பல்லவன் கவிதை

“அந்த வீராங்கனையோடு நான் போரிடலாமா?” சட்டென்று கேட்ட அந்த குரலில் அந்த பயிற்சி கொட்டகையில் அமர்ந்திருந்த அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.

அது பல்லவ ராஜ வம்சத்தினர் வாட் பயிற்சி பெறும் கூடம். அங்கே பயிற்சிக்கென புடவையைப் பஞ்சகச்சம் போல உடுத்தி வாளைக் கையில் ஏந்தியபடி நின்றிருந்தாள் மைத்ரேயி. அவளெதிரே கையில் வாளோடு பொதிகை மாறன்.
தன் பெண்ணைப் பல வகையிலும் அலங்கரித்து ரசித்த புவனமகா தேவி, கடைசியாக அவள் வாள் வீசுவதிலும் கெட்டிக்காரி என்று அறிந்த போது உடனேயே இந்த ஏற்பாட்டைச் செய்துவிட்டார்.

தன் பெண் வாள் சுழற்றுவதைப் பார்ப்பதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம்!

எதிரே ஆசனத்தில் அமர்ந்திருந்த அமரா தேவியின் முகத்தில் ஒரு அலட்சிய பாவம் தெரிந்தது. மைத்ரேயி அந்த அரண்மனைக்கு வந்த கடந்த இரண்டு நாட்களாக அமரா தேவியின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.

ஆனாலும் அதைக் கண்டு கொள்ளும் நிலைமையில் அங்கு யாரும் இல்லை. தன் மனைவிக்குமாக சேர்த்து அந்த சின்னஞ்சிறு பெண்ணின் மேல் அன்பைக் கொட்டினார் பொதிகை மாறன்.

புவனமகா தேவியின் செய்கைகளினால் அவர் மேல் அதிகமாகவே மனத்தாங்கல் கொண்டிருந்த அமரா தேவி நரசிம்மனையும் மைத்ரேயியை பெரிதும் அண்டவிடாமல் தடுத்து விட்டார். ஆனால் இவை எதுவும் புவனமகா தேவியின் கருத்தில் பதியவேயில்லை.

தனக்கென பெண் பிள்ளை ஒன்று இல்லாத குறையா… அல்லது பரிவாதனி வாழ வேண்டிய வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சியா…‌ எதுவென்று தெரியவில்லை… தன் உள்ளத்து அன்பையெல்லாம் மைத்ரேயி மேல் கொட்டி அவளைத் திக்கு முக்காட செய்துவிட்டார்.

குரல் வந்த திசையில் திரும்பிய மைத்ரேயி சற்று திகைத்து போனாள். மத்திய வயது மதிக்கத்தக்க ஒரு வீரன் அங்கு நின்றிருந்தான். அவன் குறுந்தாடியும் பெருத்த மீசையும் அடிகளாரை நியாபகப்படுத்தியது பெண்ணிற்கு.

“வாருங்கள்…‌ வீரரே!” இளநகையோடு வரவேற்றார் பொதிகை மாறன். புவனமகா தேவியின் முகத்திலும் புன்முறுவல் ஒன்று படர்ந்தது. அமரா தேவியின் கண்களில் லேசான அச்சம் தெரிந்தது.

“மைத்ரேயி, இவர் பல்லவ சாம்ராஜ்யத்திலேயே இணையில்லாத வீரர், இவரோடு போரிட்டு பயிற்சி பெறுகிறாயா?” வாஞ்சையோடு கேட்ட பொதிகை மாறனை ஆச்சரியமாக பார்த்தாள் பெண்.

“இவர் யார்? பெயர் என்ன?” சட்டென வந்தது அவள் கேள்வி.

“இவர்…”

“வீரர்களின் பெயரை உதடுகள் உச்சரித்து தெரிந்து கொள்வதை விட வாள்கள் உரசும் போது தெரிந்து கொள்ளலாம்.” பொதிகை மாறனின் தடுமாற்றத்திற்கு அந்த வீரனே இப்போது பதில் சொன்னான்.

