பல்லவன் கவிதை 19

PKpic-60d371b7

பல்லவன் கவிதை 19

வீட்டினுள்ளே நுழைந்த சேந்தன் அங்கு பல்லவ சக்கரவர்த்தியைக் காணவும் திடுக்கிட்டு நின்றுவிட்டார். கதவருகே நின்றிருந்த சேனாதிபதியின் விழிகளும் உபாத்தியாயரை உறுத்து விழித்தன!

“வாரும் உபாத்தியாயரே! நீர் கூட எனக்குத் துரோகம் செய்ய துணிந்து விட்டீர் அல்லவா?”

“பல்லவேந்திரா!” சக்கரவர்த்தியின் காரசாரமான வார்த்தைகளில் கண்கள் கலங்க அவர் காலடியில் விழப்போன அந்த வயதான உபாத்தியாயரைப் பிடித்து நிறுத்தினார் மகேந்திர வர்மர்.

“உபாத்தியாயரே! என்ன காரியம் செய்கிறீர்? ஏற்கனவே என் பாவச்சுமை கனக்கிறது, இதில் நீர்வேறு நிறைக் கூட்ட வேண்டாம்.”

“பல்லவேந்திரா! என்னை மன்னியுங்கள்!” கண்ணீர் மல்க கெஞ்சினார் உபாத்தியாயர்.

“எதை மன்னிக்க சொல்கிறீர்?”

“பல்லவேந்திரா! பரிவாதனி சொன்ன வாதத்தில் நியாயம் இருந்தது, எங்களுக்கு உயிர்ப்பிச்சை அளித்த பல்லவ சாம்ராஜ்யத்திற்கு எந்த தீங்கும் வருவதை நானும் பரிவாதனியும் கனவிலும் அனுமதிக்க மாட்டோம்.”

“ஆக… நீங்கள் இருவரும் என்னை நம்பவில்லை, பல்லவ சாம்ராஜ்யத்திற்கு நாசம் வந்துவிட்டது என்றே முடிவெடுத்து விட்டீர்கள்!”

“பரிவாதனியின் பொருட்டு பல்லவ வீரர்களின் குருதி மண்ணில் சிந்துவதை நாங்கள் எப்படி அனுமதிப்பது மன்னவா?” இதற்கு பதிலேதும் சொல்லாமல் தனது மீசையை தடவிக்கொண்டார் மகேந்திர வர்மர்.

“போனது போகட்டும்… புறப்படு பரிவாதனி.” சக்கரவர்த்தியின் குரல் தீர்மானமாக ஒலித்தது.

“எங்கே பல்லவேந்திரா?” நிதானமாக கேட்டார் பரிவாதனி.

“எங்கேயா? இது என்ன கேள்வி?”

“என்னை எங்கோ அழைத்தீர்கள்… அதுதான் எங்கே என்று கேட்டேன்?” விடைத் தெரிந்த போதும் விளங்கிக்கொள்ள மறுத்தார் பரிவாதனி.

“நான் எங்கே அழைக்கிறேன் என்று உனக்குத் தெரியும்!”

“மீண்டும் காஞ்சிக்கா?”

“ஆமாம்.”

“அங்கு எனக்கு என்ன இருக்கிறது?”

“நான் அங்கேதான் இருக்கிறேன்!”

“ஆமாம்… நீங்கள் அங்கேதான் இருக்கிறீர்கள், அங்கேதான் உங்கள் பட்டமகிஷியும் புதல்வரும் கூட இருக்கிறார்கள்.”

“பாதகமில்லை…‌ நீ புறப்படு!” தன் பிடியில் உறுதியாக இருந்த மகேந்திர வர்மரை பார்த்து லேசாக புன்னகைத்தார் பரிவாதனி.

“கொற்கையை விட்டு நான் எங்கேயும் வரும் உத்தேசம் இல்லை மன்னவா.”

“இது சக்கரவர்த்தியின் ஆணை!” கர்ஜித்தார் மகேந்திரர்.

“மன்னிக்க வேண்டும் பல்லவேந்திரா, என் தலைப் போகும் தருணம் வந்தாலும் இந்த கொற்கையை விட்டு நான் நகர மாட்டேன்.”

“இதுதான் உன் முடிவா?”

“நிச்சயமான முடிவு!” பரிவாதனி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

“என் வாழ்க்கையில் இனிமேலாவது நிம்மதி என்ற ஒன்றை எனக்கு நீ கொடுக்க கூடாதா பரிவாதனி?”

