பொன்மகள் வந்தாள்.1.
“உங்க அதிர்ஷ்ட தேவதை வந்தாச்சு ண்ணே!”
“உனக்கே தெரியுது… எனக்குத் தெரியாதாடா? போய் வேலையப் பார்றா!” சாமிப்படங்களில் போட்டிருந்த பழைய பூச்சரத்தை எடுத்துவிட்டு இன்றைய பூச்சரத்தைப்போட்டான். சாமிப்படங்களுக்கு ஊதுபத்தி காட்டியவன், பத்தி ஸ்டான்டில் சொருகிவிட்டு, திருநீர் எடுத்து நெற்றியில் அழகாகப் பூசிக்கொண்டான் சக்திமாறன்.
இந்த மூன்றுமாடி காவேரி ஸ்டோர்ஸின் ஓனர்… ப்ரொபரைட்டர்… முதலாளி… இத்யாதி… இத்யாதி.
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே…
இன்று சங்கடஹர சதுர்த்தி. திருச்சி கடைவீதியில் கோவிலிலிருந்து பாடல் ஒலிபெருக்கியில் கணீரென ஒலித்துக் கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் பரபரப்பை தனதாக்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்த திருச்சி பெரிய கடைவீதி. ஷட்டர்கள் திறக்கும் சப்தமும், வாசலில் தண்ணீர் தெளிக்கும் சப்தமும் ஆங்காங்கே கேட்டது.
பள்ளிகொண்ட அரங்கனையும், உச்சிப்பிள்ளையார் கோவிலையும் முதன்மை அடையாளமாகக் கொண்ட காவேரிக்கரை திருச்சிக்கு, அடுத்தபடியாக அடையாளம் சேர்த்த மிகப்பிரபலமான கடைகளுக்கு மத்தியில் கம்பீரமாக காட்சியளித்தது அந்த மூன்று மாடிக்கட்டிடம். சமீபத்திய அடையாளமாகத் தன்னையும் நிலைநிறுத்திக் கொள்வதற்கான அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு நிமிர்ந்து நின்றது.
இதனை தன் சுய முயற்சியால் எழுப்பியவன் இதனினும் கம்பீரமாய்த் தோற்றமளித்தான். சுயமுன்னேற்றம் தந்த கர்வம் கலந்த கம்பீரம் அது.
தோளில் கைபோட்டு வழிநடத்தவேண்டிய தந்தை, ஏமாளிப்பட்டம் பெற்று அத்தனையையும் இழந்து தனித்து விட்டுச்செல்ல… நிர்கதியாய் நின்றவன், தந்தை தவறவிட்ட அடையாளத்தை மீண்டும் இதே இடத்தில் தனக்கென உருவாக்க வேண்டுமென எண்ணியவனின்… கிட்டத்தட்ட பத்து வருட தீவிர உழைப்பு இது. சமீப காலமாக ராம்ராஜ் லினன் ஒயிட் சார்ட்டும் கருப்பு பேன்ட்டுமே எனது உடை என இருக்கும் முப்பது வயது கட்டிளங்காளை. சோர்வு என்பதை உடலுக்கு அடையாளம் காட்டாததின் விளைவு… இன்னும் இருபத்தைந்திலிருந்து இருபத்தியேழு என எனக்கணிக்கும் ஓங்குதாங்கான உடல்வாகு. கையில் யானைமுடி வைத்த தங்கக் காப்பு, கழுத்தில் ஐந்து முக ருத்ராட்சையுடன் கூடிய தங்க செயின். மாநிறத்தை சற்று மிஞ்சிய நிறம்.
“வரமாட்டாங்கன்ல நினச்சே… ஆமா… எப்படிண்ணா? திரும்பியே பாக்காம அவங்க வந்தது தெரிஞ்சது. இந்த சினிமால எல்லாம் காட்ற மாதிரி லப்டப்னு ஹார்ட் துடிச்சுதா?”
“அதெல்லாம் ஞானக்கண்ல பாத்தேன்டா கருப்பட்டி.”