மைத்ரேயியின் கண்கள் இப்போது ஆச்சரியத்தால் விரிந்தன.

“ஆஹா! தெரிந்து கொள்ளலாமே வீரரே! நான் தயார்!” என்றாள் இயல்பாக.

“அப்படிச்சொல் மகளே!” மகிழ்ச்சி கொப்பளிக்க சற்று இரைந்தே சொன்னார் புவனமகா தேவி.‌ அந்த வீரனின் கண்கள் இப்போது பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷியை ஒரு நொடி பார்த்து சிரித்தது.

வாளின் நுனியைத் தன் கட்டை விரலால் லேசாக தடவி கொடுத்த வீரன் மைத்ரேயியை நோக்கி வாளை நீட்டினான். மைத்ரேயியும் தன் கன்னி போருக்கு ஆயத்தமானாள்.

இது காலம் வரை அவள் அவளது உபாத்தியாயர்களோடு மாத்திரமே போரிட்டிருக்கிறாள். முன்பு அவளது தாத்தா, பிற்பாடு மார்த்தாண்டன். முதல் முறையாக வேற்று மனிதன் ஒருவனோடு போர் புரிவதால் இதுநாள் வரை தான் கற்ற பாடங்களை எல்லாம் ஒரு நொடி நிதானித்து நினைவு கூர்ந்து கொண்டாள்.
எந்த வித அவசரமும் இன்றி நிதானமாக எதிரியே முதலடி எடுத்து வைக்கட்டும் என்று அவள் நின்றிருக்க, அந்த வீரனின் முகத்தில் பாராட்டு போல ஒரு பாவம் தோன்றி மறைந்தது.

“நல்லது நல்லது… இந்த நிதானம்தான் வெற்றியின் முதல் படி மைத்ரேயி!” பொதிகை மாறனின் குரல் பெண்ணைத் தட்டி கொடுத்தது.

வாட்கள் இரண்டும் ஒன்றோடொன்று மோத ஆரம்பித்தன. உனக்கு நான் சளைத்தவன் இல்லை என்று இருவரும் வாளை வீசிக்கொண்டிருந்தார்கள். சண்டை மெது மெதுவாக உக்கிரமாகி கொண்டிருந்தது.
இது நேரம் வரை சாதாரணமாக வாளைச் சுழற்றி கொண்டிருந்த பெண் இது வேலைக்காகாது என்று உணர்ந்து, மார்த்தாண்டன் சொல்லி கொடுத்த புது முறையில் பக்கவாட்டில் எதிரியைத் தாக்க ஆரம்பித்தாள்.

இந்த புது முறையில் ஆரம்பத்தில் அந்த வீரன் சற்று தடுமாறினாலும் நிமிடங்கள் நகர நகர அந்த வீச்சுக்குத் தன்னைத் தயார்படுத்தி கொண்டான்.

பலம் மட்டுமல்லாது, வாள் வீச்சின் நுணுக்கங்களை அறிந்த ஒரு மிகச்சிறந்த வீரனோடு தான் சண்டையிடுவதை மைத்ரேயி கூடிய விரைவிலேயே புரிந்து கொண்டாள். ஒரு முறை அந்த வீரனின் வாள் மைத்ரேயியின் கழுத்தைத் தடவி சென்றது.

“வீரரே!” உஷ்ணமாக வந்த புவனமகா தேவியின் குரலில் அந்த வீரனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“நீங்கள் போரிடுவது பல்லவ குல விளக்கோடு, ஞாபகமிருக்கட்டும்!” கடுமையாக வந்தது புவனமகா தேவியின் குரல். பொதிகை மாறன் முகத்திலும் அதிருப்தி தெரிந்தது.

ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி வந்த வாளைப் பக்கவாட்டில் தடுத்து நிறுத்தினாள் பெண். இப்போது அந்த வீரன் தன் பலங்கொண்ட மட்டும் பெண்ணைப் பின்னோக்கி தள்ள மைத்ரேயி சற்று பின்னே வீசப்பட்டாள்.

