாட்டேன்!” மோகன புன்னகையோடு சொன்ன அந்த எழில் வதனத்தை இமைக்காமல் பார்த்திருந்தார் பல்லவ சக்கரவர்த்தி.

“என்ன அப்படி பார்க்கிறீர்கள்?” மெல்லிய சிரிப்போடு கேட்டது பெண்.

“அன்றைக்கு நான் பார்த்த பரிவாதனி இன்றும் அதேபோல எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறாள், ஆனால் நான்… நான் அப்படி இல்லையே தேவி! எனக்கென்றொரு பட்டமகிஷி…” அதற்கு மேல் மகேந்திர வர்மர் பேசவில்லை. தொண்டை அடைக்க பேச்சை நிறுத்திவிட்டார்.

“ராஜ வம்சத்தில் பிறந்துவிட்டு, மக்களைக் காக்கும் கடமையில் இருந்து கொண்டு இப்படி பேசலாமா ஸ்வாமி? எத்தனை நல்ல மனது அவர்களுக்கு! அவர்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் மைத்ரேயியை ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டேன்.”

“உண்மைதான், தான் பெற்றெடுத்த பெண் போலவே மைத்ரேயியை நினைக்கிறாள் புவனா!”

“அத்தனைப் பெரிய மனது எனக்கில்லை ஸ்வாமி!”

“ஏதேதோ கனவுகளோடு அவளுக்கு மைத்ரேயி என்று பெயர் வைத்தேன்… அவள் என்னவென்றால் வீணையைத் தூக்கி தூர போட்டுவிட்டு வாள் சுழற்றுகிறாள்!” சொல்லிவிட்டு இடி இடியென்று சிரித்தார் மகேந்திரர். பரிவாதனியும் கூட இணைந்து கொண்டார்.

“உங்கள் பெண்ணிற்கு வீணையைக் கற்றுக்கொடுக்க நானும் தந்தையும் படாத பாடுபட்டோம், எங்கே… அவள்தான் அதைக் கண்டு கொள்ளவே இல்லையே! அதற்கு மகிழினி வேறு ஆதரவு!”

“ஆனால் நான் உனக்கொரு வீணை பரிசாக வைத்திருக்கிறேன் பரிவாதனி.”

“கேள்விப்பட்டேன்… வீணையின் புதுமையையும் கேள்விப்பட்டேன், அதற்கு நீங்கள் வைத்திருக்கும் பெயரையும் கேள்விப்பட்டேன்.”

“நிச்சயம் அடுத்தமுறை உன்னைச் சந்திக்கும்போது அந்த வீணையைக் கொண்டு வருகிறேன்.”

“அப்படியே ஆகட்டும் ஸ்வாமி…” எதையோ கேட்க நினைத்து தயங்குபவர் போல பேச்சை நிறுத்தினார் பரிவாதனி.

“என்னிடம் என்ன தயக்கம்? கேள் பரிவாதனி.”

“இல்லை… போரின் முடிவு… அதைப்பற்றி ஏதாவது…” பெண் சொல்லி முடிக்க மகேந்திரரின் முகத்தில் இதுவரை 

இருந்த இலகுத்தன்மை மறைந்தது.

“அனேகமாக நாளை முடிவை எதிர்பார்க்கிறேன், கவலைப்படாதே… முடிவு உனக்குச் சாதகமாகத்தான் இருக்கும்!” சமாதானம் சொன்னாலும் அந்த குரல் கடினமாகவே இருந்தது. பரிவாதனி தன் அன்பரின் அருகில் வந்து அவர் மார்பில் சாய்ந்து கொண்டார்.

“என் மேல் கோபமாக இருக்கிறீர்கள்!”

“நிச்சயமாக!”

“என் நிலையில் இருந்து சிந்திக்க கூடாதா?”

“அந்த பேச்சு இப்போது வேண்டாம் பரிவாதனி, என் பெண்ணைப் பார்த்த சந்தோஷத்தில் நான் இருக்கிறேன், அந்த சந்தோஷத்தைக் குலைக்காதே.” சொல்லியபடி குதிரையின் அருகில் சென்றார் மகேந்திர வர்மர்.

“இப்போதாவது குதிரை ஏற தெரியுமா?” கேலியாக கேட்டார் சக்கரவர்த்தி.