“உங்கள் நிம்மதி காஞ்சியில்தான் இருக்கிறது மன்னவா.”

மகேந்திர வர்மர் எவ்வளவோ வாய்த்தர்க்கம் புரிந்த போதும் பரிவாதனி சற்றும் இசைந்து கொடுக்கவில்லை. உபாத்தியாயரோ மகிழினியோ கூட அவரின் உதவிக்கு வராததால் கடைசியில் சக்கரவர்த்திதான் தணிந்து போக வேண்டி இருந்தது.

இதற்கு மேல் பேச எதுவுமே இல்லை என்ற நிலையில் மகேந்திர வர்மரும் பொதிகை மாறனும் அரச மாளிகைக்குத் திரும்ப ஆயத்தமானார்கள்.

அப்போது சட்டென்று ஒரு வீரன் வாசலில் வந்து வணங்கி நிற்கவே அவனைக் கேள்வியாக பார்த்தார் பல்லவ உப சேனாதிபதி.

“வீரனே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?”

“உப சேனாதிபதி அவர்களே! நான் காஞ்சியிலிருந்து வருகிறேன், ஒற்றர் படைத்தலைவர் அவசரமாக ஒரு சேதியை சக்கரவர்த்திக்கு அனுப்பி இருக்கிறார், அரச மாளிகைக்குச் சென்றேன், அவர்கள்தான் நீங்கள் இங்கு இருப்பதாக தகவல் சொன்னார்கள்.”

பொதிகை மாறனின் குரலில் பல்லவ சக்கரவர்த்தியும் வாசலுக்கு வரவே வீரன் சக்கரவர்த்திக்குத் தலைத் தாழ்த்தினான்.

“மாறா, யார் இந்த வீரன்?” மகேந்திர வர்மரின் கேள்விக்கு அந்த வீரனே பதில் சொன்னான்.

“பல்லவேந்திரா, தங்கள் ஒற்றர் படையில்தான் நான் வேலைப் பார்க்கிறேன், எங்கள் தலைவர் உங்களுக்கு அவசரமாக ஒரு சேதி அனுப்பி இருக்கிறார்.”

“சரி, ஓலையைக் கொடு.”

“இல்லை மன்னவா, சேதி மிகவும் அந்தரங்கமானது என்பதால் வாய் வார்த்தையாகவே சொல்லி அனுப்பினார்.”

“ஓஹோ! சேதியைச் சொல்.” சொல்லிவிட்டு தனது கையை அந்த வீரனுக்காக மகேந்திரர் நீட்ட அதில் ஒற்றர் படைக்கான முத்திரை மோதிரத்தை வைத்தான் அந்த வீரன்.

இருந்தாலும் சேதியைச் சொல்லாமல் அங்கிருந்த மற்ற நபர்களை அவன் சந்தேகமாக பார்க்க,

“பாதகமில்லை, நீ சேதியைச் சொல்.” என்றார் சக்கரவர்த்தி.

“பல்லவேந்திரா, வாதாபியில் பெரும்படை ஒன்று போருக்குத் தயாராகிறது, கூடிய சீக்கிரமே அது காஞ்சியை நோக்கி நகரலாம் என்று எங்கள் தலைவர் எதிர்பார்க்கிறார்.” வீரனின் செய்தியில் சக்கரவர்த்தியையும் சேனாதிபதியையும் தவிர அங்கிருந்த மற்றையவர்கள் அனைவரும் ஆடிப்போய் விட்டார்கள்.

“இப்போது விபீஷணன் எங்கே?” நிதானமாக கேட்டார் பல்லவேந்திரர்.

“தலைவர் வாதாபியில்தான் இருக்கிறார், மேற்கொண்டு சக்கரவர்த்திக்கு தான் தகவல்கள் அனுப்ப வேண்டும் என்பதால் அங்கேயே இருப்பதாக சொன்னார்.”

“நல்லது, அடுத்த சேதியைக் கூடிய விரைவில் எதிர்பார்ப்பதாக சொல்லு.”

“ஆகட்டும் மன்னவா.”

“படைபலத்தைப் பற்றி ஏதாவது தகவல் உண்டா?”

“இல்லை மன்னவா, சரியான தகவல் கிடைத்ததும் உங்களுக்குச் சேதி அனுப்புவதாக சொன்னார்.”

“நல்லது, நீ புறப்படு.” சக்கரவர்த்தியின் அனுமதியில் வீரன் கிளம்பிவிட்டான்.