“லவ் பண்ணினா லூசா ஆகிருவாங்களா ண்ணா?” வாய்க்குள் சிரித்தவாறே கேட்க,
“நக்கலு…” என இழுத்தவனிடம்,
“இல்லையா பின்ன… ஒரு இளம் வியாபாரக்காந்தம் மாதிரியா பேசுறிங்க. யூத்துனு நெனப்பு.”
“ஓ… நீங்க காலேஜ் ஸ்டூடன்ட்டு. நாங்க கெழ போல்ட்டாடா?”
“இதுல என்ன சந்தேகம்? இந்நேரம் ஆக வேண்டிய வயசுல கல்யாணம் ஆகியிருந்தா ரெண்டு புள்ளைக படிக்கப் போயிருக்கும். அட்லீஸ்ட் லவ் பண்ண உடனே சொல்லியிருந்தா கூட இந்நேரம் ஒரு புள்ளையாவது ஸ்கூலுக்குப் போயிருக்கும்.”
“என்னடா பண்றது. சொன்னா லவ்வு ஊத்திக்குமோன்னு நெனச்சே சொல்லலடா.” டேபிளின் மீதிருந்த கம்ப்யூட்டருக்கு உயிர் கொடுத்தவாறே பேசிக்கொண்டிருந்தான்.
“இப்ப மட்டும் என்னவாம். சொல்லியும் தான ஊத்திக்குச்சு.”
“எங்கெரகம்… நீயெல்லாம் சொல்லிக் காட்டற மாதிரி வச்சுருச்சு பாத்தியா?” திரையில் மூன்று மாடிகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிற ஆரம்பித்தன.
“அப்பறம் என்னண்ணா? லவ் பண்ணமா… ரிசல்ட் கேட்டமா… ஆப்போசிட்ல க்ரீன் சிக்னல் இல்லையா, யூ டர்ன் போட்டுத் திரும்பி அடுத்த ரூட்டுக்கப் போயிறணும். சிக்னல் போடுற வரைக்கும் வெயிட் பண்ணக்கூடாது.”
“டேய் இதென்ன பஸ்ரூட்டாடா. மாறி மாறிப் போறதுக்கு. லைஃப் டா.”
“ஷ்ஷ்ஷப்பா… இந்த நைன்டீஸ் கிட்ஸே இப்படித்தா. ஒரு செடி… ஒரு ஃப்ளவர்னுட்டு. ஓவர் சென்டிமென்ட் பார்ட்டிஸ். கொஞ்சமாச்சும் எங்கள மாதிரி யோசிங்கண்ணே.”
“அதெப்படிடா… உங்கள மாதிரி யோசிக்கிறது?”
“பிக்கப் பண்ணோமா. ரைடு போனோமா. ட்ராப் பண்ணோமானு இருக்கணும்.”
“அதென்னடா ரைடு?”
“இது கூடத் தெரியல. நீங்க எல்லாம் கல்யாணம் பண்ணி….” என இழுத்தவன்,
“ஏன்ணா ஒருவேள… அவங்க நம்ம ஆளுக இல்லையோ? அதனால தான் ஓகே சொல்லலியா?”
“ஏன்டா உனக்கு இப்படியொரு சந்தேகம்? நீ வேற புதுசா ஒன்ன கிளப்பிவிடாதடா.”
“நம்ம ஆளுகள்ள யாரு இம்புட்டுக் கலரா இருக்கா? இந்தா… என்னையப் பாருங்க? கருப்பட்டினு தான கூப்புடுறிங்க?”
“டேய்… நல்லா யோசிச்சு சொல்லு… உன்னைய கருப்பட்டினு எதுக்கு கூப்புடறோம்னு.”
“சரி… சரி… நம்ம எஸ்.டி.டி எல்லாம் இப்ப எதுக்கு. உங்க கதைக்கு வருவோம். திரும்பிப் பாக்காமலே எப்படி தெரிஞ்சுது? மொதல்ல அதைச்சொல்லுங்க.”
டேபிளை ஒதுங்க வைத்துக் கொண்டே அவன் கேள்வியில் விடாப்பிடியாக இருக்க,
“நீயா கண்டுபிடிடா!” என்றான் மூன்று தளங்களையும் கம்ப்யூட்டர் திரையில் பார்வையிட்டவாறே. நேரம் ஒன்பது மணியை நெருங்குவதால் வேலைக்கு வரவேண்டியவர்கள் பெரும்பாலும் வந்திருந்தனர். அவனுக்கு பிடிக்காத ஒன்று நேரம் தவறுதல். ஒருநாளும் அவனும் தவறியதில்லை.