இருந்தாலும் கால்களை நிலத்தில் நன்றாக ஊன்றி தன்னைச் சமாளித்தவள் முழு வீச்சுடன் எதிரியை நோக்கி தனது வாளை வீசினாள். ஆனால் அவளது வாள் அநாயாசமாக வலது புறத்தில் தடுக்கப்படவே தனது இடது காலை அந்த வீரனின் முகத்திற்காக உயர்த்தினாள்.
இந்த வித்தியாசமான தாக்குதலை அந்த வீரனும் எதிர்பார்க்கவில்லை போலும். சட்டென்று தன் தலையைப் பின்னோக்கி இழுத்து அந்த தாக்குதலில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றான்.

இருந்தாலும், மைத்ரேயியின் மென் பாதம் அவன் நாடியைத் தடவி செல்ல அங்கிருந்த குறுந்தாடி லேசாக விலகி தான் போலி என்று சொல்லியது.

மைத்ரேயி ஒரு கணம் திடுக்கிட்டு போனாள்! அதற்கு மேலும் தன்னை மறைத்து கொள்வதில் அர்த்தமில்லை என்று புரிந்து கொண்ட மகேந்திர பல்லவர் மீசையில் புருவத்தில் என ஆங்காங்கே தனது உருவ மாறுபாட்டிற்காக ஒட்டப்பட்டிருந்த செயற்கை மயிர் கற்றைகளை நீக்கினார்.

இப்போது அங்கிருந்த அனைவரின் கண்களும் இளையவளையே நோக்கின. வேஷம் கலைந்து தன் முன் நிற்கும் வீரர்தான் தன் தந்தை என்று உணர்ந்து கொள்ள பெண்ணுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. ஓங்கிய காலை நிலத்தில் வைத்தவள் வேரறுந்த மரம் போல அப்படியே நிலத்தில் தடாலென உட்கார்ந்து விட்டாள்.

வாளைத் தூக்கி அப்பால் போட்டுவிட்டு தன் பெண்ணுக்கு அருகே வந்து நிலத்தில் அமர்ந்து கொண்டார் பல்லவ சக்கரவர்த்தி.

“என் பெண்ணின் பிஞ்சு பாதங்களைத் தீண்டும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்கவில்லை, குறைந்த பட்சம் இப்போதாவது அந்த பாதங்கள் என்னைத் தீண்டியதே!” கண்ணீர் குரலில் கரகரக்க சொன்னவர் மைத்ரேயியின் வலது காலை உயர்த்தி அவளது பாதத்தை எடுத்து தனது கன்னத்தோடு இழைத்து கொண்டார்.

மைத்ரேயி தன் காலை இழுத்துக்கொள்ள எவ்வளவோ முயன்றாள். ஆனால், அது அவளால் இயலவில்லை. பொதிகை மாறன் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்தபடி அந்த அருமையான காட்சியை ஒரு பெருமிதத்தோடு பார்த்து கொண்டிருந்தார் என்றால்… புவனமகா தேவி கண்களில் ஆறாக கண்ணீர் பெருக அமைதியாக சிலைப் போல அமர்ந்திருந்தார்.

“அப்பா!” மைத்ரேயி முதன்முறையாக அந்த வார்த்தையைத் தன் வாயால் உச்சரித்தாள். அவள் வாழ்நாளில் அந்த பாக்கியம் அப்போதுதான் கிடைத்தது பெண்ணுக்கு.

“இந்த ஒற்றை வார்த்தைக்காக இந்த காஞ்சியையே அந்த புலிகேசியின் பாதத்தில் தூக்கி போட்டு விடுவேன், ஆனால் எனக்கு மட்டும் இது சொந்தமில்லையே மகளே!”

“அப்பா!” மைத்ரேயியின் குரல் இப்போது கதறியது.