“மாறா… அமராவையும் அழைத்துக்கொண்டு நீ உடனேயே காஞ்சிக்குப் புறப்படு, நான் இன்னும் இரண்டு நாட்களில் காஞ்சிக்கு வந்து சேர்கிறேன், சேதியை சேனாதிபதி கலிப்பகைக்கும் தெரியப்படுத்து.”

“ஆகட்டும் பல்லவேந்திரா.” பொதிகை மாறனும் அதற்கு மேல் தாமதிக்காமல் கிளம்பிவிட்டார். சிறிது நேரம் சக்கரவர்த்தி எதுவும் பேசாமல் அந்த சிறிய வீட்டில் அங்கும் இங்குமாக நடந்தார். இறுதியாக ஓரிடத்தில் நின்றவர் பரிவாதனியை நோக்கி கண்களைத் திருப்பினார்.

“சேதியைக் கேட்டாயா பரிவாதனி?”

“பல்லவேந்திரா!” பரிவாதனியின் கண்கள் கலங்கின.

“இப்படியொரு சேதியை நெடு நாட்களாக பல்லவ சாம்ராஜ்யம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.” மன்னவரின் பேச்சில் பரிவாதனி, உபாத்தியாயர், மகிழினி மூவருமே அதிர்ந்து போனார்கள். மகேந்திர வர்மர் இப்போது புன்னகைத்தார்.

“என்றைக்கு ‘பாரவி’ என்ற அந்த கவி காஞ்சி சுந்தரியைப் பார்த்து மயங்கி அவள் மீது தீராத காதல் கொண்டு தனது பாக்களில் அவளைப் பற்றி வர்ணித்துப் பாட ஆரம்பித்தானோ… அன்றைக்கு ஆரம்பித்தது புலிகேசியின் இந்த தீராத வேட்கை!”

“பல்லவேந்திரா! இது உண்மைதானா?” உபாத்தியாயரின் குரலில் கவலை மண்டிக்கிடந்தது.

“ஆமாம் உபாத்தியாயரே, புலிகேசியின் படைகளுக்கு ஆதரவாக விஷ்ணுவர்த்தனனும் வேங்கியில் படைத் திரட்டுவதாக வதந்திகள் உலாவுகின்றன.”

“என்ன?! வேங்கியிலா?” தன்னை அறியாமலேயே ‘வேங்கி’ என்ற அந்த ஒற்றைச் சொல்லில் மகிழினி வாய் திறந்தாள். மகேந்திர வர்மரின் கண்கள் ஒரு கணம் மகிழினியை உற்று நோக்கியது. ஆனால் அதற்குள் பெண் தன்னைச் சுதாரித்து கொண்டாள்.

“வேங்கி இதற்குத் துணை நின்றால்… கங்க நாடு?” உபாத்தியாயர் முகத்தில் இருள் சூழ்ந்தது.

“கங்க நாடும் போர்க்கொடி தூக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன உபாத்தியாயரே.”

“பல்லவேந்திரா… இந்த நிலைமையை எப்படி சமாளிக்க போகிறீர்கள்?”

“போர்க்களத்தில் எதிரியைச் சமாளிக்க எனக்கு அனைத்து தெம்பும் இருக்கிறது உபாத்தியாயரே, ஆனால்… உம் பெண்ணைச் சமாளிக்கத்தான் என்னால் இயலவில்லை.” வருத்தத்தோடு சக்கரவர்த்தி சொல்ல உபாத்தியாயரின் குரல் இப்போது தெளிவாக வந்தது.

“பல்லவேந்திரா, நீங்கள் கட்டளையிடுங்கள், பரிவாதனி அதன்படி நடப்பாள்.”

“தந்தையே…”

“வேண்டாம் பரிவாதனி, இதுவரை உன் பேச்சுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அதன்படி நடந்திருக்கிறேன், இந்த ஒரு விஷயத்திலாவது இப்போது நான் சொல்வதைக் கேள், சக்கரவர்த்திக்குத் துணை நிற்கவேண்டியது இப்போது உனது கடமை.” தந்தையின் பேச்சை பரிவாதனி மறுத்து பேசவில்லை. அமைதியாகவே இருந்தார்.

***

அந்த பள்ளியறையின் அழகு சொல்ல இணையற்றதாக அத்தனை அற்புதமாக இருந்தது. அங்கு வசிப்பவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு ரசனை மிக அதிகமாக இருக்க வேண்டும் என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.