“அந்தளவுக்கு அறிவு இருந்தா நான் ஏன் இங்க வரப்போறே?” சலிப்பாய் கருப்பட்டியின் பதில்.
“ஏரோப்ளேனுக்கு வெள்ளையடிக்கப் போயிருப்பல்ல?” நக்கலாய் சக்திமாறனின் கேள்வி.
“ஆமாமா… மேலேயே பறக்கவிட்டு சின்னதாக்கி கீழயிருந்து வெள்ளையடிச்சுருவோம்ல.” அவன் கூறிக்கொண்டிருக்க, பட்டென்று பிடரியில் விழுந்த அடியில் திரும்பிப் பார்த்தான் கருப்பட்டி எனும் கார்த்தி.
“வாங்க மாமா.” என சக்திமாறன் உள்ளே வந்தவனை வரவேற்க,”
“என்ன… மாமா… சௌக்கியமா?” என குசலம் விசாரித்தவன் கருப்பட்டி.
“ஏன்டா மாப்ள? வயசுக்குத் தகுந்த சகவாசம் வேணாமாடா? இவன்லாம் ஒரு ஆளுன்னு இவங்கூட காலங்காத்தால பேசிக்கிட்டிருக்க?” என சக்திமாறனிடம் வினவியவர் அவனது மாமா. அக்காவின் கணவர்… விஷ்ணு.
கடைசி சம்பாஷனைமட்டுமே அவரது காதில் விழுந்திருந்தது. இருவரும் பேசிக்கொண்டது முழுமையாக அறியவில்லை அவர்.
“இம்புட்டு அறிவா இருக்கவும் தான்டா பத்தாப்பு பரிட்சைய மாங்கு மாங்குனு பத்து தடவை எழுதிட்டு இருந்த…” என வந்தவன் கார்த்தியைக் கேலி பேச,
“மாமா… தலையில அடிக்காதிங்கனு எத்தனை தடவை சொல்றது? இப்ப படிச்சு என்ன செய்யப்போறே? எப்படியும் கடையில தான உக்கார வைக்கப்போறாங்க.” தலையைத் தேய்த்துக் கொண்டே கூற,
“உன்னோட அப்பாவும் எப்படியாவது பனிரெண்டாம் வகுப்பைத் தாண்ட வச்சுரலாம்னு பாக்குறாரு. இன்னும் கொரங்கு பெடலு போட்டுட்டு காலேஜ் போகுற வயசுல பனிரெண்டாவதே தாண்டாம இருக்க. அவரும் விட்டபாடில்ல. நீயும் பாஸ்ஸாகுற மாதிரித் தெரியல.”
“சப்போர்ட்டிங் வீலோட சைக்கிள் வந்து எம்புட்டு வருஷமாச்சு. இன்னும் நீங்க கொரங்கு பெடல்லயே நிக்கறீங்க. உங்களுக்கெல்லாம் பொண்ணு கொடுத்த சக்தி அண்ணன என்ன சொல்றது?”
“கொரோனா சப்போர்ட்ல டென்த் பாஸ்பண்ணிட்டு என்ன பேச்சு பேசுறான் பாரு சக்தி?” என விஷ்ணு அங்கலாய்க்க,
“மாமா நாங்க எல்லாம் பிள்ளையார் மாதிரி. ஹார்டு வொர்க்க விட ஸ்மார்ட் வொர்க் செஞ்சு பாஸாகிருவோம். சக்தி அண்ணே எல்லாம் படிச்சா இம்புட்டுப் பெரிய ஆளா ஆகிருக்கு. காலேஜ் கூட முழுசா முடிக்கல. இல்லையாண்ணே?” என சக்தியிடமே அவன் கேட்க,
“டேய்… ஸ்மார்ட் வொர்க்கால தான் பிள்ளையார் முச்சந்தியோட நின்னுட்டார். கொஞ்சமாவது முயற்சி பண்ணதாலதான் முருகன் தனக்குனு ஆறுபடைவீட்ட சொந்தமாக்கி இருக்காரு.” என சக்தி பதில் கூறினான்.