“ம்ஹூம்…” 

“நல்லது நல்லது.” சித்தரஞ்சன் மேல் தாவி ஏறிய சக்கரவர்த்தி பரிவாதனியின் அருகில் வந்து குனிந்து அவள் இடையில் கைகொடுத்து தூக்கி அவளையும் குதிரையில் தனக்கு முன்னால் இருத்தி கொண்டார்.

சித்தரஞ்சன் முழு வேகத்தில் ஓட்டமெடுத்து அந்த கானகத்தை வலம் வந்தது. அந்த இரு உள்ளங்களும் பதினெட்டு வருடங்கள் முன்னோக்கி 

பயணித்து கொண்டிருந்தது.

***

மார்த்தாண்டன் அன்றைக்குப் போல இன்றைக்கும் காஞ்சி கோட்டையின் திட்டி வாசலை வீரர்கள் திறந்துவிட உள்ளே நுழைந்தான்.

கோட்டையின் காவல் இன்னும் பலப்படுத்த பட்டிருப்பதைக் கடைக்கண்ணால் கவனித்து கொண்டான். கோட்டைச் சுவருக்கு அருகே இருந்த கொப்பரைகளில் எண்ணெய் சதா கொதித்து கொண்டிருந்தது. 

வாதாபி வீரர்கள் கோட்டை மதிலை அண்மிக்கும் பட்சத்தில் அந்த கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகள் அவர்கள் மீது கவிழ்த்து ஊற்றப்படும் என்பதை அவன் நன்கு அறிவான்.

வீரர்களும் கைகளில் வேலேந்திய படியே காட்டு முகப்பைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

ராஜ பாட்டையில் தனது புரவியைத் தட்டி விட்ட மார்த்தாண்டன் அரண்மனையின் பிரதான வாசலுக்கு வந்து நின்றான். தன்னைத் தொடர்ந்து வந்த வீரர்களை அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

வாசலில் நின்ற காவலாளியிடம் தன் புரவியை ஒப்படைத்தவன் தன்னை வரவேற்க வந்திருந்த பொதிகை மாறனுக்கு வணக்கம் வைத்தான்.

“வாரும் மார்த்தாண்டரே!” இன்முகத்துடன் வரவேற்ற உப சேனாதிபதி மார்த்தாண்டனை உள்ளே அழைத்து சென்றார்.

பிரதான மண்டபத்திலே நடுநாயகமாக மகேந்திர வர்மர் வீற்றிருக்க முதலமைச்சர், சேனாதிபதி, மந்திரி பிரதானிகள் என அனைவரும் அங்கே அமர்ந்திருந்தார்கள்.

போர் பற்றிய முக்கிய முடிவு அன்றைக்கு எடுக்கப்பட இருந்ததால் ராஜ்ஜியத்தின் முக்கியமான அனைவரும் அன்று அழைக்கப்பட்டிருந்தார்கள்.

“வாரும் தூதரே!” மகேந்திர சக்கரவர்த்தியே மார்த்தாண்டனை வரவேற்றார். 

“வணங்குகிறேன் பல்லவேந்திரா!” மரியாதை நிமித்தம் அரியணையை நோக்கி தலைச் சாய்த்தான் மார்த்தாண்டன்.

அந்த மண்டபத்தின் உப்பரிகையில் மகேந்திர வர்மரின் பட்டமகிஷியும் மைத்ரேயியும் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அமர்ந்திருந்ததை மார்த்தாண்டன் கவனிக்கவில்லை.

“அவர்தான் என் உபாத்தியாயர்.” மெதுவாக சொன்னாள் மைத்ரேயி.

“ஆஹா! உபாத்தியாயர் மட்டும்தானா மகளே?!” புவனமகா தேவியின் குரலில் கேலி அப்பட்டமாக இருந்தது. மைத்ரேயியின் முகத்தில் வெட்கத்தின் சாயல் தெரிந்தது.

“உங்களுக்கு… எப்படி…”

“உன் தந்தை சொன்னார்.”

“தந்தையா?! தந்தைக்கு எப்படி தெரிந்தது?!”

“அதுதான் அடிகளுக்கு தெரியுமே!” சொல்லிவிட்டு புவனமகா தேவி சிரிக்க மைத்ரேயியும் சிரித்தாள்.