கெட்டியான தேக்கு மரத்தினால் செய்யப்பட்டிருந்த அந்த கட்டலின் நான்கு முகப்பிலும் சிங்க முகங்கள் செதுக்கப்பட்டு அதில் கண்களாக சிவப்பு பவளங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த தலையொன்றைப் பிடித்தபடி சாளரத்தின் வெளியே தெரிந்த நிலவை வெறித்தபடி நின்றிருந்தார் விஷ்ணுவர்த்தன மகாராஜா. ஆஜானுபாகுவாக நின்றிருந்த அந்த மன்னரின் முகத்தில் சிந்தனை மிதமிஞ்சி கிடந்தது.

பணிப்பெண் கொண்டு வந்து கொடுத்த பால் குவளையை வாங்கிக்கொண்டு அறைக்குள் வந்த மகாராணி மன்னரின் குழப்பம் நிறைந்த முகத்தை ஒரு நொடி கவனித்தாராயினும் எதுவும் பேசாமல் அதை அவரிடம் நீட்டினார்.

“வேண்டாம் அகத்தினி.”

“ஸ்வாமி, தாங்கள் இன்று இராப்போஜனத்தைக் கூட சரியாக உண்ணவில்லை, இந்த பாலையாவது சற்று அருந்துங்கள்.” மகாராணி சற்று வற்புறுத்தி கூறவும் அந்த தங்க குவளையை வாங்கிய மன்னன் சற்றே அருந்திவிட்டு மீண்டும் தன் பட்டமகிஷியிடம் அதை நீட்டினார்.

“மனதில் என்ன குழப்பம் ஸ்வாமி?” மகாராணியின் குரலில் கவலைத் தெரிந்தது.

“வாதாபியிலிருந்து ஓலை வந்திருக்கிறது அகத்தினி.”

“அதற்கும் நீங்கள் வாடுவதற்கும் என்ன சம்பந்தம் ஸ்வாமி?”

“பழைய நினைவுகள் நெஞ்சில் முட்டி மோதுகின்றன.” மன்னரின் குரலில் கவலை மிகவும் தொனிக்கவே மகாராணி அவர் கையைப் பற்றி கொண்டார்.

“எதற்காக இப்போது இத்தனை உணர்ச்சி வசப்படுகிறீர்கள் ஸ்வாமி?‌ வாதாபியின் படைகளுக்கு உதவுவதாக மனப்பூர்வமாகத்தானே சம்மதம் சொன்னீர்கள்?”

“ஆமாம், அதில் சந்தேகமில்லை, ஆனால்…”

“ஆனால் என்ன?”

“ஏதோவொரு குற்றவுணர்ச்சி என்னைக் கொல்கிறது.” மன்னர் சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார்.

“நீ என் வாழ்க்கையில் வந்திராவிட்டால் நாளைய சரித்திரம் பழிக்கும், இழிக்கும் ஒரு மன்னனாகத்தான் இந்த விஷ்ணுவர்த்தனன் வாழ்ந்திருப்பான் அகத்தினி.” மன்னரின் வார்த்தைகள் உண்மை என்றாலும் அதைப் பொருட்படுத்தாது,

“அப்படியில்லை ஸ்வாமி, உங்கள் உள்ளம் மிகவும் அழகானது, மென்மையானது… சிறிது காலம் அது பழுதுபட்டிருந்தாலும் பிற்பாடு அது அழகானதாக மாறிவிட்டது.” என்றார் பணிவாக.

“அதன் மூல காரணம் நீதானே தேவி.” மன்னரின் பார்வையில் இப்போது காதல் வழிந்தது.

“எல்லாம் புத்த பகவானின் கருணை ஸ்வாமி… வேங்கி நாட்டை நோக்கி வந்த புத்த பிக்ஷூக்கள் அந்த கருணா மூர்த்தியின் அகிம்சா மார்க்கத்தை உங்களுக்கு காட்டினார்கள், உங்கள் மனமும் அதன்பால் சாய்ந்து பண்பட்டுவிட்டது.”

“மிகவும் சரி தேவி.” மன்னரின் முகத்தில் லேசான புன்னகை இப்போது அரும்பியது.

இந்த சரித்திரம் நடந்த காலகட்டத்திலே தென் இந்தியா முழுவதும் கலைகள் எத்தைனைத் தூரம் செழித்திருந்தனவோ அதேயளவு மதங்களும் ஓங்கி வளர்ந்திருந்தன.

காஞ்சி மகேந்திர பல்லவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறியதால், சமண முனிவர்கள் மகேந்திர வர்மர் மீது தீராத கோபம் கொண்டிருந்தார்கள். வாதாபி புலிகேசி காஞ்சி மீது படையெடுக்க அவர்களின் துர்போதனையும் ஒரு காரணம் என்று வரலாறு சொல்கிறது.