“ஏன்டா கருப்பட்டி… சக்தியும் நீயும் ஒன்னாடா? அவன் எப்படிப் படிச்சான் தெரியுமா? அப்பன் காசுல சொகுசு பாக்குற நீ அவங்கூட ஈடு சேர்றயா?” என விஷ்ணு கருப்பட்டியைக் கடிந்தான்.
கார்த்தியின் தந்தைக்கும் மளிகைக்கடை வியாபாரம் தான். சக்திமாறனின் தாய்க்கு சற்று தூரத்து சொந்தம். இவனை பள்ளிப்படிப்பை முடிக்க வைப்பதற்குள் அவரும் படாதபாடு படுகிறார். விடுமுறை நாட்களில் நண்பர்களோடு வெட்டியாக ஊர் சுற்றுபவனை தொழில் கற்றுக்கொள்ளட்டும் என சக்திமாறனின் காவேரி ஸ்டோர்சில் வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார்.
“வராத படிப்ப வா… வா… ன்னா எப்படி வரும். நானும் அண்ணன மாதிரி படிக்காதமேதையாகிட்டுப் போறேன் மாமா.” என விஷ்ணுவிற்கு பதில் கூறியவனுக்குப் புரியவில்லை…
சக்திமாறனின் அறிவு பட்டம் வாங்கிய அறிவு அல்ல. அது பட்டறிவு என்று. தடுமாறித் தடுமாறி தன்னை பட்டைதீட்டிக் கொண்ட அறிவு அது. தவறு செய்து கற்றுக் கொள்ளும் எதுவும் அவ்வளவு எளிதில் மறந்து போகாது.
இருபது வயதில் தனித்துத் தத்தளித்தவனை, “டேய் சக்தி… புத்திசாலிப் பிள்ளைக்கு தந்தையின் ஆஸ்தி தேவைப்படாது. முட்டாள் பிள்ளைக்கு அப்பன் ஆஸ்தி இருந்தும் பிரயோஜனப்படாதுடா.” என அவனைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தியவர் இந்த மாமன்.
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் என்பது பழமொழி. அதற்கு நடைமுறை உதாரணமாகக் திகழ்ந்தவர் சக்திமாறனின் தந்தை மூர்த்தி. வியாபாரம் தான் அவரது குடும்பத்தினரின் தொழில். பெரியகடை வீதியில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்.
வழிவழியாக நடத்தப்பெற்றுவரும் கடை என்பதால் தலைமுறைகள் கடந்த வாடிக்கையாளர்கள் உண்டு. மாதக் கடைசியில் தான் சற்று கடை வெறிச்சோடும். அப்பொழுதும் பற்று வைத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் உண்டு. சக்தியின் தந்தையோடு பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள். இவனின் தந்தைதான் கடைசி. மாதக் துவக்கத்தில் கடையில் சகோதரர்களுக்கு சாப்பிடக்கூட நேரம் கிடைப்பது அரிது. சனிக்கிழமைகளில் கேட்கவே வேண்டாம். வாரச்சம்பள வாடிக்கையாளர்களால் வியாபாரம் தூள்பறக்கும். அன்று சகோதரர்கள் மூவரும் வீடு செல்லவே நடுநிசியைத் தாண்டும். தகுந்த விலையும் தரமும் தான் அவர்களது தாரக மந்திரம். கடை அண்ணன் தம்பி மூவருக்கும் பங்கு. மூவருக்கும் திருமணம் முடிந்து, பிள்ளைகளும் வளற, பங்குபிரிக்கும் பிரச்சினை எழுந்தது. கடையின் வருமானத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம் எனக்கூறப்பட்டது.
எப்பொழுதும் வீட்டின் கடைசிப் பிள்ளை எனில் கொஞ்சம் செல்லம் தூக்கலாக இருக்கும். மூத்தவர்கள் பொறுப்பெடுத்து செயலாற்றும் பொழுது இவர்கள் கொஞ்சம் மேம்போக்காக மாறிவிடுவது உண்டு. இதுவே அவர்களை எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க வைக்கும். இது சக்தியின் தந்தைக்கும் பொருந்திப் போயிற்று.