“ஆமாம் ஆமாம், நான் அடிகளாரை மறந்து போனேன்!” இவர்கள் சம்பாஷணையை அத்தோடு நிறுத்தியது மகேந்திர வர்மரின் குரல்.

“ஆசனத்தில் அமர்ந்து கொள்ளும் தூதரே, உமக்காகத்தான் இன்றைக்கு இந்த அரசவையே கூடி இருக்கிறது!”

“அது என் பாக்கியம் பல்லவேந்திரா!” சொல்லிவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தான் மார்த்தாண்டன்.

“புலிகேசி மன்னரின் அபிலாஷையை அறிந்துகொள்ள இந்த மகா சபை மிகவும் ஆவலாக இருக்கிறது!” சேனாதிபதி கலிப்பகையார் இப்போது பேச்சை ஆரம்பித்தார். வயதிலும் வீரத்திலும் மூத்திருந்த அந்த வீரரை மார்த்தாண்டனின் கண்கள் மரியாதையோடு நோக்கின.

“பல்லவேந்திரரின் கோரிக்கையை புலிகேசி சக்கரவர்த்தி ஏற்றுக்கொள்கிறார்! இதோ, அதற்கான ருசுவையும் கையோடு கொண்டு வந்திருக்கிறேன்.” மார்த்தாண்டன் இடைக் கச்சையில் பத்திரப்படுத்தி இருந்த தங்க குழலை எடுத்து பொதிகை மாறனிடம் நீட்டினான். 

குழலை வாங்கிய உப சேனாதிபதி அதில் பொறிக்கப்பட்டிருந்த முத்திரையை முதலில் சரிபார்த்தார். அனைத்தும் திருப்திகரமாக இருக்கவே இப்போது அவர் கண்கள் மகேந்திர வர்மரை நோக்கியது.

சக்கரவர்த்தியின் கண்கள் அனுமதி கொடுக்கவும் அந்த சபையிலேயே அத்தனைப் பேர் முன்பும் குழலின் முத்திரையை உடைத்து உள்ளே இருந்த ஓலை நறுக்குகளைச் சத்தமாக படிக்க ஆரம்பித்தார் உப சேனாதிபதி.

“விசித்திர சித்தரும் சத்ரு மல்லருமான மகேந்திர வர்மருக்கு… வாதாபி சக்கரவர்த்தி புலிகேசி வரைவது,

தங்கள் சிந்தனையின் நிமித்தம் தாங்கள் முன்வைத்த சமாதான கோரிக்கையை வாதாபி ஏற்றுக்கொள்கிறது. இதன் பொருட்டு தாங்கள் குறிப்பிட்ட சமாதான ஷரத்துக்களை வாதாபி இந்த நொடி முதல் கடைப்பிடிக்க சித்தமாகி இருக்கிறது. அதேபோல, தாங்கள் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்ட ஷரத்துக்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், வாதாபி படைகள் தங்களது காஞ்சி முற்றுகையை முடித்துக்கொள்ளும்.”

பொதிகை மாறன் படித்து முடிக்க அவையில் அமைதி நிலவியது. 

மகேந்திர சக்கரவர்த்தி சபையில் கூடியிருந்தவர்களின் முகத்தை ஒரு முறைக் கவனித்தார். அனைவர் முகத்திலும் திருப்தியே தெரிய பேச ஆரம்பித்தார்.

“தூதரே… பதில் ஓலைத் தயாராக இருக்கிறது, மகேந்திர வர்மர் வார்த்தைத் தவறியதாக சரித்திரமே இல்லை!”

“சக்கரவர்த்தி பெருமானே! அது உலகறிந்தது!”

“நல்லது, தூதர் இன்றைய பொழுதைப் பல்லவ அரண்மனையில் செலவழித்துவிட்டு சாவதானமாக செல்லலாமே?”

“அப்படியே ஆகட்டும் பல்லவேந்திரா!” புன்னகையோடு மார்த்தாண்டன் பதில் சொல்ல சபை அத்தோடு கலைந்து விட்டது. ஒரு சிலரைத் தவிர பலர் முகங்களில் போரைப் பற்றிய முடிவு திருப்தியையே அளித்திருந்தது.