சைவம், சமணம் மேலோங்கியிருந்த இந்த காலகட்டத்தில்தான் புத்த மதமும் மகோன்னத நிலையை அடைந்திருந்தது. புத்த பிக்ஷூக்கள் நாடு முழுவதும் பயணம் செய்து கருணாமூர்த்தியின் அழகிய மார்க்கத்தை மக்களுக்கு வலியுறுத்தி வந்தார்கள்.

கொல்லாமை விரதம் பூண்டிருந்த அந்த மகான்கள் உயிர்களிடத்தில் அன்பு செலுத்த மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இப்படி வேங்கி நாட்டை நோக்கி வந்த புத்த பிக்ஷூக்களின் போதனைகளால் கவரப்பட்ட விஷ்ணுவர்த்தன மகாராஜாவின் மனம் பெரிதும் சாந்தப்பட்டது, அமைதி அடைந்தது.

இதுவரைக் காலமும் தனது உள்ளத்திற்குக் கிடைக்காத பேரமைதி போதி பகவானின் சிந்தனைகளில் கிடைக்கவே மன்னர் அந்த நல்ல சிந்தனைகளை இடைவிடாது செவியுறலானார். அதற்கு மூல காரணம் அவரது பட்டமகிஷி அகத்தினி.

வாதாபி மன்னர் புலிகேசி தனது உடன்பிறந்த சகோதரரான விஷ்ணுவர்த்தனரை வேங்கி நாட்டிற்கு அரசனாக்கி கங்க நாட்டு மன்னர் துர்வீதனின் மகளான அகத்தினியை மணமுடித்து வைத்தார்.

விஷ்ணுவர்த்தனரும் தனது சகோதரர் புலிகேசியை போல கடூர சித்தமுள்ளவராகவே ஆரம்பத்தில் இருந்தார். ஆனால் காலம் செல்ல செல்ல அவரது பட்டமகிஷியின் அழகிய சிந்தனைகள் அந்த கடூர சித்தரையும் மென்மையாக மாற்றியது.

அவர்களுக்கும் அழகானதொரு ஆண் குழந்தையும் பிறக்க அதற்கு மார்த்தாண்டன் என்று பெயர் வைத்தார்கள். குழந்தையைச் சகல விதத்திலும் செம்மையாக வளர்த்த மகாராணி தனது ஸ்வாமியின்  உள்ளத்தையும் செப்பனிட ஆரம்பித்தார்.

அப்போது புத்த பிக்ஷூக்களின் வருகையும் வேங்கி நாட்டை நோக்கி அதிகமாக இருக்கவே மகாராஜா ஆண்டவன் அருளால் முழுதாக மாறிப்போனார்.

“இப்போது எதற்காக குற்ற உணர்ச்சி உங்களை வருத்துகிறது ஸ்வாமி? அப்படி தாங்கள் என்ன குற்றம் செய்துவிட்டீர்கள்?”

“அகத்தினி… குற்றத்தை நான் செய்யவில்லை என்றாலும் அதற்குத் துணை நின்றிருக்கிறேன்.”

“புரியவில்லையே ஸ்வாமி, சற்று தெளிவாக சொல்லுங்களேன்.”

“இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி மங்களேசன் சித்தப்பாவின் ஞாபகம் வருகிறது!”

“ஓ…”

“நாங்கள் அவருக்குச் செய்தது எத்தனைப் பெரிய அநியாயம் என்று நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது தேவி!” மன்னரின் கண்களில் இப்போது லேசாக கண்ணீர் துளிர்க்கவே மகாராணியின் மனதில் கருணைச் சுரந்தது.

“ஸ்வாமி… அப்போது நீங்கள் எதுவும் அறியாத சிறு பிராயத்தவர், தாயும் தந்தையுமாக இருந்து உங்களை வளர்த்த உங்கள் அண்ணனின் சொல்தான் வேதம் என்று நினைத்து நீங்கள் புரிந்த தவறு அது.”

“இருந்தாலும் என் மனம் கிடந்து தவிக்கிறது தேவி!”

“ஸ்வாமி, நீங்கள் அறியாமல் செய்த அந்த தவறுக்காக ஆண்டவனிடம் மனமுருகி பிரார்த்தனைச் செய்யுங்கள், நிச்சயமாக இறைவன் உங்களை மன்னிப்பான்.”