“ஆமாம் மைத்ரேயி, கெட்டதிலும் ஒரு நன்மை உண்டு என்று சொல்வார்கள் அல்லவா? இந்த புலிகேசி மட்டும் இல்லை என்றால் அமரா கொற்கைக்கு வந்திருக்க முடியுமா, இல்லை உன்னைக் கண்டு கொண்டிருக்கத்தான் முடியுமா? எதுவுமே நடந்திராதே! ஐயையோ! என் வாழ்க்கையில் எத்தனைப் பெரிய பாக்கியத்தை, இன்பத்தை நான் இழந்திருப்பேன்!” தன்னை மறந்து சக்கரவர்த்தியும் வாய்விட்டு கதற, அவர் குமாரியும் அவரோடு இணைந்து கொண்டாள். அமரா தேவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“பல்லவேந்திரா, சிறு பிள்ளைதான் உணர்ச்சி வசப்படுகிறாள் என்றால் தாங்களும் இப்படி நடந்து கொள்ளலாமா?” சமாதானமாக பேசிய பொதிகை மாறனின் குரல் மகேந்திர வர்மரை நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது. அவசரமாக தன்னைச் சுதாரித்து கொண்டவர் எழுந்து நின்றார்.

“எழுந்திரு மைத்ரேயி, அரச காரியங்கள் ஆயிரம் கிடக்கின்றன, எதிரி நம் வாசலிலேயே வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறான், அனைத்தையும் நான் சமாளிக்க வேண்டும், என் உறவுகள் புடைசூழ நிற்கும் போது யானைப் பலம் வந்தது போல உணர்கிறேன் நான்!”

தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்து பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக தன்னைச் சட்டென்று மாற்றி கொண்டார் மகேந்திர பல்லவர்.

தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொண்ட மைத்ரேயியும் எழுந்து நின்றாள். அதற்கு மேல் தனது நேரத்தை அங்கு செலவழிக்காத மகேந்திர வர்மர் பொதிகை மாறன் பின் தொடர அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அதேநேரம்…

கூடாரத்தில் கூண்டுப்புலி போல ஆவேசமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார் புலிகேசி சக்கரவர்த்தி.

எதிரே மார்த்தாண்டன் மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டியபடி தனது பெரிய தந்தையையே பார்த்தபடி இருந்தான்.

அங்கிருந்த மஞ்சமொன்றில் விஷ்ணுவர்த்தன மகாராஜாவும் ஏதோ முள்ளின் மீது அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தார்.

இவர்களின் நிலையே இதுவென்றால் பட்டு கம்பளங்களில் அமர்ந்திருந்த ராஜ பிரதானிகளின் நிலையைக் கேட்கவும் வேண்டுமா?! பேச்சையே மறந்தவர்கள் போல அமர்ந்திருந்தார்கள்.

“ஏன் அத்தனைப் பேரும் அமைதியாக இருக்கிறீர்கள்? இந்த பல்லவ நரியின் குள்ளத்தனத்தைப் பார்த்தீர்களா? சரியான நேரம் பார்த்து என் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறான்!” வெறிகொண்ட புலி போல உறுமினார் புலிகேசி சக்கரவர்த்தி.

“சத்யாச்ரயா, வாதாபியின் தெற்கு நோக்கிய படையெடுப்பு உங்கள் நீண்ட நாள் கனவு!”

“அதில் மண்ணை அள்ளி போடத்தான் ஒருவன் இங்கு கல்லையும் உளியையும் கட்டிக்கொண்டு அழுகிறானே அமைச்சரே!”

“முன் வைத்த காலை நீங்கள் பின் வைக்க வேண்டாம் சத்யாச்ரயரே!” சக்கரவர்த்தியின் எண்ணங்களுக்குத் தூபம் போடுவது போலவே பேசினார் முதலமைச்சர்.

“இந்த இக்கட்டான நிலைமையில் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது என்று நான் நினைக்கிறேன்!” பேசிய மார்த்தாண்டனை உறுத்து விழித்தார் புலிகேசி.

“மார்த்தாண்டா! எதைக் கண்டு நீ இப்படி அஞ்சுகிறாய்?”

“சத்யாச்ரயா, நான் எதைக் கண்டும் அஞ்சவில்லை, போர்க்காலத்தில் வீரத்தை விட விவேகம் மிக முக்கியமில்லையா?”