மார்த்தாண்டனின் ஓய்வுக்கென அரண்மனையின் ஒரு விசாலமான அறை வழங்கப்பட்டிருந்தது. 

வசதிகளுக்கு எந்த குறைவுமின்றி அனைத்தும் கச்சிதமாக அமைய பெற்றிருந்தன.

பணிப்பெண்களும் இளையவனின் தேவைகளை கேட்பதற்கு இடம் வைக்காமல் நிறைவேற்றி கொண்டிருந்தார்கள். ஆனால் மார்த்தாண்டனின் கண்கள் வேறெதுவோ ஒன்றை ஆவலாக எதிர்பார்த்தபடி காத்திருந்தது.

தனக்கு வழங்கப்பட்டிருந்த அறையின் சாளரத்தின் வழியே காஞ்சி நகரைப் பார்த்தபடி நின்றிருந்தான் மார்த்தாண்டன். அதன் அழகில் அவன் மனம் கூட ஒரு நொடி சொக்கித்தான் போனது.

கவிஞர்கள் எல்லோரும் ‘நகரேஷு காஞ்சி’ என்று அந்த தொன்மையான நகரை ஏன் அழைக்கிறார்கள் என்று புரிந்தது. கண்ணுக்கெட்டிய இடங்களிலெல்லாம் எந்த மதத்தினரையும் புறம் தள்ளாமல் அனைவரினது சமய வழிபாட்டு தலங்களும் மடாலயங்களும் தெரிந்தன.

ஒவ்வொரு சயம தலங்களும் அவ்வளவு கலை நயத்தோடு நிர்மாணிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மார்த்தாண்டன் பிரமித்து நின்றான். மகேந்திரர் உண்மையிலேயே எத்தனைப் பெரிய கலா ரசிகர்!

“தூதுவரே!” பணிப்பெண் அழைக்கவும் சிந்தனைக் கலைய திரும்பினான் 

மார்த்தாண்டன்.

“மன்னர் போஜன அறையில் தங்களுக்காக காத்திருக்கிறார்.” பணிவாக அந்த குரல் வர அவசர அவசரமாக அறையை விட்டு வெளியே வந்தான் மார்த்தாண்டன்.

“வாருங்கள் மார்த்தாண்டரே!” பாதி வழியிலேயே அவனை எதிர்கொண்ட பொதிகை மாறன் தூதுவரை போஜன அறைக்கு அழைத்து சென்றார்.

“வரவேண்டும் வரவேண்டும்!” சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த மகேந்திர வர்மர் எழுந்து வந்து மார்த்தாண்டனை மார்போடு இறுக அணைத்து கொண்டார்.

“பல்லவேந்திரா! இத்தனை மரியாதை இந்த சிறியவனுக்கு எதற்கு?!” வார்த்தைகள் வர மறுத்தது மார்த்தாண்டனுக்கு.

“மார்த்தாண்டா, சில மனிதர்கள் வயதால் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் குணத்தால் பெரியவர்களாக ஆகி விடுகிறார்களே!” பெருமிதத்துடன் சொன்னார் சக்கரவர்த்தி.

“அது போகட்டும்… என் குடும்பத்தை நான் இன்னும் உமக்கு அறிமுகம் செய்யவில்லையே மார்த்தாண்டரே!” 

“ஆவலாக இருக்கிறேன் பல்லவேந்திரா.” சொல்லிவிட்டு அப்போதுதான் அங்கே இருந்த மற்றவர்களைக் கவனித்தான் மார்த்தாண்டன்.

அவன் கண்கள் தேடிய விருந்து அங்கே சர்வலங்கார பூஷிதையாக, அழகே உருவாக, வானத்து அப்சரஸ்தான் பூமிக்கு வந்து விட்டதோ என்று எண்ணும் படியாக நின்றிருந்தது!

“இது என் பட்டத்துமகிஷி புவனமகா தேவி!”

“வணக்கம் தேவி.” பயபக்தியுடன் வணக்கம் வைத்தான் மார்த்தாண்டன். மகேந்திர வர்மரின் அமைதியான இன்றைய வாழ்க்கைக்கு முழுமுதல் காரணம் இந்த பெண்மணிதான் என்று நினைத்த போது மார்த்தாண்டனுக்கு அவர் மேல் அளவு கடந்த மரியாதை உருவானது.