“ஆமாம்… பாவத்திற்கு மன்னிப்பு தேடலாம், அதேபோல பிராயச்சித்தமும் செய்ய வேண்டுமே தேவி.”

“பிராயச்சித்தமா?” கேட்ட மகாராணியின் குரலில் ஆச்சரியமிருந்தது.

“யாருக்குப் பிராயச்சித்தம் செய்யப்போகிறீர்கள் ஸ்வாமி?”

“மங்களேசன் சித்தப்பாவின் குடும்பத்திற்கு.”

“அதைத்தான் இல்லாமலேயே செய்துவிட்டீர்களே! அப்படியிருக்க யாருக்குப் பிராயச்சித்தம் செய்வீர்கள்?”

“இல்லை தேவி… என் மனது அப்படி நினைக்கவில்லை, அந்த குழந்தை எங்கோ உயிருடன் இருக்கிறது!”

“யாரைச் சொல்கிறீர்கள் ஸ்வாமி?”

“மங்களேசன் சித்தப்பாவின் குழந்தை… பரிவாதனி!”

“ஓ… பெண் குழந்தையா?”

“ஆமாம்.”

“உயிரோடு இருந்தால்… என் வயது இருக்குமா?”

“நிச்சயமாக இருக்கும்.”

“ஆனால் அப்போதே அந்த குழந்தையை உங்கள் சகோதரர் வலைவீசி தேடியதாக சொன்னீர்களே!”

“ஆமாம்… தேடினோம், அகப்படவில்லை! ஆனால் அந்த குழந்தை பல்லவ சாம்ராஜ்யத்தின் ஏதோவொரு மூலையில்தான் இருக்க வேண்டும், என் உள் மனது அப்படித்தான் சொல்கிறது, அதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை.”

“அப்படி இருந்தால் நல்லதுதானே ஸ்வாமி?”

“நிச்சயமாக! நிச்சயமாக அகத்தினி! அந்த குழந்தை மாத்திரம் உயிரோடு இருந்தால் அதை அழைத்து வந்து இந்த ராஜ்ஜியத்தையே அதனிடம் ஒப்படைத்துவிட்டு என் பாவச்சுமையைத் தீர்த்துக்கொள்வேன் அகத்தினி! நிச்சயம் தீர்த்துக்கொள்வேன்!” உணர்ச்சி பெருக்கால் மகாராணியின் கைகளைக் கெட்டியாக பிடித்துகொண்டு பேசினார் மகாராஜா.

“ஸ்வாமி, அதுதான் உங்கள் மனதிற்கு ஆறுதல் என்றால் நீங்கள் தாராளமாக அதைச் செம்யலாம், உங்கள் மன நிம்மதியை விட எனக்கும் மார்த்தாண்டனுக்கும் இந்த ராஜ்ஜியம் பெரிதல்ல!” மகாராணியும் இப்போது நெஞ்சம் விம்ம பேசினார்.

“இதுதான் உன் பதிலாக இருக்கும் என்பதை நான் முன்னமே அறிவேன் அகத்தினி.”

“அப்படியிருக்க ஏன் இப்போது சஞ்சலப்படுகிறீர்கள்?”

“என் கவலை அதுவல்ல தேவி… காஞ்சி மீது படையெடுக்க வேண்டி இருக்கிறதே என்பதுதான் என்னை வாள் கொண்டு அறுக்கிறது.”

“ஏன் ஸ்வாமி? ராஜ்ஜிய விஸ்தரிப்பு சத்திரிய தர்மம்தானே?”

“ஆமாம், தர்மம்தான்… ஆனாலும் பல்லவ சாம்ராஜ்யம் என்று வரும்போது மனது அதை ஏற்க மறுக்கிறது.”

“அப்படியென்றால் போரிலிருந்து நீங்கள் விலகி நிற்கலாமே?”

“அது என்னால் இயலாத காரியம் தேவி, புலிகேசி மன்னர் என் சகோதரன் மட்டுமல்ல… தாய், தந்தை, ஆசான் என அனைத்தும் அவரே! அவருக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய இயலாது.”

இருதலைக் கொள்ளி எறும்பு போல மகாராஜா தவிப்பது மகாராணிக்குப் புரிந்தாலும் எதுவும் செய்ய இயலாது மௌனமாகவே இருந்தார்.

***

மார்த்தாண்டனின் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள் மைத்ரேயி.‌ அந்த கண்களிடம் தன்னால் பொய் சொல்ல இயலாது என்பதை மார்த்தாண்டனும் தெளிவாக புரிந்து கொண்டான்.