“முக்கியம்தான், இல்லையென்று சொல்லவில்லை, இப்போது போரைத் தொடுப்பதில் என்ன விவேகமின்மையை நீ கண்டுவிட்டாய்?”

“நாம் எல்லோரும் நினைத்தது போல மகேந்திர பல்லவர் வெறும் கலைப்பித்தன் மட்டுமல்ல.”

“வேறு எதைக் கிழித்து சாதித்து விட்டான் அந்த மகேந்திர பல்லவன்?” எதிரி மேல் கொண்ட கோபத்தில் மார்த்தாண்டனை முழுதாக பேச விடாமல் இடை வெட்டினார் சக்கரவர்த்தி.

“காஞ்சி கோட்டை நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே நம்மை எதிர்க்க தயாராக உள்ளது, அதை நான் என் கண்களாலேயே பார்த்தேன்.”

“அதனாலென்ன? நம் வீரர்கள் பல்லவ வீரர்களைத் துவம்சம் பண்ணிவிடுவார்கள்!”

“பல்லவ வீரர்களை மட்டுமல்ல, பாண்டிய வீரர்களையும் நாம் சமாளிக்க வேண்டி ஏற்படும்.”

“இது என்ன புதுக்கதை?!”

“நாம் சமாதானத்திற்கு ஒத்துழைக்காத பட்சத்தில் உதவிக்கரம் நீட்ட தயாராக இருக்கும் பாண்டியனை துணைக்கழைக்க இருப்பதாக மகேந்திர சக்கரவர்த்தி தன் வாயாலேயே என்னிடம் சொன்னார்.”

“ஓஹோ!”

“அதனால்தான் சொல்கிறேன் சத்யாச்ரயா, இப்போது வீரத்தை விட விவேகம் மிக முக்கியம்.”

“இந்த மகேந்திர பல்லவன் பொய் சொல்கின்றானோ என்று எனக்குத் தோன்றுகிறது மார்த்தாண்டா!”

“ஏன் அப்படி சொல்கிறீர்கள் சத்யாச்ரயா?!”

“எந்த முகாந்திரமும் இல்லாமல் பாண்டியன் எப்படி இவனுக்கு உதவுவான்? நம்ப முடியவில்லையே?!”

“இல்லை சத்யாச்ரயரே, பாண்டியன் செல்விக்கு பல்லவ இளவலை மணமுடிக்க பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இருக்கிறதாம், அந்த முகாந்திரத்தின் அடிப்படையில்தான் தனது படைகளை காஞ்சியை நோக்கி அனுப்ப பாண்டியர் தீர்மானித்துள்ளாராம்.”

“கதை அப்படி போகிறதா! அதனால்தான் இந்த பல்லவ நரி இப்படி துள்ளுகிறதா?” முகம் முழுவதும் கோபம் பொங்கி வழிய இனி என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறினார் புலிகேசி சக்கரவர்த்தி.
அந்த தடுமாற்றம் சிறிது நேரம்தான் புலிகேசி மன்னருக்கு இருந்தது. அதன் பிற்பாடு அங்கு காரசாரமான போர் விவாதம் ஆரம்பமாகி விட்டது.

படையை எப்படியெப்படி நடத்தினால் பல்லவ படைகளை வீழ்த்தலாம் என்று புலிகேசி தலைமையில் ஒரு குழு விவாதிக்க, பாண்டவரும் பல்லவரும் இருபுறங்களிலும் தங்களைத் தாக்கி தங்கள் படையைச் சின்னாபின்னமாக்க திட்டம் தீட்டுகிறார்கள் என்று மார்த்தாண்டன் தலைமையில் இன்னொரு குழு எச்சரித்து கொண்டிருந்தது.

இவை எவற்றிலும் கலந்து கொள்ளாமல் விஷ்ணுவர்த்தன மன்னர் அமைதியாக அமர்ந்திருந்தார். தம்பியின் மௌனத்தை அவ்வப்போது கண்ணுற்ற புலிகேசி மன்னரும் அதை விசாரிக்க இது சமயமல்ல என்று வாளாவிருந்தார்.