“வரவேண்டும், எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா?” கனிவோடு கேட்டார் மகாராணி.

“இதைத் தாங்கள் கேட்கவும் வேண்டுமா? அனைத்தும் சௌகரியமாக இருக்கிறது.”

“நல்லது.”

“மார்த்தாண்டா, இது எனது சகோதரி அமரா தேவி!” அடுத்ததாக அறிமுகம் செய்தார் சக்கரவர்த்தி. அந்த பெயரைக் கேட்ட உடனேயே மார்த்தாண்டன் சற்று உஷாரானான்.

ஆனால் உப படைத்தலைவரின் முகத்தில் ஒரு ஏளன புன்முறுவல் தோன்றவும் அதையே அவருக்கு பரிசாக திரும்ப கொடுத்தான்.

“மார்த்தாண்டா! இவர் அறிமுகம் ஏற்கனவே உமக்கு உண்டு, ஆனால் அது உப சேனாதிபதி என்பதாக.” உணர்ச்சி பெருக்கோடு பொதிகை மாறனை ஒரு கையால் அணைத்தபடி சக்கரவர்த்தி கூற மார்த்தாண்டன் அதிசயமாக பார்த்தான்.

“அவருக்கு வேறு ஏதும் பதவிகளும் உண்டா பல்லவேந்திரா?”

“ஏனில்லை, நிரம்பவே உண்டு மார்த்தாண்டா! என் உள்ளும் புறமும் அறிந்த உற்ற நண்பன் என்று சொன்னால் அது மிகையல்லவே!”

“ஆஹா! அத்தனைப் பெரிய பாக்கியம் அமையப்பெற்றவரா உப சேனாதிபதி அவர்கள்!”

“இல்லை இல்லை, மாறனை நண்பனாக பெற நான்தான் தவம் செய்திருக்க வேண்டும்!”

“பல்லவேந்திரா, இது ரொம்பவும் பெரிய வார்த்தை!” பணிவாக வந்தது பொதிகை மாறனின் பதில்.

“அடுத்த அறிமுகம் யார் தெரியுமா மார்த்தாண்டா?” சிரிப்போடு சக்கரவர்த்தி கேட்க மைத்ரேயியின் முகம் நிலம் பார்த்தது.

“சக்கரவர்த்தி திருமகள்!” எதிர்பாரா இடத்திலிருந்து பதில் வரவும் அனைவரது கவனமும் அங்கே திரும்பியது. முகத்தில் ஏளனம் அப்பட்டமாக தெரிய அமராதேவிதான் அந்த பதிலைச் சொல்லி இருந்தார்.

அங்கிருந்த அத்தனைப் பேரும் ஒரு நொடி திடுக்கிட்டு போனார்கள். மகேந்திர வர்மருக்கு முன்பாக மைத்ரேயிக்கு அப்படியொரு ஏளன அறிமுகம் கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. பொதிகை மாறனின் முகம் அக்னி பிழம்பு போல ஒரு கணம் காட்சி தந்தது.

“அது மட்டும்தானா சக்கரவர்த்தி?” தன்னைத் துரிதமாக நிதானப்படுத்தி கொண்ட மார்த்தாண்டன் மகேந்திர வர்மரிடமே கேட்டான்.

“புரியவில்லை மார்த்தாண்டா!” குரலில் வலி இருந்தாலும் மார்த்தாண்டனின் கேள்வி மகேந்திரரை வியப்படைய வைத்தது.

“மகேந்திர பல்லவரின் திருமகள் என்பது மைத்ரேயிக்கு பெருமைதான், நான் இல்லையென்று சொல்லவில்லை… ஆனால் அது மட்டுமே அவளுக்குப் பெருமைச் சேர்க்காது.” கடைக்கண்ணால் அமரா தேவியை பார்த்தபடி பேசினான் மார்த்தாண்டன்.

“சக்கரவர்த்தி திருமகள்தான் வருங்கால வேங்கி நாட்டின் பட்டமகிஷி, கங்க நாட்டின் மகாராணி, எல்லாவற்றிற்கும் மேலாக… வாதாபி மக்களும் இந்த மார்த்தாண்டனும் மனது வைத்தால் நாளைய வாதாபியின் ராணியும் இதே சக்கரவர்த்தி திருமகள்தான்!” குரலில் கர்வம் தெறிக்க பேசி முடித்தான் இளையவன். 