மூர்த்தி, “எனக்கு வருமானத்தில் பங்கு வேண்டாம். கடையின் மதிப்பை மூன்றாகப்போட்டு, எனது பங்கைக் கொடுத்து விடுங்கள்.” எனக்கூறி விட, அதேபோல் சொத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அவரும் வியாபாரம் தான் துவங்குவார் என சக்திமாறனின் அன்னை காவேரி எதிர்பார்க்க, அவரோ நண்பர்களின் உந்துதலில் ட்ராவல்ஸ் கம்பெனி துவங்கினார்.
“எத்தனை நாளைக்கு தான் மளிகைக்கடையையே கட்டிட்டு இருக்கப் போற. வெள்ளையும் சொள்ளையுமா நீட்டா ஆஃபிஸ் போட்டு உட்கார்ற வழியைப் பாரு.” என நண்பர்கள் தூண்டிவிட பஸ்கம்பெனி ஆரம்பித்தார். முன்னபின்ன தெரியாத தொழில். சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து ஆரம்பிக்க…
சக்திக்கு அப்பொழுதுதான் பதினைந்து வயது. பத்தாம் வகுப்பு முடித்திருந்தான். அவனது அக்காவிற்கு பதினெட்டு வயது. அக்கா தம்பி இருவருக்கும் மூன்று வருட வித்யாசம். ஒரு டிகிரியை மட்டும் முடிக்க வைத்து பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்யலாம் என நினைத்திருந்தனர்.
சக்தியின் தந்தைக்கும் ஆரம்ப ஜோர் என்பது போல் ட்ராவல்ஸும் நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தது. எல்லாம் ஒருவிபத்தை பஸ் சந்திக்கும் வரைதான். மிகப்பெருத்த அடி. பேருந்திற்கும்… பிஸினஸிற்கும்.
அனுபவமின்மையால் அதிலிருந்து எப்படி மீள்வது எனத்தெரியவில்லை. முதல் அடியே அவரை அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு கட்டிப் போட்டது. அதை மீட்க வங்கிக்கடன், சொத்து மற்றும் மனைவியின் நகைகள் என அனைத்தையும் வாரி சுருட்டிக் கொண்டது. சாண் ஏற முழம் சறுக்கியது. பட்ட காலே படும்… கெட்டகுடியே கெடும் என்பது போல், கஷ்ட்டப்பட்டுப் பழக்கமின்மையால் இத்தகைய அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இருந்த மனஅழுத்தம், அவருக்கு உலகவாழ்க்கையிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுக்க, மிஞ்சியது… இப்பொழுது காவேரி ஸ்டொர்ஸ்ஸாக நிற்கும் இந்த இடம் மட்டுமே. இங்குதான் அவனது தந்தை அலுவலகம் போட்டிருந்தார்.
சக்திமாறனும் அப்பொழுதுதான் கல்லூரியின் முதல் வருடம் அடியெடுத்து வைத்திருந்தான். சொத்துப் பிரித்து கொடுத்த பிறகு, “இதற்குமேல் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது, வேண்டுமானால் சக்தி கடையில் வந்து வேலை பார்க்கட்டும்… சம்பளம் போட்டுக் கொள்ளலாம்.” என்று பெரியப்பாக்கள் இருவரும் கைவிரித்து விட உலக நிதர்சனம் முதலில் கற்றுக் கொண்டான்.
படிப்பைத் தொடரமுடியாமல், நிறுத்தியவன், வாழ்க்கையின் அனுபவப்பாடம் படிக்க ஆரம்பித்தான். தந்தையின் தவறுகள் கற்றுக் கொடுத்தது பாதி எனில் அவன் பட்டுத் தெரிந்தது மீதி.
எப்பொழுதும் வெற்றிக் கதைகளை விட, தோல்விக் கதைகள்தான் நமக்கு பலவிஷயங்களைக் கற்றுத்தரும். எனவே ஒருவர் வெற்றியை ஆராய்வதைவிட, தோல்வியுற்றவரின் கதைகளை ஆராய்ந்தால், எச்சரிக்கை நிமித்தங்கள் நமக்கு அதிகம் கிடைக்கும்.