“மைத்ரேயி…”

“தயக்கம் தேவையில்லை உபாத்தியாயரே… மனதிலிருப்பதைத் தயங்காமல் சொல்லுங்கள்.”

“என் மனதிலிருப்பது… நீ விரும்ப தகாததாக கூட இருக்கலாம்.”

“பாதகமில்லை… எதுவாக இருந்தாலும் நீங்கள் தாராளமாக என்னிடம் சொல்லலாம்.”

பெண் தன் பிடியில் உறுதியாக இருக்க மார்த்தாண்டன் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக சிறிது நேரம் நடந்தான். மைத்ரேயியிடம் எதையும் மறைக்கும் எண்ணம் அவனிடம் கிஞ்சித்தும் இல்லை, இருந்தாலும்… ஒரு முடிவிற்கு வந்தவன் போல பேச ஆரம்பித்தான் வேங்கி நாட்டு இளவல்.

“மைத்ரேயி… வாதாபி சக்கரவர்த்தி புலிகேசி என் பெரிய தந்தை, அதாவது என் தந்தை விஷ்ணுவர்த்தன மகாராஜாவின் உடன் பிறந்த சகோதரன், அதை நீ அறிவாய் அல்லவா?”

“ஆம்.”

“அவருக்குச் சிறு வயது முதலே ராஜ்ஜிய விஸ்தரிப்பில் பேரவா உண்டு.”

“ஓ…”

“வடக்கே அவர் செய்த முயற்சிகள் ஹர்ஷவர்த்தனரால் முறையடிக்கப்பட்டு விட்டன, இருந்தாலும் அவர் துவண்டு போய் விடவில்லை, தன் பார்வையை இப்போது தெற்கே திருப்பியுள்ளார்.”

“தெற்கே என்றால்?” கேள்வி அவசரமாக வந்தது.

“தெற்கில் அவருக்கு முதல் எதிரியாக நிற்பது பல்லவ சாம்ராஜ்யம்.”

“ம்…”

“அதன்மீது போர் தொடுப்பதே அவரின் முதல் திட்டம்.”

“இதில் தவறேதும் இல்லையே!” பதில் சொன்ன பெண்ணை ஆச்சரியமாக பார்த்தான் மார்த்தாண்டன்.

“நீ என்ன சொல்கிறாய் மைத்ரேயி?!” அவன் குரலில் ஆச்சரியம் வெளிப்படையாகவே தெரிந்தது.

“இதில் நீங்கள் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது உபாத்தியாயரே? மன்னர்கள் ராஜ்ஜிய விஸ்தரிப்பில் ஈடுபடுவது வழிவழியாக நடப்பதுதானே?”

“நீ சொல்வது சரிதான்…”

“மேலே சொல்லுங்கள்.”

“ஹர்ஷவர்த்தனருக்கு எந்த வகையிலும் குறைந்தவரல்ல மகேந்திர பல்லவர்!” சொல்லிவிட்டு பெண்ணின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான் மார்த்தாண்டன். மைத்ரேயியின் விழிகள் சலனமற்று உபாத்தியாயரை நோக்கின.

“அப்படியா சொல்கிறீர்கள்?”

“ஆமாம்… ஆடல், பாடல், சிற்பம், சித்திரம் என்று கலைகளில் மோகம் கொண்டிருந்தாலும், மகேந்திர வர்மர் மிகச்சிறந்த வீரர் மைத்ரேயி!”

“……………….”

“ஹர்ஷவர்த்தனரை முறையடிப்பது எத்தனைக் கடினமோ அதேயளவு கடினம் மகேந்திர வர்மரை முறையடிப்பதுவும்.”

“ஓ… அத்தனை வீரரா அவர்?”

“அதில் சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் அது உன்னைப் பார்த்த பிற்பாடு முழுதாக தீர்ந்து போனது மைத்ரேயி!” சொல்லிவிட்டு இளவல் நகைக்க, பெண்ணும் புன்னகைத்தாள்.

“கேட்கும்போது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது உபாத்தியாயரே!”

“அவர் மகள் நீ என்பதை எந்த இடத்திலும் பெருமையாக சொல்லி கொள்ளலாம் பெண்ணே!”

“ஏது… எதிரியைப் பலமாக புகழ்கிறீர்கள்?”

“எதிரிதான்… இருந்தாலும் தலைசிறந்த வீரனல்லவா? ஒரு வீரனை இன்னொரு வீரன் எப்போதும் சிலாகிப்பான்!”

“நல்லது… இதில் தங்கள் பங்கு என்ன உபாத்தியாயரே?”