யாரும் எதுவும் பேசவில்லை. மகேந்திரர் மட்டும் ‘இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?’ என்பது போல தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தார். 

அதற்கு மேல் அமரா தேவியும் அங்கு நிற்கவில்லை. போஜனத்தை முடிக்காமலே நகர்ந்து விட்டார்.

“நேரம் கடந்து கொண்டிருக்கிறது, இன்னும் யாரும் பசியாறவில்லையே?!” நாட்டிற்கு ராணி என்றாலும் வீட்டிற்குத் தாய் ஆதலால் அனைவரையும் பசியாற அழைத்தார் புவனமகா தேவி. கடந்து போன நிமிடத்தை மறந்து அனைவரும் பசியாற அமர்ந்தார்கள்.

அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. தங்க தட்டுகளிலும் கிண்ணங்களிலும் பணிப்பெண்கள் உணவு பரிமாற கேலியும் சிரிப்புமாக அன்றைய பொழுது மிகவும் இன்பமாக கழிந்தது.

வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையைக் கவனிப்பது போல சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும் மார்த்தாண்டனை கவனித்து கொண்டார்கள்.

உண்டு முடித்துவிட்டு அனைவரும் எழுந்து கொள்ள மார்த்தாண்டன் இப்போது மகேந்திர வர்மரை பார்த்தான்.

“சொல்லும் மார்த்தாண்டரே!”

“பல்லவேந்திரா, நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது, என் கனக புஷ்பராகத்தை இன்னும் நீங்கள் என்னிடம் கொடுக்கவில்லையே!” என்றான் ஆதங்கத்தோடு.

“உம்முடைய கனக புஷ்பராகமா? இல்லையே, அதற்குச் சொந்தக்காரன் நான்தானே?!” இப்போது சக்கரவர்த்தியும் புவனமகா தேவியும் சிரித்தார்கள். ஆசை வெட்கம் அறியுமா என்ன? கண்கள் மைத்ரேயியை வட்டமிட பேச்சைத் தொடர்ந்தான் மார்த்தாண்டன்.

“இருந்தாலும் அது என் வசம்தானே இருந்தது?” இளையவன் முகத்தில் ஏக்கம் தெரிந்தது!

“மார்த்தாண்டரே, கண்ணில் கண்டதை எடு, உரியவர் கேட்டால் கொடு என்று நீர் கேள்விப்பட்டதில்லையா?” கேலி போல பேசினாலும் சக்கரவர்த்தியின் குரலில் உறுதி இருக்கவே, ஏக்கத்தோடு மைத்ரேயியை ஒரு முறைப் பார்த்துக்கொண்ட மார்த்தாண்டன் அனைவரிடமும் விடைபெற்றான்.

மூழ இருந்த ஒரு பெரிய போரைத் தனது சாமர்த்தியத்தால் வென்ற திருப்தி அறவே இன்றி தனக்கு வழங்கப்பட்டிருந்த அறைக்கு வந்தான் மார்த்தாண்டன். மனதில் ஏமாற்றம் மிகுந்து கிடந்தது.

மைத்ரேயியோடு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லையே! இதை விட சக்கரவர்த்தியிடம் நாசூக்காக எப்படி கேட்பது? இவரெல்லாம் என்ன காதலித்தாரோ! என் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே! சக்கரவர்த்தியை மனதிற்குள் வைது கொண்டு தன் உடைவாளை எடுத்தான் மார்த்தாண்டன்.

“உபாத்தியாயரே!” 

அந்த குரலில் சடாரென்று திரும்பினான் மார்த்தாண்டன். அறையின் வாசலில் மைத்ரேயி நின்று கொண்டிருந்தாள்.

“மைத்ரேயி! நீயேதானா?! நான் கனவேதும் காணவில்லையே?!” உணர்ச்சி மேலிட புலம்பினான் மார்த்தாண்டன்.

“எப்படி இருக்கிறீர்கள் உபாத்தியாயரே?” கண்கள் லேசாக கலங்க கேட்டாள் மைத்ரேயி. ஏதோ இரண்டு நாட்கள் பிரிவை இரண்டு யுகங்கள் பிரிந்திருந்தது போல உணர்ந்தனர் இருவரும்.