ஒரு கட்டத்தில் விடைகாணாத அந்த விவாதம் முடிவுற்றது. சக்கரவர்த்தியின் கூடாரத்தை விட்டு அனைவரும் கலைந்து போயிருந்தார்கள். மார்த்தாண்டன் கூட தனது கூடாரத்திற்குப் போய் விட்டான். ஆனால் விஷ்ணுவர்த்தனர் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தார்.

“விஷ்ணுவர்த்தனா!” மிகவும் கனிவோடு அழைத்தார் புலிகேசி மன்னர்.

“அண்ணா…” கனிவோடு மரியாதையும் சேர்ந்து ஒலித்தது தம்பியின் குரலில்.

“அப்போதிருந்து உன்னைக் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன், இன்றைக்கு பெயருக்குத்தான் நீ மந்திராலோசனையில் கலந்து கொண்டாய், ஆனால் உன் மனது இங்கே இல்லை!”

“மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் முட்டி மோதுகின்றன அண்ணா!”

“ஓ… என்னிடம் பங்கு போட்டுக்கொள்ள முடியுமாக இருந்தால் பேசு.”

“அண்ணா! இது என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? நீங்கள் என் அண்ணன் மட்டுமா, எனக்கு அனைத்துமாக இருந்தவர் அல்லவா நீங்கள்? உங்களிடம் எதை நான் மறைக்க போகிறேன்?”

“அப்படியென்றால் உன்னை வாட்டும் எண்ணங்கள்தான் என்ன?”

“பரிவாதனி என்ற பெயரைக் கேட்ட நாள் முதலாக என் தூக்கம் தொலைந்து போனது அண்ணா.” வேதனையோடு வந்த தம்பியின் குரலில் புலிகேசி மன்னர் ஆடிப்போய் விட்டார்.

உலகத்துக்கே கல்லாக தெரிந்த புலிகேசி மன்னர் தன் தம்பி என்று வந்துவிட்டால் அந்த கல்லுக்குள் இருக்கும் ஈரம் போலத்தான் என்பதை உலகம் அறியாவிட்டாலும் அவரை உணர்ந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.

“தம்பி! இது என்ன இப்படி பேசுகிறாய்?!”

“ஆத்திரப்படாதீர்கள் அண்ணா!”

“வேறு என்ன செய்ய சொல்கிறாய்? என் கனவையும் லட்சியத்தையும் சின்னாபின்னமாக்கிய அந்த பரிவாதனியை…”

“போதும் அண்ணா! இந்த துவேஷம் போதும்!” முதன்முறையாக தன் அண்ணனின் முன்னால் உயர்ந்தது விஷ்ணுவர்த்தனரின் குரல்.

“ராஜ்ஜிய விஸ்தரிப்புத்தான் உங்கள் லட்சியமென்றால் நாம் இன்னும் படைகளைத் திரட்டி வடக்கே ஹர்ஷவர்த்தனரை மீண்டும் தாக்குவோம், ஆனால் பல்லவ சாம்ராஜ்யத்தின் மேல் நம் நகம் கூட படவேண்டாம் அண்ணா.”

“விஷ்ணுவர்த்தனா, உனக்கு என்ன ஆகிவிட்டது? ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்?!”

“இரத்தம் துள்ளிய வயதில் அட்டூழியங்களைப் பிரித்தறிய தெரியவில்லை, கொண்டதே கோலம் என்று வாழ்ந்து விட்டோம், ஆனால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை அண்ணா!”

“மனதில் இருப்பதைத் தெளிவாக பேசு விஷ்ணுவர்த்தனா!”

“நம் தந்தையோ இல்லை நாமோ சிறப்பானதொரு ஆட்சியைக் கொடுத்திருந்தால் மக்கள் மங்களேசரை மன்னராக்கி இருப்பார்களா அண்ணா?”

“அதற்காக? உரிமையை விட்டுக்கொடுக்க சொல்கிறாயா?”

“கடமையைச் சரிவர செய்யாத நமக்கு உரிமை எங்கிருந்து வந்தது அண்ணா?”

“மங்களேசர் நமது உரிமையை நம்மிடமிருந்து தட்டி பறித்தார்.”