“வாதாபி போருக்குத் தயாராகும் போது எப்போதும் அதற்குத் தோள் கொடுக்கும் வேங்கி.”

“அது சகோதர பாசம்.”

“ஆமாம்… இம்முறை அதற்கு கங்க நாடும் உடன்பட்டிருக்கிறது.”

“இது… பேரன் மேல் உள்ள பாசமா?” புன்னகையோடு பெண் கேட்க, அழகாக முறுவலித்தான் இளவல்.

“பெண் மேல் உள்ள பாசத்தை விட பேரன் மேல் உள்ள பாசம் எப்போதும் அதிகம், அதில் என் தாய்க்கு என்மீது லேசான பொறாமை கூட உண்டு!”

“பிறந்த வீட்டைப் பெண்கள் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் உபாத்தியாயரே!”

“நீ எப்படி மைத்ரேயி?”

“புரியவில்லை…”

“இப்போது உன் நிலைமை என்ன மைத்ரேயி? உன் ஆதரவு இப்போது பிறந்த வீட்டிற்கா? புகுந்த வீட்டிற்கா?” பெரிய கணை ஒன்றை பெண் மீது ஏவிவிட்டு நிதானமாக பார்த்திருந்தான் மார்த்தாண்டன். மைத்ரேயி சட்டென்று பதிலேதும் சொல்லி விடவில்லை.

“மகேந்திர வர்மரை எதிர்க்க வெறும் படை பலமும் ஆயுத பலமும் போதாது மைத்ரேயி… தந்திரமும் யுக்தியும் வேண்டும்! அதற்காகத்தான் நான் கொற்கைக்கு வந்தேன்.” இப்போது மைத்ரேயியின் கண்கள் உபாத்தியாயரைச் சட்டென்று நிமிர்ந்து நோக்கின.

“ஒரு மன்னரின் ஆட்சி நிலைக்க வேண்டும் என்றால் அவன் மக்கள் அவன்மீது அயராத நம்பிக்கை வைக்க வேண்டும், அதை உடைக்கவே நான் கொற்கைக்கு வந்தேன்.”

“…………..”

“நான் வந்த காரியம் நிறைவேறுவதற்கு முன்பாக ஏதேதோ நடந்துவிட்டன.”

“……………”

“மகேந்திர வர்மர் இப்போது கொற்கையில் இருக்கிறார், இதற்கு மேல் நான் நினைத்த விஷயம் அங்கு சாத்தியமில்லை.”

“அப்படியென்றால்… அமரா தேவி கொற்கைக்கு வந்தது…”

“ஏதோ என்னைப் பற்றிய ருசு கிடைத்திருக்க வேண்டும், அதனாலேயே ஆராய வந்திருக்கிறார்.”

“பிறகு ஏன் உங்களைக் கைது செய்யாமல் என்னைக் கைது செய்தார்?”

“என் நோக்கம் என்னவென்று அவருக்கு உறுதியாக தெரியாது, ஆகவே என்னை வெளியே உலவவிட்டு என் எண்ணங்களை அறிந்துகொள்ள நினைத்திருப்பார்.”

“ஓ…”

“அத்தோடு… உன்னைக் கைது செய்வதும் என்னைக் கைது செய்வதும் ஒன்றுதான் என்று அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்!” இளவலின் பார்வையைத் தாங்க முடியாமல் இப்போது மைத்ரேயி நிலம் பார்த்தாள்.

“இப்போது மகேந்திர வர்மருக்கு நீ யாரென்பது தெரிந்திருக்கும், சிறையிலிருந்து தப்பி இருப்பதுவும் சொல்லப்பட்டிருக்கும், நீ என்னோடுதான் இருப்பாய் என்பதை ஊகிப்பது அவருக்கொன்றும் பெரிய விஷயம் இல்லை.”

“………….”

“மார்த்தாண்டனின் வாள் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு எதிராக உயரும் நேரம் வந்துவிட்டது மைத்ரேயி!”

“புரிகிறது உபாத்தியாயரே!”

“இதில் நீ யார் பக்கம் மைத்ரேயி?” உறுதியாக கேட்டது இளவலின் குரல். அதைவிட உறுதியாக வந்தது பெண்ணின் பதில்.

“என் உபாத்தியாயரின் வாளுக்கு உறுதுணையாக என் வாள் எப்போதும் கூட நிற்கும்!”

அந்த பதிலில் மார்த்தாண்டனே ஒரு நொடி அதிர்ந்து போனான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!