“என்ன மைத்ரேயி இப்படி செய்துவிட்டாய்? காஞ்சி நகரைப் பார்க்க வந்தவள் பார்த்து முடித்துவிட்டால் உடனேயே கிளம்பி வந்திருக்க வேண்டாமா? இங்கேயே இருந்துவிட்டால் என்ன அர்த்தம்?”

“தந்தை அதற்கு அனுமதி கொடுப்பாரா உபாத்தியாயரே?” காதலனின் கேள்வியில் நியாயம் இல்லை என்று தெரிந்தாலும் அவனுக்கு இதமாகவே பதில் சொன்னாள் மைத்ரேயி.

“இது நன்றாக இருக்கின்றதே! சக்கரவர்த்தி மனதில் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்? உரியவர் கேட்டால் கொடுக்க வேண்டுமாமே! உரியவன் நான்தானே? அது அவருக்குப் புரியவில்லையா என்ன?” இதற்கு மைத்ரேயி என்னவென்று பதில் சொல்வாள்?!

“அது போகட்டும், நீ எப்படி இருக்கிறாய் மைத்ரேயி?” கேட்ட மாத்திரத்தில் ஆனந்த கண்ணீர் பெருக புன்னகைத்தாள் பெண்.

“கேட்கவும் வேண்டுமா உபாத்தியாயரே! சக்கரவர்த்தினி எத்தனை அன்பானவர்கள் தெரியுமா?”

“பார்த்த போதே புரிந்தது! உன் அன்னையைப் பார்த்தாயா?”

“இன்னும் இல்லை.”

“ஏன்?”

“அரண்மனைக்கு அழைத்து வரப்போவதாக தந்தை சொன்னார்.”

“வந்துவிட்டார்களா? நான் பார்க்கவில்லையே!”

“தந்தை அழைத்தார்களாம், ஆனால் அம்மா இங்கே வர மறுத்துவிட்டார்களாம்.”

“எதிர்பார்த்ததுதான்!” சற்று யோசனையுடனேயே சொன்னான் மார்த்தாண்டன்.

“மைத்ரேயி, உன் தாய் செய்திருக்கும் தியாகம் அற்ப சொற்பமானதல்ல, அதை நீ இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.”

“புரிகிறது உபாத்தியாயரே.”

“அவர் மனம் நோகும்படியாக நீ இனி எப்போதும் நடந்து கொள்ள கூடாது.”

“ம்…” 

“அமரா தேவியிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”

“சரி உபாத்தியாயரே.” எட்ட நின்றபடி தலையை ஆட்டிய ஏந்திழையை தன்னருகே அழைத்தான் உபாத்தியாயன். அவன் சுட்டு விரல் அவள் இதழ் வடிவை லேசாக அளந்தது.

“மைத்ரேயி… நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது!”

“இனி எப்போது உங்களைப் பார்க்கலாம் உபாத்தியாயரே?!” அந்த ஒற்றைக் கேள்வியில் அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்து கொண்டான் மார்த்தாண்டன். 

கண்ணியம் பார்க்காத காதல் தன் எல்லையைத் தாண்ட லேசாக துடித்தது. ஆனால் இருவரும் சட்டென்று விலகி கொண்டார்கள். 

“கூடிய விரைவில் வந்து உன்னை என்னோடு அழைத்து செல்வேன் மைத்ரேயி, இது என் வாள் மீது ஆணை!”

“நான் காத்திருப்பேன்!” 

அதற்கு மேலும் தாமதிக்காமல் அரண்மனையின் தாழ்வாரத்தில் இறங்கி விடுவிடுவென்று நடந்து விட்டான் மார்த்தாண்டன். 

தாழ்வாரத்தின் தூணில் சாய்ந்தபடி போகும் அந்த ஒற்றைக் குதிரையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள் இளையவள். 

குதிரையில் ஆரோகணித்த படி தன் வாளை ஒரு முறை உயர்த்தி காட்டினான் மார்த்தாண்டன். மைத்ரேயியின் முகத்தில் இளநகை அரும்பியது.

வசந்தத்தின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள் மைத்ரேயி!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!