“அதற்கு அவருக்குத் தகுதி இருந்தது!”

“பொல்லாத தகுதி! அப்படி என்ன இருந்தது உன் சிற்றப்பனிடம்?”

“மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க தெரிந்தது, அதை நாம் செய்யவில்லையே!” கவலைத் தொனித்தது தம்பியின் குரலில்.

“மக்களுக்கு என்ன தெரியும்? ஒரு மண்ணும் தெரியாது!”

“மக்களுக்காகத்தானே மன்னன்!”

“இப்போது அந்த மக்களுக்கு என்ன குறை வந்துவிட்டது என்று நீ இப்படி புலம்புகிறாய்?”

“அண்ணா, ஆத்திரத்தைக் கொஞ்சம் தூர தள்ளிவைத்து விட்டு நான் சொல்வதைச் சற்று சிந்தித்து பாருங்கள், நீங்கள் பார்க்க வளர்ந்தவன் நான், இந்த உடல், பொருள், ஆவி அனைத்தும் உங்களுக்குச் சொந்தமானது, அப்படியிருக்க… நான் உங்களுக்குத் தீங்கு நினைப்பேனா?” நிதானமாக கேட்ட தம்பியின் குரலில் தன் மூர்க்கத்தனத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்த புலிகேசி மன்னர் அங்கிருந்த சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

அண்ணனின் அமைதி விஷ்ணுவர்த்தனருக்கும் நிம்மதியைக் கொடுக்க மேலே பேச ஆரம்பித்தார்.

“முன்பு எப்படியோ நானறியேன் அண்ணா, ஆனால் இப்போது தங்கள் ஆட்சியை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள், வாதாபி மக்கள் உங்களைப் பெரிதும் போற்றுகிறார்கள்!”

“ம…”

“நாட்டு மக்களுக்கெல்லாம் நன்மை செய்யும் என் அண்ணனின் புகழ் எங்கும் பொங்கி பரவும் வேளையில்… ஒரு உயிருக்கு மட்டும் நாம் அநியாயம் செய்யலாமா?”

“நீ யாரைச் சொல்கிறாய் தம்பி?”

“பரிவாதனி!”

“ஓ… அந்த பெண்ணிற்கு நாம் அப்படியென்ன அநியாயம் செய்து விட்டோம்?”

“அந்த பெண்ணின் கணவருக்கு எதிராகவே போர் கொடி தூக்கி இருக்கிறோமே… இதைவிட பெரிய அநியாயம் வேறு என்ன இருக்கிறது?”

“என்ன?! என்ன சொல்கிறாய் நீ?!” புலிகேசி மன்னர் அதிர்ச்சியில் உறைந்து போனார்!

“என்னவெல்லாமோ நடந்திருக்கிறது அண்ணா, கேட்ட போது என் தலையே சுழன்றது!” தான் தன் மகன் வாய்மூலம் கேள்விப்பட்ட அனைத்தையும் அப்போது அங்கே போட்டு உடைத்தார் விஷ்ணுவர்த்தனர்.

“கொற்கைக்கு போன மார்த்தாண்டனுக்கு அனைத்தும் தெரிய வந்திருக்கிறது, கனக புஷ்பராக கல்லைப் பார்த்த மாத்திரத்தில் துருவி ஆராய்ந்திருக்கிறான்.”

“ஓ…”

“தன் அண்ணன்களால், தன் கணவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என்று ஒரு பெண் தனது வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறாள்!”

“……………..”

“தன் மனைவியின் தியாகத்திற்காக, அவள் மன நிம்மதிக்காக தொடங்கிய போரை நிறுத்தி இருக்கிறார் மகேந்திர வர்மர்!” இப்போது புலிகேசி மன்னரின் தலைச் சட்டென்று உயர்ந்து தன் தம்பியைப் பார்த்தது.