அதன் விளைவு குதிரைக்கு கடிவாளம் போட்டது போல ஒரே குறிக்கோள் வெற்றி மட்டுமே என எண்ணியவன், ஓடிய ஓட்டம் தான் காவேரி ஸ்டோர்ஸ்.
வீட்டு உபயோகப்பொருட்கள் அத்தனையும் அடக்கம். வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்கள் இல்லை என்பதே இருக்காது.
“சார் வர்றதுக்கு முன்னாடி ஒரு நாளாவது நாம வந்துறணும்.”
“அதுக்கு நீ இங்கயேதான் பாய்விரிச்சுப் படுக்கணும். அப்பவும் சார் வந்துதான் உன்னைய எழுப்புவாரு.” வருகைப்பதிவில் கையெழுத்து இட்டுக் கொண்டே இரண்டு பணிப்பெண்கள் பேசிச் சென்றனர்.
“டேய் சக்தி! நம்ம பய ஏதோ ஸ்கூல் ஐட்டெமெல்லாம் கேட்டான்டா. வாட்ஸ்அப்ல அனுப்புச்சிருக்கான்டா.” என மாமன் கூற,
“சன்டே வீட்டுக்கு வந்தப்பவே சொன்னான் மாமா. கருப்பட்டி, போய் என்னனென்னு பாத்து எடுத்துக் கொடுடா.” என்றவனிடம்,
“ஏன்டா ஸ்கூல்காரனுகளும், நீங்களும் ஏதாவது ரகசிய ஒப்பந்தம் போட்டு இருக்கிங்களாடா? பழைய புக்கு, பழைய நோட்டெல்லாம் வச்சுப் படிச்சா ஆகாதாடா? எப்பப் பாரு அது வாங்கிட்டுவா, இதைக்கொண்டு வான்னு பொண்டாட்டி மாதிரி இந்த ஸ்கூலும் ஒரே நச்சரிப்புடா?”
“என்ன மாமா… அக்கா கிட்ட இப்பவே கேக்கவா?”
“எதைடா?”
“ஏன்க்கா மாமாவ நச்சரிக்கிற, அவருக்கு கேக்க யாருமில்லைனு நினைச்சியா? நானிருக்கேன்னு சொல்றேன் மாமா.”
“உன்னோட சப்போர்ட்டுக்கு ஒரு கும்பிடுடா மாப்ள. குடும்பத்துல கும்மியடிக்க விட்டா சல்லிப்பைசா செலவில்லாமப் பண்ணுவீங்கடா. டேய் கருப்பட்டி வந்து எடுத்துக் கொடுடா!” என்ற மாமனை சிரித்துக் கொண்டே அனுப்பியவன், கம்ப்யூட்டர் திரையில் பார்வையை ஓட்ட, மூன்றாவது தளத்தில் தெரிந்தது அவனது பைங்கிளி. இரண்டு நாட்களுக்குப் பின் இன்று தான் வந்திருக்கிறாள்.
கருப்பட்டி சொன்னது போல் வருவாளா என்ற சந்தேகம் ஒரு மூலையில் இருந்தாலும், வரவேண்டும் என ஆசையும், ஏக்கமும் நெஞ்சம் முழுக்க நிறைந்திருந்தது.
‘ஏதோ டீன் ஏஜ் பையனாட்டம் என்னடா இது?’ எனத் தனக்குத்தானே கேலி செய்து கொண்டாலும், அவளைப் பார்த்தவுடன் அதெல்லாம் பறந்து போயிற்று. சாமிப்படங்களுக்கு ஊதுபத்தி காட்டியவனுக்கு, சாமி ஃபோட்டோவில் அவனது ஆசைக்கிளியும் தரிசனம் தந்தாள்.
வருகைப் பதிவில் கையெழுத்து இட்டவள், பில்லிங் ஏரியாப் பக்கம் திரும்பியும் பாராமல் நேரே மூன்றாவது தளம் சென்று விட்டாள்.
எப்பொழுதும் முதல் தளத்தைக் கவனித்துவிட்டு மதியத்திற்கு மேல் தான் அங்கு செல்வாள். ஆனால் இன்று வந்த உடனே மூன்றாவது தளம் சென்றிருக்கிறாள்.