“ஆமாம் அண்ணா! போரை நிறுத்துவதில் மகேந்திர வர்மருக்கு யாதொரு இஷ்டமும் இல்லை, தன் மனைவிக்காக… தன்னை உலகம் நாளைக்குக் கேலி செய்தாலும் பரவாயில்லை என்று தியாகத்தில் சிறந்து நிற்கும் தன் சரிபாதியை மகேந்திரர் மதிக்கிறார், ரத்த பந்தத்திற்காக நாம் என்ன செய்ய போகிறோம் அண்ணா?!”

“…………….”

“முடிவு உங்கள் கையில், நீங்கள் எடுப்பது எந்த முடிவாக இருந்தாலும் அதற்கு நானும் மார்த்தாண்டனும் கட்டுப்படுவோம், ஆனால்… தன் அத்தைக்கு அநீதம் இழைக்க மார்த்தாண்டன் அஞ்சுகிறான், அதேபோல என் தங்கைக்கு அநியாயம் செய்ய நானும் பயப்படுகிறேன், நிதானமாக சிந்தித்து முடிவெடுங்கள் அண்ணா!”

அதற்கு மேல் விஷ்ணுவர்த்தனர் அந்த கூடாரத்தில் தங்கவில்லை. சட்டென்று வெளிநடப்பு செய்துவிட்டார். ஏதோ மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைத்தாற்போல ஒரு நிம்மதி தோன்றியது.
தந்தையைத் தேடிக்கொண்டு வந்த மார்த்தாண்டனும் கூடாரத்திற்குள் நடந்த வாக்குவாதத்தினால் உள்ளே போகாது வெளியே நின்று விட்டான்.

“மார்த்தாண்டா! இங்கே என்ன செய்கிறாய்?!” கூடாரத்திற்கு வெளியே நின்ற மகனைப் பார்த்து ஆச்சரியமாக கேட்டார் விஷ்ணுவர்த்தனர்.

“உங்களைக் காணவில்லையே என்று தேடிக்கொண்டு வந்தேன்.”

“உன் தந்தை என்ன குழந்தையா காணாமல் போக!” சிரித்து மழுப்பிய தந்தையைக் கூர்ந்து பார்த்தான் மார்த்தாண்டன். அதற்கு மேலும் நடிக்க முடியாமல் ஒரு பெருமூச்சை வெளியேற்றினார் தந்தை.

“என்னால் முடிந்த அளவு நியாயத்திற்காக போராடி இருக்கிறேன் மார்த்தாண்டா!”

“கேட்டேன் தந்தையே, கவலைப்படாதீர்கள், பெரிய தந்தை அத்தனைக் கல் நெஞ்சக்காரர் இல்லை, நிதானமாக சிந்தித்து நல்ல முடிவையே எடுப்பார்.”

“நீ சொல்வது போல நடந்தால் எனக்கும் சந்தோஷம்தான்!”

“நிச்சயம் நல்லதே நடக்கும், கவலையை விடுங்கள்!”

மாலை நகர்ந்து கொண்டிருக்க இருள் மெல்ல மெல்ல தன் ஆதிக்கத்தை அந்த காஞ்சி நகரின் மீதும் அதன் சுற்றுப்புறத்தின் மீதும் செலுத்த ஆரம்பித்தது.

தன்னைச் சூழ்ந்து நிற்கும் ஆபத்து எதையும் பொருட்படுத்தாமல் சித்தரஞ்சன் மேலேறி அந்த அடர்ந்த வனப்பகுதியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார் மகேந்திர வர்மர்.
நிலவு… மகேந்திரரின் மனதைப் போல அன்றைக்கு முழுமை அடைந்திருந்தது. காட்டின் நடுவே சலசலவென ஓடிக்கொண்டிருந்த அந்த அருவிக்கரை ஓரமாக சித்தரஞ்சனை நிறுத்தியவர்… யாரைரோ எதிர்பார்த்து காத்திருப்பவர் போல நின்றிருந்தார்.

சிறிது நேரத்திலெல்லாம் ஒரு தேர் தூரத்தே வருவது தெரிந்தது. யௌவன புருஷர் போல முகம் முழுவதும் மலர்ந்து விகசிக்க வரும் தேரையே ஆவலோடு பார்த்திருந்தார் மகேந்திர பல்லவர்!